Loading

அத்தியாயம் – 38

 

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் வழியில் விக்ராந்த் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவனது மௌனம் இடியை விடப் பயங்கரமாக இருந்தது. அவன் மனதுக்குள் ‘வலி’ மட்டுமே நிறைந்திருந்தது. தன் உயிருக்குயிரான நிலாவின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

​அவனது இதயம் வழக்கத்தை விட வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. எப்போது வண்டியை எடுத்தான், எப்போது வீடு வந்து சேர்ந்தான் என்ற பிரக்ஞை கூட அவனுக்கு இல்லை. வீட்டிற்கு வந்ததும், யாரிடமும் ஒரு சொல்லும் பேசாமல் நேராகத் தனது அறைக்குள் சென்று தஞ்சம் புகுந்து கொண்டான்.

டாக்டர் என்ன சொன்னார்கள் என்று கேட்பதற்காக மரகதம் விக்ராந்தின் அருகே சென்றார். ஆனால், அவர் இருப்பதைக்கூடக் கவனிக்காமல் அவன் அறைக்குள் சென்றதைக் கண்டு, ஏதோ பெரிய பிரச்சனை என்பதை அவர் உணர்ந்தார். உடனே நித்திலாவிடம் சென்று, “என்னம்மா ஆச்சு? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று விசாரித்தார்.

இதற்கு மேல் உண்மையை மறைப்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதை நித்திலா உணர்ந்தாள். தன் உடல்நிலை குறித்தும், கர்ப்பத்தில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் மருத்துவர் சொன்ன அனைத்தையும் அப்படியே விவரித்தாள்.

​அந்தச் சமயம் மற்ற பெண்களும் அங்கு வந்து சேர, நித்திலா சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். மகிழ்ச்சியாகத் தழைக்க வேண்டிய வாரிசு, இப்போது ஒரு உயிரையே பணயம் வைக்கும் போராட்டமாக மாறியிருப்பதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. வீடே ஒரு நிமிடம் நிசப்தத்தில் ஆழ்ந்தது.

​”நீ இப்படி பண்ணிருக்கக் கூடாதும்மா! இவ்வளவு பெரிய பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சும் எப்படி நீ குழந்தைப் பெத்துக்கத் துணிஞ்ச?” என மரகதம் வருத்தத்துடன் கேட்க, நித்திலாவிற்கு அது வருத்தத்தை அளிக்கவில்லை. மாறாக, ஒருவித ஆத்மார்த்தமான சந்தோஷத்தையே தந்தது.

​வாரிசை விடத் தன் உயிரையே அவர்கள் பெரிதாக மதிக்கிறார்கள் என்பதை உணர்ந்தபோது, இந்த வீட்டார் தன் மீது வைத்திருக்கும் அளவற்ற பாசம் அவளுக்கு இன்னும் ஆழமாகப் புரிந்தது.

குழந்தைக்காக ஏங்கித் தவித்த சுமித்ரா, நித்திலாவின் கைகளைப் பற்றி, “நித்தி, ஒரு தாயா உன்னோட உணர்வு எனக்குப் புரியுது. நான் உன் இடத்துல இருந்தா கூட இதையே தான் செய்திருப்பேன். ஆனா நீ இன்னும் சின்னப் பொண்ணுடி. உனக்கு இன்னும் வயசிருக்கு, டாக்டர் சொன்னதைக் கேட்டிருக்கலாம்னு தோணுது,” என்றாள் கவலையுடன்.

​அவரைத் தொடர்ந்து ஊர்மிளாவும், “இந்தக் குழந்தை இல்லன்னா என்னம்மா? உன்னால எங்களுக்கு இன்னொரு குழந்தையைக் கொடுக்க முடியும். ஆனா நீ இல்லாட்டா… அதை எங்களால நினைச்சுப் பார்க்கவே முடியலையேடா!” என்று வருத்தத்துடன் சொன்னார்.

