Loading

அத்தியாயம் 43

‘ஒளிரா’ காஸ்மெட்டிக் நிறுவனத்தின் கண்காட்சி நன்முறையில் நடந்து முடிய, பகல் முழுதும் வேலையில் புதைந்தனர் அனைவரும்.

அவர்கள் எதிர்பார்த்ததை விட, விற்பனை அதிக அளவில் நடைபெற்றதில் குதூகலம் தொற்றிக் கொண்டது.

மாலை நேரக் குளுகுளுப்பை ரசித்தபடி, அனைவரும் பாரிஸ் டவருக்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

விதுரன், ஸ்ரீராம் பத்மப்பிரியாவை வைத்து உண்மையாகவே ப்ரீ வெடிங் ஷுட் நிகழ்த்த, அவனது நெருக்கத்தில் அவள் தான் நெளிந்தாள்.

“ராம், எல்லாரும் பார்க்குறாங்க…” வெட்கம் தோய, தனது இடையுடன் அணைத்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவனிடம் முணுமுணுத்தாள்.

“பார்த்தா பார்க்கட்டும். நம்ம மேரேஜ்க்கு இப்பவே டிரையல் பார்க்க வேணாமா?” என்றான் குறும்பாக.

“எதே?”

“ஐ மீன், போட்டோ ஷுட்க்கு ப்ரியா…” எனக் குறுஞ்சிரிப்புடன் கூற, அவனைச் செல்லமாய் கன்னத்தில் அடித்ததைப் புகைப்படத்தில் பதிந்து கொண்டான் விதுரன்.

அகில், “டேய், நீயும் மிதுவும் நில்லுங்க. நான் போட்டோ எடுக்குறேன்.” என்று தானாய் உதவிக்கு முன் வர, “ச்சே… நண்பேன்டா!” என்று விதுரன் கண்ணைக் கசக்கினான்.

“அதெல்லாம் ஒரு ஆணியும் இல்ல. இப்படித் தானா வந்தா தான், என்னையும் பூமியையும் போட்டோ எடுக்குறேன்னு வருவீங்க…” என்று கேமராவை வாங்கிக் கொள்ள, மிதுனாவும் பூமிகாவும் தலையில் அடித்துக் கொண்டனர்.

இந்தக் கலவரத்தில் கலந்து கொள்ளாது, தோளும் தோளும் உரசியபடி காதலர்களாக பாரிஸ் டவரைச் சுற்றி வட்டமிட்டனர் இதயாம்ரிதாவும், சத்ய யுகாத்ரனும்.

ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். சில அர்த்தமற்ற உரையாடல்களும் கூட அங்கு அர்த்தமாகிப் போனது.

விதுரன், கேமராவை எடுத்துக் கொண்டு அவர்களை கேண்டிட் புகைப்படங்களை எடுத்துத் தள்ளும் வேலையில் இறங்கினான்.

யார் மீது வெறுப்பை வளர்த்தானோ, யாருடைய அன்பு தனது தமையனின் அன்பிற்குத் தகுதியில்லை என எண்ணினானோ, அவளும் தமையனுமாக இணைந்திருப்பதைக் கண்டு ரசித்திருந்தான்.

அவர்களது அழகான புகைப்படங்கள் அவனது கேமராவில் அடக்கம்.

விதுரனின் புரிதலில், அவனையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த மிதுனாவின் இதழ்களிலும் ஒரு நிறைவுப் புன்னகை.

——

உமாவின் வற்புறுத்தலில் மிதுனாவும் அவருடனே தங்கி இருந்தாள்.

பாரிஸிற்குச் சென்று வந்த பிறகும், இதயா சத்யாவின் கிறக்கங்கள் சிறிதேனும் குறையவில்லை. சாதாரணமாகப் பேசும் போதே கை பிடித்துக் கொள்வதை வழக்கமாக்கி இருந்தனர்.

இருவரது உள்ளங்கை வெப்பமும் இருவருக்கும் தேவையானதாய்!

நாள்கள் தெளிந்த நீரோடையாக நகர, ஒரு நாள் கோபத்துடன் சத்யாவின் வீட்டிற்குச் சென்றாள் இதயாம்ரிதா.

மாலதி அவள் முகத்தைப் பார்த்து, “என்னமா ஆச்சு?” என வினவ,

“என்னை எப்போ இங்க கூப்பிடுவீங்க? நானும் உங்க புள்ள ‘வா வீட்டுக்குப் போலாம்’னு கூப்பிடுவாருன்னு பார்த்தா, எதுவுமே கேட்க மாட்டுறாரு. உங்க மருமக வீட்டுக்கு வராம இருக்காளேன்னு உங்களுக்காவது அக்கறை இருக்கா?” எனச் சண்டையிட்டாள்.

