
உனக்கு இளமாறனை பிடிச்சிருக்கா ?? அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா டா என்று அவனுடைய அம்மா புனிதவதி … செந்தமிழுக்கு அருகில் வந்து கேட்க … ஹ்ம்ம் எனக்கு அவரை பிடிச்சிருக்கு என்று தலையை குனிந்து கொண்டே பதில் சொன்னாள் …
அவ்வளவுதான் அவர் முகத்தில் புன்னகை மலர … வேகமாக அவர்கள் வாங்கி சென்ற பூவை எடுத்து … அவள் தலையில் வைத்து அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டார் … செந்தமிழ் அப்படியே சிலிர்த்து போனாள் … தாயை இழந்து நிற்பவளுக்கு அவர் தாயாய் தெரிய … அவர் காலில் விழுந்தாள் அவள் … நல்லா இருடாமா என்று அவளை தூக்கி அணைத்துக் கொண்டார் …
உடனே பாக்கு வெத்தலை மாற்றி திருமண நிச்சயமும் செய்து விட்டார்கள் … ஆறுமுகம் … சாப்பாடு ஏற்பாடு பண்ணுப்பா என்று செந்தமிழ் அப்பாவிடம் ஒரு பெரியவர் சொல்ல … திடீர்னு நிச்சயம் வச்சா நாங்க என்ன பண்றது … நாளை பின்ன வந்து தான ஆகணும் அப்போ பார்த்துக்கலாம் என்று அவள் சித்தி சுருக்கென்று சொன்னார் …
அப்போதும் புனிதவதி முகம் சுளிக்காமல் … பரவாயில்ல நாங்க இன்னொரு நாள் வரோம் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்கள் … புனிதவதி , அவர் தையல் கடையில் வேலை செய்பவர்கள் மூன்று பேர் , இளமாறன் , அவனுடைய ஒரே நண்பன் இனியன் … இத்தனை பேர் தான் வாடகைக் காரில் அங்கு வந்திருந்தார்கள் … சென்னைக்கு அருகில் ஒரு சின்ன கிராமத்தில் செந்தமிழ் வீடு இருந்தது …
காரில் … பொண்ணு பிடிச்சிருக்கா அப்படின்னு உன் ஃப்ரெண்ட் கிட்ட கேட்டு சொல்லு இனியா என்று புனிதவதி கேட்க … அவரை திரும்பி பார்த்து முறைத்தான் இளமாறன் … ஹையோ உங்க குடும்ப சண்டையில என்னை இழுக்காதீங்க என்று சிரித்தான் இனியன் …
புனிதாம்மா நான் தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன்ல … இன்னும் என்மேல கோபமா இருக்கீங்களா என்று இளமாறன் செல்லமாக கேட்க… அந்த பொண்ணு கிட்ட அவ்ளோ நேரமா என்னடா பேசின என்று கேட்டார் அவர் …
எங்க வீட்டுக்கு வந்து பொறுப்பா இருக்கணும் … என் அம்மா பேச்சை கேட்கணும் … அவங்களுக்கு அடங்கி தான் போகணும் அப்படின்னு சொன்னேன்மா என்று சிரித்துக் கொண்டே இளமாறன் சொல்ல … அடேங்கப்பா அப்படியே ஐஸ் வச்சுட்டான் என்று இனியன் சொல்லி சிரிக்க … சும்மா இருடா என்று அவன் தோளில் அடித்தான் இளமாறன் …
மகன் பேசியதில் சிரித்தவர் பிறகு முகத்தை கடுகடுப்பாக மாற்றி … இளமாறன் இதுவரைக்கும் எப்படி இருந்தானோ இப்போ அவனை நம்பி ஒரு பொண்ணு வர போகுது … உன் ஃப்ரெண்ட் டை ஒழுங்கா நடந்துக்க சொல்லு என்று அவர் மகனை முறைத்துக் கொண்டே சொல்ல … அதெல்லாம் இருப்போம் இருப்போம் என்றான் இளமாறன் …
