
தேடல் – 7
“மகிழினி யாரு இனியா..?” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, ஆழ்ந்து அவனைப் பார்த்தபடியே எவ்வித சலனமுமின்றி கையில் இருந்த தேநீரை மிடறு மிடறாய்ப் பருகிக் கொண்டிருந்தாள் அவள்.
அவளின் கேள்வியைக் கேட்டவனுக்குத் தான் மனதை பதற்றமும் பயமும் ஒன்றாய் சூழ, அது அவன் உடலிலும் மெல்லிய நடுக்கமாக வெளிப்பட்டது. அவனின் மாற்றத்தைத் தான் உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டிருந்தாள் அவள். அவனின் பதற்றமும் நொடியில் கலவரமாகி வெளிறிப் போன முகமும், நொடிக்கும் குறைவாக எதிர் வீட்டில் வேதனையோடு பதிந்து மீண்ட பார்வையும் சொன்னது விஷயம் பெரிதென்று.
நொடிகள் நிமிடங்களாய்க் கடந்து போன பின்பும், அவன் பதில் சொல்லாது இருப்பதைக் கண்டவள், “உன்னைத் தான் கேக்கறேன்… மகிழினி யாரு இனியா..?” என்றாள் மீண்டும் அழுத்தமாக அவனைக் கூர்ந்து பார்த்தபடி.
அவளின் இனியா என்ற அழுத்தமான அழைப்பே இவனுள் பயத்தைக் கூட்டியது. அவனை அவள் பெயர் சொல்லி அழைப்பதே அரிது தான். பெரும்பாலும் அந்த நேரத்தில் அவளுக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி அழைப்பாள். ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் தம்பி என்று குழைவாள். ஆனால் அவளின் இனியா என்ற அழுத்தமான அழைப்பில், கண்டிப்பாக எனக்கு நீ பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற மறைமுக கட்டளை இருப்பதாக தோன்றியது.
கொஞ்சம் தடுமாற்றத்துடன், “மகி அக்கா பத்தி உனக்கு எப்படித் தெரியும்..?” என்றான் அவன். ‘அவளுக்குப் பழைய நினைவுகள் திரும்பி இருக்குமோ..?’ என்ற எண்ணத்தில்.
அவனையே கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு, ‘மகி அக்கா’ என்ற அவனின் இயல்பான அழைப்பும் புரிந்தது. அதே சமயம் அவன் முகத்தில் ஒரு நொடி வந்து போன வேதனையின் சுவடையும் உணர முடிந்தது.
“எனக்குத் தெரிஞ்சா யாருனு நான் ஏன் உன்கிட்டக் கேட்கப் போறேன்..? தெரியலைனு தானே கேட்கறேன்…” என்றவள் குடித்து முடித்த குவளையைப் பிடி சுவரின் மீது வைத்துவிட்டு, அதில் சாய்ந்து நின்று கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டியபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்படினா இந்தப் பேரு உனக்கு எப்படித் தெரியும்..?” என்றான் இனியன் அவளுக்கு எதுவும் நினைவு வரவில்லை என்ற நிம்மதியோடு. ஆனால், அந்த நிம்மதி ஆண்டவனுக்கே பொறுக்க முடியவில்லைப் போலும்!
“இன்னைக்கு வீட்டுக்கு வர வழியில ஒரு பொண்ணப் பாத்தேன்… என் ஏஜ்தான் இருக்கும்… ஸ்கூல்ல என்கூடப் படிச்ச பொண்ணாம்… அவதான் மகிழினி எப்படி இருக்கானு எங்கிட்ட கேட்டா…” என்றாள் மிளிர்.
“ஓஓஓஓஓ…” என்றதோடு அவன் என்ன சொல்லாம் என யோசனையில் ஆழ்ந்துவிட,
“இங்க யாரும் உன்ன ஓஓஓனு ஒப்பாரி வைக்க சொல்லல… கேட்ட கேள்விக்கு ஒழுங்கா உண்மை சொல்லு… அத விட்டுட்டு நிலாவுக்கு ராக்கேட் விடற நாசா சைன்டிஸ்ட் ரேஞ்சுக்கு யோசிக்கற… ஏதாவது பொய் சொன்னேனு மட்டும் தெரிஞ்சது அதோட தொலைஞ்ச…” என்றாள் அவனைப் பார்த்து மிரட்டலாய் மிளிர்.
