
மறுநாள் மாலை தனது வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தாள் ரூபிணி. பெட்டிகளை எல்லாம் உள்ளே வைத்து விட்டு தன் மீது கிடந்த கோட்டை கலட்டி போட்டு விட்டாள்.
வீடு திரும்பும் சுகம் எப்போதுமே மனதிற்கு இதமானது தான். தனியாக வசித்தாலும் வீடு கொடுக்கும் சுகம் வேறு எந்த இடத்திலும் கிடைப்பதில்லை.
உடனே படுத்து உறங்க தோன்றவில்லை. பயணத்தில் முழுக்க முழுக்க தூங்கிக் கொண்டு தான் வந்தாள். அதனால் உடனே வேறு உடைக்கு மாறினாள்.
விஷாலை பார்க்க வேண்டும். நேற்றிலிருந்து அவனிடம் பேசவில்லை. காலையில் எழுந்த பின்பும் கிளம்ப மட்டுமே நேரமிருக்க, நேரில் வந்து பேசிக் கொள்ளலாம் என்று வந்து விட்டாள்.
இப்போது அலுவலகம் போகலாமா? என்று யோசித்தாள்.
விஷாலும் அவளும் ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்கின்றனர். அவன் மேனேஜ்மண்ட் பக்கம் இருக்க இவள் அங்கு இருக்கும் ஆர்டிஸ்ட்களில் ஒருத்தி.
இருவரும் அலுவலகத்தில் சந்தித்து பழகி, இதோ இரண்டு வருடங்களாக காதலர்களாக இருக்கின்றனர்.
அலுவலகத்திற்கு சென்றால் வேலையை பற்றிப்பேச வேண்டி வரும். நிம்மதியாக விஷாலோடு பேச முடியாது என்பதால் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தாள்.
அதோடு இரவும் விஷாலின் வீட்டிலேயே கழிக்க முடிவு செய்து விட்டு அழகிய உடை அணிந்து தன்னைத்தானே அலங்கரித்துக் கொண்டாள்.
காரில் ஏறிக் கொண்டவள் செல்லும் வழியில் உணவையும் வாங்கிக் கொண்டு சந்தோசமாக சென்றாள்.
•••
உதயா வீட்டுக்கு வந்த போது ஆயிர வேலைகள் குவிந்து கிடந்தது. ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருக்க கைபேசி ஒலித்தது.
தந்தையின் எண். பார்த்ததும் எரிச்சல் வந்தது. இப்போதெல்லாம் அவனுடைய தந்தை பணம் கேட்க மட்டுமே அவனை அழைக்கிறார்.
ஒவ்வொரு வாரமும் அவரோடு சுற்றும் புது பெண்களுக்கு செலவு செய்ய நிறைய பணம் தேவைப்படுகிறது. அதற்கு மகனை உபயோகப்படுத்திக் கொள்கிறார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரோடு பழகிய பெண் நேராக உதயாவின் அலுவலகத்திற்கு வந்து தன்னை சித்தியாக அறிமுகம் செய்து கொள்ள, கோபம் வந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டான்.
“நீ யாரு கூட வேணா டேட்டிங் போ.. யார வேணா கல்யாணம் பண்ணு. ஆனா என் கண் முன்னாடி யாரும் வரக்கூடாது. அப்படி வந்தாங்கனு வை.. உனக்கு மாசம் மாசம் போடுற பணத்த மொத்த கட் பண்ணிடுவேன். பிச்சை தான் எடுக்கனும்” என்று மிரட்டிய பிறகு யாரும் வருவதில்லை.
மாதம் தவறாமல் அனுப்பும் பணத்தை செலவு செய்து விட்டு நடுவில் பணம் கேட்டு அழைப்பதால் அழைப்பை ஏற்பதே இல்லை.
இப்போது கூட எடுக்கப் பிடிக்கவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அழைப்பு வர சலிப்போடு எடுத்தான்.
“என்ன வேணும்?”
“நீ.. மகேஷ்வரன் பையனா?” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
உதயாவுக்கு இது மேலும் எரிச்சலை கொடுத்தது.
