
அத்தியாயம் -8
அதில் இருந்த அழகிய கம்மலை பார்க்கவும் “எதுக்காக இவ்வளவு பணம் கொடுத்து வாங்கி இருக்கே?”
“உனக்காகத் தான் ஒவ்வொரு மாசமும் கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து எப்போ உன்னை பார்க்க வரேனோ அப்போ இருக்கிற காச வைச்சு வாங்கலாம்னனு வைச்சது என்னைக்கு உன்னோட பழைய வாழ்க்கையில் உடைஞ்சு போய் என்னை சந்திக்க வந்தியோ அன்றைக்கே உனக்கான நல்ல வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது என்னோட கிப்ட்னு எதாவது இருக்கனும் மொத்தமா ஒரே பொருளா வாங்கிட்டேன் சிந்தியா” என்ற போது இவளின் கண்கள் கலங்கி இருந்தது.அவளின் உடன்பிறந்தவர்கள் கூட இப்படி எல்லாம் வாங்கித் தந்ததாக நினைவில்லை.
ஆனால் ஆதி வாங்கித் தந்ததை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் “இது தங்கத்தை விட மதிப்பு அதிகம் ஆதி ஏன்னா உன் பாசம் இதுல இருக்கு” என்றாள்.
அப்போது குட்டிம்மா உள்ளே வரவும் அவளுக்கு சில புது உடைகளையும் வாங்கியதை அவள் கையில் கொடுத்தாள்.அந்தப் பெண்ணும் புன்னகை முகத்தோடு சென்றாள்.
சிந்தியா கையில் வாங்கிய அந்த காதணியோடு ஆதிராவையும் அழைத்துக் கொண்டு தன் அப்பா,அம்மா,அத்தை என அங்குள்ள அனைவரிடமும் காட்டி விட்டு கடைசியாக மதனிடம் காட்டினாள்.அவனோ அவள் வாங்கிய காதணியை பார்த்து விழிக்க தர்ஷனோ சிரித்துக் கொண்டிருந்தான்.
மதன் எதுவும் பேசாமல் இருப்பதைப் பார்த்த சிந்தியா “என்ன ஒன்னுமே சொல்லலை நல்லா இல்லையா?”
“நல்லா இருக்கே”
“அப்புறம் ஏன் முகமே சரியில்லை”
“அது அ…து” என்று மதன் தடுமாற தர்ஷன் “மதன் உங்களுக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சா ஆனால் நீங்க அவனை சர்ப்ரைஸ் பண்ணீட்டீங்க”
அவள் புரியாமல் “என்னச் சொல்லுறீங்க புரியலை”
மதன் தன் கையில் இருந்த ஒரு பரிசுப் பொருளை கொடுக்கவும் சிந்தியாவின் முகம் இன்னமும் மகிழ்ச்சியில் திளைத்தது.அதை வாங்கியவள் “என்ன திடீர்னு”
“அதான் சர்ப்ரைஸ் சொன்னானே!” என்றான் மதன்.
அவளும் அதை ஆவலாக பிரித்துப் பார்த்தாள்.அங்கே அழகிய காதணி இருந்தது.அதைப் பார்த்து இன்னும் சந்தோஷத்தில் மிதந்தவள் “ரொம்ப அழகா இருக்கு மதன் எனக்காகவா?” என்று இன்னொரு முறை கேட்டுக் கொண்டாள்.அவனும் ஆமாம் என்று தலையசைத்தான்.
சிந்தியா “எதுக்காக மதன் கவலையா இருக்கீங்க?”
உடனே தர்ஷன் “இந்தக் கம்மலைக் கொடுத்து உங்களை இம்ப்ரஸ் பண்ணலாம்னு பார்த்தான் அதுக்குள்ளே ஆதிரை அந்த வேலையை முடிச்சிட்டாங்க அதோடு அவன் வாங்கிய கம்மல் கொஞ்சம் சின்னது அதான் இன்னும் சாரு கோபம் ஆகிட்டாங்க” என்ற பொழுது மதனின் கரங்களைப் பிடித்தவள் “நீங்க வாங்கியதை பெருசா? சின்னதா? என்பதை விட எனக்கு பிடிக்கும்னு நினைவு வைச்சு வாங்கியதே பெரிய விஷயம் மதன் எனக்கு ரொம்பியா ஹாப்பியா இருக்கு ஐ லவ் யூ” என்றாள் அன்பும் காதலோடு…
பக்கத்தில் நின்ற தர்ஷனுக்கும் ஆதிரைக்கும் தான் தர்மசங்கடமாக இருந்தது.அதனால் தர்ஷன் லேசாக குரலை செறுமியபடி “ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ லவ்வர்ஸ் உங்க பக்கத்துல அப்பாவியாக இரண்டு ஜீவன்கள் இருக்கு உங்க லவ்ஸ்ஸை அப்புறமாக பார்த்துக்கோங்க” என்றான்.
மதன் “ம்ம்… எங்களுக்கும் தெரியும்” என்ற போது சிந்தியா தர்ஷனின் முதுகில் இரண்டு அடி போட்டாள்.
