
தேடல் – 9
‘சாந்தினி, மனோதத்துவ நிபுணர்’ என கதவில் மாட்டபட்டிருந்த பெயர் பலகையையே இமைக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மிளிர். கிட்டதட்ட நாற்பது நிமிடங்களாக அவள் இங்கே தான் அவரை காண காத்திருக்கிறாள். அவள் எண்ணம் எல்லாம் இந்த கிளினிக் உள்ளே நுழையும் போதே ஏதோ மனநோயாளியை பார்ப்பதுப் போல் தன்னை பார்த்துச் சென்றவர்களின் மீதே இருந்தது. பரிதாபமான அதே சமயம் ஏளனமும் கலந்த பார்வை அது. ஒரே பார்வையில் இரு வேறுபட்ட உணர்வுகளை அடுத்தவர்களுக்கு கடத்த முடியுமா என்ன? முடியும் என்று தானே அவர்களின் பார்வை சொல்லி செல்கிறது.
‘மருத்துவமனை செல்லும் அனைவரும் என்ன தீவிர புற்றுநோயாளிகளா அல்லது இதய நோயாளிகளா..? அதேப் போல தானே இதுவும்… மனநல மருத்துவரை காண சென்றாலே ஒருவர் முற்றிய பைத்தியமென எண்ணி விடுவதா..?’ நினைக்கையில் கடுப்பாக வந்தது அவளுக்கு. ‘உடலுக்கு எத்தனையோ வகை வகையான வியாதிகள் வருவது போல தானே மனதிற்கும். உடல் நலத்தை எத்தனை பேண வேண்டுமோ அதைவிட அதிகமாக மனநலத்தை பேண வேண்டியுள்ளதே..! இன்றைய நிலைமையில் மன அழுத்தம் தாழாமல் தற்கொலைக்கு முயல்பவர்கள் எத்தனை பேர்..? அந்த நிலையிலும் தன்னுடைய மன அழுத்தைத்தை வெளியே சொல்லவிடாமல், அதற்காக மருத்துவரை நாடவிடாமல் தடுப்பது எது..? எங்கே மனநல மருத்துவரை தேடிச் சென்றாலே, தனக்கு பைத்தியம் என்ற முத்திரை குத்தி விடுவார்களோ என்ற அச்சம் தானே… அதுவே இறுதியில் பெரும் மன அழுத்தமாக தானே உருவெடுக்கிறது…’ இவ்வாறு தான் சிந்தித்துக் கொண்டிருந்தது அவளது மனம்.
மிளிர் அத்தனையும் மறந்து அதிக மன அழுத்ததில் இருந்த போது அவளை மீட்டுக் கொண்டுவர மிகுந்த ஈடுபாடு காட்டியவர் சாந்தினி. அவரின் ஆத்மார்த்தமான பணிதான் இன்று அவளை முழு மனிதியாய் இங்கே அமர வைத்திருக்கிறது.
அவளின் நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் கலங்கிய கண்களும் தெளிந்த முகமுமாய் ஒரு பெண் வெளியே வர, அடுத்தது அவளுக்கான அழைப்பு வந்தது. உள்ளே நுழைந்தவள், சட்டமாய் நாற்காலியில் இருகால்களையும் மடித்து சம்மணமிட்டு அமர்ந்தாள். அருகிலிருந்த மேசையின் மீது தனது இரு கைகளையும் ஊன்றி தனது முகத்தை அதில் தாங்கியவாறு சாந்தினியைப் பார்த்தாள்.
மெல்லிய புன்னகை ஒன்றை அவளுக்கு பரிசளித்தவர், “குட் மார்னிங் மிளிர் மேடம்… என்ன அப்பாயிண்ட் இல்லாம தீடிருனு வந்து நிக்கறீங்க… எனிதீங் இம்பார்டன்ட்…” என அவர் கேட்டதை காதிலேயே வாங்காது அவரையே ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் மிளிர்.
