Loading

உயிர் – 20

வேறு வழியின்றி கோமதி ‘சரி’ என்று ஒப்புக்கொண்டதும் தான் ஆதவ்வுடன் கிளம்பி இருந்தாள் அனுராதா.

தானும், அனுராதாவும் தன்னுடைய காரிலேயே வருகிறோம் என்று கூறி மற்றவர்கள் அனைவரையும் வேறு காரில் வீட்டிற்கு அனுப்பி இருந்தான் ஆதவ் கிருஷ்ணா.

திருமணம் முடிந்த கலையோ, பூரிப்போ, புன்னகையோ சற்றும் இன்றி சாலையை வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அனுராதா.

கார் நேராக ஒரு பானி பூரி கடையின் வாயிலில் சென்று நின்றது.

இருவருமே இன்னமும் மண கோலத்தை கலையவில்லை.

கார் வந்து நின்றிருக்கும் இடமோ பானி பூரி கடை.

கடைக்காரர், “வா மா” என்றதில் சுயமடைந்தவள் கடையை பார்த்துவிட்டு, அவனை புரியாமல் பார்க்கவும்.

“மேடம் ரொம்ப கோவமா இருந்தா இங்க தான வருவீங்க.. இப்போ கூட ரொம்ப கோவமா.. சூடா தானே இருக்கீங்க.. போங்க” அவனின் குரலில் கிண்டலோ, நக்கலோ இருப்பது போல் தெரியவில்லை. முகத்தில் வழக்கம்போல் எந்த ஒரு உணர்வையும் பிரதிபலிக்காமல் தான் கூறினான்.

உண்மையிலேயே அவள் கோபத்தின் உச்சத்தில் தான் இருக்கிறாள். அவனை முறைத்துக் கொண்டே காரிலிருந்து இறங்கியவள். வேகமாக கடைக்கு அருகே சென்று நிற்கவும்.

அவர்கள் வாடிக்கையாக வரும் கடை தான் என்பதினால் கடைக்காரரும் அவளை பார்த்துவிட்டு பானி பூரியை எடுத்துக் கொடுக்க துவங்கினார்.

அவளோ அவனை கண்களாலேயே பஸ்பம் ஆக்குவது போல் முறைத்து பார்த்துக் கொண்டே, தன் எதிரே வைக்கப்பட்ட பானி பூரிகளை விழுங்கினாள்.

“ஸ்ஸ்ப்ப்பா.. செம்ம ஹாட்!” என்று அவன் அவளை பார்த்துக்கொண்டே இதழ் அசைவில் கூறவும்.

அது மேலும் அவளின் கோபத்தை அதிகப்படுத்த முடிவே இல்லாமல் உண்டு கொண்டே இருந்தாள்.

அவனே இறங்கி சென்று கடைக்காரரிடம், “போதும்” என்று விட்டு பணத்தை கொடுத்து அவளை அழைத்து வந்து விட்டான்.

“விட்டா மொத்த கடையையும் காலி பண்ணி இருப்ப போலருக்கே” என்றவனை மீண்டும் முறைத்து தான் பார்த்தாள்.

“அவ்வளவு கோபமோ..”.

அதற்கும் முறைப்பு தான்.

இப்பொழுது தான் அவள் உண்டதன் காரமே அவளுக்கு உரைத்தது, “ஸ்ஸ்” என்றாள் காரத்தில்.

“முத்தா குடுத்தா மூக்கும் மூக்கும் இடிச்சுக்குமானு டவுட் கேட்டியே.. ரெண்டு பேரும் சேர்ந்து லைவா டெஸ்ட் பண்ணி பார்க்கலாமா?” என்று காரத்தில் சிவந்திருந்த அவளின் இதழை பார்த்துக் கொண்டே அவன் ‌கூறவும்.

அவளின் விழிகள் அதிர்ந்து விரிய. இதயமோ ஒரு நொடி நின்று துடித்தது.

திருமணம் என்பதிலேயே நின்றுவிட்டவளுக்கு, இப்பொழுது தான் திருமணத்திற்கு பின் என்று நினைவே சென்றது.

நினைக்கவே கண்ணை கட்டுவது போல் இருந்தது. அவள் ஒன்றும் குழந்தை இல்லையே..

திருமணத்திற்கு பிந்தைய சடங்குகளை பற்றி எல்லாம் அறிந்தவள் தானே..

ஆதவ்வுடனான திருமணத்தையே இன்னும் ஏற்க முடியவில்லை. அதற்குள் எப்படி.. அதுவும் ஆதவ்வுடனா.. என்ற எண்ணமே தலை சுற்றியது.

