Loading

தேடல் 26:

 

மிளிர் மீண்டும் மீண்டும் இனியனுக்கு அழைப்பு விடுக்க, அது எடுக்க படாமலேயே போனது. அடுத்து என்ன செய்ய என புரியாத நிலையில் கலங்கி அமர்ந்திருந்தாள் அவள்.

 

அவளின் பதற்றமான செயல்களில் கண்டு, “மிளிர் எனி ப்ராப்ளம்…  யாருக்கு விடாம போன் பண்ணற நீ… அங்க யாருங்கும் எதுவும் இல்ல தானே…” என வினவியவனையும் அவளின் பதற்றம் தொட்டிருந்து.

 

“ஒன்னுமில்ல…  இனியனுக்கு  தான் கூப்பிடறேன்… நீங்க பதறாதீங்க…” என்ற அவனை அமைதிப்படுத்த முயன்றவள், “சீக்கரம் போங்கண்ணா…” என்று ஓட்டுனரை முடுக்கவும் தவறவில்லை.

 

“இவ்வளவு ட்ராபிக்ல எப்படிம்மா வேகமா போக முடியும்…” என அவர் சிடுசிடுக்க,

 

“ப்ளீஸ் ண்ணா நிறைய ரத்தம் போகுது… பக்கத்துல இருக்க ஏதாவது கிளினிக் கூட போங்க… ப்ளீஸ்…” என கெஞ்சவே தொடங்கி விட்டுருந்தாள் அவள்.

 

“அங்கலாம் போனா சேக்க மாட்டாங்கம்மா… ஜீ.ஹச் தான் போகனும்… கத்திகுத்து கேஸ் இது…” என்றார் அவர்.

 

“ஐய்யோ அண்ணா அவர் போலீஸ் தான்… எப்படியும் ட்ரீட்மென்ட் குடுக்க வச்சுடலாம்… நீங்க கொஞ்சம் சீக்கரம் மட்டும் போங்க ப்ளீஸ்…” என்றாள் இன்னும் பதற்றமாய்.

 

“எனக்கு ஒன்னுமில்லம்மா… லைட்டா தான் கிழிச்சுருக்கு… இரண்டு தையல் போட்டா சரியாகிடும்… நீ பயப்படாதா…” என்றான் அக்னி அவளின் ஆதித பதற்றம் கண்டு.

 

“நீங்க ஸ்ட்ரைன் பண்ணாம படுங்க… கைய அசைக்காதீங்க… ரத்தம் போகுது பாருங்க…” என்றவள் அவன் இன்னும் வசதியாய் சாய்ந்துக் கொள்ளுமாறு தன்னில் தாங்கிக் கொண்டாள்.

 

இடையிடையே அவள் இனியனுக்கு அழைத்தபடியே இருக்க, முழு ரீங் சென்று கால் கட் ஆகியதே தவிற எடுப்பார் யாருமில்லை. அவன் எடுக்கவில்லை எனவும் அடுத்து அவர்கள் மளிகை கடைக்கு அழைத்தாள். எப்போதும் அவன் தந்தையுடன் அங்கு தானே இருப்பான். எடுத்தென்னவோ நாதர் தான். அவரின் பேச்சைக் கொண்டே இனியன் அங்கில்லை என உணர்ந்துக் கொண்டவள், அவரை பயப்படுத்த விரும்பாது எதுவும் கூறாது வைத்துவிட்டாள். அன்றி அவளுக்குமே அது நிச்சயமான தகவல் இல்லையே. அப்படி இருக்க நாதரை வேறு பயம் காட்டுவானேன்.

 

அடுத்து யாரிடம் விசாரிப்பது என யோசனையை ஓட்டியவளுக்கு சட்டென்று நினைவு வந்தது சூர்யா மட்டுமே. அந்த போனில் பேசியவன் கூட சூர்யாவை பார்த்துக்கொண்டு இனியன் நிற்பதாக தானே கூறினான் என்று எண்ணியவளாக, தனது அழகு நிலையத்திற்கு அழைத்தாள்.