கீர்த்தனா அவளைப் பார்த்து நகைத்து, “எதுக்குக் கூப்பிடனும்? பெட்டி படுக்கையை எடுத்துட்டு வர வேண்டியது தான? இது உன் வீடு இதயா…” என்றார் உரிமையாக.

அதில் புன்னகைத்தவள், “ரைட்டு! அப்போ நாளைக்கு எல்லாருமே பெட்டி படுக்கையை எடுத்துட்டு ரெடியா இருங்க…” என்றிட, “நாங்க எதுக்கு எடுக்கணும்?” என வினவினார் நீலா.

“சொல்றேன் பெரிம்மா… நாளைக்கு!” எனக் கண் சிமிட்டினாள்.

இதற்கிடையில், ஸ்வேதாவிற்கும் தொழில் முறையிலேயே நல்ல வரன் வர, சத்யா அவளுக்குத் திருமணம் செய்து வைத்து விட ஆர்வம் காட்டினான்.

ஸ்வேதாவும், இப்போது பழையதை மறந்திருந்தாலும் கூட, திருமணம் செய்யப் போகும் மணமகனிடம் தன்னைப் பற்றி உரைத்து விட்டே திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதில், அவனும் அதனை மறுக்கவில்லை.

அவள் விஷாலை மறந்து திருமணத்திற்குச் சம்மதித்ததே பெரும் ஆறுதல் தான்.

ஸ்வேதா, தனக்கு மணமகனாக நிச்சயத்திருந்த ரித்திக்கிடம் தன்னைப் பற்றி முழுதாய் கூறி, அவன் சம்மதித்த பிறகே இருவருக்கும் திருமணத் தேதி குறிக்கப்பட்டது.

ரித்திக்கும், எதையும் எளிதாய் எடுத்துக் கொள்ளும் பழக்கத்துடன், சத்யா குழுவுடன் இயல்பாய் கலந்து கொள்ள, அவர்களுக்கும் அவனை நிரம்பப் பிடித்தது.

ஸ்வேதா, ரித்திக்கின் திருமணத்திற்கு மறுவாரம் ஸ்ரீராம், பத்மப்பிரியாவின் திருமண நாளும் குறிக்கப்பட்டது.

திருமண வேலைகளை மற்ற மூன்று ஜோடிகளும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய, இடைப்பட்ட நாளில் தான் இதயாம்ரிதா சத்யாவின் வீட்டிற்கு வந்து சண்டையிட்டது.

பின் நேராய் அவள் உமாவிடம் வந்து நின்றாள்.

“மாம், நான் என் மாமியார் வீட்டுக்குப் போகலாம்னு இருக்கேன்.” என்றவளை விழி விரித்துப் பார்த்தார் உமா.

“ரொம்ப சந்தோஷம் அம்ரி… தொழில் பின்னாடியே ஓடாம உங்க வாழ்க்கையையும் பாருங்க.” என்று வெகுவாய் மகிழ்ந்தார்.

“நீங்களும் என் கூட வாங்க!” என்றவளைத் திகைத்துப் பார்த்தவர் சட்டெனச் சிரித்தார்.

“நான் என்ன காமெடியா செய்யறேன்?” இடுப்பில் கை கொடுத்து முறைத்தவளிடம்,

“நேத்து, சத்யாவும் இதே கேள்வியைத் தான் கேட்டாரு…” என்றதில் இம்முறை அவள் முகத்தில் வியப்புப் பரவியது.

“‘உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகணும். ஆனா, நீங்க தனியா இருக்குறதுல எனக்கு உடன்பாடில்லை. நீங்களும் எங்க கூட வாங்க. சேர்ந்து இருக்கலாம் எல்லாரும்’னு சொன்னாரு.” என உமா உரைத்ததும் அவள் இதழ்களில் கர்வப் புன்னகை.

“நீங்க என்ன சொன்னீங்க?”

மகளின் ஆர்வத்தில் சிரித்தவர், “இப்போ தான் மிது என்கூட இருக்காளே… அவளுக்கும் கல்யாணம் ஆனதும், கண்டிப்பா வரேன்னு சொன்னேன்.” என்றார்.

“ப்ச், மாம்?” இதயா அதிருப்தியாய் தலையசைக்க,

“நான் வரலைன்னு சொல்லல அம்ரி… மிதுவுக்கும் முறையா கல்யாணம் செஞ்சு உன் மாமியார் வீட்டுக்கு அனுப்பிட்டு வரேன்னு தான் சொல்றேன். அவளுக்கும் தனக்குன்னு, ஒரு அம்மா வீடு இருக்கணும்னு தோணும்ல… ஏன், உனக்கும் கூடத் தோணலாம். உன் அப்பா இருந்தவரை அவளுக்குத் தேவையானதை என்னால செய்ய முடியல. அவளும் அதுக்கு அனுமதிக்கல. இனியாவது அவளைக் கவனிச்சுக்குறேன். எப்பல்லாம் தோணுதோ, அப்பலாம் என் அண்ணி வீட்ல வந்து இருக்கப் போறேன். அங்க வர்றதுக்கு எனக்கு எந்தச் சங்கடமும் இல்ல…” என்று தெளிவாய் மனத்தை எடுத்துரைத்ததில் அவள் இப்போது மறுக்கவில்லை.

