
தேடல் 17:
மெல்ல மெல்ல இருள் வானில் ஒளி பரப்பியபடி செந்நிற தங்க பிழம்பாக மேலெழுந்துக் கொண்டிருந்த ஆதவனை ஓடும் பேருந்தின் சாளரத்தின் வழியே இமைக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மகிழினி. அவளின் மடியில் படுத்துறங்கிக் கொண்டிருந்த மிளிரின் உறக்கத்தையும் சாளரத்தின் வழியே ஊடுறுவிய ஆதவனின் இளம் சூடான ஒளிக்கற்றைகள் களைக்க, சின்ன சிணுங்களுடன், கொஞ்சமாய் உடலை வளைத்து முறுக்கியபடியே எழுந்து அமர்ந்தாள் மிளிர்.
கொஞ்சம் கொஞ்சமாய் வேகத்தை குறைத்து சிறு குலுங்கலுடன் நின்றது பேருந்து.
“அடியே… ஜன்னல மூஞ்சு ஒட்டிக்க போகுது… நகுந்து தொல முதல… முழிச்சுட்டே கனா கண்டுட்டு உக்காந்துருக்கத பாரு… வண்டி நின்னுடுச்சு… ஏந்திரிச்சு வாடி…” என்றவள் எழுந்து தனது உடமைகளை எடுக்க, மற்றவர்களும் பரபரப்பாக தங்களது உடமைகளை எடுப்பதும் இறங்குவதுமாக இருந்தனர்.
மிளிரை இழுத்து இருக்கையில் அமர வைத்தவள், “எதுக்கு இப்போ பறக்குற… பஸ் என்ன ஓடியா போக போகுது… பொறுமையா இறங்கலாம்…” என்றபடி மீண்டும் ஜன்னலின் வழியே வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டாள்.
“திரும்பு நீ முதல… என்ன கண்ணு சிவந்திருக்கு… நைட்டெல்லாம் தூங்கலையா நீ…” என ஜன்னலின் புறம் திரும்பி இருந்தவளை தனதுபுறம் திருப்பினாள் மிளிர்.
“இல்லை மிமி… தூக்கம் வரல எனக்கு…”
“உன்ன பாத்தாலே தெரியுது… என்னமோ சரியில… ஆனா சொல்ல மாட்டற… பாத்துக்கறேன்…”
“அதெல்லாம் ஒன்னுமில்லடி…”
“நம்பிட்டேன்… பஸ்ல இருந்த எல்லாரும் இறங்கியாச்சு… இப்போவாது இறங்கறீங்களா… இல்ல மகாராணி இறங்க பல்லக்கு எடுத்துட்டு வர சொல்லட்டுமா…” என்றபடியே மிளிர் எழுந்து முன்னால் செல்ல, “ரொம்ப பண்ணாதடி…” என்ற சிணுங்களுடன் மகியும் அவளை பின் தொடர்ந்தாள்.
சொந்த மண்ணில் கால் பதிப்பதே ஒரு அலாதி இன்பம் தான். அதுவும் ஆறு மாதத்திற்கு பிறகு கால் பதிப்பதென்பது நெஞ்சமதை வெண்சாமரம் கொண்டு வருடுவது போலதான். சொந்த மண் கொடுத்த தெம்போ என்னவோ இதுவரை மனதில் இருந்த சஞ்சலம் கூட கொஞ்சம் மட்டுபட்டது மகிக்கு.
தங்களை தூய்மைபடுத்திக் கொண்டு ஒரு டீயை குடித்து தங்களை புத்துணர்வாக்கி கொண்டவர்கள் தங்கள் ஊர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். காலை நேரம் என்பதால் பெரிதாக கூட்டம் ஒன்றுமில்லை. அடுத்த பத்து நிமிடத்தில் பேருந்தை எடுத்தவிட, அடுத்த நாற்பது நிமிடத்தில் தங்களது நிறுத்தில் இறங்கி இருந்தனர் அவர்கள்.
அங்கிருந்து இறங்கி கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். ஆனால், அவர்கள் இறங்கும் முன்பே சிவமும் நாதரும் அங்கே அவர்களுக்காக காத்திருக்க, தந்தையை கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொண்டனர் மகள்கள்.
