
இறுதி அத்தியாயம்:
இரண்டு நாட்களுக்கு முன்பு, சுரபிக்கு உடல் நிலை சரியில்லை என ஹரிஷிடம் இருந்து தகவல் வந்ததில், என்னவோ ஏதோ என்று பதறியடித்து கொண்டு வந்திருந்தாள் ஸ்ருதி.
சோர்ந்து போய் படுக்கையில் கிடந்தவளை கண்டு, உடன் பிறந்தவளின் மனம் பதற தான் செய்தது.
“என்ன? என்னாச்சு??” என்க,
“தெரியலை, காலையில தீடீர்னு வயிறு ரொம்ப வலிக்குதுன்னு சொன்னா, ப்ரீயட்ஸ்ஸூம் ஆகிட்டா. போக, போக ப்ளீட்டிங் ரொம்ப அதிகமாயிடுச்சு, இவளும் வலி தாங்காம கத்த ஆரம்பிச்சுட்டதுல ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டேன்…” என ஹரிஷ் சொல்லி கொண்டிருக்கும் போதே, மருந்துவர் வந்து விட சுரபியை பரிசோதிக்க ஆரம்பித்தார்.
“இதுக்கு முன்னாடி எப்போ ப்ரீயட்ஸ் வந்தது??” என்றவரின் கேள்வியில், அப்போது தான் சுரபி கவனித்தால் கிட்டதட்ட இரண்டு மாதம் ஆகியிருந்தை.
‘ஒரு வேளை குழந்தையா இருக்குமோ’ என நினைத்தவளின் உள்ளம் சுருக்கென தைக்க, அடைத்த தொண்டையை சரி செய்து கொண்டு, மெல்ல தேதியை கூறினாள்.
மருத்துவரின் முகத்தில் மெல்லிய சோகம் இழையோட “அபார்ஷன் ஆகியிருக்கு 45 நாள் கரு” என்றிட மூவரின் உள்ளமும் அதிர்ந்து அடங்கியது.
“மேம் ஒரு எமெர்ஜன்ஷி கேஷ்” என செவிலியர் ஒருவர், அவசரகதியில் வந்தழைக்க வேகமாக அங்கிருந்து நகர்ந்தார் மருத்துவர்.
நகர மறுத்த கால்களை வலுக்கட்டாயமாக நகர்த்தி, அவள் அருகே சென்ற ஹரிஷ் அவளின் தோள் மீது கை வைக்க,
“ஓ…”வென அவனை இடையோடு கட்டி கொண்டு கதறி விட்டாள் பெண்.
இருவருமே ஆசையாக எதிர்பார்த்த ஒன்று. இன்று அவர்கள் இனம் காணும் முன்பே கரைந்து போயிற்று.
சுரபியின் கதறலில், ஸ்ருதியின் உள்ளம் வேதனை கொள்ள, சட்டென நிலைமையை கையில் எடுத்தவள் அவள் அருகே சென்று,
“ச்சு சுரபி அழுகாத உடம்புக்கு ஏதாவது வந்திட போகுது. இப்போ என்ன உங்களுக்கு வயசு இல்லையா? சீக்கிரமே உனக்கொரு குழந்தை வந்திடும் பாரு” என அவளை தேற்ற ஆரம்பிக்க,
உள்ளுக்குள் கதறி துடித்த ஹரிஷ், ஸ்ருதியினை தொடர்ந்து, தனது வலியினை மறைத்து கொண்டு அவளை தேற்ற ஆரம்பித்திருந்தான்.
யார் என்ன தேற்றினாலும், அவள் இழந்த பொக்கிஷம் திரும்ப வந்திடுமா என்ன??
அடுத்து வந்த நாட்களில், அவளை மிகவும் கவனமாக கையாண்டனர் ஹரிஷீம் ஸ்ருதியும்.
அவளை சோர்ந்து போக விடாது, எந்நேரமும் ஸ்ருதி அருகிலேயே இருந்ததில், மெல்ல மெல்ல தன்னிலை மீண்டாள் சுரபி.
இன்று அவளை டிஸ்சார்ஜ் செய்து விட, வாடகை காரினை ஏற்பாடு செய்திருந்தான் ஹரிஷ்.
மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி முடித்தவன்,
“நீங்க சுரபிய கூட்டிட்டு போங்க, நான் போய் அவ ரிப்போர்ட்ஸ் பாத்துட்டு, டாக்டர பாத்துட்டு வரேன்” என்க, சரி என்று விடாது அவளை அழைத்து கொண்டு சென்ற ஸ்ருதி, சுரபியை காரில் அமர வைத்து விட்டு,
“சுரபி நீ உட்காந்துரு, நான் இப்போ வந்துடுறேன்” என்று விட்டு ஸ்ருதி மீண்டும் மருத்துவமனை உள் செல்ல, இருந்த அயர்வில் சீட்டில் சாய்ந்து கண்மூடினாள் சுரபி.
“என்னாச்சு??” சென்ற வேகத்தில் திரும்பி வந்த ஸ்ருதியை கண்டு ஹரிஷ் வினவ,
“இல்லை நானும் டாக்டர பாக்க வர்றேன். அவளுக்கு சாப்பாடு எப்ப, என்ன கொடுக்கணும்னு நானே கேட்டு தெரிஞ்சுக்கிறேன். எனக்கும் இப்போ அவ ஹெல்த் கன்டிஷன் தெரியணும்”என்றிட,
சரி என்று தலையாட்டினான் ஹரிஷ்.
இவர்களை கண்டதும், மருத்தவர் அமர சொன்னவர் சுரபியின் ரிப்போர்ட்டை பார்த்து விட்டு,
“இனி பிரச்சனை இல்லை, நான் எழுதி கொடுத்து இருக்க மருத்து மாத்திரைய மட்டும் தவறாமா கொடுங்க, அப்பறம் நல்லா சத்தான சாப்பாடு விட்டமின் அதிகம் இருக்குற உணவை கொஞ்சம் அதிகமா கொடுங்க” என்றபடி ரிப்போர்ட்டை ஹரிஷிடம் கொடுக்க,
“எதனால டாக்டர் அவளுக்கு அபார்ட் ஆச்சு??” என ஸ்ருதி காரணம் அறிய வினவ,
“மன அழுத்தம் தான் மா காரணம். அளவுக்கு அதிகமான அழுத்தத்தை அவங்க மனசு சொமந்துட்டு இருக்கு. இதுல ஏற்கனவே ரெண்டு தடவை வேற அபார்ட் ஆகியிருக்கு, லாஸ்ட் டைம் நீங்க வந்தப்பவும் நான் இதை தான சொன்னேன். அவங்களுக்கு இப்போ நிம்மதி தேவை ரொம்ப அழுத்தமா இருக்காங்க, அவுங்களை கொஞ்சம் ரிலாக்ஸ்டா வச்சுக்கோங்கன்னு.
ஆனா அதையும் மீறி நீங்க கவனக்குறைவா இருந்துட்டீங்க. உங்களோட இந்த கவனக்குறைவும், அவுங்களோட மன அழுத்ததும் தான், கரு கலையறதுக்கு காரணம். இப்பவும் அவுங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா தான் இருக்காங்க, முடிஞ்சா அவுங்களை கவன்சிலிங்கு போக ஏற்பாடு பண்ணுங்க
இனி ஒரு தரம் அவுங்களுக்கு அபார்ட் ஆச்சுன்னா. அப்பறம் குழந்தை உண்டாகுறது கஷ்டம் தான். அவுங்க கர்ப்ப பை ரொம்பவே வலு இல்லாம இருக்கு, ஷோ அவங்க உடம்பை நல்லா நேத்தி, மனசையும் நேத்தி விடுங்க” என ஸ்ருதியிடம் ஆரம்பித்து மருத்துவர் ஹரிஷிடம் முடிக்க,
ஸ்ருதிக்கு உலகம் தலைகீழாக சுற்றும் உணர்வு.
“இரண்டு தடவை அபார்ட் ஆகியிருக்கு” என்ற மருத்துவரின் வார்த்தை அவள் காதினில் திரும்ப, திரும்ப ஒலிக்க, அவளால் நிலை கொள்ள முடியவில்லை.
‘கதிருடன் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் சுரபிக்கு இப்படி எதுவும் ஆகவில்லையே??அப்பறம் எப்படி இரு தடவை அபார்ஷன்??’
என யோசித்த ஸ்ருதிக்கு எதுவோ தவறாக பட, அவளின் மனம் தடதடக்க ஆரம்பித்தது.
ஏதோ பெரியதாக நடக்க போகிறது என அவளின் உள்மனம் எச்சரிக்க இயல்பாக இருக்க முடியவில்லை அவளால்.
மருத்துவரின் முன்பு எதுவும் கேட்க முடியாது தன்னை அடக்கி கொண்டவள்.