“யூ ஆர் சோ சுவீட் மாம்…” என்று அவர் கன்னத்தைக் கிள்ளியவள், நேராய் சத்யாவைப் பார்க்கச் சென்றாள்.

அலுவலகத்தில் வேலையாக இருந்தவன், தன்னவளைப் பார்த்ததும் முறுவலித்தான்.

“என்னங்க மேடம்… வீட்ல போய் சண்டை போட்டீங்களாம்?” அர்த்தமாய் கேட்டதில், அவளுள் ஒரு குறுகுறுப்பு.

“சண்டை போடுறது என் உரிமை ப்ரொஃபி…” என உதட்டைச் சுளித்ததில், “நம்ம வீட்டுக்குப் போகலாமாடி?” எனக் கேட்டான் ஆர்வமாய்.

“போகலாமே! ஆனா இந்த வீட்டுக்கு இல்ல.” என நிறுத்தியவளைப் புரியாது ஏறிட்டான்.

பின், “நான் வாங்குன வீட்டுக்குப் போகலாமா?” மீண்டும் ஒரு ஆர்வம் அவனிடம்.

“ப்ச்… நோப்…” மறுபடியும் தலையாட்டியவளைக் கண்டு மேலும் குழம்பினான்.

“நாளைக்கு வரை வெய்ட் பண்ணுங்க…” எனக் கண் சிமிட்டி விட்டுத் துள்ளிக் குதித்துச் சென்றவளைக் குழப்பம் அகலாது பார்த்திருந்தான் சத்ய யுகாத்ரன்.

மறுநாள், மொத்த வீட்டாரையும் அவள் அழைத்துச் சென்றது, அவர்கள் முதலில் இருந்த பழைய வீட்டிற்குத் தான்.

அந்த ஏரியாவில் தான் பல வருடம் வசித்தனர். சத்ய யுகாத்ரனுக்கு நினைவு தெரிந்த முதலே ஒத்திக்கு வீடு எடுத்திருந்தனர். அதே வீட்டில் தான் ஸ்வேதா, விதுரனும் பிறந்தனர்.

இறுதியாகப் பல அவமானங்களைப் பார்த்த வீடு. அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் நன்றாகப் பழகியவர்கள். ஆனால் அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர்களது பார்வையே வேறாகிப் போனது.

அவர்கள் கொடுத்த குடைச்சலிலும், உறவினர்களின் ஏச்சுப் பேச்சிலும் தானே அந்த வீட்டைக் காலி செய்து, உடல் நிலை சரியில்லாது போன தமையனை வேறு வீட்டிற்கு அழைத்துச் சென்றார் தியாகு.

மீண்டும் அதே தெருவைக் கண்டதும், தியாகு தயங்கினார்.

“எதுக்குமா மறுபடியும் இங்க?”

அவள் பதிலேதும் சொல்லவில்லை. அவர்கள் இருந்த வீடு முற்றிலும் புதிதாய் மாற்றப்பட்டிருந்தது.

குட்டி பங்களா என்று கூடச் சொல்லலாம். அவ்வீட்டை, உரிமையாளரிடம் இருந்து வாங்கி இடித்து மீண்டும் கட்டி இருக்கிறாள்.

அக்கம் பக்கத்தில் அதே ஆள்கள். அவர்களது உறவினர்களுக்குக் கூட கிரகப் பிரவேசத்திற்குச் சொல்லி அனுப்பி இருக்கிறாள்.

விதுரன் தான் அவளுக்கு உதவி செய்தமையால், அவனிடம் அதிர்வு ஏதும் இல்லை.

ஆனால், சத்ய யுகாத்ரனின் இறுகிய வதனம் அவனைச் சற்றே பயமுறுத்தியது. ‘கொஞ்சம் ஓவரா அண்ணிக்கு ஹெல்ப் பண்ணிட்டோமோ?’ என்ற பதற்றம்.

இதயாம்ரிதா ஓரக்கண்ணால் அவனை அளவெடுத்தாலும், அவனிடம் பேச முற்படாது விழாவைச் சிறப்பிக்க, அவனைப் பற்றித் தவறாய் பேசிய அனைவருமே மீண்டும் அவன் ஆர். பி. ஐ அதிகாரியாகப் போகிறான் என்றதைக் கேள்விப்பட்டு வாயடைத்துப் போகினர்.

