Loading

தேடல் – 11:

 

இரவு நேர தென்றல் காற்று தேகம் தொட்டு செல்ல, முற்றத்தின் மத்தியில் முழுநிலவு முற்றுகை இட்டிருந்தது. முற்றத்தின் இரும்புக் கம்பிகளின் வழியே அதையே வெறித்தபடி படுத்திருந்தான் அக்னி. அவனை அடுத்து மற்ற ஆண்களும் வரிசையாக படுத்திருக்க, அதேப் போல அடுத்த பக்கத்தில் பெண்கள் படுத்து தங்களுக்குள் வளவளத்துக் கொண்டிருந்தனர்.

 

இசை வேந்தனும் திவ்யாவும் கூட மறுவீடு முடிந்து தனது சொந்தபந்தங்கள் சகீதம் வீடு திரும்பி இருந்தனர். வீடு பெரியது தான் என்றாலும் அதில் சதாசர்வ காலமும் ஆட்களின் நடமாட்டம் இருக்க, தனது திட்டத்தை மற்றவர்களுக்கு விளக்க முடியாது சுற்றிக் கொண்டிருந்த அக்னி இந்த இரவிலேயே அதை விளக்க திட்டமிட்டிருந்தான். அதற்கும் ஆப்பு வைப்பதுப் போல மணி ஒன்றை தான்டியும் பெண்கள் படை தங்களுக்குள் மெல்லமாய் சலசலத்துக் கொண்டே இருக்க, வந்ததே அவனுக்கு அப்படி ஒரு கடுப்பு.

 

எப்போது அவர்கள் உறக்குவார்கள் என அவன் முற்றத்து வழி நிலவை வெறித்தபடி இருக்க… ஒரு வழியாக இரண்டு மணியை தாண்டி ஒவ்வொருவராய் கண் அயர, மெல்ல எழுந்தமர்ந்தான். தலை வரை போர்வையை போர்த்தியபடியே மண்டியிட்டு தவழ்ந்து நான்காவதாய் இருந்த ஒரு உருவத்தின் காலை சுரண்ட, அதில் அசந்து உறங்கிய அந்த உருவம் மெல்ல அசைந்தது. மீண்டும் இவன் சுரண்டி, “ஸ்ஸ்ஸ்… ஸ்ஸ்ஸ்ஸ்…” என சத்தம் எழுப்ப, அந்த உருவம் சரியாக இவன் பிஞ்சு மூக்கில் பஞ்சு வைக்க, “யோவ்… சித்தப்பு… எழுப்ப வந்தா… எட்டியா உதைக்கற… இரு மாடியில இருந்து உருட்டி விடறேன்…” என்று தனக்குள் முணுமுணுத்தபடி மீண்டும் அந்த உருவத்தை நெருங்கி முன்போல் சுரண்ட எத்தனிக்க, இவன் முதுகை சுரண்டியது ஒரு உருவம். அவனின் கெட்டபில்லேயே அருகில் தவழ்ந்தபடி இருந்தார் தனா.

 

வாயை திறவாமல் சைகைகளிலேயே இருவரும் பேசி முடித்து, இவன் தலையிலடித்துக் கொண்டு முன்னே செல்ல, அவர் வயிற்றை பிடித்தபடி இவன் பின்னாடியே தவழ்ந்து சென்றார். போகும் வழியிலேயே பெண்கள் வரிசையில் ஒரு காலை இவன் சுரண்ட கையை நீட்ட, சட்டென எழுந்து அமர்ந்து ‘முன்னே போ… நான் பின்னால் வருகிறேன்…’ என சைகை செய்தது அந்த உருவம்.

 

ஒரு வழியாக தவழ்ந்தபடியே அந்த வீட்டின் மச்சுக்கு வந்திருத்தனர் அக்னியும் தனாவும். இப்போது வயிற்றை பிடித்துக் கொண்டு தனா சற்று சத்தமாகவே சிரித்துக் கொண்டிருக்க, அவரை முறைத்துக் கொண்டிருந்தான் அக்னி.