​”இப்போ எதுக்காக அவளை நிக்க வச்சுக் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க? அதான் மகாராணி சுயமா முடிவெடுத்துட்டாங்களே! எல்லாம் கைமீறிப் போச்சு. இனி நாம செய்ய வேண்டியது இவளைக் கண்ணும் கருத்துமா பார்த்துக்கிறது மட்டும்தான். நம்ம வீட்டு வாரிசுக்காகத் தன் உயிரையே பணயம் வச்சிருக்கா. நாம அவளைச் சந்தோஷமா பார்த்துக்கிறதுல அவளோட உடல் பிரச்சனை எல்லாம் காணாமப் போயிடணும். ‘வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்’னு சொல்லுவாங்க. நம்ம அன்பாலேயே இவளைக் குணப்படுத்துவோம். பிரச்சனை இருக்குன்னு சொன்னது டாக்டர் தான், கடவுள் ஒன்னும் இல்ல!” அனைவரும் நித்திலாவைச் சூழ்ந்து கேள்விகளால் துளைத்தபோது, அன்னலட்சுமி அதிகாரமாகவும் அதே சமயம் அன்பாகவும் கூறினார்,..

அன்னலட்சுமியின் இந்த மாற்றத்தைக் கண்ட நித்திலா, உணர்ச்சிப் பெருக்கில் ஓடிச் சென்று அவரை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவளைத் தாய்மையுடன் அரவணைத்த அன்னலட்சுமி, “என் மருமகளை அந்த கடவுளால கூட எங்ககிட்ட இருந்து பிரிச்சுக் கூட்டிட்டுப் போக முடியாது. இதை நான் உறுதியாச் சொல்லுவேன்!” என்றார். அந்த வார்த்தைகள் அங்கிருந்த அனைவரின் மனதிலுமே ஒரு பெரிய நிம்மதியையும், நம்பிக்கையையும் விதைத்தது.

வீட்டில் உள்ளவர்களிடம் பேசிவிட்டு நித்திலா அறைக்குள் நுழைந்தாள். விக்ராந்தின் முகத்தைப் பார்க்கவே அவளுக்குத் தயக்கமாக இருந்தது. அவனது கண்களில் தெரிந்த அந்தத் தீராத வலி அவளைச் சுட்டது. அறைக்கு வந்த பின்னரும், விக்ராந்த் எதையோ வெறித்துப் பார்த்தபடி சிலையாக அமர்ந்திருந்தான். அவனை அந்த நிலையில் பார்க்க முடியாமல், நித்திலா வம்பிழுப்பது போலப் பேசத் தொடங்கினாள்..

​”இப்போ எதுக்காக இப்படிப் பித்து பிடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்கீங்க? ஆபீஸ்க்குப் போக வேண்டியதுதானே?” என அவள் கேட்க, “இனி ஆபீஸ்க்கெல்லாம் போகப் போறதில்லை,” என்றான் விக்ராந்த். அவளது முகத்தைக் கூட அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவள் “ஏன்” என்று புரியாத பார்வை பார்க்க, அவன் பதில் சொல்லவில்லை,….

​”ரொம்பக் கஷ்டப்பட்டு முன்னேறி வந்திருக்கீங்க, இப்போ இப்படிப் பேசினா என்ன அர்த்தம்?” என அவள் மீண்டும் வினவ, “அதான் என் அண்ணன் இருக்கானே, அவன் பார்த்துப்பான்,” எனப் பதிலளித்தான்.

​”மாமா எப்படித் தனியாச் சமாளிப்பாரு? அவர் ஆபீஸிலேயே கிடந்தா அக்காவுக்குக் கஷ்டம் இல்லையா?” என நித்திலா கோபமாகக் கேட்க, “அப்போ ஆபீஸை இழுத்து மூடச் சொல்லிடலாம்!” என்றான் விக்ராந்த் விரக்தியாக. அவன் இன்னும் தலை குனிந்த நிலையிலேயே பேசுவது நித்திலாவிற்கு எரிச்சலைத் தந்தது.