மாலதிக்குக் கண் கலங்கியது. தனது கணவனின் மகிழ்வான தருணங்களைக் கண்ட இடமல்லவா இது. மீண்டும் அவரது வாசத்தை உணர்ந்த மாலதியின் கண்கள் பனித்தது.

சத்ய யுகாத்ரனுக்கும் அதே உணர்வு! தந்தை கண்ட அவமானங்களைத் துடைத்தெறிய, எங்கு மானத்தை இழந்தார்களோ அங்கேயே கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்க வைத்து விட்டாள்.

ப்பா… மூச்சு முட்டியது இந்தக் காதல்.

“நம்ம ரூம் பார்க்கணுமே?” என்னன்னவோ கேட்பானென எண்ணித் தயார் செய்திருந்தவள், அவனது கேள்வியில் விழித்துப் பின் சிரித்து விட்டாள்.

“மாடில…” எனக் கண் சிமிட்டிக் கூறிட, அவளைத் தரதரவென இழுத்துச் சென்று அறையில் அடைத்தவன், காற்றுப் புகக் கூட இடைவெளி கொடுக்காது இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

“தேங்க்ஸ்டி!” கழுத்தை நிறைத்த ஆடவனின் கண்ணீர் அவளைச் சுட, “ப்ரொஃபி என்ன இது?” என அவனை நகர்த்தப் போக அவனோ நகரவே இல்லை.

“என் அப்பாவை ஃபீல் பண்றேன் இதயாம்மா…” நடுங்கிய குரலில் உரைத்த ஆடவனின் விசும்பலில் அவளுக்கும் கண்ணில் நீர் கோர்த்தது.

‘அதிகப்பிரசங்கித் தனமாய் செய்து விட்டதாய் திட்டுவானோ’ என்று பயந்திருந்தாள். சில நிமிடங்களாக அவனது முக மாற்றம் கலவரப்படுத்த, அவனோ தனக்கான அவளது முயற்சிகள் அனைத்தையும் மனத்தினுள் ஆழப்பதிய வைத்து, நேசத்தில் நிறைவதை எண்ணி மனம் நிறைந்தது.

——–

ஸ்வேதா, ரித்திக் திருமணம் இனிதே நிறைவுற, அடுத்ததாக ஸ்ரீராம் பத்மப்பிரியா திருமணத்தில் அனைவரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

ரவிச்சந்திரன் அமைதியாய் இருந்து கொண்டார். அதிகம் யாரிடமும் பேசவில்லை என்றாலும், அவரிடம் ஒரு புரிதல் இருந்தது. அவரும், ராம்குமாரும் தொழில் ரீதியான நண்பர்கள் தான். ராம்குமாரின் தந்தை காலத்திலேயே தொடங்கிய தொழில் என்றாலும், ராம்குமார் தலையெடுத்த பின்னே, இன்னும் பரந்து விரிந்தது நிவோரா.

ஒரு முறை இருவரும் குடித்துக் கொண்டிருந்தபோது தான், காஸ்மெடிக்ஸ் பற்றிய சூட்சமத்தை, அது அதிக நாள்கள் கெட்டுப் போகாமல் வாசனையும் மாறாது இருக்கும் யுக்தியை உளறினார் ரவிச்சந்திரன். அதைக் கேட்ட ராம்குமார், அவரையும் தனது பார்ட்னராகச் சேர்த்துக் கொள்வதாய் வாக்குக் கொடுத்து விட்டு, அவரது யோசனையைத் திருடிப் பயன்படுத்திக் கொண்டு, ரவிச்சந்திரனைக் கழற்றி விட்டதில் ஆரம்பித்தது இருவருக்குமான போர்.

என்னவோ, அதனை விளக்கிக் கூறிடத் தற்போது பிடித்தமில்லை அவருக்கு. மகனின் முகத்தில் தெரிந்த நிமிர்வும், தெளிவும் அவருக்குத் தற்போது போதுமானதாய்!

பட்டுப் புடைவையில் அழகோவியமாய் மிளிர்ந்த இதயாம்ரிதா, முதல் வரிசையில் சத்ய யுகாத்ரனுடன் ஜோடியாய் அமர்ந்து கொண்டாள்.

மேடையில் ரவிச்சந்திரனும், அவரது தொழில் ரீதியான நட்புகளும் நின்றிருக்க, அவரை ‘ட்ரிக்கர்’ செய்ய விருப்பமின்றிச் சத்யாவும், இதயாவும் சற்றுத் தள்ளியே இருந்து கொண்டனர்.

ஸ்ரீராம், மேடையில் அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களைப் புரிந்தும் புரியாமல் முணுமுணுத்துப் பின் பத்மப்பிரியாவின் வரவில், அரை டஜன் ஜொள்ளை வழிய விட்டான்.