அவனின் வார்த்தையே அவளின் வாயை அடைக்க போதுமானதாய் இருக்க.

அவனோ‌ அவளை நோக்கி தன் ஒற்றை கண்ணை சிமிட்டி சிரித்தவாறு காரை கிளப்பி‌ இருந்தான்.

மேலும், இதைப் பற்றி இவனுக்கு எப்படி தெரியும் என்ற குழப்பத்தோடு அவனுடன் பயணித்தாள் அனுராதா.

ருக்மணியும், அகிலன் கிருஷ்ணாவும் அவர்களின் வீட்டை சென்று அடைந்ததும், அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் கீதா.

மணமக்களுக்கு பால் பழம் கொடுத்து முடியவும்.

கோபமாக வீட்டிற்குள் நுழைந்த புண்ணியகோடி, “என்ன அநியாயம் இதெல்லாம்? ஒரு பொண்ணுக்கு கல்யாணம்னு சொல்லிட்டு ஒரு அப்பனோட துணை இல்லாம இரண்டு பொண்ணுக்கும் கல்யாணத்தை செஞ்சு முடிச்சு இருக்கீங்க. யாரை கேட்டு என் பொண்ணுங்க கல்யாணத்த நீங்க நடத்துனீங்க?” என்று சம்பந்தமில்லாமல் நடு வீட்டில் வந்து எகிறி கொண்டிருந்தார்.

“யாரை கேட்கணும்?” என்று எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக கேட்டாள் ருக்மணி.

“என்னை கேட்கணும்.. நான் தானே உன் அப்பா!”.

“ஓ! அதுவே உங்களுக்கு இப்போ தான் ஞாபகம் வருதா” என்றவளின் கூத்தல் பேச்சில் அவருக்கு சுர்ரென்று கோபம் வந்தது.

“என்ன பேச்சு இதெல்லாம்.. இப்படித்தான் பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம பேச உங்க அம்மா சொல்லிக் கொடுத்து இருக்காளா?” என்று மேலும் எகிற.

“யாருக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கணும்னு என் அம்மா எனக்கு நல்லாவே சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்றாள் பதிலுக்கு.

இவள் பதில் கொடுத்து கொண்டிருக்கும் பொழுதே கோமதி தன் உடை பெட்டியுடன் வெளியே வர.

“நீ எங்க போற?” என்ற புண்ணியகோடியின் கேள்வியில், “நான் விசித்ரா அக்கா கூட போய் இருக்க போறேன்”.

“என்ன அவளோட போய் இருக்க போறியா? ஏன் இவ்வளவு நாள் நல்லா தானே இருந்த.. இப்போ உனக்கும் ஏதாவது ஆயிடுச்சா என்ன?” என்று எரிந்து விழுந்திருந்தார்.

அவருக்கு பதில் உரைக்க முடியாமல் தன் மாமியாரிடம் சென்று நின்ற கோமதி, “அத்த அனு கல்யாணம் பண்ணி போகும்போதே என்னை விசித்ரா அக்கா கூட போய் இருக்கணும்னு சொல்லிட்டு தான் போயிருக்கா. எனக்கு என் பொண்ணு தான் முக்கியம். அவளுக்காக தான் நான் இந்த வீட்ல எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன். அவளே என்னை அங்க போகணும்னு சொன்ன பிறகு, நான் அவளுடைய வார்த்தையை தான் கேட்பேன். நான் அக்கா கூடவே போய் இருக்கேன் அத்த”.

“உன்னோட விருப்பம் மா. என்கிட்ட கேட்கணும்னு எந்த அவசியமும் இல்ல. உன் விருப்பப்படியே செய்” என்று விட்டார் கற்பகம்.

“என்னம்மா நீங்களும் இப்படி சொல்றீங்க. அப்போ இந்த வீட்ல எனக்குன்னு என்ன தான் மரியாதை?” என்று புண்ணியகோடி கத்தி கொண்டு இருக்கும் பொழுதே வீட்டை விட்டு வெளியேறி விட்டிருந்தார் கோமதி.

ருக்மணியும், அகிலனின் அறைக்குள் சென்று விட்டிருக்க.

புண்ணியகோடி தான் தன் தாயிடம் கத்திக் கொண்டிருந்தார்.