அது யாரு பொண்ணோட சித்தியா சும்மா பட்டாசு மாதிரி பட் பட்டுனு பேசுது என்று ஒரு அக்கா சொல்ல … அவங்களை விடு … பொண்ணை பாரு அழகு பொண்ணு … சிரிச்ச முகமா இருக்கா … எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு … அவங்க அவளை தள்ளி விட்டா போதும்னு நினைக்கிறாங்க போல … நான் நகை சீர்னு எதுவுமே வேணாம்னு சொல்லிட்டேன் … அவ வந்து என் செல்ல மகனை பார்த்துகிட்டா போதும் என்றார் புனிதவதி …
நம்ம புனிதாக்கா தங்கமான மனசுக்கு தங்கமான மருமக தான் கிடச்சிருக்கா என்றனர் அவர் தோழிகள் …
அன்றிரவு செந்தமிழும் அவள் தோழி ரேவதியும் செந்தமிழ் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் … என்னடி மாப்பிள்ளை அழகா இருந்தாராம் … உனக்கு பிடிச்சிருக்கா என்று ரேவதி கேட்க … அழுது கொண்டே அவளிடம் மொத்த கதையும் சொன்னாள் செந்தமிழ் … என்னடி கிணறு வெட்டுனா பூதம் கிளம்பியிருக்கு என்று புலம்பினாள் ரேவதி …
எனக்கு என்ன பண்ணன்னு தெரியலடி … நான் சம்மதம் சொல்லிட்டேன் … ஆனா மனசுக்குள்ள பயமா இருக்கு என்று செந்தமிழ் சொல்ல … விடு முதல்ல இந்த ராட்சஸ கூட்டத்துல இருந்து தப்பிச்சுடு … கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியாச்சும் அவர் மனசை மாத்தி … அவர் கூடவே இருந்திடு … எப்படியாச்சும் காலேஜ் சேர்ந்திடு என்று சமாதானம் சொன்னாள் அவள் தோழி …
பாவம் அந்த இளம்பெண்களுக்கு தெரியாது செந்தமிழ் படப்போகும் துயரங்கள் …
ரேவதி மாநிறத்துக்கும் குறைந்த காபி நிறம் தான் … ஆனால் பெரிய கண்கள் … அழகான கன்னம் … செவ்விதழ்கள் என கவர்ச்சியான முகத்துடன் இருப்பாள் … செந்தமிழை விட மூன்று வயது பெரியவள் … பள்ளியில் அட்டெம்ப்ட் ஆகி படித்ததால் இருவரும் பள்ளி தோழிகள் … செந்தமிழுக்கு ஆறுதலும் அறிவுரைகளும் தருபவள் … சென்னையில் ஒரு ஆலையில் வேலை செய்கிறாள் … அவ்வப்போது ஊருக்கு வந்து தோழியை பார்த்து விட்டு போவாள்…
ஏற்கெனவே வாழ்க்கை தந்த வலிகள் ஒருபுறம் இருக்க … வரப்போகும் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற பயத்தோடு உறங்கினாள் செந்தமிழ் … இளமாறன் அவனுடைய அறையில் மெத்தையில் கண்களை மூடி படுத்திருந்தான் … செந்தமிழை நினைத்து பார்த்தான் … தமிழ் என்று அவன் உதடுகள் முணுமுணுத்து லேசான புன்னகை பூத்தது …
திருமண பட்டு எடுக்க … தாலி வாங்க என்று எதற்கும் பெண் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை… இளமாறன் திருமணத்தை சிம்பிளாக செய்ய முடிவு எடுத்திருந்தான் … கொஞ்சம் இளமாறன் பற்றி பார்க்கலாம் … அவன் பிறந்த போது அவன் காலை பார்த்து விட்டு அவன் அப்பா அவன் அம்மாவையும் அவனையும் விட்டு விட்டு ஓடி விட்டார் … இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார் …
முதலில் கார்மென்ட்ஸில் வேலை செய்த புனிதவதி … கொஞ்சம் கொஞ்சம் பணம் சேர்த்து தையல் மிஷின் வாங்கி வீட்டில் தைத்து குடுக்க ஆரம்பித்து … பிறகு டெய்லர் கடை வைத்து இப்போது கடையில் 5 பேர் போட்டு துணிகள் தைத்து தருகிறார் … அவர் அன்பிலும் உழைப்பிலும் வளர்ந்தவன் இளமாறன் … தாய் என்றால் கொள்ளை பிரியம் … அவருக்காக எது வேண்டுமானாலும் செய்வான்…
