
தேடல் 18:
“மகி… மகிம்மா…” என கதறி அழுதவளை, தேற்ற முயன்றுத் தோற்றுக் கொண்டிருந்தான் அக்னி. அறைக்கு வெளியேயும் மிளிரின் சத்தம் கேட்க அடித்துபிடித்து உள்ளே ஓடி வந்த செவிலியர்களாலும் மிளிரைக் கட்டுபடுத்த முடியவில்லை.
தொடர்ந்த மிளிரின் கதறல்கள் ஒரு கட்டத்தில் தடைப்பட்டு, மூச்சு திணறலாக மாற, சுவாசிக்கவே சிரமப்பட்டவளைக் கண்டு பதறி பயந்துதான் போனான் அக்னி. கண்கள் சொறுக வாயை திறந்து திறந்து மூச்சுக்கு ஏங்கி அவள் சுவாசத்திற்கு போராடிக் கொண்டிருக்க, நுரையீரலோ அந்த சுவாசத்தை ஏற்பேனா என்று அடம் பிடித்தது. கைகால்களில் விரைப்பு தன்மை கூடி குளிர்விட்டு போக, அவனின் கண்கள் கட்டுப்பாட்டை மீறி கண்ணீரை உகுக்க தொடங்கி இருந்தது.
அதற்குள் ஒரு செவிலியர் மருத்துவரை விரைந்து அழைத்து வந்திருக்க, மற்றவர்களை நகர்த்திவிட்டு மிளிரை பரிசோதித்த மருத்துவர் மயக்க மருந்துக் கொடுத்து மீண்டும் உறங்க வைத்தார்.
“டாக்டர்… அவளுக்கு ஒன்னுமில்ல தானே…” கண்களில் கண்ணீர் தழும்ப கேட்டவனை பார்த்து மென்னகை ஒன்றை உதிர்த்தவர், “கூல் மிஸ்டர்… அவங்களுக்கு ஒன்னுமேயில்லை… அதிகபட்ச ஸ்டெரஸ் தான்… அவ்வளவு தான்… இன்னும் இரண்டு மணி நேரத்துல கண்ணு முழிச்சுடுவாங்க… நீங்க அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம்… அவங்களுக்கு எதனால ஸ்ட்ரெஸ்னு பாத்து சரி பண்ண பாருங்க… பெட்டர் கொஞ்ச நாளைக்கு வேற ஏதாவது ஊருக்கு கூட்டிட்டுப் போய்ட்டு வாங்க…” என்றவர் அங்கிருந்து நகர்ந்துக் கொள்ள, இப்போது தான் ஒழுங்காக சுவாசிக்கவே முடிந்தது அவனால். மிளிரை ஏதோ ஒரு விதத்தில் பிடித்திருக்கிறது. அந்த பிடித்தம் காதல் தான் என்று கூட உணர்ந்திருந்தான் தான். ஆனால், அவன் உணராத ஒன்று அந்த பிடித்தத்தின் அளவுகோல் எது என்பது தான். அதை இன்று உணர்ந்துக் கொண்டான். இனி அவளின்றி அவனில்லை என்பதையும் உணர்ந்துக் கொண்டான்.
காதல் மொழியில்லை; கட்டி அணைக்கவில்லை; கள்ளப் பார்வையில்லை; கொஞ்சல் மொழியில்லை; இன்னும் எத்தனையோ இல்லைகள். ஏன் காதலை உரியவரிடத்தில் உரைக்கவும் இல்லை. ஆனால், உணர்ந்தான். அவன் காதலை, அவளின் மீதான அவனின் காதல் நொடிக்கு நொடி பெருகுவதை உணர்ந்துக் கொண்டே தான் இருக்கிறான். உரைப்பதும் உணர்த்தப்படுவதும் மட்டுமா காதல்! தானே உணர்வதும் கூட காதல் தானோ?
