
அத்தியாயம் – 22
நித்திலா வீசிய அந்த வார்த்தைகள் விக்ராந்தின் நெஞ்சை ஆழமாகத் தாக்கியது, அதன் பிறகு அவன் அவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. எழுந்து சென்றுவிட்டான்.
ஒரு வாரம் மின்னல் வேகத்தில் கடந்துபோனது. நித்திலா காலில் உள்ள காயத்தினாலேயா, இல்லை அவள் கேட்ட வார்த்தையாலயா என்று தெரியவில்லை அந்த ஒரு வாரமும் விக்ராந்த் நித்திலாவை நெருங்கவே இல்லை,…
அன்று விடுமுறை நாள், வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் வீட்டில் தான் இருந்தார்கள், விக்ராந்த் அறையில் இருந்தான்,..
மெத்தைக்கு விரிப்பு போட்டுக் கொண்டிருந்த நித்திலாவிடம்….”நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நிலா” என்றான் விக்ராந்த் மெல்ல,….
திரும்பி விக்ராந்தை புரியாத பார்வை பார்த்தாள் நித்திலா, அதற்கு முதல் காரணம் அவனுடைய ‘நிலா’ என்ற அழைப்பு,….
கோபமாக இருந்தால் ‘நிலா’ என்று அழைப்பான், இல்லையென்றால் கவலையில் இருக்கும் போது அழைப்பான், அவள் ஊகித்திருந்த வரை இந்த இரண்டு நேரங்களில் மட்டும் தான் அவனை ‘நிலா’ என்று அழைப்பான், மற்ற நேரங்களில் எல்லாம் ‘பேபி’ என்ற அழைப்பு மட்டும் தான்,….
“என்ன பேசணும்? எதை பத்தி÷” அவள் அவனது முகத்தை உற்று நோக்கிக் கேட்டாள்.
“என்னை பத்தி, நம்மளை பத்தி” அவன் தெளிவாக சொல்ல,… ‘என்னவாக இருக்கும்’ என குழம்பி போனவள், “சொல்லுங்க” என்றாள்,…
தொண்டையை செருமிக் கொண்டவன்,.. “நான் இப்போ சொல்லப் போறதைக் கேட்டு உனக்கு ஷாக்கிங்கா தான் இருக்கும்,” என அவன் ஒரு புதிரைப் போட்டான். நித்திலா உள்ளுக்குள் குழம்பிப்போனாள். ‘இவனே ஒரு புரியாத புதிர், இவன் சொல்லப்போவது அதைவிடப் பெரிய புதிராக இருக்குமே’ என நினைத்தாலும், அமைதியாகக் காத்திருந்தாள்…
“நிலா நான்” என விக்ராந்த் ஏதோ ஒரு ரகசியத்தை உடைக்க முற்பட்ட அந்த நொடி கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
“அண்ணா!” இனியாவின் கேட்டு
“உள்ளே வா இனியா” விக்ராந்த் சொல்ல, இனியாவும் உள்ளே வந்தாள், இருவரும் என்னவென்பது இனியாவின் முகத்தை நோக்கினர்,….
”அண்ணா… உங்களைப் பார்க்க உங்க ஃபிரண்ட் வந்திருக்காங்க,” என்றாள் இனியா.
“ஃபிரண்டா? யாரு?” என விக்ராந்த் குழம்ப, “பேர் தெரியல அண்ணா, பெரியம்மா உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க,” என்றாள் இனியா.
”சரி, நான் வர்றேன்,” என விக்ராந்த் சொல்ல, இனியா வெளியேறினாள். மீண்டும் நித்திலாவிடம் திரும்பிய விக்ராந்த், “நிலா நான்..” எனத் தொடர முயன்றான்.
ஆனால் நித்திலா அவனைத் தடுத்து..”உங்க ஃபிரண்ட் வந்திருக்காங்கல்ல? போய் பாருங்க. நான் இங்கதானே இருக்கப்போறேன்? அப்புறம் மெதுவா பேசிக்கலாம்,” என சொல்லி அவனை அனுப்பி வைத்தாள்…
அப்போதே விக்ராந்த் சொல்ல வந்த அந்த உண்மையை நித்திலா கேட்டிருந்தால், வரும் காலங்களில் அவர்கள் இருவருக்கும் காத்திருந்த அந்தப் பெரும் துன்பங்கள் தடுக்கப்பட்டிருக்குமோ என்னவோ! காலத்தின் சதி அந்த பேச்சு வார்த்தையை தள்ளிப்போட்டது.