 

“யோவ்… சித்தப்பு… சிரிக்கறத நிப்பாட்டு… இல்ல இங்கயிருந்து புடிச்சு தள்ளி விட்டுடுவேன்…”

 

“ஹா… ஹா… உன்ன எட்டி உதைச்சத நினைச்சு கூட நான் சிரிக்கலடா… நீ யார சுரண்டுன தெரியுமா… ஹா… ஹா… சாச்சாத் உன் அப்பனையே தான்… அவர் மட்டும் முழிச்சு இருந்தா… அதே இடத்துல உனக்கு சங்கு ஊதி சமாதிக் கட்டி இருப்பாரு… ஹா… ஹா… அதுல இருந்து காப்பாத்துன உன் சித்தப்பனுக்கு நீ காட்டற மரியாதை இதானா…” என தனா சிரிப்போடே சொல்லி முடிக்க, அவரை முறைத்தபடி நின்றிருந்தான் அவன்.

 

தலையில் அவர்களை போலவே முக்காடிட்டு வந்த உருவத்தை பார்த்த தனா அதிர்ந்தே போனார். “அம்மா நீயுமா…” என அவர் அதிர்ச்சியில் வாயைப் பிளக்க, “ஏன்டா எரும வாயை பிளக்கற… நாலு கொசு உள்ள போச்சு பாரு… அறிவே இல்லடீ சித்து உன் புருஷனுக்கு…” என்றபடியே கற்பகம் பாட்டி அவரை தள்ளிக் கொண்டு பேரனின் அருகில் நின்றார்.

 

“நீயுமா…” என தன் மனைவி சித்ராவையும் பார்த்து அவர் மீண்டும் வாயை பிளக்க, “நானும் தான் கொழுந்து…” என்ற படியே பின்னோடு வந்தார் தெய்வா.

 

“அண்ணி நீங்களுமானு… மறுபடியும் வாய பொளக்காதீங்க மாமா… அப்புறம் நாலு கொசு நாப்பதாக போகுது…” என்றபடியே பின்னோடு வந்தாள் நிவி.

 

“என்னடா இது… ஒட்டுமொத்த குடும்பத்தையும் கூட்டி வச்சு இருக்க… இதான் நீ ரகசியமா திட்டம் போடறதா… நாசமா போனவனே… உன் அப்பத்தாவ வேற கூட்டி வச்சிருக்க… அது இப்போ நீ சொல்லறத கேட்டு கத்தி கூப்பாடு போட போகுது பாரு…” என அக்னியின் காதில் தனா கிசுகிசுக்க,

 

“எடுபட்ட பயலே… பெத்த தாயினு கொஞ்சமாச்சும் மரியாத இருக்கா உனக்கு… நானாடா கத்திக் கூப்பாடு போடுவேன்…” என கற்பகம் பாட்டி தனாவின் கன்னத்தில் ஒரு இடி இடிக்க, ‘உனக்கு இது தேவைதான்… என்ன பாத்தா சிரிச்ச…’ என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது அக்னி மனதில். ஏனென்றால் அப்பத்தாவின் அடி ஒவ்வொன்றும் இடி. அந்த காலத்து இரும்பு மனுஷி அவர்.

 

“பாம்புக் காதும்மா உனக்கு…” என்று கூறி இன்னொரு இடியையும் வாங்க தவறவில்லை தனா.

 

“இப்படியே நின்னு பேசிட்டு இருங்க… பெரியவனே என்னனு வந்துக் கேக்கட்டும்… சட்டுபுட்டுனு பேசி முடிங்கடா… சீக்கரம் போய் தூங்குவோம்…” என்றது கற்பகம்தான்.

 

“அதாவது கற்பு… உன் தங்க மகன் உன் மூத்த பொண்ணு கண்ண கசக்குச்சுனு எங்ககிட்ட சொல்லமாலேயே நிச்சயத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு… இதுல இரண்டு பேருக்குமே விருப்பம் இல்ல… இப்போ போய் நிச்சயத்த நிறுத்துங்கனு சொல்ல முடியாது… ஏன்னா வேந்தனோட கல்யாணத்துக்கு பட்டபாடே போதும்… வேணாம்னு சொல்லப் போய் வீம்பா பண்ணி வச்சாலும் வச்சுடுவாரு…”

 

“அவன் கிடக்கான் கூறுகெட்ட கிறுக்கு பய… வீட்டுக்கு பெரியவ… அவன பெத்தவனு நா ஒருத்தி இருக்கேனே… என்னகூட கேக்கனுமுனு தோனல பாரேன் அந்த பயலுக்கு… போய் கொமட்டுலையே நாலு குத்து குத்தி என்னனு கேக்கறேன் அவன…” என வீராவேசம் கொண்டு வெகுண்டு எழுந்தவரை அடக்கினான் அக்னி.

