
அத்தியாயம் -15
உடனே சிற்பி “இப்படி வேற ஒன்னு இருக்குதா?” என்று யோசனையாகக் கேட்டாள்.
உடனே சஹா “போச்சு நீ பிறந்ததற்கான பலனையே அனுபவிக்கலை நான் உனக்கு அப்புறமா காட்டுறேன் நாம மூன்று பேரும் சேர்ந்து பார்க்கலாம் ஓகேவா” என்று கேட்டான்.
சிற்பியும் தன் பெருவிரலை உயர்த்திக் காட்டி சரியென்று ஒத்துக்கொண்டாள். மூவரும் சிற்பியிடம் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.நிரஞ்சன் சிற்பியை கவனித்துக் கொண்டிருந்தான்.அவளின் களங்கமில்லா புன்னகையோடு அவர்களிடம் பேசிச்சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளைப் பற்றி காந்தன் எல்லா விவரங்களையும் கேட்டு தெரிந்துக் கொண்டான்.ஆனால சிற்பி தன் நிலைமையைப் பற்றி மட்டும் எதுவும் சொல்லவில்லை.
அவர்கள் தங்கள் வேலைகளை முடித்து விட்டு ஒரு தடவை பயிற்சியும் செய்து விட்டு ஐவரும் ஒன்றாக சங்கீத மேளாவுடைய அலுவலகத்தில் மகிழுந்தில் சென்றனர்.
இருக்கையின் முன்னால் சிற்பி அமர்ந்துக் கொண்டாள்.மூவரும் ஒன்றும் சொல்லாமல் பின்னால் அமர்ந்துக் கொண்டனர்.சிற்பி சஹாவிடம் “எல்லோரும் வந்தாச்சா? ஏன் இன்னும் டிரைவர் வரலை?” என்றதும் பார்த்தி “அங்கே பார்” என்று முன்னால் இருக்கையைக் காட்ட நிரஞ்சன் கதவை திறந்துக் கொண்டு பார்த்தான்.அங்கே சிற்பி அமர்ந்திருப்பதைக் கண்ட நிரஞ்சன் “ஹேய்… உன்னை யாரு இங்கே உட்கார சொன்னாங்க எழுந்திரு” என்று அவசரப்படுத்தினான்.
சிற்பி அவனைக் கண்டதும் இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டாள்.பின்னால் திரும்பிப் பார்த்த நிரஞ்சன் “காந்தா நீ முன்னாடி வந்து உட்காரு”
“நான் வரலை நான் இங்கேயே இருக்கேன்”
“அப்போ வேற யாராவது முன்னாடி உட்காருங்க” என்றான்.
பார்த்தி வந்து முன்னால் அமர்ந்துக் கொண்டான். மற்ற இருவரும் எங்களுக்கு கண்ணாடி பக்கம் உள்ள இருக்கைத் தான் வேண்டும் என்று அமர நடுவில் சிற்பி அமர்ந்தாள்.
அவர்கள் அவளிடம் பழகும் தன்மையில் அந்த ஒரு நாளிலேயே அவர்களை வேறொருவர்களைப் போல் தோன்ற எண்ணம் வரவில்லை.அதனால் அவளும் இருவருக்கு நடுவில் அமர்ந்தாள்.
அவளைப் பார்த்து பார்த்தி “போச்சு இனிமேல் உன் இடம் இது தான் இனிமேல் எப்போ கார்ல ஏறினாலும் உனக்கு இந்த இடம் தான்” என்று சொல்லி சிரித்தான்.
சிற்பியோ அசராமல் “இதுல என்ன இருக்கு? இது தான் எனக்கு சேப்ட்டி ஏன்னா ரெண்டு பக்கமும் இரண்டு பார்டீகார்ட்ஸ் இருக்காங்க” என்று சொல்லவும் காந்தனும் சஹாவும் அவளைப் பார்த்து முறைத்தனர்.
சஹா “எ…என்னை பார்டிகார்ட்ஸ்னா சொல்லுற இரு உன்னை அப்புறமா கவனிச்சுகிறேன்”
“ஏன் உங்க பக்கத்துல தானே இருக்கேன் இப்பவே கவனிங்க” என்று அவனுக்கு சரிசமமாகப் பேசினாள்.
இருவரும் ஒருவரையொருவர் கிண்டலடித்து சிரித்தபடி வந்தனர்.அவர்களுடன் காந்தனும் சேர்ந்துக் கொண்டான்.