​”ஏன் கப்பல் கவிழ்ந்த மாதிரி தலையைத் தொங்கப் போட்டுட்டு உட்கார்ந்திருக்கீங்க?” எனக் கடுகடுவெனக் கேட்டபடி அவன் அருகில் அமர்ந்தாள். அவன் மௌனமாக இருக்கவே, அவனைக் கிளற வேண்டும் என்ற எண்ணத்தில்… ​”நீங்க ஒன்னும் கவலைப்படுற மாதிரி நடிக்க வேண்டாம். இதையெல்லாம் நம்பி எட்டு மாசத்துக்கு அப்புறமும் நான் உங்க கூட இருப்பேன்னு தப்புக் கணக்கு போடாதீங்க. கண்டிப்பா நான் போயே தீருவேன்!” என்றாள்.

​மருத்துவர் சொன்ன அந்த ‘மரண அபாயத்தை’ மனதில் வைத்துக்கொண்டுதான் அவள் “போயே தீருவேன்” என்றாள்,..
அவள் மனதில் எதை வைத்துக் கொண்டு கடைசி சொல்லை முடித்தாள் என்று தெரியவில்லை, விக்ராந்திற்கு அவள் ஏதோ குதர்க்கமாக சொன்னது போல  போலத் தோன்றியது. ஏற்கனவே நொறுங்கிப் போயிருந்த அவனது மனதை, அவளது இந்த வார்த்தைகள் இன்னும் ஆழமாகக் காயப்படுத்தின.

​”நான் இங்கே ஒருத்தி பேசிட்டு இருக்கேன், பதில் பேசினா தான் என்னவாம்?” என நித்திலா சிடுசிடுப்புடன் கேட்க, அப்போதும் விக்ராந்த் சிலையென அமர்ந்திருந்தான்.

அதில் ஆத்திரமடைந்தவள், அவன் சட்டை காலரைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினாள். ஏதோ கோபமாகத் திட்ட வாயெடுத்தவள், விக்ராந்தின் சிவந்து கலங்கியிருந்த விழிகளைக் கண்டதும் அப்படியே உறைந்து போனாள். அவனது அந்தப் பார்வை அவளைப் பதறச் செய்தது.

​”அத்து… என்ன இது? சின்னக் குழந்தை மாதிரி…” என அவனது முகம் பற்றி அவள் கேட்க, விக்ராந்த் அவளை ஆவேசமாக இழுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பில் பயமும், வலியும், சொல்ல முடியாத காதலும் கலந்திருந்தது.

​”ஏன்… ஏன் பேபி இப்படிப் பண்ண? நான் செஞ்ச தப்புக்கு என்னை விட்டு ஒரேடியா போக முடிவு பண்ணிட்டியா? நான் தெரியாமப் பண்ணிட்டேன்னு சொல்ல மாட்டேன், தெரிஞ்சுதான் பண்ணேன். ஆனா சத்தியமா நீ இவ்வளவு வேதனைப்படுவேன்னு நான் நினைக்கல,” எனத் தேம்பினான்..

​”அன்னைக்கு கோபத்துலதான் டிவோர்ஸ் கொடுத்தேன். ஆனா உன்னைப் பிரியணும்னு நான் ஒருநாளும் நினைச்சதே இல்லை. உன்னை முதல் தடவை பார்த்தபோதே உன்கூடக் காலம் முழுக்க இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். நான் உனக்குக் கஷ்டம் கொடுத்திருக்கேன் தான், ஆனா மனசார உன்னைப் பிரியணும்னு நினைச்சதில்லை. உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு சொல்லத் தெரியல பேபி. ‘ஐ லவ் யூ’ங்கிற மூணு வார்த்தையில என் அன்பைச் சுருக்கிடவும் எனக்கு விருப்பமில்லை. நீ என் கண்ணைப் பார்த்து என் அன்பைப் புரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். ஆனா, நான் காட்டின அன்பை விட என் வார்த்தைகள் தான் உன்னை அதிகமா காயப்படுத்திருக்குன்னு நான் தாமதமாப் புரிஞ்சுக்கிட்டேன்.”