“இவ்வளவு சீக்கரம் பனியில இங்க வந்து வெயிட் பண்ணனுமா…”
“பத்து நிமிஷம் தானே…நாங்களே வந்திட மாட்டோமா…” என மகள் இருவரும் மாறி மாறி முறைக்க,
“இருக்கட்டும்டா… இப்போ தான் வந்தோம்…” என சிவம் சொல்ல,
“எங்க உன் அம்மா நைட்டே எங்கள வாசலுக்கு தொரத்தி விட்டுட்டா…” என்றார் நாதர் சிரித்தபடி.
தந்தைகளிடம் பேசி சிரித்தபடியே இருவரும் இல்லத்தை அடைய, ஆலம் சுற்றியே உள்ளே அனுமதித்தார் துளசி. உள்ளே நுழைந்ததும் இருவரும் ஒரு சேர வசுவை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்ச, “இதென்ன குளிக்காம கொள்ளாம மேல விழறது… போய் குளிங்கடி முதல…” என இருவருக்கும் பொதுவாக துளசி ஒரு அதட்டல் போட,
“குளிச்சா மேல விழலாமா துளசிம்மா…”
“விழலாமே… கல்யாணம் பண்ணி வச்ச அப்புறம் உன் மாமியாகாரி மேல தாராளமா விழலாமே…” என வசு பாவனையாக சொல்ல,
“கல்யாணம் பண்ண அப்பறம் நான் ஏன் மாமியார் மேல விழறேன்… என் புருஷன் மேல இல்ல விழுவேன்…” என மிளிரும் அதே பாவனையோடு சொல்ல, “பேச்ச பாரு… சரியான வாலு…” என அவள் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்த துளசி.
“போய் குளிங்கடி முதல… விட்டா உக்காந்து நாள் பூரா கதையளப்பாளுக…” என ஒரு அதட்டல் போடவும் தவறவில்லை.
“சரியான ஹிட்லர் மம்மி… உன்ன கொஞ்சலனு தானே கொட்ற…” என்றபடியே துளசியின் கன்னதில் தனது இதழ்களை பச்சென்ற சத்துடன் பதித்தவள், அவருக்கு பழிப்பு காட்டியபடியே வேகமாக இரண்டிரண்டு படிகளாக தாவி ஏற, கோபமாய் முறைக்க முயன்று தோற்றவரின் முகத்தில் புன்னகை அரும்பியது.
இருவரும் குளித்து உடைமாற்றி தயாராய் கீழே வரவும் ஒரு விருந்தே தயாராகி இருந்தது. அளவளாவிய படியே உண்டு முடித்தவர்கள் வெளியே கிளம்ப, இப்போது துளசி முறைக்க ஆரம்பித்திருந்தார்.
“இன்னும் ஏழு நாள்ல கல்யாயணத்த வச்சுட்டு எங்கடி ஊர் சுத்த போறீங்க…”
“அம்மா ஸ்கூல ஒன்னா படிச்சவங்க வீடெல்லாம் பக்கத்துல தானே இருக்கு… போய் பாத்து சொல்ல வேண்டாமா..?”