‘பொய் தான டக்குனு வராது…’ என எண்ணியவனாய், “அவங்க உன் கூடப் படிச்சவங்க… உன்னோட பெஸ்ட் ப்ரண்ட்… அதனால உன்கிட்டக் கேட்டு இருப்பாங்க… அவ்வளவு தான் விடு…” என்றான்.
கைப்பிடி சுவற்றைப் பிடித்தபடி திரும்பி எதிர் வீட்டைப் பார்த்தவள், “அந்த ப்ரண்டோட வீடு தானா இது..?” என்றாள் குரலில் எவ்வித மாற்றமும் கொண்டு வராமல்.
“உனக்கு எப்படித் தெரியும்..?” என்றான் அவன் ஆச்சரியமும் ஒரு வித பயமும் கலந்த குரலில்.
“சாக்க குற..! சாக்க குற..! நான் கேக்கும் போது நீ லைட்டா அந்த வீட்டத் திரும்பிப் பார்த்த… அதான் ஒரு கெஸ்ஸிங்…” என்றவள் இன்னும் அந்த வீட்டைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இல்ல நான் சாதாரணமா அங்க பாத்தேன்… அவ்வளவு தான்…” என்றவனுக்குத் தன் தமக்கை அதை நம்ப வேண்டுமே என்ற எண்ணமும் சேர்ந்தே எழுந்தது.
“அப்படியா நம்பிட்டேன்… அது சரி அந்த மகிழினி என் பெஸ்ட் ப்ரண்டுனு தானே சொன்ன… அப்புறம் ஏன் எனக்கு இப்படி ஆனதுக்கு அப்புறம் ஒரு தடவ கூட என்னைப் பாக்க அவ வரல… ஒரு போன் கூடப் பண்ணல…” என்றாள் சாதாரணம் போல் அவள். ஆனால், என்னிடம் நீ எதையோ மறைப்பதை நான் கண்டு கொண்டேன் என்பதைப் போல அவளின் குரலில் அப்படி ஒரு இறுக்கம்.
என்ன சொல்லிச் சமாளிப்பது என்று சத்தியமாய் அவனுக்குத் தெரியவில்லை. தன்னுடைய சிறு சிறு அசைவுகளைக் கூடக் கண்டு பிடிக்கும் அளவிற்கு தமக்கை இத்தனை புத்திசாலியாய் இருந்திருக்க வேண்டாம் என்று கூட எண்ணத் தோன்றியது. சிறு வயதில் அவனின் தமக்கை தாயையும் தந்தையையும் கேள்விகளால் திணறடிக்கும் போது அத்தனை ஆனந்தமாய் வியப்பாய் தமக்கையை பெருமிதமாய் பார்த்துக் கொண்டிருப்பான் அவன். இன்று அதே, அவனுக்கு நடக்கும் போது ஆயாசமாக இருந்தது.
‘என்ன பதில் சொல்லி எப்படிச் சமாளிப்பது..?’ என அவன் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, “இரண்டு பேரும் இங்க இருக்கீங்களா… நான் வீடெல்லாம் தேடிட்டு வரேன்…” என்றபடியே அங்கே வந்தார் வசு. வந்தவர் கோவில் பிரசாதமாக கொடுத்த விபூதியை இருவரின் நெற்றியிலும் வைத்துவிட்டார்.
‘தெய்வம்மா நீ..!’ என்ற விதத்தில் தான் இருந்தது இனியனின் பார்வை.
“ம்மா… எனக்கு அரியர்க்கு நிறையப் படிக்கணும்… நான் போய்ப் படிக்கறேன்…” என அவசரமாக இவன் சொல்லி முடிக்கும் முன்,
“யாரு நீ..? படிக்கப் போற… இத நான் நம்பணும்..?” என இடுப்பில் கை வைத்து அவனைக் கேலியாகப் பார்த்து நின்றது அதே தெய்வம் தான்.