இருவரும் அறையை விட்டு வெளியேறி, வெளியே செல்லும் வழியில் வராண்டாவில் ஹரிஷை நிறுத்தியவள்,
“சுரபிக்கு எப்போ இரண்டு முறை அபார்ட் ஆச்சு???” என்றிட,
திடுக்கிட்டு திரும்பினான் ஹரிஷ். அப்போது தான் சுரபி கேட்ட கேள்வி அவனிற்கு உரைக்க, அவளையும் மருத்துவரை பார்க்க அழைத்து சென்ற தன் மடத்தனத்தை எண்ணி நொந்தவன்,
“அது.. அது..! ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு தடவையும், அப்பறம் எட்டு மாசத்துக்கு அப்பறமும் ஒரு தடவையும்” என அவன் தட்டு தடுமாறி உரைக்க,
“அந்த டைம் அவ கதிரோட இல்லை சேர்ந்து வாழ்ந்துட்டு இருந்தா. அந்த நேரம் அவளுக்கு இது மாதிரி எதுவும் ஆகலையே” என்றவளிற்கு எதுவோ புரிவது போல் இருக்க, அவளின் உடல் நடுங்க ஆரம்பித்தது.
“அது…….அ…..து….” என்றவனிற்கு அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் அவமானமாக இருக்க, “வீட்டுக்கு தெரியாம மறைச்சு தான் செஞ்சோம்”
“வீட்டுக்கு தெரியாம அப்படி ஏன் மறைச்சு பண்ணனும்?? என அவள் குரல் இறுக கேட்க,
“ஏன்னா? ஏன்னா…?அது என்னோட குழந்தை” என பட்டென்று கூறியவன், அவள் முகம் காணாது அங்கிருந்து சென்று விட,
கேட்ட வார்த்தைகள் அவளின் காதுகளில் ஈரத்தை காய்ச்சி ஊற்றியது போல் இருக்க, ஒரு வித அருவெறுப்பாக உணர்ந்தாள்.
எதுவும் பேசாது இறுகிய முகத்துடன் சென்று காரில் ஏறியவளின் பார்வை, ஹரிஷை சுட்டு பொசுக்க அவளின் பார்வையை சந்திக்க தைரியமில்லாது, தலை குனிந்து கொண்டான் அவன்.
வீடு வரும் வரை எந்த வித பேச்சகள் இன்றியும் அமைதியுடன் கழிந்தது.
வீட்டினுள் நுழைந்ததும் உறங்க சென்றவளை “நில்லு சுரபி” என்ற ஸ்ருதியின் வார்த்தைகள் கட்டளையிட, நின்றவள் திரும்பி தமக்கையின் முகம் பார்க்க செந்தணலாய் சிவந்து போயிருந்தது.
“என்ன க்கா எனக்கு டயர்ட்டா இருக்கு” என்றவளின் சோர்வு அடுத்து ஸ்ருதி கேட்ட கேள்வியில் அவளிடம் இருந்து தெறித்து ஓடியிருந்தது.
“சொல்லு டி? ஹரிஷ் சொல்லுறது எல்லாம் உண்மையா? இரண்டு தடவை அபார்ஷன் பண்ணி, அதை யாருக்கும் தெரியாம வேற மறைச்சு வச்சுருக்க ச்ச்சீ” என தன் முன்னே நின்று ஆவோசமாய் கேள்வி கேட்டவளை, கண்டு சுரபி மட்டுமல்ல அப்போது தான் உள் நுழைந்த ஹரிஷீம் திகைத்து தான் போனான் அவளின் இந்த ஆவேசத்தில்.
தன் முன்னே ஆவேசமாய் நின்று கொண்டிருந்தவளை கண்டு பதில் பேச முடியா நிலை இருவருக்கும்.
உடன் பிறந்தவளிடம் உண்மையை கூற இயலாது அவமானமாக உணர்ந்தாள் சுரபி.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு சுரபி. அப்போ, அப்போ கதிர் கூட இருக்கும் போதே உனக்கு ஹரிஷை பழக்கமா?? உங்க ரெண்டு பேருக்கும்….” அடுத்த வார்த்தையை கேட்க இயலாது அவள் அமைதியடைய,
ஸ்ருதியின் பேச்சில் அவள் என்ன கேட்க வருகிறாள் என புரிந்து கொண்ட சுரபி “ஆம்” என தலையாட்ட இதயம் நின்று விட்ட உணர்வு.
“இது…இது கதிருக்கு தெரியுமா??அதனால தான் இந்த விவாகாரத்தா??” என அப்போதும் தங்கை இல்லை என்று கூறி விட மாட்டாளா? என்ற நற்பாசையில் அவள் கேட்க,
தன்னையே வெறுத்த சுரபி அதற்கும் “ஆம்” என்ற தலையாட்ட அடுத்த நொடி “ச்சீ” என்ற வாக்கியத்துடன் சுரப்பியை “பளார்” என அறைந்திருந்தாள் ஸ்ருதி.
ஏற்கனவே சோர்ந்திருந்தவள் ஸ்ருதியின் அடியை தாங்க இயலாது, தடுமாறி விழ போக ஹரிஷ் வந்து தாங்கி கொண்டான்.
இருவரையும் பார்வையால் எரித்த ஸ்ருதி, ” ச்சீ….அசிங்கமா இல்லை உங்க ரெண்டு பேருக்கும். நீங்க பண்ண வேலைக்கு என்ன பேர்னு தெரியுமா?? ச்சை இந்த நிமிசம் உங்க முன்னாடி நிக்குறதுக்கே, எனக்கு அருவருப்பா இருக்கு. எப்புடி கொஞ்சம் கூட அசிங்கமா உணராமா சுத்திட்டு இருக்கீங்க” என கிழித்து தொங்க விட்டாள் ஸ்ருதி.
அவளால் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை.
‘தன் தங்கையா இப்படி’ என்ற கேள்வி அவளை குத்தி கிழித்தது.
வசதி இல்லை என்றாலும் ஒழுக்கத்தில் குறை வைக்கவில்லை அவள் பிறந்த வீட்டில். எப்போதும் வசதியினை ஒரு குறைவாக நினைத்ததில்லை.
அதனை தொட்டு தான் ஞானம் ஸ்ருதியை பெண் கேட்டது. அவருக்கு தெரியும் ஸ்ருதி கொஞ்சம் துடுக்குதனமானவளே தவிர ஒழுக்கத்தில் நெருப்பானவள் என.
அவளை போல சுரபியும் இருப்பாள், என நினைத்து தான் அவளை கதிருக்கு மணம் முடித்திருந்தனர்.
ஞானம் எதிர்பார்த்தது போல் தான் ஸ்ருதியும் அந்த குடும்பத்தில் இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தாள்.
எப்போது கதிர் சுரபியை விவாகரத்து செய்தானோ அன்றிலிருந்து தான் அவள் கதிரின் மீது வெறுப்பினை காட்ட தொடங்கியிருந்தாள்.
அவனின் முடிவுக்கு குடும்பத்தினர் யாரும் சிறு எதிர்ப்பு கூட தெரிவிக்க இல்லையே, என்ற கோபமும் அவர்கள் மேல் சேர்ந்து கொண்டதில் தேளாக கொட்ட ஆரம்பித்திருந்தாள்.
ஆனால் இப்போது அவள் கதிரின் மீது கொண்டிருந்த கோபத்திற்கான காரணமே ஆட்டம் கண்டிருந்தது.
இத்தனை நாளும் கதிரை துரோகம் செய்தவன் என அவள் நினைத்து கொண்டிருக்க, இப்போது அப்படியே தலைகீழாக அல்லவா மாறியிருக்கிறது.
அங்கே நின்று கொண்டிருந்த ஒவ்வொரு நொடியும், நெருப்பில் நிற்பது போல் இருக்க “வீட்டுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியும்ல” என சுரபியை உறுத்து விழித்தவள் அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தாள்.
சுரபியை அப்பட்டமாக பயம் கொள்ள செய்தது ஸ்ருதியின் பேச்சு.
‘வீட்டிற்கு தெரிந்தால்’ என நினைக்கையிலேயே அவளிற்கு கொஞ்சம் படபடவென அடித்து கொண்டது.
அதுவும் அவளின் அண்ணனிற்கு இந்த விஷயம் தெரிந்தால் அவ்வளவு தான் கொன்று போட கூட தயங்க மாட்டான். ஒழுக்கம் தவறும் விஷயங்களை எப்போதும் அவன் பொறுத்து கொண்டதே இல்லை. அவனை நினைக்கையில் இப்போதே சுரபியின் உடல் பயத்தில் வெடவெடக்க ஆரம்பித்திருந்தது.
