Loading

தேடல் 16:

 

மிளிரின் தேம்பல் பெரும் அழுகையாக மாறிட, செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர் ஶ்ரீயும் கவியும்.

 

“அடியே… இப்படியே அழுது ஒப்பாரி வச்சா… மகி வந்திடுவாளா..? ஏந்திரி மூஞ்ச கழுவு முதல… இப்படியே மூளையில உக்காந்து மூக்க சிந்திட்டா ஆச்சா… வா நாம போய் தேடலாம்…” என கவி ஒரு அதட்டல் போடவும் தான் கொஞ்சமாய் மட்டுப்பட்டது மிளிரின் அழுகை.

 

“நாம எங்க போய் தேடறது கவி… அவதான் எங்க போறேனு எதுவும்  சொல்லிட்டு போகலையே… அதான் தவசீலன் சாரே தேடறேனு சொல்லி இருக்காங்களே…” என்றாள் ஶ்ரீ.

 

“அவ சேனலுக்கு போன் பண்ணி கேட்டா எங்க போய் இருக்கானு  சொல்லிட்டு போறாங்க… அவர் தேடுனா நாம தேட கூடாதுனு ஏதாவது இருக்கா என்ன… நீ இங்கையே இரு… மகி வந்தா எங்களுக்கு போன் பண்ணு… நானும் மிளிரும் போய் முதல போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கறோம்… போன் வேற ஸ்வீட்ச் ஆப்னு வருது… எனக்கு என்னமோ தப்பா படுது…” என்றாள் கவி.

 

“ஐய்யையோ… போலீஸ் கம்ப்ளைண்ட் எல்லாம் எதுக்குடி… அவளுக்கு எதுவும் ஆகியிருக்காது…” போலீஸ் என்றதும் இன்னும் பதற்றம் கூடிப் போனது ஶ்ரீக்கு. அதே மிரட்சி மிளிரின் கண்களிலும் தெரிய,

 

“நான் மட்டும் இப்ப அவளுக்கு ஏதாவது ஆகி இருக்குமுனா சொல்லறேன்… ஜெஸ்ட் ஒரு சேப்டிக்கு தான் போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கலானு சொல்லறேன்… அதுவும் எனக்கு தெரிஞ்ச ஒரு கான்ஸ்டபிள் இருக்காரு… அவர்கிட்ட சொல்லலாம்… இது ஜெஸ்ட் ஒரு பார்மாலிட்டி தான்… மகிய தேட அவங்க நமக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாங்க…” என்றாள் கவி இருவருக்கும் விளக்கும் விதத்தில்.

 

“ஆமான்… ஆமான்… அவங்க நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க… நாம சீக்கரமே மகிய கண்டுபுடிச்சுடலாம் தானே… வா இப்பவே போகலாம்…” என வேகமாக எழுந்து கவியின் கைப்பற்றி பரபரத்தவளை பிடித்து நிறுத்தினாள் கவி.

 

“எது இப்படியேவா… நீ முதல போய் மூஞ்ச கழுவிட்டு வா… நாம போகலாம்… ஶ்ரீ இங்கையே இருக்கட்டும்… மகி இங்க வந்தா நமக்கு இன்ஃபார்ம் பண்ணுவா… போ… முதல பிரஸ் ஆகிட்டு வா…” என சொல்லிக் முடிக்கும் முன்னே குளியலறைக்குள் புகுந்திருந்தாள் மிளிர்.

 

அடுத்த சில நொடிகளிலேயே முகம் கழுவி வெளியே வந்தவள், தனது கைப்பையையும் எடுத்துக் கொண்டே, “உனக்கு அந்த கான்ஸ்டபிள தெரியும்னா இப்பவே போன் பண்ணி சொல்லிடறீயா… தேட ஆரம்பிச்சுடுவாங்க இல்ல… நாம வேணா போட்டாவ வாட்ஸ்அப்ல அனுப்பிடலாம்…” என்றாள் குறையாத பரபரப்போடு.

 

“கான்ஸ்டபிளுக்கு எதுக்கு போன் பண்ணனும்… யார் போட்டோவ வாட்ஸ்அப் பண்ண போறீங்க…” தீடிரென கேட்ட குரலில் அவளுக்கு அத்தனை நிமிடமும் இருந்த பயமும் பதற்றமும் ஒருங்கே ஓடி மறைந்தன. ஒரு நிம்மதி ஆசுவாச பெருமூச்சு அவளை அறியாமல் வெளிப்பட்டது.