பத்மப்பிரியாவிற்கு அவளது தாயின் நினைவு வராத வண்ணம், உள்ளங்கையில் தாங்கிக் கொண்டார் உமா. அதற்கும் மேல் சத்யாவின் குடும்பமே அவளுக்குப் பிறந்த வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய, சத்யா அவளுக்குத் தமையனாய் சீர்வரிசைகளை அடுக்கி இருந்தான்.

ஸ்ரீராமிற்கு இதெல்லாம் தேவையில்லை தான். ஆனாலும், அவளுக்கென சொந்தங்கள் இருக்கிறதென்று அவளும் உணர வேண்டுமென்றே அனைத்தையும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான்.

பத்மப்பிரியாவிற்குக் கண் கலங்கிப் போனது. “தேங்க்ஸ் அண்ணா!” என்றவளைச் சத்யா முறைத்ததில் அவள் அசடு வழிந்து, “சாரிண்ணா, தேங்க்ஸ் வாபஸ்!” என்று பின்வாங்கிக் கொண்டு, அவனைச் சிரிக்க வைத்திருந்தாள்.

விதுரன், மிதுனாவின் பின் சுற்றிக் கொண்டிருக்க, அகிலோ பூமிகாவிடம் வழிந்து கொண்டிருந்தான்.

தாலித்தட்டை எடுத்த அய்யர் ரவிச்சந்திரனைப் பார்த்து, “பையனோட கூடப் பிறந்த பொண்ணுங்க யாரும் இருக்காங்களா…” எனக் கேட்க, அவர் ‘இல்லை’ என்றதும், “அப்போ சொந்தக்காரப் பொண்ணுங்க யாரும் இருந்தா கூப்பிடுங்க.” என்றார்.

வேறொரு பெண் வந்து தாலி தாம்பூலத்தை வாங்க முனைய, அதனைத் தடுத்து நிறுத்திய ஸ்ரீராம், “இதயா, இங்க வா…” என்று சத்தமாய் அழைத்தான்.

சத்யாவுடன் அளவளாவிக் கொண்டிருந்த இதயா, ‘என்னை ஏண்டா கூப்புடுற?’ எனப் புரியாது கீழிருந்தே “என்னடா?” என்றாள்.

“வா!” அவன் தலையாட்ட, சத்யாவும் எழுந்து கொண்டான்.

“இவள் என் தங்கச்சி முறை தான். இவள்கிட்ட தட்டைக் குடுங்க.” என்று அய்யரைப் பார்த்துக் கூறிட, இதயாம்ரிதா மெல்ல அதிர்ந்தாள். ரவிச்சந்திரனும் தான்.

“ம்மா, இந்தத் தட்டை வாங்கி எல்லார்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்கோ…” என்று ஐயர் நீட்ட, அதனை வாங்கத் தயக்கம் கொண்டு ரவிச்சந்திரனைப் பார்த்தாள்.

ஸ்ரீராமோ, “வாங்க விருப்பம் இல்லைன்னா விட்டுடு!” என்று இறுக்கமாய் கூறிய நொடியில் படக்கெனத் தட்டை வாங்கிக் கொண்டவளுக்கு, உறவின் அழுத்த அன்பும் கூடக் கண் கலங்க வைக்குமென்ற நிதர்சனம் புரிந்தது.

சத்யா கையைக் கட்டிக்கொண்டு இவர்களை வேடிக்கை பார்க்க, கண்ணில் இருந்து துளி நீரும் விழாதவாறு கவனமாய் அந்தத் தட்டை ஏந்திப் பெரியோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி வந்து கொடுத்தவளிடம் ஐயர், “நீங்க தான்மா நாத்தனார் முடிச்சுப் போடணும். பொண்ணு பின்னாடியே நில்லுங்க.” என்று விட, அவளுக்குத் தர்ம சங்கடமாகி விட்டது.

அவள் நிற்பதற்கு ஏதுவாய் ரவிச்சந்திரனும் வழி விட்டுக் கொண்டார்.

பத்மப்பிரியாவிற்கும் வியப்பு தான். ஸ்கூல்ல போட்ட சண்டை என்ன? இப்ப ரெண்டும் பாச மலர்கள் ரீல் ஓட்டுறது என்ன?

அதுவே அவளுக்கு அதிக மகிழ்வையும் அள்ளித் தந்தது.

ஸ்ரீராம், தன்னவளின் கழுத்தில் பொன்தாலி இட, இதயாம்ரிதாவே நாத்தனார் முடிச்சையும் போட்டு விட்டாள்.

என்றும், அவிழாத முடிச்சாய் அவர்களது இல்லற வாழ்வு சிறக்க வேண்டுமென்ற அதீத வேண்டுதலுடன்.