இவள் எல்லாமே கதிரின் தவறு என்ற நிலையில் தானே, அவளின் வீட்டில் கூறி வைத்து இருக்கிறாள். இப்போது அது எல்லாம் உடைந்தால் இவளின் கதி??
எப்படி வீடு வந்து சேர்ந்தால் என்று கேட்டால் நிச்சயம் பதில் இல்லை ஸ்ருதியிடம்.
தங்கையின் செயலை நினைத்து கண்கள் கலங்கி கண்ணீர் வழிய, அழுத்தமாக துடைத்து கொண்டவளின் மனம் அதிகமாக பிரகாஷை தேட ஆரம்பித்தது.
இவள் உள்ளே வந்த நேரம் அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர். இவளின் பார்வை முதலில் கதிரை தான் தேடியது.
அவளின் பிள்ளைகளுடன் ஏதோ சிரித்து பேசிபயடி இருந்தவனை கண்டு, மீண்டும் கண்ணீர் பெருக அதனை காட்டாது தலையை குனிந்து கொண்டவள், யார் முகத்தையும் பார்க்காது விறுவிறு என அவளின் அறையை நோக்கி சென்றவளை தடுத்து நிறுத்தினாள் சீதா.
“அக்கா இன்னைக்கு தான், எங்க அண்ணா வீட்டு பங்ஷன் நீங்களும் வரீங்களா? எல்லாரும் அங்கப் போக தான் ரெடியாயிட்டு இருக்கோம்” என்க,
“இல்லை, நான் வரலை நீங்க போயிட்டு வாங்க” என முகத்தை அவளிற்கு காட்டாது கூறியவள் அடுத்த நொடி அவளின் அறைக்குள் சென்று விட்டாள்.
அவளின் இந்த அமைதியான மறுப்பு அங்கிருந்தவர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. வாயை திறந்தாலே தேளாய் கொட்டுபவள் இன்று இவ்வளவு அமைதியாக செல்வதை கண்டு அனைவருக்கும் வியப்பே.
ஒருவேளை அவளின் தங்கையின் உடல்நிலையை நினைத்து வருந்துகிறாளோ என அனைவரும் நினைத்து அவரவர் வேலைகளில் மூழ்கி விட்டனர்.
ஆனால் கதிருக்கு மட்டும் ஏதோ தவறாக பட்டது. வந்ததில் இருந்து யாருக்கும் முகத்தை காட்டாது இருந்த ஸ்ருதியின் மீது, அவனிற்கு சந்தேகம் எழுந்தது.
அவளது முகமும், குரலும், அழுதது போல் இருக்க பிரகாஷிடம் கண் காட்ட, அவனிற்கும் மனைவியிடம் ஏதோ வித்யாசமாக பட, அதனை அறிந்து கொள்ளும் பொருட்டு வேகமாக அறை நோக்கி சென்றான்.
அதுவரை ஸ்ருதி அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து கொண்டு வர கட்டிலில் விழுந்து தேம்ப ஆரம்பித்திருந்தாள். அவளால் இன்னமும் சுரபியின் செயலை ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை.
அவளின் பின்னே வந்த பிரகாஷ் அவளின் அழுகையை கண்டு திகைத்தவன் “ஸ்ருதி….ஸ்ருதி என்னாச்சு எதுக்கு அழுகுற” என அவளை எழுப்ப,
அவனின் இடுப்பை கட்டி கொண்டு மேலும் மேலும் அவள் தேம்ப “என்னாச்சு ஸ்ருதி, சுரபிக்கு உடம்பு சரியில்லையின்னு தான போன, அவ நல்ல தான இருக்க ஏதும் பிரச்சனை இல்லையில்ல?? எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் ஸ்ருதி. பணம் ஏதும் தேவைபடுதா??” என தங்கையை நினைத்து தான் அழுகிறாளோ என நினைத்து பிராகாஷ் கூற,
அவனின் இந்த அக்கறையில் மேலும் மேலும் அழுகை கூடியது ஸ்ருதிக்கு.
“ச்சீ…அவளை பத்தி பேசாதீங்க அவ என் தங்கச்சியே இல்லை” என அவள் அழுகையில் கரைய,
“என்ன? என்னாச்சு ஸ்ருதி? என்ன நடந்துச்சு ஏதும் சண்டையா??”
“ம்ஹீம், நான் பேசுனும் உங்ககிட்ட, எல்லாத்தையும் சொல்லணும். ப்ளீஷ் என்கூட இருங்களேன். என்னால முடியலை நெஞ்சு வெடிச்சு செத்துடுவேன் போலிருக்கு” என்க,
அதில் பதறியவன் “என்ன பேசுற நீ?? இரு வரேன்” என அவளை விலக்கி விட்டு வெளியே சென்றவனிற்கு விஷயம் ஏதோ பெரியது என பட்டது.
“அம்மா நீங்க போங்க, ஸ்ருதிக்கு கொஞ்சம் உடம்பு முடியலை ஒரு மாதிரி இருக்கா, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். அவ சரியாகிட்டானா நா அப்பறம் கூட்டிட்டு வர்றேன் பசங்களை உங்க கூட கூட்டிட்டு போங்க” என்க,
“என்னடா, என்னாச்சு? இப்போ போனப்போ நல்ல தான இருந்தா தள்ளு நான் பார்க்கிறேன்” என்றவர் அவன் தடுக்கும் முன் சென்று விட்டார்.
பிரகாஷிற்கு மனம் திக்கென்று இருந்தது. ஸ்ருதி இருக்கும் நிலையில் எதையாவது உளறி விடுவாளோ என,
“ஸ்ருதி” என அழைத்தவாறு ஞானம் உள்ளே நுழைய அவரை எதிர்பாராதவள் அதிர்ந்து நிற்க,
அழுததில் முகம் எல்லாம் வீங்கி சிவந்து நின்றவளை கண்டு பதறிய ஞானம் “என்னாச்சு ஸ்ருதி, என்ன செய்யது? முகம் எல்லாம் இப்புடி வீங்கி சிவந்து போயிற்கு” என்றவரின் அக்கறையில் அவளின் குற்றவுணர்வு தலை தூக்க அழுகை பீறிட்டு வர அடக்கியவள்,
“ஒண்ணும் இல்லை அத்தை கொஞ்சம் வயிறு வலிக்குது அதான்” என்றிட,
“சரி நீ படுத்துக்கோ” என்றவர் வெளியேறி, தயிரை கடைந்து நன்றாக மோர் ஆக்கி அதில் சிறிது வெந்தயத்தை கலந்து பிரகாஷிடம் கொடுத்தவர்,
“வயிறு சூட்டு பிடிச்சிருக்கும் போல வலியில அழுது முகமெல்லாம் வீங்கி போய் இருக்கா இதை கொண்டு போய் கொடு. அவளுக்கு சரியான அப்பறம் நாங்க கிளம்புறோம். இப்புடி அவளை விட்டுட்டு போக மனசில்லை” என்றிட சீதாவும் முல்லையும் ஆமோதித்தனர்.
ஆனால் பிரகாஷிற்கு அவர்கள் கிளம்புவது நல்லது என தோன்றியது. ஸ்ருதி இப்போது இருக்கும் நிலை அவனிற்கு பயத்தை கொடுத்திருந்தது.
எல்லாரையும் வைத்து கொண்டு அவளிடம் பேசுவது சரி என படவில்லை அவனிற்கு. எனவே,
“இல்லைம்மா நீங்க போங்க யாருமே போகலையின்னா சங்கடமா இருக்கும் நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க” என்க,
“இல்லை மாமா நான் அண்ணாகிட்ட பேசிக்கிறேன். அக்காவ எப்புடி தனியா விட்டுட்டு போறது” என சீதா கூற
பிரகாஷ் வேறுவழியின்றி கதிரை பார்க்க, அவனின் தவிப்பை புரிந்த கொண்ட கதிர்,
“அதான் அவன் இவ்வளவு சொல்றான்ல ம்மா நம்ம போவோம். அவன் முடிஞ்சா அப்பறம் வரட்டும். தொந்தரவு பண்ண வேண்டாம்” என அதட்டி அனைவரையும் கிளப்பி வெளியேற்றியவன், கடைசியாக பிரகாஷிடம் வர,
“என்னவோ தப்பா படுதுடா” என்றவன் சற்று முன் ஸ்ருதி பேசியதை கூற,
கதிரின் முகம் யோசனையை தத்தெடுத்தது. “என்னன்னு பேச்சு கொடுத்து முழுசா விசாரிடா, எனக்கும் சந்தேகமா தான் இருக்கு” என்று விட்டு அவனும் வெளியேறி விட்டிருந்தான்.