இளமாறன் படிப்பில் முதல் மாணவன் … MCA முடித்தவன் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்கு சென்றான் … வேலையிலும் சுறுசுறுப்பாக இருப்பான் … திறமையானவன் … எடுத்த வேலையை சரியாக கொடுத்த நேரத்தில் செய்து விடுவான் … இப்போது ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கிறான் … அவனுடைய கனவு சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் தொடங்க வேண்டும் என்பதே …
அவன் முழு சம்பளத்தையும் அவன் அம்மாவிடம் கொடுத்து விடுவான் … செலவுக்கு அம்மாவிடம் கேட்டு வாங்கிக் கொள்வான் … பிசினஸ் செய்ய அவன் அம்மாவிடம் பணம் கேட்ட போது … நீ கல்யாணம் செய்து கொள் உனக்கு ஒரு சொந்த வீடும் … கம்பெனியும் வைத்து தருகிறேன் என்று கறாராக சொல்லிவிட்டார் … அவன் அம்மாவிற்கு பிறந்த வீட்டு சொத்து விற்ற பணம் கொடுத்திருந்தார்கள் … அவர் அதையும் நகைகளாக வாங்கி வைத்திருந்தார் …
மகனுக்காக எதையும் செய்யக்கூடிய புனிதவதி பணம் தராமல் மறுக்க காரணம் உண்டு … மகன் தன் காலில் உள்ள குறையை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ள மறுக்கிறான் … அது மட்டுமில்லாமல் நிறைய பெண்கள் வீட்டிலும் … அவன் அழகு … ஐந்து இலக்க சம்பளம் இதெல்லாம் பார்த்து சரி என்பவர்கள் … அவன் குறையை கேள்விப்பட்டு மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள் … பெண் பார்க்க வர சொல்லி விட்டு முகம் சுழிக்கிறார்கள் …
மகன் வாழ்க்கை தனிமையிலேயே கழிந்து விடுமோ என்று அவன் தாய்க்கு பயம் … நான் என் மகனை ஆளாக்கி ஜெயித்து விட்டேன் … ஆனால் அவன் மனைவி குழந்தை என்று வாழ்ந்தால் தான் அவன் வாழ்க்கை முழுமை அடையும் என்று அவர் வேண்டாத தெய்வமில்லை … செல்லாத கோவிலில்லை … மகனுக்கு தெரியாமல் உள்ளுக்குள் கவலைகளை வைத்து மறுகுகிறார்…
அப்படி பட்ட மகன் தான் தாயை ஏமாற்றி பொய் திருமணம் என்ற ஒப்பந்தம் போட்டு வந்திருக்கிறான்… இளமாறனை பற்றி போக போக இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாம் …
இளமாறன் செந்தமிழ் திருமணம் முருகன் கோவிலில் வைக்கப்பட்டு… அருகில் இருந்த மண்டபத்தில் திருமணம் முடிந்து உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது … புனிதவதிக்கு அவர்கள் திருமணத்தை இன்னும் கொஞ்சம் விமரிசையாக செய்ய ஆசைதான் … மகன் தான் பிடிவாதமாக மறுத்து விட்டான் … அவன் கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதே பெருசு என்று நினைத்து அவர் எல்லாவற்றிற்கும் தலையாட்டினார் …
