
உலகமே தூங்கி கொண்டிருக்க, மூவரும் காரில் யாழிசை கூறிய விலாசத்தை வந்தடையடைந்தனர்.
தியாவோ பழைய நினைவுகளில் மூழ்கியிருக்க, பெண்ணவளை உலுக்கிய ரேயன் “தியா உன் மலரும் நினைவுகள மூட்ட கட்டி வச்சிட்டு நம்ம வந்த கடமைய ஆற்றுவோம்.. வரியா” என்க,
பெண்ணவள் பதில் பேசாமல் அமைதியாக இறங்கி கொள்ள, ரேயனுக்கு அவளின் அமைதி கொல்லாமல் கொன்றது.
பின் மூவரும் பூட்டப்பட்டிருந்த யாழிசை கூறிய வீட்டு வாசல் முன் நிற்க, பெண்ணவள் அங்கிருந்த ராடை எடுத்து பூட்டை உடைக்க செல்ல, அவளின் கையை பற்றிய ருத்ரன் “மச்சி பூட்டு உடைக்கும் போது வெளியே சத்தம் வரும்” என்க,
அதை கேட்டு சலித்த பெண்ணவள் கைலியிருந்ததை கீழே வைக்க குனிந்த சமயம் பெண்ணவள் கொண்டையிட்டு குத்தியிருந்த முள் ஊசியை ரேயன் இழுத்து ருத்ரனிடம் திறக்க கொடுக்க, அவனின் செயலை எதிர்பாராத தியா முடி முன்னே விழுந்ததில் நிமிர்ந்தவள் தடுமாறிவிட்டாள்.
அதை உணர்ந்து பெண்ணவளின் இடுப்பை லாவாக பிடித்து கொண்ட ரேயன், அவளின் மதி முகத்தை மறைக்கும் முடிகளை மெல்ல விலக்கி இரவு வெளிச்சத்தில் கண்டு சித்தம் இழந்து மொத்தமாக அவளிடம் விழுந்தவனின் பார்வை தான் கொடுத்த காயத்தால் உண்டான கை தடம் பதிந்த கன்னத்தை மெல்ல வருடி முத்தமிட குனிய,
தியாவோ அவனின் நெருக்கத்தில் தன்னை தொலைத்து வருடலில் சிலிர்த்து அவனின் முத்தத்தை ஏற்க கண்கள் மூடிய சமயம், ருத்ரன் கதவை பட்டென்று திறந்ததில் இருவரும் சுயம் பெற்று நகர, இருவரையும் ஒரு மார்க்கமாக பார்த்த ருத்ரனோ ‘ரெண்டு பேரும் சரியில்ல..’ என்று நினைத்துவிட்டு “ஏதோ ரகசியம் ஓடுது போல மச்சி.. ஆனா அடுத்தவ ஐபோன்ல ஆயுத பூஜை பண்றது ரொம்ப தப்பு மச்சி.. அது உன் எக்ஸா இருந்தாலும் தப்பு தான் மச்சி” என்றுவிட்டு உள்ளே செல்ல,
அவனின் பேச்சில் செருப்பால் அடித்தது போல் உணர்ந்த தியா ஆடவனை எரித்து விடுவது போல் பார்க்க,
அவனோ தான் செய்த காரியத்தை நினைத்து தலையில் அடித்து கொண்டு ‘நோ ரேயா.. உன்ன நம்பி வாகி இருக்கா.. தியா எக்ஸா இருந்துருக்கலாம் அதுக்காக எல்லாத்தையும் மறந்துட்டு அவ பக்கம் சாய்வியா ரொம்ப தப்புடா.. வாகிக்கு விஷயம் தெரிஞ்சா உடைஞ்சு போயிடுவா.. அவளுக்குன்னு இப்போ நான் மட்டும் தான்.. இனி தியாவ விட்டு தள்ளியேயிருக்கனும்’ என்ற முடிவுடன் பெருமூச்சுவிட்டு முறைப்பளை கூட கண்டு கொல்லாமல் உள்ளே செல்ல, அவனை பின் தொடர்ந்து பெண்ணவளும் சென்றாள்.