அனைவரும் கிளம்பி விட்டதை உறுதி செய்து விட்டு ஸ்ருதியிடம் சென்ற பிரகாஷ், அவளை எழுப்பி முகம் கழுவி வர அனுப்பி விட்டு சமையலறைக்குள் நுழைந்தான்.
அங்கே விஷேஷத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் எதுவும் சமைக்கவில்லை வீட்டில். ப்ரீட்ஜில் இருந்த பாலை மட்டும் எடுத்து காய்ச்சியவன், நான்கு பிஸ்கட்டுகளை உடன் எடுத்து கொண்டு ஸ்ருதியிடம் செல்ல,
அதற்குள் முகம் கழுவி அமர்ந்திருந்தவளின் முகத்தின் வீக்கமும் சிகப்பும் இன்னும் குறையாமல் அப்படியே இருந்தது.
அவளிடம் பாலை நீட்ட எதுவும் பேசாமல் வாங்கி கொண்டவள் குடிக்க ஆரம்பிக்க,
அவள் முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன் “சொல்லு ஸ்ருதி என்ன பிரச்சனை??” என்க,
அழுகை வர தொடங்கியது அவளிற்கு.
“ப்ச் ஸ்ருதி, அழாம பேசேன் அப்போ தான் எனக்கு புரியும்” என்க முயன்று அழுகையை அடக்கியவளுக்கு, அவனிடம் சுரபியை பற்றி கூறவும் அவமானமாக இருந்தது.
எங்கே அவளை எதுவும் திட்டி தன்னை வெறுத்து விடுவானோ என பயமாக இருந்த போதிலும் அவனிடம் கூறாமல் இருக்கவும் அவள் விரும்பவில்லை.
“சுரபி…..சுரபிக்கு அபார்ட் ஆகிடுச்சு” என்க அவனிற்குமே சற்று திகைப்பு தான்.
“ஓ…ஓ இப்போ எப்புடி இருக்கா உடம்பு பரவாயில்லையா? சரி விடு அதையே நெனைச்சு, உன்னை வருத்திகாத அவளுக்கு நீ தானே ஆறுதலா இருக்கணும்?? இப்போ இல்லையின்னா என்ன? சீக்கிரமே நல்லது நடக்கும்” என்றவனிற்கு வருத்தமே.
சுரபியின் மேல் கோபம் இருந்தாலும், அவளின் துயர் கண்டு மகிழும் அளவிற்கு அக்குடும்பத்தில் எவருக்கும் கல் மனம் இல்லையே
“ம்ஹும்…! ம்ஹீம்! இதுக்கு முன்னாடியே அவளுக்கு ரெண்டு தடவை அபார்ஷன் ஆகியிருக்கு. அதுவும் அவ கதிரை கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டுக்கு வந்த பின்னாடி நடந்துருக்க. அதை யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருக்கா???அது….அது….ஹரிஷோட குழந்தையாம்” என்றவள் தொண்டை அடைக்க கூறிவிட்டு முகத்தை மூடி அழ,
பிரகாஷிடம் எந்த விதமான மாற்றமும் இல்லை.
‘இதோ கத்த போகிறான். என்னையும் சேர்த்து திட்ட போகிறான்’ என நினைத்தவளிற்கு அவனிடம் இருந்து பதில் வராததில் நிமிர்ந்து அவனை பார்க்க,
“அப்படியா?” எனும் விதமாக அமர்ந்திருந்தவனை கண்டு அவளிற்கு திகைப்பே.
எவ்வளவு பெரிய விடயம் சுரபி கதிருக்கு துரோகம் செய்திருக்கிறாள். கதிரை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி இருக்கிறாள்!! இதை எல்லாம் தெரிந்தும் பிரகாஷின் அமைதி அவளை சந்தேகப்பட தூண்டியது.
“உங்களுக்கு…உங்களுக்கு இது முன்னாடியே தெரியுமா??” என்க,
“ஆம்” என சங்கடமாக தலையாட்டினான் அவன்.
“என்ன?? ஏன்..ஏன்? என்கிட்ட இருந்து இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சீங்க. நான் உங்க குடும்பத்து மேலயும், கதிர் மேலயும், எவ்வளவு வெறுப்பு காட்டினேன் அப்போதாவது என்னை அறைச்சு ” உன் தங்கச்சி செஞ்ச அசிங்கத்தை கேளுன்னு” என் மொகத்துல காறி துப்பியிருக்க வேண்டாமா நீங்க” என அவள் அழுது கரைய,
“என்ன பேசுற ஸ்ருதி? உன்னை எதுக்கு நான் அப்பிடி கேட்கணும்?சுரபி பண்ண தப்புக்கு நீ என்ன பண்ணுவ?? நீ இந்த வீட்டோட மூத்த மருமகள், என்னோட பொண்டாட்டி உன்னை நாங்க அசிங்கப்படுத்துவோமா??”
“ஆனா அவ அப்புடி நினைக்கலையே. அவளோட அக்கா நானும் தான் இந்த வீட்டுல இருக்கேன். அவ செஞ்ச அசிங்கம் தெரிஞ்சா எல்லாரும் இந்த வீட்டுல என்னை எப்புடி பாப்பாங்கன்னு அவ நெனைச்சு பாக்கலையே,
அவளுக்காக அவளுக்காக தானங்க நான் எல்லாமே செஞ்சேன். அவ விரும்பனான்றதுக்காக தான நான் விடாப்பிடியா இந்த கல்யாணத்தை முடிச்சேன். இவ இவ தற்கொலை பண்ணிக்கிற வரைக்கும் போனாளேங்க. அப்பறம் அப்பறம் எப்புடி இப்புடி ஒரு காரியத்தை அவளால பண்ண முடிஞ்சது???”
“ச்சு ஸ்ருதி நம்ம வீட்டுல யாருக்கும் விஷயம் தெரியாது கதிர் யாருகிட்டயும் சொல்ல விரும்பலை. என்கிட்டயே அவன் சொல்லலை நானே தான் இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டேன். உன்னை மாதிரி தான் நானும் மொதல்ல அப்புடி கோவப்பட்டேன். ஏன் உங்க வீட்டு ஆளுங்க கிட்ட கூட போய் சண்டை போட போனேன், ஆனா கதிர் எல்லாத்தையும் தடுத்துட்டான். வீண் பிரச்சனை வோண்டாம்னு சொல்லிட்டான். இதனால விஷயம் தெரிஞ்சா உன்னால இந்த குடும்பத்துல இயல்பா இருக்க முடியாதுன்னு என்னை தடுத்துட்டான்.
அவன் சொன்னது ஒண்ணே ஒண்ணு தான் ஸ்ருதி “சுரபிக்கு அவ நினைச்ச வாழ்க்கை என் மூலமாக கிடைக்கல, அதான் அவ விரும்புனதை தேடிகிட்டா, என்ன அவ தேட தேர்ந்தெடுத்த வழி தப்பான வழி. அவ நினைச்ச வாழ்க்கை தான் கிடைக்கல அவளோட குடும்பமாவது அவக் கூட இருக்கட்டுமே இந்த விஷயம் அவுங்க வீட்டுக்கு தெரிஞ்சா நிச்சயம் எனக்கு துணையதான் நிப்பாங்க. அது வேண்டாம், அவ குடும்பத்துக்காகவது அவ உண்மையானவளா இருந்துட்டு போகட்டும்” னு சொன்னான்.
பாதிக்கப்பட்ட அவனே, இவ்வளவு தூரம் விட்ட பின்னாடி எனக்கும் அதையோ பிடிச்சுட்டு தொங்க முடியலை. ஸ்ருதி உனக்கும் அதை தான் நான் சொல்றேன் உன் தங்கச்சி அவளுக்கான வாழ்க்கைய தேடிக்கிட்டா, அது அவளோட விருப்பம் இதை நீ இப்புடியே விட்டுடு, நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினா மட்டும் நடந்தது மாற போகுதா என்ன?? இல்லையில்லை.
அப்போ இந்த விஷயத்தால நீ வேதனைப்பட்டு என்ன ப்ரோஜ்ஜனம்?? இதை அப்புடியே விட்டுடு ஸ்ருதி, நடந்ததை யாராலயும் மாத்த முடியாது, நடக்க போறதையும் யார் நெனச்சாலும் தடுக்க முடியாது. கதிர் இப்போ அவனோட வாழ்க்கையில் சந்தோஷமாவே இருக்கான், சுரபியும் அவளோட வாழ்க்கையில நல்லாதானே இருக்கா. அப்போ இதை அப்பிடியே விட்டுடு”
“நான் கதிர் கிட்டயும் முல்லை கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்ங்க”
“ம்ஹீம், அது மட்டும் நடக்காது, நீ தப்பே பண்ணிருந்தாலும், என் தம்பியே ஆனாலும், கதிர்கிட்ட நீ மன்னிப்பு கேட்குறத நான் துளி கூட விரும்ப மாட்டேன். என்னோட மனைவியோட மரியாதை இந்த வீட்டுல எங்கேயும் சரிய கூடாது அதுக்காக உனக்கு சப்போர்ட் பண்ணிட்டு கதிரை அப்புடியே விடவும் மாட்டேன்.