 

“உங்கள தான் கேக்கறேன்…  ஆமான் எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க… எதுக்கு போலீஸ்க்கு…ஏய் நான் வர கொஞ்சம் லேட் ஆனதும் காணப் போய்ட்டேனே முடிவு பண்ணிட்டீங்களா..?” கேட்டபடியே பரபரப்பாக எங்கோ கிளம்ப தயாராக நின்றிருந்த மூவரையும் தான் பார்த்திருந்தாள் மகி. அதை எதையும் காதில் வாங்காதவளாக அடுத்த நொடி பாய்ந்து அவளை இறுக கட்டிக் கொண்டவளின் விழிகள் கண்ணீரை உகுத்தது.

 

அடுத்த இரண்டு நிமிடம் மிளிரின் அழுகையிலேயே கரைய, முழுதாக தனது தோழியை ஆராய்ந்தவள் அவளுக்கு ஒன்றுமில்லை என அறிந்ததும் இப்போது அவளை முறைக்க தொடங்கி இருந்தாள்.

 

“உனக்கு அறிவில்ல…  சோத்த தான திங்கற எரும மாடு… வர லேட் ஆகுனு ஒரு போன் பண்ணி சொல்ல என்ன கேடு உனக்கு… அட்டிலிஸ்ட் எங்க போய் இருக்கனு சொல்லிட்டாவது போகலாம் இல்ல… தண்ட கருமாந்தரம்… நீயெல்லாம் என்ன ரிப்போர்ட்டர்… தலைபாடா அடிச்சுக்கிட்டேன்… இந்த பீல்ட் உனக்கு வேண்டா வேண்டானு… இப்போ எங்க போனாலும் திக்திக்னு இருக்கு எனக்கு… இதுல நீ சொன்ன நேரத்துக்கு வரல, போனும் ஸ்வீட்ச் ஆப்னா என்ன நினைக்க நானு…” மிளிர் திட்டிக் கொண்டே போக, காதுகள் இரண்டையும் கைக்கொண்டு மறைத்துக் கொண்டு அப்பாவியாய் முகத்தை வைத்து மிளிரைப் பார்த்திருந்தாள் மகி.

 

“ஸ்ஸ்ஸ்… ஹப்பா… செம பசியில இருக்க போல… அதான் என்ன கடிச்சு குதற பாக்கற… நான் போய் முதல உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்… அப்போதான் கத்தறத நிறுத்துவ நீ…” என்று நகர்ந்தவளை இழுத்து நிறுத்தினாள் மிளிர்.

 

“அடிங்க… ஆக்டிங்க போடாத… எங்க போன நீ… ஏன் இவ்வளவு லேட்டு… உன் போனுக்கு என்னாச்சு… அத சொல்லு முத…”

 

“இல்ல உன் முகத்த பாத்தாலே தெரியுது சாப்பிடலைனு… உன்னால பசி தாங்க முடியாது இல்ல… நான் போய் முதல உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்…”

 

“ஒருவேள சாப்பிடலைனா யாரும் செத்திட மாட்டாங்க… உன் மூஞ்சே சரியில்ல… ஏதாவது பிரச்சனையா… சொல்லு எரும முதல…”

 

“ஏய் யாருமே இன்னும் சாப்பிடல… மாவு இருக்கு… நான் போய் தோசை ஊத்தறேன்… நீ முதல எங்க போனனு சொல்லு… இல்ல உன்னோட சேத்து எங்களையும் கடிச்சு குதறிடுவா…” என்றபடியே உள்ளே சென்றிருந்தாள் ஶ்ரீ.

 

“அதான் சாப்பாடு செய்ய ஆள் போயாச்சு இல்ல… இப்போ சொல்லு எங்க போன… ஏன் இவ்வளவு லேட்… போன ஏன் எடுக்கல…” என மிரட்டலாய் முறைத்துக் கொண்டே மிளிர் வினவ, மெல்லிதாய் புன்னகை அரும்பியது மகியினிடத்தில்.

