Loading

“மச்சான் இன்னொரு ஆக்ஷன் பிளாட் டுக்கு போகலாமா?” இளமாறன் சிரித்துக் கொண்டே கேட்க, அவனது நண்பர்கள் குழப்பமாய் அவனைப் பார்த்தனர். “எங்கடா?” என இனியனும் “என்ன பிரச்சனை?” என சரவணனும் கேட்க, “செந்தமிழ் வீட்டுக்கு..” என்றவனைத் திகைத்துப்போய் பார்த்தனர்.

செந்தமிழுக்கு ஏழாம் மாத வளைகாப்பு வைக்கலாம் என முடிவு செய்திருக்க, அதற்காக அவளது ஊருக்குச் சென்று அவள் குடும்பத்தை அழைப்பதற்காகச் சென்றனர் நண்பர்கள் மூவரும்.

“நீங்க அவளுக்காக எதுவும் பண்ண வேணாம். நீங்க வந்தா, அவ தம்பி, தங்கச்சிகளைப் பார்த்தா அவ ரொம்ப சந்தோஷப்படுவா. கண்டிப்பா எல்லாரும் வந்திருங்க” என்ற இளமாறனை “காபி சாப்பிடுங்க” என்று சும்மா பெயருக்குக் கூட சொல்லவில்லை அவளுடைய சித்தி. அவன் அதை எதிர்பார்க்கவுமில்லை.

நண்பர்களுடன் வெளியே வந்தவன் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவளுடைய தம்பியைப் பார்த்தான். “இங்க வாடா மச்சான்” என்று தூக்கிக் கொஞ்சியவன், “எனக்கு எவ்வளவு பெரிய மச்சான் பார்த்தீங்களா டா?” என்று நண்பர்களிடம் சொல்லி சிரித்தான்.

“உன்னோட மாமா வீடு எங்கடா இருக்கு?” என இளமாறன் அந்த பையனிடம் கேட்க, அவன் வழி சொல்லிட, அவனைத் தூக்கிக் கொண்டே அங்கு சென்றனர். அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளியிருந்த வீட்டிற்கு முன்பு சென்றதும், செந்தமிழின் தம்பி இறங்கி அவனுடைய வீட்டிற்கு ஓடிவிட்டான்.

இளமாறன் நண்பர்களோடு அந்த மாமா வீட்டிற்குள் நுழைந்தால், நல்ல வேளையாக அந்த ஆள் மட்டுமே இருந்தான். உள்ளே நுழைந்ததும் வீட்டின் கதவை பூட்டியவன், இருந்த கோப வெறியில் அந்த ஆள் முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்தினான்.

அந்த ஆள் சுதாரிக்கும் முன்பு அவனை தரையில் தள்ளி, அவனுடைய கையை பிடித்து திருப்பி உடைத்தும் விட்டான். “நான் செந்தமிழோட புருஷன், அவளுக்கு ஒண்ணுனா நான் தான்டா வந்து கேட்பேன்” என்றவாறு இளமாறன் அவனை அடித்துக் கொண்டிருக்க, இதுதான் விஷயம் என்று முழுக்க தெரியவில்லை என்றாலும், ஏதோ பிரச்சனை இருந்திருக்கிறது என்று மட்டும் புரிந்து கொண்டனர் இளமாறனின் நண்பர்கள்.

மூவரும் சேர்ந்து அந்த ஆளை அதிகமாக ரத்தம் வராமல் ஊமைக் குத்தாய் ஆளுக்கு ரெண்டாய் அடி கொடுத்தபின் அங்கிருந்து கிளம்பினர். வெளியேறும் முன்பு இன்னும் கோபம் குறையாமல் இருந்தவன் அவனது முக்கியமான உறுப்பில் ஓங்கி மிதித்து விட்டு, “இனிமே நீ உன்னோட வேலையை யார்கிட்டயாச்சும் காட்டுவ?” என்று விரலை நீட்டி எச்சரித்தபின் கிளம்பினான்.

அவன் இதற்காகத் தான் அடி வாங்கினேன் என்று யாரிடமும் சொல்ல முடியாதல்லவா. திருடனுக்கு தேள் கொட்டிய நிலை தான் அந்த ஆளுக்கு.

மூவரும் சென்னைக்கு சரவணனுடைய காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். இளமாறன் டென்ஷனில் நகம் கடித்தவாறு இருக்க, “விடு மச்சான், நாம அடிச்ச அடிக்கு இன்னும் ஒரு மாசம் அவன் எழுந்திருப்பான்னு நினைக்கிற?” இனியன் அவன் மனதை மாற்ற கேட்க, “எப்படியும் ஆறுமாசமாச்சும் ஆகும்டா” இளமாறன் சிரித்தபடி சொல்லும்போது எதையோ அவன் சாதித்த உணர்வு.