“உன் மரியாதையை கெடுத்துக்கிட்டது நீ தான் பா. ஆரம்பத்துல எல்லாம் நல்லா தானே இருந்தது. ஏற்கனவே, கல்யாணம் பண்ணதை மறைச்சு இன்னொரு பொண்ண ஏமாத்தி கட்டி கூப்பிட்டு வந்த.. ரெண்டு பேருக்குமே மரியாதை கொடுக்காம நடந்துக்கிட்ட.. கோமதி உன்னோட தானே இத்தனை நாள் இருந்தா.. அவளை ஒரு மனுஷியாவாவது மதிச்சு இருக்கியா. உன் தேவைக்கு அவளை உபயோகிச்சுக்கிட்டு இருந்த. இப்போ எல்லாரும் நீ செஞ்சதையே திரும்ப செய்யும் பொழுது அவங்க வேணும்னு உனக்கு தோணுதா” என்று விட்டு அவரும் தன் அறைக்கு சென்று விட்டார்.

கீதாவிற்கு இதையெல்லாம் கேட்கும் மனநிலையே இல்லை. அவருக்கு ருக்மணிக்கும், அகிலனுக்கும் திருமணம் நடந்த சந்தோஷமே தலைகால் புரியாமல் இருந்தது.

‘இந்த கோமதி இல்லனா வீட்டு வேலையெல்லாம் நம்மளால பார்க்க முடியாது பாரு’ என்று நினைத்துக்கொண்டார்.

“போனா போகட்டும்.. எப்படியோ அம்மாவும், பொண்ணும் போய் தொலைஞ்சாங்களே” என்று கருவி கொண்டு தன் அறைக்கு சென்று விட்டார்.

அங்கே ஆதவ்வின் வீட்டிலோ அனுராதாவிற்கு வேறு விதமாய் வரவேற்பு கிடைத்திருந்தது.

உமா, “அவளுக்கெல்லாம் என்னால ஆரத்தி எடுக்க முடியாது” என்று கூறிவிட்டு அறைக்கு சென்றுவிட்டார்.

ஆதவ்வின் தங்கை தாரணி தான் அவர்களுக்கு இன்முகமாக ஆரத்தி சுற்றி வீட்டிற்குள் அழைத்து இருந்தாள்.

உமாவின் இந்த செயலும் அனுராதாவிற்கு ஆதவ்வின் மீது தான் கோபத்தை உண்டு செய்தது.

‘இவர்கள் யாருக்கும் தான் தன்னை பிடிக்காதே.. பிறகு ஏன் இவன் தன்னை திருமணம் செய்து இருக்கிறான்’ என்ற கோபம் தான் அது.

ருக்மணிக்கு அங்கே அனைத்தும் முறைப்படி நடக்க.

அனுராதாவிற்கோ இங்கே எதுவும் முறைப்படி நடக்கவில்லை. அனைத்துமே முறை தவறி தான் நடந்து கொண்டிருந்தது.

உமா எதையுமே முன் நின்று செய்யவில்லை.

சத்யராஜுக்கும் என்னென்ன சடங்குகள் எப்படி செய்ய வேண்டும் என்பது எதுவும் தெரியாது.

தாரணியை வைத்து ஆரத்தியை எடுக்க வைத்தவர். சாமி அறையில் அவளை விளக்கேற்ற வைத்தார். அவருக்கு தெரிந்தது அவ்வளவே..

“உன் அத்தைக்கு கொஞ்சம் கோபம். போக போக எல்லாம் சரியாகிடும். நீ எதையும் நினைச்சு மனச போட்டு குழப்பிக்காதம்மா. நீங்க ஹாப்பியா இருங்க” என்று அனுவிடம் கூறிவிட்டு அறைக்கு சென்று விட்டார்.

தாரணிக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவளுக்கும், அனுராதாவிற்கும் ஒத்த வயது தான்.

ஆனாலும், இதுவரை பெரிதாய் பேசிக் கொண்டதெல்லாம் கிடையாது. இப்பொழுது திடீரென இத்தனை நெருக்கம் ஆகி விடவும், என்ன பேசுவது என்றும் தெரியவில்லை.

அனைவரும் சென்றதும் கடுகடுத்த முகத்தோடு தன் கைவிரல்களை இறுக்கமாக மூடியவாறு நின்றிருந்த அனுவிடம், “வா” என்று விட்டு தன் அறைக்கு ஆதவ் முன்னே செல்லவும், அனுவும் வேறு வழி இன்றி அவனை பின் தொடர்ந்து சென்றாள்.

அறையை மிகவும் நேர்த்தியாகவும், சுத்தமாகவும் வைத்திருந்தான்.

ஏனோ, இவர்களின் வீட்டிற்குள் வந்தது முதலே அனுராதாவிடம் ஒருவித இறுக்கம் குடியேறிவிட்டது.

