Loading

தேடல் – 10

 

வெளியே எங்கும் இருள் அப்பிக் கிடந்தது. இனியன் ஒரு கையில் தோசைக் கல்லை இறுக பற்றியபடி, உடல் எங்கும் வியர்த்து வடிய, நடுங்கிய கால்களை அழுந்த பதித்து, அந்த நிழலுருவத்தை கண்களால் அளந்தபடியே மெல்ல அடியெடுத்து வைக்கிறான். அந்த உருவம் சுவரேறி குதித்ததும், வேகமாக அந்த இடத்துக்கு ஓடியவன் எப்படியும் அந்த உருவத்தை பிடித்துவிடும் முனைப்புடன், தோசைக் கல்லை மதில்சுவர் மீது வைத்துவிட்டு ஏறி குதிக்க, ஏற்கனவே எக்குத்தாப்பாக குதித்ததில் எழ முடியாமல் முழி பிதுங்கி இடுப்பை பிடித்தபடி அமர்ந்திருந்த அந்த உருவத்தின் மீதே விழுந்து வைக்க, “ஐய்யோ… அம்மா…” என ஒரே நேரத்தில் இரண்டு குரல்கள்.

 

“ஏன்டா எடுபட்ட எருமமாட்டு பயலே… அறிவில்ல உனக்கு… என்மேல வந்து ஏன்டா விழற… விழுந்து வச்சுட்டு கத்தி வேற தொலையுற… தள்ளிப் போட அங்குட்டு… ஐய்யோ… அம்மா… பச்ச புள்ள கால இப்படி அநியாயமா உடைச்சு புட்டானே பாவி…” என அவனை தள்ளிவிட்டு காலை பிடித்தபடி அந்த உருவம் அலறிக் கொண்டிருக்க,

 

தலையை தேய்த்தபடியே, இருளில் கைகளால் துழாவிக் கொண்டிருக்கிறான் அவன். வேறொன்றுமில்லை. ஏறி குதிக்கும் அவசரத்தில் தோசை கல்லின் முனையில் இவன் கைவைத்து அழுத்தியபடி குதிக்க, அது பின்னோடே அவன் தலையில் விழுந்திருந்தது. அவன் அந்த உருவத்தை முறைத்துப் பார்க்க, கருப்பு டீசர்ட் , கருப்பு மங்கி குல்லா அதை முழுவதும் மறைத்ததைப் போல் ஒரு போர்வை என காலை பிடித்தபடி அமர்ந்திருந்தது அந்த உருவம்.

 

மெல்லிய தெரு விளக்கின் ஒளியில் அந்த உருவத்தைக் கண்டவன் ஒரு நொடி பதறிவிட்டான் தான். இருந்தும் அந்த குரலுக்கு சொந்தகாரி தன் அன்பு அக்காவென தெரிகிறது தானே! பின் எதற்கு பயம்.

 

“அடியே குள்ள கத்திரிக்கா… என்னடி இது கெட்டப்பு… குட்டி சாத்தானுக்கு குரங்கு குள்ளா மாட்டுன மாதிரி… பாத்ததும் பக்குனு இருக்கு எனக்கு…” என்று கீழே விழுந்த கடுப்பில் எரிந்து விழ, அவளோ அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

“நீ ஏன்டா ஏறி குதிச்ச… அறிவு கெட்டவனே…”

 

“ஏன் நீ ரொம்ப அறிவோ… கேட் வழியா வர வேண்டியது தானே…”

 

“ஆமான்ல… மறந்துட்டேன்டா தொம்பி…”

 

“யாரோ திருடனு நினைச்சேன்… அப்படியே கப்புனு புடிச்சுடலானு தான் நானும் உன் பின்னாடியே குதிச்சு தொலைச்சேன்… நல்ல வேளை அப்படியே தோசை கல்லால மண்டையில ஒன்னு போட்டுருப்பேன்… தப்பிச்சிட்ட…”

 

“ஆமா… இவன் பெரிய டங்கிள்டு (Tangled) ஹீரோயின்… தோசை கல்லால திருடன் மண்டைய பொளக்கா… போடா அங்குட்டு… போச கொட்ட பயலே…”