அதைக்கேட்டு இவன் அப்பாவியாக முகத்தை வைக்க, “நடிக்காதடா… இந்த நடிப்பெல்லாம் நீ அஞ்சாங் கிளாஸ்ல ரேங்கார்ட்ல அப்பா சைன போட்டுட்டு, குடுத்த பாரு ஒரு லுக்கு… அப்பவே பாத்துட்டோம்…” என்றார் வசு. பின்னே, தில்லைநாதரை தொல்லைநாதர் என்று எழுதினால் யார்தான் கண்டுபிடிக்க மாட்டார்கள்? நாதர் தமிழிலேயே கையொப்பமிடும் பழக்கமுடையவர். அவர் எழுத்துக்களை சேர்த்து எழுதி இருக்க, அப்போது அது அவனுக்கு அப்படித்தான் தெரிந்தது, பாவம்!
“அம்மாடி மிளிர்… உனக்குப் புடிச்ச பால் கொழுக்கட்டை செஞ்சுருக்கேன்… கீழ போய் எடுத்து வைக்கறேன்… இரண்டு பேரும் சீக்கரம் சாப்பிட வாங்க…” என்றவர் முன்னே நடப்பதற்குள், அவரைத் தாண்டிக் கொண்டு ஓடியவள் குரல், “அம்மா நான் கீழயே போய்ட்டேன்… நீங்க பால்கொழுக்கட்டைய எடுத்துக் குடுக்காம இன்னும் அங்க நின்னு யார்ட பேசிட்டு இருக்கீங்க..?” எனப் படிக்கட்டுகளில் இருந்து கேட்டது.
அவளுக்கும் புரிந்து தான் இருத்தது. இனி இனியனிடம் எப்படி வற்புறுத்திக் கேட்டாலும், அவன் பதில் சொல்லப் போவதில்லை என்று. ஏதோ ஒன்று அவனைச் சொல்ல விடாமல் தடுக்கிறது. நிச்சயம் அது தனது நலனின் பொருட்டே இருக்கும் என்ற எண்ணம் வலுக்க, இனி மகிழினியைப் பற்றித் தன்னால் நினைவு வந்தால் வரட்டும், இல்லை என்றால் யாரையும் அவளைப் பற்றி கேட்டு கஷ்டப்படுத்த வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் மிளிர்.
சிரித்துக் கொண்டே வசு அவளைப் பின்தொடர, “இத நாம முன்னாடியே செஞ்சிருக்கணுமோ..?” என்ற எண்ணத்தோடு இவனும் அங்கே விரைந்தான். இல்லையென்றால், இவன் பங்கும் அல்லவா காலியாகிப் போகும். ஆனால், இந்த நிமிட அவர்களின் சந்தோஷம் நீண்ட நாட்கள் நிலைக்கப் போவதில்லை என்பதை யார் அறிவார்?
❤️❤️❤️❤️❤️
வழக்கமாக அணியும் காக்கிப் பேண்டையும், கருப்பு நிற முழுக்கை டீ-ஷர்ட்டையும் அணிந்தவன் கண்ணாடியில் தன் உருவம் பார்த்தக் கொண்டு நீண்ட நேரமாக அப்படியே நின்றிருந்தான். அவனை அறியாமலேயே தன்னியல்பாய் வலது கை, கேசத்தை அழுந்த கோதிக் கொடுத்தது. எல்லோரையும் போல் ‘போலீஸ் கட்…’ செய்ததில்லை அவன். அலை அலையாய் நெற்றியில் புரளும் கேசத்தின் மீது அப்படி ஒரு அலாதிப் பிரியம். அவன் அப்படியே பார்த்தபடி நின்றிருக்க, “அக்னி..!” என்று அழைத்தபடியே உள்ளே நுழைந்திருந்தார் தெய்வானை.
அவன் நின்றிருந்த கோலம் பார்த்து, “என்னடா… இன்னைக்கும் ஸ்டேஷன் கிளம்பற..?” என்றவரின் குரலில் அளவுக்கு அதிகமான ஏமாற்றம்.
“முக்கியமான வேலை இருக்குமா… போய்த் தான் ஆகணும்…” என்றான் கண்ணாடியில் இருந்து பார்வையைத் திரும்பாமல் அக்னி.
