
வீட்டிற்கு வரும்வரை பெண்ணவளின் கன்னங்கள் கண்ணீரால் நனைந்து கொண்டிருக்க, ஆடவனுக்கு தான் அவளின் நிலையில் உள்ளம் வெடித்தது, அதோடு அவளின் இந்நிலைக்கு ஒரு வகையின் தானும் காரணமாகியதில் தன்னை காயப்படுத்திக்கொள்ளும் அளவு கோவம் எழ, பெண்ணவளுக்காக தன் உணர்வுகளை உள்ளுக்குள் அடக்கி துடித்தான்.
வீடு வந்தது கூட தெரியாமல் பெண்ணவள் அப்படியே அமர்ந்திருக்க, அவள் பக்கம் கார் கதவை திறந்து தன்னவளை கையில் ஏந்தி கொண்டு தன்னறைக்கு சென்று படுக்கையில் கிடத்த, அழுத்தமாக இருந்ததில் ஆடவனின் மார்பில் சாய்ந்து விசும்ப,
அவள் தலையை வருடிகொடுத்த ரேயன் “யாழி இன்னும் எவ்வளவு நேரம்டி இப்படி அழுதுட்டே இருக்க போற.. சீக்கிரமே ஜோஸப் நம்மகிட்ட வந்திருவான் நம்ம எல்லாரும் பழையப்படி ஜாலியா இருக்க போறோம்.. சோ பழச மறந்துட்டு நடக்க வேண்டியத பாக்கலாம்” என்க,
அதை சிறிதும் காதில் வாங்காத தியாழினி “நான் தான் ஜோஸா இந்த நிலைக்கு காரணம் தப்பு பண்ணிட்டேன் ரே.. அன்னைக்கு நிதானமா இருந்துருக்கணும் என்னாலேயே என்ன கன்ட்ரோல் பண்ண முடியல.. ஒருவேளை ஜோஸா குறுக்க வரமா இருந்திருந்தா.. என் உயிர் தான் போயிருக்கும்.. நான் செத்து போயிருந்தா எல்லாரும் சந்தோசமா இருந்துருப்பீங்க தான.. ப்ரெக்னன்ட்டா இருக்கும் போது வாகி ரொம்ப ஃபீல் பண்ணியிருப்பா.. நான் தானே எல்லாத்துக்கும் காரணம்” என்று சொன்னதை பெண்ணவள் திருப்பி திருப்பி ஆடவனுக்கு அவளை சரி செய்ய வழி தெரியாமல் திண்டாடி போனான்.
மேலும் தொடர்ந்தவள் “என்னால முடியல ரே ரொம்ப வலிக்குது.. எவ்வளவு தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது.. நான் இருக்கிறது தான் பிரச்சனை நான் செத்து போறேன்” என்று வேகமாக அவனைவிட்டு எழுந்தவள், அருகிலிருந்த கத்தியை எடுத்து கழுத்துக்கிட்டே கொண்டு செல்ல,
பெண்ணவளின் செயலில் பதறி துடித்த ரேயன் “யாழி நோ கத்திய கீழ போடு.. வேண்டாம் யாழி தப்பான முடிவு எடுக்காத.. நான் இருக்கேன்டி உனக்கு.. உன்ன நம்பி இப்போ குட்டி பாப்பா இருக்காடி” என்றதும் பெண்ணவளின் பிடி தளர,
அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவளிடமிருந்து கத்தியை பறித்து அறை விட்டவன் “பைத்தியமாடி உனக்கு.. கொஞ்சம் கூட யோசிக்காம அறிவு கெட்ட தனமா பன்றியே.. உனக்காக இருக்கிற அத்தன உயிர் பத்தி உனக்கு கவல இல்ல தான.. எல்லாரையும் விடு உன் உயிர் இந்த பூமிய விட்டு போனா நான் மட்டும் எப்படி உயிரோட இருப்பேன் நினைச்ச..” என்று அவளை இழுத்து அணைத்து “வேண்டாம் யாழிமா.. இதெல்லாம் தப்புடி என் யாழி எல்லாத்தையும் கம்பீரமா ஃபேஸ் பண்ணுவா தான.. உன்னோட கம்பீரம் விளையாட்டு தனம் இது தான் நீ யாழி அத பாத்து தான்டி உன்கிட்ட விழுந்தேன்.. இனி இந்த மாதிரி முட்டாள்தனம் பண்ணாத யாழி..”
