
என்னுள் நீ காதலாய்💞
அத்தியாயம் 47
சிங்கண்ணன் சென்னையில் ………… தொகுதியின் MLA. அவரது நீண்ட நாள் கனவு மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்பதுதான். சரியான ஜோதிடப் பைத்தியம். அரசியலின் ஒவ்வொரு படிநிலைகளையும் தாண்டி வர எத்தனையோ பலிகளை(சில சமயம் மனிதர்களையும்), பலி கொடுத்து தற்போது இந்த பதவியில் இருக்கிறார்.
அவரது ஆஸ்தான ஜோதிடன் ஒருவன், கிருஷ்ணனின் பிறந்த நட்சத்திரமான ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரத்தில், 2005 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் பிறந்த பெண்ணை சிங்கண்ணன் திருமணம் செய்து, அவளோடு வாழ்ந்தால் அடுத்த ஒரு வருடத்திற்குள் மத்திய அமைச்சர் ஆகலாம் என்று சொல்லிவிட, அவரது மறைமுக வேலையாட்கள்(அண்டர்கிரவுண்ட் தாதா) மூலமாக அந்தப் பெண்ணுக்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார் அமைச்சர்.
பாண்டி அந்த மறைமுக வேலையாட்களுக்கு இரவு நேரம் பெண்களை சப்ளை செய்யும் வேலையில் இருந்தான். இந்த அரசியல்வாதியின் பெயரை சொல்லி, இவரது ஆட்கள் மூலமாகத்தான் ரேவதி விஷயத்தில் சரவணன் அவனைப் பிடித்த போது ஜெயிலுக்கு செல்லாமல் வெளியே வந்தான்.
அவனுக்கு ரோகிணி நட்சத்திர விஷயம் தெரியவர, ‘எனக்குத் தெரிந்த யாரோ ஒருவருக்கு ரோகிணி நட்சத்திரம் ஆச்சே’ என்ற யோசனையில் இருந்தான். அப்போதுதான் ரேவதியின் அம்மா கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் மகள் பெயரையும், அவளுடைய ரோகிணி நட்சத்திரத்தையும் சொல்வது நினைவுக்கு வந்தது.
வேகமாக ரேவதியின் பிறந்த ஊருக்குச் சென்றவன் அவள் பிறந்த அரசு மருத்துவமனையில் அவள் பிறந்த வருடத்தைச் சொல்லி, விசாரித்து வருடம், தேதியை உறுதி செய்து கொண்டான். அதோடு ஒரு ஜோதிடரை வைத்து அவள் நட்சத்திரத்தையும் உறுதி செய்து கொண்டான்.
அந்த வேலையாட்களிடம் MLA வை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று எத்தனையோ முறை சொல்லியும், அவர்கள் காரணம் தெரியாமல் அவனை அழைத்துச் செல்ல மறுத்து விட்டனர். எப்படியோ அவர் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டவன், வீட்டிற்குள் செக்யூரிட்டி விடாததால் ஒருநாள் அவர் வீட்டு வாசலில் இருந்து, அவருடைய கார் வெளியே வரும்போது, அந்த காரின் முன்பு விழுந்தான்.
காரை நிறுத்தி விட, “ஐயா அந்த ரோகிணி நட்சத்திர பொண்ணு என்கிட்ட இருக்கு” என்று கார் கண்ணாடியை திறந்தவரிடம் சொல்ல, அவனையும் காரில் ஏற்றி கொண்டனர்.
அவன் ரேவதியுடைய பிறப்பு சான்றிதழ், ஜோதிடக்குறிப்பு போன்றவற்றைக் காட்டி அந்தப் பெண் தன்னுடைய மகள் தான் என்றும், அவளை மணமுடித்துத் தர சம்மதம் என்றும், ஒரு வீடு, வாழ்நாள் முழுக்க மாத வருமானம், வங்கியில் பணம், கார், கொஞ்சம் நகை போன்றவற்றிற்கு மகளை விலை பேசி முடித்தான்.