“என்னம்மோ போ… இன்னைக்குத் தான் உன் அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சு இருக்கு… ராத்திரியே நீ வேலைக்குப் போகணும்னு கிளம்பி நிக்கற… எனக்கு எதுவுமே சரியாப்படல…” என்றார் நொடிப்பாய் தெய்வானை.
“இன்னைக்கு ராத்திரி நான் வேலைக்குப் போனாத் தப்பில்லை… என் கல்யாணம் நடந்த அன்னைக்கு ராத்திரியும் வேலைக்குப் போனாத் தான் தப்பு…” என்று அவர் கன்னம் கிள்ளிச் சொல்லியவன், தனது பெல்டை எடுத்து மாட்டிக் கொண்டிருந்தான்.
“என்ன பேச்சுப் பேசற நீ… அண்ணன் இன்னைக்கு அங்க தான் தங்கப் போறான்… மூணாம் நாள் தான் நம்ம வீட்டுக்கு அழைக்கறோம்… இப்போ நீயும் வீட்டுல தங்காம கிளம்பிப் போனா… கேக்கறவங்களுக்கு நான் என்னடா பதில் சொல்லறது..?” என்றார் தெய்வானை.
“ம்ம்ம்… உன் ரெண்டாவது புள்ளையும் பர்ஸ்ட் நைட்டுக்குப் பொண்ணு தேடப் போயிருக்கான்னு சொல்லு…” என்றான் கேலியாய் அக்னி.
“அடி ஆத்தி… பேச்சப் பாரு…” என்றபடியே முதுகில் ஒன்று வைத்திருந்தார் தெய்வானை. எதையாவது பேசி இரண்டு அடிகளை தெய்வானையிடமிருந்து வாங்கவில்லை என்றால் அன்றைய பொழுதே நிறைவாய் இருக்காது அவனுக்கு.
“இந்த வயசுல பேசாம உன்ற புருஷர் வயசுலையா பேச முடியும்..? போ ம்மா அங்குட்டு…” என்றான் அதற்கும் அவன்.
“நீ இப்படியே பேச்ச மாத்தலானு பாக்காத… இன்னைக்கு நீ எங்கயும் போகக் கூடாது… அவ்ளோதான்…” என்றார் கண்டிப்பாய் தெய்வானை.
“ஏனாம்..?” என்றான் புருவத்தை ஏற்றி இறக்கி அவன்.
“ஊருக்குக் கிளம்பிப் போன உன் பெரியத்தை திரும்பி வந்து நடுவீட்டுல உக்காந்து இருக்கது ஏனு தெரியுமோ நோக்கு..?” என்றார் நீட்டி முழக்கிப் பாவனையாய் தெய்வானை.
“அப்பா வந்து இரண்டு நாளைக்கு இருக்கச் சொல்லிக் கூப்பிட்டதால திரும்பி வந்துட்டாங்க…” என்றான் யோசனையாக அவன்.
“அப்படியா..!” என வியந்து ஆச்சரியமாய்த் தெய்வானைக் கேட்க,
“இல்லையா பின்ன..?” எனக் கேள்வியாய் அவரைப் பார்த்தான் அக்னி.
“அதை உங்க அப்பாவே சொல்லுவாரு… வந்து கேளு…” என்றபடியே தெய்வானை வெளியே சென்று விட்டார்.
தனது கருமை நிற பொதியணிகளை அணிந்து கொண்டவன், தூப்பாக்கியை எடுத்துப் பின்புறம் மறைத்து வைத்தான். மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்க்க, திருப்தியாய் இருந்தது. தனது குளிர்கண்ணாடியை எடுத்துக் கையில் சுழற்றியபடியே இவன் இறங்கி வர, மொத்தக் குடும்பமுமே இவனுக்காகத் தான் காத்துக் கொண்டிருந்தது.