 

“அது என்ன ஆச்சுனா… காலையில நான் இன்டர்வியூ எடுக்க கிளம்பி போனேனா… வழியில ஒரு ஆட்டோ குறுக்க வந்துச்சா… சடன் பிரேக் போட்டேனா… அதுல வண்டி குலுங்கி நின்னுச்சா…” என தீவிர பாவனையில் மகி விழிகளிலும் விரல்களிலும் அபிநயம் பிடித்தபடியே சொல்லிக்கொண்டே போக,

 

“ஏன் லேட்…” என பல்லை கடித்துக் கொண்டே கேட்டாள் மிளிர். அதில் நீ அதற்கு மட்டும் பதில் சொன்னால் போதும் என்ற தோனி இருந்தது.

 

“அதான் சொல்லறேன்… நீ கேக்க மாட்டற… நான் இன்டர்வியூ எடுக்க போனேனா… அப்போ வழியில ஒரு…”

 

“ஸ்ஸ்ஸ்… வாய தொறந்த கொன்னு போட்டுடுவேன்… ஏன் லேட்டுனு இரண்டே வரியில சொல்லு…”

 

“அதான்டி அந்த ஆட்டோ…”

 

“அடியே… நான் என்ன கேக்கறேன்… நீ என்ன சொல்லிட்டு இருக்க…” என்றபடியே மகியின் முதுகில் இரண்டு அடியை வைக்க, முதுகை தேய்த்தபடியே பாவமாய் மிளிரை பார்த்தாள் மகி. இவர்களின் வார்த்தை வாதத்தைக் கேட்டு மற்ற இருவரும் மௌனமாய் புன்னகையை தவழவிட்டபடி நின்றிருந்தனர். மகியின் இலகுவான பேச்சு பிரச்சனை எதுவுமில்லை என்று மற்றவர்களை நம்ப வைத்திருந்தது.

 

முதுகை தேய்த்தபடியே, “சொல்ல விடுடி என்ன… அந்த ஆட்டோ குறுக்க வந்ததால…” என மீண்டும் மகி ஆரம்பிக்க, மிளிர் அவளை முறைக்க, அவள் கண்களால் இறைஞ்ச, ‘சொல்லும்… சொல்லி தொலையும்…’ என்ற பாவனையில் கைகட்டி அமர்ந்திருந்தாள்.

 

“அதாவது நான் போகும் போது ஆட்டோ ஒன்னு குறுக்க வந்துச்சா… நான் சடன் பிரேக் போட்டேனா… வண்டி குலுங்கி நின்றுச்சா… நான்கூட இந்த இத்துப்போன டப்பா வண்டி பிரேக் போட்டதால தான் குலுங்குதுனு பாத்தா… பின்னாடி வந்த கார்காரன் இடிச்சுட்டான்… அப்புறம் என்ன நான் ஆட்டோகாரன் கார்காரனு மாத்தி மாத்தி பேச… பஞ்சாயத்தாகி போச்சு… ஒரு வழியா அந்த பஞ்சாயத்த பைசல் பண்ணிட்டு போனா… மணி ஒன்னு… நான் இன்டர்வியூ எடுக்க அவரு வீட்டுக்கு தான் போறதா இருந்துச்சு… ஆனா லேட்டா போனதால அவரு கிளம்பிட்டாரு போல… அப்புறம் அவரு ஆபிஸுக்கு போய்… இரண்டு மணி நேரம் வெயிட் பண்ணி இன்டர்வியூவ முடிச்சுட்டு… அத சீலனுக்கு மெயில் பண்ணிட்டு… அடிச்சு புடிச்சு வந்தா மணி ஆறாகிட்டு… நான் என்ன பண்ணட்டும் சொல்லேன்…” நீண்டதாய் ஒரு விளக்கத்தை கொடுத்துவிட்டு, அருகிலிருந்த குளிர்ந்த நீரை எடுத்துப் பருகினாள்.