 

“ஹலோ… மிளிர் ப்யூட்டி பார்லர்…”

 

“சூர்யா… நான் மிளிர் பேசறேன்…”

 

“சொல்லுங்க க்கா…”

 

“சூர்யா பக்கத்துல எங்கையாவது இனியன் இருக்கானானு பாரேன்…”

 

“அவன் ஏன்க்கா இங்க வரப் போறான்…”

 

“பச்… எங்கையாவது மறைஞ்சு நின்னு உன்ன தான் பாத்துட்டு இருப்பான்… நல்லா தேடிப் பாரு சூர்யா…”

 

“ஏன் அக்கா… அவ்வளவு சொல்லியும் திரும்பவும் இனியனுக்கு ஹோப் கொடுத்து நீங்களே அவனை கெடுக்கறீங்க… எல்லாம் தெரிஞ்சும் எப்படிக்கா உங்களால அது முடியுது…” என்றாள் சூர்யா கடுப்பாய்.

 

“ஐய்யோ… சூர்யா சொல்லறத முதல கேளு… இனியனோட உயிருக்கு ஆபத்து… அவன் அங்க எங்கையும் இருக்கானானு தேடு முதல… அவனுக்கு ஏதாவதுனா உடனே ஆம்புலன்ஸுக்கும் போலீஸூக்கும் இன்ஃபார்ம் பண்ணு… நம்ம அக்னி சாரோட ஸ்டேஷன்ல இருக்க மணி அண்ணா நம்பர் தெரியும் தானே உனக்கு… அவர மட்டும் கூப்பிட்டு இன்ஃபார்ம் பண்ணு… என்ன புரியுதா..?” அவள் சொல்லி முடிக்கும் முன்னே போன் ரிசீவரை அப்படியே போட்டுவிட்டு இனியனை தேடி ஓடி இருந்தாள் சூர்யா.

 

சுற்றி எங்கும் தேடி அலைந்து அவன் கிடைக்காமல் போகவே, ஒருவேளை இங்கில்லையோ என்ற எண்ணத்தில் அவள் செல்ல நினைக்கையில் தான் குறுகலான ஒரு சந்திலிருந்து மெல்லிய முணகல் சத்தம் கேட்டது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இனியனின் குரல்தான் என கண்டுக் கொண்டவள், வேகமாக அந்த சந்தின் உள்ளே எட்டிப் பார்க்க, அணிந்திருக்கும் ஆடையின் வண்ணம் கூட கண்டறிய முடியாதபடி உடலெங்கும் குருதி வழிந்தோட திறந்த சாக்கடையில் விழுந்துக் கிடந்தான் இனியன்.

 

சிறுதும் தாமதிக்காது அக்கம் பக்கம் இருந்தவர்களை அவள் உதவிக்கு அழைக்க, அவர்கள் என்னவென்று விசாரித்துக் கொண்டு வரும் முன்னே ஓடிச் சென்று அவனை மடித்தாங்கி இருந்தாள் அவள்.

 

“டேய்… என்ன பாருடா… இனியா… உனக்கு ஒன்னுமில்ல தானே… என்ன பாரு இனியா…” என அவனை நினைவுக்கு கொண்டு வர முயல, மெல்ல கண்திறந்து பார்த்தவன், அவளைக் கண்டதும் ஒரு நிம்மதியோடு மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

 

அதற்குள் உதவிக்கு வந்தவர்கள் அவன் இருக்குமிடம் கண்டு தயங்க, “யாரவது கொஞ்சம் தண்ணீயாவது குடுங்க ப்ளீஸ்… நான் அவன கிளின் பண்ணிடறேன்…” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கூட்டத்தை விலக்கிக் கொண்டு இருவர் வந்து இனியனை தூக்கினார்கள்.

 

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா…”

 

“என்னம்மா… இதுக்கு போய் தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு… ஒரு உயிரவிட சட்டையா முக்கியம்… அதுவும் இல்லாம நாங்க இந்த நாத்துலையே பழகுனவங்க தானே…” என்று சொன்னவர்கள் இருவருமே அரசாங்க துப்புறவு தொழிலாளர்கள்.

