
தேடல் 24:
எரித்துவிடும் பார்வையோடு அவனை தொடர்ந்தாள் மிளிர். தவசீலனின் இல்லம் நுழையும் முன் அவளின் கரத்தை இறுக பற்றியவன், அதன் பின் எதற்காகவுமே அந்த இறுக்கத்தை தளர்த்தவில்லை. வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் பேச வாய் திறந்தவளை தனது ஒற்றை அழுத்தப் பார்வையால் அடக்கி விட்டான். இடையில் வேறு, “இங்கே எதுவும் பேச வேண்டாம்…” என்று அடிக்குரலில் சீறி இருக்க, அதை மீறி ஏனோ அவளாலும் வாயைத் திறக்க முடியவில்லை. அதே நிலை உணவகத்தில் நுழையும் வரை தொடர்ந்தது.
உயர்தர உணவகம் என்று சொல்லும் வகையில் அத்தனை வசதிகளும் இருக்க, இருவருமே தங்களுக்கு தேவையானதை ஆடர் செய்துவிட்டு, கைகளை தூய்மைப் படுத்திக் கொண்டு வந்து, மீண்டும் அமர்ந்தனர். இப்போதும் மிளிர் எதுவும் பேசாது, அவனை முறைத்துப் பார்த்தபடியே இருக்க, உள்ளுக்குள் தோன்றிய சிரிப்பை முறுவலாய் வெளிபடுத்தினான் அவன்.
“உண்மைக்குமே அம்மையார் ஊமையாகி விட்டீரோ…” எள்ளல் குரலில் அவன் வினவவும் உள்ளே பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு.
“தேவையில்லாம கடுப்ப கிளப்பாதீங்க… நானே கஷ்டப்பட்டு பேசமா இருக்கேன்… அப்புறம் என்ன பேசவேனு எனக்கே தெரியாது…”
“அடடா… என் வார்த்தைக்கு இத்தனை மதிப்பென்று முன்பே அறிந்திருந்தால்… அமைதியாய் இருக்க கடவாய்னு என்றோ அறிவுறுத்தியிருப்பேன் நான்…”
“யோவ்…”
“யோவ்வா…”
“ஆமான்… யோவ்தான்… என்ன பாத்தா எப்படி தெரியுது உனக்கு… ஊமைங்கற… நிச்சயங்கற… கல்யாணங்கற… எதுவும் பேசலைனா… நீ பாட்டுக்கு அடிச்சு விடுவீயா…”
“நீ கூட தான் சொன்னே… என்கூட ஓடிப் போக போறேனு… அப்போ நான் எதுவும் கேட்டேனா…”
“அது எதுக்கு நான் உன்ன பாக்க வந்து இருக்கேன்ங்கற உண்மை யாருக்கும் தெரிஞ்சுட கூடதேனு அப்படி சொன்னேன்…”
“நீ எதுக்கு சொன்னீயோ அதுக்கு தான் நானும் அப்படி சொன்னேன்…”
“அது எப்படி அதுவும் இதுவும் ஒன்னாகும்…”
“சரி அதவிடு… உன்ன தவசீலன் வீட்டுல தான பேச வேண்டானு சொன்னேன்… டாக்ஸில பேசி இருக்கலாம் தானே…”
“அது எப்படி இந்த விசயத்தை ட்ரைவர் முன்னாடி பேச முடியும்…”
“ஏன் முடியாது…”
“அது எப்படி முடியும்… அவர் தேர்ட் பர்ஷன்… அவர் முன்னாடி பேசி ஏதாவது ப்ராப்ளம் ஆகிட்டுனா…”
“அதேதான் தவசீலன் விசயத்துலையும்…”
“அந்த ட்ரைவரும் ஏட்டும் தவசீலனும் ஒன்னா… அவர் மகிய கல்யாணம் பண்ணிக்க இருந்தவரு… அப்போ அவரும் மகிக்கு குளோஸா இருந்து இருப்பாரு இல்ல… அதுவும் அவளோட ஹெட் வேற… கண்டிப்பா அவர்கிட்ட மகி ஏதாவது சொல்லி இருப்பா… அவர்கிட்ட கேட்டா தெரிஞ்சு இருக்கும் தானே… இப்படி எல்லாத்தையும் கெடுத்து வச்சுட்ட…” படபடவென்று பொரிந்தவளை அமைதியாக நோக்கினான் அவன்.