விக்ராந்திற்கு அப்படி யார் நண்பர் இருக்க முடியும், இது வரை பார்த்தில்லையே என்ற குழப்பத்துடன் நித்திலாவும் அவனைப் பின் தொடர்ந்து கீழே வந்தாள். முற்றத்தில் குடும்பமே திரண்டிருந்தது. அனைவர் முகத்திலும் குழப்பம் அப்பியிருக்க, அன்னலட்சுமியின் முகத்தில் மட்டும் ஒரு வஞ்சகமான பிரகாசம் தாண்டவமாடியது.
மாடிப்படி இறங்கிய விக்ராந்த், அங்கு நின்றிருந்தவளைக் கண்டதும் அப்படியே உறைந்து போனான். அவன் எவளைப் பற்றி நித்திலாவிடம் வர்ணித்தானோ, அதே லாவண்யா தான் அங்கு நின்றிருந்தாள்! அவளைக் கண்டதும் விக்ராந்திற்குச் சந்தோஷம் வரவில்லை, மாறாக பயமும், ஆத்திரமும், என்ன செய்வது என்று தெரியாத தவிப்பும் தான் மேலோங்கியது.
விக்ராந்தைக் கண்டதும், “விக்கு!” என உற்சாகமாகக் கத்தியபடி ஓடி வந்து அவனைப் பலமாகத் தழுவிக்கொண்டாள் லாவண்யா. ஒரு அந்நியப் பெண் அனைவர் முன்னிலையிலும் இப்படி நடந்துகொண்டது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.
“எத்தனை வருஷமாச்சுடா உன்னை பார்த்து, முன்ன விட இப்ப செம ஸ்மார்ட் அண்ட் ஹாட்டா இருக்க!” என அவள் கொஞ்ச, லாவண்யாவின் அநாகரீக உடை அங்கிருப்பவர்களை முகம் சுழிக்க வைத்தது மட்டும் இல்லாமல், அவளது செயலும் பேச்சும் அருவருப்பை உண்டாக்கியது,….
“ஹேய் ஸ்மார்ட் பாய்,… என்ன அப்படி பார்க்கிற, இதை நீ எதிர்பார்த்திருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும், என்னோட சர்பிரைஸ் எப்படி இருக்கு,” அவனது புஜத்தை பற்றி கொண்டு அவள் உற்சாகத்துடன்கேட்க,… அவனுக்கு தான் பேச்சு வராமல் தொண்டை அடைத்து போயிருந்தது…
“என்ன? சந்தோஷத்துல பேச்சே வரலையா?” அவள் பேசிக்கொண்டே போக, அவனது பார்வை மெல்ல தயக்கத்துடன் நித்திலாவிடம் திரும்பியது, அவள் மொத்தமாக உடைந்து போய் விட்டாள் என்பது அவளது முகமே காட்டி கொடுத்தது,…
“லா,… லாவண்யா” அவன் ஏதோ பேச வர, அக்கணம் அவர்களினருகில் வந்த அன்னம்,… “என்னடா கண்ணா,.. இப்போ சந்தோசம் தானே உனக்கு” அவர் கேட்க… இப்போது அவரை புரியாத பார்வை பார்த்தான் விக்ராந்த்,…
“எனக்கு தெரியும் டா, நீ லாவண்யாவை காதலிச்சதுலருந்து எனக்கு எல்லாமே தெரியும், எப்படின்னு பார்க்கிறியா லாவண்யா தான் சொன்னா, என்னோட நம்பரை கண்டுபிடிச்சி ரெண்டு நாளைக்கு முன்னாடி அவ எனக்கு ஃபோன் போட்டிருந்தா, உன்னை பத்தியும் அவளை பத்தியும் ஒன்னு விடாம என் கிட்ட சொன்னா, இதோட சேர்த்து அவ இங்க வர்றதையும் சொன்னா,” என அன்னம் சொல்ல, விக்ராந்த் திகைத்து நின்றான்.