 

“அத விடு… நீ ஏன் இந்நேரத்துல இந்த கெட்டப்புல சுவுர் ஏறி குதிச்ச சொல்லு…” என அவன் கேட்டு கொண்டு இருக்க, அதே நேரம் தெருநாய் இரண்டு அவளின் அழகிய வதனத்தில் மயங்கி வெறிக் கொண்டு குறைத்தபடி அவர்களை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடி வர,

 

“ஐய்யையோ… நாய்டீ பேய்… ஏந்திரிச்சு ஓடு முதல…” என அவன் அவசரபடுத்த… அவள் மீண்டும் சுவரெறி குதித்துவிட்டு… அவன் வராததைக் கண்டு… “இன்னும் நடு ரோட்டுல என்னடா தேடிட்டு இருக்க… வந்து தொலைடா மூதேவி…” என்று உள்புறமிருந்துக் கத்தினாள்…

 

“இல்லைடீ தோசை கல்ல காணும்… அதுக்கு ஏதாவது ஆச்சு அம்மா என் முதுகு தோலை உரிச்சுடும்…”

 

“நீ இப்படியே ரோட்டுல கண்ணுப் போன கிழவி மாதிரி தடவிட்டு இருந்தனு வையி, நாயி இரண்டும் உன் தொடையை கவ்விடும்… சீக்கிரம் எந்திரிச்சு வாடா எரும… தோசை கல்ல காலையில தேடிக்கலாம்…” என அவள் கத்த,  நாயும் நெருங்க, அவனும் பதறிக் கொண்டு அவசரமாக ஏற கால் செறுப்பைக் கவ்வி பிடித்திருந்தது ஒரு நாய். அதை உதறிவிட்டு அந்த பக்கம் குதித்தான் அவன்.

 

அவள் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு, சோபாவில் பாவமே உருவாய் அவனை பார்த்தபடி அமர்ந்திருக்க, அவனோ மடமடவென தண்ணீரை குடித்து தன்னை நிலைபடுத்திக் கொண்டிருந்தான்.

 

“இப்போ… என்ன ஆகிட்டுனு…”

 

“ஸ்ஸ்ஸ்… வாய தொறந்த கொன்னுடுவேன் உன்ன… இந்த நேரத்துல அங்க என்னடீ பண்ணற… அதுவும் நட்டநடு ராத்திரில சொந்த வீட்டு சுவரேறி குதிச்சு… போகனுமுனு என்ன வந்துச்சு… கேக்கறேன் இல்ல… சொல்லி தொல…” என அவன் கேட்க, அவள் முழுதாக பேச்சு வராத பிள்ளைப் போல் அவனைப் பார்த்து முழித்து வைக்க, அவன் மீண்டும் நாலு முறை கேட்டு, கடைசியில் உச்ச ஸ்ரூதியில் கத்தி, அதற்கும் அவள் பதில் சொல்லாமல் போக,

 

“இப்போ நீ பதில் சொல்ல போறீயா… இல்லையா…” என்றான் அதீத கடுப்புடன்.

 

“நீ தானே வாய தொறந்தா கொன்னுடுவேனு சொன்ன… நானே பயந்துப் போய் உக்காந்து இருக்கேன்… இந்த பச்ச மண்ண இப்படி மிரட்டுறனா என்ன பண்ணட்டும் நான்… என்ன பாத்தா பாவமா இல்லையா உனக்கு…” என கேட்டவள் குரலுக்கும் முகத்துக்கும் சம்பந்தமே இல்லை.

 

“ஐய்யே… கடுப்ப கிளப்பாத சொல்லிட்டேன்… அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்…”

 

“இப்ப மட்டும் உன்ன மனுஷன் கேட்டகிரில யார் சேர்த்தா…”

 

“அக்கா……..” என உச்ச ஸ்ரூதியில் அவன் மீண்டும் கத்த,

 

“ஓ.கே கூல்… இப்ப என்ன உனக்கு… நான் ஏன் இப்படி பண்ணேனு தெரியனும்… அவ்வளவு தானே…” என அவள் கேட்கவும்,  ஓரளவு அவன் ஊகித்து இருந்தாலும் அவளே சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தலையாட்டினான்.