 

“அப்படியே நடிக்காத கற்பு… இத உன் புள்ள சொன்னதுக்கு அப்படியே மீதி இருக்க பதினாறு பல்லையும் காட்டன தான…”

 

“அது உங்க ரெண்டு பேருக்கும் இஷ்டம்னு நினைச்சேன்…”

 

“நல்லா நினைச்ச போ… உன் பேத்தி இருக்கால்ல பேத்தி… அவ கூட வேலை செய்யற யாரையோ லவ்ஸ் விடறாளாம்…” என அவன் சொன்ன வேகத்துக்கு, “அடி பதகத்தி…” என்ற வாசகத்தோடு நிவியின் கன்னத்தில் அவர் ஒரு இடியை இறக்கி இருந்தார் கற்பகம்.

 

“ஆச்சி… என்ன மட்டும் இடிக்க… உன் பேரன் லட்சனம் தெரிஞ்சுட்டு இடி… இவன்கூடதான் மாம்ஸ் கல்யாணத்துக்கு வந்த மேக்கப் போடற பொண்ணை லவ்ஸ் விடறான்…”

 

“இவளுக்கு எப்படி தெரியும்…” என அவன் தனாவை பார்க்க, அவரோ அசடு வழிய இளித்து வைத்தார்.

 

‘உன்ன போய் பெரிய மனுஷனு நினைச்சு சொன்னேன் பாரு சித்தப்பு… என்ன சொல்லனும்…’ என அவன் மனதில் கருவ,   “அதான் அந்த புள்ளைய கல்யாணத்துல முழுங்கற மாதிரி பாத்தியா நீயி…” என சித்ரா தனது சந்தேதத்தை கேட்டு வைத்தார்.

 

“எது மூஞ்சிக்கு வெள்ளையடிக்க வந்துச்சே ஒரு புள்ள… அதையா லவ்ஸ் விடற ராசா…” என கற்பகம் யோசனையாய் கேட்க,

 

“ஆமான் ஆமான்… வெள்ளையடிக்க வந்த பொண்ணு அவன் மனச கொள்ளை அடிச்சிடுச்சாம்…” என சித்ரா கிண்டலில் இறங்கி விட்டார்.

 

“ஆமான் அவன் லவ் பண்ணா ராசா… நான் லவ் பண்ணா மட்டும் இடி…” என நிவி குற்றபத்திரிக்கை வாசிக்க,

 

“ஸ்ஸ்ஸ்… எல்லாரும் வாய மூடுங்க… சீக்கரம் பேசிட்டு கிளம்புவோம்… என் புருஷன் வந்து தொலைக்க போறாரு…”

 

“ஏன்டீ… மாமியா காரி ஒருத்தி உக்காந்து இருக்கேன்… கொஞ்சமாவது என் புள்ளய மதிச்சு பேசறீயா நீயி…”

 

“இப்போ என்னத்த மதிக்கலங்கறீங்க…”

 

“வந்து தொலைய போறான்ங்கற…”

 

“திருத்தம் போறானு சொல்லல… போறாருனு தான் சொன்னேன்…”

 

“இரண்டு பேரும் உங்க மாமியார் மருமக சண்டைய கொஞ்சம் நிறுத்தறீங்களா… உங்களையெல்லாம் வச்சுட்டு இந்த கல்யாணத்த நிறுத்தன மாதிரி தான்…” என அக்னி தலையில் கை வைத்துக் கொள்ள,

 

“நீ கவலபடாத ராசா… இந்த கற்பு எதுக்கு இருக்கேன்… அத இத பண்ணி கல்யாணத்த நிறுத்தி பூட மாட்டேன்… நீ ஆசப்பட்ட மாதிரியே அந்த வெள்ள அடிக்கற பொண்ண உனக்கு கட்டி வைக்க வேண்டியது என் பொறுப்பு…” என்றார் கற்பகம்.

 

அதற்குள் அங்கே காலடி சத்தம் கேட்க, வேகமாக சென்று பார்த்த அக்னி நெஞ்சில் கையை வைத்து அமர்ந்து விட்டான்.