அப்படி இருக்கும்போது இந்த விஷயத்துல உன்னோட தப்புன்னு எதுவுமே இல்லை, அப்பறம் எப்புடி நான் இதுக்கு அனுமதிப்பேன் கதிரும் இதை விரும்ப மாட்டேன்.
நம்ம வாழ்க்கை நல்லா இருக்கனும்னா, நீ இந்த விஷயத்தை இப்படியே விடறது தான் நல்லது” என தீர்மானமாக பிரகாஷ் கூறிட,
“சரிங்க ஆனா இனி நான் அவ மூஞ்சிலயே முழிக்க மாட்டேன். அவளுக்கு எனக்கும் எந்தவிதமான உறவும் இல்லை செத்தாலும் அவ மூஞ்சில முழிக்க மாட்டேன்”என அவள் கோபத்தில் படபடக்க,
“இப்போ நீ கோபத்துல இருக்க அவசரப்பட்டு வார்த்தைய விட்டுடாதா, உன் தங்கச்சி செத்தா உனக்கு சந்தோஷமா??” என்க,
வார்த்தையில் கூறும் போதே அவள் உடல் நடுங்கிற்று.
“இப்போ சுரபி மேல உனக்கு கோபம் இருக்கலாம் ஏன் வெறுக்க கூட செய்யலாம். ஆனா நாளைக்கே அவளுக்கு ஏதாச்சு ஒண்ணுனா, மொதல்ல நீ தான் துடிப்ப, வேண்டாம்னு வெட்டி விட்டு போறதுக்கு இது என்ன பங்காளி சண்டையா?? அவ உன் கூடப் பொறந்த பொறுப்பு, கிட்டதட்ட பொறந்ததுல இருந்து ஒட்டிக்கிட்டு இருக்கீங்க, அவ்வளவு சீக்கிரம் சுரபிய உன்னால் வெறுத்து ஒதுக்கிட முடியாது.
இப்பவும் நீ அவக்கூட பேசுறதுல எனக்கும் சரி நம்ம குடும்பத்துக்கும் சரி எந்த வித பிரச்சனையும் இல்லை. ஆனா அதோட பாதிப்பை நம்ம குடும்பத்துகிட்ட நீ காட்ட கூடாது, அது ஒண்ணு தான் நான் கேட்குறேன்.
எனக்கு சுரபி இந்த வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்த என்னோட ஸ்ருதி வேணும். அவ கோபப்பட்டாலும் யாரையும் வெறுக்க மாட்டா. என் குடும்பம்னு தாங்கலனாலும், எல்லாரோடவும் சேர்ந்து ஒத்துமையா இருந்தா, என்னையும் அவ்வளவு விரும்புனா, அந்த ஸ்ருதி வேணும் கிடைக்குமா??” என்க,
“ம்ம் ம்ம்” என கண்ணீருடன் அவள் தலையாட்ட அவள் நெற்றியில் இதழ் பதித்து அவளை இறுக அணைத்து கொண்டான் பிரகாஷ்.
அவனிற்கு சுரபியை பற்றி எல்லாம் கவலையில்லை. அவனின் ஸ்ருதி அவனிற்கு திரும்ப வேண்டும். இனி அவள் கதிரின் மீதும் அவர்களின் குடும்பத்தின் மீதும் வெறுப்பை காட்ட மாட்டாள், என்ற நம்பிக்கையே அவனிற்கு பெரும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க அதனை தனது அணைப்பின் மூலமும் முத்தத்தின் மூலமாகவும் அவளிற்கு உணர்த்திட,
பிராகஷின் கூற்று படி சுரபி விஷயத்தை ஒதுக்கியவள் அவளின் குடும்பத்தோடு இணைந்து வாழ வேண்டும் என முடிவெடுத்தவள் அவனது அணைப்பினில் சுகமாக கரைய,
ஆறுதலாய் அணைத்த அணைப்பு காதலாய் மாற பிரகாஷின் அழைப்பில் மறுக்காது அவனுடன் கலந்தாள் பெண்.
விஷேஷத்திற்கு சென்றவர்கள் வீடு திரும்ப இரவு ஆகி விட்டது. அங்கேயே அவர்கள் உணவினை முடித்து விட்டிருக்க, சீதாவின் அண்ணி, பிராகாஷிற்கும் ஸ்ருதிக்கு உணவினை தந்து விட்டிருந்தார்.
“இப்போ எப்புடி இருக்காங்க மாமா??” என முல்லை ஸ்ருதியை கேட்க,
“ம்ம்ம் இப்போ கொஞ்சம் பரவாயில்லை மா தூங்குறா??”
“நா போய் எழுப்புறேன் சாப்பிட்டுட்டு தூங்கட்டும் டா ” என ஞானம் அவர் அறை நோக்கி செல்ல போக,
பதறியவன் ” ம்மா…அம்மா வேண்டாம், அவ அசந்து தூங்குற நா சாப்பிட்டுட்டு அவளுக்கு கொண்டு போய்கிறேன். பசங்க உங்க ரூம்ல தூங்கட்டும் அங்க வந்தா அவளை தூங்க விடாதுங்க ரெண்டும், தூங்கட்டும்மா” என்க,
அவனின் பதட்டத்தில் ராகேஷீம் கதிரும் நமட்டு சிரிப்பு சிரிக்க, கணவர்களின் சிரிப்பில் விஷயத்தை புரிந்த கொண்ட சீதாவும், முல்லையும், இருவரையும் முறைக்க அடுத்த நொடி கப்சிப்.
“ஏன் பிராகாஷ் அந்த பிள்ளைக்கு என்னாச்சாம். ஏதும் பெரிய பிரச்சனையாப்பா அங்க போயிட்டு வந்தததுல இருந்து மருமக மொகமே சரியில்லை” என கோபலாசுவாமி விசாரிக்க,
“ம்ம்ம் ஆமாப்பா, சுரபிக்கு அபார்ஷன் ஆகிடுச்சாம்” என விஷயத்தை கூறிட,
“அச்சோ!!!” என்ற வேதனை தான் அனைவரிடமும். இருந்தும் அவர்களால் இதில் ஒன்றும் செய்ய முடியாதே, சுரபியின் உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும். என வேண்டி கொள்ள மட்டும் தான் முடிந்தது.
ஒருவர் கூட “அவளுக்கு இது எல்லாம் வேணும் தான் இன்னும் அனுபவிப்ப செஞ்ச வேலைக்கு” என கூறவில்லை.
அனைவருக்கும் அவள் மேல் வருத்தம் தான் இருந்ததே தவிர அவள் நன்றாக இருக்க கூடாது என எப்போதும் அவர்கள் நினைத்ததில்லை.
“சரி..சரி இப்போ என்ன அவங்களுக்கு வயசா இல்லை??இது இல்லையின்னா, அடுத்தது நல்லதா வரும். போதும் பேசுனது எல்லாரும் போய் படுங்க” என ஞானம் விரட்ட,
அவரின் பேச்சினை ஆமோதித்து அவரவர் அறைக்கு சென்று விட்டனர்.
நடுஜாமத்தில் தூக்கத்தில் புரண்டு படுத்து, கதிரை தேடியவளுக்கு அவன் அகப்படாமல் போகவே சட்டென முழிப்பு வந்து விட்டது முல்லைக்கு.
பாத்ரூமில் பார்க்க இல்லை அறையின் கதவும் திறக்கப்படாமல் இருந்ததில் அவன் வெளியேவும் செல்லவில்லை என உறதிப்படுத்தியவள் அத்விக்கு நன்றாக போர்த்தி விட்டு எழுந்து மினி விளக்கை போட பால்கனி இருளில் நின்றிருந்தவனின் உருவம் வரிவடிவமாய் தெரிய, அங்கே சென்றாள்.
பால்கனி விளக்கை கூட போடாது இருளை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் கதிர்.
“என்னாச்சுங்க தூக்கம் வரலையா??” என்க,
“ஹேய் என்ன நீ எழுந்து வந்துட்ட அத்வி உன்னை தேடுவான். போ முல்லை, கொஞ்சம் மனசு ஒரு மாதிரி இருந்தது, அதான் தூக்கம் வரலை நீ போ”
“ம்ஹீம், இப்போ நான் இருக்க வேண்டியது, என் பையன் கிட்ட இல்லை. அவன் என்ன தேடலை, இதோ, இங்க இம்மாம் பெருசா வளர்ந்து விட்டிருக்காங்களே, எங்க அத்தை பெத்த பையன் தான், என்னை தேடுறாரு அவருக்கு தான் என் துணை ரொம்ப அவசியம். செல்லுங்க என்ன விஷயம்? எதை நினைச்சு வருத்தப்படுறீங்க??”