 

“என்ன என்னதான்டா பண்ண சொல்லறீங்க… என்னால முடியல சுத்தமா… பழசெல்லாம் யோசிச்சாலே தலைவலிக்க ஆரம்பிச்சுடுது… இதுல அங்கொன்னும் இங்கொன்னுமா நியாபகம் வந்து படுத்துது… முக்கியமா அந்த மகிழினிங்கற பேர கேட்டதுல இருந்து மனச என்னமோ பண்ணுது… என்னனு சொல்ல தெரியல எனக்கு… என்னால முடியல… அதான் சாந்தினி மேம போய் பாத்தேன்… அவங்கதான் சொன்னங்க… மகிழினி சம்பந்தப்பட்ட ஏதாவது பொருளை பாத்தா எனக்கு சீக்கரம் நியாபகம் வர வாய்பிருக்குனு… உங்க யார கேட்டாலும் சொல்ல மாட்டீங்க… அம்மாட்ட கூட கேட்டு பாத்தேன்… வாயவே திறக்கலையே… அதான் ஏறிகுதிச்சுப் போய்… அங்க ஏதாவது கிடைக்குதானு பாக்காலானு…” என்றவளை, “இது எப்போ…” என்ற ரீதியில் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவள் கைகளை எடுத்து தன் கரத்தினுள் அடக்கிக் கொண்டவன், “ப்ளீஸ் க்கா… இதெல்லாம் நினைச்சு உன்ன குழப்பிக்காத… உனக்கு எதுவுமே நியாபகம் வர வேண்டாம்… நீ இப்படியே எங்க கூட இருந்தா… இது மட்டுமே போதும் எங்களுக்கு…” என்றான் உடைந்த குரலில்.

 

“நான் என்னனு சொல்லி உனக்கு புரிய வைப்பேனு எனக்கு சத்தியமா தெரியல இனியா… தான் யாருனே தெரியாம… என்னோட அடையாளம் என்னனே தெரியாம இருக்கது எவ்வளவு கொடுமை தெரியுமா..? யாராவது என்ன தெரியலையானு கேட்டா நெஞ்ச அடைக்கற மாதிரி இருக்குடா… என்னையே தெரியல எனக்கு… உங்கள எப்படி தெரியுமுனா சொல்ல முடியும்..? நான் நிம்மதியா தூங்கி எத்தனை நாள் ஆகுது தெரியுமா..? தினமும் தூக்க மாத்திரை இல்லாம தூங்க முடியல… இயல்பா வாழ முடியல… யாராவது சாதரணமா பேச வந்தாலே… என்ன தெரியலையானு கேட்டுவாங்களோனு பயமா இருக்கு… அப்படி யாரவது கேட்டுட்டா… அவங்கள பத்தி யோசிச்சே தலைவலி வந்துடுது… அப்படி வந்தா அத என்னால தாங்க முடியலடா… அப்படியே செத்துட்டா கூட பரவாயில்லைனு தோனுது… ப்ளீஸ்டா… புரிஞ்சுக்க…” என்றவள் கண்ணீர் அவன் அழுந்த பற்றி இருந்த கரத்தினில் பட்டு தெரித்தது.

 

சில நிமிடங்கள் வார்த்தைகளின்றி அமைதியாக அப்படியே அமர்ந்திருத்தான். பின் ஏதோ  முடிவுக்கு வந்தவனாக, அவளின் கையில் ஒரு முறை அழுத்தம் கொடுத்து, உள்ளே சென்றுவிட்டான். கிட்டதட்ட பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்தவன் கை நிறைய ஆல்பங்கள். சில பிரேமிட்ட புகைப்படங்கள். இதுவரை அவள் வீட்டில் இதையெல்லாம் அவள் பார்த்ததே இல்லை. வீட்டின் நடுகூடத்தில் மாட்டி இருக்கும் அந்த ஒற்றை குடும்ப படமும் சமீபத்தில் எடுத்ததே…

 