அக்னியின் தந்தை ஜெயவேலன். அளவுக்கு அதிகமாகவே தம் மக்களை கண்டிக்கும் பழக்கம் கொண்டவர். ஆனால், அவருக்கு நேர்எதிர் தெய்வானை. அவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் இசைவேந்தன், விரும்பித் தனது தாய்மாமனின் மகளை இன்று தான் திருமணம் முடித்திருந்தான். அடுத்தது தான் அக்னிமித்திரன். பிள்ளைகள் இருவருக்குமே தாயிடத்தில் தான் அதிக ஒட்டுதல். ஜெயவேலன் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் வீடு தலைமை ஆசிரியர் நுழைந்த வகுப்பறை போன்றே இருக்கும். இப்படி அவர் தலை மறைந்ததோ, அடுத்த நொடியே வீடு விளையாட்டு மைதானம் போலாகி விடும்.
ஜெயவேலனுடன் பிறந்தவர்கள் நால்வர். இவரே அனைவருக்கும் மூத்தவர். இவருக்கு அடுத்து மூன்று தங்கைகள். ஆதிலட்சுமி, விஜயலட்சுமி, பாக்கியலட்சுமி. அதற்கு அடுத்து தனபாலன் என்றொரு தம்பி. கடைக்குட்டி என்பதால் தனாவின் மேல் அனைவருக்குமே கொஞ்சம் செல்லமும் பாசமும் அதிகம் தான். அதே சமயம் இசை, அக்னி இருவரிடமும் ஜெயவேலனை விட இவரே அதிகம் நெருக்கம் காட்டுவார். இசைக்கும் இவருக்கும் பத்து வயதே வித்தியாசமிருக்க, அதற்கு அதுவும் ஒரு காரணம். அவரால் இயல்பிலேயே மகன்களுடன் ஒன்ற முடிந்தது. அதே போல்தான் அவர்களுக்கும். தந்தையிடம் எந்தக் காரியம் ஆக வேண்டுமென்றாலும் தனாவின் மூலமே காய் நகர்த்துவார்கள் இருவரும். ஏனென்றால் தனா வந்து கேட்டால் எதையும் மறுக்க மாட்டார் ஜெயவேலன். அவரைப் பொறுத்தவரை தனாவே அவரின் மூத்த புதல்வன். தனாவும் கேட்டு இரண்டு வருடமாக அவர் ஒப்புக் கொள்ளாத ஒரே விசயம் இருந்தது என்றால் அது இசை – திவ்யா திருமணமே!
ஆதிலட்சுமிக்கு இரண்டு மகள்கள். அடுத்ததாய் விஜயலட்சுமிக்கு ஒரே ஒரு மகன் மட்டும். பாக்கியலட்சுமிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். தனவேலனுக்கு மூத்தது மகன். அதற்கு அடுத்து கடைக்குட்டியாய் ஒரு பெண். ஆதிலட்சுமியின் மூத்த மகளையே இசைக்கு மணமுடிக்க விரும்பினார் ஜெயவேலன். ஆனால், இசைதான் தெய்வானையின் தம்பி மகளை விரும்பி விட்டானே! மறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றாலும், அதை ஏற்கவும் முடியவில்லை. அதனாலேயே அவர் இழுத்தடிக்க, “இது நம் மகனின் வாழ்வு மட்டுமல்ல… நம் மகளின் வாழ்வும் கூட.. விருப்பபட்டவரை மணமுடித்தால் தான் இருவருமே சந்தோஷமாய் இருக்க முடியும்…” என அவரை பேசிப் பேசியே கரைத்தது தனா தான். ஆனாலும் இப்போதும் கூட சகோதரிகள் மூவருக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. அண்ணனுக்காகவே வந்திருந்தனர். இத்தனைக்கும் ஆதியின் மூத்த மகளுக்கு வேறு இடத்தில் பார்த்து திருமணத்தை முடித்த பிறகு தான் இந்தத் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்தார் ஜெயா. எங்கே வேறு ஒருத்தியை இந்த வீட்டிற்கு மருமகளாய்க் கொண்டு வந்து தங்கை குடும்பத்திற்கும் தங்களுக்குமான உறவு கொஞ்சம் கொஞ்சமாய் இல்லாமலேயே போய்விடுமோ என்பதே அவர்களின் அச்சமாக இருக்கிறது.
