
அத்தியாயம் 63
உறக்கம் கலைந்து ஊர்மி எழுந்திரிக்க முயற்சிக்க பரபரப்பானான் நாகா. “ஊர்மி இப்ப எப்படி இருக்கு. வலி சரியாகிடுச்சா?” என்க, பதில் சொல்லாமல் அவன் முகத்தையே கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
“என்னடி, கேள்வி கேட்டா பதில் சொல்லாம என் முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்க. வாயைத் திறந்து சொல்லு, உடம்புக்கு ஏதாவது பண்ணுதா. செல்வாவைக் கூப்பிடட்டுமா?” என்றவன் சொன்னதோடு நில்லாமல் தமையனை அழைப்பதற்காக எழுந்திரிக்க, கரம் பிடித்து நிறுத்திய ஊர்மி, அவன் சற்றும் எதிர்பாரா வகையில் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவன் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியோடு பார்க்க, “எனக்காக ரொம்பவே பதற்றப்பட்டுட்டீங்க. இத்தனை நாளா உங்களுக்கு பாசமே காட்டத் தெரியாதோன்னு நினைச்சிருக்கேன். ஆனா, காட்டக்கூடாதுன்னு இல்ல காட்டத் தெரியாம தான் கண்டதையும் பண்ணிக்கிட்டு இருந்திருக்கீங்கன்னு நேத்து தான் எனக்குப் புரிஞ்சது. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்றாள்.
“நான் என்ன கேட்டுட்டு இருக்கேன். நீ என்ன பதில் சொல்லிட்டு இருக்க?” நாகாவின் படபடப்பு குறைவேனா என்று அடம் பிடித்தது.
“எனக்கு ஒன்னும் இல்ல அத்தான். ரொம்ப நல்லா இருக்கேன். வயித்துக்குள்ள இருக்கிற இரண்டும் உங்க பிள்ளைங்க ஆச்சே. அதான் வேலையைக் காட்டி எல்லோரையும் பதற வைச்சுட்டாங்க.” என்றுவிட்டு சிரித்தாள் ஊர்மி.
“கண்ணம்மா நிஜமாவே இப்ப வலி எதுவும் இல்லல்ல.” என்க, அவன் அழைப்பில் வாய்க்குள் சிரித்தவள், “தலையில் அடிச்சு சத்தியம் பண்ணா தான் நம்புவீங்களா? அப்பக் கொஞ்சம் குனிங்க, உங்க தலையில் அடிச்சு இரண்டடி குள்ளமாக்கி அப்புறமா சத்தியம் பண்றேன்.” பழைய துடுக்குடன் பேசினாள்.
நெடுநாள்களாக, சொல்லப்போனால் சண்டையிட்டு பெண்கள் நால்வரும் பிறந்தகம் சென்றதில் இருந்தே அவளுடைய இந்தத் துடுக்குத்தனம் வெகுவாகக் குறைந்திருந்தது.
நாகாவுடனான திருமண வாழ்க்கையை முழுதாக வெறுக்கவும் முடியாமல், அதே சமயம் முழுவதுமாக ஏற்கவும் முடியாமல் அவள் பட்ட பாடு அவள் மட்டுமே அறிவாள்.
பெண்கள் கருவுற்று இருக்கும் போது, உடல் மற்றும் மனநிலை சார்ந்து பல மாற்றங்களை எதிர்கொள்வார்கள். வாந்தி, சோர்வு, முடிகொட்டுதல், அரிப்பு, அகோரப் பசி அல்லது பசியின்மை, நெஞ்சரிச்சல், கால் கைகளில் நீர் கோர்த்து வீங்குதல். இதுவரை உணராத இடங்களில் எல்லாம் வலி என விரும்பாத பல மாற்றங்கள் அவளுள் நிகழும்.
குழந்தைக்குப் பெற்றோராகப் போவது ஆண், பெண் இருவர் தான் என்றாலும் வலியும், வேதனையும், ஏமாற்றமும் ஏன் பெண்ணுக்கு மட்டும் என்று இறைவன் எழுதி வைத்தான் என்று மனம் வருந்துவாள்.
குழந்தை பெற்ற பிறகு உணரும் தாய்மைக்கு முன்னால் அத்தனை நாள் துன்பம் பெரிதாகத் தெரியாது என்றாலும், அதுவரை பல கலவையான உணர்வுகள் அவளை வந்து தாக்கத்தான் செய்யும்.
கணவன் கட்டுடலோடு அப்படியே இருக்க, தான் மட்டும் இப்படி உருக்குலைந்து போகிறேனே. நான் இவனுக்காக இத்தனை பாடுபடும் அளவுக்கு இவன் தகுதியானவன் தானா என அந்தப் பெண்ணின் மனம் ஏங்குமாம்.
அப்படி மனைவி ஏங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தான், தாயாகப் போகும் மகளை அவள் தாய் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு சீராட்டுவார்கள்.
