Loading

அத்தியாயம் -33

சிற்பி முதலில் ஆர்வத்தில் இரண்டு புகைப்படம் எடுத்து அனுப்பினாள்.அதை கைப்பேசியில் பேசிவிட்டு பார்த்தவர் சோகமாக அமர்ந்து இருந்தார்.அவரின் முகமாற்றத்தைக் கண்டு அப்பொழுது பக்கத்தில் வந்த  அருள்மணி “என்னாச்சு தாமரை ஏன் ஒரு மாதிரி இருக்கே?” என்று கேட்டார்.

உடனே தாமரை “இங்கே பாருங்க” என்று சிற்பி அனுப்பிய புகைப்படத்தைக் காட்டினார்.அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த அருள்மணி “இது நம்ம சிற்பியா? அடையாளமே தெரியலை? சிட்டிப் பொண்ணு மாதிரில்ல இருக்கா என் செல்லப் பொண்ணு” என்று மகளைப் பார்த்து அதிசயித்துச் சொன்னார்.

தாமரையோ “என்னங்க நானே இப்படி மாறி இருக்காளேன்னு கவலையா சொன்னா? நீங்க என்னன்னா அவளை பார்த்து பெருமை படுறீங்க?பொம்பளை பிள்ளை இப்படி இருந்தால் நல்லாவா இருக்கு” என்று கோபமாகக் கேட்டார்.

அருள்மணியோ “தாமரை சிற்பி எங்கே இருக்காளோ அதுக்கு ஏத்தமாதிரி தானே இருந்தாகனும். அதுல நாம கோபப்பட ஒன்னும் இல்லை.அவ டிரெஸ் மாடலா போட்டாலும் கண்ணியமாகத் தானே இருக்கு. உனக்கே தெரியும் வெளியூருக்கு படிக்க போறேன்னு சொல்லி போன  நம்ம ஊரு பொண்ணுங்களே எப்படி எல்லாம் விருப்பமா அவங்களுக்கு பிடிச்ச டிரெஸ்ஸை போடுறாங்க.அப்படி இருக்கும் போது இந்த சின்ன உரிமையை நம்ம சிற்பிக்கு கொடுக்கனும் தாமரை அது தப்பில்லை பெரிய விஷயமாக பேசாதே!” என்று பொறுமையாகச் சொன்னார்.

தாமரை அவருடைய கணவர் சொன்ன விஷயங்களை கேட்டு  யோசனையில் அமர்ந்து இருக்கவும் அவரின் தோள்களில் ஆதரவாக தட்டிக் கொடுத்தவர் “சிற்பிக்கு பாட்டுப் பாட ரொம்ப பிடிக்கும். அது சம்பந்தமான அவள் போகனும்னு ஆசைப்பட்ட போது நம்ம குடும்பத்துக்கு இது சரியா வராதுன்னு நீ தானே என்கிட்ட சொன்னேன்னு சிற்பிக்கிட்டே எனக்கு பிடிக்கலைன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக அவ அது சம்பந்தமாக படிக்காமல் கல்லூரிக்கு போனாள்.ஆனால் உனக்கு தான் அது பிடிக்காதுன்னு தெரிந்தே சிற்பி வெளிக்காட்டலை.அதைப் பற்றி ஒரு வார்த்தை ஏன்ம்மா சொன்னீங்கன்னு கேள்வி கேட்கலை?

இப்போ விதியே அந்த வழியுள்ள பக்கமா சிற்பியை அழைச்சுட்டு போகும் போது சின்னச் சின்ன விஷயங்களுக்காக நாம தடுக்க என்ன இருக்கு?” என்று  தாமரை புரியும்படி அவரிடமே கேள்வியைக் கேட்டார் அருள்மணி.

அவர் சொன்னதைக் கேட்டதும் கோபமடைந்த தாமரை “என்னப் பேசுறீங்க அவ பொம்பளை பிள்ளை அதுக்காக அப்படியே அவளுடைய இஷ்டத்துக்கு விட்டா தப்பாகிடும்.நாளைக்கு உன் பிள்ளையை சரியா வளர்க்கத் தெரியலைன்னு எல்லோரும் என்னைப் பார்த்து தான் கேள்வி கேட்பாங்க” என்றார்.