“ஆமா.. நீ யாரு?”
“உங்கப்பா ஹாஸ்பிடல்ல இருக்காரு.. உனக்கு கால் பண்ண சொன்னாரு”
உதயாவின் புருவம் சுருங்கியது.
“என்ன விசயம்?”
“நீ நேர்ல வர முடியுமா? ரொம்ப சீரியஸா இருக்காரு.. ஹாஸ்பிடல் பில் எல்லாம் கட்டனும்”
“எந்த ஹாஸ்பிடல்?” என்று கேட்டு முகவரியை வாங்கிக் கொண்டான்.
மகேஸ்வரன் எங்கே இருக்கிறார் என்று அவனுக்குத் தெரியாது. இப்போது இருக்கும் மருத்துவமனையை பார்த்தால் அந்த ஊரில் தான் பல நாட்கள் இருக்கிறார் போலும்.
அவனே கிளம்ப முடியாது என்பதால் தனது அசிஸ்டன்ட் ஒருவனை அங்கு சென்று பார்க்கச் சொன்னான். எதாவது பெரிய பிரச்சனை என்றால் மட்டும் போகலாம். இல்லா விட்டால் வேலையை பார்க்கலாம் என்று விட்டு விட்டான்.
இரண்டு மணி நேரம் கழித்து அசிஸ்டண்ட் மருத்துவமனையில் இருந்து பேசினான்.
“பயங்கர அடி சார். ஆப்ரேஷன் பண்ணா காப்பாத்தலாம்னு சொல்லுறாங்க”
“அந்தாளு என்ன சொல்லுறான்?”
“அவரு ஆப்ரேஷன் வேணாம்.. உங்கள பார்க்கனும்னு கேட்குறாரு”
“என்னையா? நான் என்ன டாக்டரா?”
“அவர் உங்கள பார்த்தே ஆகனும்னு சொல்லுறாரு”
உதயா சலிப்பாக தலையை தேய்த்தான். குவிந்து கிடக்கும் வேலைகள் ஒரு பக்கம். இதில் இது வேறு தேவையா? என்று சலிப்பாக இருந்தது.
ஆனாலும் கிளம்பி வருவதாக சொல்லி விட்டான்.
டிரைவரை காரை எடுக்கச் சொல்லி விட்டு பின்னால் அமர்ந்து அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டே தான் சென்றான். மருத்துவமனையில் சென்று அவன் இறங்கும் போது அசிஸ்டண்ட் அவசரமாக ஓடி வந்தான்.
“சார் சீக்கிரமா வாங்க” என்று விட்டு அவன் ஓட அப்போது தான் உதயாவின் மனதில் பதட்டமே வந்தது.
அங்கு குற்றுயிராக கிடந்த தந்தையை பார்த்து அதிர்ந்தான். கடைசியாக பார்த்த போது இப்படி இல்லை. உருமாறிக்கிடந்தார். மருத்துவர்கள் சில நிமிடங்கள் போராடிப்பார்த்து விட்டு கையை விரிக்க மகேஷ்வரன் இறந்து போனார்.
இவ்வளவு நாளும் இருந்த வெறுப்பு ஒரு நொடியில் மறைய தந்தையை இழந்த சோகம் உதயாவை தாக்கியது.
மனதில் சூழ்ந்த வேதனையோடு மருத்துவர்களின் கேள்விக்கு பதில் சொல்லி வைத்தான்.
உதயாவுக்கு விசயத்தை தெரிவித்த பெண்ணும் அங்கே தான் இருந்தார்.
“கொஞ்ச நாளா தான் இவர எனக்கு தெரியும். அடிக்கடி நான் வச்சுருக்க கடைக்கு சாப்பிட வருவாரு. ஆக்ஸிடென்ட் ஆனப்போ இங்க தூக்கிட்டு வந்தேன். மகன கூப்பிடு.. கூப்பிடுனு சொன்னார். அதான் கூப்பிட்டேன்” என்று விட்டு அவர் கிளம்பி விட்டார்.
உதயாவின் அசிஸ்டன்ட் தாத்தாவுக்கு விசயத்தை சொல்லி விட்டு மற்ற ஏற்பாடுகளை கவனித்தான்.