“மிளிர்… நீ ரொம்ப புத்திசாலினு நினைச்சேன்… ஆனா மகி விசயத்துல மட்டும் எல்லாத்தையும் எமோஸ்னலா யோசிக்கற… நீ சொல்லற மாதிரி அவனுக்கு ஏதாவது தெரிஞ்சு இருந்து… அவன் உண்மையிலையே மகிய லவ் பண்ணி இருந்தா எப்பவோ அந்த ரகசியத்த வெளியுலகத்துக்கு கொண்டு வந்திருப்பான்… ஏன்னா அவன் வேலை பாக்கறதே மீடியால தான்…”
“அப்போ அவருக்கு எதுவும் தெரியாதுனு சொல்லறீங்களா…”
“இல்ல… அவன் உண்மையா மகிய லப் பண்ணலனு சொல்லறேன்…”
“கண்டிப்பா அப்படி இருக்க வாய்ப்பேயில்லை… மகி செகண்ட் இயர் படிக்கும் போது கெஸ்ட் லெக்சர் கொடுக்க அவர் வந்தப்ப தான் அவங்க ப்ர்ஸ்ட் மீட் பண்ணாங்க… அப்போ இருந்து கிட்டதட்ட ஐஞ்சு வருஷம் அவங்க லவ் பண்ணி இருக்காங்க… இன்பேக்ட் மகி அந்த சேனல வேலைக்கு சேரவே சீலன் தான் காரணம்…”
“என்ன வேணாலும் இருந்துட்டு போகட்டும்… ஆனா சத்தியமா சொல்லறேன்… மகிய அவன் உண்மையா லவ் பண்ணல… ஒரு வேள மகியோட அழகால ஈர்க்கப்பட்டிருக்கலாம்… இல்ல வேற எதுவும் காரணமிருக்கலாம்…” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெயிட்டர் உணவுகளை வைத்துவிட்டு சென்றான்.
“அப்படி இருக்க வாய்ப்பே இல்ல…” வெயிட்டர் செல்லவதற்காகவே காத்திருந்தவள் போல வேகமாக சொன்னாள் மிளிர்.
அதை கவனியாதவன் போல தனது தட்டிலிருந்த தோசையை சட்னியில் தோய்த்து விழுங்கியவன், அவளை அழுத்தப் பார்வை பார்க்க அதன் அர்த்தம்தான் புரியவில்லை இவளுக்கு.
“பச்… நான் கேக்கறேன் இல்ல… பதில் சொல்லாம இது என்ன பார்வை…”
“சரி… ஒரு எக்ஸாம்பிள் சொல்லறேன்… நீயும் நானும் ஐஞ்சு வருஷம் டீப்பா லவ் பண்ணறோம்… தீடிருனு ஒரு ஆக்ஸிடன்ட்ல நான் இறந்துடறேன்…”
“பச்… ஏன் இப்படி லூசு மாதிரி பேசறீங்க…” பதறி அவள் அவனின் வாயை அடைக்க, எதையோ உணர்ந்துக் கொண்ட முறுவல் அவனிடம்.