லட்சுமணன் பொறுமையிழந்து, “இங்க என்ன நடக்குது? யாரு இந்தப் பொண்ணு?” எதையும் ஊர்ஜிதமாய் புரிந்து கொள்ள இயலாமல் கேட்க, “நான் சொல்றேன்ங்க” என்று ஆரம்பித்த அன்னலட்சுமி ஒட்டுமொத்தக் குடும்பத்தின் முன்னிலையிலும் அந்த அணுகுண்டை வீசினார்.
“இது லாவண்யா,… நம்ம பையன் வெளிநாட்டுல இருக்கும் போது, இவங்க ரெண்டு பேரும் மனசார காதலிச்சிருக்காங்க, ஊருக்கு வந்த பிறகும் போன்லயே தங்களோட காதலை வளர்த்துட்டு இருந்திருக்காங்க, லாவண்யா மாடர்ன் பொண்ணு அதனால அவளை பத்தி சொல்ல நம்ம பையன் யோசிச்சிருக்கான், லாவண்யாவை ஊருக்கு வர சொல்லி, எல்லார் முன்னாடியும் அவளை அறிமுக படுத்திட்டு, அப்றம் சொல்லலாம்னு காத்திட்டு இருந்திருக்கான், ஆனா அவன் மனசை புரிஞ்சிக்காம நாம தான் அவனுக்கு கல்யாணத்தை பண்ணி வச்சிட்டோம்” என அனைத்தையும் கூறிட,..
“ஓஹோ இவ்வளவு தானா,… இப்போ விக்ராந்த்துக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சி, அவனை வாழ்த்திட்டு போகலாம்னு வந்திருக்கு இந்த பொண்ணு அப்படி தானே அண்ணி” சந்தானம் கேட்க,…. “இல்ல கொழுந்தனே,… நான் இன்னும் சொல்லி முடிக்கல, முழுசா கேளுங்க” அன்னம் சொல்ல, நெற்றி சுருங்க அவரை பார்த்தார் அவர்,….
“என் பையன் விருப்பப்பட்டு இந்த கல்யாணத்தை செஞ்சுக்கல, வேற வழியே இல்லாம தான் செஞ்சிருக்கான், தன் மனசுல ஆழமா புதைஞ்சு போய் இருக்கிறவளை மறந்துட்டு, அவனால கட்டிக்கிட்டளோட நிம்மதியா வாழ முடியாதுங்குற காரணத்துக்காக, கல்யாண ஆன அந்த ராத்திரியே அவன் கட்டிக்கிட்டு வந்தவளுக்கு விவாகரத்து நோட்டீஸ் கொடுத்து, அதுல கையெழுத்து வாங்கிருக்கான்” அன்னம் இதைச் சொல்லி முடித்த அந்த நொடி, அந்த வீடே இடி விழுந்தது போல அதிர்ந்தது. அனைவர் முகத்திலும் சொல்லொணாத் துயரமும் அதிர்ச்சியும் தெரிந்தது. விக்ராந்த் குற்ற உணர்ச்சியில் தலை குனிய, நித்திலா லாவண்யாவை பார்த்த அதிர்ச்சியில் தான் அப்போதும் இருந்தாள்,…
”ஆறு மாசம் தான் என் வீட்டுல என் பொண்டாட்டியா இருக்கணும்ன்ற கண்டிஷனோட தான் என் பையன் அவளை ஏத்துக்கிட்டிருக்கான். இது எல்லாம் எனக்கு லாவண்யா சொல்லி தான் தெரியும்!” அன்னலட்சுமி விஷத்தைக் கக்கி முடிக்க, ஒட்டுமொத்தக் குடும்பத்தின் பார்வையும் விக்ராந்தின் மேல் ஈட்டியாகப் பாய்ந்தது.