ஐம்பதை தொட்ட வயது. அங்காங்கு வயதை பறைசாற்றும் விதமாய் கம்பி கம்பியாய் நரை. பச்சை நிறத்தில் ஒரு பருத்தி புடவை. எந்தவித ஒப்பணையும் இன்றி பேரெழில் கொஞ்சும் சாந்த முகம். நெற்றியின் மைத்தில் சற்றே பெரிய ஒரு வட்ட பொட்டு. கழுத்தில் மெல்லிய தாலிசரடு. ஒரு கையில் லெதர் வாட்ச். மற்றொரு கையில் ஒற்றை வளையல். அவ்வளவே சாந்தினி. அவரின் இந்த எளிமை தான் மிளிரை பெரிதும் ஈர்த்தது என்றும் சொல்லலாம். எத்தனை எளிமையான ஒருவர் இனிமையான சில வார்த்தைகள் கொண்டே எப்படி காண்பவர் மனதையெல்லாம் கட்டி இழுக்கிறார் என்பது இப்போதும் அவளுக்கு ஆச்சரியம் தான். அவருக்கும் அவளுக்குமான முதல் சந்திப்பிலேயே வசுவின் இடத்திற்கு பக்கத்து இடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் ஆயிற்றே.
“உங்க ஆராய்ச்சி முடிஞ்சுட்டா… ஒரு குட் மார்னிங் சொல்லலாமே மேடம்…” என அவர் மிளிரை பார்த்தபடியே முகத்தில் புன்னகையை தவழவிட,
“மார்னிங் இல்ல… நூன்… குட் நூன்…” என்றாள் மிளிர் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு.
“ஓஓஓ… சரி… வெரி குட் நூன்… இப்போ ஓ.கேவா… கரெக்டா சொல்லிட்டனா..?” இன்னும் புன்னகை வற்றவில்லை.
“விளையாடாதீங்க… நான் வந்து எவ்வளவு நேரம் ஆகுது தெரியுமா..? ஒரே பேசண்ட இவ்வளவு நேரம் பாத்தா கிளினிக்க இழுத்து முடிட்டு போக வேண்டியது தான்…” கடுப்பாய் வந்தது அவளுக்கு.
“இப்போ அதான் உன் பிரச்சனையா..?” என அவர் சிரித்தபடி வினவ, இவளோ முயன்று முறைப்பை இழுத்துப் பிடித்து வைத்திருந்தாள்.
“என்ன இப்போ உனக்கு… சொன்னா தானே தெரியும்…”
“நீங்க சைக்கார்டிஸ் தானே… மனசுல உள்ளத கூட கண்டுபிடிக்க முடியாதா..? என்ன பாத்து நீங்களே சொல்லுங்க எனக்கு என்ன பிரச்சனைனு…” என்றாள் மிளிர் அமர்த்தலாக இன்னும் அதே உர் முகத்தோடு.
“ஹாலோ மேடம் என் வேலை பிரச்சனைக்கு தீர்வு சொல்லறது தான்… பிரச்சனைய கண்டுபிடிக்கறது இல்ல…” என்றார் அவரும் அவள் தோனியிலேயே.
“என்ன தெரியுதோ இல்லையோ..? நல்லா பேச தெரியுது உங்களுக்கு…”
“இல்லைனா உங்கள மாதிரி ஆளுங்களை எல்லாம் வச்சு மேய்க்க முடியுமா..?”
“மேய்க்க நானென்ன ஆடா..?மாடா..?”
“இல்ல குட்டி கழுதை… வந்த விசயத்தை சொல்லுடீனா… ரொம்ப தான்…”
“ஏன் விசயம் இருந்தா தான் வரனுமா..? ஏதோ நமக்கு தெரிஞ்ச டாக்டராச்சே… இந்த நேரம் வேலவெட்டி இல்லாம ஈ ஓட்டிட்டு இருப்பாங்களே… பாத்து நாலு வார்த்த பேசிட்டு போவோனு வந்தா ரொம்ப தான் பண்ணறீங்க..?”