 

மெல்ல இனியனை வெளியே தூக்கி வந்தவர்கள், பக்கத்திலிருந்த ஒரு டீக்கடையில் ஒரு குடம் நீரை வாங்கி அவனை தூய்மைபடுத்தி, கொஞ்சமாய் தண்ணீரை அவனுக்கு புகட்ட, உடம்பில் கொஞ்சமாய் தெம்பு வர, நூலிழைப் போல் திறந்த கண்கள் மீண்டும் தாழிட்டுக் கொண்டது.

 

அதற்குள் அழைத்திருந்த ஆம்புலன்ஸும் வந்துவிட, அவசர அவசரமாக அவனை அதிலேற்றி, மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றிருந்தாள் சூர்யா. இதற்கிடையில் அவள் மிளிருக்கும் தெரிய படுத்தி இருக்க, மிளிர் வலிந்து அறிவுருத்தியதால் அரசு மருத்துவமனைக்கே இனியன் அழைத்துச் செல்லப் பட்டான்.

 

இங்கே அக்னிக்கு பெரிதாக ஒன்றுமில்லை. நல்ல வேளையாக கத்தி அக்னியின் தோள்பட்டை சதையை மட்டும் கொஞசம் ஆழமாய் கீறிச் சென்றிருந்தது. நான்கு தையல்கள் போடப்பட்டு ட்ரீப்ஸ் ஏற்றி இரண்டு மணி நேரம் அங்கேயே ஒய்வெடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டனர்.

 

வெளியே வந்து கிளினிக்கில் அவனுக்கு தேவையான மருந்துகளை வாங்கிக் கொண்டவள், “ஒ.கே… நாம ஊருக்கு கிளம்பலாம்…” என்றாள்.

 

“என்னதான் நடக்குது இங்க..? இனியனுக்கு என்ன..? யாரோ ஒருத்தர் உனக்கு போன் பண்ணாங்க… அதிலெருந்து உன் முகமே சரியில்ல… என்ன ஒருத்தன் கத்தியால குத்தறான்… நீ என்னனா ஒன்னுமே சொல்லாம, வா போகலாங்கற… இப்ப இங்க என்ன நடக்குதுனு எனக்கு  தெரிஞ்சாகனும்…” என்றான் அவளை இழுத்து பிடித்து நிறுத்தி அக்னி.

 

“தெரிஞ்சுக்க எதுவும் இல்ல… இனிமே இந்த விசயத்துல நாம ஒன்னும் பண்ணப் போறதில்லை… போதும்…  இதோட எல்லாத்தையும் விட்டுடலாம்… எதையும் கண்டுபிடிக்க வேண்டாம் எனக்கு…” என்றவள் அவன் பதிலையும் எதிர்பாராது முன்னேறி நடக்க,

 

“உனக்கு எப்படியோ எனக்கு தெரியாது… ஆனா எனக்கு கண்டு புடிச்சே ஆகனும்… ஏன்னா இது நான் அட்டன் பண்ண கேஸ்… அத தப்ப முடிச்சுருக்கேனு தெரிஞ்சும் அப்படியே என்னால விட முடியாது…” என்றான் அக்னி உறுதியாய்.

 

“என் மகி விபத்துல தான் இறந்துப் போய்ட்டா… தினேஷும் தற்கொலைதான் பண்ணிகிட்டான்… இதுல கண்டுபிடிக்க புதுசா ஒன்னுமில்ல… இதுவரை பட்டதே போதும்… இதோட விட்டுடலாம்… ப்ளீஸ்… எனக்காக… இத இப்படியே விட்டுடுங்க மித்து…” அவன் கையைப் பற்றிக் கொண்டு கெஞ்சியவளை ஆச்சரியமாக பார்த்தான் அவன்.

 

“மிளிர் என்ன பாரு… என்னாச்சு உனக்கு… என்கிட்ட சொல்லுடா… யார் போன் பண்ணா..? அந்த தவசீலனா..? உன்ன மிரட்டுனானா..? அவன்தான் என்ன ஆள்வச்சு குத்துனதா..? சொல்லுடா என்னாச்சுனு சொன்னாதானே எனக்கு தெரியும்…” என்றான் அவள் முகம் பார்த்து வாஞ்சையாய்.