அருள்மணி பொறுமையாக “நான் அப்படி சொல்ல வரலை தாமரை”

“பின்னே நீங்க சொன்ன பதில் அந்த மாதிரி தான் இருக்கு.அவ இஷ்டத்துக்கு இருக்கட்டும் நாம எதுவும் கேள்வி கேட்க வேண்டாம் என்பது போலல இருக்கு” என்றார் தாமரை.

அருள்மணி சிரித்தப்படி “நாம இப்போ நிம்மதியா எந்த கடன் தொல்லையும் இல்லாமல் இருக்கிறதுக்கு காரணமே சிற்பி தான்.நம்மளுடைய நலனைத் தான் அவள் எப்பவும் பெரிசா நினைக்கும் பிள்ளைக்கு அவ பிடிச்ச மாதிரி இருக்கிறதுக்கு சரின்னு சொல்லுறதுக்கு நமக்கும் கடமை இருக்கு. அப்போதும் நம்ம பிடிவாதத்தை பிடிச்சிட்டு இருக்கிறது சரியில்லை தாமரை திறமை இருந்தால் சிற்பி அதன் மூலமாக பெரிய ஆளாக வரட்டுமே” என்று தன் மகளின் நலனுக்காக பேசினான் அருள்மணி.

தாமரை யோசனையாக “அப்போ எப்போ தான் அவளுக்கு நாம கல்யாணத்தை முடிக்கிறது? சிற்பியையும் ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துட்டா தான் என்னால  நிம்மதியாக இருக்கும்  முடியும்” என்று தாமரை தன் எண்ணத்தையே பெரிதாகச் சொன்னார்.

அப்பொழுது அவருடைய மகள் கனிகா தாமரையின் கைப்பேசியில் அழைத்தாள்.

தாமரை “ஹலோ” என்றதும் கனிகா புன்னகை பேச்சோடு “அம்மா நல்லா இருக்கீங்களா?” என்று நலம் விசாரித்தாள்.

“இருக்கேன்” என்று ஒற்றை வரியில் பதில் வந்தது.

கனிகா “அம்மா என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி பதில் சொல்லுறீங்க?” என்று அக்கறையாகக் கேட்டாள்.

அதைக் கேட்ட தாமரை “எல்லாம் உன் தங்கச்சியாலத் தான்”

“என்னாச்சு?” என்று கனிகா கேட்கவும் தாமரை நடந்த விவரங்களைச் சொன்னவர் “அங்குள்ள பிள்ளைகள் எல்லாம் டிரெஸ் போட்ட மாதிரியே இல்லை. அவ என்னன்னா இப்படி பேசுறாள்.எனக்கு ரொம்ப பயம் போயிடுச்சு கனிகா.நீ தான் அவளுக்கு புரிய வைக்கனும்” என்று கவலையாகச் சொன்னார்.

கனிகாவோ சிரித்துக் கொண்டு “அம்மா அவ சின்னப் பொண்ணு இல்லை.ஏன் இவ்வளவு கவலைப்படுறீங்க? எனக்கும் போட்டோ அனுப்பினாள்.

அழகா இருக்கால்ல அவளாவது நம்ம குடும்பத்தை விட்டு வெளியே போய் சாதிக்கட்டுமே! நானும் இன்னும் ஒருவாரத்துல பெங்களூர் போறேன்,உங்களுக்காக அங்கே சிற்பியை நேர்ல பார்த்து பேசுறேன்” என்று தன் அம்மாவின் நிம்மதிக்காக இப்படி சொன்னாள் கனிகா.

அருள்மணியும் கனிகாவும் எவ்வளவு பேசியும் அவருடைய மனம் சரியானதாக இல்லை.இந்த வேலை முடிந்தவுடன் சிற்பியை திரும்ப வீட்டுக்கு அழைத்து விடலாமா? என்பது வரை யோசித்தார்.

இங்கே நேரம் வேகமாகச் சென்றது.மறுநாள் மாலையில் நேரலையில்  நிகழ்ச்சி என்பதால் அங்கே பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது.இந்த போட்டியின் முடிவில் தான் இறுதி சுற்றுக்கான குழுவைத் தேர்ந்தெடுப்பார்கள்.

போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள் அனைவரும் ஒப்பனை அறையில் தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு தேவையானது செய்துக் கொண்டும் ஒருபுறம் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் வேலை என்று சிற்பி கால்களில் ரெக்கை கட்டியது போல் சுற்றிக் கொண்டிருந்தாள்.

சபரியும் உடனிருந்து அவரும் உதவிக் கொண்டிருந்தார்.