எங்கே தொட்டால் கூட வலிக்குமோ என்னும் விதமாக மெல்ல அவளின் கரம் பற்றி தனது கரத்தினுள் வைத்துக் கொண்டவன், அதே மென்மையுடன் வருடிக் கொடுக்க தொடங்கினான். ஐ லவ் யூ என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கி விடுவதா காதல்! வார்த்தையில் வடிக்க முடியாத காதலுக்கு உணர்வின் வடிவம் கொடுக்க முயன்றுக் கொண்டிருந்தான் அவன்.
இறுக தலையைப் பற்றியபடி கண்களில் வழியும் கண்ணீரோடு மருத்துவமனையின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தான் இனியன். சுற்றம் உணரவில்லை. சூழல் உணரவில்லை. அவளின் வார்த்தைகளே சுவரெங்கும் பட்டு காதுக்குள் ரீங்காயமிடுவதைப் போன்ற பிரமை. இறுக காதுகளை மூடி அந்த குரலை புறந்தள்ள முயன்றாலும் முடியவில்லை. மனதின் ஆழத்தில் இடைவிடாது ஒலிக்கும் வார்த்தைகள் காதுகளை மூடிக் கொள்வதால் காணாமல் போய்விடுமா என்ன?
ஒரு அரைமணி நேரத்திற்கு முன்புதான் மிளிரை அக்னியின் பார்வையில் விட்டுவிட்டு, சூர்யாவை அழைத்துக் கொண்டு உணவு உண்பதற்காக வந்திருந்தான் அவன். இன்னும் கொஞ்ச நேரத்தில் மிளிர் கண்விழித்து விடுவாள் என்று மருத்துவர் கூறிச் சென்றிக்க, காலையிலும் அவள் உண்ணவில்லையே என்ற எண்ணத்தில் தான், தாங்கள் உண்டுவிட்டு அவள் எழுவதற்குள் ஏதாவது வாங்கி வரலாம் என்று நினைத்து வந்திருந்தான்.
சூர்யாவை துணைக்கு வைத்துவிட்டு அக்னியை அழைத்துச் செல்லலாம் என நினைக்க, அவனோ மிளிரை விட்டு இம்மியும் நகர்வேணா என்ற ரீதியில் அவளின் கைகளை இறுக பற்றியபடி அமர்ந்திருந்தான். சரியென்று தாங்கள் இருவரும் உண்டுவிட்டு, மற்ற இருவருக்கும் வாங்கி வரலாம் என்றுதான் சூர்யாவும் இனியனும் கிளம்பி இருந்தனர்.
உண்டு முடித்து மற்ற இருவருக்கும் வாங்கிக் கொண்டு எழ, “ப்ரூட்ஸ் ஏதாவது வாங்கிக்கலாம்… அக்கா எழுந்தா ஜூஸ் கொடுக்கலாமில்ல…” என்றது சூர்யாதான்.
“உனக்கு எத்தனை தடவை சொல்லறது அவள அக்கானு கூப்பிடாதனு…” அவனின் குரலில் எரிச்சல் மண்டிகிடக்க, அவள் பதிலொன்றும் சொல்லாது முறைப்பதைக் கண்டு, கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.
“சரி வா… வெளிய தள்ளு வண்டியில வச்சிருப்பாங்க… போய் வாங்கிட்டு வந்திடலாம்…” என்றவன் அவளுடன் இணைந்து நடக்க, விரல்கள் உரசிக் கொள்ளும் தூரம்தான். ஆனால், உரசிக் கொள்ளவில்லை.
அவளுடன் இணைந்து நடப்பதே உள்ளுக்குள் ஒரு நிம்மதியையும் ஆறுதலையும் தர, அதனை அனுபவித்தபடி நடந்துக் கொண்டிருந்தான் அவன். சென்று பழங்களை வாங்கிக் கொண்டு திரும்ப, தள்ளாடி தள்ளாடி நடந்து வந்த ஒருவன் அவளின் மீது மோதவர, அவளை தன் பக்கமாக இழுத்து அணைத்தபடி பிடித்திருந்தான் இனியன்.