அந்த ஆல்பங்களை எடுத்து வந்தவன் ஒரு பிரேமிட்ட புகைபடத்தைக் காட்டி… “இதான் மகி அக்கா…” என்றான். அது சுமார் பத்து பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு எடுக்கபட்டிருக்க வேண்டும். இந்த வீடு புதிதாக மின்ன, நிலைபடியின் மீது புது மாலை பளபளக்க, வாசலில் அவளின் அன்னையும் தந்தையும் நாற்காலியில் அமர்ந்திருக்க, கீழே மண்டியிட்டு சிறுவன் ஒருவன் அமர்ந்திருக்க, அவர்களின் இருபுறமும் இரட்டை ஜடை பின்னலில், பட்டு பாவடையில் சிரித்தபடி நின்றிருந்தனர் இரு பெண் குழந்தைகள். அதில் ஒன்றை தான் மகி என காட்டிக் கொண்டிருந்தான் இனியன்.

 

“இது நாம இந்த வீடு கட்டி குடி வரப்ப எடுத்தது…” என்றவன் அதிலிருந்த அத்தனை ஆல்பங்களையும் புரட்டி, அதில் மிளிரையும் அவளுடனே இரட்டைபிறவி போல எல்லாவற்றிலும் ஒட்டி இருந்த மகியையும் காட்டிக் கொண்டே வர, இரண்டு வயதில் இருந்த அவர்களின் புகைப்படத்தையும் காட்டி ஆல்பத்தை மூடி வைத்தவன், அவனுக்கு தெரிந்தவரை சொல்ல ஆரம்பித்திருந்தான்.

 

நாதருக்கு பூர்வீகம் திருவண்ணாமலை தாண்டிய ஒரு சிறு கிராமம். பரம்பரை பரம்பரையாக விவசாயம் பார்த்த குடும்பம் அவருடையது. அவரது தொழிலும் விவசாயமே. அது இனியன் பிறந்திருந்த சமயம். பெரிதாக விவசாயத்தில் ஒன்றும் லாபமீட்ட முடியவில்லை அவரால். அதே சமயம் பெரும் புயலும் கனமழையும் வர, லாபத்தை தான்டி பெரும் நட்டமாகிப் போனது. இனி என்ன செய்வது என்று அவர் புலம்பி தவித்த வேளையில் கூட்டு தொழில் ஆரம்பிக்கலாம் என நண்பர் ஒருவர் இங்கே அழைக்க, அவருக்கும் அந்நேரம் அதுவே சரியெனபட்டது. வீட்டை தவிர அத்தனை நிலங்களையும் விற்றுவிட்டு கையில் இருந்த சொற்ப பணம் மொத்ததையும்  எடுத்துக் கொண்டு கிளம்பி வந்துவிட்டார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி தொழில் நடக்கவில்லை. லாபமில்லை என்பதைவிட இதிலும் பெருத்த நட்டமே! ஒரு கட்டத்தில் தொழிலே செய்ய முடியாத நிலை. சாப்பாட்டிற்கும் வழியில்லை. நிலத்திற்கு சொந்தக்காரனாய் இருந்துவிட்டு ஊருக்கு சென்று கூலி வேலை செய்யவும் மனமில்லை.

 

இதில் அவர் செய்த ஒரே நல்ல காரியம். நிலத்தை விற்ற பணத்தில் கொஞ்சம் பயன்படுத்தி இந்த இடத்தை வாங்கியது தான். அது ஊருக்கு ஒதுக்குபுறமான இடம்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் வீடுகள். அதில் சிறிதாக ஒரு குடிசையைப் போட்டுக் கொண்டு குடும்பமாய் குடியேறிவருக்கு அடுத்து என்ன செய்வதென்று தான் தெரியவில்லை. பாலுக்காக அழும் குழந்தையை கூட பசியாற்ற முடியவில்லை. கூலி வேலையானாலும் பரவில்லை என்று செல்ல தான் முயன்றார் அவர். ஆனால், வேலைதான் கிடைத்த பாடில்லை. அப்போது  ஆபத்பாந்தவன் போல உதவிகரம் நீட்டியவர் தான்  மகிழினியின் தந்தை. ஊரின் முக்கிய வீதியில் தனக்கு சொந்தமான இடத்தையும் கொடுத்து, சிறிதாக பெட்டிக்கடை ஒன்றையும் வைக்க ஏற்பாடு செய்துக் கொடுத்தார் அவர். நாதர் இரவு பகல் பாராது கடுமையாக தான் உழைத்தார். இருந்தாலும் ஒரே நாளில் உச்சத்தை தொட, இதென்ன படமா? ஏதோ கையைப் பிடிக்காமல் பிழைப்பு ஓடிக் கொண்டிருந்தது.