மூவரும் தொடர்ந்து அரைமணிநேரம் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டும் எதுவுமே கிடைக்காமல் போக, தியாவோ இங்க ஒன்னும் கிடைக்காது போல டைம் வேஸ்ட் என்று சலித்து கொள்ள, ஒப்புக்கொண்டு தலையாட்டிய ருத்ரனின் பார்வை ஒரு இடத்தில் புருவம் சுருங்க “வெயிட்..” என்று கூறிவிட்டு அடியிலிருந்து தான் கண்டதை எடுத்து அவர்கள் முன் நீட்ட,
“இன்ஜெக்சன் கேப்பா?” என்று இதழ் அசைத்து கையில் வாங்கிய தியா “ஒருவேளை பொண்ணுங்கள ரேப் பண்ண இஞ்செக்சன் பயன்படுத்திருப்பாங்களா” என்க,
யாழிசை கூறியதை சிந்தித்த ருத்ரன் “மயக்கத்துல இருக்கிற பொண்ணுங்களுக்கு எதுக்குடி இஞ்ஜெக்சன் போடணும்” என்க, இவர்களின் உரையாடலை கேட்டவாறு சுற்றி வேற எதுவும் கிடைக்கிறதா என்று பார்வையை சுழலவிட்டவனின் கண்ணில் ஊசி மருந்தின் கவர் தென்பட அதனை கையில் எடுத்து பெயரை ஆராய்ந்தவனுக்கு அதன் அர்த்தம் ஒன்றும் புலப்படாமல் போக,
அவனிடமிருந்து வாங்கிய தியாவோ “நாளைக்கு சர்வாகிட்ட இத காட்டி விசாரிக்கலாம் ரேயா..” என்று தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்து பத்திரப்படுத்தி கொண்டு “சரி போகலாம்” என்றதும் மூவரும் வெளியே வர, ஆடவர்கள் இருவரும் முன்னே செல்ல,
அவர்களின் பின்னே திறன்பேசியில் நாளை சந்திக்க வருவதாக சர்வாயிடம் குறுஞ்செய்தி அனுப்பியபடி வந்த தியா தன்னை கடந்து ஏதோ சென்றது போல் உணர்ந்து நிமிர்ந்தவள் கண்ட காட்சியில் “ரே” என்று கத்திவிட்டாள்.
*****
மருத்துவமனையும் வந்தாயிற்று உள்ளம் துடி துடிக்க அமர்ந்திருந்தவள், அங்கு போகும் வரும் செவிலியரை இடை மறித்து அவனை பற்றி விசாரித்து விசாரித்து பதில் கிடைக்காமல் சோர்ந்து அமர்ந்திருந்தாள்.
அப்போது வெளியே வந்த மருத்துவரிடம் விரைந்து சார் “ரே நல்லா இருக்கான் தான.. நான் போய் பாக்கலாமா” என்று செல்ல போனவளின் கையை பற்றிய ருத்ரன் “டாக்டர் அவன் ஓகே தான”
“சாரி மிஸ்டர் ருத்ரன் நாங்க எங்க ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு தான் இருக்கோம்.. ஆனா விஷம் தடவின கத்தி ஆழமா இறங்கினதுல எங்களால எதுவும் சுயரா சொல்ல முடியாது..” என்றதும் பெண்ணவள் இடிந்து அமர்ந்து விட,
மேலும் தொடர்ந்த மருத்துவர் “அதோட அவங்களுக்கு எப்போனாலும் பிளட் தேவைப்படலாம் அதுனால அவங்க ஃபேமிலி மெம்பர்ஸ் யாருக்கா இருந்தாலும் வர சொல்லிடுங்க.. அது போக நாங்களும் எங்க சைட் டிரை பண்றோம்” என்று கூறி செல்ல,
தியாவோ “வாகினிக்கும் ஆர்யாவுக்கும் அவன் பிளட் குரூப் தான் ருத்ரா” என்றதை கேட்டு தோழியை அழுத்தமாக பார்த்தவனுக்கு தோழியின் கதறல் தான் நினைவில் வந்தது.