அத்தோடு பிரச்சனைகளை சொல்லி அவளை அழைத்து வர, சில நாட்கள் அவகாசமும் கேட்டிருந்தான். சரவணன் டெல்லிக்கு சென்றிருந்ததால் தனியாக இருந்த ரேவதியிடம் வம்பு செய்து அவளை இதற்கு சம்மதிக்க வைத்து விடலாம் என்ற முடிவில் இருந்தவன், இனியன் ரேவதி காதலில் விழுந்ததால், அவளுக்கு பாதுகாப்பாக இனியன் எப்போதும் கூடவே இருந்ததால் வேறு வழியில்லாமல் நல்லவன் போல வேடமிட்டு, நடித்து, ஏமாற்றி வீட்டிற்குள் நுழைந்து விட்டான்.
இனியன் ரேவதிக்கு இடையில் பிரச்சனையை ஏற்படுத்தி, இருவரையும் பிரித்து, ரேவதி சம்மதத்துடன் அந்த திருமணத்தை நடத்திட நினைத்திருந்தான் பாண்டி. ஏனென்றால் சரவணன் பிரச்சனை செய்வான். அது யாருக்கும் தெரியாமல் திருட்டுத் தனமாக நடக்கவிருக்கும் கல்யாணம்.
சிங்கண்ணனுக்கு 55 வயது. மூன்று மகள்கள், ஒரு மகனுக்கு திருமணம் செய்து முடித்திருந்தார். ஏற்கனவே ஊருக்கு ஒன்று, வசதிக்கு நிறைய மனைவிகளோடு வாழ்பவருக்கு மீண்டும் ஒரு திருமணம் என்றால் கசக்குமா? ஆனால் தன்னுடைய பொலிடிகல் இமேஜ் பாதிக்கப்படாமல் அந்தத் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும்.
அதற்காகவே இத்தனை பொறுமையும், இத்தனை நாடகங்களும் நடத்த வேண்டியிருந்தது. ரேவதி என்னதான் தந்தையை ஏற்றுக் கொண்டிருந்தாலும் அவன் மீது நம்பிக்கை இல்லாமல், ஒட்டி ஒட்டாமல் தான் பழகினாள். அவளுக்கு நம்பிக்கை தரவே அவன் மனைவியை தினமும் பார்த்துக் கொண்டே வேலைக்கும் சென்றிருந்தான்.
இனியனும் அவனது நண்பர்களும் திடீரென்று திருமண ஏற்பாடு செய்வார்கள் என்று பாண்டி நினைக்கவில்லை. இனியன் பெண் கேட்டுப் போன அன்று இரவு…..
“ரேவதி எழுந்திருமா..” அசந்து தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பினான் பாண்டி. தூக்கத்தில் இருந்து அவள் மெல்ல விழித்துப் பார்க்க, இரண்டு பேர் அவள் அப்பாவின் கழுத்திலும், அம்மாவின் கழுத்திலும் கத்தியை வைத்திருந்தனர். பாண்டி தான் “தெரியாமல் உன்னைப் பற்றிய தகவல்களை அவரிடம் சொல்லிவிட்டேன். இப்போது நீ அந்த MLA வை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் அவர் தன்னையும், மனைவியையும் கொன்று விடுவார்” என்று சொன்னான்.
அவளுக்கு அப்பா தேவையில்லை. ஆனால் இவ்வளவு வருடங்களாக அவளுக்காக வாழ்ந்த அம்மா தேவையல்லவா. சரி என்று அம்மாவிற்கு தேவையான மருந்துகளை எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பியவள், வீட்டிற்கு வெளியே ஓடி தப்பிக்க முயற்சி செய்திட, அதற்குள் ஒருவன் ரேவதியின் அம்மா கையில் அறுத்திருந்தான்.
“அய்யோ அம்மா..” என்று கத்தக் கூட விடாமல், அவளையும், ஈஸ்வரியையும் அருகிலிருந்த யாருக்கும் சந்தேகம் வராதவாறு ஆம்புலன்ஸில் கடத்தினார்கள். அவளுடைய செல்போனை பிடுங்கித் தூக்கி எறிந்தார்கள். நகரின் அவுட்டர் ஏரியாவில் சிங்கண்ணனுக்கு சொந்தமான பங்களாவில் இருந்தார்கள் மூவரும்.