 

“என்னடா டேய்…” பதற்றமாக தனா வினவ,

 

“எட்டப்பாரு வராரு சித்தப்பு…” என்றான் அவன் நெஞ்சில் கைவைத்துக் கொண்டே.

 

“என்ன நேரத்துல வைய திறத்தாளோ… கருநாக்குகாரி… வந்து தொலைச்சுட்டான் அவனே…”

 

“என் புருஷன அவன் இவனு மரியாதை இல்லாம பேசாதீங்க..”

 

“என் புள்ளைய நான் எப்படி வேணா பேசுவேன்… உனக்கென்னடீ…”

 

“ஐய்யோ நிறுத்தறீங்களா… அந்த மனுஷன் வந்தட போறாரு… வந்தா எல்லாருக்கும் அடி சரவெடி தான்… அம்மாவ்… போம்மா… போய் உன் புருஷன சமாளிம்மா…” என தெய்வாவின் காலை பிடித்துக் கொண்டு அக்னி கெஞ்ச, அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே வேகமாக எழுந்து சென்றார் அவர்.

 

வேகமாக சென்றவர் ஜெயாவின் மீதே இடித்து நிற்க, அதற்குள் மற்றவர்கள் இருளில் பதுங்கி இருந்தனர். ஒரு நிமிடம் தன்மீது தீடிரென ஒரு உருவம் மோத பயந்து ஒரடி பின் வைத்தவர், பார்வையால் இப்போது தெய்வாவை எரிக்க துவங்கி இருந்தார்.

 

“அடியே கூறுகெட்டவளே… இந்நேரத்துல இங்க என்னடீ பண்ணற…”

 

“அது வத்தல் காய போட்டு இருந்தேனா… அதான் எடுக்க வந்தேன்…”

 

“எது பேய் உலாத்துற நேரத்துல ஒத்தையில வத்த எடுக்க வந்தீயா… அறிவிருக்காடீ உனக்கு…”

 

“இருந்தா ஏன் உங்க குடும்பத்துக்கு வாக்க பட்டு வரேன்… அது காலையில போட்டது… மறந்துட்டேன்… மழ வர மாதிரி இருந்துச்சு… அதான் எடுக்க வந்தேன்…” என அவர் சற்றும் தடுமாறாமல் கோர்வையாக பொய்யை அடுக்க,

 

“சரி வா… போய் எடுப்போம்…” என அவர் முன்னே நடக்க, படக்கென்று நெஞ்சை அடைத்தது அவருக்கு.

 

“அது யாரோ எடுத்துட்டு போய்ட்டாங்க போல… அங்க இல்ல… வாங்க கீழ போகலாம்…” என அவர் அழைக்க,

 

“இல்ல நீ போ… நான் காத்தாட கொஞ்சம் நின்னுட்டு வரேன்…” என்று முன்னே செல்வதிலேயே குறியாய் இருந்தார் ஜெயா.

 

அதைப் பார்த்த தெய்வா “கெட்டுச்சு குடி…” என வாய்விட்டே சொல்லி இருந்தார்.

 

“எந்த குடி கெட்டுச்சு…” என இடுப்பில் கையை வைத்து அவரை பார்த்து முறைததுப் பார்த்தார் ஜெயா.

 

“அது வீடு பூரா சொந்தகாரங்க இருக்காங்க… நாளைக்கு புள்ள நிச்சயத்தார்த்தம் வேற வச்சு இருக்கோம்… மணி இப்பவே மூணாகுது… இன்னும் தூங்காம இருந்தா… உடம்பு என்ன ஆகறது… வேலையெல்லாம் யாரு பாக்கறது… அத சொன்னேன்…” என கடகடவென்று அடித்துவிட, அவரை மெச்சுதல் பார்வை பார்த்தது ஒட்டு மொத்த கூட்டமும். பின்ன தெய்வானா சும்மாவா?