காரில் ஏறும் போது ரேயனின் முதுகில் தூரத்திலிருந்து கத்தி வீசப்பட, அப்படியே அவன் விழுந்து விட்டான்.
பின் நொடியும் தாமதிக்காமல் ருத்ரன் அவனை உள்ளே கிடத்திவிட்டு பெண்ணவளும் ஏறியதும் காரை இயக்க, அவளோ “ரே” என்று ஆயிரம் முறை கதறி கூப்பாடே போட்டு துடித்து விட்டாள்.
தோழியின் எண்ணங்களில் இருந்து வெளியே வந்தவன், ஆர்யனிற்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டு பெண்ணவளின் அருகில் அமர்ந்து கையை பற்றியவன் “உன் ரேக்கு ஒன்னும் ஆகாது மச்சி.. உன்கிட்ட மறுபடியும் திரும்பி வருவான்” என்று அவளை ஆழம் பார்க்க, அதை உணர்ந்து பெண்ணவள் உணர்வற்று அவனையே பார்த்திருக்க
“இப்படி பார்த்தா என்ன அர்த்தம்.. உண்மைய சொல்லு மச்சி நீ ரேயன உன்னோட பாஸ்ட்ன்னு நினைச்சி கடந்து வந்துட்டியா?.. அவன் மேல கொஞ்சம் கூட லவ் இல்லையா” என்க,
பாவம் அவளால் எப்படி சொல்ல முடியும் அவன் தனக்கு துரோகம் செய்திருந்தாலும் மானங்கெட்ட மனது அவன் பின்னையே தறிகெட்டு ஓடுகிறதென்று அதோடு அவனை பிரிந்த காலம் இறந்த காலமென்று அவனை கடந்து வர முடியாமல், அவனின் நினைவுகளோடே வாழ்ந்தவளால் எப்படி கூற முடியும் அவன்மேல் உள்ள காதல் கொஞ்சமானது இல்லை வானத்தின் உயரத்தை அளக்க முடியாதளவென்று இருப்பினும் இன்னொருத்தியின் சொந்தமானவளை உரிமை கொண்டுமளவு பெண்ணவள் பேதையில்லையே,
அதனால் அவனிடம் விலக தான் நினைக்கிறாள் காயப்பட்ட மனதோ அவனிடமே ஆறுதல் தேடு என்கிறதே, இப்போராட்டத்தை மறுமுறை அவனை கண்ட நாளிலிருந்து சிக்கி கொண்டு தவிக்கிறாள்.
அவளின் அமைதியின் காரணம் புரிந்த ருத்ரன் “விடு மச்சி.. இதுக்கான பதில தான் என் கண்ணால இன்னைக்கு அந்த வீட்டுல வச்சி பாத்தேனே.. உங்க காதலோட ஆழத்த” என்க, தியாவோ அவன் துப்பறிய போன இடத்தில் நிகழ்ந்தவை தான் கூறுகிறான் என்று புரிய அமைதியாக தலையை கவிழ்த்து கொண்டாள்.
அவளின் தலையை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்த ருத்ரன் “வேண்டாம் மச்சி.. இனியும் உன் ரகசியத்த உள்ளுக்குள்ளயே அழுத்திக்க நினைக்காத.. அப்புறம் உனக்கு நண்பனா இருக்கிற தகுதிய நான் இழந்துருவேன்” என்றதும் விலுக்கென்று நிமிர்ந்த தியா “ருத்ரா..” என்று அழுத்தமாக அழைக்க,
“ஆமா மச்சி.. உன்னோட கஷ்டத்த ஷேர் பண்ணிக்க கூட நான் தகுதியில்லன்னா நண்பங்குற தகுதியும் இல்ல தான” என்றவனின் கண்களும் வலியின் சாயலால் கலங்கிவிட,
பெருமூச்சுவிட்டு வெடுக்கென்று எழுந்து அவசர சிகிச்சை அறையின் கதவின் புறம் சென்று, முதுகில் பட்ட காயத்தால் படுக்கையில் குப்புற கிடந்த தன் முன்னாள் காதலனை பார்த்தவளின் எண்ணங்கள் அவனை சந்தித்த நாளிலிருந்து தொடங்கியது.