மறுநாள் காலையில் பூஜை முடிந்து பந்தக்கால் நடுவது என்று ஒவ்வொன்றாக ஆரம்பித்தது.எல்லோருடனும் பங்குப் பெறுவதிலும் பேசிச் சிரித்து சாப்பிட்டு என்று நேரம் கழிந்தது.இரவு பெண்ணுக்கு மெஹந்தி போடுவதும் பிள்ளைகளும் பெரியவர்களும் சேர்ந்து போட்டுக் கொண்டு இருந்தனர்.
ஆதிரை மருதாணி போடாமல் உட்கார்ந்துக் கொண்டிருந்தாள்.அதைப் பார்த்த தர்ஷன் “ஆதி நீங்க மருதாணி போடலையா?”
“இல்லை”
“ஏன் பிடிக்காதா?”
“பிடிக்குமே ஆனால் வேண்டாம்” என்றாள்.
அவளைப் பார்த்து சிரித்தவன் சிந்தியா காதிலேயே என்னவோ சொன்னான். அவளோ அவள் பக்கத்தில் இருந்த உறவுப் பெண்ணிடம் பேசி ஆதிரையின் கையில் மருதாணி வைக்க கேட்டாள்.ஆதிரை வேண்டாம் என்று மறுக்க மறுக்க சிந்தியாவின் கட்டாயத்தினால் வைத்தாள்.
இதை எல்லாம் முடிந்து தர்ஷனை நேரில் கண்டவள் “எதுக்கு இந்த தேவையில்லாத வேலை?”
“நீங்க செய்ததைத் தான் உங்களுக்கும் நான் செய்தேன்” என்று அவன் சொல்லவும் இவள் புரியாமல் “என்ன சொல்றீங்க புரியலை” என்றாள்.
அவனோ “சும்மா இருந்த என் கையில் இதை மாட்டி விட்டீங்கல்ல பாருங்க” என்று அவள் வாங்கிக் கொடுத்த அந்த வெள்ளியிலான பிரேஸ்லட்டை காட்டினான்.
அதைப் பார்த்து சிரித்தவள் “உங்களுக்கு பிடிச்சு இருக்கா?”
“பிடிக்காமலேயே போட்டு இருக்கேன்” என்றதற்கு “ரொம்ப தாங்ஸ்” என்றாள்.அவனோ “நான் தான் சொல்லனும் ஆதி ரொம்ப தாங்ஸ்” என்று சிரித்தான்.
இவர்கள் இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை சிந்தியாவும் பார்த்தாள்.
இரண்டு கைகளிலும் மருதாணியோடு இரண்டு தோழிகளும் அறையில் அமர்ந்திருந்தனர்.
சிந்தியா “ரொம்ப வருஷம் கழிச்சு இந்த மாதிரி எந்த யோசனையும் இல்லாமல் இப்படி இருக்கிறது நல்லா இருக்குல்லே”
ஆமாம் என்று தலையசைத்தாள்.சிரித்துக் கொண்டே ஆதிரையைப் பார்த்து “தர்ஷனைப் பற்றி என்ன நினைக்கிறே?”
அவள் அப்படிக் கேட்டதும் ஆதிரையின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மறைந்து யோசனையாக “எதுக்கு கேட்கிறே?” என்று அவள் கேட்கவும் ஆதிரையின் முகமாற்றத்தைக் கவனித்த சிந்தியா “சும்மாத் தான் கேட்டேன் அவரு எல்லோர்கிட்டேயும் ரொம்ப ஈஸியா பழக மாட்டாங்க நீயும் அப்படித் தானே ஆனால் உங்க ரெண்டுபேருக்கும் சட்டுனு ஒத்துப் போய் பேசினது எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு அதான் கேட்டேன்” என்றாள்.ஆதிரை எல்லாவற்றையும் கேட்டாள்.ஆனால் பதில் பேசவில்லை.
மறுநாள்….
மதனின் உறவுக்கார பெண்ணொருத்தி நிச்சயிர்தார்த்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.அங்கே நடக்கிற எல்லா விஷயங்களையும் பார்த்தவர் மதனின் அம்மாவிடம் “இரண்டாவது கல்யாணத்துக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா?” என்ற போது அவரோ சிறு புன்னகையை பதிலாக தந்து விட்டு “நீங்க சொல்றது மாதிரி இரண்டு பேருக்கும் இது இரண்டாவது கல்யாணம் தான் ஆனால் அவங்களுக்கு இது புது வாழ்க்கைக்கான ஆரம்பம் அதனாலத் தான் நாங்க எல்லோரையும் அழைச்சு ஊரே மெச்சிற மாதிரி கல்யாணத்தை பண்ணாமல் அவங்க நல்லபடியா வாழனும்னு அப்படி நினைக்கிற நல்ல உள்ளங்களை இந்த திருமணத்திற்கு அழைச்சு இருக்கிறேன் உங்களையும் சேர்த்து தான் ஏன்னா மதனோட கல்யாணத்தைப் பற்றி ரொம்ப அக்கறையா இருந்தீங்க” என்ற போது அந்தப் பெண்ணால் எதுவும் பேச முடியவில்லை.