“ரே எனக்கு வாழ தகுதியே இல்ல ரே.. நான் ரொம்ப அசிங்கமானவ என்னால எல்லாருக்கும் ஆபத்தும் அசிங்கம் தான்.. எதுக்கு நான் எல்லாருக்கும் பாரமா இருக்கணும் ரே” என்று மறுபடியும் பெண்ணவள் பழைய பல்லவியை பாட,
அதில் தன்னவளை கையில் ஏந்தி குளியல் அறைக்குள் நுழைந்தவன், அவளின் அழுத்தத்தை குறைக்க எண்ணி ஷவரின் கீழ் நிற்க வைத்து தண்ணீரை திறந்து விட்டு, அவளுடன் தானும் தண்ணீரில் நின்று தன் வேதனையை தனித்தான்.
தண்ணீரில் நின்றும் பெண்ணவளுக்கு அழுத்தம் குறைய மறுக்க, ஏதேதோ சிந்தித்து பெருமூச்சு விட்டவள் ஆடவனின் இதழை வன்மையாக கவ்விக் கொண்டாள்.
அவளின் முத்தத்திற்கு இசைந்து கொடுத்து பெண்ணவளின் அழுத்தத்தை குறைக்கும் பணியை தானே கையில் எடுத்து கொண்டான்.
தண்ணீர் தீர்ந்தது கூட தெரியாமல் இருவரின் முத்த போர் நீண்டு கொண்டேயிருக்க, ஈரத்தில் பெண்ணவளின் உடல் குளிர்ந்ததை உணர்ந்து அவளை அள்ளி கொண்டு வெளியே வந்து படுக்கையில் கிடத்தியவன் பெண்ணவளின் ஈர உடைக்கு விடுதலை அளித்துவிட்டு தன்னுடைய உடைக்கும் அளித்தவன்,
தானே ஆடையாகி பெண்ணவள் மேலே படர்ந்து தன்னவளின் அழுத்தத்தை குறைக்கும் பணியில் ஈடுப்பட்டு வேறு உலகிற்கு அழைத்து சென்று பெண்ணவளை பறக்க வைத்தான்.
****
மறுநாள் காலையில் கண்விழித்த தியா படுக்கையில் மறுபுறம் கையை துலாவி காலியாக இருப்பதை உணர்ந்து எழுந்து அமர்ந்து அறை முழுவதும் பார்வையை சுழலவிட்டவளின் கண்ணில் பட்டதோ,
அவளுக்காக ஆடவன் எடுத்து வைத்து சென்ற ஆடை தான், அதில் மெல்ல இதழ் விரித்தவளின் எண்ணமோ நேற்றைய இரவை நினைவுப்படுத்தி முகத்தை செம்மையாக மாற்ற, தன்னை போர்த்தியப்படியே அவன் எடுத்து வைத்த ஆடைகளை எடுத்து கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
அவள் இருக்கும் மனநிலையில் பெண்ணவளை சங்கடப்படுத்த வேண்டாமென்று எண்ணிய ரேயன், அவள் எழும் முன்னே குளியலை முடித்துவிட்டு அவளுக்காக சமையல் அறையில் தேனீர் போட சென்றான்.
அவளுக்காக கோப்பையில் தேனீர் ஊற்றிவிட்டு கடிகாரத்தை பார்த்தவன், அவள் எழும்பும் நேரம் என்று அறிந்து தேனீருடன் அறைக்குள் செல்ல,
அடுத்த ஐந்து நிமிடத்தில் குளியல் அறையிலிருந்து வெளியே வந்த பெண்ணவளின் முகத்தில் தெளிவை கண்டு நிம்மதியடைந்த ரேயன் “குட் மார்னிங் யாழி” என்று தேனீரை நீட்ட,
“குட் மார்னிங் ரே” என்று பதிலளித்து புன்னகைத்துவிட்டே தேனீரை வாங்கி குடித்தாள்.