****
மதுரை ரயில் நிலையத்தில் இரவு பத்து மணி போல் ஆர்யன் உடன் வண்டியில் வந்திறங்தினாள் தியாழினி.
ரயில் நிலையம் உள்ளே வந்த பெண்ணவள் சென்னை ரயிலில் ஏறி தான் கட்டணம் செலுத்தி பதிந்த இடத்தின் எண்ணை கண்டு பிடித்து தன் உடமைகளை அவ்விடத்தில் பத்திரப்படுத்தி வைத்தவள் ரயில் கிளம்ப நேரமிருப்பதால் தம்பியின் உடன் வெளியே நின்று பேசி கொண்டிருந்தாள்.
அப்போது அவ்வழியாக போய் கொண்டிருந்த கருப்பு டீ ஷார்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து சென்று கொண்டிருந்த ஆடவனின் பின் பாக்கெட்டிலிருந்த திறன்பேசியை ஒருவன் எடுத்து கொண்டு ஓட முயல,
அதை கண்ட தியா “ஆர்யா இரு வரேன்” என்று ஓடி சென்று, அவனை துரத்தி பிடித்து மூக்கிலே குத்து விட்டவள் “எருமை ஃபோன கொடுடா” என்று வாங்கி கொண்டு செவியிலையே இரு அறைவிட்டு “இனி நீ இப்படி பண்றத பாத்தேன் தோலை உரிச்சிடுவேன்.. ஓடி போ” என்றதும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவன் ஓடி விட,
திறன்பேசியுடன் வந்தவள் சுற்றி முற்றி அதனுடைய சொந்தகாரனை தேட, அப்போது அவ்விடம் வந்த ஆர்யா “இந்த போனுக்கு சொந்தகாரர் தான தேடுற அங்க நிக்கிறார் பாரு பிளாக் டீ ஷர்ட்” என்று கைக்காட்ட,
அவன் கைக்காட்டிய திசையில் பார்வையை திருப்பிய தியா, கருப்பு டீ ஷர்ட் அணிந்து முதுகு காட்டி தண்ணீர் குவளை வாங்கி கொண்டிருந்தவனை பார்க்க, அதே நேரம் பெண்ணவள் கையிலிருந்த திறன்பேசி அலறியது.
ஆர்யாவோ “ஏய் ஃபோன் அடிக்குது பாரு.. நான் போய் கொடுத்துட்டு வரேன்.. கொடு” என்று அவளிடம் வாங்க முயல,
கையை பின் நோக்கி இழுத்த தியா “அடேய் ஆளு பாக்கவே நல்லா ஃபிட்டா அம்சமா இருக்கார்டா எப்படியும் செம ஃபிகரா தான் இருக்கும்.. நான் போய் மூஞ்ச பாத்துட்டு சைட்ட போட்டுட்டு வரேன்” என்றவள் இரண்டு முறை அழைப்பு ஓயாமல் வந்ததில் யாரென்று பார்த்தவள் தொடுதிரையில் “அம்மா” என்று காட்டியதில் “அடேய் என் சைட் மம்மி தான் அடிக்கிறாங்க.. எடுக்கலன்னா மரியாதையா இருக்காது”
“ஏய் ஏய்..” என்று அவன் கத்தியது கூட, அவள் கண்டு கொள்ளாமல் காதில் வைக்க, மறுமுனையில் அவனின் அன்னை “நரேன் கண்ணா.. பங்ஷன் நல்லாப்படியா முடிஞ்சிதா எப்போ சென்னை கிளம்புற”