——-

உமாவும், மிதுனாவும் தங்களுக்கென ஒரு வாழ்க்கையை அழகாய் வாழத் தொடங்கிட, இதயாம்ரிதா புகுந்த வீட்டை ஆக்கிரமிக்கத் தொடங்கினாள்.

விடிந்ததில் இருந்து அவள் அலுவலகம் கிளம்பும் வரை, வீடே ரணகளமாக இருக்கும் அவள் செய்யும் சேட்டையில்.

கீர்த்தனாவிடம் சமையல் கற்றுக் கொள்வதாக ஆரம்பித்து, மாலதியிடம் மருமகள் மிடுக்கைக் காட்டி விட்டு, நீலாவுடன் கோவிலுக்கு விசிட் அடித்து விட்டு வருபவள், தியாகுவின் பலசரக்குக் கடையை மீண்டும் அவர்களது வீட்டிற்கு அருகிலேயே மாற்ற ஏற்பாடு செய்திட அவருடன் கலந்துரையாடுவாள்.

விதுரன், காலையில் எழுந்ததுமே காதைப் பொத்திக் கொண்டு தான் அறையை விட்டே வருவான்.

“அண்ணி, எந்திரிக்கும்போதே அலாரம் சத்தத்தை விட உங்க சத்தம் தான் காதை நிறைக்குது…” என்றவனுக்குக் காபியைக் கொடுப்பவள், “கொழுந்தனாரைத் தூங்க விடாமல் கொடுமை செய்யறது தான் என் முதல் வேலையே…” என்பாள்.

“இப்படியே கொடுமை படுத்துனீங்க, நான் என் மாமியார் வீட்டுக்குப் போயிடுவேன்பா…” என்று கலாய்த்து விட்டுத் திரும்பிட, அங்குத் தியாகு அவனை முறைத்திருப்பார்.

அனைவருக்கும் மிதுனாவை அவன் விரும்புவது தெரியும் தான், ஆனாலும் யாரும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவனும் வாயைத் திறக்கவில்லை.

தந்தையிடம் சிக்கிக் கொண்டதில், தெறித்துக் குளியலறைக்குள் ஓடி விடுவான்.

அவனை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதில் அலாதி நிம்மதி அவளுக்கு.

சிரிப்பை அடக்கிக் கொண்டு தனது அறைக்குச் சென்றவள், “ப்ரொஃபி இன்னைக்கு விது, மாமாட்ட மாட்டிக்கிட்டான்…” என்று எப்போதும் போலக் குறும்பாய் சிரித்தாள்.

எப்போதும் அவள் செய்யும் சேட்டைகளை ரசிப்பவன், அன்று அமைதியாய் அமர்ந்திருப்பதைக் கண்டு, “என்ன ப்ரொஃபி” என வினவ, அவன் தனது போஸ்டிங் ஆர்டர் தாங்கிய மின்னஞ்சலைக் காட்டினான்.

அதனைக் கண்டு, அபரிதமான மகிழ்வு அவளுக்கு.

“ஊஊ… வாவ்! கங்கிராட்ஸ் ப்ரொஃபி!” எனத் தரையில் கால் படாது பறந்தவள், அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டு, “யூ டிட் இட் பேபி பாஸ்! லவ்வ்வ் யூ…” என்று கொஞ்சி விட்டு நேராய் கீழிறங்கி வந்தாள்.

வீட்டாரிடம் விஷயத்தைக் கூறி விட்டு, ஸ்ரீராமிற்கும் அழைத்துப் பேசியதில், உமா, மிதுனா, ஸ்ரீராம், பத்மப்பிரியா, பூமிகா, அகில் என அனைவருமே அங்குக் கூடி விட்டனர்.

தியாகுவிற்குக் கண் கலங்கியது.

“சாதிச்சுட்டப்பா…” என்று மகனின் தோளைத் தட்டிக் கொடுக்க, அவனிடம் அளவான புன்னகையன்றி வேறெந்த மகிழ்வும் இல்லை.

“நீங்க ஒரு பொறுப்பான புரொபஸர்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க அண்ணா…” என்று பத்மப்பிரியா மகிழ, ஸ்ரீராம் மட்டும் நண்பனின் முக வேற்றுமையை உணர்ந்து கொண்டான்.

“என்னடா? ஆர் யூ ஓகே!” அவனைத் தனியே அழைத்துச் சென்று ஸ்ரீராம் வினவ,

அந்த மின்னஞ்சலை மீண்டும் ஒரு முறை படிக்கச் சொன்னான்.

அதன்பிறகே, அவனுக்கு முதல் போஸ்டிங் டெல்லியில் போட்டிருப்பதாக வந்ததைக் கண்டு, “அதுனால என்ன? நீ இதயாவையும் கூட்டிட்டுப் போ…” என்றான்.