“அப்போ சொல்லிட்டு மதியம் சாப்பிட வந்துடுவீங்க தானே…”
“இல்லம்மா சாய்ங்காலம் நாலு மணிக்கு சின்னதா ப்ரண்ட்ஸ்க்கு ஒரு ட்ரிட் தரேனு சொல்லிருக்கோம்… அது முடிச்சுட்டு நைட் எட்டு மணிக்கெல்லாம் வந்திடுவோம்…”
“ஒத படுவீங்க ரெண்டு பேரும்… கல்யாணத்த வச்சுட்டு ஊர சுத்துவீங்களா… பேசமா உள்ள போங்கடி…”
“ப்ளீஸ்… ப்ளீஸ்மா… எத்தனை வருஷம் ஆகுது தெரியுமா எங்க ஸ்கூல் ப்ரண்டெல்லாம் பாத்து… கல்யாணம் ஆனா பாக்க முடியுமா…”
“ஏன் யாரும் கல்யாணத்துக்கு வர மாட்டாளுங்களா…”
“கல்யாணத்துல இவ தாலி கட்டிப்பாளா… இல்ல ப்ரண்ட்ஸோட உக்காந்து பேசிட்டு இருப்பாளா… ப்ளீஸ்மா ப்ளீஸ்மா…”
“இல்லடா மிளிர்… மகிக்கு நேரம் சரியில்லையாம்… கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம குலதெய்வ கோயிலுக்கு போய் பூஜை பண்ண சொன்னாங்கடா…”
“துளசிம்மா… அது நாளைக்கு தானே போறோம்… அதுக்கு அடுத்த நாள் பந்தகால் ஊனிடுவீங்க… எங்களால வெளிய போக முடியுமா… நீங்களே சொல்லுங்க…”
“அதுக்கில்ல…” என துளசி ஆரம்பிக்கும் போதே, “அதான் புள்ளைங்க ஆச படுந்துங்கள… போய்ட்டு வரட்டும் விடுத்தா… கல்யாணம் ஆகற வரைக்கும் தானே… கல்யாணம் ஆகிட்டா புள்ளைங்க ஆளுக்கு ஒரு திசையா பிரிஞ்சு கிடக்க போகுதுங்க…” என சிவம் சொல்ல, “ஆமா அண்ணி… விடுங்க போய்ட்டு வரட்டும்…” என நாதரும் சொல்ல, “ஆமாக்கா புள்ளைங்க போய்ட்டு வரட்டுமே…” என வசுவும் ஒத்துத அரைகுறையாய் தலையசைத்து வைத்தார் துளசி.
அதன்பிறகும் அவர்கள் ஏன் அங்கே நிற்கிறார்கள்? துளசியின் தலை லேசாக அசைய ஆரம்பிக்கும் போதே தங்களது ஸ்கூட்டில் சிட்டாக பறந்திருந்தனர் இருவரும்…
தங்கள் சுற்றி திரிந்த ஒவ்வொரு தெருவையும் சுற்றி, பிடித்தெல்லாம் உண்டு, நண்பர்களுக்கு தெரிந்தவர்ளுக்கு என பத்திரிக்கை வைத்து முடிக்கவே மணி மூன்றாகிப் போனது. அதன் பிறகு அவசர அவசரமாய் அந்த இருட்டு கடையில் நின்று, கூட்டதோடு கூட்டமாக முட்டி மோதி, அல்வாவை வாங்கி நின்றபடியே அதை சுவை பார்த்து என மறக்க முடியாத தருணங்களாக தான் மாறிப் போனது அந்த கணங்கள்.
அதற்குள் அவளின் தோழிகள் வந்து விட்டதாய் தகவல் தர, அந்த நட்சத்திர உணவகத்திற்கு விரைந்தனர். கிட்டதட்ட பதினைந்து பேர். பள்ளிகால இளமை நினைவுகள். கேட்கவும் வேண்டுமா அவர்களின் பேச்சு சுவாரஸ்யத்திற்கு. கலகலத்தபடி உண்டு முடிக்கவே மணி ஒன்பதாகிப் போனது. அதற்குள் ஐம்பது முறை அழைத்துவிட்டார் துளசி.
அவசர அவசரமாக விடைபெற்று கிளம்ப, “இருட்டுல நீ ஸ்பீடா போவ… கூடு நான் ஓட்டறேன்…” என்றபடி மிளிரிடமிருந்து தலைகவசத்தையும் சாவியையும் வாங்கிக் கொண்டாள் மகி.