சிற்பி ஆண்களுக்கான ஒப்பனை அறைக்கு வரும் பொழுது  நிரஞ்சன் “சிற்பி இங்கே வா” என்று அழைத்தான்.

இவளும் உடனே செல்லவும் அவளது கையில் ஒரு பாட்டிலைக் கொடுத்து “இதை குடி சிற்பி ஹெல்த் டிரிங்ஸ் தான்.காலையில் இருந்து அங்கேயும் இங்கேயுமாக சுத்திட்டே இருக்கே” என்று அக்கறையாகக் கொடுத்தான்.

இதை எல்லாம் சபரியும் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர்  கவனிப்பதைக் கண்ட காந்தன் நிரஞ்சனைப் பார்த்து “நிரஞ்சன் இங்கே வா” என்று சொல்லவும் நிரஞ்சன் அவனைப் பார்க்க காந்தன் கண்ணசைவினால் சபரியைப் பார்க்கச் சொன்னான்.

அதைப் பார்த்து புரிந்துக் கொண்ட நிரஞ்சன் சட்டென்று அமைதியாகி விடவும் சிற்பியோ “ரொம்ப தாங்ஸ் நிரஞ்சன்” என்று சொல்லி பதிலுக்கு புன்னகையோடு சென்று விட்டாள்.

காந்தன் மெதுவாக நிரஞ்சனிடம் “கொஞ்சம் கவனமா இரு நிரஞ்சா.சிற்பியோட  மாமாவும் நம்மோடு இருக்காங்கல்ல.எதுவும் தேவையில்லாத பிரச்சினை வந்து விடக் கூடாது” என்று அவன் அக்கறையாகச் சொல்லவும் நிரஞ்சனும்  சரியென்பது போல் தலையசைத்தான்.

எல்லா வேலைகளும் முடித்தாகி விட்டது.இப்போது சிற்பியும் உடையை மாற்றிக் கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்ல இன்னும் அரைமணி நேரம் தான் இருந்தது.

அவள் இதற்காக எந்த உடையையும் புதுசாக எடுக்கவில்லை.ஏனென்றால் இதைப் பற்றிய சரியான விவரங்கள் தெரியாததால் என்னச்செய்வதென்று யோசனையில்  விடுதிக்குள் நுழையவும் வரவேற்பறையில் இருந்த பெண்ணொருத்தி சிற்பியின் அருகில் வந்து தன் கையில் ஒரு பெட்டியை வைத்து ஆங்கிலத்தில் அவளின் அறை எண்ணைச் சொன்னவள் “நீங்க தானே சிற்பி”

“ஆமாம்”

“மேம் உங்களுக்கு இந்த பார்சல் வந்து இருக்கு”

“நான் எதுவும் ஆர்டர் பண்ணலை” என்று புரியாமல் சொன்ன பொழுது  சரியாக  அவளுடைய கைப்பேசி அழைத்தது.

நிரஞ்சன் தான் பேசினான்.”சிற்பி உனக்காக ஒரு சின்ன கிப்ட் நாங்க எல்லோரும் சேர்ந்து வாங்குனது  வேண்டாம்னு சொல்லாதே! வாங்கிக்கோ இப்போ பேச நேரம் இல்லை அப்புறமா பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்தான்.

இவளும் அந்தப் பெட்டியை வாங்கிக் கொண்டு தன் அறையில் போய் திறந்து பார்த்தாள்.அதில் நீலநிறத்தில் முழுநீளமாக ஒரு மேக்ஸி இருந்தது.அதற்கு மேல் ஒரு சிறிய துண்டு காகிதத்தில் “இன்னைக்கு இந்த டிரெஸ் போட்டுட்டு வா சிற்பி நிகழ்ச்சி முடிந்ததும் சின்னதா ஒரு பார்ட்டி இருக்கு கண்டிப்பா வரனும் இது எங்க எல்லோருடைய சார்பாகவும் கொடுத்து இருக்கோம்” என்று எழுதி இருக்கவும் அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

முகம் முழுவதும் புன்னகையோடு விழிகளில்

கண்ணீர் நிரப்பிக் கொண்டது சிற்பிக்கு.அவளுக்கு இதுவரை  எந்தவொரு பொருளும் வாய் திறந்து கேட்டாலே சட்டென்று கிடைத்து விடாது.அதுவும் அவள் விரும்பிய பொருட்கள் என்றால் சந்தேகம் தான்.ஏனென்றால் பெண்பிள்ளைகளுக்கு எல்லாம் கேட்டவுடன் கிடைத்தால் அவர்கள் பெரியவர்களின்  சொல் பேச்சு கேட்க மாட்டார்கள் என்பது அவளின் அம்மாவின் எண்ணம்.

