
அத்தியாயம் -6
ரொம்ப நாட்களுக்குப் பிறகு தன்னையே உணர ஆரம்பித்தான் ருத்ரா.அவள் வாழ்த்து சொல்லியதற்கு தலைகுனிந்து ஏற்றுக் கொண்டவன் “ஆதி எனக்காக நீங்க ஒரு விஷயம் செய்யனும்”
“ம்ம்… சொல்லுங்க”
“நான் இந்த மாதிரி ரேடியோவுல ஆர்.ஜேவாக இருக்கிறது யாருக்கும் தெரியாது ஏன் மதனுக்கும் சொல்லலை அதனாலத் தான் நைட் பதினொரு மணிக்கு மேல நான் என்னோட ப்ரோகிராம் இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டேன் ஆனால் இப்போ உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு இது நம்ப ரெண்டுபேருக்கும் தெரிந்ததாகவே இருக்கட்டும்” என்றான்.
அவள் சொன்னதைக் கேட்டு தலையசைத்தவள் “ஏன் யார்கிட்டேயும் சொல்லலை?” என்று கேட்டாள்.
நீண்ட பெருமூச்சு விட்டவன் மனதினுள் ‘இவ என்னைப் பற்றி தெரிஞ்சு பேசுறாளே இல்லை தெரியாத மாதிரி நடந்துக்கிறாளா’ என்று யோசனையோடு பார்த்தவன் “எனக்கு பிடிச்ச விஷயத்தை நான் இரகசியமா செய்றேன் அது அப்படியே இருந்து விட்டு போகட்டுமே” என்றான்.
உடனே தன் உதட்டு அருகே விரல்களை கொண்டு போய் சிப்பை மூடுவது போல் பாவனை செய்து தன் உதடுகளை பூட்டியது போல் செய்தாள்.
அதை பார்த்து சரியென்பது போல் சைகை செய்தவன் “இப்போ போகலாமா?” என்றதற்கு சரியென்று சொன்னாள்.
அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு போகும் வரை அவன் வானொலி நிகழ்ச்சியில் பேசிய விஷயங்களைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டே வந்தாள்.அவள் கேட்டதற்கு எல்லாம் பொறுமையாகவே பதில் சொல்லிக் கொண்டு வந்தான்.
திருமண ஏற்பாட்டிற்கான வேலைக்காக மொத்தமாக ஒரு வியாபாரியிடம் சொல்லாமல் மதனின் சொந்தங்களே சுற்றி இருப்பதால் அவர்கள் ஒவ்வொருவரிடம் வேலையைச் சொல்லி இருக்க அதை பார்த்து சரியான முடிவு செய்யும் பொறுப்பில் தர்ஷன் இருப்பதால் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டி இருந்தது.
தர்ஷன் அங்கே உள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருக்க ஆதிரை சுற்றி உள்ள இடங்களுக்குப் போய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
பூக்களின் அலங்காரத்திற்காக தோட்டம் பக்கம் சென்றிருக்க இவளோ உள்ளே போய் சுற்றிக் கொண்டிருந்தாள்.தன்னுடன் வந்தவளை தேடி இவனும் அந்த தோட்டம் பக்கம் சென்றான்.அங்கே ஒரு திசையில் ஆதிரை நிற்க இவனோ அவளை “ஆதிரை ஆதிரை” என்று அழைத்துக் கொண்டுச் செல்ல அவளுக்குத் தான் கேட்கவில்லை.
அருகினில் சென்று ஆதிரையிடம் “எவ்வளவு நேரமா நான் உங்களை அழைக்கிறேன் கேட்கலையா?” என்றதற்கு “சாரி தர்ஷன் எனக்கு கேட்கலை” என்றாள்.
உடனே தர்ஷன் “உங்க நம்பர் கொடுங்க அவசரம்மானா கால் பண்றேன்”
அவளோ சரியென்று தன் கைப்பேசி எண்ணைக் கொடுத்தாள்.அதை வாங்கிக் கொண்டவன் இதழின் ஓரம் தோன்றிய சிரிப்பை மறைத்தான்.
அங்கே இருந்த ஒரு பன்னீர் ரோஜாவை எடுத்து பறித்து அவளிடம் கொடுத்தான்.அதை வாங்க அவள் தயங்கியபடி நின்றாள்.அதைப் பார்த்து “வாங்கிக்கோங்க ஆதி இந்தப் பூ ரொம்ப அழகா இருக்கு” என்றான்.