“இங்க இருக்குற எல்லாத்தையும் விட்டுட்டா?” அவனது கேள்வியில் சிந்தித்த ஸ்ரீராம்,

“என்ன செய்யப் போற?” என வினவினான். “ஆல்ரெடி யோசிச்சுட்டேன்…” என்றவனின் கூற்றில் திகைத்து, “வேலையை வேணாம்னு சொல்லப் போறியா?” என்றான்.

“அப்படித் தான் நினைச்சேன். ஆனா எனக்காக மறுபடியும் வாய்ப்பு உருவாக்குனவளோட உழைப்பு வீணாகிடும்…” எனும்போதே, அவர்களிடம் வந்த இதயாம்ரிதா, “ப்ரொஃபி, நீங்க எப்போ கிளம்பனும்? பிளைட் டிக்கட் ரொம்ப டிமாண்ட், முன்னாடியே போட்டு வச்சுடலாம்.” என அதிவேகமாய் செயல்பட்டவளை நிதானமாய் ஏறிட்டான்.

அவனது முதல் போஸ்டிங் ‘டெல்லி’ என்று மின்னஞ்சலிலேயே பார்த்து விட்டாள்.

ஆனாலும், அதற்காகத் துணுக்குற்ற மனத்தை முற்றிலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவன் கனவு நினைவாகப் போகிறது. இதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க அவள் தயார்!

அவளது செயலில் அது தெளிவாய் புரிந்திட, “மேடம் சூப்பர் ஃபாஸ்ட்டா இருக்காங்க. நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க…” என ஸ்ரீராம் நண்பனின் முகத்தில் தெரிந்த சூட்டில், ‘செத்தடி நீ…’ என்று விட்டே கிளம்பினான். மற்றவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டான்.

“ஏன் ராம், உடனே கிளம்புன?” தனது வீட்டிற்குள் நுழைந்ததும் குறையாய் பத்மப்பிரியா கேட்க,

“அவங்க ரொமான்ஸ், அவங்க பண்ணட்டும். நம்ம அடுத்து ப்ரமோஷன் வாங்குற வேலையைப் பார்க்கலாம்ல…” என அவளைத் தன் கை வளைவிற்குக் கொண்டு வந்தவன், “இன்னும் பல பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியது இருக்கே ப்ரியா…” என்றான் குழைந்து.

“ராம்… பட்டப் பகலுல என்ன செய்யற?” பலவீனமாய் மறுத்தவளின் பலத்தை எல்லாம் பலவிதமாய் திருடத் தொடங்கினான் ஸ்ரீராம்.

—-

“என்ன ப்ரொஃபி?” இதயா அமைதியாய் வினவ,

“என்னால உன்னை விட்டு எங்கயும் போக முடியாது இதயா!” என்றவனின் குரலில் தீர்மானம் மிகுந்தது.

அவளுக்கும் அது வலி கொடுத்தாலும், “புரியுது, ஆனா…” என்றவளின் உதட்டில் ஒரு விரல் கொண்டு அழுத்தியவன், “இந்தக் கனவு மொத்தமும் நீ இருக்கணும்டி. என் கூடவே! என்னை உரசிக்கிட்டே… மறுபடியும் மறுபடியும் எல்லாரையும் பிரியுற வேதனையை என்னால அனுபவிக்க முடியாது.

முதல்ல, இதெல்லாம் கரெக்ட்டா கிளியர் ஆகும்னு எனக்கு நம்பிக்கையே இல்லடி. இருந்தாலும் நீ செஞ்ச முயற்சிக்காகத் தான் என் முழு உழைப்பைப் போட்டுப் படிச்சேன். போஸ்டிங் எல்லாம் நான் பெருசா கற்பனை பண்ணிக்கல. அப்படியே வந்தாலும் மேக்சிமம், சவுத் சைட் தான் போஸ்டிங் வரும்னு நம்பிட்டு இருந்தேன்.” என்றவனின் முகத்தில் வேதனை அப்பட்டமாய் தெரிந்தது.

“நானும் உங்களோட வர்றேன்!” வேகமாய் அவள் உரைத்ததில், “எனக்காக நீ உன் கரியரை ஸ்பாயில் பண்ணனுமா?” என்றான் கோபமாக.

“அப்போ எனக்காக நீங்க உங்க கரியரை ஸ்பாயில் பண்ணிக்கிறது மட்டும் நியாயமா?” அவளிடமும் அதே சீறல்.

இருவரும் ஒரு கணம் அமைதி காக்க, அதன்பிறகு இரு நாள்களும் இருவரிடமும் எவ்விதப் பேச்சு வார்த்தையும் இல்லை. முதல் ஊடல்…

அமைதி கலைக்கும் எண்ணமிருந்தும், தனக்காக அவன் வேலையை இழந்து விடக்கூடாது என்ற தீர்மானம் அவளுக்கு நிறைய இருந்தது.