பார்த்தி அவர்கள் பேசுவதற்கு இடையினில் திரும்பிப் பார்த்து பேசி சிரித்துக் கொண்டு வந்தான்.நிரஞ்சன் அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு பழைய நினைவுகள் வந்து போனது.இதற்கு முன்னால் இவர்கள் ஒன்றாக வரும் பொழுது வழியினில் பதற்றமும் யோசனையோடும் பாட்டுப் பாடி அதை பயிற்சி செய்தபடி வருவார்கள்.ஆனால் இப்பொழுது அப்படியே தலைகீழாக சிரித்து பேசியபடி வந்தனர்.
இதை யோசித்தபடியே கண்ணாடியில் தெரிந்த சிற்பியின் பிம்பத்தைப் பார்த்தான்.குறுகுறுக் கண்கள்,சிரிப்பைத் தாங்கிய முகம் அதனால் கன்னங்கள் லேசான இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தன.அவள் தலையை ஆட்டி சிரிக்க சிரிக்க அவளுடைய காதணியும் அதற்கு ஏற்றார் போல் சேர்ந்து ஆடியது.
கூடவே அவள் சிரிக்கும் போது தனது சின்ன விரல்களால் வாயைப் பொத்தி சிரிப்பதுமாக பின்னர் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கிக் கொண்டு வருவது என்று அவளின் ஒவ்வொரு செய்கையையும் கவனித்துக் கொண்டே வந்தான்.அவளையே பார்த்துக் கொண்டு வந்தவன் ஏதோ நினைவு வந்தவனாக சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டான்.
அவர்கள் இறங்க வேண்டிய இடம் வரவும் எல்லோரும் இறங்கி இருந்தனர்.அப்பொழுதும் நால்வரும் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.அதைப் பார்த்து லேசாக கோபமடைந்த நிரஞ்சன் “கொஞ்சம் அமைதியா வர்றீங்களா?”
என்று கொஞ்சம் கடுமையாக சொன்னான்.
உடனே நால்வரும் அமைதியாக வந்தனர்.ஆனால் சிரிப்பை அடக்கிக் கொண்டு வந்தனர்.அதைப் பார்த்த நிரஞ்சன் “என்னடா பிரச்சினை ஏன் இப்படி எதாவது செஞ்சுட்டே இருக்கீங்க?”என்று கடுப்பாகக் கேட்டான்.
பார்த்தி சிரிப்பை அடக்க முடியாமல் “நிரஞ்சா இந்த சிப்பியை உன் கூட அழைச்சுட்டு போ காமெடி பண்றேன்னு மொக்கை போட்டு கொல்லுறா இந்த மாதிரி ஒரு பொண்ணை நான் மீட் செஞ்சதே இல்லை ப்ளீஸ் காப்பாத்து” என்றான்.
“அப்படி என்னச் சொன்னாள்?”
உடனே காந்தன் “காக்கா ஏன் கருப்பா இருக்கு?”
“ஏன்?”
“அது கருப்பா பிறந்ததுனால கருப்பா இருக்குன்னு சொல்லுறாடா” என்றதும் சிற்பி வேகமாக ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.
அவள் சொன்ன பதிலைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டவன் “நீ முன்னாடி என்கூட அமைதியா வா எதாவது பேசுனே அவ்வளவு தான்” என்று அவளை மிரட்டி தன்னோடு அழைத்தான்.
அவளோ தலையைக் குனிந்துக் கொண்டு நல்ல பிள்ளை போல் அமைதியாக வந்தாள்.எல்லோரும் சாம்பவியின் அறைக்கு வெளியே உட்கார்ந்திருந்தனர்.
அப்பொழுது ஒரு பெண் வந்து சிற்பியை தன்னோடு அழைத்துச் சென்றாள்.
நால்வரிடமும் சிற்பி சொல்லி விட்டுச் செல்ல சஹா “எம்மா தா…தாயி போய்ட்டு திரும்ப வந்துடுடாதே நாங்க ஒழுங்கா மீட்டிங் அட்டன் செய்யனும்” என்று அவளை கையெடுத்து கும்பிட்டான்.
மற்ற மூவரும் அவளைப் பார்த்து ஆமாம் என்பது போல் தலையசைத்தனர்.சிற்பி உதட்டை சுழித்துக் கொண்டு “ரொம்பத் தான்” என்று அங்கிருந்து சென்று விட்டாள்.
