Loading

அத்தியாயம் – 35

ஜெயமோகனிடம் பேசிவிட்டு அறைக்கு வந்த விக்ராந்த், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நித்திலாவையே பார்த்துக் கொண்டிருந்தான். சில நாட்களாகவே அவள் சீக்கிரம் உறங்கிவிடுவதையும், மிகவும் சோர்வாக இருப்பதையும் அவன் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். ‘ஃபுட் பாய்சன் என்றால் இத்தனை நாட்கள் அதன் தாக்கம் இருக்குமா?’ என்ற கேள்வியுடன் அவளுக்குச் சற்று தள்ளிப் படுத்துக்கொண்டான்.

நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்டு விழித்த விக்ராந்த், அருகில் நித்திலா இல்லாததைக் கண்டு பதறி எழுந்தான். பாத்ரூம் கதவு பாதி திறந்திருக்க, உள்ளிருந்து அவள் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டுப் பதற்றத்துடன் உள்ளே நுழைந்தான்.

அவள் உடல் மிகவும் பலவீனமாகி, பேலன்ஸ் இல்லாமல் கீழே விழப்போன தருணத்தில் அவளைத் தாங்கிப் பிடித்தவன்,..
​”என்னாச்சு நிலா? உடம்புக்கு என்ன பண்ணுது?” என்று அக்கறையாக விசாரிக்க, அவளோ தன் தோளைப் பற்றியிருந்த அவன் கைகளைத் தட்டிவிட்டு “என்னைத் தொடாதீங்க!” என்று வெறுப்புடன் கூறிவிட்டு வெளியே வந்தாள்.

தலைசுற்றலால் அவள் மீண்டும் நிலைகுலைய, விக்ராந்த் அவள் மறுப்பையும் மீறி விடாமல் பிடித்து படுக்கையில் அமர வைத்துவிட்டு, தண்ணீர் டம்ளரை அவளிடம் நீட்ட, “தேவையில்லை, உங்க கையால தர்ற எதையும் நான் வாங்க மாட்டேன்” எனச் சோர்விலும் தன் பிடிவாதத்தைக் காட்டினாள்.

​”தயவுசெஞ்சு இப்படிப் பண்ணாத நிலா… எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு” என்று விக்ராந்த் உடைந்த குரலில் சொல்ல, நித்திலா அமைதியாக இருந்தாள்.

அதன் பின் அவன் டம்ளரை மேஜையில் வைத்துவிட்டு, “இப்போ நான் தரல, நீயே எடுத்து குடி” என்றான். நீர் தேவைபட்டதால் அதைப் பருகியவளுக்கு, மீண்டும் குமட்டிக் கொண்டு வர, மீண்டும் வாந்தி எடுக்க ஓடினாள், விக்ராந்த் அவளது மறுப்பையும் மீறி அவளுக்கு உதவியாக நின்றான்.

​”நிலா, நீ ரொம்ப வீக்கா இருக்க. இப்போவே ஹாஸ்பிட்டல் போகலாம் வா,” என்று அவன் அழைக்க, “வேணாம்… நேத்துதான் போயிட்டு வந்தேன், சரியாயிடும்,” என்றாள் அவள்.

​”மறுபடியும் போறதுல தப்பில்லையே, போயிட்டு வந்துடலாம்” என அவன் கெஞ்ச, “டாக்டர் மாத்திரை கொடுத்திருக்காங்க… கொஞ்ச நாள் இப்படித்தான் இருக்கும்னு சொல்லிதான் அனுப்புனாங்க,” என எதார்த்தமாகச் சொல்லிவிட்டாள்.

​”என்னது… கொஞ்ச நாள் இருக்குமா?” என விக்ராந்த் அதிர்ச்சியாகக் கேட்க, தான் உளறிவிட்டதை உணர்ந்த நித்திலா, “அது… ஒன்னு ரெண்டு நாள் இப்படி இருக்கும்னு சொன்னாங்க. என்னை எதுவும் கேட்காம ரெஸ்ட் எடுக்க விடுங்க!” என எரிச்சலுடன் பேச்சை முடித்தாள்.