இது எதுவும் செந்தமிழுக்குத் தெரியாது. அவளுக்குத் தெரிய வேண்டிய அவசியமுமில்லை. அவளுக்காக இதைச் செய்தால் மட்டும் போதும், அந்த ஆளுக்கு தண்டனை கொடுத்தால் போதும் என மட்டுமே நினைத்து இதைச் செய்தான் அவளுடைய காதல் கணவன்.

அன்று செந்தமிழுக்கு வளைகாப்பு. திருமணத்தன்று எடுத்த பச்சை நிறப் பட்டு சேலையை அணிந்து கொண்டவள், தீபாவின் வற்புறுத்தலால் பியூட்டிஷனை வரவைத்து சிம்பிளாக மேக் ஓவரும் செய்துகொண்டாள். பிளவுஸ் அளவு மாறியதால் கொஞ்சம் அதிக வேலைப்பாடுகள் செய்த பிளவுஸை தீபாவே அவளுக்கு ரெடி செய்திருக்க, அந்த பட்டு சேலைக்கு ஏற்றவாறு குந்தன் நகை செட் அணிந்திருந்தாள்.

காலையில் இருந்து மனைவியை பார்க்க விடாமல் பெண்கள் இளமாறனைத் தடுத்திருக்க, முழு அலங்காரத்துடன் வெளியே வந்தவளைப் பார்த்து ஆச்சரியத்தில் கண்களை விரித்து வாயைப் பிளந்து விட்டான். “மச்சான் வாய்க்குள்ள கொசு போயிடப் போகுது” என்று இனியன் அவன் வாயை மூடிவிட சிரித்தவன், எழுந்து வேகமாக அவளுக்கு அருகில் சென்றான்.

“ரொம்ப அழகா இருக்கடி தமிழ்” அவளுக்கு மட்டும் கேட்கும்படி அவன் சொல்லிட, அவளுடைய கன்னத்தின் வெட்கச் சிவப்பு அவன் இதைத்தான் சொல்லியிருப்பான் என்று எல்லோருக்கும் காட்டிக் கொடுத்தது.

வீட்டிற்கு அருகிலிருந்த ஒரு சின்ன மண்டபத்தில் வளைகாப்பு வைத்திருக்க, சரவணனின் காரில் வந்து இறங்கிய செந்தமிழுக்கு தீபாவும், ரேவதியும் ஆரத்தி எடுத்தபின் உள்ளே அழைத்துச் சென்றனர்.

புனிதா தான் முதலில் அவளுக்கு வளையல் போட்டு, சந்தனம் குங்குமம் வைத்து அவளை ஆசீர்வதித்தார். அப்புறம் செந்தமிழ் கோபத்திற்கு யார் ஆளாவது. அவளுக்கு இப்போதெல்லாம் இருக்கும் அழகிய சின்ன மூக்கிற்கு மேல் அதிகமாக கோபம் வருகிறது.

ஏதோ ப்ரீ ப்ரெக்னன்சி அழுத்தம் என்று சொல்வார்களே அதே தான். மாதம் ஏற ஏற உடலில் நடக்கும் மாற்றங்கள், வரும் சின்ன சின்ன வலிகள் எல்லாம் அவளது மனநிலையிலும் சில மாற்றங்களை தந்திருக்கிறது.

அதனால் மாமியாரும் கணவனும் அவள் சொன்னபடி கேட்காவிட்டால் அவளுக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லை. ஆனால் செந்தமிழ் எப்போதும் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே கோபப்படுவாள் என்பது அவர்களுக்கும் தெரியுமல்லவா? அவர்களும் அவளது அன்பான கோபத்தை புரிந்து கொள்கின்றனர்.

செந்தமிழின் அப்பா குடும்பத்தோடு அங்கே வர, அவளுக்கு முகம் சுருங்கிப் போனது.திரும்பி அருகில் அமர்ந்திருந்த இளமாறனை கோபமாகப் பார்த்தவள், அதன்பின் அவன் தனக்காகத் தான் இதைச் செய்திருக்கிறான் என புரிந்து கொண்டு சிரித்தாள். அவர்களோடு வேணியும் குடும்பத்தோடு வந்திருந்தார்.