அவளோ கைகளை மடக்கியபடி நின்றுக் கொண்டிருக்க அவளோ அவளுடைய கையைப் பிடித்து எடுத்து கரங்களின் மேல் வைத்தவன் “பெண்களுக்கு பூக்கொடுத்தால் தப்பா நினைக்காதீங்க ஏன் அது அறிமுகத்துக்கான பரிசாக இருக்கலாம் இல்லையா? அப்படி பார்க்க பிடிக்கலைன்னா என்னை பூ விக்கிறவனா நினைச்சு வாங்கிக்கோங்க” என்று அவனது அசத்தல் குரலில் ஏற்ற இறக்கத்தோடு சொல்ல
அவளால் மறுக்க முடியவில்லை.கையில் பூவை பிடித்தப்படி நடந்தவள் அது எங்கேயாவது வைத்தால் வாடிப் போய் விடும் என்று எண்ணியவள் தன் தலையில் சூடிக் கொண்டாள்.
அதை அவன் கவனித்தும் கவனிக்காதது போல் இருந்துக் கொண்டான்.
இருவரும் திரும்பவும் ஒன்றாக பயணிக்க நேராக ஒரு ஹோட்டலில் நிறுத்தியவன் “வாங்க ஆதி சாப்பிட போகலாம்” என்றான்.
அவளோ “நாம வீட்டுக்குப் போய் சாப்பிடலாமே சிந்தியா வெயிட் பண்ணுவாளே”
அவனோ சிரித்துக் கொண்டே “இன்னைக்கு நாம வீட்டுக்குப் போக எப்படியும் நைட் ஆகிடும் இன்னும் சில வேலைகள் மிச்சம் இருக்கு அங்கே எல்லாம் போக வேண்டியது இருக்கு நாம டவுணுக்கு போகனும் அங்கேப் போய் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கோங்க” என்றான்.
அவளால் சட்டென்று ஒத்துக் கொள்ள முடியவில்லை.அதனால் தயங்கியபடி நிற்க அவனோ “என்னோட டீரீட்டாக எடுத்துக்கோங்க மித்ராவாக நான் உங்களுக்கு இதைத் தரேன்’ என்ற போது
அவளும் சரியென்று அவனோடு சாப்பிட சென்றாள்.
மலையாளத்தில் பேசி அவளுக்காக தமிழ்நாட்டு உணவு என்ன வேண்டும்? என்று கேட்டு வாங்கிக் கொடுத்தான்.அவனும் அது போல் ஒரு சாப்பாட்டை வாங்கிக் கொண்டான்.
இருவரும் சாப்பிட அமர்ந்ததை ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்தான்.அதைப் பார்த்து ஆதிரை “எதுக்கு இதெல்லாம்?”
அவனோ “எதுக்கா? இங்கே பாருங்க” என்று அவனுடைய கைப்பேசியைக் காட்டினான்.அதில் சிந்தியா குறுஞ்செய்தியில் “ஆதிரை உன்னோடு சாப்பிட ஒத்துக்க மாட்டாள் அதனால சாப்பிடும் போது போட்டோ எடுத்து அனுப்பு அப்போத் தான் எனக்கு உன் மேல நம்பிக்கை வரும் மறந்திடாதே!” என்று அனுப்பி இருந்தாள்.அதைப் பார்த்து ஆதிரை தன் தோழி சிந்தியாவையும் அவளிடம் மாட்டிக் கொண்ட தர்ஷனை நினைத்து சிரிப்பு தான் வந்தது ஆதிரைக்கு.
இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.தர்ஷன் “நாம ரெண்டுபேரும் இவ்வளவு நேரம் பேசினதில் ஒரு நல்ல நண்பர்களாகிட்டோம்னு நினைக்கிறேன் என்னோட ஆர்.ஜே வேலையைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க? உங்களைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க இல்லைன்னா வேண்டாம்” என்றான்.
அவன் அப்படிக் கேட்டதும் வாழை இலையில் வைத்த சாப்பாட்டை விரல்கள் இப்போது கோலமிட்டுக் கொண்டு இருந்தது.விழிகளில் இப்போது தயக்கம் முழுதாய் இடம் பெற்று இருந்தது.எங்கே சென்றாலும் கேட்கும் இந்தக் கேள்விக்கு பயந்தே அவள் எங்கும் செல்வதில்லை.
முடிந்தவரை அதை எப்படியும் தவிர்த்து விடுவாள்.கேள்வியே கேட்காத வண்ணம் நடந்துக் கொள்வாள்.ஆனால் இவ்வளவு நேரம் அவனிடம் நன்றாக பேசி விட்டு தர்ஷன் இப்படிக் கேட்கவும் மறுக்க முடியாமல் தன் தலையை கவிழ்த்து யோசனையில் இருந்தவளைப் பார்த்து “உங்களுக்கு பிடிக்கலைன்னா விடுங்க” என்றான்.