தேவையில்லாமல் சிறுவயது சம்பவங்கள் வேறு மனதிற்குள் நிழலாட. அன்றைய நாளின் கோபமும் சேர்ந்து இன்று ஆதவ்வின் மேல் பெரும் கோபமாய் உருவெடுத்திருந்தது.

அவளின் முகமே கோபத்தில் செந்தணலாய் ஜொலித்தது.

“செம்ம ஹாட்!” என்று மீண்டும் அவள் காதருகில் அவன் கிசுகிசுக்கவும்.

அவனை திரும்பி முறைத்து பார்த்திருந்தாள் அனுராதா.

“நீ என்ன கண்ணகியோட கசின் சிஸ்டரா.. இப்படி பார்வையாலேயே பொசுக்குற” என்று அவளை சீண்டவும்.

இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கோபம் மொத்தமாய் வெடிக்கத் துவங்கியது.

“என்ன நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க உங்க மனசுல?”.

அவளின் கேள்விக்கு சற்றும் அசராமல், “உன்ன தான்!” என்றான் தன் தோள்களை குலுக்கியவாறு சர்வ சாதாரணமாக.

அதில் பேச வந்தது கூட அவளுக்கு மறந்து போக, “தேவையில்லாம என்னை டைவர்ட் பண்ண பாக்காதீங்க. எதுக்காக இப்போ இந்த கல்யாண டிராமா”.

“டிராமாவா? இன்னைக்கு நடந்ததை பாக்க உனக்கு டிராமா போலவா தெரியுது. எனக்கு ஒன்னும் அப்படி தெரியலையே. ஒரிஜினல் மேரேஜ் போல தான் பீல் ஆகுது. எல்லாரும் ஒரிஜினல் மேரேஜ் போல தானே பிஹேவ் பண்ணாங்க”.

“ஓ! அப்படியா! ஒரிஜினல் மேரேஜா இருந்திருந்தா, உங்க அம்மா தான் நமக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூப்பிட்டு இருப்பாங்க. இங்க அப்படி தான் நடந்துச்சா? இல்ல, கல்யாணம் ஆன பிறகு பொண்ணுக்கு, மாப்பிள்ளைக்கும் முதல்ல பால் பழம் கொடுப்பாங்க. அதாவது நடந்துச்சா? இல்ல, நான் விளக்கேத்தி பூஜை பண்ற வரைக்குமாகுது உங்க அம்மா இருந்தாங்களா? எதுவுமே முறைப்படி நடக்கல. ஆனா, இது டிராமா இல்ல.. அப்படி தான?” என்று முகம் சிவக்க அவள் கேட்கவும்.

“ஸ்ஸ்ப்ப்பா.. செம்ம ஹாட்!”.

“திரும்ப இதே மாதிரி சொன்னீங்க அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”.

“நான் சரியா தானே சொல்றேன். நீ ரொம்ப சூடா இருக்கன்னு தான் அப்படி சொன்னேன். ஏன் நீ வேற ஏதாவது நெனச்சியா?”.

“நான் ஒரு மண்ணும் நினைக்கல” என்றாள் பற்களுக்கு இடையில்.

“இப்போ என்ன உனக்கு.. நமக்கு எங்க அம்மா ஆரத்தி எடுத்து, பால் பழம் கொடுத்து, உன்ன பூஜை பண்ண வைக்கணும்னு உன் மனசுல இவ்வளவு ஆசை இருக்குன்னு எனக்கு தெரியாம போயிடுச்சே. இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா, அதுக்கும் தகுந்த மாதிரி ஏதாவது ஏற்பாடு செஞ்சிருப்பேன்”.

“ஆசையா? எனக்கு அப்படி ஆசை இருக்குன்னு நான் உங்ககிட்ட சொன்னேனா?”.

“இப்போ நீ தான சொன்ன?”.

“அது.. அது வேற..”.

“என்ன.. என்ன வேற.. உன் மனசுல இருக்குறது தானே வாய் வழியா வரும். அப்போ அதுவும் ஆசை தானே?” என்று விடாமல் கேட்கவும்.

அவளை எப்படியும் பேசவிடாமல் ஏதேனும் பதில் கூறி அவளின் வாயை அடைத்துக் கொண்டே இருக்க இருக்க.. அவளின் கோபத்தின் அளவு கூடியது தான் மிச்சம்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அவனுக்கு fire engine ன்னு பேர் வச்சுட்டு இவதான் இப்ப எரிமலையா கொதிச்சுட்டு இருக்கா…இனி அவன் cool ஆ இருப்பான், இவதான் fire engine போல…🤣🤣