இதை எல்லாம் பார்த்த ஆதிரைக்கு அவள் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் கண்முன்னே ஒருநொடி வந்து போனது.ஆதிரையின் திருமணம் இரு பக்கமும் பெற்றோர்களால் பார்த்து சம்மதம் சொல்லி செய்துக் கொள்ள முடிவெடுத்தனர்.
திருமணத்திற்கு ஒருநாளைக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளையின் அம்மாவிடம் “ஏன் இவ்வளவு செய்து திருமணம் நடத்த வேண்டும்?” என்று கேட்டதற்கு அவளின் அத்தையோ “எல்லாம் அவங்க இஷ்டப்படித் தான் நடக்கும்னு முடிவெடுத்தா இப்படி அனாவசியமாகத் தான் இருக்கும்” என்றார்.
இதைக் கேட்டு ஆதிரையின் அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.ஆனால் திருமணத்திற்கு ஒருநாள் முன்னால் மகளின் வாழ்க்கை போய் விடுமே என்று பயந்து அமைதியாக இருந்தார்.ஆனால் அதுவே தன் வாழ்க்கையின் அழிவுக்கான ஆரம்பமாக இருந்தது.அங்கே வாழ ஆரம்பித்த பிறகு ஆதிரை தான் அங்குள்ளவர்களைப் பற்றி புரிந்துக் கொள்ள முடிந்தது.
பழைய நினைவில் அப்படியே நிற்க அப்பொழுது அந்த வழியாக வந்த தர்ஷன் மெதுவாக ஆதிரையை அழைத்தான்.அவளோ வேறு யோசனையில் நின்றுக் கொண்டிருந்ததால் சரியாக கேட்காமல் இருக்க அவளின் காதோரமாய் மெதுவாக “ஆதிரை” என்று அழைக்கவும் அவனின் சூடான மூச்சுக் காற்று வரவும் பதறிப் போய் திரும்பிப் பார்த்தாள்.
அவளின் பதறிப் போன விழிகளைப் பார்த்தவன் “சாரி ஆதி உங்களை பயமுறுத்திட்டேனா?” என்றதற்கு இல்லை தலையசைத்தாலும் “நீங்க திடீர்னு பக்கத்தில் வரவும் பயந்திட்டேன்” என்றாள்.
அவன் எதுவும் சொல்லவில்லை.சிந்தியா சிவந்திருந்த தன் கரங்களை எல்லோருக்கும் காட்டியது போல் தர்ஷனுக்கும் காட்டினாள்.அவனோ சிந்தியாவிடம் “உங்க ப்ரெண்ட் மருதாணி போட்டாங்களே அவங்களோடது சிவந்திருக்கான்னு பார்க்கலையா?” என்றதற்கு ஆதிரையிடமும் கேட்டு சிவந்து போன அவளின் கரங்களையும் பார்த்தாள் சிந்தியா அவனும் சேர்ந்து தான்.
மாலையில் நிச்சயமாகம் இரவு வரவேற்பு நிகழ்ச்சியும் இருந்தது.சிந்தியாவும் அவளின் பெற்றோரின் முகமும் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தது.அழகிய இளம் பச்சை நிறத்தில் வேலைப்பாடுகளுடன் கூடிய பட்டுப்புடவையில் கூந்தலில் பூச்சூடி சிறிது ஒப்பனையோடு அழகு மிளிர்ந்த பாவையாக அமர்ந்திருந்தாள் மணப்பெண்.
அவளுக்கு பின்னால் எப்போதும் உடுத்தும் உடையை நேர்த்தியாக
அணிந்து தன் தோழியின் திருமணத்தில் தானும் முக்கியமான இருப்பதில் ஏக நிம்மதியில் நின்றுக் கொண்டிருந்தாள் ஆதிரை.மதன் சிந்தியாவின் கையில் மோதிரம் அணிவித்து அவர்களுக்கான நிச்சயிர்தார்த்தம் முடிந்தது.
பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி சாப்பிட்டு முடிக்கவும் நேரம் வேகமாக கடந்தது.
இரவு வரவேற்பு நிகழ்ச்சிக்கு சிந்தியா தான் வாங்கி வைத்திருந்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த இளஞ்சிவப்பு மேக்ஸியை ஆதிரையிடம் அணியச் சொன்னாள்.
எவ்வளவோ அவள் மறுத்தும் கட்டாயப்படுத்தி அந்த உடையை அணிய வைத்தாள்.
ஆதிரையும் அந்த உடையில் அழகாக மிளிர்ந்தாள்.அதுவரை யாருடைய கவனத்தையும் ஈர்க்காத வண்ணம் இருந்த உடை இப்பொழுது அவளை தணித்துக் காட்டியது.
மதனுக்கு தோழனாக வந்து நின்ற தர்ஷனைப் பார்க்கவும் ஆதிரைக்கு ஒன்றுமே புரியவில்லை.அவள் எடுத்திருந்த உடையின் வண்ணத்தோடு அவனின் உடையும் இருந்தது.அதைப் பார்த்து ஏனோ இருவரும் ஜோடிப் போல இருந்தனர்.