 

“போனுக்கு என்ன கேடு வந்துச்சு…” பல்லைக் கடித்துக் கொண்டு மிளிர் கேட்க, “செத்து போச்சு… சார்ச் போட்ட நீ… ஸ்விட்ச் போட மறந்துட்டியேம்மா…” என்றவள் தவறு உன்மீது தான் என தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

 

“இல்லையே… நான் ஸ்விட்ச் போட்ட மாதிரி தான் எனக்கு நியாபகம் இருக்கு… சரி வேற யார்கிட்டையாது போன் வாங்கி பண்ண வேண்டியது தான… உன் ஆளுக்கு மட்டும் மெயில் அனுப்பி இருக்க…” முறைத்துக் கொண்டே மிளிர் வினவ,

 

“அம்மா தாயே… உன் போனும்தான் செத்து போயிருக்கு… எத்தன தடவ ட்ரை பண்ணறது… எனக்கு வேற யார் நம்பரும் மனப்பாடமா தெரியாது… அதான்… ஆனா அதுக்குள்ள போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க கிளம்பறதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்டி…”

 

“ஏன் சொல்ல மாட்டா… நாங்க எவ்வளவு பயந்து போய்டோனு எங்களுக்கு தான் தெரியும்…” மிளிர் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க,

 

“ஹாலோ… உங்க பஞ்சாயத்து முடிஞ்சுட்டுனா… சாப்பிட வரீங்களா… சாப்பாடு ரெடியாகிட்டு…” என ஶ்ரீ அழைக்கவும் தான், இத்தனை நேரம் மறந்திருந்த பசி மிளிரின் நினைவுக்கு வந்திருந்தது.

 

அடுத்த நொடி நால்வரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்க, கலகலத்தபடியே உண்டு முடித்தனர்.

 

“நீ கொஞ்ச நேரம் தூங்கிட்டு எழுந்து கிளம்பு… ரொம்ப டல்லா இருக்க… எட்டரை பஸ்ல டிக்கெட் போட்டுட்டேன்… கிளம்பனும்…” என்றவள் தனது மடிகணினியை திறந்து வைத்து அமர்ந்து விட்டாள்.

 

“இல்ல நீதான் என்னவிட ரொம்ப டல்லா இருக்க… நீயும் தூங்கு… வா…” என மகியின் கைப்பற்றி மிளிர் இழுக்க, “இல்லடா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நீதான பஸ்ல தூங்க மாட்ட… நீ தூங்கு… நான் பஸ்ல தூங்கிக்கறேன்…” என்றுவிட,  மகியின் மடியில் இருந்த கணினியை எடுத்து வைத்துவிட்டு அவளின் மடியிலிலேயே படித்து இடுப்பை கட்டிக் கொண்டு உறங்கியேப் போனாள் மிளிர். இத்தனை நேரம் அலைப்புற்ற மனம் அமைதியை நாடி உறக்கத்தில் ஆழ்ந்தது.

 

மிளிர் உறங்கவும் இத்தனை நேரம் சலனமின்றி இருந்த மகியின் முகத்தில் சிந்தனை கோடுகளும் வேதனையின் சாயலும் அப்பட்டமாய் தெரிய… விழி மீற துடித்த நீரை சட்டென்று உள்ளிழுத்துக் கொண்டாள். அதையும் மீறி இரண்டு சொட்டு கன்னத்தில் வழிந்தோடியது.

 

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை எழுப்புவதற்குள் படாதபாடு பட்டுப் போனாள் மகி. “அடியே உன்ன போய் தூங்குனு சொன்னேன் பாரு… என் புத்தியில கொள்ளி கட்டைய தான் வைக்கனும்… ஏந்திரிச்சு தொலடி… இரண்டு மம்மிஸூம் மாறி மாறி காலிங்…” என மிளிரை உலுக்கிக் கொண்டிருந்தாள் மகி.

 

“ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்… என் பட்டுக்குட்டி இல்ல… இன்னும் ஐஞ்சே நிமிஷம்… ப்ளீஸ்…” என்றபடியே இன்னும் வாகாக இடையைக் கட்டிக் கொண்டு உறங்க முயன்றாள் மிளிர்.

 

“மிமி… எனக்கு கால் மறத்துப் போச்சுடா… வலிக்குது… கிளம்பனும் வேற… ஏந்திரிடா…” சின்னபிள்ளையை கொஞ்சி கெஞ்சி எழுப்புவதுப் போல மகிக் கெஞ்சிக் கொண்டிருக்க,

 

“இந்த கும்பகர்ணிய போய் கொஞ்சிட்டு இருக்க… இப்படியெல்லாம் பண்ணா எழுந்துடுவாளா இவ…” என்றபடியே அருகில் ஜக்கில் இருந்த தண்ணீர் முழுவதையும் மிளிரின் தலையில் கொட்டி கவிழ்திருந்தாள் கவி.