அவளுடைய அப்பாவும் சித்தியும் கூட்டத்தோடு அமர்ந்து கொள்ள, வேணி அவளுக்கு அருகில் சென்றார். “அத்தை நல்லா இருக்கீங்களா? உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு” என்று எழுந்து அவரை அணைத்துக் கொண்டாள்.

“தம்பி தான் டி வந்து உனக்கு வளைகாப்புன்னு சொல்லுச்சு. ஆளே மாறிட்ட. அவங்க உன்னை நல்லா வச்சுக்கிறாங்க தான. பார்த்தாலே தெரியுது. நீ பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் நீ எப்பவும் நல்லாத்தான் இருப்ப. குழந்தை பிறந்த பிறகு எனக்கு போன் பண்ணி சொல்லு. எங்க செந்தமிழ் குழந்தையை நானும் பார்க்கணும்” என்று அவர் கண் கலங்கிட, அவளும் வந்த கண்ணீரை அடக்கி சிரித்தாள்.

அவளுடைய தங்கைகளும் தம்பியும் அவளுக்கு அருகில் வர, அவர்களையும் அமர்ந்தவாறு அணைத்துக் கொண்டவள், “ஸ்கூலுக்கு ஒழுங்கா போறீங்களா?” பொறுப்பான அக்காவாக கேட்டாள். “ஹ்ம்ம்.. நாங்க கரெக்ட்டா போறோம். ஆனா நீ வந்த பிறகு எங்களுக்கு பாடம் சொல்லித்தர ஆள் இல்லக்கா” என்று அவர்கள் சொல்லிட, அவளுக்கு கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது.

“அந்த முத்தையா சார் டியூஷன் எடுப்பாங்கள நான் உங்களை அவர்கிட்ட சேர்த்து விட சொல்லி அப்பா கிட்ட சொல்றேன்” என்று சமாதானமும் சொன்னாள்.

வளைகாப்பிற்கு வந்தவர்கள் சாப்பிட செல்ல, அங்கு இனியன் கவனித்துக் கொள்ள, கேட்டரிங் ஆட்கள் பரிமாறிக் கொண்டிருந்தனர். இளமாறன் செந்தமிழின் அப்பாவிற்கு அருகில் சென்று, “மாமா வாங்க.. அவளுக்கு ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று சொல்ல, அவர் எழுந்தார்.

“இந்தா எங்க போற? நில்லு” என்று சொன்ன அவளுடைய சித்தி அவனிடம் திரும்பி, “அவளை எழுந்து வர சொல்லு, நாங்க இங்கேயே ஆசீர்வாதம் பண்றோம்” என்றாள்.

இளமாறன் அப்படி என்னதான் பெரிய விசேஷம் வைத்திருக்கிறான் என்று பார்க்கவும், வந்து கொஞ்சம் வன்மத்தை கொட்டவும் தான் அந்த சித்தி இங்கு வந்ததே.

“அவ எப்படி வருவா? அங்கேயே வந்து ஆசீர்வாதம் பண்ணலாமே” அவளுடைய சித்தியின் முகம் கூட காண விரும்பாது, மாமனாரிடம் தான் பேசினான்.

“பாருடா ஏன் அவ எந்திரிச்சு வர மாட்டாளா? உனக்கு தானே கால் சரியில்ல. அவளுக்கு என்ன நல்லாத்தானே இருக்கா? வர்றதுக்கு என்ன? இப்படி ஒரு புருஷன் கிடைச்சதுக்கே இவ்வளவு ஆட்டம் போடுறா. கொஞ்சம் கால் நல்லா இருக்கிற புருஷனைக் கட்டியிருந்தா தலைகீழா தான் நடப்பா போல” வந்த வேலையை சரியாகச் செய்தாள் சித்தி.

எல்லோருக்கும் கேட்கும்படி தொண்டை கிழிய சத்தமாக சித்தி கத்திப்பேச , புருஷனை சித்தி பேசியதும் செந்தமிழுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை. வேகமாக அவர்களுக்கு அருகில் வந்தவள், “இப்போ எதுக்கு அவரை தேவையில்லாம பேசுறீங்க. அவர் என்ன தப்பா கேட்டுட்டார்” பதிலுக்கு கத்தினாள்.

“என்னடி உலகத்தில இல்லாத புருஷனை கட்டிருக்க? உனக்கு இவ்ளோ கோபம் வருது? வீம்பாக சித்தியும் பேசிட, “ஆமா உலகத்திலேயே இல்லாத நல்ல புருஷன் தான். இவ்ளோ நாள் என்னை பேசினீங்க. நான் பேசாம இருந்தேன். அவரை ஏதாவது சொன்னீங்க நான் மனுஷியா இருக்கமாட்டேன்” கோபம் குறையாமல் சீறினாள்.