ஆனால், அவ்வமைதியை அவனே கலைத்தான்.

“உன்னால என்னை விட்டுட்டு இருக்க முடியுமாடி?” ஏக்கம் நிரம்பிய கேள்விதனில் தன்னைத் தொலைத்தவள், அவனை ஓடிச் சென்று அணைத்துக் கணக்கில்லா முத்தங்களைக் குவித்தாள்.

இரு நாள்களின் ஊடலின் விளைவால், கூடல்கள் அதிக ஆழம் பெற்றது.

இருவரின் மொத்த நேசத்தையும் உணர்ந்த பிறகே, இளைப்பாறித் தலையணையில் சாய்ந்தனர்.

சத்ய யுகாத்ரனே மௌனத்தை உடைத்தான்.

“ஜாயினிங்க்கு மூணு மாசம் டைம் கேட்டிருக்கேன். சென்னைக்கே போஸ்டிங் கேட்டு ரிக்வெஸ்ட் குடுத்து இருக்கேன்.” என்றவன் மார்பில் ஒன்றிக் கொண்டவள், “சான்ஸ் இருக்குமா?” எனக் கேட்டாள்.

“அட்மினின்ஸ்ட்ரேட்டிவ்ல ஓகே சொன்னா நடக்கலாம். இல்லன்னா சென்னைல வேகன்ஸி இருக்கணும். அண்ட் ஸ்பெஷல் பெர்மிஷன்ல எக்ஸாம்ஸ் எழுதுனனால ஸ்பெஷல் ரீசன்ஸ் வச்சும் மறுபரிசீலனை செய்யலாம். பட் எது நடந்தாலும் நான் உன்னை விட்டுப் போக மாட்டேன்.” என்றான் உறுதியாக.

அடுத்த மூன்று மாதங்களும் மற்ற எண்ணங்களை ஒதுக்கித் தள்ளி விட்டு, இருவரும் புதுமணத் தம்பதிகளாகத் தங்களது காதல் வாழ்வில் மூழ்கி முத்தெடுத்தனர்.

தீண்டத் தீண்டத் தேயாத மோகத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்குள் சலிக்காத தாபம்!

தினம் தினம் இருவரது நெருக்கங்களின் அளவுகள் வரைமுறையின்றிக் கழிய, அன்று சத்ய யுகாத்ரனின் முகமே பளிச்சென இருந்தது.

அலுவலகம் சென்று விட்ட இதயாம்ரிதாவிடம் வேகமாய் வந்தவன், அவளது முகமும் செம்மையில் மின்னியதைக் கண்டு, “என்ன மேடம்… திடீர்னு ரெட்டிஷ் ஆகிட்டீங்க, நான் ஒண்ணுமே பண்ணலையே பாஸ் பேபி!” என்றான் குறும்பாக.

“ச்சோ, போங்க ப்ரொஃபி…” என வெட்கியவள், “உங்க முகத்துல என்ன டாலடிக்குது?” எனக் கேட்டாள்.

“ஒரு ஹேப்பி நியூஸ்டி. என்னோட ரிக்வெஸ்ட் அக்செப்ட் பண்ணிட்டாங்க. எனக்கு சென்னைலயே போஸ்டிங் கிடைக்கப் போகுது. இது பெர்மனண்ட் இல்லை தான். ஆனாலும் அப்புறம் நடக்குறதை அப்பப் பார்த்துக்கலாம். இப்போ நான் உன் கூட தான் இருக்கப் போறேன்.” என்று துள்ளிக் குதித்தான்.

“வாவ் ப்ரொஃபி… செம்ம போங்க!” எனக் கட்டிக் கொண்டு ஆர்ப்பரித்தவள், “உங்களுக்கு டபிள் போஸ்டிங் தான்!” எனக் கண் சிமிட்டினாள்.

“இல்லையே, ஒரே போஸ்டிங் தான்?” சத்யா புருவம் சுருக்கிக் கூற,

“ப்ரொபஸர் பாடம் சொல்லிக் கொடுத்து, எக்ஸாம் வச்சீங்களே… ரிசல்ட் என்னன்னு கேட்க மாட்டீங்களா?” எனக் குறும்பாய் கூறினாள்.

“என்னடி உளறுற?” எனத் தாடையைத் தடவிச் சிந்தித்தவனுக்குள் சட்டென மின்னலடிக்க, “இதயா?” என்றான் கேள்வியாய்.

“குட்டி ப்ரொஃபி ப்ராசஸிங்!” என்று மூக்கைச் சுருக்கிக் கூறியவளைக் கையில் அள்ளி இருந்தான் சத்யா யுகாத்ரன்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 97

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
102
+1
4
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்