 

அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவள், மிரள மிரள விழித்து வைத்தாள். அவளின் நிலைக்கண்டு மற்ற இருவரும் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க, இப்போது விழிகளை உருட்டி உருட்டி இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள் மிளிர். அதை கண்டும் கவி இன்னும் அடங்கமாட்டாமல் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க, இப்போது அருகில் இருந்த ஜக்கை எடுத்து கவியின் மீது தூக்கி எறிய, அதை லவாகமாக பிடித்தவள், “இதைய குறி பார்த்து எரிய முடியல… நீ எங்க உன் ஆள பொறி வச்சு புடிக்க போற…” என கேலி செய்து கவி மீண்டும் சிரிக்க, மிளிர் அவளை அடிக்க பாய, அவள் ஓட, இவள் துரத்த, இடையில் மிக தீவிரமாக ஆந்தை கண்ணனிடம் கடலை வறுத்துக் கொண்டிருந்த ஶ்ரீயையும் உருட்டி தள்ளிவிட்டு இருவரும் ஓட, இப்போது அவர்கள் இருவரையும் ஶ்ரீ துரத்த, ‘ஸ்ஸ்ஸ்… ஹப்பா முடியல என்னால…’

 

மிளிர் கவியை துரத்த, அவர்கள் இருவரையும் ஶ்ரீ துரத்த, ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் பிடித்து, அடித்து, கடித்து, உருண்டுக் கொண்டிருக்க, அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் மகி. அதே நேரம் மகியின் கைப்பேசி அழைக்க, எடுத்து பேசிவிட்டு வேகமாக அவர்களிடம் வந்தவள் மூவரையும் பிரிப்பதற்குள் படாதபாடு பட்டு போனாள்.

 

“ஸ்ஸ்ஸ்… நிறுத்துங்க மூணு பேரும்… வசு டார்லிங் காலிங்… கிளம்பிட்டீங்களானு கேக்கறாங்க… பேசனுமாம் எழுந்திரி முதல…” என மூவரையும் பிரித்து மிளிரை தனியே இழுத்து நிறுத்தி கையில் போனை திணித்தாள் மகி.

 

“ஹலோ… வசு பேபி…” என ஆர்பாட்டமாக மிளிர் ஆரம்பிக்க,

 

“இது என்ன தலையில அடிச்ச மாதிரி அம்மா பேர சொல்லி கூப்பிடற… கல்யாணம் ஆகியிருந்தா இரண்டு புள்ள பெத்து இருப்பா… வந்துட்டா இப்ப தான் பேபி… கிபினிட்டு…” படபடவென்று பட்டாசாய் எதிர் முனையில் இருந்தவர் பொறிய, “ஐய்யோ ஹிட்லர் மம்மி…” என தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்துவிட்டாள் மிளிர்.

 

“என்ன சொன்ன இப்போ… என்ன பாத்தா ஹிட்லர் மாதிரி தெரியுதா உனக்கு…” என்றார் துளசி.

 

“ஐய்யையோ… அம்மா… உன்ன போய் ஹிட்லர் சொல்லுவேனா… அதுவும் நானு… யூ ஆர் மை ஸ்விட் குலோப்ஜாமுன் செல்லம்…”

 

“ஐஸ் வைச்சது போதும்… மதியமே கிளம்பறோனு தானே சொன்னீங்க… இன்னும் கிளம்பாம என்ன பண்ணறீங்க அங்க…”

 

“நான் இல்லம்மா… இந்த மகிதான்… ஏதோ வேலையினு போனவ… எட்டு மணிக்குதான் திரும்பி வந்தா… இதோ நாங்க கிளம்பி வாசல் வரைக்கும் வந்துட்டோம்… நீங்க போன வச்சதும் செறுப்ப மாட்டிட்டு  கிளம்ப வேண்டியது தான்…” என கொலுத்தி போடும் வேலையை செவ்வனே முடித்திருந்தாள் மிளிர்.

 

“நீ வைடி கூறுகொட்டவளே… அப்போதான் நாங்க கிளம்ப முடியுமுனு சொல்லற… அப்படிதானே…” என அவர் முறைப்பும் விரைப்புமாக சொல்வது இங்கே காட்சியாக எதிரில் உருவாகி மிளிரை மிரட்டியது.