“இது வரைக்கும் அப்படி தானே வந்திருக்க..? தீடிருனு நலம் விசாரிக்க வருவனு நானென்ன கனவா கண்டேன்…” என்றார் அவரும் கேலியாக.
“ஆனா… இப்போ அப்படி இல்ல…”
“அப்போ என் மேல பாசம் பொங்கி பாக்க வந்துட்ட… அப்படி தானே… நம்பிட்டேன் நானு…”
“நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்…”
“சரி ஓ.கே… பாத்தாச்சுல அப்ப கிளம்ப வேண்டியது தானே…”
“என்ன டாக்டரம்மா பொசுக்குனு இப்படி சொல்லிட்டீங்க…”
“நீதானேம்மா சொன்ன… ஒரே பேசண்ட இத்தன நேரம் பாத்தா கிளினிக்க இழுத்து மூட வேண்டியது தானு… இந்த லட்சனத்துல உன் கூட உக்காந்து வெட்டி கதை பேசிட்டு இருந்தா நிச்சயமா கிளினிக்கு மூடுவிழா நடத்த வேண்டியது தான்…”
“பச்… போங்க டாக்டரம்மா…”
“அத தான்டியம்மா நானும் சொல்லறேன்… கிளம்பு… காத்து வரட்டும்…”
“அப்போ இன்டைரக்டா என்ன வெளிய போடீ அய்யோக்கிய ராக்ஸ்கல்னு சொல்லறீங்க…”
“எனக்கு தெரிஞ்சு இதைவிட டைரக்டா யாராலையுமே வெளிய போனு சொல்ல முடியாது…”
“டாக்டரம்மா…”
“என்னம்மா…”
“ரொம்ப பண்ணாதீங்க…”
“யாரு நானா..?”
“பின்ன நானா..? எவ்வளவு முக்கியமான விசயமா வந்திருக்கேன்… என்னனு கூட கேக்காம நீங்க தேவையில்லாம வளவளனு பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க…”
“சரிதான்…”
“ஏன் இல்லைனு வேற சொல்லுவீங்களா..? வந்து இவ்வளவு நேரமாகுதே ஏன் வந்தேனு கூட கேக்க மாட்டீங்களா..?” என்றவளை இப்போது வெளிப்படையாகவே முறைக்க தொடங்கி இருந்தார் அவர்.
“பச் நீங்க கேக்க மாட்டீங்க… நானே சொல்லறேன்… இந்த ஹிப்னோடைஸ் பண்ணி பழச எல்லாம் நியாபகம் வர மாதிரி பண்ண முடியுமா உங்களால…” என்றவளை கேள்விக் குறியாய் பார்த்தார் அவர்.
“இப்படி பாத்தா… அப்படி பண்ணா நியாபகம் வருமா வராதா… அத சொல்லுங்க…” என்றாள் மிளிர் அதிகரமாக.
“வரும்… ஆனா…”
“வரும்ல… அப்பறம் என்ன ஆனா ஊனானு இழுக்கறீங்க… எனக்கும் ஹிப்னோடைஸ் பண்ணி அப்படி வர வைய்யுங்க…”
“ஏற்கனவே மூளையில ஸ்டோர் ஆகி இருக்கத தான் நியாபகத்துக்கு கொண்டு வர முடியும்… மெமரிலாஸ்னா மூளையில ஸ்டோர் ஆகியிருக்க அந்த பகுதி பாதிக்கபட்டு இருக்கும்… சோ இந்த முறையில அவங்களோட நினைவுகள திரும்ப கொண்டு வர முடியாது…” என்றார் அவர் நிதானமாக.