 

ஒருநாள் இரவில் கீழே தரையில் மிளிரையும் இனியனையும் படுக்க வைத்திருப்பதைக் கண்ட மகிழியின் தாய் தங்கள் இல்லம் தூக்கிச் சென்றுவிட்டார். “சின்ன புள்ளைங்கள இப்படி படுக்க வச்சு இருக்கீங்க… ஏதாவது பூச்சி பொட்டு வந்தா என்ன பண்ண…” என்றவர் அதன் பிறகு இருவரையும் இங்கே உறங்க அனுமதித்ததே இல்லை. இப்படிதான் ஆரம்பித்தது அவர்களின் உறவு, நட்பு.

 

இதற்கிடையில் நாதரும் படிபடியாக முன்னேறி பெட்டிக்கடையை கொஞ்சம் பெரிது படுத்தினார். மிளிர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் இப்போது இருக்கும் இந்த வீட்டை கட்டி குடிவந்தனர். அதுவரையுமே இனியன் மிளிர் இருவருக்கும் மகிழ் வீட்டில் தான் உறக்கமே. மேலே இருக்கும் அந்த அறை மிளிர் மகி இருவருக்குமான அறை. எங்கே மீண்டும் அவளை அங்கே தங்க வைத்தால் பழைய நினைவு வந்துவிடுமோ என்று பயந்துதான் அதை பயன்படுத்தாமல் இருந்தனர் அவர்கள். இருந்தாலும் இத்தனை கஷ்டபட்டு கட்டிய வீட்டையும், சிரமபட்டு முன்னேறிய தொழிலையும் விட்டு வேறெங்கும் செல்ல முடியவில்லை அவர்களால், அதுப்போக, மிளிரும் கிட்டதட்ட ஐந்தாறு வருடங்கள் வெளியூரிலேயே இருந்து விட்டதால், இங்கே அவளை பெரும்பாலும் யாருக்கும் தெரியாது என்றே நினைத்தனர்.

 

பள்ளி வரை மிளிர் மகிழினி இருவரும் ஒன்றாகவே படிக்க, மிளிருக்கு சென்னையில் பிரபலமான கல்லூரி ஒன்றில் இடம் கிடைக்க, மகியும் பிடிவாதம் பிடித்து தானும் சென்னையிலேயே சேர்ந்துவிட, அவர்கள் இருவரும் இன்னும் மூவருடன் சென்னையில் வீடு எடுத்து தங்கிக் கொண்டனர். படிப்பை முடித்து அவரவர் துறையில் கால்பதிக்க, சென்னை வாசம் என்றே ஆகிப் போனது இருவருக்கும்…

 

இந்நிலையில் தான் மகிழினி தான் ஒருவரை காதலிப்பதாக சொல்ல, அவளின் பெற்றோர் மறுக்க, எப்படியோ போராடி சம்மதிக்க வைத்தனர் மிளிரும் மகியும். அடுத்தடுத்து கல்யாண வேலைகள் துரித கதியில் நடக்க, திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருக்கிறது என்ற நிலையில் தான் இருவரும் ஊருக்கு வந்திருந்தனர்.

 

இருவருக்கும் பிரிந்திருக்க வேண்டுமே என்ற கவலை மனதை அறித்தாலும், இருக்கும் நாட்களை சந்தோஷமாக கழிக்க எண்ணி பட்டாம் பூச்சியாய் தான் சுற்றித் திருந்தனர். அப்படி ஒருநாள் தனது பள்ளி தோழிகளல எல்லாம் அழைத்து ஒரு பார்டியும் கொடுத்துவிட்டு, பத்திரிக்கையும் வைத்துவிடலாம் என்ற நினைப்பில் தான் இருவரும் அன்று அந்த உணவகத்திற்கே சென்றது. விதி வலியதுதான். திருமணமானால்  பிரிய வேண்டுமே என்ற கவலையில் இருந்தவர்களை விதி நிரந்தரமாய் பிரித்தே விட்டது.