பிரதான சாலையில் செல்லும் வரை பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. அதை கடந்து தங்கள் ஊருக்கு செல்லும் சாலையில் அவர்கள் செல்ல, கொஞ்ச கொஞ்சமாக ஆள் நடமாட்டமும் குறைய, ஒரு கட்டத்தில் லேசாக மழையும் தூர இப்போது சுத்தமாக ஜனசந்தடியே இல்லாத நிலமை. அப்போது தான் மிளிர் கவனித்தாள் நீண்ட நேரமாக தங்களை ஒரு வாகனம் பின்தொடர்வதை. அதை மகியிடமும் சொல்ல,
“இதே வழியா போறவங்களா இருக்கும்… மழையினு ஸ்லோவா போறாங்களோ என்னவோ…”
“வரது தள்ளு வண்டி பாரு… மழைக்கு பயந்து உன் பின்னாடியே வர…” என மிளிர் கழுத்தை நொடிக்க,
திரும்பி பார்த்த மகிக்கு உள்ளம் பதற வண்டியின் வேகத்தை கூட்டினாள். “ஏய் ஸ்லோவா போடி… இருட்டுல ஏன் இவ்வளவு ஸ்பீடா போற… இந்த ரூட்ல எந்த வண்டி வந்தாலும் தெரியாது… பவர்கட் வேற போல… ஏய் உன்னதான்டி பொறுமையா போ…” என மிளிர் கத்திக் கொண்டிக்க, வண்டியின் வேகம் கூடியதே தவிர குறையவில்லை.
“மிமி… பின்னால அந்த வண்டி வருதானு பாரு…” சின்ன பதற்றத்துடன் மகி சொல்லவும், இவளும் திரும்பி பார்க்க, இடித்துவிடும் இடைவெளியுடன் வந்துக் கொண்டிருந்தது அந்த மகிழுந்து.
“ஏய்… இடிக்கற மாதிரியே வருதுடி…” என மிளிர் சொல்லவும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அந்த மகிழுந்தை திரும்பி பார்த்தவள் முன்பைவிட வேகமாக தனது வண்டியை ஓட்ட தொடங்கியிருந்தாள்.
“ஏய்… ஏன் இவ்வளவு வேகமா போற… அந்த வண்டி நம்மள தான் ஃபாளோ பண்ணுதா… ஏதாவது பிரச்சனையா… மகி உன்னதான் ஏதாவது சொல்லி தொலைடி…” மிளிர் கத்தி கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அதி வேகத்துடன் எதிரில் வந்த லாரி அவர்களின் மீது மோதியது.
முகப்பு விளக்குகளை எரியாததாலும் மின்சாரம் இல்லாததாலும் மனதிலிருந்த பதற்றத்தாலும் அந்த லாரி மிக அருகில் வரும் வரை அதை கவனிக்க முடியவில்லை மகியால். கண்டுக் கொண்டதும் வேகத்தை குறைக்க முயல, அதற்குள் அந்த லாரி அவர்களின் மீது மோதி இருந்தது.
மோதிய வேகத்தில் மிளிர் ஒரு பக்கம் தூக்கி எறியபட, மகி அந்த லாரியின் முன்கண்ணாடியில் மோதி வேகமாக கீழே விழுந்தாள். அவளின் உடலில் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டு ரத்தம் பெருகிக் கொண்டிருக்க, மகி மயக்கத்திற்கு சென்றிருத்தாள். மிளிர் விழுந்தது ஒரு ரோட்டோர புதரின் மீதுதான். வலது காலின் எழும்பு முறிந்திருக்க, அங்கங்கு சில முட்கள் கிழித்து ரத்தம் பெருகிக் கொண்டிருக்க, அதை தவிர்த்து பெரிதாக அடி என்று எதுவுமில்லை.
அதே நேரம் அந்த காரிலிருந்து இருவர் வேகமாக இறங்கி வந்து, மகியையும் மிளிரையும் சோதித்து உள்ளிருந்தவனுக்கு ஏதோ சைகை செய்ய, காரின் ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கி வந்த அவனும் தலை அசைத்துவிட்டு யாருக்கோ போன் செய்தான்.
“சார் அந்த பொண்ணோட இன்னோரு பொண்ணு இருந்துச்சு சார்… இரண்டையும் சேத்து அடிச்சு தூக்கிட்டோம்… ஆனா உசுரு இன்னும் இருக்கு…” என யாருக்கோ தகவல் சொல்ல, எதிரிலிருந்தவன் என்ன சொன்னானோ, “ஹான் சரி சார்… இரண்டையும் முடிச்சடறோம்… போன் இங்கதான் இருக்கும் தேடி எடுத்துட்டு வரட்டுமா..?” என கேட்க, மீண்டும் சில நொடி மௌனம்.