அவள் அங்கிருந்து செல்ல இவர்கள் சாம்பவியின் அறைக்குச் சென்றனர்.அங்கே இவர்கள் போட்டி போட வேண்டிய மற்ற அணிகளைப் பற்றி பேசினர்.எல்லாம் முடிந்ததும் சாம்பவி நிரஞ்சனிடம் “எல்லாம் உங்களுக்கு ஓகே தானே?”
அவன் “ம்ம்… ஓகே தான்” என்றான்.
“சிற்பி பத்தி என்ன நினைக்கிறீங்க? அவ உங்களுக்கு ஓகேன்னா கண்டினியூ செய்யலாம் இல்லைன்னா வேற ஆளை போடனுமா?” என்று அவள் கேட்டதும் காந்தன் இடையினில் “சிற்பியை மாத்த வேண்டாம் அவங்களே வரட்டும் ஒருநாளிலேயே நல்ல பாண்டிங்கா,ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க” என்றான்.
நிரஞ்சன் வேண்டாம் என்று சொல்லி விட்டால் என்னசெய்வதென்று அவனே பதில் சொன்னான்.
அதைப் போலவே சஹாவும்,பார்த்தியும் “அவ ரொம்ப நல்லப் பொண்ணு” என்று சிற்பிக்கு நற்சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.நிரஞ்சன் அமைதியாக இருந்தான்.
சாம்பவி நிரஞ்சனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.மூவரும் பதில் சொன்ன பிறகு சாம்பவி “அவங்க பதிலைச் சொல்லிட்டாங்க நீங்க ஒன்னும் சொல்லலை சிற்பியைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?” என்றாள்.
மூவரும் அவனைப் பார்த்தனர்.எத்தனை பெண்களை அவன் இத்தனை நாட்களில் கடந்திருக்கிறான்.ஆனால் சந்தித்த முதல் நாளிலேயே அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனிக்க வைத்த அவளைப் பற்றி சிற்பி என்றதுமே அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.
சாம்பவி கொஞ்சம் சத்தமாய் “நிரஞ்சன்” என்றழைத்ததும் நிஜத்துக்கு வந்தவன் சாம்பவியிடம் “இவங்க மூணு பேருக்கும் ஓகேன்னா எனக்கும் டபுள் ஓகே” என்று சொன்னான்.
பிறகு நால்வரும் சாம்பவியிடம் சொல்லி விட்டு வெளியே வந்தனர்.அங்கே சிற்பி இருப்பாள் என்று நினைத்து அவளைத் தேடினார்கள்.
பார்த்தி “காந்தா சிற்பி இப்போ வருவாளா? வர மாட்டாளா? ஒன்னுமே சொல்லாமல் போயிட்டாளா?” என்று கவலையாகக் கேட்டான்.
அதைக் கேட்ட காந்தன் “சிற்பிக்கிட்டே போன் நம்பர் கேட்காமல் விட்டுட்டோம் நாளைக்கு வாங்கிக்கலாம்” என்றான்.
நிரஞ்சன் வேகமாய் “அவ நம்பர் நமக்கு எதுக்கு?”
சஹா “உனக்கு வே…வேண்டாம்னா விடு நாங்க வாங்கிக்கிறோம் இனிமேல் எ…எதாவது அவசரம்னா உடனே போன் போட்டு பேசிக்கலாம்ல அதுக்கு தான்” என்றான்.
பார்த்தி வேகமாக திரும்ப சாம்பவி அறைக்குச் சென்று “சிற்பி எங்கே?”
“சிற்பி வேலை முடிஞ்சதுன்னு வீட்டுக்கு அனுப்பிட்டேன் நாளைக்கு உங்க வீட்டுக்கே வந்திடுவாள்” என்று சொன்னாள்.
சாம்பவி சொன்னதை மூவரிடமும் வந்துச் சொன்னான்.நால்வரும் திரும்ப ஒன்றாக மகிழுந்தில் சென்றனர்.அப்பொழுது நால்வரும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தனர்.
சஹா “திரும்ப வ..வரும் போது சிற்பி இல்லாமல் போக கஷ்டமா இருக்கு அவ இருக்கும் போது ந…நல்ல கலகலப்பா இருந்துச்சுல்ல” என்றான்.
பார்த்தியும் காந்தனும் ஆமாம் என்று தலையசைத்தனர்.நிரஞ்சனுக்கும் அவள் சொல்லாமல் போனது கவலையாக இருந்தது.ஆனால் அவன் அமைதியாக இருந்தான்.