சரவணன், ரேவதி குடியிருக்கும் ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் அவளின் அப்பா அவளை கடத்தியதாக ஒரு கம்பிளையண்ட் பதிவு செய்தான். சாட்சிக்கு அந்த கத்தி, சிசிடிவி புட்டெஜ் காப்பியும் கொடுத்தான். அவர்கள் ஒருபக்கம் தேட, இங்கு தனியாக இவன் விசாரணையில் இறங்கினான்.
சரவணன் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய கத்தியில் அது ஒரு வயதான பெண் என்று தெரிய வர, அவளது அம்மாவை மிரட்டி கடத்தியுள்ளனர் என்று முடிவுக்கு வந்தான். ரேவதி அப்பாவிற்கும் இதில் சம்பந்தம் இருக்கும் என்று தீர்க்கமாக நம்பினான்.
ஆனால் அவன் யூகித்தது என்னவென்றால், பாண்டி அவளை விபச்சார விடுதிகளுக்கோ, இல்லை அந்த தொழில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கோ அழைத்துச் சென்றிருப்பான் என்பதைத்தான். அதனால் இளமாறன், இனியன், சரவணன் மூவரும் சென்னை மாநகரில் அந்தத் தொழில் நடக்கும் எல்லா ஏரியாக்களிலும் சென்று விசாரித்தனர்.
ரேவதியின் ஊரிலும் ஒருவேளை அங்கு சென்றிருக்கிறார்களா? என்று அங்கிருக்கும் லோக்கல் போலீஸ் மூலமாக விசாரித்தான் சரவணன். நேரங்கள் கடந்தன, விடியல் தாண்டிட மூவரும் உறங்கியிருக்கவில்லை. ரேவதியைத் தேடி அலைந்தவண்ணம் இருந்தனர்.
ஒரு அறையின் மெத்தையில் ஈஸ்வரி படுக்க வைக்கப்பட்டிருக்க, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ரேவதி அழுதபடி இருந்தாள். ஈஸ்வரிக்கு உடலில் மயக்க மருந்தை செலுத்தியிருந்தார்கள். அடிக்கடி ஒரு நர்ஸ் வந்து அவருக்கு மருந்தை போட்டுக் கொண்டே இருந்தார்.
‘எல்லோருக்கும் அன்பான அப்பா, அம்மாவோடு அழகான குடும்பம் கிடைத்திருக்க எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கை இப்படி இருக்கிறது? நான் காதல், திருமணத்திற்கு ஆசைப்பட்டிருக்க கூடாதா? நானும் இல்லாமல் போனால் இனியன் என்ன ஆவான்? என்னை மறந்து விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்வானா? இல்லை என்னைத் தேடி வருவானா?’ மனதிற்குள் புலம்பியபடி ரேவதி கண்ணீரில் கரைந்திருந்தாள்.
“அவள் திருமணத்திற்கு சம்மதிக்காவிட்டால், இங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தால், சாக முயற்சித்தால், இனியனையும் கூடவே அவனது நண்பர்களையும் சிங்கண்ணன் கொல்லத் துணிவார்” என்று பாண்டி மிரட்டிட, அவளுக்கு தப்பிக்க மனதில் துணிவில்லை. முடிந்து போன தன்னுடைய வாழ்விற்காக மற்றவர்கள் உயிரைப் பணயம் வைக்க விரும்பாமல் அங்கே இருந்தாள்.
சிங்கண்ணன் வந்து அவளைப் பார்த்தார். ஜோதிடர் வந்து அடுத்த ரோகிணி நட்சத்திரத்தில் திருமணம் வைத்துக் கொள்ளுமாறு நாள் குறித்து தந்திட, அதற்கு இன்னும் ஐந்து நாட்கள் இருந்தன.
வேளா வேளைக்கு அவளுக்கு சாப்பாடு வந்தது. தொடக்கத்தில் சாப்பிட மாட்டேன் என்று முரண்டு பிடித்தவள், “அம்மாவிற்கு மயக்க ஊசியை நிறுத்தினால் தான் சாப்பிடுவேன்” என்று சொல்லி நிறுத்தியபின் சாப்பிட்டாள்.