இரும்புக் கம்பிகள் வேயப்பட்ட முற்றத்தின் நடுவில் மரநாற்காலி ஒன்றில் ஜெயா அமர்ந்திருக்க, அந்த முற்றத்தைச் சுற்றி அவரின் மூன்று தங்கைகளும் அவர்களின் கணவர்களும் அவர்களின் மக்களும் எனக் குழுமி அமர்ந்திருந்தனர். அடுத்தததாய்த் தனாவின் மனைவியும் மக்களும் எனப் பின்னால் அமர்ந்திருந்தனர். பார்த்ததும் பக்கென்று இருந்தது அக்னிக்கு. தெய்வானைக்கு ஒரே ஒரு சகோதரன் மட்டுமே. ஆக அவர் சொந்தங்கள் மொத்தமும் மணமகள் வீட்டில் இருக்க, இங்கு யாரும் இல்லை.
ஒரு ஓரத்தில் கைகட்டி நின்ற தனாவை இழுத்து தோளில் கைபோட்டு அணைத்தபடி பிடித்துக் கொண்டவன், “என்ன சித்தப்பு… மொத்தக் குடும்பத்தையும் கூட்டி முத்தத்துல குத்தவச்சு உக்காந்து இருக்காரு உங்க அண்ணன்… என்ன மேட்டர்..?” என்றான் கிசுகிசுப்பாய்.
“அது யாருக்கு தெரியும்… உன் அப்பாரு தான் மொத்தக் கூட்டத்தையும் கூட்டி வச்சுட்டு அர மணி நேரமா மோட்டு வளைய வெறிச்சு வெறிச்சுப் பாத்துட்டு இருக்காரு… நானும் மனுஷன் ஏதாவது பேசுவாருன்னு பாக்கறேன்… ம்ம்கூம் வாயவே தொறக்கக் காணும்…” என்றார் சலிப்பாய் தனா.
“அப்படியா சித்தப்பு சொல்லற… ஆனா எட்டப்பாரு…” என அக்னி ஏதோ சொல்ல வர,
“என்னடா சொன்ன எங்க அண்ணன..?” எனக் கோபமாய் அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தார் தனா.
“ஏன் எங்கப்பாருனு சொன்னேன்… உனக்கு வேற ஏதும் கேட்டுச்சா..?” என்றான் சமாளிப்பாய் அக்னி.
“இல்லையே..! எட்டப்பனு சொன்ன மாதிரி இல்ல எனக்கு கேட்டுச்சு…” என்றார் யோசனையாய் தனா.
“வயசானலே இப்படித் தான்… காதும் அவுட்டா… சரி அதவிட்டு விஷயத்துக்கு வா சித்தப்பு…” என்ற அக்னிக்கு, ‘ஜெஸ்ட் மிஸ்டா அக்னி… இல்ல சித்தப்பே உன்னக் கும்மிருக்கும்… இவிங்க பாசத்துக்கு ஒரு பாடரப் போடுடா ஆண்டவா..!’ என அவசரமாய் மனதிற்குள் ஒரு வேண்டுதல் வைத்தான்.
“என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்…” என்றார் கடுப்பாகி அவர்.
“உனக்குத் தெரியாம இங்க எதுவும் நடக்காதே..! எங்க அப்பாரு உக்காந்து இருக்க தோரணையே சரியில்லையே… இதுல உன் அக்காளுங்க மூணு பேரும் ஆளுக்கு ஒரு தூணக் கட்டிப்புடிச்சு உக்காந்து இருக்கதப் பாத்தா… ஸம் திங் ராங்… மொத்தமா சேந்து எவன் குடும்பத்துலையாவது கும்மி அடிக்க முடிவு பண்ணிட்டீங்களா..?” என்றான் இன்னும் கிசுகிசுப்பாக.
“ம்ம்ம்… உன்ற வாழ்க்கையில தான்டா மகனே கும்மி அடிக்கப் போறோம்… என்ற ஃபேமிலியப் பாத்தா எப்படித் தெரியுது உனக்கு? வீ ஆர் வெல் எஜுகேட்டட் அண்ட் டீசண்ட்… யூ நோ…” எனத் தனா சொல்லி முடிப்பதற்குள், “அங்க என்ன வெட்டிப் பேச்சு தனா… இங்க வரச் சொல்லு அவன…” என அக்கினியைக் கைநீட்டி அருகில் அழைத்த ஜெயாவின் குரலே மிரட்டும் தொனியில் கட்டளையிடும் குரலாகத் தான் இருந்தது.