“தீனு சொன்னாலே சுடாது மிளிர்… என்ன முழுசா சொல்லவிடு… அப்படி நான் இறந்துட்டா… என்ன மறந்துட்டு நார்மல் லைப் லீட் பண்ண உனக்கு எவ்வளவு நாளாகும்…”
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்ல…”
“உன் பதில தான் என் பதிலும் இருக்கும்…”
“அது அது அவங்க மன தைரியத்தை பொருத்து…”
“இருக்கலாம்…”
“இது என்ன பதில்… ப்ளீஸ் சுத்தி வளைக்காம பதில் சொல்லுங்களேன்…”
“நான் எதிர் பாக்கறமாதிரி பதிலை நீ சொல்லவே மாட்டேங்கறீயே… சரி நீ தவசீலன் வீட்டில எதையுமே கவனிக்கலையா…”
“எத கவனிக்கனுமுனு சொல்லறீங்க…”
“ஒரு கல்யாண பத்திரிக்கை பிரேம் பண்ணி மாட்டி இருந்துச்சே… அத…”
“புரியல…”
“அது தவசீலனோட கல்யாண பத்திரிக்கை… அதுவும் மகி இறந்து ஒரு மாசத்துக்குள்ள அந்த கல்யாணம் நடந்து இருக்கு…”
“ஓஓஓ… ஆனா அது அவங்க வீட்டில இருக்கவங்க கட்டாயத்துல கூட இருக்கலாம் இல்ல… ஏன் மகிக்கே அவ்வளவு சீக்கரம் கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்ல… சீலனுக்கு ஏதோ தோஷமிருக்குனு கட்டாய படுத்துனதால தான் அந்த கல்யாண ஏற்பாடே நடந்துச்சு…”
“கல்யாணம் கட்டாயத்துல நடந்துருக்கலாம்… குழந்தையும் கட்டாயத்துல பெத்துக்க முடியாதுல…”
“நீங்க சொல்லற மாதிரியே பாத்தலும் அங்க அவரோட கல்யாண போட்டோ இருந்துச்சு ஆனா… குழந்தை போட்டோ எதுவும் இல்லையே…”
“நீ கவனிக்கல… திறந்திருந்த பெட்ரூம் கதவு வழியா பாத்தப்போ… சீலன் அவர் ஓய்போட… குழந்தையோட இருக்க படம் மாட்டி இருந்துச்சு…”
“அதுக்கு என்ன இப்போ… கல்யாணம் பண்ணா கொழந்தை பிறக்கும் தானே…”
“உண்மைக்குமே நீ லூசே தான்… அது எட்டுல இருந்து பத்து மாச குழந்தை… அதுக்கும் மகியோட இறப்புக்கும் நீயே கணக்கு போட்டு பாத்துக்கோ… அப்படி பாத்தா மகியோட இறப்பு எந்த வகையிலையுமே அவன பாதிக்கல… அதனால தான் அவன் மகிய லவ் பண்ணலனு சொல்லறேன்…” அவன் சொல்லியதை ஏற்கவே அவளுக்கு பல நிமிடங்கள் தேவைப்பட்டது. காதலே இல்லை என்றால் எதற்காக அத்தனை வருட காதல் நாடகம். கல்யாண ஏற்பாடு. அதை அவனிடத்திலும் கேட்டே விட்டாள்.
“மே பீ அது ஜெஸ்ட் ஒரு அட்ராக்ஷனா இருக்கலாம்…”
“ஓஓஓ… ஆனா இதை வச்சு அவனுக்கு எதுவும் தெரியாதுனு சொல்ல முடியாதே…”
“நானும் அவனுக்கு தெரியாதுனு சொல்லலையே…”
“அப்போ விசாரிச்சு இருக்கலாம் தானே…”
“எதுக்கு இங்கையே நம்மள போடவா… உனக்கு விளக்கம் சொல்லியே நான் ஓஞ்சுடுவேன் போல…”
“இப்போ எதுக்கு இவ்வளவு சலிப்பு…”
“சரிம்மா… நான் சலிச்சுக்கல… சீக்கரம் சாப்பிடு… நாம இப்பவே கிளம்பனும்…” என்றவன் எழுந்து கைக்கழுவ சென்றுவிட்டான்.
அவன் வந்த பிறகும்கூட அவள் உண்ணாமல் கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்க, “சீக்கரம் சாப்பிடுனு சொன்னேன் இல்ல… என்னதான்டி இப்போ உனக்கு…” என்றான் அவன்.
“நீங்க கமா… ஃபுல்ஸ்டாப் எல்லாம் வைக்காம முழுசா சொல்லுங்க… அப்போதான் நான் வருவேன்…”
“உன்ன கூட்டிட்டு வந்தேன் பத்தியா என்ன சொல்லனும்… அவனுக்கு உன்ன தெரிஞ்சு இருக்கு… ஆனா பத்ததும் ஆச்சரியமோ சந்தோஷமோ படல… அதிக அளவு அதிர்ச்சி தான் அவன் முகத்துல… உனக்கு பழசெல்லாம் மறந்துட்டுனும் தெரிஞ்சு இருக்கு… ஆனாலும் உன்ன நல்லா இருக்கீயானோ… உள்ள வானோ கூப்பிடல… இன்பேக்ட் உனக்கு பழசு நியாபகம் வந்துட்டானு தெரிஞ்சுக்க காட்டின ஆர்வத்த… உன்ன பத்தியோ மகி பேமிலி பத்தியோ தெரிஞ்சுக்க காட்டல… அதோட இந்த பத்திரிக்கை குழந்தை இதெல்லாம் சேத்து எனக்கு அவனும் மகியோட சாவுல சம்பந்தபட்டிருப்பானோனு சந்தேகம் வந்துட்டு… அதான் நீ ஏதாவது உளறிட போறனு உன்ன பேச விடல… போதுமா… சாப்பிட்டு கிளம்பு…”
“சரி இப்போ… எங்க போறோம்…” என கேட்டபடியே பூரியை உள்ளே தள்ளினாள் அவள்.