“ப்ச் முல்லை, நீ இருக்கியே ஒண்ணும் இல்லை போடி!” என அவளை விரட்ட,
“ம்ஹீம் எதுவோ இருக்கு சொல்லுங்க இல்லையின்னா போக மாட்டேன் ” என அவள் அடம் பிடிக்க,
பால்கனி சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்தவன் “இங்க வா” என அவளையும் இழுத்து, தன் மடி மீது அமர வைத்தவன், அவள் முகத்தை தன் நெஞ்சின் மீது அழுத்தி, அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து கண்மூடி கொண்டான்.
சிறிது நேரம் அந்த நிலையை தொடர விட்டவள் “சொல்லுங்க கதிர்” என்க,
“ஒண்ணும் இல்லை, இன்னைக்கு பிரகாஷ் சொன்னான் இல்லையா சுரபி விஷயம், மனசுக்கு கஷ்டமா ஆகிடுச்சு” என்க,
“என்ன??” என்றபடி அதிர்ந்து விலகியவள்,
“உங்களுக்கு கொஞ்சம் கூட கோபம் வரலையா?? உங்களுக்கு மட்டுமில்லை இந்த வீட்டுல இருக்குற யாருக்குமே கோபம் இல்லையா?? “
“எதுக்கு கோபப்படணும் முல்லை??”
“ஏன்னா? ஏன்னா, அவ உங்களுக்கு, நம்ம குடும்பத்துக்கு எல்லாம் எவ்வளவு கெடுதல் பண்ணிருக்கா முக்கியமா உங்களுக்கு!!!” என்றவளை பேச விடாமல் தடுத்தவன்,
“முல்லை, முடிஞ்ச விஷயம் பத்தி பேச வேண்டாம். நான் ஒண்ணு கேக்குறேன் உனக்கு இப்பவும் ஹரிஷ் மேல கோபம் இருக்கா??”
“இல்லை, அவன் மேல் கோபப்பட நான் யாரு? அவனுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்? நான் உங்க கூட சந்தோஷமா இருக்கும் போது, யாருனே தெரியாத ஒருத்தன் மேல் நான் ஏன் கோபப்படணும்” என அவள் நிதானமாகவே கூற,
“ம்ம்ம்ம் அதே தான், எனக்கும். சுரபியும் எனக்கு யாரோ ஒருத்தி தான், அதுவும் இல்லாம எனக்கு கொஞ்சம் குற்றவுணர்வும் இருக்கு முல்லை”
“உங்களுக்கு என்னங்க குற்றவுணர்வு, நீங்க என்ன தப்பு பண்ணீங்க??”
“ஆமா முல்லை, என்ன தான் சுரபி தற்கொலை வர போனாலும், நான் உறுதியாக நின்று அவளை மறுந்திருக்கனுமோ. உன்னை மனசுல வச்சுக்கிட்டு அவளை நான் கல்யாணம் பண்ணது ரொம்ப பெரிய தப்போ???
நான் அவளை கல்யாணம் பண்ணதுனால தானே, அவ எதிர்பார்த்த மாதிரி நான் இல்லனதும், அவ தப்பான வழில போக ஆரம்பிச்சா, என்கிட்ட கிடைக்காத அன்பை தானே அவ வெளில தேடிகிட்டா!!!!
அப்போ, அவ அப்படி தப்பான வழில போக, நான் தான் முழு முதல் காரணமோன்ற குற்றவுணர்வு எனக்கு இருக்கு.
ஒருவேளை நான் அவளை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா, இப்புடி ஒரு நிலைமை அவளுக்கு வந்துருக்காதுல்ல??
நான் உறுதியா நின்னு அவளை மறுத்துறுக்கனும்ன்ற நெனைப்பு என்னை குற்றவுணர்வா உணர வச்சுகிட்டு தான் இருக்கு…”
“இல்லை கதிர் இதுல உங்க தப்பு எதுவுமே இல்லை. நீங்க ஆரம்பத்துலயே, இதுல உங்களுக்கு விருப்பம் இல்லையின்னு சொல்லிட்டீங்க தான அவகிட்ட, அதையும் மீறி உங்களை ப்ளாக் மெயில் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டது அவ தப்பு தான??”
“ம்ம்ம் இருக்கலாம், இல்லாமையும் இருக்கலாம். ஆனா அவ தப்பான வழில போறதுக்கு, நானுமே ஒரு காரணம்னு என் மனசுக்கு உறுத்திகிட்டே இருக்கு.
இந்த உறுத்தல், சுரபி அவளுக்கான வாழ்க்கைய சந்தோஷமா வாழும் போது, காணமா போய்டுமோ என்னவோ. ஆனா, மேல, மேல அவ கஷ்டப்படும் போது என்னால் தானேன்ற எண்ணம் வர்றது என்னால தடுக்க முடியலை”
“எல்லாமே விதி தான் கதிர். அதுப்படி தான் நடக்கணும்னு விதிச்சுருக்கு. இல்லையின்னா எனக்கு கல்யாணம் ஆகி, ஒரு புள்ளைய பெத்த அப்பறமும், உங்க கை வந்து சேர்ந்திருப்பேனா? உங்கள இவ்வளவு தான் காதலிச்சிருப்பேனா? இப்புடி தான் நான் உங்ககிட்ட வந்து சேரணும்னு விதி இருந்திருக்கு. அதை மாத்த படைச்சவனாலயே முடியாது.
விதியை மதியால வெல்லலாம்னு சொல்லுவாங்க, ஆனா அது எத்தனை தூரம் உண்மையின்னு யாருக்கும் தெரியாதே, நம்ம வாழுற வாழ்க்கையில யாருக்கும் கெடுதல் நினைக்காமா, வாழுற வாழ்க்கைக்கு உண்மையா இருந்தா போதும், எல்லாம் நல்லபடியாவே நடக்கும்.
ஒருவேளை சுரபியும் அவ தப்ப உணர்ந்து நல்லபடியா வாழ ஆரம்பிச்சா, அவ வாழ்க்கையும் நல்லாதான் இருக்கும். அது அவுங்க கையில தானே இருக்கு, இப்போ, நீங்க, நான், அத்வி இது தான் நம்ம குடும்பம். இதை மட்டும் நீங்க பாத்த போதும்” என அவள் கூற அவளை இறுக்கி அணைத்து கொண்டவன் வேறு எதுவும் பேசவில்லை.
“உங்க அண்ணி மேல உங்களுக்கு வருத்தம் இருக்கா??”
“ம்ஹீம், சத்தியமா இல்லை அவுங்க என்னோட அண்ணி. சுரபி செஞ்ச தப்புக்கு அவுங்க என்ன பண்ணுவாங்க. வெடுக்குன்னு தான் பேசுவாங்களே தவிர, அவுங்க மனசுல விஷம் இல்லை. கொஞ்ச நாள் சுரபி நல்லா வாழ ஆரம்பிச்சாலே இவுங்க மாறிடுவாங்க.
அதுவும் இல்லாம அவுங்களோட மல்லுகட்ட எனக்கு பிடிக்கும். எதையாவது பேசி வம்பிழுத்தேன்னா, வரிஞ்சு கட்டிகிட்டு சண்டைக்கு வருவாங்க.கடைசியாக எங்க மூணு பேரு கிட்டயும் மாட்டிக்கிட்டாலும், சளிக்காம சண்டைக்கு நிப்பாங்க. அப்போ எல்லாம் ரொம்ப குஷியா இருக்கும்” என அவன் சிரிக்க,
“எவ்வளவு கேடி நீங்க” என அடித்தவளின் கை பற்றி தடுத்தவன் “நான் கேடி மட்டுமில்ல கெட்டப் பையனும் கூட பாக்குறியா” என்றபடி அவளை தூக்கி கொண்டு சென்றவன், அவன் அவளிடம் எவ்வளவு கெட்டவன் என காட்ட தொடங்க, அந்த கெட்டவனின் பிடியில் விரும்பியே விழுந்தாள் முல்லை.
சென்னை செல்லும் விமானத்திற்காக, கோயம்புத்தூர் விமான நிலையத்தில் காத்திருந்தனர் சுரபியும் ஹரிஷீம்.
சுரபிக்கு அபார்ஷன் ஆன ஒரே மாதத்தில் சென்னைக்கு மாற்றல் வாங்கிவிட்டிருந்தான் ஹரிஷ்.
இனியும் சுரபியை இழுக்க அவன் விரும்பவில்லை. இங்கேயே இருந்தால் அவள் கதிரை நினைத்து நினைத்தே அவளை வருந்தி கொள்வாள் என்பது உறுதி.