அனைவரையும் விலக்கிக் கொண்டு அக்னி முன்செல்ல, அவனின் பின்னால் வருவார் என நினைத்திருந்த தனாவோ அங்கேயே தான் நின்றிருந்தார். ‘யோவ் சித்தப்பா… கூட வருவனு பாத்தா… என்னையக் கோத்துட்டு வேடிக்கையா பாக்கற… இந்த மனுஷன் வேற பொசுக்குப் பொசுக்குனு கைய நீட்டுவாரே..! மொத்தக் குடும்பத்து முன்னாடியும் மானம் மல்லாந்துடுமோ..?’ என இவன் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அவர் தொண்டையைச் செருமிப் பேசத் தயாரானார்.
“இன்னைக்குக் கூட சார் உத்தியோகத்துக்குப் போயே ஆகணுமோ..? இல்லைனா நாட்டுல சட்டம் ஒழுங்கு சீர்குலைஞ்சுடுமோ..?” அவர் முறைத்துக் கொண்டே கேட்க,
“இல்லைங்கப்பா… கொஞ்சம் அவசர வேலை… அதான்…” பம்மிக் கொண்டு பதில் சொன்னான் அவன்.
“ம்ம்ம்… அக்னி உனக்கே தெரியும் இந்தக் குடும்பத்துக்கு நான்தான் மூத்தவனு… எனக்குனு சில பொறுப்பும் கடமையும் இருக்கு…” என அவர் ஆரம்பிக்கவும், இவன் தலையில் கை வைக்காத குறைதான்.
‘ஆரம்பிச்சுட்டாருயா… இவரு குடும்ப தரித்திரத்த… ச்ச்ச்சே… சரித்திரத்த… நல்ல வேளை எங்க கொள்ளுத் தாத்தா கூடப் பொறந்தவங்க பன்னெண்டு பேருனு ஆரம்பிக்கலயே… அதுவரைக்கும் சந்தோஷம்…’ என இவன் மனதுக்குள்ளேயே கவுண்டர் கொடுக்க அங்கே ஜெயா தொடர்ந்தார்.
“என் கூடப் பொறந்த மூணு தங்கச்சிங்களுமே எனக்கு என் பொண்ணுங்க மாதிரித்தான்… அவங்க கண்ணக் கசக்கிட்டு நின்னா என்னால தாங்க முடியாது… அவங்களுக்கு அடுத்துத் தான் எனக்கு எல்லாமே… நீங்களும் தான்… அது உங்களுக்கே தெரிஞ்சி இருக்கும்…”
‘அப்பாருனு கூடப் பாக்க மாட்டேன்… புடிச்சு உள்ள போட்டுடுவேன், ஆமான்..! சீக்கரம் சொல்லுயா… டியூட்டிக்கு டைம் ஆகுது…’ என அவன் மனதுக்குள் புலம்ப,
“என்னடா நான் பாட்டுக்குப் பேசிட்டு இருக்கேன்… நீ பாட்டுக்கு நிக்கற..?” என்றார் அதட்டலாட் ஜெயா.
“இல்லைங்கப்பா… நீங்க சொன்னதக் கவனமாக் கேட்டுட்டு இருக்கேன்…”
“ம்ம்ம்… எனக்கு என் தங்கச்சிங்க தான் ரொம்ப முக்கியம்…”
“அப்போ சித்தப்பு…” என்ற அக்னியை முறைத்துப் பார்த்தவர் தொடர்ந்தார்.
“அந்தத் தங்கச்சிங்க கண்ணுல தண்ணி வந்தா என்னால தாங்க முடியாது…”
‘அது என்ன குடிதண்ணிக் குழாயா..? ஓயாமத் தண்ணி வர… அடுத்த டையலாக்குக்கு வாரும்… இதையே சொல்லி உயிர வாங்கிட்டு..!’ என இவன் மனதில் கவுண்டர் கொடுக்க,
“ஆனா, இன்னைக்கு அந்தத் தங்கச்சி என் கண்ணு முன்னாலையே கண் கலங்கி யாரோ மாதிரி ஒரு மூலையில நிக்கறா…”
‘இது எப்போ..?’ எனத் தனது மூன்று அத்தைமார்களையும் தான் பார்த்துக் கொண்டிருந்தான் அக்னி.