சட்டென்று ஏற்பட்ட தீண்டலில், கோபம் கொண்டு சூர்யா அடித்திருந்தால் கூட பெரிதாக தெரிந்திருக்காதோ? ஆனால், அந்த பார்வை. அவனை உயிருடன் குழிக்குள் இறக்கி புதைத்துவிடும் பார்வை. அப்படி ஒரு அருவருப்பான பார்வையை இதற்கு முன் எங்கும் அவன் எதிர் கொண்டதில்லை. ‘அவ்வளவு தானா நீ…’ என்ற பார்வை, இதுவரை அவன் வாழ்வில் இப்படி அருவருப்பாய் அவனை ஒருவரும் பார்த்ததாக நினைவில்லை. அந்த நொடியே மண்ணுக்குள் புதைந்துப் போக மாட்டாமோ என்ற எண்ணம் தான் மேலொங்கியது. அதையும் மீறி அப்படி தவறாக எண்ண செய்து விட்டோம் என்ற கோபம்.
அவனை விலக்கிவிட்டு விறுவிறுவென்று முன்னே சென்றவள் காத்திருப்பவர்களுக்கான இருக்கையில் சென்று அமர, ஒரு இருக்கை இடைவெளிவிட்டு இவனும் அமர்ந்துக் கொண்டான். அப்படி அவன் என்ன தவறாக செய்துவிட்டான் எதற்கு இந்த பார்வை என அவசியம் அவன் அறிந்துக் கொள்ள வேண்டி இருந்தது.
“இப்போ நான் என்ன பண்ணிட்டேனு…” அவன் ஆரம்பிக்கும் போதே தனது அழுத்தமான பார்வையால் அவனின் வாயை அடைத்திருந்தாள் சூர்யா.
“உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா… இந்த உரசி உரசி நடக்கறது… கட்டி புடிக்கறது… காதல் கத்திரிக்கானு பெனாத்துறது… இந்த வேலையெல்லாம் வச்சுகிட்ட மரியாதை கெட்டுடும் பாத்துக்க…”
“நான் என்ன வேணுனேவா உன்ன கட்டிபுடிச்சேன்… அவன் இடிக்க வந்தானேனுதான்…”
“எவன் என்ன இடிச்சா உனக்கென்னடா… மூடிட்டு போவீயா… வந்துட்டான் பெரிசா… ஹீரோயிசம் காட்ட…” அவள் சொல்லியது அவனையன்றி அடுத்திருப்பவர்களுக்கு கூட கேட்டிருக்காது. அத்தனை மெல்லியக் குரலிலும் கோபத்தை வெளிப்படுத்த முடியுமா என்றால் முடியும் என்பதை நிறுபித்திருந்தாள் சூர்யா.
“நான் எந்த ராங் மீனிங்லையும்…” என்ன சொல்வதென தெரியாமல் தடுமாறி தான் போனான் அவன்.
“ஸ்ஸ்ஸ்… வாயமூடு… என்ன தெரியும் என்ன பத்தி உனக்கு… ஒரு தடவ சொன்னா புரியாத உனக்கு… சும்மா பல்ல பல்ல காட்டிட்டு பின்னாடியே வர… அறிவில்ல உனக்கு… இதான் கடைசி தடவ… சொல்லறத நல்லா காதுல வாங்கிக்கோ… எனக்கு கல்யாணம் ஆகிட்டு… அதுவும் ஏழு வருசத்துக்கு முன்னாடியே… சொல்லறது மண்டைடில ஏறுச்சா… இதுக்கு மேலேயும் காதல் கத்திரிக்கானு என் பின்னாடி வந்த… உடம்புல உசுரு இருக்காது பாத்துக்க…”
“விளையாடாத சூர்யா… என்ன உனக்கு பிடிக்கும்… அது எனக்கு நல்லாவே தெரியும்… அப்புறமும் ஏன் இப்படி பொய் சொல்லற..? என்ன பிரச்சனையா இருந்தாலும் சொல்லு… எதுனாலும் நான் உன் கூட இருப்பேன்…”
“இவரு என் மாமா பையன் பாரு… விளையாட… சும்மா சும்மா கடுப்ப கிளப்பிட்டு இருந்த… நானே கத்தி எடுத்து சொறுகிட்டு போய்ட்டே இருப்பேன்… டெய்லி தெரு முக்குட்டுல வந்து தேவிடு காக்குறீயே… ரெண்டு தெரு தள்ளிப் போய் விசாரிச்சு பாரு… சொல்லுவாங்க எனக்கு கல்யாணம் ஆகிட்டுனு… மிளிரக்கா முகத்துக்காக தான் இவ்வளவு நாள் பொறுமையா உக்காந்து பேசிட்டு இருக்கேன்… இதுக்கு மேலையும் பின்னாடி வந்து உரண்ட இழுத்த… ஏ கால் செறுப்பு தான் பேசும்…” என்றவள் எழுந்துக் கொள்ள, இவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. எதுவும் பேசவும் தோன்றவில்லை. அவள் சொல்லிய விசயத்திலிருந்து மீண்டிருந்தால் தானே அவன் ஏதாவது பேச.