விக்ராந்த் மேற்கொண்டு அவளைத் தொந்தரவு செய்யவில்லை என்றாலும், அவள் உறங்கும் வரை உறங்காமல் அவளையே கவனித்துக் கொண்டிருந்தவன்,
அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பின்னர் தான் உறங்கவே சென்றான்…

அடுத்த நாள் காலை எட்டு மணியாகியும் நித்திலா உறங்கிக் கொண்டிருந்தாள். ‘இரவு முழுக்கச் சரியாகத் தூங்காததால் இன்னும் உறங்குகிறாள் போல’ என்று நினைத்த விக்ராந்த், அவளைத் தொந்தரவு செய்யாமல் அலுவலகம் கிளம்பிச் சென்றான்.

தாமதமாக எழுந்த நித்திலா, அவசர அவசரமாகத் தயாராகி கீழே வர..
​”என்ன நித்தி, செம தூக்கம் போல?” என்று சுமித்ரா கிண்டலாகக் கேட்க, “ஸாரிக்கா… கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்,” என அசடு வழிந்தாள் நித்திலா.

“இந்த ஸாரி சொல்றதை முதல்ல நிறுத்து. எல்லாரும் சாப்பிட்டாச்சு, வா நாமளும் சாப்பிடலாம்,” என்று அவளை அழைத்துச் சென்றாள் சுமி.

காலை உணவு முடிந்து இருவரும் பேசிக்கொண்டே கீரை ஆய்ந்து கொண்டிருந்தபோது, சுமித்ரா மெல்ல.. “நித்தி… நைட் என்னடி ஆச்சு?” என  கேட்க, “என்னக்கா… எதைப் பத்திக் கேக்குறீங்க?” என நித்திலா புரியாமல் பார்த்தாள்.

​”விக்ராந்த் கிளம்பும்போது உன்னை டாக்டரை பார்க்கக் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டுப் போனாரு. அதான் கேட்டேன், இன்னும் உடம்புக்கு முடியலையா?” என்று சுமி கவலையுடன் வினவினாள்.

“அதெல்லாம் இல்லக்கா… நைட் தான் கொஞ்சம் முடியாம இருந்தது, இப்போ நல்லா இருக்கேன்,” என்று சிரித்துக்கொண்டே மழுப்பினாள் நித்திலா.

​சுமித்ரா விடுவதாக இல்லை. “சரி நாம எதுக்கும் இன்னொரு தடவை டாக்டரை பார்த்துட்டு வந்திடலாம்,” என அவள் சொல்ல, “ஏன்க்கா… என்னை பார்த்தா பேஷன்ட் மாதிரியா இருக்கு? எத்தனை தடவைதான் போறது?” என சலித்துக் கொண்டாள்.

​”விக்ராந்த் கூட்டிட்டுப் போகச் சொல்லி இருக்காரே, நான் அவருக்கு என்ன பதில் சொல்றது?” என சுமி கேட்க, “போயிட்டுதான் வந்தோம், டாக்டர் வேற மருந்து மாத்தி கொடுத்தாங்கன்னு சொல்லிடுங்க, முடிஞ்சது!” என்றாள் நித்திலா கூலாக.

​”பொய் சொல்லச் சொல்றியா? என்னால முடியாது. உங்க பொண்டாட்டி வர மாட்டேன்னு சொல்லிட்டான்னு உண்மையைச் சொல்லிடுவேன்,” என சுமி மிரட்ட, நித்திலாவோ சலிப்புடன், “ப்ளீஸ் அக்கா… போயிட்டு வந்துட்டதா சொல்லிக் கதையை முடிங்க. இல்லைனா அவர் வா’னு டார்ச்சர் பண்ணுவாரு, அவரோட பாசத்தை இதுல காட்டுறதா நினைச்சு ரொம்ப ஓவரா பண்ணுவாரு’ என்றாள்.

​”ஏன் நித்தி இப்படிப் பேசுற? விக்ராந்த் நிஜமாவே உன் மேல உண்மையான பாசம் வைச்சிருக்காரு. எவ்வளவு நாளைக்குதான் அவரை இப்படி கஷ்டப்படுத்தப்போற?” என சுமி வருத்தத்துடன் கேட்டாள்.