மருத்துவர் கூறியது போல் பதினைந்து நாட்கள் கவுன்சிலிங் சென்றவளிடம் எந்த வித முன்னேற்றம் இல்லாவிடினும் நிறைய மாற்றங்கள் இருந்தது உண்மை.
அவன் சென்னைக்கு செல்ல வேண்டும் என்றதும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி கிளம்பிவிட்டிருந்தாள். இப்போதெல்லாம் அவளிற்கு குழந்தையின் நினைவு தான் அதிகம்.
ஸ்ருதி இவர்களுடன் பேசுவதில்லை. நான்கைந்து முறை முயன்று தோற்று போன சுரபி “அவளாவது நிம்மதியா இருக்கட்டும்” என ஹரிஷீடம் கூறியவள் மீண்டும் முயற்சிக்கவே இல்லை.
ஸ்ருதி தன் வீட்டினர் யாரிடமும் அவளின் விஷயத்தை கூறாததே அவளிற்கு பெருத்த நிம்மதியாக இருந்தது.
அவளிற்கும் புரிந்திருந்தது இனி தன் பாதை வேறு என!!
திரும்பவும் கதிரின் வாழ்வில் தலையிட்டால் இவளிற்கு தான் பாதிப்பு என.
அதுவும் இல்லாமல் மருத்துவர் கூறியதை, ஹரிஷ் சுரபியிடம் கூறியிருக்க, குழந்தை வேண்டி, அதில் இருந்து தனது மனதினை அழுத்தும் விஷயங்களை தூக்கி எறிந்தவள், அந்த விஷயங்களில் இருந்து தள்ளி நிற்கவும் பழகி கொண்டாள்.
இந்த ஊரை விட்டு மொத்தமாக செல்ல போகிறோம் என நினைக்கும் போதே அத்வியின் ஞாபகம் முணுக்கென்று நெஞ்சை தைத்தது ஹரிஷ்ஷிற்கு.
கடைசியாக அவனை ஒரு முறை பார்த்து விட மாட்டோமா? என அவன் மனம் ஏக்கம் கொள்ள, அது நடக்காது என தெரிந்தாலும் மனம் ஏற்று கொள்ள மறுத்து அடம்பிடித்தது.
கண்கெட்ட பின்பு சூர்யநமஸ்காரம் போல, அவன் இழுந்த சொர்க்கம் அவனிற்கு வலியை தர,
அதே வேளை அந்த சொர்க்கம், இன்னொருவனின் கைசேர்த்து மிளிர்கையில், லேசான நிம்மதியும் கொண்டான்.
அவர்கள் செய்த தவறு நல்ல பாடத்தை இருவருக்கும் கற்று கொடுத்திருந்தது.
அவரவர் செய்யும் தவறின் அளவை பொறுத்து தண்டணைகள் மாறும்.
சுரபி, ஹரிஷ் செய்தது மன்னிக்க முடியாத தப்பு என்றாலும், அதற்கான தண்டனையை வலிக்க வலிக்க அனுபவித்து விட்டனர்.
இவர்கள் செய்த தவறை கதிர் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தால் அவனிற்கு அது அசிங்கம் தானே. கதிருக்கு தேவை அவனின் ஹனி, இப்போது அவள் அவன் கைகளில் உடன் ஒரு நட்சத்திரத்துடன். அவனின் வாழ்வு சந்தோஷமாகவே செல்லும் முல்லையுடன். அதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.
கதிரின் குற்றவுணர்வு நீக்குவதற்காக கூட இருவரும் நன்றாக வாழட்டுமே.
அதனால் என்ன கெடுதல் வந்து விட போகிறது.
இவர்களுக்கான விமான அறிவுப்பு வந்து விட வாழ்வின் அடுத்த விடியலை நோக்கி பயணப்பட்டனர் இருவரும்.
இந்த விடியலாவது அவர்களுக்கு நல்லதை செய்யட்டுமே.
வாழ்வில் எல்லாரும் ஏதோ ஓர் இடத்தில் சறுக்குபவர்கள் தானே…!!!!
எபிலாக்
சில வருடங்களுக்கு பிறகு!
வாழ்க்கையில் எந்த வித மாற்றங்களும் இன்றி அழகாய் நகர்ந்து கொண்டிருந்தது அனைவருக்கும்.
கதிர் மற்றும் முல்லையில் வாழ்க்கையில் மட்டும், சில பல மாற்றங்கள். அந்த இதயவடிவ வெண்கல சிலையில் அத்வி என்ற குட்டி இதயத்தின் அருகில், இரு குட்டி இதயங்கள் புதிதாக சேர்ந்திருந்தது.
இதோ இன்று, அவர்கள் ஊர் சின்னாளப்பட்டியில் திருவிழா. அதற்காக தான் மொத்த குடும்பமும் சென்று கொண்டிருக்கிறது.
எப்போதும் போல் கதிரின் அருகே முல்லை, அவர்கள் இருவருக்கும் இடையே, முல்லை பூவிற்கு கை கால்கள் முளைத்தவாறு தனது குண்டு கண்களை உருட்டி கதிரிடம் பேசி கொண்டு வந்தாள் மொழி.
கதிர் மற்றும் முல்லையின் மொழி. அத்வியின் செல்ல தங்கை.
சிறுவயது என்றாலும் கதிரை போலவே அவ்வளவு பொறுப்புணர்வு அத்விக்கு. எப்போதும் அவனிடம் இருக்கும் நிதானமும், புன்சிரிப்பும் கதிரை தான் நினைவுபடுத்தும் அனைவருக்கும்.
வளர, வளர, தாயின் முந்தானையை பிடித்ததை விட தந்தையின் சட்டையை பற்றி கொண்டு வளர்ந்திருந்தான் அத்விதன். கதிரின் அத்தனை குணங்களும் அத்துப்படி அத்விக்கு.
அத்வியின் இயல்புகள் ஒன்றுவிடாமல் அத்துப்படி கதிருக்கு. நகமும் சதையும் என தான் ஒட்டி திரிந்து கொண்டிருந்தனர் இருவரும் இப்போது வரை.
அத்வி கதிரின் மினி ஜெராக்ஸ் என்றால், மொழி முல்லையின் மினி ஜெராக்ஸ். அம்மிணி தாயை விட்டு நொடி நேரம் கூட விலகாது அடை காக்கும் கோழி.
தெருவிற்க்குள் நுழையும் போதே பாட்டு சத்தம் காதை கிழிக்க, அமர்ந்திருந்த கதிரின் கால்கள் தன்னால் ஆட ஆரம்பித்து விட்டன.
இப்போது கதிர் வீட்டினர், முன்பு இருந்த பழைய வீட்டிற்கே மாறியிருந்தனர்.
வீட்டிற்கு கூட செல்ல விடாது, இடையிலேயே இளசுகள் வேனை மறித்து விட்டிருந்தனர்.
கதிரை அழைத்தனரோ இல்லை அதற்கு முன்பே “டேய் கதிரு மவனே, இறங்கி வாடா” என அத்விதனை அழைக்க, ஆளுக்கு முன்பு அவர்களிடம் தவ்வியிருந்தான் அத்விதன்.
அவனை தூக்கி கொண்டு அந்த காலி இடத்தில் இறங்கி விட்ட நொடி,
“காசு மேல காசு
வந்து கொட்டுகிற
நேரமிது வாச கதவ
ராஜ லட்சுமி தட்டுகிற
வேளையிது
என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்து விட, போட்டிருந்த முழு கை சண்டையே முழுக்கை வரை ஏற்றி விட்டு ஆட தொடங்கி விட்டான் அத்விதன்.
அவனின் ஆட்டத்தில் ஆர்ப்பரித்த கூட்டம் கூட சேர்த்து ஆட ஆரம்பித்திருந்தனர்.
“அட தட்டுனா
விட்டத்த கொட்டினா
நோட்டத்தான் ஆனந்தம்
காவேரி தான் அட சுக்ரன்
உச்சத்தில் லக் தான்
மச்சத்தில் வந்தது கை
காசு தான்
என்றும் மன்னர்
தான் எங்கும் வின்னர்
தான் ஹோய் யா”
என்ற வரிகளின் முடிவில் கதிர் களம் இறங்கிட, அப்பறம் அங்கே ஆட்டத்திற்கா பஞ்சம். ஆடி பட்டையை கிளப்பி விட்டிருந்தனர்.