 

மகிழினியின் பெற்றோருக்கு ஓரே மகள். இதுதான் அவர்களின் பூர்வீகமே! இருந்தும் எங்கே தங்கள் கவலை மிளிரை தாக்குமோ என்ற பயத்திலேயே இறுதிக் காலத்தை கழிக்க, வேறு ஊருக்கு சென்றுவிட்டனர் அவர்கள். இன்றளவும் மிளிரை தவிர மற்ற அனைவருமே அவர்களுடன் தொடர்பில் தான் இருக்கின்றனர்.

 

கடைசியாக மகிழினியின் நிச்சயதார்த்த ஆல்பத்தை காட்டியபடியே, அனைத்தையும் சொல்லி முடித்தவன் உள்ளமும் உடலும் ஒரு சேர நடுங்க தொடங்கி இருந்தது. எங்கே மகிழினி இறந்துவிட்டாள் என்ற செய்திக் கேட்டதும் மிளிர் பதறி துடிப்பாளோ என்று. ஆனால், அப்படி எதுவுமே இல்லை. மிக சதாரணமாக தான் இருந்தாள் அவள்.

 

“அப்போ நாங்க ரெண்டு பேரும் போகும் போது நடந்த ஆக்ஸிடன்ட்ல தான் மகிழினி இறந்துட்டா… நான் பொழைச்சுட்டேன்… அப்படி தானே…”

 

“ஆமா க்கா…” என்றவன் அவளையே பார்த்திருக்க, அவளோ அந்த நிச்சயதார்த்த ஆல்பத்தில் மகிழினியின் அருகே சிரித்தபடி அவளின் கைக் கோர்த்து நின்றிருந்தவனையே பார்த்திருந்தாள்.

 

“இதான் மகிழினிக்கு நிச்சயம் பண்ண மாப்பிள்ளையா…”

 

“ஆமாக்கா… அவரு பேரு தவசீலன்… மகி அக்காகூடதான் வேலை பாத்தாங்க…” என்று அவன் மொழிய, இமைக்காது அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மிளிர்.

 

“என்னக்கா அப்படி பாக்கற…”

 

“ஒன்னுமில்லடா… இவர எங்கையோ பாத்த மாதிரி இருக்கு எனக்கு…”

 

“என்னக்கா நீ… அவரும் நீயும் ப்ரண்ட்க்கா… ரொம்ப நல்லவரு… என்கிட்ட கூட ரொம்ப ப்ரண்ட்லியா பழகனாரு… அப்ப பாத்த மாதிரியும் இருக்கும்… பழகுன மாதிரியும் இருக்கும்…” என்றான் மெல்லிய சிரிப்போடே.

 

“பச்… அப்படி இல்லடா… சமீபத்துல எங்கையோ அடிக்கடி பாத்த முகமா இருக்கு…” என்றாள் யோசனையோடு. “ஏற்கனவே பழகினதால அப்படி இருக்குப் போல…” என அவளுக்கு சொல்வதைப் போல வாய்விட்டு தனக்கும் சொல்லிக் கொண்டவன் ஆல்பத்தை மூடி வைத்துவிட்டு எழுந்துக் கொண்டான்.

 

மகிழினி இறந்துவிட்டாள் என்று கூறியும் அவள் சதாரணமாய் இருப்பது ஆச்சரியம் தான். ஒருவேளை மிளிருக்கு அவளை பற்றிய முழு நினைவும் வராததால் இப்படி இருக்கலாம். ஆனால் எல்லாம் நினைவு வந்த பின்பும்  இப்படியே திடமாய் இருப்பாளா? சந்தேகம் தான்! அவளின் காலை விடியலின் அலாரம் தொடங்கி இரவின் முடிவுன் தாய்மடி வரை மகி தான் என நினைவு வரும் போதும் இப்படியே இருந்துவிட அவளால் முடியுமோ?

 

  – தேடல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்