“ஹாய் ஆண்ட்டி.. உங்க நரேன் கண்ணா மதுரை ரயில்வே ஸ்டேஷன்ல தான் இருக்கிறார்.. அவர் ஃபோன ஒருத்தன் அடிச்சிட்டு போயிட்டான் ஆன்ட்டி.. நான் தான் அவன் முகத்துலயே குத்தி போன வாங்கிட்டேன் இருங்க அவர்கிட்ட கொடுக்கிறேன்” என்று ஆடவனின் அருகில் சென்று திறன் பேசியை நீட்டியப்படி “எக்ஸ்கியூஸ் மீ” என்றழைக்க,
சத்தம் கேட்டு திரும்பிய ஆடவனை கண்டு பெண்ணவள் விழி விரித்து உறைந்து நிலைக்கு சென்று விட, அவளின் கையிலிருந்த திறன்பேசியை பார்த்த ரேயனுக்கு தன்னோடது போல் தோன்ற,
பேண்ட் பின் பாக்கெட்டில் கைவைத்து துலவியவன் இல்லையென்றதும் கையிலிருந்த திறன்பேசியை “தேங்க்ஸ்..” என்று வாங்கி கொண்டு அன்னை அழைப்பு ஏற்கப்பட்டதை கண்டு நிலை மாறாமல் நின்றவளை புருவம் சுருக்கி பார்த்துவிட்டு அதனை காதில் வைத்து “சொல்லுங்க அம்மா”
“யாருடா அந்த பொண்ணு.. உன் ஃபோன் அவகிட்ட எப்படி”
“என் ஃபோன மிஸ் பண்ணிட்டேன்மா.. கொடுக்க என்ன தேடியிருப்பா அதுக்குள்ள நீங்க ஃபோன் பண்ணவும் அட்டென்ட் பண்ணியிருப்பா போல” என்றும் அவர் மாறி மாறி அவனை கேள்வி கேட்டு படுத்தி எடுக்க, அவனோ அன்னைக்கு பதில் கூறி திண்டாடி கொண்டிருந்தான்.
அவனையே நிலை மாறாமல் பார்த்திருந்த தியாவை கண்டு தலையில் அடித்து கொண்ட ஆர்யா நீட்டியப்படியிருந்த தமைக்கையின் கையை கீழே இறக்கிவிட்டு “பொட்ட பிள்ளையா குனிஞ்ச தல நிமிராம இருக்காம வாட்டர்பால்ஸ் வடிய இளிச்சிட்டு இருக்கா” என்று அவள் தலையில் கொட்டியவன் அடியே “நீ பாக்குற வேலைக்கும் பண்றதுக்கும் சம்மந்தமே இல்ல” என்க,
வலியில் தலை தேய்த்தவள் “ஏன் அந்த வேலை பாத்தா சைட் அடிக்க கூடாதுன்னு ரூல்ஸ் எதுவும் இருக்கா என்ன.. நான்லாம் கலெக்டரே ஆனாலும் சைட்யடிப்பன்டா எவன் கேப்பான்.. என் கண்ணு.. என் உரிமை”
“நீ செருப்படி அடி வாங்காம திருந்த மாட்ட.. தாராளமா வாங்கு உன்கூட நிக்கிற பாவத்துக்கு வொய் மீ வாங்கணும்” என்று நழுவ போனவனின் கையை பிடித்த தியா “நீயும் வாங்கணும்டா.. ஏன்னா நீ என் உடன்பிறப்பு” என்றதை கேட்டு ஆடவன் தமக்கையை முறைக்க, அதை கண்டு கொள்ளாமல் அவனை மேலும் சீண்டி கொண்டிருந்தாள்.