அவளின் மேல் ஆடவனின் பார்வை ரசனையாக பட, பெண்ணவள் தான் சிவப்பேறிய கன்னத்தை மறைக்க படாது பாடுப்பட்டு போனாள்.
பின் அவன் பார்வையை கண்டு கொள்ளாத போல் தயாராகியவள் “போலாமா” என்று கேட்டவளை இழுத்து இதழ் பதித்தவன் “லவ் யூ யாழி.. பழைய கோட்டெல்லாம் அழிச்சிட்டு புதுசா காதலிக்கலாமா” என்று கண்ணடிக்க,
அதில் பழையப்படி பெண்ணவளின் முகம் இறுக்கத்தை தத்தெடுத்து கொள்ள, அவனை தள்ளியவள் “நரேன் நீ என்ன டிரை பண்ணினாலும் நான் இழந்த எதையும் உன்னால மீட்டு கொடுக்க முடியாது.. சோ இழந்தது இழந்ததாவே இருக்கட்டும் புதுப்பிக்க எந்த அவசியமும் இல்ல அண்ட் நேத்து நைட் எனக்கு ஸ்ட்ரெஸ் குறைக்க நீ தேவைப்பட்ட சோ உன்ன எடுத்துகிட்டேன்.. அதையே காரணமா வச்சி அட்வாந்தேஜ் எடுக்க டிரை பண்ணாத.. எனிவே தேங்க்ஸ் ஃபார் த கோ – ஆபரேஷன்.. உனக்கும் இது போல ஸ்ட்ரெஸ் ரிலீப் தேவைப்பட்டா ஐ கேன் ஹெல்ப்” என்க,
அவள் பேச பேச ஆடவன் கண்கள் சிவந்துவிட, பெண்ணவள் இறுதியாக கூறிய வார்த்தையில் “ஏய்..” என்று கர்ஜித்து அடிக்க கை ஓங்கியவன், அவளை அடிக்காமல் சுவற்றில் குத்தி சென்று விட, அவன் போன திசையே கண்களில் கண்ணீர் தேங்க பார்த்து “சாரி ரே.. நான் உனக்கு வேண்டாம்” என்று தனக்குள்ளே ஆடவனிடம் மன்னிப்பு கேட்ட பாவை கீழே வந்து காரில் ஏறி கொள்ள, பெண்ணவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தவனின் முகம் மட்டும் கோவத்தில் அனலாக தகித்தது.
“***
நேற்று அவர்கள் இருவர் சென்றதும் மற்றவர்களை அறைக்குள் அனுப்பிவிட்ட ஆர்யன் வாகியை தன்னறைக்கு அழைத்து சென்று அமர வைத்து “வாகி ஜோஸா மாம்ஸ் சீக்கிரம் நம்மகிட்ட வந்திடுவார்.. நீ நல்லா தூங்கி எந்திரி.. நான் நீயிருந்த ரூம்ல சர்வா பேபிஸ் கூட தூங்குறேன்.. நீ இங்க இருந்துக்க மார்னிங் வந்து உன் ஜோஸாவ பாக்கலாம்..” என்று கூற,
அதை கேட்டு கொண்ட வாகி, அவனின் மடியிலே தலை சாய்த்துக்கொள்ள மெல்ல தமக்கையின் தலையை வருடி விட்ட ஆர்யா, எப்போதும் உணர்வுகளை வெளியே அழுது கொட்டிவிடும் பாவை, இப்போது அமைதியாக இருக்கவும் வயிற்றில் புளியை கரைக்க “வாகி ஏன் இப்படியிருக்க இது நல்லது இல்ல அழுகனும்ன்னா அழுதுரு” என்க, அவன் கூறியதை செவியில் ஏற்றாமல் கண்களை மூடி உறங்கி விட்டாள்.
பின் அவளின் தலையை தலையணையில் வைத்துவிட்டு எழுந்தவன் யாழிசையிடம் கண்ணை காட்டிவிட்டு செல்ல, வாகியுடன் உறங்கிய பட்டம்மாள் ருத்ரன் மற்றும் தேவியின் அறைக்கு சென்று விட்டார்.