அவளோ கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டபடி அவனைப் பார்த்து புன்னகைத்தவாறே “என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்னும் இல்லை சென்னையில் ஒரு கம்பெனியில் ஹெட் டிப்பார்ட்மென்ட்டில் அசிஸ்டன்ட் அக்கவுண்டராக வேலை பார்க்கிறேன்.நான் டிவோர்ஸி
குடும்பம்னா எனக்கு ஒரு பொண்ணு இருக்கா இப்போ அம்மா அப்பாவோடு வேகேஷனுக்காக ஊருக்கு போய் இருக்கா என்னைப் பற்றி அவ்வளவு தான்” என்றாள்.
அதைக் கேட்ட தர்ஷனின் முகம் எந்த மாறுதலையும் காட்டாமல் “நீங்க ரொம்ப அழகா பாடுறீங்களே அதைப் பற்றி எதையும் சொல்லலை” என்றான் ஆர்வத்தோடு…
அவன் அப்படிக் கேட்டதும் வியப்பில் ஆழ்ந்தவள் ஒருநொடி தோன்றிய எண்ணங்கள் எல்லாம் மறைந்து விட சிரித்துக் கொண்டே “ப்ச் கிண்டல் பண்ணாதீங்க தர்ஷன்”
அவனோ “நீங்க தான் தப்பா புரிஞ்சு இருக்கீங்க நான் சீரியஸாத் தான் சொல்றேன் உங்க குரல் இனிமையாக ரொம்ப அருமையாக இருந்துச்சு பாட்டு பாடுவதற்கு கத்துக்கிட்டீங்களா?” என்று விடாமல் கேட்டான்.
அவளோ ஒரு சிறு வெட்கத்தோடு “ம்ம்… எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்னா அது நான் பாட்டு பாடுறது தான் சின்ன வயசுல பக்கத்தில் வீட்டில் பாட்டு சொல்லிக் கொடுக்கிற க்ளாஸ் நடக்கும் எனக்கு ஒரு ஆர்வம் வந்துச்சு அங்கே போய் சேர்ந்தால் என்னன்னு ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் இருந்துட்டே இருக்கும் இதைப் பார்த்த அந்த பாட்டுச் சொல்லிக் கொடுக்கிற அக்காவே கூப்பிட்டு அவங்க இருக்கிற வரைக்கும் ஒரு நாலைந்து வருஷமா கத்துகிட்டேன் அப்புறம் படிப்புல நேரம் போயிடுச்சு சில நேரம் பிடிச்ச பாடுவேன்” என்றாள் சிரித்துக் கொண்டே….
அவனோ “எதுக்கு சிரிக்கிறீங்க?”
“முதல் தடவை என் பாட்டைப் பற்றி கேட்ட முதல் நபரே நீங்க தான் என்னால நம்ப முடியலை”
“உங்க திறமையைப் பற்றி உங்களுக்கே தெரியலைன்னு தான் சொல்லுவேன்” என்று அவன் சொல்லும் போது அவள் முகத்தில் புன்னகையே நிறைந்து இருந்தது.
அவனின் வானொலி தொகுப்பாளரின் பேச்சோடு இப்போது அவளின் பாடகி பேச்சும் சேர்ந்துக் கொண்டது.
இருவரும் தங்களின் விருப்பத்தைப் பற்றி நிறைய விஷயங்களை பேசி தெரிந்துக் கொண்டனர்.
சாப்பிட்டு காரில் ஏறவும் திரும்பவும் அவர்கள் பயணம் தொடர்ந்தது.லேசாக மழையும் தூற ஆரம்பிக்க அந்த சில்லென்ற தூரலில் அப்படியே தூங்கிப் போனாள் ஆதிரை.
பேசிக் கொண்டே வந்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆதிரையிடம் பதில் வராமல் போகவே தர்ஷன் அவள் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்க அவளோ தூங்கிக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவன் தன் பயணத்தை தொடர்ந்தான்.டவுணுக்கு செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு மேலான பயணம் முடிந்தும் அவளை எழுப்பாமல் காரை ஓரமாக நிறுத்தி வெளியில் நின்று ஓரமாக கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
விழிப்பு வந்து எழுந்தவள் காரிலிருந்து வெளியே வந்து நிற்கவும் அவளைப் பார்த்தவன் அழைப்பை துண்டித்து விட்டு அவளருகில் வந்து “ஸ்லீப்பிங் பியூட்டி எழுந்திட்டீங்களா?” என்ற போது அவனது கிண்டலில் பதில் சொல்ல முடியாமல் “நைட் சரியா தூங்க முடியலை அதனால் தான்” என்று தலையை குனிந்துக் கொண்டாள்.
அவனோ “நான் காரணம் கேட்கலை நீங்க வந்த வேலையை பாருங்க இதோ இங்கே நிறைய கடைகள் இருக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோங்க எனக்கு இங்கே சில வேலைகள் இருக்கு நான் முடிச்சிட்டு வரேன்” என்று சென்று விட்டான்.