“வேற எங்க… தவசீலனோட ஆபிஸ்க்கு தான்…”
“அங்க எதுக்கு…?”
“ம்ம்ம்ம்… நம்ம நிச்சயத்துக்கு அங்க உள்ளவங்கள இன்வைட் பண்ண வேண்டாம்…” என்றவனை மிளிர் முறைக்க, தோன்றிய புன்னகையை இதழ்களுக்குள்ளையே மறைத்துக் கொண்டு, “மகியோட ப்ரண்ட்ஸ பாக்க போறோம்… அவங்களுக்கு ஏதாவது தெரிஞ்சு இருக்கும் இல்ல… அப்பறம் கண்டிப்பா மகிகூட இன்டர்வியூ எடுக்க ஒரு கேமரா மேனோ போட்டோ கிராஃபரோ போய் இருப்பாங்க இல்ல… அவங்களையும் விசாரிக்கனும்…” என்றான் யோசனையோடு.
“ஆமான்… ஆமான்… தினேஷ்னு ஒருத்தன்தான் எப்பவும் கேமரா மேனா மகிக்கூட போவான்… அவன் அவளோட ஜூனியர் காலேஜ்ல…” என்றாள் மிளிர் அவன் முகத்தை நினைவுக்கு கொண்டுவர முயன்றபடி. அதற்குள் அக்னிக்கு போன் வந்துவிடவே, அவளை சாப்பிட சொல்லிவிட்டு, அங்கிருந்தே பேசி முடித்தான்.
என்னவென்று இவள் பார்வையாலையே வினவ, “நேத்து ஒரு வேல் குடுத்த இல்ல… அத பத்தி விசாரிக்க சொல்லி என் ஃப்ரண்ட் ஒருத்தவர்கிட்ட கொடுத்திருந்தேன்… அவர்தான் பேசனாரு… அது நம்ம ஊர்லையே பிரபலமான நகைக்கடை ஒன்னுல வாங்கி இருக்காங்க… அதுவும் ஒரே மாதிரி மூனு செயினும் அந்த வேல் டாலரும் ஆடர் செஞ்சு வாங்கி இருக்காங்க… அட்ரஸ் கலெக்ட் பண்ணியாச்சு… அங்க போய் விசாரிச்சுட்டு சொல்லறேனு சொன்னாரு…” என்றான் அக்னி.
“ஓஓஓ…” என்றதோடு அவள் உண்டும் முடித்திருக்க, அதற்கான பணத்தை செலுத்திவிட்டு நேரே அவர்கள் சென்றது அந்த மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு தான். ஏற்கனவே மிளிருக்கு அங்கிருந்த பலரை தெரிந்திருக்க உள்ளே செல்வதும் அத்தனை கடினமாக இல்லை.
“ஏய்… மிளிர்… நீயா இது… நம்பவே முடியல என்னால… எப்படி கேர்ள் இருக்க…” என்றபடியே செல்லும் வழியிலேயே ஒருத்தி தாவி மிளிரை அணைத்திருந்தாள். “நீ… நீ… நீங்க…” என்றவளுக்கு சட்டென்று அது யாரென பிடிபடவில்லை. கொஞ்சம் திணறி தான் போனாள்.
“ஏய்… இன்னும் உனக்கு பழசெல்லாம் நியாபகம் வரலையா..?” என்றாள் அவள்
“ஆமான்ங்க… இன்னும் நினைவு வரல… கொஞ்சம் தனியா போய் பேசலாமா… இப்படி வாசலையே ஏன் பேசனும்…” என்றான் அக்னி.