“அப்போ எனக்கு பழசெல்லாம் நியாபகம் வராதா…”
“ஏன் வராம… உன் மூளையோட அந்த பகுதி தானாவே ரெக்வர் ஆனா வரும்… ஃபார் எக்ஸாம்பிள் நம்ப உடம்பில ஒரு காயம் ஏற்படுது… அதுக்கு நீ மருந்து போடலைனாலும் ரெக்வர் ஆகுதில்ல… ஆனா கொஞ்சம் டைம் எடுக்கும்… அதே மாதிரி தான் இதுவும்… அதுவாவே ரெக்வர் ஆக நிறைய சான்ஸ் இருக்கு… சில டைம் ஆகாமலே போகவும் சான்ஸ் இருக்கு…”
“ஓஓஓ… அப்போ ரெக்கவர் ஆகறத நான் எப்படி தெரிஞ்சுக்கறது…”
“மிளிர்… என்ன விசயமுனு சொல்லு… இப்படி சுத்தி வளைக்காத… உனக்கு ஏதாவது நியாபகம் வந்ததுச்சா… இல்ல தலை வலிக்குதா..? இல்லனா உடம்புக்கு எதுவும் பண்ணுதா..?” அவரின் கேள்வியில் மிதமிஞ்சிய அக்கறை கொட்டிக் கிடந்தது. ஆரம்ப காலத்தில் அனைத்தையும் நினைவுக்கு கொண்டு வர முயல்கிறேன் என அவள் இழுத்து விட்டுக் கொண்ட அவஸ்தைகள் அவர் அறிந்தது தானே!
“அப்படி எதுவும் நியாபகம் வரல… ஆனா நிறைய கனவு வருது… அப்படி வந்தா நிம்மதியா என்னால தூங்க முடியல… அந்த கனவெல்லாம் என்னோட சம்பந்த பட்ட மாதிரியே தோனுது… ஆனா அத பத்தி யோசிக்க ஆரம்பிச்சாலே தலைவலிக்க ஆரம்பிச்சுடுது… எதுவும் யோசிக்க முடியல… யார்கிட்டையாவது கேக்கலானா பதில் சொல்ல மாட்டேங்கறாங்க…” என்றாள் மிளிர் கவலையாக.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவர் தொடர்ந்தார். “தூக்கம்ங்கறது நம்ம உடம்பு மட்டும் இல்ல மூளையும் அதுக்கு தேவையான ஓய்வை எடுத்துக்கற நேரம்… அந்த நேரத்தில் பலருக்கு அவங்கள பாதிச்ச கடந்த காலம் தொடர்பான சில நினைவுகள் அங்கொன்னும் இங்கொன்னுமா கனவா வரலாம்… உதாரணமா சொல்லனுமுனா ஒருத்தவருக்கு எக்ஸாம் பயம் அதிகம்னு வச்சுக்கலாம்… அவர் படிச்சு முடிச்சு வேலைக்கு போன பிறகும் கூட அவர் எக்ஸாம் எழுதற மாதிரி அடிக்கடி கனவு வரலாம்… இது அவர் ஆழ்மனசுல பயமா பதிவான நினைவுகள்… அதே மாதிரி பயம்… சந்தோஷம்… கவலை… எது உன்ன பாதிச்ச உணர்வோ அது கனவுகளா வெளிப்பட நிறைய வாய்ப்பு இருக்கு… இது இன்சியல் ஸ்டேஜ் தான்… மே மீ இனிமே சீக்கரம் உனக்கு கொஞ்சம் கொஞ்சமா பழைய நினைவு வரலாம்…”
“ஓஓஓ… ஆனா அத யோசிச்சா எனக்கு தலைவலிக்குதே…”
“இங்க பாரு மிளிர் உனக்கு நான் சொல்லனும்னு இல்ல… உன் மூளையோட ரத்த நாளங்கள் எல்லாம் வீக்கா இருக்கு… அத ஸ்டென்தன் பண்ணதான் உனக்கு மருந்து கூடுத்து இருக்கோம்… கூடவே மூளையோட செல்களும் டேமேஜ் ஆகியிருக்கு… அத சரி பண்ணவும் தான்… அதனால நீ நிறைய அழுத்தம் குடுத்து யோசிச்சா… உன்னோட மூளைக்கு அதிக அளவு ரத்தம் அதிக அழுத்ததோட பாயும்… அந்த அழுத்தத ரத்த குழாய்கள் தாங்க முடியாதப்ப பயங்கர தலைவலி ஏற்படும்… இது பெரிய ஆபத்தும் கூட… அப்படி அதிக அழுத்தம் ஏற்பட்டா… ரத்த குழாய் வெடிக்கவும் வாய்ப்பு இருக்கு…” என்றவர் தயங்கி நிறுத்த,