​”ஜஸ்ட் இன்னும் 27 டேஸ் தான்க்கா. அப்புறம் உங்க கொழுந்தன் ரொம்ப நிம்மதியா, சந்தோஷமா இருக்கலாம்!” என நித்திலா குத்தலாகப் பதிலளித்தாள்.

​சுமித்ரா அவளது தாடையைப் பிடித்து, “நித்தி… இப்படிலாம் பேசாதடி. இந்த அக்கா சொன்னா நீ கேட்பதானே?” எனக் கெஞ்சிக் கேட்க, நித்திலாவோ பிடிவாதமாக, “மன்னிச்சிடுங்க அக்கா… நான் என் முடிவுல உறுதியா இருக்கேன். என்னால அவரோட வாழ முடியாது!” என ஆவேசமாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள். போகும் அவளையே வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமித்ரா.

நாட்கள் வேகமாகச் சுழன்றன. விக்ராந்த் – நித்திலா திருமண வாழ்க்கை தொடங்கி அன்றோடு ஆறு மாதங்கள் நிறைவடைந்தன. விடுமுறை நாள் என்பதால் அனைவரும் வீட்டிலேயே இருந்தனர். விக்ராந்த் தன் அறையில் இருக்க, கீழே சென்றுவிட்டு வந்த நித்திலா, அலமாரியின் மேலிருந்த சூட்கேஸை ஒரு நாற்காலியின் உதவியுடன் கீழே இறக்கியவள், அதை மெத்தையில் வைத்துத் தன் துணிகளை ஒவ்வொன்றாக அடுக்கத் தொடங்கினாள்..

​அமைதியாக அவளையே கவனித்துக் கொண்டிருந்த விக்ராந்த், அவள் அருகில் வந்து, “நீ என்ன பண்ற?” எனக் கேட்டான்.

“பார்த்தா தெரியலையா? டிரஸ் பேக் பண்றேன்,” எனத் தன் வேலையில் கண்ணாக இருந்தாள்.

“எதுக்கு இப்போ பேக் பண்ற?”  விக்ராந்தின் குரலில் நடுக்கம் தெரிந்தது.

​”மறந்துட்டீங்களா விக்ராந்த்? இன்னையோட நமக்குக் கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் ஆச்சு. நான் போக வேண்டிய நேரமும் வந்துடுச்சு,” என்றாள் சலனமே இல்லாமல்.

அவள் கரம் பற்றி அவள் செய்கையைத் தடுத்த விக்ராந்த், “நீ எங்கேயும் போகக் கூடாது!” என்றான் அதிகாரமும் ஆதங்கமும் கலந்த குரலில்.

அவன் கையைத் தட்டிவிட்ட நித்திலா, “அதைச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. உரிமை உரிமைன்னு சொல்லுவீங்களே, அந்த உரிமை நேத்தோட முடிஞ்சு போச்சு! இனி நான் நித்திலா விக்ராந்த் இல்லை… நித்திலா வேதநாயகம்! என்னைத் தடுக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது,” என உறுமினாள்.

​”ஏன் நிலா இப்படிப் பண்ற? நான் பண்ண தப்புக்கு நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு, நான் ஏத்துக்கிறேன். ஆனா என்னை விட்டு மட்டும் போயிடாத” என விக்ராந்த் கெஞ்சும் பார்வையுடன் நின்றான்.

​”தண்டனையா? எதுக்குத் தண்டனை? தெரியாம செஞ்ச தப்புக்குத் தண்டனை கொடுக்கலாம். ஆனா நீங்க எல்லாம் தெரிஞ்சு தானே பண்ணீங்க? ஒரு பொண்ணோட மனசைப் புரிஞ்சுக்காம எவ்வளவு மோசமா நடந்துகிட்டீங்க? கல்யாணமான முதல் நைட்டே எந்த ஒரு கணவனும் தன் மனைவிக்குக் கொடுக்கக் கூடாத வேதனையைக் கொடுத்தீங்க! என்னால அதை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது,” என ஆவேசமாகக் கத்தினாள்.