“ஓஓஓ… வாங்களேன்… கேன்டீன் போய் பேசலாம்…” என்றவள் அங்கிருந்த கேன்டினுக்கு அவர்களை அழைத்துச் சென்றாள். மூவருக்கும் கோல்டூ காபி ஆடர் செய்தவள், அது அங்கு நன்றாய் இருக்கும் என்று பாரட்டு பத்திரம் வாசிக்கவும் தவறவில்லை.
“நானே பேசிட்டு இருக்கேன்… நீங்க எதுவுமே பேச மாட்டேங்கறீங்களே…”
“எங்கங்க நீங்க பேசவிட்டீங்க… ஏதோ உங்க டிவி சோவுல ஆங்கரிங் பண்ணற மாதிரி நினைச்சுட்டு நீங்களே பேசிட்டு இருக்கீங்க…”
“சாரி… சாரி… அப்படியே பழகிட்டு… ஆனாலும் மிளிர் கூட இருந்துகிட்டு நான் அதிகம் பேசறேனு சொல்லறீங்களே அது அதிசயம் தான்… எப்போ அவ மகிக்கூட வந்தாலும் வேற யாரையும் பேசவே விடமாட்டா…”
“அப்போ உங்களுக்கு மகிய தெரியுமா..?”
“மகிய தெரியாம தான் மிளிர தெரியுதா… எதிர்பாக்கவே இல்ல… அவ்வளவு ஹேப்பியா கிளம்பி போனா கல்யாணம்னுட்டு… ஆனா கடைசில இப்படி ஆகிட்டு… அவ டெத்க்கு வந்தப்ப தான் சொன்னாங்க… மிளிருக்கு பழசெல்லாம் மறந்துட்டுனு…”
“ஓஓஓ… அப்போ மகி சாகறத்துக்கு முதல் நாள் இங்க வந்து இருந்தாங்களா..?”
“இல்லையே… அவ இங்க வரல… நேரா தினேஷும் அவளும் போய் ஏதோ இன்டர்வியூ எடுத்துட்டு அப்படியே கிளம்பறதா இருந்தாங்க…”
“அப்போ நாங்க தினேஷ பாக்கலாமா..?” என்றவர்களை ஏற இறங்க பார்த்தாள் அவள்.
“நீங்க எதுக்கு இங்க வந்து இருக்கீங்கனு இன்னும் சொல்லலையே…”
“அது எங்களுக்கு இன்னும் ஒன் மந்த்ல கல்யாணம்… ஆனா மிளிருக்கு இன்னும் எதுவும் நியாபகம் வரல…”
“ஓஓஓ… கங்கிராட்ஸ்…”
“தேங்க்ஸ்… அதான் மகியோட நெருக்கமா இருந்த எல்லாரையும் பாத்தா மிளிருக்கு ஏதாவது நியாபகம் வருதானு பாக்க வந்தோம்… அப்படியே எங்க கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணலானும்…”
“நீங்கதான் இன்வைட் பண்ணறீங்க… மிளிர் கூப்பிடவும் மாட்டற… இவ்வளவு நேரத்துல இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவும் மாட்டறா…” வருத்தம் மேலிட மிளிரை பார்த்தபடியே சொன்னாள் புதியவள்.
“சாரிங்க அவங்களுக்கு பேச வராது… ஒரு அதிர்ச்சில அப்படி ஆகிட்டு…”
“அப்போ என்ன பாத்த உடனே ஏதோ பேச வந்தாங்களே…”
“அதான் பேச ட்ரை பண்ணி இருப்பாங்க… ஆனா சரியா பேச வரல…” என்றவன், “தினேஷ பத்தி சொல்ல மாட்டேங்கறீங்களே… அவர பாத்து அவரையும் இன்வைட் பண்ணிட்டோம்னா நாங்க கிளம்புவோம்…” என்றான் தொடர்ந்து.
“சாரி சார்… அவன் இப்போ உயிரோட இல்ல… மகி இறந்த இரண்டாவது நாள் சூசைட் பண்ணிக்கிட்டான்… ஏதோ லவ் ப்ரப்ளமுனு சொன்னாங்க…” எனவும் மற்ற இருவரும் அதிர்ந்து அவளை நோக்கினர்.
– தேடல் தொடரும்…