“அப்படி ரத்த குழாய் வெடிச்சா… நான் செத்து போய்டுவேன் அதானே மேடம்…”
“சொல்ல கஷ்டமா இருந்தாலும் அதான் உண்மை… நீ உன் மூளைக்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது…”
“அப்போ அழுத்தம் குடுக்காம நினைவுக்கு வரனுமுனா…”
“மே பீ அது சம்பந்தபட்ட பொருட்கள்… இல்ல அந்த நபர பாத்தா தானாவே நினைவு வர அதிக வாய்ப்பு இருக்கு…” என்றார் சாந்தினி.
அதைக் கேட்டவள் தனக்குள்ளையே ஒரு உறுதியான முடிவுக்கு வந்திருந்தாள். இன்னும் சிறிது நேரம் அவரிடம் பேசி தன்னை இன்னும் தெளிவுப் படுத்திக் கொண்டே அங்கிருந்து கிளம்பினாள்.
💞 💗💗💗 💞
சூர்யா அழகுநிலையத்தின் வரவேற்பரையில் அமர்ந்து கணக்குளை சரிபார்த்துக் கொண்டிருக்க, மற்ற இரு பணி பெண்களும் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரம் தான் இனியன் கையில் நான்கைந்து பைகளுடன் உள்ளே நுழைந்தான்.
அவனை நிமிர்ந்துக்கூட பாராமல் குனிந்தபடியே “இது லேடிஸ் ப்யூட்டி பார்லர்… ஜென்ஸ்க்கு எல்லாம் இங்க பேசியல் பண்ணறதில்ல…” என்றாள் கடுப்பாய்.
“ஹாலோ மேடம்… நாங்க கடைக்கு கஷ்டமர் இல்ல… ஓனர்…” என்றவன் சட்டமாய் அவள் எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு மேஜையில் கையூன்றி அதில் முகம் தாங்கி அவளையே ஆழ்ந்து நோக்க,
அவனின் ஊடுறுவும் பார்வையில் உள்ளுக்குள் சிறு பனிமலையா எரிமலையா என பிரித்தரிய முடியாத ஏதோ ஒன்று அல்லது இரண்டும் கலந்து வெடித்து சிதறி உருகி ஓட, “சின்ன திருத்தம்… ஓனர் இல்ல… ஓனர் தம்பி…” என்றாள் சூர்யாவும் எரிச்சல் குரலில்.
“ஓனரோ… ஓனர் தம்பியோ எனக்கும் இந்த கடையில சம பங்கு இருக்குல…” என்றான் அவன் கேலிக் குரலில்.
“சரி இருக்கட்டும்… அதுக்கென்ன இப்போ… வந்த வேலை என்னனு சொல்லிட்டு சீக்கரம் கிளம்புறீங்களா..? கஸ்டமர் வர டைம்…” இம்முறை அப்பட்டமான எரிச்சல் அவள் குரலில்.
“ஏன் காரணமில்லாம இங்க நான் வர கூடாதா… கிளம்புனு சொல்ல நீ யாரு..? நாள் முழுக்க கூட இங்கயே இருப்பேன்… இல்ல வீட்ட காலி பண்ணிட்டு இங்கையே கூட வந்து தங்கிப்பேன்… அது என் இஷ்டம்… உனக்கெங்க நோகுதாம்…”
“பச்… எனக்கு வேலை இருக்கு… உங்களுக்கு இல்லைனா அங்க ரெஸ்ட் ரூம்ல போய் வெயிட் பண்ணுங்க… மிளிர் அக்கா இப்போ வந்துடுவாங்க…”
“சிறு திருத்தம்… அக்கா இல்ல அண்ணி…” என்றான் அவனும் அவளைப் போல.