செல்லும் அவளையே பார்த்தபடி, தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான் அவன். கண்களில் துளிர்த்திருந்த கண்ணீரை துடைக்கவும் மறந்து அவன் அமர்ந்திருக்க, வாயில் வரை சென்றவள் அவனை ஒருமுறை திரும்பி பார்த்து அவசரமாக யாரும் பார்க்காத வண்ணம் தனது கண்களில் துளிர்ந்திருந்த கண்ணீரைத் துடைத்தெரிந்துவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.
எத்தனை நேரம் இப்படியே உக்காந்து இருக்க முடியும். மிளிரின் நினைவு தோன்றவே மற்றவை எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டது. அவசரமாக அவர்கள் இருவருக்கும் வாங்கிய உணவை எடுத்துக்கொண்டு மிளிர் இருந்த அறைக்குச் சென்றான். அங்கே அவன் கண்டது மிளிரின் கைகளை மெல்ல வருடியபடி சோகமே உருவாய் அமர்ந்திருந்த அக்னியை தான்.
யாருமே சொல்ல தேவையேயின்றி அக்னியின் காதல் அவனுக்கு புரிந்தது. அவனறிந்த வரையில் மிளிர் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி இருக்க, அவளின் மீதான அக்னியின் அபரிமிதமான அன்பை இந்த சில மணி நேரங்களிலேயே அவனும் உணர்ந்து தான் இருந்தான். அவனை அறியாமலேயே ஒருதுளி கண்ணீர் அவன் கன்னம் தான்டி கீழேப்பட்டு தெரித்தது. ஒரு காதல் கொண்ட ஆணாய், அவனின் மனம் அக்னியின் காதலாவது எந்தவித நிராகரிப்புமின்றி ஏற்றுக் கொள்ளபட வேண்டும் என்ற எண்ணம் தான் அந்த நொடியில் தோன்றியது.
அக்னியின் அருகில் வந்தவன் அழுத்தமாக அவனின் தோள்களில் தனது கரத்தை பதித்து திருப்ப, என்னவென்று பார்வையாலேயே வினவினான் அவன்.
“சாப்பிடுங்க சார்… நான் அக்காகூட இருக்கேன்…”
“இல்லை இனியா… எனக்கு பசிக்கல… நான் இங்கேயே இருக்கேன்…”
“மணி இப்போ நாலாக போகுது… காலையில சாப்பிட்டிங்களோ என்னவோ..? சாப்பிடுங்க சார்… பேண்ட் எல்லாம் வேற ரத்தக்கறை… உங்களுக்கும் அடிபட்டு இருக்கு இல்ல… சாப்பிட்டு வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க… இன்னும் கொஞ்ச நேரத்துல அக்கா கண் முழிச்சதும் வீட்டுக்கு போய்ட்டு நானே போன் பண்ணறேன்…”
வீடு என்றதும் தான் நினைவே வந்தது அவனுக்கு. “ஐய்யையோ… இத எப்படி மறந்தோம்… இன்னைக்கு எட்டப்பரு என்ன எட்டி எட்டி மிதிக்க போறாரு… இதுக்குள்ள என்னென்ன கூத்துக்கட்டி வச்சுருக்குங்களோ தெரியலையே… போச்சு… போச்சு…” என்ற எண்ணம் தோன்ற அழாத குறையாக முகத்தை வைத்து அமர்ந்திருந்தான் அவன். அப்படி இருந்தும் அங்கிருந்து போக மனமேயில்லை அவனுக்கு.