ஒருவழியாக அன்னையின் கேள்வியை சரிகட்டி அழைப்பை துண்டித்து இதழ் குவித்து ஊதியவன், அருகில் இருவரும் அவர்களுக்குள் பேசி கொள்வதை கண்டு குரலை செருமி பெண்ணவளை முறைக்க, அவன் கொடுத்த சத்தத்தில் ஆடவனின் புறம் பார்வையை திருப்பிய தியா, அவனின் முறைப்பிற்கு அர்த்தம் புரிந்து அசடு வழிந்தவள் “எதுக்கு பாஸ் முறைக்குறீங்க”
“இப்படி தான் அடுத்தவங்களுக்கு ஃபோன் வந்தா அட்டென்ட் பண்ணி பேசுவியா அறிவில்லை”
“இருக்க போய் தான் அட்டென்ட் பண்ணி பேசினேன் பாஸ்” என்றதை கேட்டு ‘பைத்தியமா இவ’ என்பது போல் அவன் பார்த்து வைக்க,
அதை கண்டு கொள்ளாமல் விளக்கத்தை கொடுத்த தியா “ஆக்சுவலி பாஸ்.. கால் வரும் போது உங்க அம்மா ஃபோட்டோ இருந்துச்சு பெரியவங்களா இருக்காங்க பேசாம இருந்தா மரியாதையா இருக்காதுல அதான் பாஸ்.. அண்ட் நீங்க சொன்ன ஒரு பாய்ன்ட் கரெக்ட் தான் அடுத்தவங்களோடது தான் எடுக்க கூடாது” என்று அவனை பார்த்து கண்ணடித்தவள் “உங்கள பார்த்த நிமிஷத்துலயிருந்து உங்கள என்னோட சைட்டா புரோமொட் பண்ணிட்டேன்.. சோ தப்பே இல்ல” என்று பெண்ணவள் காலரை தூக்கி பெருமை அடித்து அவனின் காரப்பார்வை அதிகரிக்க வைக்க,
ஆர்யாவோ “அடியே ஆள் பாக்க வெயிட்டா இருக்காரு ஓவரா பேசி அடி வாங்கி செத்துகித்து போயிடாத.. அப்புறம் உன்னோட முதல் டூயூட்டிக்கு உன் பொணத்த தான் அனுப்பி வைக்கணும்” என்று காதை அடிக்க, அதில் தம்பியை பல்லை கடித்து முறைத்த தியா, அங்கிருந்து செல்ல போன ரேயனை வழிமறித்து “ஹலோ பாஸ் முக்கியமான விஷயத்த சொல்லுறதுக்குள்ள போனா எப்படி” என்க, அவனோ “என்ன” என்று காட்டமாக பார்த்து வைக்க,
“உங்களுக்கு கொஞ்சம் கூட டீ டிகாஷன் இல்லையே பாஸ்.. நாடு கெட்டு கெடுக்குற நேரத்துல ஃபோன பின் பாக்கெட்ல எடுத்துக்கோன்னு வச்ச உங்க பரந்த மனச பாராட்டுறேன்.. ஏதோ உங்க நல்ல மனசுக்கு என்ன மாதிரி ஒரு நல்லவ கண்ணுல மாட்ட போய் எனக்கு தெரிஞ்ச வித்தைய காட்டி ஃபோன பத்திரமா உங்ககிட்ட சேத்துட்டன்.. ஆனா உங்க பரந்த மனச ரொம்ப பறக்க விடாம பாத்துக்கங்க.. ஏன்னா நீங்க என் சைட்ங்குறதுக்காக எப்போவுமே உங்க பின்னாடி சுத்தின என் புலப்ப யாரு பாக்குறது” என்க,
அவளை அலட்சியமாக பார்த்து வைத்து காதை குடைந்துவிட்டு பெண்ணவளை தான்டி சென்று ரயிலில் ஏறி கொண்டான்.