 

“ஐய்யோ… நா சொல்லறத ஏன் கேக்க மாட்டேங்கறீங்க… ப்ளீஸ் மித்து… நான் சொல்லறத கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க… நாம எதையும் தெரிஞ்சுக்க வேண்டாம்… இங்க தேடி கண்டுபிடிக்கவும் ஒன்னுமில்ல… இனிமேலும் யாரையும் இழக்க எனக்கு உடம்புலையோ மனசுலையோ தெம்பில்ல… ப்ளீஸ் இதோட எல்லாத்தையும் விட்டுடலாம்…”  என்றாள் நடுங்கும் குரலில்.

 

“என்னால எதையும் விட முடியாது… இதோட சீரியஸ்நஸ் தெரியாம பேசிட்டு இருக்க நீ… நமக்கு தெரிஞ்சே இரண்டு கொலை… தெரியாம எத்தனையோ..? ஒரு விசயத்த மறைக்கவே இத்தன கொலை பண்ணறானா… அது எவ்வளவு பெரிய விசயமா இருக்கனும்… புரிஞ்சிக்கோ மிளிர்… அவனால இனிமே யாரும் பாதிக்க படகூடாது…” அவளுக்கு புரிய வைத்துவிடும் முனைப்புடன் எதிர் வாதம் செய்துக் கொண்டிருந்தான் அக்னி.

 

“நீங்க என்கூட வரீங்களா..? இல்ல நா மட்டும் இப்ப தனியா கிளம்பி போகட்டுமா..?” அழுத்தம் திருத்தமாய் ஒலித்தது அவள் குரல்.

 

“நான் என்ன பேசிட்டு இருக்கேன்… நீ என்ன பேசற… ப்ளீஸ்ம்மா சொன்னா கேளு… நாம அவங்கள நெருங்கிட்டோனு தோனுது… அதான் நேரடியாவே மிரட்டறாங்க…” என அவளுக்கு விளக்க முயன்றவனை இடைவெட்டினாள் மிளிர்.

 

“தோ பாருங்க… இத கண்டுபிடிக்க போய் தான் என் மகி செத்தா… இதோ இப்ப நீங்களும் இனியனும்… எனக்கு என்ன ஆனாலும் கவலையில்ல… ஆனா என்ன சேந்தவங்களுக்கு ஒன்னுனா அதுவும் என்னாலனா அத தாங்கற சக்தி எனக்கு இல்ல… யார் வேணா என்ன வேணா பண்ணிட்டு போகட்டும்… நமக்கு எதுக்கு அது… நாம நிம்மதியா இருக்க என்ன வழியோ அத மட்டும் பாப்போம்…” என்றாள் மிளிர் கடின குரலில்.

 

“எது… இத இப்படியே விட்டுட்டு போனா நீ நிம்மதியா இருந்துடுவீயா..? இல்ல உன்னால இருக்க தான் முடியுமா..? பைத்தியமாகிடுவடி… மகிய பத்தி யோசிச்சு யோசிச்சே பைத்தியம் ஆகிடுவ…” என்றான் கோபம் நிறைந்த குரலில் அக்னி.

 

“பைத்தியம் தான… ஆனா ஆகிட்டு போறேன்… இதுனால மத்தவங்களுக்கு எதுவும் ஆகாதுல… அது போதும் எனக்கு…” என்றவள் அவனையும் எதிர்பார்க்கமல் விறுவிறுவென்று செல்ல, இப்போது என்ன சொன்னாலும் அவள் இறங்கி வரப் போவதில்லை என புரிந்துக் கொண்டான் அக்னி. இந்த பயம் தெளிய நிச்சயம் கொஞ்ச நாட்கள் தேவைப்படும். அதன்பிறகு பேசிக் கொள்ளலாம் என்று எண்ணியவன் வேறு வழியின்றி அவளுடனே சென்றான்.