“சார்… என்னாச்சு… ஏன் இப்படி இருக்கீங்க…”
“ஒன்னுமில்ல… நான் வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணவே இல்ல… எத்தன தடவ போன் பண்ணாங்களோ தெரியல… ரொம்ப பயந்துப் போய் இருப்பாங்க… அதான் யோசிச்சேன்… ஓ.கே… அப்போ நான் கிளம்பறேன்… நீ பாத்துப்ப தானே… மேனேஜ் பண்ணிடுவியா… இல்ல டிஸ்சார்ஜ் பண்ணும்போது என்ன கூப்பிடு… இப்போதைக்கு வீட்டுல யாருக்கும் சொல்ல வேண்டாம்… புரியுதா… மிளிர் நார்மல் ஆகட்டும்… அப்பறம் சொல்லிக்கலாம்…” என அவன் சொல்லிய எல்லாவற்றிற்கும் மையமாக இனியன் தலையை ஆட்டி வைக்க, பின்னே மூச்சுவிடாமல் அவன் பேச வாய்ப்பே அளிக்காமல் பேசினால் தலையாட்ட மட்டும் தான் முடியும்.
இனியனின் செயலில் தோன்றிய புன்னகையை இதழ்களில் தவழவிட்டபடி, மெல்ல அவனைப்போலவே அவன் தலையை பிடித்து ஆட்டிவிட்டு, “கவலபடாத உன் அக்காவுக்கு எதுவும் ஆகாது… எதுவும் ஆக நான் விடமாட்டேன்…” என்றவன் இனியனின் முகத்திலும் மெல்லிய புன்னகை தோன்றவும் தான் அங்கிருந்து கிளம்பினான். கடைசியாக ஒருமுறை மருத்துவரிடம் சென்று, மிளிரைப் பற்றி விசாரிக்கவும் தவறவில்லை.
வெளியில் வந்தவன் ஒரு ஆட்டோ பிடித்து, வேகமாக தனாவை சேர்த்திருந்த மருத்துவமனைக்கு வந்தான். அதே வேகத்தில் நொண்டி அடித்தபடியே, தனா இருந்த அறைக்கு செல்ல, அறை இருந்ததே தவிர அவனது சொந்தங்கள் இல்லை. இவனுக்கு அப்போதே ஏதோ வில்லங்கம் என்று புரிந்துப் போக, அவசர அவசரமாக வரவேற்பறைக்கு வந்து அங்கருந்த தொலைப்பேசியில் தனாவை அழைக்க, எடுத்தவரின் குரலைக் கேட்டு ஆடிப் போய்விட்டான்.
“ஹலோ… சித்தப்பு…”
“அக்னி… நீதான் பேசறீயா…”
“அ… அ…. அப்ப்ப்ப்பா… நீங்க எப்படி….”
“எங்க இருக்க நீ… உடனே வீட்டுக்கு வா…”
“அ………. ப்பா…. அது எனக்கு கொஞ்சம் முக்கியமான….”
“உன்ன வீட்டுக்கு வானு சொன்னேன்…” எதிர்முனையில் ஜெயா பல்லைக்கடிக்க, இவனுக்கு உடலெல்லாம் உதறல் கண்டது. அங்கே என்ன கண்டம் காத்திருக்கிறதோ? இவன் எதுவும் சொல்வதற்குள் எதிர்முனையில் வைக்கபட்டிருக்க, ‘சித்தப்பு… வச்சிட்டியே எனக்கு பெரிய ஆப்பு…’ என தனாவை நினைத்து அக்னியால் பல்லைதான் கடிக்க முடிந்தது.
– தேடல் தொடரும்…