பார்த்தி “காந்தா நம்ம எல்லோரையும் ஒரே நாள்ல மிஸ் செய்ய வைச்சுட்டா பாரேன்”
“ஆமாம் இதுவே வேற பொண்ணாக இருந்தால் கண்டிப்பா சின்ன கர்வமாக இருக்கத் தான் செய்யும் அப்புறம் பொய்னா எவ்வளவு விலைன்னு கேட்பாள் போல”
“ஏன் என்னாச்சு?” என்றான் பார்த்தி.
“ஒரு விஷயத்துக்காக பொய்கூட சொல்லத் தெரியலை” என்று சிரித்தான்.
அவர்கள் மூவரும் அவளைப் பற்றி வெளிப்படையாய் பேசிக் கொண்டு வந்தனர்.ஆனால் நிரஞ்சன் எதுவும் சொல்லாமல் அவர்கள் பேசுவதைக் கேட்டு மனதில் சிற்பியை நினைத்து சிரித்துக் கொண்டு வந்தான்.
சிற்பி சபரியுடன் வீட்டிற்கு வந்திருந்தாள்.அவளை வாசலில் வரவேற்ற செழியன் “என்ன மேடம் முதல் நாள் எப்படி இருந்துச்சு?”என்று ஆர்வமாகக் கேட்டான்.
சிற்பியோ அருகில் சபரி இருப்பதை கண்ணால் காட்டி சைகை மொழியில் பேசினாள்.உடனே செழியன் வாயை மூடிக் கொண்டான்.சிற்பி தன் அறைக்குள் சென்று விட்டாள்.அங்கே வந்த பூர்ணாவும் செழியனும் அன்று நடந்த விஷயங்களைப் பற்றி கேட்க சிற்பியின் அறைக்குள் நுழைந்தனர்.
அவளோ சோர்வாய் படுத்து இருந்தாள்.அவளைப் பார்த்த பூர்ணா “என்ன சிற்பி முதல் நாளே இவ்வளவு டயர்டா இருக்கே? அதை விடு இன்னைக்கு என்னாச்சு?”
என்று கேட்டார்.
“ம்ஹீம்….ஆஆஆ… அம்மா” என்று அழத் தொடங்கினாள்.
அதைப் பார்த்து பதறிய இருவரும் “என்னாச்சு சிற்பி ஏன் அழுறே? அம்மாவை தேடுதா? ” என்று அக்கறையாகக் கேட்டனர்.
“இல்லை நான் அதுக்காக அழலை” என்று திரும்பவும் அழுதாள்.
“பின்னே எதுக்காக அழுறே?” என்று கேட்டான் செழியன்.
பூர்ணாவின் மடியினில் சாய்ந்துக் கொண்டவள் “அத்தை மாமா என்னை வேலைல சேர்த்து விடலை பேஜ்லர்ஸ் ரூம்ல சேர்த்து விட்டுட்டாங்க ஹேஹேஹேஹே…” என்று திரும்பவும் அழுதாள்.
செழியன் அவள் கைகளில் ஒரு அடி போட்டவன் “ஹேய் வாயை மூடு சும்மா அழுறேன்னு பேருல கத்திட்டு இருக்கே” என்று அவளை அதட்டினான்.
“அத்தை பாருங்க இவன் அடிச்சான்ல நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்றாள்.
அதைக் கேட்ட செழியன் “நினைச்ச மரியாதையா பேசு இல்லைன்னா வாடா போடா நல்லா இருக்குது நீ கொடுக்கிற மரியாதை” என்று அவன் புலம்பிக் கொண்டிருந்தான்.
பூர்ணாவோ “செழியா அமைதியா இரு சிற்பி டென்ஷனா இருக்கால்ல எதாவது பேசி அவளை தொல்லை பண்ணாதே நீ சொல்லு கண்ணு என்னாச்சு?” என்று அவன் தாய் கெஞ்சி கொஞ்சுவதைப் பார்த்தவன் வாய்விட்டே “ஐயோ… இவங்க என்னையா பெத்தாங்களா? இல்லை இவளையா?” என்று செழியன் ஆதங்கப்பட்டான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
+1
⬅ Prev Episode
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -14
Next Episode ➡
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -16
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நினைச்சேன் சிற்பி இப்படி தான் பண்ணுவா அப்படின்னு … வெளில ஜாலியா இருக்க மாதிரி இருந்துகிட்டு 😜😜
அருமையான பதிவு 👏
பாவம் அந்தப் பொண்ணு
வெளியே சிரிச்ச மாதிரி நடிச்சுட்டு உள்ளே அழுவுது