சர்வாவிற்கோ தியாழினியை அந்நிலையில் பார்த்துவிட்டு செல்ல மனதில்லாமல் போக, ஆர்யனுடன் உறங்கி கொண்டவன் பெண்ணவளை மறுநாள் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு கூட விடுபெடுத்து அவளுக்காக காத்திருந்தான்.
காலையில் கூறியது போல் ஜோஸப் இருந்த அறைக்கு அவளை இழுத்து சென்ற ஆர்யன், ஜோஸப்பை சக்கர நாற்காலியில் அமர வைத்துவிட்டு அங்கிருந்த ஜன்னலில் வரும் வெளிச்சம் படும்படி சக்கர நாற்காலியை தள்ளி வைத்துவிட்டு “வாகி மாம்ஸ்கிட்ட பேச்சு” என்றதும் பெண்ணவள் “ஜோ” என்று அழைக்க ஆடவனின் கையில் அசைவு, அதில் நேற்றியிலிருந்து உணர்வுகளை அடக்கிய வாகியின் கண்களில் கண்ணீர் தேங்கி விட, ஆர்யனிடம் “டேய் டேய் ஜோ கை கை அசையுது தான” என்று தட்டு தடுமாறி கேட்டு வைத்தாள்.
அவளை தோலோடு அணைத்த ஆர்யன் “ஆமா நான் சொன்னேன்ல முன்ன இருந்ததுக்கு மாம்ஸ்கிட்ட இம்ப்ரூவ்மெண்ட் இருக்குன்னு.. அது தான் நீ இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சதுல இருந்து அவர்கிட்ட இந்த மாற்றம் வந்துச்சு.. சோ தைரியமா பேச்சு” என்று விட்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியே வர,
அப்போது தான் தியாழினி வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவள் வரவையே எதிர்பார்த்து காத்திருந்த சர்வா, தியா வரவும் ஓடி சென்று அணைத்து “ஆர் யூ ஓகேடி” என்று கண்களில் தவிப்போடு வினவ,
அதை உணர்ந்து கண்கள் சிமிட்டி சிரித்தவள் “நீ இங்கேயே டேரா போட்டியா.. கிளினிக் போகல”
“இல்லடி.. இன்னைக்கு எந்த இம்பாட்டேண்ட் கேஸ் இல்ல.. அதான் லீவ் போட்டுட்டு இங்கேயே இருக்கலாம்ன்னு” என்றதை கேட்டு அவனின் தலையில் அடித்த தியா “மருத்துவரே உங்களின் அன்பை கண்டு நான் வியக்கேன்” என்று நக்கலுடன் நேரே ஆர்யன் அறைக்குள் வந்தவள்,
வாகினி பேசியதை கேட்டு கால்கள் ஜோஸப் இருக்கும் இடத்திற்கு செல்ல மறுத்தது.
நேற்று அவள் தனக்காக தான் அழவில்லை என்ற நிதர்சனமும் புரிந்து வெளியே வந்த தம்பி தன்னை கண்களால் நலம் விசாரிப்பதில் தலையாட்டி பதில் அளித்துவிட்டு வந்தவள் ரேயன் இல்லாததை உணர்ந்து சர்வாயிடம் “ரே எங்க சர்வா”
“நீ உள்ள வந்ததும் கார் எடுத்துட்டு மறுபடியும் போயிட்டார்டி..” என்றதை கேட்டு கொண்டு அவனின் கோவம் உணர்ந்தவள்,
அன்றைய நாள் முழுவதும் சர்வாவுடன் பேசி கழித்தவள்,
அவன் சென்றதும் இரவு உறங்கும் வேலையில் கூட ரேயன் வராததில் தான் காயப்படுத்தியதை நினைத்து தன்னவன் நினைவில் உறக்கம் தொலைத்து விட்டாள்.