காரணம் அவர் வாழ்ந்த முறை அப்படியாக இருக்கையில் தாமரையும் அப்படியே தன் பிள்ளையையும் வளர்த்தார்.இதெல்லாம் நினைவில் ஒருநிமிடம் வந்து போனது சிற்பிக்கு.ஆனால் என்றைக்கு இவர்கள் நால்வரும் அவளை தோழியாக ஏற்றுக் கொண்டார்களே அன்றிலிருந்து பெண் தானே என்று ஒதுக்கி வைக்காமல் அவளையும் தங்களில் ஒருவராக நினைத்து அவளுக்கான எல்லா மதிப்பையும் கொடுத்தது தான் சிற்பிக்கு அவர்களில் பிடித்த குணம் தான்.

அந்த உடையை தன் மேல் வைத்து கண்ணாடியில் பார்த்தாள்.சரியாக இருந்தது.குளித்து முடித்து அவர்கள் கொடுத்த உடையை போட்டு பார்த்தாள்.சரியாக அவளுடைய கணுக்காலுக்கு மேல் இருந்தது.

அவள் வேகமாக நடப்பதற்கு வசதியாகவும் அவளை இன்னும் அழகாகக் காட்டியது.தலைமுடியை சரி செய்ய நேரமில்லாததால் தற்சமயம் ஒரு பேண்ட்டால் கட்டி விட்டு தன்னை ஒரு புகைப்படம் எடுத்து அதை தன் அம்மா,அக்கா மற்றும் அத்தைக்கு அனுப்பி விட்டு சாம்பவியின் அறைக்கு ஓடினாள்.

அங்கே சாம்பவி தயாராகிக் கொண்டிருந்தாள்.சிற்பியைப் பார்த்தவள் “உன்னைத் தான் நினைச்சுட்டு இருந்தேன் நீயே வந்துட்டே எல்லாம் ரெடி தானே” என்று கண்ணாடியில் தன் ஒப்பனையாளர் செய்வதைப் பார்த்துக் கொண்டே பேசியவள் சிற்பியை  திரும்பிப் பார்க்கும் அவளது உடையைப் பார்த்து “ஹேய்… வாவ் சூப்பரா இருக்கே சிற்பி எவ்வளவு அழகு நீ டிரெஸ் அழகா இருக்கு. ஏன் ஹேர்ஸ்டைல் பண்ணலையா?” என்று சிற்பியை மேலும் கீழுமாக அவளை  நோட்டம் இட்டபடியே கேட்டாள் சாம்பவி.

சிற்பி புன்னகையோடு “தாங்க்யூ மேம் நேரம் இல்லை அதோடு இப்போ இது தான் நல்லா இருக்கு அதோடு அடுத்த ஏற்பாட்டை பார்க்க போகனுமே” என்றாள்.

உடனே சாம்பவி  தன் ஒப்பனையாளரிடம் “சிற்பிக்கு இந்த போனிடேயில் வித்தியாசமான ஹேர் ஸ்டைல்ல செய்து விடுங்க.அப்புறம் முகத்துக்கு சின்னதா ஒரு டச்அப் பண்ணி விடுங்க அப்போத் தான் என் சிற்பி இன்னும் அழகா இருப்பா” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

சிற்பியோ “அதெல்லாம் வேண்டாம் மேம்  நேரம் ஆகுது.நான் போறேன்” என்றாள்.

சாம்பவியோ விடாப்பிடியாக பிடித்து அவளை சொன்னது போலவே சிறிது நேரத்தில் மாற்றி விட்டு அவளை அனுப்பி வைத்தாள் சாம்பவி.

இங்கே வந்திருக்கும் சில பங்குதாரர்களை கவனிக்க வேண்டியது இருந்ததால் சிற்பி அவர்களின் பக்கம் செல்ல வேண்டியது இல்லை.அதனால் அவளோ ஒவ்வொரு விருந்தினர்களை வரவேற்கும் பக்கத்தில் நின்று கொள்ளவும் இதெல்லாம் நேரலை நிகழ்ச்சியில் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்