“ஓ.கே சார்… ஓ.கே சார்… கச்சிதமா முடிச்சடறோம்…” என்று பேசி முடித்து போனை வைத்தவன் மற்ற இருவருக்கும் கண்ணை காட்ட, ஒருவன் மகியிடமும் மற்றவன் மிளிரிடமும் சென்றான்.
மிளிருக்கு சுயநினைவு இன்னும் இருந்ததால் நடக்கப் போகும் விபரீதம் ஒரளவுக்கு புரிந்தது. ஆனால், அது ஏன் நடக்கிறது என்ற காரணம்தான் புரியவில்லை. அதற்குள் அந்த ஒருவன் மிளிரை நெருங்கி இருக்க, எழுந்து ஓட முயன்றாலும் அவளின் உடைந்த கால் ஒத்துழைக்கவில்லை.
வந்தவனோ மிளிரின் முடியை பற்றி அருகிலிருந்த போஸ் கம்பத்தினை நோக்கி இழுத்துச் செல்ல, அவனிடம் போராடவும் தெம்பில்லை அவளுக்கு. அவனின் இழுப்புக்கு இவள் இசைந்து செல்ல, முடிந்த மட்டும் வேகமாக இழுத்துச் சென்றவன் அந்த மின்சார கம்பத்தில் அவளின் தலையை தொடர்ந்து மோத, இன்னும் சில நிமிடங்களில் இறந்து போவோம் என்பது புரிந்தது மிளிரிக்கு. ஆனாலும், முயன்று கண்ணை திறந்து வைத்து இமைக்காது மகியைதான் பார்த்திருந்தாள்.
அதற்குள் மற்றொருவனோ தாங்கள் வந்த காரிலிருந்து தேடி ஒரு உருட்டு கட்டையை எடுத்துக் கொண்டு மகியை நெருங்கி இருந்தான். ஓட்டுனர் இருக்கையிலிருந்தவனோ அதற்குள் அவர்களின் கைப்பையிலிருந்து தேடி இருவரின் போனையும் எடுத்திருந்தான்…
அதே சமயம் தூரத்தில் பைக் ஒன்றின் ஹாரன் சத்தம் கேட்க, அந்த மூவருக்கும் பதற்றம் கூடிப்போனது. “யாரவது பாத்தா பிரச்சனை… சீக்கரம் வண்டியில ஏறுங்கடா…” என அவன் மற்ற இருவருக்கும் சொல்ல, அவர்கள் வேகமாய் வந்து வண்டியில் ஏறிக் கொண்டனர். அவனோ கைப்பேசிகளை கார் டையரின் அடியில் வைத்துவிட்டு… அந்த லாரிக்காரனுக்கு கண்ணை காட்டிவிட்டு வேகமாக ஏறி காரை கிளப்பிக் கொண்டு முன்னே செல்ல, அந்த லாரியும் அவர்களை தொடர்ந்து சென்றது.
அது சென்ற சில நொடிகளிலேயே அந்த பைக் அவர்களை நெருங்கி இருந்தது. இதெல்லாம் சில நிமிடங்களுக்குள் நடந்த நிகழ்வு தான் என்றாலும் பல யுகங்களை கடந்த உணர்வு மிளிரிடம். நிச்சயம் தான் பிழைக்க போவதில்லை என்பதை அவளாலும் உணர முடிந்தது. அந்த நிலையிலும் மகியை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்த தான் செய்தது. மகி பிழைத்துக் கொள்வாள் என்ற நிம்மதியிலேயே மெல்ல விழிகள் சொறுக மயக்கத்திற்கு சென்றுக் கொண்டிருந்தாள் அவள்.
அப்போது தான் பைக்கில் வந்த அக்னி மகியை பார்த்துவிட்டு மிளிரிடம் வந்திருந்தான். “ஹலோ… ஹலோ… இங்க பாருங்க… நான் பேசறது கேக்குதா… ஹலோ மேடம்…” மெல்ல மிளிரின் கன்னத்தை தட்டி சுயநிறைவிற்கு கொண்டுவர முயல, அந்த குரல், ஆண்டாண்டுகளாக அவளை மயக்கத்தில் ஆழ்த்திய குரல் ஆயிற்றே! ஒரே ஒரு முறையாவது அவனை நேரில் கண்டு தன் கண்களில் நிரப்பிக் கொள்ளும் ஆவளில் முயன்று கண்களை திறந்திருந்தாள் மிளிர்.