“என்ன…”
“அவ உனக்கு அக்கா இல்ல அண்ணினு சொன்னேன்…” மீண்டும் அவன் அழுத்தம் திருத்தமாக உறவு முறையை விளக்க, அவள் முறைக்க,
“அதெப்படி அண்ணி…” என்றாள் அவனை ஆராயும் பார்வைக்கொண்டு. நிச்சயம் ஏதாவது ஏடாகூடமாக தான் சொல்லப் போகிறான், எதற்கு அதை கேட்டுக் கொண்டு என மனம் முரண்டினாலும் அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“ம்ம்ம்… எப்படியா..? நல்லா கேட்ட போ… நீ என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணா அவ உனக்கு அண்ணி முறைதானே… அத தான் சொன்னேன்…”
“ஹாலோ மிஸ்டர்… நான் ஒன்னும் உங்கள லவ் பண்ணல…”
“நானும் நீ லவ் பண்ணறனு சொல்லலையே… இனிமே பண்ணுவனு தானே சொல்லறேன்…”
“யூ… யூ… என்ன பாத்தா எப்படி தெரியுது உனக்கு…” என்றாள் அவள் அடக்கபட்ட கோபத்துடன்.
“என்னோட அழகான காதல் ராச்சசி மாதிரி தெரியுது…” என்றவன் எழுந்து அவளருகே குனிந்து, அவனின் மூச்சுக்காற்று அவளின் காதோரத்தை உரசி செல்லும் இடைவெளியில், “உன்ன பாத்துட்டே இருக்கும் போதும் உன் கூடவே இருக்கும் போதும் எதுவுமே தோனல… ஆனா எப்ப உன்ன பாக்க முடியலையோ… எப்ப நீ என்கூட இல்லையோ உன்ன தவிர வேற நினைப்பே இல்ல எனக்கு…” என ஒரு வித மதி மயக்கும் குரலில் கிசுகிசுப்பாய் அவன் சொல்ல, அப்படியே சமைந்துப் போனாள் அவள்.
அவளின் பேச்சற்ற நிலையில் அரும்பிய புன்னகையோடு அவளைப் பார்த்தவன், “இது ஜெஸ்ட் அட்ராக்ஷனு நினைக்காத… அட்ராக்ஷனுக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் தெரியாத குழந்தை இல்ல நானு… கன்ஃபார்மா இது லவ்வு தான்…” என்றவன் உள்ளே செல்ல எத்தனிக்க,
“ஹாலோ தம்பி… நான் உன்னவிட பெரியவ… சோ மரியாதையா இந்த நினைப்பெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு அரியர கிளியர் பண்ணற வழிய பாருங்க தம்பி…” என்றாள் சூர்யா அழுத்தம் திருத்தமாக.
அழுத்த எட்டுகளுடன் அவளை மீண்டும் நெருங்கி வந்தவன், “இன்னொரு தடவை தம்பி கம்பினு சொன்ன…” என்று விரல் நீட்டி மிரட்ட, “சொன்னா என்ன பண்ணுவீங்க தம்பி…” என்றாள் அவள் அவனை விட அழுத்தமாக.
முன் போலவே அவள் காதருகே குனிந்தவன், “சொல்லற இந்த லிப்ஸை இழுத்து வச்சு…” என்றவன் சிறு இடைவெளி விட்டு, “புரியும்னு நினைக்கறேன்… இதுக்கு அப்புறம் அப்படி சொல்ல மாட்ட தானே… நாலைஞ்சு மாசமெல்லாம் பெரிய பிரச்சனை இல்ல… என் தலையே ஐஞ்சு வயசு வித்தியாசத்துல தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு…” என அவன் வியாக்கியானம் பேச தொடங்கிவிட்டான்.