இவர்கள் அனுப்பிய வேனில் மணப்பெண்ணுடன் கொஞ்ச பேர் அந்த முருகன் கோவிலுக்கு வந்து இறங்கினார்கள் … பச்சை நிற பட்டு உடுத்தி … ஆடம்பர ஒப்பனை செய்யாமல் அழகாக கண்ணுக்கு மை தீட்டி கொஞ்சம் உதட்டுச்சாயம் போட்டு … கழுத்தில் சின்ன நெக்லஸ்… தோடு … கை நிறைய கண்ணாடி வளையல்கள் போட்டு … கையில் குத்து விளக்கும் எலுமிச்சை பழமும் வைத்துக் கொண்டு அழகாய் நடந்து வரும் செந்தமிழை கோவிலில் இருந்த மொத்த கூட்டமும் அதிசயமாக பார்த்தது …
மாப்பிள்ளை வீட்டாரும் அதே வேன் அளவு தான் இருந்தார்கள் … இளமாறன் அவனுக்கு திருமணம் என்பதையே ஆபீஸில் சொல்லவில்லை … ரேவதி தான் செந்தமிழ் பக்கத்தில் இருந்தாள் … அவள் தான் செந்தமிழுக்கு சேலை கட்டி அலங்காரம் செய்து விட்டாள்…
செந்தமிழ் கட்டியிருந்த சேலை … நகைகள் … வளையல் … கொலுசு … உள்ளாடைகள் கூட இளமாறன் அம்மா எடுத்து கொடுத்து அனுப்பியது தான் … அவள் வீட்டை பற்றி அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார் … அதனால் தான் தன் ஆசை மருமகளுக்கு என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் தேடித்தேடி வாங்கி அனுப்பியிருந்தார் …
அங்கே மண்டபத்தில் இன்னும் சில உறவினர்கள் … நண்பர்கள் இருக்க… திருமணத்தை காண மிகவும் நெருங்கிய சிலர் மட்டுமே கோவிலுக்கு வந்திருந்தார்கள் …
இளமாறனின் நண்பன் இனியன் அவனுக்கு அருகிலேயே இருந்தான்… இளமாறன் பட்டு வேஷ்டி சட்டையில் இருக்க … அவன் நண்பனும் அதே மாதிரி பட்டு வேஷ்டி சட்டையில் துணை மாப்பிள்ளையாக இருந்தான் … பார்ப்பதற்கு இருவரும் நண்பர்கள் போல் அல்லாமல் சகோதரர்கள் போல் தான் இருந்தனர் …
அன்று நல்ல சுபமுகூர்த்த நாள் … கோவிலில் நல்ல கூட்டம் … அந்த கூட்டத்தின் மத்தியிலும் இளமாறனின் கண்கள் செந்தமிழை ரசித்துக் கொண்டு இருந்தது …
கோவிலுக்குள் இருக்கும் சிலைகளை விட … அழகிய சிலையாக நடந்து வரும் செந்தமிழை கண் இமைக்காமல் பார்த்திருந்தான் இளமாறன் … என்னடா திங்கிற மாதிரி பார்க்குற … பொண்ணு உனக்கு தான் … நீ விடுற ஜொள்ளுல இங்க வெள்ளம் வந்திடும் போல என்று இனியன் கிண்டலாக சொல்ல அவன் சிரித்தான் …
புனிதவதி மருமகளை பார்த்ததும் வேகமாக அவளுக்கு அருகில் சென்று … என் மருமக எவ்ளோ அழகு என்று தன் இரு கைகளால் அவள் முகத்தை சுற்றி … அவர் நெற்றியில் சொடக்கிட்டு நெட்டி முறித்தார் …
காதலாய் வருவாள் 💞 …
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


குறையை காரணம் காட்டி குடும்பத்தை விட்டு ஓடிப்போன தகப்பன்.
அப்போதும் மனம் தளராமல் சொந்த உழைப்பில் முன்னேறி மகன் மேல் ஈடில்லா அன்பு செலுத்தும் தாய்.
தனது சுயநிறுவன கனவிற்காக ஏற்கனவே வாழ்வின் வலிகளில் ஓய்ந்து போன நாயகியிடம் ஒப்பந்த திருமணம் என்ற குண்டை வீசி வந்து உள்ளான் நாயகன்.
நாயகனின் இந்த செயல்பாடுகளுக்கு காரணம் தான் என்னவோ? தாழ்வுமனப்பான்மையா? இல்லை வேறு ஏதாவதா? பொருத்திருந்து பார்ப்போம்.
மிக்க நன்றி சகி 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️