ரேவதி காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இனியனும் அவன் நண்பர்களும் தேடாத இடமில்லை. பாண்டியை பற்றி விசாரிக்காத ஆளில்லை. சிங்கண்ணன் மூலமாகத் தான் அவன் வெளியே வந்தான் என்று தெரிந்து அவரை நோட்டமிட்டு பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தொலைபேசி எண்ணிற்கு வரும் அழைப்புகளை கூட கண்காணித்தனர்.
இந்த மாதிரி கிரிமினல் வேலைகளுக்குத் தனி போன், வேறொருவர் பெயரில் சிம் எல்லாம் வைத்திருப்பார்கள் என்று சரவணனுக்குத் தெரிந்திருந்தாலும், ரேவதியை கடத்துவதற்கு சிங்கண்ணனுக்கு என்ன அவசியம் இருக்கப் போகிறது என்ற எண்ணத்தில் இருந்தான்.
ஆண்கள் மூவருக்கும் எந்த வேலையும் ஓடவில்லை. ரேவதி எங்கிருக்கிறாள் என்பதற்கான ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களும் சாப்பிடாமல் சோர்ந்திருந்தான் இனியன். நண்பர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் அவன் சாப்பிடவில்லை. அடிக்கடி டீ குடிப்பதால் நடமாடிக் கொண்டிருந்தான்.
இளமாறன் அவ்வப்போது வீட்டிற்குச் சென்று புனிதாவின் மடியில் அழுது கொண்டே படுத்திருக்கும் செந்தமிழை அதட்டி சாப்பாடும், மாத்திரைகளும் கொடுத்து வந்தான். இனியன் குளித்து உடை மாற்றி வருகிறேன் என்று அவனுடைய வீட்டிற்குச் சென்றான்.
அமைதியாக சென்று மெத்தையில் விழுந்தவன், “குட்டிமா..” என்று கத்தி அழுதான். அடக்கி வைத்திருந்த மொத்த கண்ணீரையும் அழுதவன், அவன் விரலில் அவள் அணிவித்திருந்த மோதிரத்தை பார்த்தான். ‘நீ ரொம்ப நல்லவன் இனி’ அவள் வார்த்தைகள் காதில் ஒலித்தன. ஐ லவ் யூ என்பதை விட இதைத்தான் அதிகம் சொல்லியிருப்பாள். ஒவ்வொரு சந்திப்பிலும் தவறாமல் சொல்லிவிடுவாள். “நான் நல்லவனா? அவளுக்கு என்ன நல்லது செய்திருக்கிறேன். அவளை பாதுகாக்காமல் தவற விட்ட நான் நல்லவனா?” முகத்தில் அறைந்தபடி கதறி அழுதான்.
அங்கு ரேவதியும் அவள் கையிலிருந்த இனியன் அணிவித்த மோதிரத்தை பார்த்தவள், ஒரு விரக்தியான சிரிப்பை உதிர்த்தாள். அழுது அழுது கண்ணீரும் வற்றிப் போனது அவளுக்கு. “குட்டிமா..” அவன் அழைப்பில் தான் எத்தனை நேசம். கண்ணாடிக்கு பின்னாடி ஒளிந்திருக்கும் அவன் கண்களில் தான் எத்தனைக் காதல். அவன் அணைப்பில் தான் எத்தனை பாதுகாப்பு.
“எனக்கு தூரத்துல இருக்கிறது தான் தெரியாது. பக்கத்துல நீ இருக்கும் போது நல்லாவே தெரிவ” என்றவன் அவள் அருகில் வந்ததும் கண்ணாடியை கழற்றி வைத்துவிடுவான். “உணர்ச்சிவசப்பட்டு கிஸ் பண்ணும் போது டிஸ்டர்பன்ஸா இருக்கக்கூடாதுல” ஏதேதோ சாக்கு போக்கு சொல்வான்.
‘இனியன் என் வாழ்விலே வராமலே போயிருந்தாலும் என் நிலைமை இப்படி கேவலமாகத் தான் இருந்திருக்கும். என்ன இந்த கொஞ்ச நாட்கள் அவனுடைய காதலும், அருகாமையும், முத்தங்களும் எனக்கு கிடைத்த வரம். அது போதாதா நான் மிச்ச வாழ்க்கையை வாழ்ந்திட. அவனாவது சந்தோஷமாக வாழட்டும்’ என நினைத்து படுத்திருந்தாள்.
காதலாய் வருவாள் 💞