​”நான் பண்ணது தப்புதான், இல்லைன்னு சொல்லல. அதுக்காக நான் நிஜமாவே வருத்தப்படுறேன். ஏதோ ஒரு மனநிலையில அப்படிப் பண்ணிட்டேன். ஆனா உன் மேல நான் வைச்சிருக்கிறது உண்மையான அன்பு நிலா. நீ இல்லைன்னா என்னால சத்தியமா வாழ முடியாது, ப்ளீஸ் என்னை விட்டுப் போயிடாத!” என மீண்டும் அவள் கைகளைப் பற்றினான்.

​”உங்களுக்கு என் மேல அன்பு இல்லை, வெறும் ஆசை மட்டும்தான் இருக்கு! உங்க ஆசைக்காக அடிபணிந்து என்னால உங்க கூட வாழ முடியாது. இதுக்குன்னு நிறையப் பொண்ணுங்க இருக்காங்க, அவங்ககிட்டப் போங்க!” எனச் சிவந்த கண்களுடன் சீறினாள் நித்திலா.

விக்ராந்த் உடைந்து போய் நின்றான். “நீ என்ன வேணும்னாலும் பேசு நிலா, உன் கோபம் குறையுற வரைக்கும் திட்டு. ஆனா என்னை விட்டு மட்டும் போயிடாத,” என்றான்.

​”உங்களை எனக்குப் பிடிக்கல! உங்க கூட வாழ்றதையே அசிங்கமா நினைக்கிறேன். உங்க முகத்தைப் பார்க்கவே அருவருப்பா இருக்கு! இனியும் என்னை வற்புறுத்துனீங்கன்னா, அப்புறம் நீங்க தான் கஷ்டபடுவீங்க, நீங்க என்னைக் காயப்படுத்தினதை விட மோசமான வார்த்தைகளால் நான் உங்களைக் காயப்படுத்துவேன். என்னை விட்டுடுங்க!” என அவன் கரத்தை உதறித் தள்ளியவள், தன் பெட்டியுடன் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

​கையில் பெட்டியுடன் நித்திலா கீழே இறங்கி வருவதைப் பார்த்ததும், குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் அவளைச் சுற்றி வளைத்தனர்.

“என்னம்மா நித்திலா? கையில் என்ன சூட்கேஸ் இது?” என லட்சுமணன் பதற்றத்துடன் வினவினார்.

​”நான் போறேன்ப்பா. நான் இங்க இருக்க வேண்டிய காலம் முடிஞ்சு போச்சு, அதனால நான் கிளம்புறேன்,” என நித்திலா சலனமே இல்லாமல் சொன்னதைக் கேட்டு அனைவரும் உறைந்து போயினர்.

​”நித்திலா… நீ என்னமா சொல்ற? உன் வீட்டை விட்டுப் போகப்போறேன்னு சொல்ற? விக்ராந்த் அன்னைக்கு ஏதோ மனநிலையில அப்படிச் சொல்லிட்டான். அதுக்காக நீ இப்படிப் பண்றது சரியில்லை மா,” என மரகதப் பாட்டி அவளைச் சமாதானப்படுத்த முயன்றார்.

​ஆனால் நித்திலாவின் கோபம் குறையவில்லை. “அவர் எந்த நிலையிலும் அப்படிப் பண்ணல பாட்டி! திமிருல பண்ணாரு, ஆணவத்துல நடந்துகிட்டாரு. உங்க பேரன் அப்படிங்கறதுக்காக அவர் செஞ்சது உங்களுக்குத் தவறாத் தெரியாம இருக்கலாம். ஆனா என்னால அப்படி நினைக்க முடியாது. அவர் எனக்குக் கொடுத்த ஆறு மாதக் காலம் முடிஞ்சு போச்சு. நான் போகத்தான் போறேன், என்னைத் தடுக்க யாராலும் முடியாது!” எனத் தீர்க்கமாகச் சொன்னாள்.