“அது ஏன்னு உனக்கு நான் சொல்லணுமுனு அவசியமில்லை… உன் பெரியத்த பொண்ண நம்ம இசைக்குக் கட்டணுமுனு அவ்வளவு ஆசை ஆசையா இருந்தோம்… ஆனா முடியாமப் போச்சு… அதனால என் தங்கச்சி மனசு ரொம்பவே ஒடஞ்சு போச்சு…”
‘ஒடஞ்சு போக அது என்ன வேப்பங்குச்சியா… அதுவே ஆலமரம் சைசுல இருக்கு… படக்குனு விசயத்துக்கு வாயா… எனக்கு வேற நெஞ்சு பக்குபக்குனு இருக்கு…’
“என் தங்கச்சி மனசு கஷ்டப்படக் கூடாதுனு தான் இசை கல்யாணத்துக்கு முன்ன அது பொண்ணு கல்யாணத்த முடிச்சோம்… ஆனாலும், இன்னைக்கு இசை கல்யாணத்துல என் தங்கச்சிங்க யாரோ மாதிரி நிக்கும் போது.. எனக்குப் பக்குனு ஆகிப் போச்சு…”
‘யோவ்… இதுங்க அடிச்ச கூத்துக்கு என்ற மாமாதான்யா பக்குனு நெஞ்சப் புடிச்சுட்டு சாஞ்சுட்டாரு…’ என தன் நெஞ்சைப் பிடிக்காத குறையாக, அடுத்து என்ன சொல்வாரோ என தகப்பனையே பார்த்துக் கொண்டிருந்தான் அக்னி.
“இன்னொரு வீட்டுப் பொண்ணக் கட்டுனா என் உறவெல்லாம் தூரமாகிடும்… உனக்கு அப்புறம் இந்த வீட்டுல எங்களுக்குனு யாரு இருக்கானு ஆதி மனசு கலங்கி சொல்லும் போது எனக்கு உசுரே இல்ல… நடக்கறத எல்லாம் பாத்தா எனக்கும் அப்படித் தானோனு தோணுது… அதனால…” என்று இழுத்து நிறுத்தி மகனைப் பார்த்தார் ஜெயா.
‘அதனால… யோவ்… ஏன்யா ஒரு ஃப்ளோல போய்ட்டு இருக்கும் போது பிரேக் போட்டு பி.பிய ஏத்தரிங்க…’ எச்சிலை கூட்டி விழுங்கியபடியே பீதியாய் தந்தையைப் பார்த்தான் அக்னி.
துக்கத்தில் அடைத்த தொண்டையைச் செருமிச் சரிசெய்து கொண்டு, “அதனால… ஆதியோட சின்ன மவ… நிவிக்கும் உனக்கும் கல்யாணம் முடிக்கலானு நாங்க முடிவு பண்ணி இருக்கோம்…” என்றார் ஜெயா.
‘எது… முடிவே பண்ணிட்டீங்களா..?’ மனதுக்குள் தான் கேட்டுக் கொண்டான் அக்னி.
“அடுத்த வெள்ளிக்கிழமை நல்ல நாளா இருக்கு… நம்ம வீட்டுல இருந்து போய்த் தட்ட மாத்திட்டு… அதுக்கும் அடுத்த முகூர்த்துலையே கல்யாணத்த முடிச்சுடுவோம்…” என்றவர் அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என்பதைப் போல எழுந்து கொள்ள, இவன் அப்படியே சிலையெனச் சமைந்து போனான்.
“அதான் பேசியாச்சுல… நேரமாகுது… போய் எல்லாரும் சாப்பிட்டுப் படுங்க… போங்க… நாளைக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு… சீக்கரமே ஏந்திரிக்கணும்…” என்று அவர் ஒரு அதட்டல் போட, சட்டெனக் கலைந்து போனது கூட்டம்.
– தேடல் தொடரும்…