 

“எனக்கு வேற மாத்திரை போட்டது கண்ண இருட்டிட்டு வருது… இப்படியே இருட்டுல படி இறங்கி போன எங்கையாது விழுந்து வச்சா என்ன ஆகறது… நாளைக்கு என் புள்ள நிச்சயம் வேற இருக்கு… நல்ல நாள் அதுவுமா…” என தன் போக்கில் புலம்பிய படியே சுவரை பிடித்தக் கொண்டு அவர் தடுமாறி தடுமாறி நடக்க,

 

“இதெல்லாம் ஏறி வரப்ப தெரியலையா உனக்கு… இருடீ நானும் வரேன்… எங்கையும் விழுந்து வைக்காத…” என்றபடியே வேகமாய் நடந்துச் சென்று அவரை தாங்கிக் கொண்டார் ஜெயவேலன். தெய்வாவை தாங்கி பிடித்தபடியே ஜெயவேலன் கீழே இறங்கிவிட, இப்போது தான் மற்ற ஐவருக்கும் மூச்சே வரும் போல இருந்தது.

 

அவர்கள் சென்றதும் அக்னி தன் திட்டத்தை விளக்க,  “இதெல்லாம் நடக்கும்னா நினைக்கற…” என்றார் தனா.

 

“யோவ் சித்தப்பு… வாய வச்சுட்டு சும்மா இரு… இப்பவே அபச குணமா பேசிட்டு…”

 

“நிச்சயத்த நிறுத்தறது அபச குணம் இல்லையாம்… நான் சொன்னது தான் அபசகுணமான்…”

 

“அட சின்னவனே சும்மா இருடா… நீ சொல்லறது தான் சரி ராசா… ஆனா பெரியவன் அதட்டி ஒரு வார்த்தை கேட்டாலே டவுசர்ல ஒன்னுக்கு போற பய இவன்… இவன நம்பி பொறுப்ப குடுக்கறீயே… சரிவருமா இது…” என சந்தேகமாய் தனாவைப் பார்த்தார் கற்பகம்.

 

“அம்மா… எனக்கு பத்து வயசுல நடந்தத என் புள்ளைக்கு பதினைஞ்சு வயசான அப்புறமும் சொல்லிட்டு இருக்க நீயி… என் மானம் என்னாகறது… மரியாதை என்னாகறது…”

 

“சின்ன மாம்ஸ் உங்க மானம் மல்லாந்து வருஷ கணக்காகுது… அதவிட்டுட்டு விசயத்துக்கு வறீங்களா… கரெக்டா பண்ணிடுவீங்க தானே…”

 

“சித்தப்ப விடு கற்பு… என் முழு நம்பிக்கையும் நீதான்… சொதப்பிட மாட்டீயே…” என்றான் அக்னி.

 

“அதெல்லாம் அசத்திபுடலாம் பேரன்டி… இவன நினைச்சா தான் கொஞ்சம் நெருடலா இருக்கு…” என தனாவை கைக்காட்டி சொல்ல,

 

“ஹலோ… ஹலோ… அப்படி நம்பாத யாருக்கும் நான் ஹேல்ப் பண்ணறதா இல்ல… நீங்களே எப்படியாவது கல்யாணத்த நிப்பாட்டீக்கங்க…” என தனா எகிற, “ரொம்ப பண்ணாதடா…” என அவர் கன்னத்தில் ஒரு இடி இடிக்க, மற்றவர்கள் சிரித்தபடியே கிளம்பி விட்டனர்.

 

“இருங்க… இருங்க… எங்க போறீங்க எல்லாம் அதுக்குள்ள…” என்றது நிவி.

 

“இந்த நிச்சயத்தை நிறுத்தனா மட்டும் பத்தாது… எனக்கும் அவருக்கும் கல்யாத்த பண்ணி வைக்கனும்… இல்ல பெரிய மாமாட்ட போட்டு குடுத்துடுவேன்…” என நிவி மிரட்டல் விட,

 

“இவ பெரிய இவ… இவ பயங்காட்டுனா நாங்க பயந்துடனுமாக்கும்…” என அவள் கன்னத்தில் இடித்தவர், “இப்போதைக்கு இத பாப்பும்… மத்த கதைய அப்புறம் பார்த்துக்கலாம்…” என அவளை கையோடு இழுத்துக் கொண்டு அவர் இறங்க, மற்றவர்களும் பின்தொடர்ந்தனர். நாளை எப்படி தங்கள் திட்டத்தை செயல்படுத்த போகிறோம் என்ற எண்ணத்தோடே உறங்கி போயினர் அவர்கள்.

 

 – தேடல் தொடரும்….

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்