அதே சமயம், “இங்க என்ன சத்தம்…” என்றபடியே உள்ளே நுழைந்தாள் மிளிர்.
“சும்மா… உன் அசிஸ்டண்ட் கிட்ட பேசிட்டு இருக்கேன் கத்திரிக்கா…” என்று அவன் சொல்லும் போதே சூர்யா எழுந்து உள்ளே சென்றுவிட,
“இன்னைக்கு என்னடா பண்ணி வச்ச…”
“வேற என்ன பண்ணுவேன்… லவ் பண்ணேன்… அந்த புள்ள கோவிச்சுக்கிச்சு போல…” என்றான் அவன் தோளை குலுக்கி.
“என்ன… என்ன சொன்ன இப்போ நீ… எனக்கு தான் சரியா காதுல விழலையா…” என மிளிர் அவனை அதிர்ந்து அவனைப் பார்க்க,
“அதெல்லாம் கரெக்டா தான் விழுந்துச்சு… நான் சூர்யாவ லவ் பண்ணறேனு சொன்னேன்…” என்றவனை நம்பாத பார்வை பார்த்தாள் மிளிர்.
“ஐய்யோ… நிஜமா தான் சொல்லறேன்… என்னை நம்பு…”
“அவளும் உன்ன லவ் பண்ணறாளா…”
“இல்ல…”
“உனக்கு அவள பத்தி என்ன தெரியும்…”
“ஏன் எல்லாம் தெரிஞ்சு தான் லவ் பண்ணனுமா..? இனிமே தெரிஞ்சுக்கறேன்…”
“இது சரி வரமுனு எனக்கு தோனலை…”
“அவள தான் கல்யாணம் பண்ணனுமுனு முடிவு பண்ணிட்டேன் நான்…” என்றவனை ஆழமாக பார்த்தவள்,
“உன் முடிவுல எந்த மாற்றமும் இல்லையே…”
“நிச்சயமாக… சத்தியமாக… உறுதியாக… இறுதியாக… எனக்கு பொண்டாட்டினு ஒருத்தி வந்தா அது சூர்யா தான்…” என்றான் அவன் சத்தியம் செய்யாத குறையாக.
“பின்னாடி மாத்தி பேச மாட்டீயே…” என்றாள் அவள் இன்னும் விடாமல்.
“பச்… அதான் இவ்வளவு சொல்லறேனே… இன்னும் நம்பாம கேள்வியா கேட்டு கொல்லற…”
“அப்ப ஓ.கே… ஆனா ஒன்னு… இங்க வேலை பாக்கற பொண்ணுங்களோட பாதுகாப்புக்கு நான்தான் பொறுப்பு… எந்த விதத்துலையும் நீ அவளுக்கு தொல்லை குடுக்க கூடாது… அவ ஒத்துக்கலைனா டிஸ்டர்ப் பண்ணாம ஒதுங்கி போயிடனும்… மீறி ஏதாவது பண்ண… தம்பினு கூட பாக்க மாட்டேன்…” என்றாள் அவனை மிரட்டும் தோனியில்.
அளவுக்கு அதிகமாகவே அவனுக்கு அவன் காதலின் மேல் நம்பிக்கை இருந்தது போல, “இதுக்கு நான் ஒத்துக்கறேன்… அவளும் என்ன லவ் பண்ணறானு தெரிஞ்சா…” என்றான் மிளிரை கேள்வியாய்.
“அப்படி மட்டும்னா… நீ அரியர்ஸ் முடிச்சதும் நானே எல்லார்கிட்டையும் பேசி உங்க கல்யாணத்த முடிச்சு வைக்கிறேன்… போதுமா…” என்றாள் மிளிரும் உறுதியாக.