அன்றைய தினம் ரேயன் மட்டுமின்றி ருத்ரனும் வீட்டிற்கு வரவில்லை,
இரவு முழுவதும் இருவருக்கும் மாறி மாறி அழைத்து தோற்ற தியா, மறுநாள் காலையில் வாகியின் திறன்பேசி மூலம் அழைத்து பார்க்க, அப்போதும் தோல்வியே கிட்டியதில் ஆடவனுக்கு குறுஞ்செய்தியும் போட்டுவிட்டு பதில் வருகிறதா என்று ஓராயிரம் முறை திறன்பேசி பார்ப்பதில் நேரம் செலுத்தினாள்.
பின் இன்று தர்மராஜ் உடன் இருக்கும் சத்யாவிற்கு பரிசோதனை இருப்பதால் பத்து மணிபோல் அனைவரிடமும் விடை பெற்று மருத்துவமனைக்கு சென்றிருக்க, அங்கோ அவளுக்கு முன்னே ரேயன் வந்திருந்தான் கூடவே பரிசோதனைக்கு தங்களின் நம்பிக்கையான ஆட்களை அழைத்தே வந்திருந்தான்.
அவனை கண்டதுமே பெண்ணவளின் முகம் கோவத்தில் சிவந்து போக, அவனின் எதிரே சென்று “உனக்கு எத்தன முறை கால் பண்றேன்டா.. எடுத்து இங்க தான் இருக்கேன் சொல்ல என்ன வலிக்கு” என்றவளுக்கு அவன் தன்னை நிராகரித்த காரணத்தில் கண்களும் கலங்கியது.
அவளை கேலியாக பார்த்த ரேயன் “நீ எப்படியும் உன் ஸ்ட்ரெஸ குறைக்க தான என்ன தேடிருப்ப.. ஆனா அதுக்கான நேரம் என்கிட்ட இல்ல கொஞ்சம் கேஸ் விஷயமா பிஸியா இருந்தேன்.. அதான் அட்டென்ட் பண்ணல” என்று அவள் பேசியதை பெண்ணவளுக்கே திருப்பி கொடுத்தான்.
அதில் அதிர்ந்து “ரே..” என்ற தியாவிற்கு தான் உபோகித்த, அதே வார்த்தைகள் என்ற வீரியம் இப்போது தான் விலங்க, தவறு செய்துவிட்ட சிறு பிள்ளை போல் அவனையே பார்த்திருந்தாள்.
அதன் பின் ருத்ரனும் அவர்களுடன் இணைந்து கொள்ள, தர்மராஜும் சத்யாவுடன் வந்து சேர, கர்ப்பவதியான சத்தியாவின் கையிலிருந்து ரத்தமும் எடுக்கப்பட்டது.
பத்து நிமிடத்தில் தியாவே சென்று பரிசோதனை ரிப்போர்ட் வாங்கி வந்திருக்க, மூவருக்குமே தனக்கு சாதகமாக முடிவு வருமென்ற நம்பிக்கையில் இருக்க, பதற்றமில்லாமல் புன்னகை முகத்துடன் இருந்த தர்மராஜை கண்டு மூவருக்கும் குழப்பமும் ஒரு புறம் இருந்தது.
அவரை அழுத்தமாக பார்த்தப்படியே பரிசோதனையை பார்த்த தியாவின் கண்கள் வெளியே விழுந்து விடுமளவு விரிந்து கொள்ள, அவளின் நிலையை கண்டு கையிலிருந்ததை வாங்கி பார்த்த இருவருக்குமே திகைப்பு தான்.