“ஏமா நித்திலா இப்படியெல்லாம் பேசுற… விக்ராந்த் இப்போ அவன் செய்த தவறுக்காக வருந்துறான்மா. தயவு செய்து உன் முடிவை மாத்திக்கோ!” என்று சந்தானம் கெஞ்சும் தொனியில் சொல்ல,..
“என்னை மன்னிச்சிடுங்க மாமா, இனி என்னால அவர் கூட வாழ முடியாது,” எனத் தன் முடிவில் உறுதியாக இருந்தாள்.

​இனியா அழுதுகொண்டே அவள் கைகளைப் பற்றியவள்.. “அண்ணி ப்ளீஸ் அண்ணி, எங்களை விட்டுப் போகாதீங்க!” என்க, நித்திலா அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “ஸாரி இனியா… நீ சின்னப் பொண்ணு, உனக்கு இதெல்லாம் புரியாது. அழாதே,” எனத் தேற்றினாள்.

“நித்தி ப்ளீஸ்டி,… எல்லாரும் இவ்வளவு தூரம் சொல்றோம்ல, இப்படி பண்ணாதடி” சுமி சொல்ல,…”ப்ளீஸ்க்கா,… என்கிட்ட இப்படிலாம் கெஞ்சி பேசாதீங்க, எனக்கு கஷ்டமா இருக்கு, ஆனா நான் போறதுல உறுதியா இருக்கேன்” என்றாள்

“நித்திலா” என வித்தார்த் ஏதோ சொல்ல வர அவனை பேசவிடாமல் தடுத்தவள்,..”ப்ளீஸ் மாமா வேணாம், என்னை போக விடுங்க” என கைகூப்பி கேட்டாள்,..

“ஏய் என்னடி… இத்தனை பேர் சொல்றோம்ல? கேட்க மாட்டியா நீ? இப்போ என்னடி உனக்கு பிரச்சனை? சரி, என் பங்குக்கு நான் வேணும்னா உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன், எங்கேயும் போகாத!” அதட்டலுடன் ஆரம்பித்து பணிவுடன் முடித்தார் அன்னலட்சுமி…

அவர் ‘மன்னிப்பு’ என்ற வார்த்தையைச் சொன்னதும் நித்திலா பதறிப்போனாள்.

“அத்தை, நீங்க என் அம்மா மாதிரி. என்கிட்டலாம் மன்னிப்பு கேட்டு என்னைச் சங்கடப்படுத்தாதீங்க,” என்றாள். ‘அம்மா’ என்ற அந்த ஒற்றைச் சொல்லில் அன்னம் உருகிப் போனார்.

​அனைவரது வேண்டுகோளையும் நிராகரித்துவிட்டு, நித்திலா வீட்டை விட்டு வெளியேற அடுத்த அடி எடுத்து வைத்தாள். அப்போது, “நித்திலா!” என்ற விக்ராந்தின் அதிகாரமும் வலியும் கலந்த கணீர் குரல் ஹால் முழுவதும் எதிரொலித்தது. அந்தத் தார்மீகக் குரலில் கட்டுப்பட்டவள் போல, நித்திலா அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் அப்படியே சிலையென உறைந்து நின்றாள்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
26
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. உடம்பு முடியாமல் இருப்பவளது அவசியமான உதவிக்கு கூட அவனை வர விடாமல் விலக்கி வைக்கின்றாள்.

    சகோதரி போல் பரிவோடும் பாசத்தோடும் நடந்துகொள்பவளிடமும் உண்மையை உரைக்காமல் எடுத்த முடிவினில் உறுதியாய் இருக்கின்றாள்.

    வீட்டிலிருக்கும் அனைவர் கூறியும் கேளாமல் பிடிவாதமாக வெளியேற எண்ணுகின்றாள்.

    விக்ராந்த் தனிப்பட்ட முறையில் அவளிடம் ஆறுமாத கணக்கை கூறி அவ்வப்போது சுட்டிக்காட்டியதை தவிர வேறு எந்த வகையிலும் கொடுமை செய்தது இல்லையே.

    அவனது உண்மையான நேசம் புரிந்தும் பிடிவாதம் செய்கின்றாள்.