 

நேராக அவர்கள் தங்கியிருத்த விடுதிக்கு வந்தவள், உடமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அப்போதே அங்கிருந்து கிளம்பி விட்டாள். பேருந்து நிலையத்திற்கு வரும் வரை கூட அவனிடம் மறுபடியும் ஒரு வார்த்தை பேசவில்லை. அவன் பேசியதற்கும் எந்த பதிலும் தரவில்லை. இருவருக்கும் சேர்த்து டிக்கெட்டை எடுத்துக்கொண்டு தங்கள் ஊர் பேருந்தில் ஏறியே விட்டாள். கடைசி வரைக்கும் இனியனுக்கு என்னவென்றும் அவள் அக்னியிடம் சொல்லவில்லை. அவனால் செய்ய முடிந்ததெல்லாம் அவளறியாமல் அவளுக்கு பேசிய நபரின் நம்பரை குறித்துக் கொள்வது மட்டுமே.

 

இரவு ஏழு மணிப் போல தங்கள் ஊருக்கு வந்தவள், நேராக இனியனை அனுமதித்திருந்த மருத்துவமனைக்கு சென்றுப் பார்க்க, எத்தனை சோர்விருந்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளி அக்னியுமே இனியனை பார்க்கதான் சென்றான். வாயை திறக்க மாட்டேன் என அடமாய் அமர்ந்திருப்பவளிடம் கேட்டுக் கேட்டு சோர்ந்துப் போய்விட்டான். அதற்காக எப்படியாவது போகட்டும் என விட்டு செல்லவும் மனமில்லை. அதனாலேயே உடற் சோர்வையும் பொருட்படுத்தாது அவன் வந்தது.

 

இனியனுக்கு வலது தொடை எழும்பில் முறிவு ஏற்பட்டிருக்க, எழுந்து நடக்கவே ஆறு மாதங்களுக்கு மேலாகும் என்றுவிட்டனர். இது அன்றி கைகால்களிலும் உடலிலும்  ஆங்காங்கே அடிப்பட்டு கன்றிப் போய் இருந்தது. இனியனிடம் விசாரிக்க, ‘முதலில் தலையின் பின்புறமாக யாரோ பலமாக தாக்கினார்கள்… ஆனால் அதன்பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை…’ என்பதே அவனின் பதிலாக இருந்தது.

 

இனியனுக்கு துணையாக சூர்யா மட்டுமே உடனிருந்தாள். நாதருக்கும் வசுவுக்கும் சொல்ல வேண்டாமென மிளிர்தான் சொல்லி இருந்தாள். ஏதோ இப்போது தான் மிளிர் பழையபடி நடமாடுகிறாள் என கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார்கள். அந்த நிம்மதியையும் கெடுக்க மிளிர் விரும்பவில்லை. எப்படியாவது சமாளித்துவிட்டு, அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றபின் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள். மிளிரும் சென்னையிலிருந்து வர குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகுமென்று சொல்லியிருக்க, அவளையும் தேடவும் மாட்டார்கள். ஆதலால் தானே இருந்து கவனித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து தங்கியும் விட்டாள். சிறிது நேரம் அங்கிருந்த அக்னி எப்படியும் பிறகு அவளிடம் பேசி புரிய வைத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் கிளம்பிவிட்டான். ஆனால், அது அத்தனை சுலபம் இல்லை என்பதை மிளிர் அவனுக்கு ஒவ்வொரு நாளும் உணர்த்தினாள். எத்தனை எத்தனையோ விதமாக கேட்டுப் பார்த்தும் கெஞ்சிக் கொஞ்சிப் பார்த்தும், அவளுடன் யார் பேசியது என்ன பேசியது என்று அவள் கடைசி வரை சொல்லவேயில்லை. இதைப்பற்றி அக்னி பேச்சை ஆரம்பித்தாலே, “இத்தோடு இதை நிறுத்திக் கொள்ளலாம்…” என்பது தான் அவள் பதிலாய் இருந்தது. அவளின் அதீத பிடிவாதத்தில் அவன் தான் திணறி திக்குமுக்காடி, அடுத்து என்ன செய்வதென்று தெரியாது விழிப் பிதுங்கி நின்றான்.

 

-தேடல் தொடரும்…

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்