லட்சுமணன் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். தன் மகன் இப்படி ஒரு கீழ்த்தரமான காரியத்தைச் செய்திருப்பான் என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. “விக்கி! உன் அம்மா என்னடா உளறிட்டு இருக்கா? இதெல்லாம் பொய் தானே?” என தன் மகனின் முகத்திற்கு நேராக நின்று கேட்க,… அவனுக்கு தான் தொண்டை அடைத்து, பதில் வர மறுத்தது,…
“விக்ராந்த்,… உன்கிட்ட தான் கேட்கிறேன்” அவர் சத்தமான குரலில் உறும்,… “அப்பா நான்” அவன் ஏதோ சொல்ல வருகையில்…”நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு, உன் அம்மா சொல்றதுலாம் உண்மையா? பொய்யா?” என்றார்…
”உண்மை தான்ப்பா…” – விக்ராந்த் மெல்லிய குரலில் சொன்ன அடுத்த நொடி, லட்சுமணனின் கை அவனது கன்னத்தில் இடியென இறங்கியது.
“என்னடா…? என்ன காரியம் டா பண்ணிருக்க?” அவனின் சட்டையை கொத்தாக பிடித்து உலுக்க, அவன் என்ன சொல்லுவான், தெரியாமல் செய்துவிட்டேன் என்றா சொல்லுவான், எல்லாம் தெரிந்து துணிந்து தானே செய்தான், கல் போல் சிலையாக நின்றான்,….
“ஒரு பொண்ணோட வாழ்க்கை உனக்கு அந்தளவுக்கு விளையாட்டா போச்சாடா, ஒரு அப்பாவி பொண்ணோட மனசை அலகழிச்சு அவ வாழ்க்கையை சின்னா பின்னமாக்க உனக்கு எப்படி டா மனசு வந்தது, நீ என் பையன் தானா டா” என கொதித்து போனார் அவர்,….
“விக்ராந்த்,…. நீ இப்படி செய்வன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல, ஏன்டா இப்படி பண்ண” என்றார் சந்தானமும் கோபத்துடன்,…
“உன்னால எப்படிப்பா நித்திலாவுக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய முடிஞ்சது, அவ பொண்ணுன்னு நினைச்சியா? இல்ல பொம்மைனு நினைச்சியா? அவளுக்கும் உணர்வுகள் எல்லாம் இருக்கும்னு உனக்கு எப்படி புரியாம போச்சு” என்றார் ஊர்மிளா ஆதங்கத்துடன்…
“விக்கி நீயாடா இப்படி பண்ண? என்னால நம்ப முடியலைடா?” வருத்தத்துடனும் ஆதங்கத்துடனும் கேட்டான் வித்தார்த், சுமித்ரா எதுவும் பேசவில்லை, அவள் மனம் முழுக்க நித்திலாவை பற்றி மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தது,….
பாட்டி இதை ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை, இடிந்து போய் அமர்ந்து விட்டார்..
“இப்போ எதுக்காக அவனை நிற்க்க வைச்சு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க, தப்பு பண்ணது அவன் இல்ல நீங்க தான், கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடியே அவனுக்கு இதுல விருப்பம் தானான்னு அவன்கிட்ட கேட்காமலேயே எல்லாத்தையும் உங்க இஷ்டப்படி செய்தது, நீங்க தான்” என்றார் அன்னம் தன் கணவனை பார்த்து,….
“உன் மகன் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை, அவனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனா நேரடியா எங்க கிட்ட வந்து சொல்லிருக்கனும், உன் மகன் ஒன்னும் யாருக்கும் பயப்படுறவனும் இல்ல, அவன் விருப்பத்துக்கு மாறா நாங்க ஏதாச்சும் செஞ்சா, அதை தலை குனிந்து ஏத்துகிறவனும் கிடையாது, எதையோ மனசுல வச்சிகிட்டு தான் இத்தனை பெரிய வேலையை பார்த்திருக்கான்,” என்றார் அத்தனை நேரம் மௌனமாய் இருந்த மரகத பாட்டி,…
“இல்ல அத்தை, விக்ராந்த்துக்கு இதுல விருப்பம் இல்லைனு பொண்ணு பார்க்க போன அன்னைக்கே அவ கிட்ட சொல்லிருக்கான், ஆனா அவ தான் பெரிய குடும்பத்துல வாக்கப்படனும் அப்டின்ற ஆசைனாலேயா என்னவோ அவன் விருப்பத்துக்கு மாறா பதில் சொல்லிருக்கா” என்றார் அன்னம்,….