ஆம் இப்போது செய்த பரிசோதனையில் கற்பவதி சத்யாவின் ரத்த வகை ஓ பாஸிட்டிவ் என்றே வந்திருக்க, தர்மராஜ் கூறியது போல் அன்பு இல்லத்திலிருந்த சத்யா தான் இப்பெண் என்று உறுதியாகி விட்டது. இது எப்படி சாத்தியம் என்பது தர்மராஜை மூவரும் ஏறிட,
வெற்றி புன்னகைக்யுடன் அவர்களின் அருகில் வந்தவர் “இப்போ நம்புறீங்களா நான் சொன்னது உண்மை.. மந்தாகினி கூட்டி வந்த சத்யா இவங்க தான்.. நீங்க வழக்கு விஷயமா தேடுறது சத்யா போல இருக்கிற ஜெராக்ஸ் சோ இனியாவது என் வழில வராம அந்த பொண்ணுக்கு என்ன நடந்துச்சுன்னு தேடி கண்டுபிடிச்சி புரொமோஷன் வாங்குங்க” என்று மூவரையும் பார்த்து இளக்காரமாக சிரிக்க,
அதை சிரிப்பை பதிலாக கொடுத்த ரேயன் “இப்போவும் சொல்லுறேன் டாக்டர் உங்க கூட இருக்கிற பொண்ணு அன்பு இல்லத்துல இருந்த பொண்ணு இல்ல.. நீங்க என்ன சதி பண்ணி உண்மைய அடைச்சாலும்.. அடுத்தடுத்து கதவு திறந்துட்டு தான் இருக்கும்.. எத்தன போலி சாவி ரெடி பண்றீங்கன்னு பாக்கலாம்.. இப்போயிருந்து என்னோட கவுண்ட் ஸ்டார்ட் அண்ட் கவுண்டிங்
முடிச்சி வைக்க போறதும் நான் தான் மே பீ இன்னைக்கே கூட முடிக்கலாம் ரெடி டூ ஃபேஸ் த வார்” என்றவன் வெற்றி புன்னகையுடன் அவர் செல்ல வழிவிட்டு நிற்க, அவனை அழுத்தமாக பார்த்துவிட்டு தர்மராஜ் அங்கிருந்து விடை பெற,
தியாவிற்கோ அவரை அடித்து கொன்று விடலாமா என்ற என்ற கொலவெறியில் பார்த்திருந்தாள்.
பின் மூவரும் மருத்துவமனைக்கு வெளியே வந்திருக்க, ருத்ரன் தான் “ரேயா.. நீ அவர்கிட்ட பேசினதா பாத்தா நம்ம தேடுற ஆளே அவர் தான் போல..”
“ஒரு கெஸ் இருக்கு கன்பார்ம் பண்ணிட்டு சொல்லுறேன்” என்றதை கேட்டு வாயில் கை வைத்தவன் “அடப்பாவி.. உனக்கே சரியா தெரியல மாஸா பஞ்ச் டயலாக்லாம் விட்ட” என்க,
அவனின் தோலில் கைப்போட்ட ரேயன் “மச்சி சும்மா கெத்தா இருக்கட்டுமேன்னு அடிச்சி விட்டு கிளப்பி விட்ருக்கேன்.. பயபுள்ள பதற்றத்துல அதுவே ஏதோ செஞ்சி நமக்கு வாழ பழத்த உருச்சி கொடுத்தா கசக்கவா செய்யும்”
“சரி தான்.. இப்போ நமக்கு கிடைச்ச மெயின் எவிடென்ஸ் ரிப்போர்ட் இப்படி சதி பண்ணிடுச்சே” என்க,
அவ்வளவு நேரம் கடு வெடிக்க அமர்ந்திருந்த தியா “டேய் டெஸ்ட் ரிப்போர்ட் கொடுத்தது நம்மாளுங்க தான் இதுலயிருந்து கன்பார்ம் செத்து போனா சத்யா அண்ட் அவள போலவே தர்மராஜ் கூட இருக்கிற பொண்ணு.. ரெண்டு பேருக்குமே ஒ பாஸிட்டிவ் தான் பிளட் குரூப்.. அன்னைக்கு நான் பண்ணின பிளான் தெரிஞ்சி பயபுள்ள ஏதோ வேலை பாத்து விட்டிருக்கு” என்று மூக்கு புடைக்க பேசியவளை கண்டு இதழ் கடித்து சிரிப்பை அடக்கிய ருத்ரன் “சரி விடு.. ரேயா அடுத்து பிளான் என்ன” என்று கேட்க,
அவன் கூறியதில் இருவரும் திகைத்து பின் கொலவெறியில் நிற்க, அந்நேரம் மூவருக்கும் அடுத்து அடுத்து வந்த அழைப்பு அவர்களை அதிரவைத்து உயிரையே உலுக்கியது.
தொடரும்…
– ஆனந்த மீரா 😍😍