​அவனது கண்ணீர் நித்திலாவின் தோள்களை நனைத்தது. “நீ என்னை எவ்ளோ வெறுக்கிறன்னு இப்போதான் புரியுது. உன் உயிரைப் பத்தி கூடக் கவலைப்படாம இப்படி ஒரு முடிவை எடுத்தியே… என்ன விட்டுப் போகணும்ங்கிற ஆத்திரத்துல தான் இப்படிப் பண்ணியா? வேணாம் பேபி! நீ நல்லா இருக்கணும், லைஃப் லாங் சந்தோஷமா இருக்கணும். உனக்கு என் கூட வாழப் பிடிக்கலன்னா கூட உன்னை விட்டுப் பிரிய நான் தயாரா இருக்கேன். ஆனா சாவு… இது சரியான முடிவு இல்லை பேபி. சத்தியமாச் சொல்றேன், உனக்கு ஏதாச்சும் ஆனா… அடுத்த நொடி நான் உயிரோட இருக்க மாட்டேன்!” என அவன் கதறினான்.

​நித்திலாவிற்கு அவனுடைய கண்ணீரும், அவன் பேசிய வார்த்தைகளும் அவன் தன் மீது எவ்வளவு உயிராக இருக்கிறான் என்பதைத் தெள்ளத்தெளிவாகப் புரிய வைத்தது. அவன் தன் மேல் வைத்திருக்கும் காதல் எத்தகையது என்பதையும் உணர்ந்தவள்,.. அவனது சிவந்த கன்னங்களை இரு கரங்களால் மென்மையாகத் தாங்கி.. ​”உங்களுக்கு என்ன தோணுது அத்து? உங்களுக்குத் தண்டனை கொடுக்கணும்னு நினைச்சுதான் நான் சாவை நோக்கிப் போறேன்னு நினைக்கிறீங்களா? உங்களால எப்படி இப்படி நினைக்க முடிஞ்சது? நான் ஒன்னும் கோழை இல்ல அத்து… உங்களுக்குத் தண்டனை கொடுக்க எனக்குப் பல வழிகள் இருக்கு, கண்டிப்பா சாவை தேர்ந்தெடுக்க மாட்டேன்,.. நான் முழுக்க முழுக்க நம்ம குழந்தைக்காக மட்டும்தான் இந்தக் கர்ப்பத்தைத் தொடரணும்னு நினைக்கிறேன்.” என்றவள் மூச்சை இழுத்து விட்டு கண்கள் கலங்க, அவனது பார்வையை ஏந்தியபடி தொடர்ந்தாள்,

“எப்படி அத்து என்னால நம்ம குழந்தையை அழிக்க முடியும்? இது என் அத்து எனக்குக் கொடுத்த உயிர்… என் அத்துவோட ரத்தம்! இதை எப்படி என்னால அழிக்க முடியும்? இதுக்கு அப்புறம் நமக்கு எத்தனை குழந்தைகள் வந்தாலும், இது நமக்குக் கிடைச்ச முதல் குழந்தை. நம்ம அன்புக்குச் சாட்சியா உருவான இந்தச் சின்னஞ்சிறு உயிரை எப்படி என்னால அழிக்க முடியும் அத்து?”
​கேட்டுக்கொண்டே இருந்தவள், தன் கட்டுப்பாட்டை இழந்து மீண்டும் அவன் மார்பிலேயே தஞ்சமடைந்து விக்கி விக்கி அழுதாள்.

மனதில் ஒரு சிறு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்பட்டது. ‘தன்னையும் தன் குழந்தையையும் இவ்வளவு நேசிப்பவள், தன்னுடன் வாழ மட்டும் ஏன் மறுக்கிறாள்?’ என்ற கேள்வி அவனுள் குடைந்தது.

​”பேபி… நான்…” என அவன் ஏதோ பேச வர, “வேண்டாம் அத்து, எதுவும் பேசாதீங்க. நான் உங்களை நிறைய கஷ்டப்படுத்திட்டேன். போதும், எல்லாத்தையும் இதோட நிறுத்திக்கிறேன். ஆனா குழந்தை பிறந்ததும் நான் உங்களை விட்டுப் போறதுல மட்டும் உறுதியா இருக்கேன். கவலைப்படாதீங்க, நான் சாவைப் பத்தி சொல்லல. எனக்கு எதுவும் ஆகாதுங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு,” என்றாள் நித்திலா.