“தேடி பாக்குறேன்
காந்திய தான் காணும்
தேடி பாக்குறேன்
காந்திய தான் காணும்
தேசத்துல நாளும்
சாந்திய தான் காணும்
ரூபா நோட்ல
வாழுறாரு காந்தி வாய்
நிறைய ஜோரா
புன்னகைய ஏந்தி
காச பாத்தா
காந்தி தாத்தா போலே
நாம் சிரிப்போம்
வந்தாச்சே கை
காசு ஹேய் ஹேய்
ஹேய் பத்தாது”
என அடுத்த பத்தி ஆரம்பித்தும் ரேஷ்மி அவளின் தம்பி ரிஷி, மொழி, பிரகாஷின் குழந்தைகள் ஆர்யன், ரியாஸ் என மொத்த குழந்தைகள் பட்டாளும் களம் இறங்கியிருந்தது.
அதிலும் ரேஷ்மியும், மொழியும் தங்களது கண்களில் கூலிங் க்ளாஷினை அணிந்து கொண்டு, தாங்கள் அணிந்திருந்த பாவடையினை இருபுறமும் தூக்கி சேர்த்து, கட்டி கொண்டு ஆடிட அத்தனை காவியமாக இருந்தது.
ஆட்டத்தில் சீதாவை இழுத்து விட்டு கூட்டம் அடுத்து முல்லையை இழுக்க செல்ல “டேய்….டேய்…அவ என் ப்ராப்பர்ட்டிடா” என்றபடி பதறி கதிர் அருகில் வந்திருக்க,
கூட்டம் அவனை கேலியாக பார்த்தது. “ராகேஷ் அண்ணா சொன்ன அதே டயலாக்கு அப்போ??” என மொத்த கூட்டமும் கூறி அவனை எதிர்பார்ப்புடன் பார்க்க,
“இப்புடி பாக்காதீங்கடா வெக்கமா இருக்கு” என நாணி கோணியவன் “ஆமாண்டா இந்த ப்ராப்பர்ட்டிகுள்ள, ஒரு குட்டி ப்ராப்பர்ட்டி இருக்கு” என அவள் குழந்தை உண்டாயிருப்பதை கூறிட,
“ஹேய்…!!!!! என்னனே டிரிப்பிள்ஸ்ஸா??” என இளவட்டங்கள் கேலி செய்திட,
“கண்ணு வைக்காதீங்கடாவ்வ்வ் காட்டெருமைகளா!” என்றவனை அலேக்காக தூக்கி சென்றிருந்தனர் இளசுகள்.
ஆட்டம் பாட்டம் என கலைகட்டியது அத்திருவிழா. ஐந்து நாட்களும் வண்ணமயமாக சென்றது அவ்வூர் திருவிழா.
கடைசி நாள் திருவிழாவில் கதிரின் மொத்த குடும்பமும் கோவில் முன் பொங்க வைத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றியிருந்தனர்.
ஸ்ருதி, முல்லை கதிரிடம் ஒட்டி உறவாடவில்லை என்றாலும், மெல்ல, மெல்ல தன்னையும் அவர்களுடன் இணைத்து கொண்டாள்.
மொழி என்றால் ஸ்ருதிக்கு அவ்வளவு பிடித்தம். மொழியும் “பெரியம்மா ” என அவளுடன் நன்றாகவே ஒட்டி கொள்வாள். ரேஷ்மி பேசினாலும், அவளிற்கு தயக்கம் இருக்க தான் செய்தது போக போக சரியாகி விடும்.
முல்லை, கதிரிடம், பேசுவது என்றால் மொழியை இடையில் வைத்தே பேச்சை ஆரம்பிப்பாள் ஸ்ருதி. இதனை கண்டு கதிர் கூட அவளை வம்பிழுக்க, பதிலுக்கு பதில் வாயடிப்பவள் இறுதியில் “மொழி உங்கப்பாவை வாயை அடக்க சொல்லு” என்று விட்டு அவள் நகர்ந்து விடுவாள்.
சில பல உரசல்கள் எழுந்தாலும் அதனை எல்லாம் பெரிது படுத்தாமல் வாழ்க்கையை ஆனந்தமாகவே கொண்டு சென்றனர் அண்ணன் தம்பி மூவரும்.
அவ்வளவு தான் திருவிழா முடிந்திற்று. நாளை ஊர் திரும்ப வேண்டும். அயர்வில் எல்லாரும் உறக்கத்தை தழுவியிருக்க, முல்லையை முதன் முதலில் பார்த்த திண்ணையில் அமர்ந்து நிலவினை ரசித்து பார்த்து கொண்டிருந்தான் கதிர்.
சில நிமிடங்களிலேயே கொழுசொலி கேட்க குறும்பு சிரிப்பு இவனிடம்.
வருவது முல்லை தான் என அவனிற்கு நன்கு தெரியும். இவன் இல்லாது சில நிமிடங்கள் தாக்குப் பிடிப்பவள், அதற்கு மேல் தாங்காது வந்து ஒட்டி கொள்ளுவாள்.
“என்னவாம் கதிருக்கு சிரிப்பு” என நொடித்தப்படி அவனருகே அவள் அமர அவளை வளைத்து பிடித்து கொண்டவன்,
“ம்ம்ம் இங்க தான் ஒரு பொண்ணு, பாத்த நிமசமே, என் மனசை அப்படியே கொள்ளையடிச்சுட்டா! ராட்சஸி, அவ கிடைப்பாளான்னு ஏங்கி, இங்க உட்கார்ந்த நாளெல்லாம் அதிகம். என்னோட சந்தோஷம், அழுகை, கோபம், துக்கம்னு எல்லா உணர்வுகளையும் இந்த இடத்துலே தான் அதிகம் வெளிப்படுத்தியிருக்கேன்.
இப்போ அதே இடத்துல, என்னோட ஹனிடாலோட, நிறைவான குடும்பமா இருக்குறத நெனைக்கும் போது அப்படியே பறக்குற பீல்” என்றிட,
“பறப்பீங்க பறப்பீங்க” என்றபடி அவனை அணைத்து கொண்டவளிற்குமே முழுமையடைந்த உணர்வு.
அவளின் நெற்றியில் இதழ் பதித்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அவளின் இதழ்களை நெருங்கும் சமயம் “கதிப்பா….” என்றபடி மொழியின் அழைப்பும் “மொழி நில்லு ஓடக்கூடாது” என்ற அத்வியின் அழைப்பும் பின்னே வர,
அவசரமாக அவளின் இதழ்களில் அழுந்த முத்தம் வைத்தவன், சட்டென விலகி “மொழி குட்டி! அதி கண்ணா” என பதிலுக்கு குரல் கொடுக்க…
மின்னலாய் ஓடிவந்து குட்டி உருவம், முல்லையில் மேல் தாவி ஏறிட, அத்விதன் வந்தவன் கதிரின் கைப்பிடித்து அருகே அமர்ந்து கொண்டான்.
“மொழி இப்புடி எல்லாம், வேகமா வந்து அம்மா மேல மோதக் கூடாது. உள்ள பாப்பா இருக்குல” என அத்வி பொறுப்பானவனாக கூற,
“அச்சே” என தலையில் அடித்த அந்த வாண்டு, வேகமாக கீழிறங்கி முல்லையின் வயிற்றில் முத்தமிட்டு “சாரி பேபி” என்றவள் முல்லைக்கும், கதிருக்கு, இடையில் இருந்த இடத்தில் ஏறி அமர்ந்து கொண்டு சிரிக்க, அவர்களை காணவே ஆனந்தமாய் இருந்தது.
மொழியை தூக்கி தன் மடி மீது அமரவைத்து கொண்ட முல்லை, கதிரின் தோள் சாய்ந்து கொள்ள, அவனின் கைகள் முல்லையையும், மொழியையும் வளைத்தாலும், இன்னோரு கரம் எப்போதும் போல அவன் மடி மீது அமர்ந்திருந்த அத்வியின் கன்னத்தினை வருடியது.
அந்த பெளர்ணமி இருளில் அமர்ந்திருந்த நால்வரின் மனமும் சந்தோஷத்தின் உச்சத்தில் மிதந்தது.
முன்னொரு நாள் அவன் கண்ட தேவதை. அவன் கைகளில் கிடைக்காது, வழி மாறி போயிருந்தாலும், மீண்டும் அவனிடமே வந்து சேர்ந்து, இதோ தோள்வளைவில் இருப்பது விந்தையிலும் விந்தையே..!!!!!!
அவர்களின் சந்தோஷம் இப்படியே நீடிக்க இறைவனை வேண்டி கொள்வோம்.!
முற்றும்…..!!!!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

மனசுக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. கோபாலசாமி ஞானம் ரெண்டு பேரோட வளர்ப்பு அருமை. மூணு பசங்களும் தங்கம். கூட்டுக் குடும்பம்னா சும்மா பேருக்கு இல்ல. மனசுக்குள்ள ஆத்மார்த்தமா இணைந்திருக்காங்க. 🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫰🏻
சிறப்பு ❤️❤️💕