 

நாதர், வசு, மகியின் தந்தை சிவம் மூவருமே பிள்ளைகளிடம் அதிக செல்லம் காட்ட, கண்டிப்பவர் மகியின் அன்னை துளசி மட்டுமே. மற்ற மூவருக்கும் சேர்த்து அவர் அதிக கண்டிப்பை காட்ட, அதுவும் கூட பாசமென்றே அறிந்திருந்தனர் பிள்ளைகள் மூவரும்.

 

“அச்சச்சோ… அம்மா நான் அப்படி சொல்லல…”

 

“ஸ்ஸ்ஸ்… வாய மூடு… நீ எப்படி நினைப்ப… நினைக்க மாட்டேனு எனக்கு தெரியும்… கல்யாணத்த வச்சுட்டு இன்னும் என்ன அங்க ஆட்டம் ரெண்டு பேருக்கும்… உங்கள ஒரு மாசத்துக்கு முன்னாடியே கிளம்பி வர சொன்னேனா இல்லையா… இப்போ பாரு கல்யாண நெருக்கத்துல வச்சுட்டு கேக்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியல எங்களால…”

 

“காலையில டான்னு உங்க கண்ணு முன்னால நிப்போம் இரண்டு பேரும்…”

 

“கிழிச்சிங்க… நாளைக்கு மறுநாள் பந்தகால் ஊன்றோம்… அதுக்கு அப்புறம் மகி வெளிய போகக்கூடாது… நாளைக்கு ஒருநாள் தான் டைம்… உன் ப்ரண்ட கூப்பிடறது பத்திரிக்கை வைக்கறது ஏதாவது வாங்கறதுனா நாளைக்கே முடிஞ்சுக்கனும் நீங்க… அவ்வளவு தான்… இங்க வந்து கெஞ்சிட்டு இருக்க கூடாது… சொல்லிட்டேன்…”

 

“சரிம்மா… சரிம்மா… பஸ்ஸூக்கு லேட் ஆகுதும்மா…”

 

“சரி… சரி… பாத்து பத்திரமா கிளம்பி வாங்க ரெண்டு பேரும்…” என்றவர் போனை வைத்துவிட, ‘ஹப்பாடா’ என்ற நிம்மதி உணர்வு மிளிருக்கு.

 

“என்ன இப்படியே உக்காந்து விட்டத்த பாக்க போறீயா… கிளம்பு சீக்கரம்… பஸ்ஸூக்கு லேட் ஆகிட்டு…” என்றபடியே வெளியே வந்த மகி ஊருக்கு கிளம்பி தயாராக வந்தாள்.

 

“என்ன ஹிட்லர் மம்மிட்ட மாட்டி விட்டுட்டு நீ கிளம்பிட்ட இல்ல… இருக்குடி உனக்கு…” என்றபடியே மிளிரும் தயாராவதற்காக சென்றுவிட, அடுத்த பதினைந்து நிமிடத்தில் இருவரும் பேருந்து நிலையத்தில் இருந்தனர். அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிலிருந்து பேருந்து நிலைத்திற்கு ஐந்துநிமிட பயண தூரம் தான்.

 

பேருந்து கிளம்ப இன்னும் பத்து நிமிடங்கள் இருக்க… மற்ற இருவரும் அவர்களை பேருந்து கிளம்பும் வரை இருந்து வழியனுப்பிவிட்டு, திருமணத்திற்கு முதல் நாளே வந்துவிடுவதாய் கூறிவிட்டு தான் கிளம்பினர்.

 

இளையராஜாவின் இசையை கசியவிட்டபடியே, மெல்லமாக பேருந்து வேகமெடுக்க, இரவு நேரம் என்பதால் சீக்கரமே அனைவரும் உறக்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டனர். பேருந்தில் உறக்கம் வராத மிளிர் கூட உறங்கிப் போயிருக்க, மகிக்கு மட்டும் அது உறங்காத இரவாகிப் போனது.  கண்ட காட்சியும் கொண்ட வேதனையும் மனதைவிட்டு அகல்வோனா என சண்டிதனம் செய்தது.

 

   – தேடல் தொடரும்…

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்