“போதும் நிறுத்து,… நித்திலா கிட்ட அப்படி சொல்ல சொன்னதே நான் தான், என் மகன் வாழ்க்கைக்காக நான் வேண்டி கேட்டுகிட்டதால தான், அன்னைக்கு நித்திலா கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னா” லட்சுமணன் சொல்ல, இது மற்றவர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக இருந்தது,…
“என்னடா சொல்ற?” மரகதம் அழாத குறையாக கேட்க,.. லட்சுமணன் அன்று நடந்ததை சொல்லி காட்டினார்,…
“உன் மகன் வாழ்க்கைக்காக, ஒரு பொண்ணோட வாழ்க்கையை இப்படி நாசமாக்கிட்டியேடா” மரகதம் லட்சுமணனை சாட,.. “இவன் இப்படி பண்ணுவான்னு நான் எதிர்பார்க்கலம்மா, ஆரம்பத்துல முறுக்கிக்கிட்டு திரிஞ்சாலும், கல்யாணத்துக்கு அப்புறம் தன் வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பான்னு நினைச்சு தான் அப்படி பண்ணேன், சத்தியமா இதை நான் எதிர்பார்க்கலமா” உடைந்து போய் கூறினார் லட்சுமணன்,….
“சரிப்பா… இதுக்கு என்ன தான் முடிவு” மரகதம் இறுதி முடிவாக கேட்க,…. “அவளை விரட்டி விட்டுட்டு, விக்ராந்த்துக்கும் லாவண்யாக்கும் நாம எல்லாரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைக்கணும், இது தான் சரியான முடிவு அத்தை” அன்னம் சொல்ல, அனைவரும் அவரை எரிக்கும் பார்வை பார்த்தனர்,…
“அப்போ நித்திலாவோட நிலைமை?” பாட்டி கேட்க…. “அவளுக்கு விருப்பம் இருக்கிறதால தானே, விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்திருக்கா, போதா குறைக்கு என் பையன் விரும்புறது லாவண்யாவை தான், அவளை இல்ல, அவன் எதிர்கால வாழ்க்கை நல்லா இருக்கணும்னா, லாவண்யா கூட அவன் சேருறது தான் சரி” என்று அன்னம் தன் எண்ணத்தை அறிவிக்க, அப்போது விக்ராந்த் ஏதோ பேச வர,…. அதற்குள் அவனை முந்திக் கொண்டு பேசினாள் நித்திலா…
“பாட்டி,… அத்தை சொல்றது தான் சரி, என் விருப்பத்தோட தான் டிவோர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணினேன், எனக்கு உண்டான காலம் முடிஞ்சதும் யார் தடுத்தாலும், நான் இந்த வீட்டை விட்டு போய் தான் தீருவேன்,” உறுதியான குரலில் கூறியவள், அதற்கு மேல் அங்கு நில்லாமல் விறுவிறுவென்ற நடையுடன் அங்கிருந்து சென்றாள்,..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
14
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விக்ராந்த் அப்படி என்ன தான் டா சொல்ல வர .. சொல்லி தொல .. அன்னம் பயங்கர வில்லி .. நேரம் பார்த்து எல்லாத்தையும் பண்ணிட்டங்களே ..
பேச வேண்டும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தால் எந்த சூழ்நிலையிலும் அதனை செய்ய தயங்க மாட்டோம்.
பாட்டி சொல்வது போல் விக்ராந்த் ஒன்றும் சிறு குழந்தை அல்ல எல்லோருக்கும் பயந்து நடுங்க.
முடியாது என்றால் முடியாது என்று அழுத்ததோடு நிற்கும் ரகம் அவன். அவனது மனக்கணக்கு என்னவோ?
லாவண்யாவிடம் ஏதோ வகையாக சிக்கி இருக்கின்றான் போலவே.
விக்ராந்தை விட அவர் அப்பா மேல் தான் அதிக தவறு உள்ளது. தனது மகனுக்கு புரிய வைக்க முயலாமல் தெரிந்தே சிக்கலில் மாட்டிவிட்டார்.
தந்தையும் மகனும் நித்திலாவை பொம்மை போல் இழுத்து தள்ளி நிறுத்தி என்று அவள் உணர்வுகளோடு விளையாடி விட்டனர்