எதிரே நின்றவன் சந்தேகத்திற்கு இடமேயின்றி அவனேதான். எவரின் குரல் கேட்டே அவள் காதலில் விழுந்தாளோ..? எவனின் புகைப்படம் பார்த்தே நித்தம் தன் காதலை வளர்த்தாளோ அவனே தான். ‘இன்னும் எத்தனை நொடி அவனை காண முடியுமோ..?’ இந்த எண்ணம் தோன்ற, உயிரோடிருக்கும் கடைசி நொடி வரை அவனை கண்ணில் நிரப்பிக் கொள்ளும் ஆவலில் முயன்று விழிகளை திறந்து வைத்திருந்தாள்.
இருவருக்கும் உயிர் இருக்கிறது என்பதை உணர்ந்த அக்னி ஆம்புலன்ஸுக்கு போன் செய்ய நகர, அவன் கையை இறுக பற்றி இருந்தாள் மிளிர். அதை விலக்க மனமில்லாதலன் அங்கிருந்தே பேசி முடித்து, அவள் கைப்பற்றியபடியே காத்திருந்து ஆம்புலன்ஸில் ஏற்ற, அதுவரையுமே இமைக்காது அவனை தான் பார்த்திருந்தாள் மிளிர். அந்த பார்வைதான் அவனுள் ஆயிரமாயிரய் மாற்றங்களை கொண்டு வந்து அவள் மேல் அவனை காதல் கொள்ள செய்தது.
ஆம்புலன்ஸில் ஏற்றிய பிறகு முதலுதவி ஆரம்பித்து மயக்க மருந்து கொடுக்க, அப்போதும் அவள் கஷ்டபட்டு அவனை பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரம் தான் அக்னி “நானிருக்கிறேன்…” என்பதைப் போல மெல்ல அவள் கையில் அழுத்தி கொடுத்தான். அது தந்த நிம்மதியில் மெல்ல மெல்ல கண்களை மூடி ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றிருந்தாள் மிளிர்.
எத்தனை நொடிகளோ அல்லது எத்தனை நிமிடங்களோ அல்லது எத்தனை மணி நேரங்களோ அல்லது எத்தனை ஆண்டுகளோ அல்லது எத்தனை எத்தனை யுகங்கள் தான் கடந்ததோ தெரியவில்லை. மீண்டும் மிளிர் கண் விழித்த போது அவளின் எதிரே இருந்தாள் அவள். அவளின் உடல் ஒரு படுக்கையில் கிடத்தபட்டிருக்க, அதை சுற்றி மருத்துவர்களும் செவிலியர்களும் நின்று பரபரப்பாய் ஏதோ செய்துக் கொண்டிருந்தனர். இரண்டடி தொலைவிருந்து அதை பார்த்தபடி நின்றிருந்தாள் அவள். ஆம், உயிர் பிரிந்த அவளின் வெறும் கூட்டை தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள்.
உடலில் வலி என்பது துளியும் இல்லை. காற்றில் மிதப்பதைப் போன்ற லேசான உணர்வு. அத்தனை சாந்தம் மனதில். அதற்குள் மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மறுப்பாய் தலையசைத்துக் கொண்டு, அணிந்திருந்த கையுறைகளை கழட்டியபடியே வெளியே வர, வெளியே நாதர் வசுவுடன் இனியனும் நின்றிருந்தான். அவர்களை பார்த்தவுடன் அவளின் நினைவுக்கு வந்ததெல்லாம் மகி மட்டுமே.