அவனின் பாவனையில் ஆர்யா வயிற்றை பிடித்து சிரிக்க, இரு ஆடவர்களின் செயலில் வருத்தப்பட்டாள் தியாழினி அல்லவே தூசு போல் தட்டிவிட்டு ஆடவன் ரயில் ஏறவும்,
அவன் செல்லும் இடங்களை நோட்டமிட்டவள் ‘என் சீட் ஒப்போசிட் உக்காரனும் பிளீஸ் கடவுளே’ என்று கலவரமாக பார்த்திருந்தவளின் தோலில் கைப்போட்ட ஆர்யன் “என்னடி அவர் ரியாக்ஷன் பாத்து ஃபீல் பன்றியா” என்று கேட்கவும் பெண்ணவள் நினைத்தது போல் ரேயன் அவளின் இடத்திற்கு எதிரே உக்காரவும் சரியாக இருக்க,
அதில் குஷியான தியா “எஸ்..” என்று குதித்து “சரி ஆர்யா நான் ட்ரெயின் ஏறுறேன்.. பத்து நிமிஷத்துல ட்ரெயின் மூவ் ஆயிடும்ல” என்று பொறுப்பாக பேசி செல்ல போனவளை தடுத்து விச்சித்திரமாக பார்த்த ஆர்யன் “உனக்கு அவ்வளவு பஞ்சுவலிட்டிலாம் இல்லையே.. பத்து நிமிஷம் இருக்குல்ல நில்லு” என்றதும் பெண்ணவள் ரேயனையே பாவமாக பார்த்து நிற்க,
அவளின் பார்வை போன திசையை கண்டு விழித்த ஆர்யாவுக்கு பெண்ணவளின் முகம் திடீரென்று கலவரமானதும் பின் அவள் குதித்ததற்கான காரணத்தை உணர்ந்து “அடியே இதுக்கு தான் ஃபீல் பண்ணி குதிச்சியா” என்றதும் தியா தலை குனிந்து கால்களால் நிலத்தை சுரண்ட,
அதை கேவலமாக பார்த்து வைத்த ஆர்யா “எரும.. இப்போ எதுக்கு வேட்டைகாரன் சீன ரீ கிரேட் பண்ற.. அட ச்சீ நிறுத்து” என்றதை கேட்டு அவனின் மூக்கில் குத்தியவள் “உண்மைய சொல்லு நிஜமாவே நீ அவ்வளவு யோக்கியனா இல்லைன்னா உனக்குள்ள எதுவும் கோளாறா.. அப்படியிருந்தா அக்காகிட்ட சொல்லுடா தம்பி நல்ல டாக்டரா பாக்கலாம்”
“மரியாதையா போயிடு இல்லன்னா மண்டைய பொலந்துருவேன்” என்றதை கூட கண்டு கொள்ளாமல் ரயிலிருந்த ரேயனை கண்டு இளித்ததில் “கூட பிறந்தவன் கூட நிக்குறேன் இப்படி பாத்து வைக்குறியே எனக்கே அசிங்கமா இருக்குடி”
“என்ன பண்றது தம்பி வாலிப வயசு ஆச்சே” என்று இரு கைகளையும் தோல் மேல் கொண்டு சென்று ஆட்ட, அதில் பொறுமையிழந்த ஆர்யன் பல்லை கடித்து முறைக்கவும் ரயில் சத்தம் கொடுக்கவும் சரியாக இருக்க,
அடுத்த நொடி ரயிலில் ஏறிய தியா “சரிடா ஒழுங்கா படி.. அம்மாவ பாத்துக்க அடிக்கடி கால் பண்ணு நேரம் கிடைச்சா அம்மா கூட்டிட்டு சென்னை வந்துப்போ”
“சரிடி.. நீயும் போற இடத்தில கண்ணையும் வாயையும் அடக்கி வச்சிட்டு புலப்ப பாரு.. மிஸ் யூ அக்கா” என்றவனுக்கு தமக்கையின் பிரிவு வாட்டவே செய்ய உள்ளுக்குள் அடக்கி கொண்டு அவளுக்கு விடை கொடுத்தான்.
அவனின் முடியை செல்லமாக களைத்துவிட்டு “மிஸ் யூ டூடா” என்று சொன்னவளுக்கும் கூட, தம்பியின் பிரிவு கவலையை கொடுத்தது இருப்பினும் நிதர்சனத்தை உணர்ந்து அவனுக்கு கைகாட்டி விடை பெற, ரயிலும் நகர தொடங்கியது.
தொடரும்..
– ஆனந்த மீரா 😍😍