கடைசி நேர வேலைகள் முடிந்து உயிரற்ற உடலை வாங்கிக் கொண்டு அமைதியாக புறப்பட்டான் உதயா.
வீட்டுக்கு வந்த போது இரவாகியிருந்தது. அக்கம் பக்கத்தினருக்கு சொல்லி விட்டு விடிய விடிய விழித்திருந்தான்.
மெடோனாவிற்கு அழைக்க அவள் எடுக்கவில்லை.
இரவு கடந்து பகலும் வந்தது. காலையில் மெடோனா விசயத்தை கேள்விப்பட்டதும் உடனே ஓடி வந்தாள்.
மேலும் சில நெருங்கிய நண்பர்கள் வந்து சேர சீக்கிரமே இறுதிக்காரியத்தை நடத்தி முடித்தனர். எல்லோரும் கிளம்பிச் சென்றதும் அறையில் மெடோனாவின் மடியில் படுத்துக் கிடந்தான் உதயா.
“அப்பா போனத நினைச்சு வருத்தமா தான் இருக்கும்.. அதுக்காக இப்படியே இருப்பியா?” என்று மெடோனா அவனது தலைமுடியை கலைத்தபடி கேட்க உதயா பெருமூச்சு விட்டான்.
“வருத்தம் இருக்கு ஆனா பெருசா இல்ல. இருபது வயசு வரை தான் நாங்க ஒன்னா இருந்தோம். அதுவும் நல்ல நிலைமையில இல்ல. இப்ப மொத்தமாவே செத்துட்டார்”
“அப்பாக்காக அழனும்னா அழு பேபி” என்று மெடோனா அமைதியாக சொல்ல உதயா கிண்டலாக சிரித்தான்.
“அழுற அளவுக்கெல்லாம் வருத்தம் இல்ல.. நான் அழவும் மாட்டேன்”
“சரி சரி..”
“நேத்து உனக்கு கால் பண்ணேன் எடுக்கவே இல்ல நீ.. எங்க போன?”
“சொல்லிருந்தேன்ல.. என் ஃபேமிலிக்கு வேண்டப்பட்டவங்க. அவங்கள பார்க்க வேண்டியதா போச்சு. ஃபோன் என் கையில இல்ல. காலையில தான் கால்ஸ் பார்த்தேன். அதான் ஓடி வந்தேன்”
“அவங்க இப்போ எப்படி இருக்காங்க?”
“இப்ப பரவாயில்ல. கையில தான் எலும்பு உடைஞ்சு போச்சு. நிறைய கேர் பண்ணிக்கனும்”
“ஓ..”
“அ.. அவங்களுக்குனு யாரும் இல்ல.. நானே போய் பார்த்துக்கலாம்னு இருந்தேன்..”
உதயா அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.
“நீ ஏன் பார்க்கனும்?”
“எனக்கு பிடிச்சவங்க பேபி”
“கேட்க மறந்துட்டேன்.. அது பொண்ணா?”
“ஆமா.. லேடி தான்.. ரொம்ப அன்பா பேசுவாங்க.. எனக்கு நிறைய உதவி பண்ணிருக்காங்க”
“அவங்களுக்குனு யாரும் இல்லையா?”
மறுப்பாக தலையசைத்தாள்.
“நீ போகனுமா?”
“போகட்டுமா?”
அவள் ஆர்வமாக கேட்க “சரி போயிட்டு வா. பட் கால்ஸ் அட்டன் பண்ணு” என்றதும் சந்தோசமாக அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
“கண்டிப்பா பேபி.. நீ தனியா இருந்துப்பல?”
“இது ஒன்னும் பெரிய சோகம் இல்ல.. நான் வேலைய பார்க்க போயிடுவேன்.” என்றதும் மெடோனா தலையாட்டினாள்.
அன்றைய நாள் முழுவதும் இருந்து விட்டு மறுநாள் கிளம்பிச் சென்று விட்டாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

உதயா சூப்பர். ரூபிணி விஷால் காதல் உண்மையா?.