காற்றில் அலைந்தாடிய ஆன்மா அடுத்து மகியை தேடிதான் சென்றது. கண்ணாடி கதவை தான்டி உள்ளே செல்வது அத்தனை ஒன்றும் கடினமாய் இல்லை அவளுக்கு. ஆனால், அங்கே அவள் கண்ட காட்சி. காயம் ஏற்பட்டிருந்த இடங்களில் எல்லாம் கட்டு போடப்பட்டிருக்க மகியின் இதயம் மிக சீராக துடித்துக் கொண்டிருப்பதாக அருகிலிருந்த கருவிக் காட்டியது. அதே சமயம் ஒரு ஊசியுடன் மருத்துவ உடையும் முக கவசமும் அணிந்த ஒருவன் மகியை நெருங்கி அந்த மருந்தை அவளில் செலுத்த, கைகளும் காலும் வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பித்தது. சட்டென்று ஒருவன் மகியின் இடது கையை அழுந்த பற்றிக் கொண்டான். ஆனால், அவனோ ஏதோ ஒரு மருந்தை நரம்பின் வழியே மகிக்கு செலுத்திக் கொண்டிருந்தான்.
துடித்து கதறி அவனை தடுக்க நினைத்து அவனிடம் சென்றவள் என்ன செய்தும் எந்த பயனும் இல்லை. தூரமாய் அவனை பிடித்து தள்ள முயன்றால் இவள் தான் தூரமாய் போய் விழுகிறாள். அவளின் எந்த செய்கைக்கும் அவனிடம் பாதிப்பு இல்லை. அவனின் காலை பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறாள் மகியை விட்டுவிடும்படி. ஆனால், அதெல்லாம் அவனின் காதில் விழுந்ததை போலவே தெரியவில்லை. ஏன் அவளை அங்கிருந்த யாருமே உணரவில்லை. நிமிர்ந்து அவனை பார்க்கிறாள். பளபளக்கும் அவனின் பச்சை நிற விழிகளில் தெரிவது எல்லாம் கொலைவெறி மட்டுமே!
இமைக்காது அவனையே அவனின் விழியையே பார்த்திருக்கிறாள். என்ன செய்வதென்று ஒன்றும் புரியாத நிலை. அப்படி ஒருத்தி அங்கே இருப்பதை ஒருவருமே உணரவில்லை என்பது மட்டும் புரிகிறது. மகியை காக்க இந்த உயிர் மட்டும் போதாது. உடலும் தேவை. ஆம், இந்த உயிர் உடலோடு சேய்ந்தாலன்றி வேறு வழியில்லை என்பது புரிகிறது.
வேகமாய் தனது உடலை நோக்கி ஓடியவள், அந்த உடலினுள் உயிரை செலுத்த முயல, முடியவில்லை. அந்த உடல் உயிரை ஏற்க மறுக்கிறது. விடாமல் அவளும் மீண்டும் மீண்டும் முயல்கிறாள் முடியவில்லை. அப்போதுதான் அனைத்து கருவிகளையும் அகற்றிக் கொண்டிருந்தாள் செவிலிப் பெண் ஒருத்தி. விட்டுவிட்டு மிக மெல்லியதாக மேலெழுந்த நாடிதுடிப்பை கண்டுவிட்டு பதறி மருத்துவர்களை அழைத்து வருகிறாள். அடுத்த பத்து நிமிட அவளின் கடின போராட்டத்திலும் மருத்துவர்களின் முயற்சியிலும் உயிர் உடலில் உறைகிறது. இதயதுடிப்பு சீராகிறது. அவள் வாழ வேண்டும் என்பது தான் விதிப் போல.
“மகிம்மா…” என்று கதறியபடியே பதறி எழுந்தவளை தாவி அணைத்துக் கொள்கிறான் அக்னி. அதுவரை மனதில் மேலெழுந்த எண்ணக்களுக்கு ஏற்ப மிளிரின் உடல் பதறி துடித்துக் கொண்டிருக்க, அவளின் கைப்பற்றியபடியே அருகில் தான் அமர்ந்திருந்தான் அவன். அவள் கதறி எழவும் பதறி அணைத்துக் கொண்டான். காலையில் மயங்கி விழுந்தவள் மாலை நான்கு மணிக்கு தான் எழுகிறாள்.
“மகி… மகி…” என அவன் நெஞ்சில் புதைந்து அழுதவளை, “ஒன்னுமில்லைடா… என்ன பாரு… உனக்கு ஒன்னுமில்லை… என்னை பாருடா…” என தேற்ற முயன்று தோற்றுக் கொண்டிருந்தான் அக்னி.
– தேடல் தொடரும்…