​”ப்ளீஸ் பேபி… என்னை விட்டுப் போகாதே,” என விக்ராந்த் கெஞ்ச, “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே சொன்னீங்க, நான் விருப்பப்பட்டா போக அனுமதிப்பேன்னு? இப்போ ஏன் மாத்திப் பேசுறீங்க?” என அவள் திருப்பிக் கேட்டாள்.
​”என் மேல இருக்கிற கோபத்துக்காக நீ போறேன்னு சொல்ற… ஆனா குழந்தை என்ன தப்பு பண்ணுச்சு? குழந்தையை விட்டுட்டு உன்னால இருக்க முடியுமா?” என விக்ராந்த் கேட்க, “கொஞ்ச நாள் கஷ்டமா தான் இருக்கும், போகப் போகப் பழகிடும்,” எனத் தன் வலியை மறைத்துப் பதிலளித்தாள்.

​”உன்னோட இந்த முடிவுக்கு என்ன காரணம்? என் வார்த்தைகளா? இல்ல அந்த டிவோர்ஸ் நோட்டீஸா?” என விக்ராந்த் விடாமல் வினவினான்..

​’ரெண்டுமே இல்லை அத்து… நீங்க உங்க தவறை உணர்ந்து வருத்தப்படும்போதே நான் உங்களை மன்னிச்சிட்டேன். ஆனா லாவண்யாதான் உங்களோட முதல் காதல். எந்த ஒரு மனிதராலும் தன் முதல் காதலை மறக்க முடியாது. நான் உங்களுக்கு ரெண்டாவதா வந்தவள் தான். உங்க முதல் காதல் உங்களுக்குக் கிடைக்கணும்னு தான் நான் விலகிப் போறேன். ஒருவேளை பிரசவத்துல என் உயிர் பிரிஞ்சிட்டா கூட நான் சந்தோஷப்படுவேன், ஏன்னா உங்களை விட்டுப் பிரிஞ்சு என்னால வாழ முடியாது அத்து! வெளியே தைரியமா பேசினாலும் உள்ளுக்குள்ள நெஞ்செல்லாம் பதறுது அத்து!’
​அவள் மனதுக்குள் அழுதுகொண்டிருக்க, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

​”பேபி… என்னாச்சு?” எனப் பதறிப்போய் விக்ராந்த் அவள் கண்ணீரைத் துடைக்க, “ஒன்னுமில்லை,” எனச் சமாளித்தாள். “நீ இன்னும் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லலையே?” என அவன் மீண்டும் ஏக்கத்துடன் கேட்க, “நீங்க கேட்ட ரெண்டுமே தான்னு வச்சுக்கோங்களேன்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள், விக்ராந்த் அவளை ஏக்கமாகப் பார்த்தபடி நின்றான்.

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
20
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. உயிரை பணயம் வைத்தாவது தன்னை விட்டு செல்வதில் உறுதியாய் இருக்கிறாள் என்றறிந்து மறுகுகிறான் விக்ராந்த்.

    குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அவளுக்கு அன்பை மட்டுமே பரிசளிக்கின்றனர். வாரிசை பற்றி யோசிக்காமல் அவள் உடல் நலனை பற்றி கவலைக்கொள்கின்றனர்.

    தான் காட்டிய அன்பை விட தனது வார்த்தைகள் தான் அவளை ஆழமாக சென்று சேர்ந்துள்ளது என்று எண்ணி வருந்துகிறான்.

    குழந்தையை விட மனமில்லாமல் தான் செய்தேன் என்றுவிட்டால். ஆனாலும் பிரிந்து செல்வதில் உறுதியாய் இருப்பதாகவும் சொல்கிறாள்.

    அவன் தன்னை உயிராய் நேசிக்கின்றான் என்று தெரிந்தும் முதல் காதல் புடலங்காய் காதல் என்று மனதோடு வசனம் பேசிக்கொண்டிருக்கிறாள்.