“அக்கானா… அக்கா தான்…” என்றவன் அவளை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்ச, “போதும் ரொம்ப வழியுது… துடைச்சுக்கோ… வந்த வேலை முடிஞ்சுதுனா… கிளம்பலாமே…” என்றாள் அவனை விலக்கியபடி.
“நான் வந்ததே உனக்கு சாப்பாடு குடுக்க தானே…” என்றவன் சட்டமாய் அங்கு அமர்ந்துக் கொள்ள, அதன்பிறகு எந்த விதத்திலும் அவன் சூர்யாவை தொந்தரவு செய்யாது பார்த்துக் கொண்டாள் மிளிர். ஆனால், என்ன இருந்தும் அவனின் ஏக்கம் கலந்த காதல் பார்வைகள் அவள் மீது படிவதை யாராலும் தடுக்க முடியவில்லை. அரட்டையும் கலகலப்புமாக மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான் இனியன்.
ஏனோ சூர்யா அவன் தன்னிடம் பேசியதை மிளிரிடம் சொல்லவில்லை. சொன்னால் நிச்சயம் கண்டித்திருப்பாள் தான். ஏன் அவளுக்கு இஷ்டமில்லை என்று உறுதியாக சொல்லிவிட்டால், இனி இனியன் இங்கு வராதவாறு பார்த்துக் கொள்வாள். ஆனாலும், ஏனோ இதை மிளிரிடம் சொல்ல வேண்டுமென்று அவளுக்கு தோன்றவில்லை. அதை அவனே தமைக்கையிடம் சொல்லி இருப்பான் என்றும் தோன்றவில்லை. ஒரு வேளை இனியன் இங்கு வராமல் இருப்பதை அவளே விரும்பவில்லையோ என்னவோ?
💞 💗💗💗 💞
இரவு நாதரும் வசுவும் வர இயலாது என சொல்லிவிட, பிள்ளைகள் இருவரும் சேர்ந்தே சமைத்து உண்டுவிட்டு, அனைத்தையும் எடுத்து வைத்து படுத்துவிட்டனர். சரியாக நல்லிரவு நேரம். ஏதோ விழுந்து உருளும் சத்தம் கேட்க, தூக்கிவாரிப் போட எழுந்து அமர்ந்துவிட்டான் இனியன். இருளில் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. கண்களை கசக்கியபடி விளக்கை போட, ஸ்போர்ட் இருக்கும் பக்கம் அவன் கைகளால் துழாவ, அதற்குள் மீண்டும் உருண்டு உருளும் சத்தம். இதுவரை ஏதோவென்று அலட்சிய பாவத்தில் இருந்தவனுக்கு உள்ளுக்குள் சிறு நெருடல் உண்டானது. இருட்டிற்கு கண்களை பழக்கிக் கொண்டு, மெல்ல பூனை நடை நடந்து வெளியே வந்து, அங்கும் இங்கும் பார்வையை சுழலவிட்டான்.
எங்கும் எவரும் இல்லாது போக, ஏதாவது பூனையாக இருக்கும் என எண்ணியவன் திரும்ப நினைக்கையில் வாயிலுக்கு வெளியே மெல்லிய வெளிச்சத்தில் ஒரு நிழலுருவம் தெரிய, திக்கென்று ஆனாது அவனுக்கு. கூர்ந்து அந்த நிழலுவத்தை கவனிக்க, மெல்ல அது பூனை நடையிட்டு வீட்டை சுற்றி பின் வாயில் பக்கமாக சென்றது. இவனும் கையில் கிடைத்த தோசை கல்லை எடுத்துக் கொண்டு, சமையல் அறையில் இருப்பவனுக்கு அதானே கிடைக்கும். அதேப் போலவே பூனை நடையிட்டு அந்த உருவத்தை தொடர, அவன் எதிர்பாராத சமயம் சட்டென்று மதில் சுவரில் ஏறி எதிர் பக்கத்தில் குதித்தது அந்த உருவம்.
– தேடல் தொடரும்…