“கூப்பிட்டு வச்சு அசிங்கப் படுத்துறீங்களா?” சித்தி விடாமல் பேச்சை வளர்த்திட, இளமாறனை திரும்பி கோபமாக பார்த்த செந்தமிழ் அவளுடைய அப்பாவிடம் திரும்பி, “எனக்குப் பிடிக்கும்னு தான் அவர் உங்களைக் கூப்பிட்டார். வந்து வாழ்த்தலைனா கூட பரவாயில்ல எதுக்கு அவங்க அவரை தேவையில்லாம பேசுறாங்க? முதல்ல வெளில போங்க. நான் செத்தா கூட யாரும் என் பேரை சொல்லி என்னைப் பார்க்க வர வேணாம்” என்றாள்.

“இதென்ன கூத்தா இருக்கு. பார்த்தியா உன் மகளை, வெளில போன்னு சொல்றா.வாயா..” என்ற சித்தி, அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இழுத்துக் கொண்டு வந்த வேலையை சிறப்பாக செய்த மன திருப்தியுடன் கிளம்பினாள்.

செந்தமிழின் அப்பாவிற்கு மனமகிழ்ச்சி தான். இளமாறன் பெண் பார்க்க வந்த போது, அவனது கால் குறையை கண்ட அவருக்கும் மன நெருடல் தான். மகளை எதற்கோ பயந்து எங்கோ தள்ளி விடுகிறோமோ என்று கூட கவலையில் இருந்தார். செந்தமிழ் முகத்தைப் பார்த்தே அவளுக்கு திருமணத்தில் மனதார சம்மதம் என்று தெரிந்து கொண்டவர் அவரும் சம்மதித்தார்.

ஆனால் இன்று மகள் பார்ப்பதற்கு கண்ணுக்கு நிறைவாக மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறாள் என்பதே அவருக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

அமைதியாகச் சென்று அங்கே அமர்ந்த செந்தமிழ், கண் கலங்கினாள். எவ்வளவு முயன்றும் அவளுக்கு அடக்க முடியாமல் கண்ணீர் பொங்கிட, இளமாறன் பதறிப் போனான்.

“என்னாச்சுடி அழாத அதான் நான் இருக்கேன்ல” என்று அவளைத் தோளோடு அணைத்தான். “உங்ககிட்ட யார் இப்போ அவங்களை இங்க கூப்பிட சொன்னது” என்று அவள் கோபமாய் கேட்க, “உன் அப்பா வந்தா நீ சந்தோஷப்படுவன்னு தான் கூப்பிட்டேன்” என்றான்.

அதோடு அவன் பேச்சை நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. “சாரி டி தமிழ். என் மேல தான் தப்பு. நான் சொல்ற விதமா சொல்லியிருக்கணும். தேவையில்லாம பேசி அவங்களும் பேசுற மாதிரி ஆகிடுச்சு. அவங்க என்ன இல்லாததையா சொல்லிட்டாங்க. என்கிட்ட இருக்கிற குறையைத் தான சொன்னாங்க. நீ எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற?” என்றான். அவள் செத்தால் கூட வராதீர்கள் என்று சொன்னதும், இப்போது அழுவதும் அவனது மனபாரத்தை ஏற்றியிருக்க, மனதில் தோன்றியதை பேசிவிட்டான்.

அவனை பார்த்து கோபத்தில் முறைத்தவள், அவன் மீது கோபத்தைக் காட்ட முடியாமல் எழுந்து, அங்கிருந்த சீர்வரிசை தட்டுகளை கையில் எடுத்து கோபமாக கீழே போட்டாள். சத்தம் கேட்டு தீபாவும், ரேவதியும் அவளுக்கு அருகில் வர, “தமிழ் என்னாச்சு டி?” இளமாறன் பதற்றமாக கேட்டான்.

“என்கிட்ட நீங்க ஒண்ணும் பேச வேணாம்” அவள் கோபமாக கத்தியதும், “அவங்க கோச்சுகிட்டு போனது உனக்கு கஷ்டமா தான் இருக்கும். விடு நான் வேணும்னா போய் பேசறேன்” என்று அவன் சொன்னதும், “நீங்க எப்பவுமே இப்படித்தான். உங்களால என்னை சரியா புரிஞ்சுக்கவே முடியாது” கண்ணீரோடு சொன்னவள், ரேவதியை அணைத்துக் கொண்டு அழுதாள்.

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்