அந்த நேரம் பெண்களுக்குள் உண்டாகும் எரிச்சல், களைப்பு என எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு பிரசவிக்க இருக்கும் பெண்ணைப் போற்றக் கூடிய வல்லமை தாய்க்கு மட்டுமே உண்டு.
கூடவே அந்தக் காலத்தில், தாயாகப் போகும் மனைவியின் மனதில் உண்டான தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதற்காக, கர்ப்பகாலத்தில் ஆண்கள் தலைமுடி மற்றும் தாடி எடுக்க மாட்டார்கள். புது உடைகள் எடுத்து மனைவியின் முன்னால் போட்டுக்கொண்டு சுற்ற மாட்டார்கள். இதனால் ஆண்களின் தோற்றத்திலும் மாற்றம் வரும். இதில் கருவுற்ற அந்தப் பெண்ணுக்கு ஏதோ ஒரு ஆறுதல் கிடைக்கும் என்பது அந்தக் கால நம்பிக்கை.
எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது அவள் கணவன் அவளை எப்படி நடத்துகிறான் என்பதில் தான் ஆயுள் வரை அவன் மீது அவள் வைக்கப்போகும் அன்பு தீர்மானிக்கப்படும் என்கிற சொல்லாடல்கள் உண்டு.
அந்த வகையில் தனக்காகத் தன் கணவன் துடித்த துடிப்பில் அவன் அன்பைக் கண்டுகொண்ட ஊர்மி, அந்த ஒரு விஷயத்துக்காக அவனுடைய அத்தனை தவறுகளையும் மன்னிக்க முடிவெடுத்தாள். அவன் அவள் மீது கொண்டிருந்த அன்பை நம்பத் துவங்கினாள். அவர்கள் திருமண வாழ்க்கை நல்ல பாதையில் அடியெடுத்து வைத்ததற்காக முதல் அறிகுறி அது.
“சீக்கிரம் குனிங்க. மகாபலி சக்கரவர்த்தி தலையில் கால் வைச்சு பாதாளத்துக்குள் அனுப்பி வைச்ச வாமனர் மாதிரி, நான் என் கையால் அடிச்சே உங்களை என் காலில் விழ வைக்கணும்.” என்றாள் ஊர்மி.
“இந்த நிலைமையிலும் உன் கொழுப்பு கொஞ்சமாச்சும் குறைஞ்சு இருக்கான்னு பார்த்தியா. சரியான திமிர்பிடிச்சவடி நீ.” வழக்கமான வார்த்தைகள் தான். ஆனால் வழக்கமான தோரணையில் இல்லாமல் அன்பாகச் சொன்னான் நாகா.
“நான் திமிர் பிடிச்சவளா இருப்பதால் தான் இந்த திமிர்பிடிச்சவனை என்னால சமாளிக்க முடியுது.” என்று எதிரே இருப்பவனின் இரண்டு கன்னங்களையும் கிள்ளி இழுத்தாள்.
தன் வலியை மறந்து மனைவியின் சிரிப்பை இரசித்தவனுக்கு, சில மணி நேரங்களுக்கு முன்பு அவள் அழுகை கலந்த கதறல் நினைவு வர, நெருங்கி அமர்ந்து, “கண்ணம்மா” என்கிற அழைப்புடன் அவள் கன்னத்தில் தன் கரங்களை வைத்து, அவள் முகத்தில் வலியின் சாயலைத் தேடினான்.
“அதென்ன புதுசா கண்ணம்மா?” புருவம் உயர்த்திக் கேட்டாள்.
“பின்ன என்ன பேரு வைச்சிருக்க. ஊர்மிளா, ஊர்வசின்னு பழைய பஞ்சாங்கமா. எனக்குப் பிடிக்கல. நான் உன்னைக் கண்ணம்மான்னு தான் கூப்பிடுவேன்.” செல்லப்பெயர் என்று சொல்ல முடியாமல் சுற்றி வளைத்தான் நாகா.
“கண்ணம்மா மட்டும் லேட்டஸ்ட் ட்ரெண்ட் செட்டிங்கா. முதல்ல உங்களுக்கு ஊர்மிளான்னா யாருன்னு தெரியுமா. இந்த உலகத்துல எந்த ஒரு பொண்டாட்டியும் புருஷனுக்காக செய்ய முடியாத ஒன்றை தன்னோட புருஷன் இலக்ஷ்மணனுக்காக ரொம்பச் சாதாரணமா பண்ணவங்க தான் ஊர்மிளா.” என்றவளை கூர்மையாகப் பார்த்தான் அவள் கணவன்.
“புருஷனோட ஆசைக்காக பதினாலு வருஷம் தனிமையை சந்தோஷமா ஏத்துக்கிட்டாங்க. காட்டில் தனியா வாழப் போற புருஷனுக்குத் தன்னோட ஞாபகமே வரக்கூடாதுன்னு தன்னைத்தானே தப்பாக் காட்டிகிட்ட உத்தமி தான் ஊர்மிளை.
அது மட்டும் இல்ல, இராமயணத்தோட வெற்றி இராமருக்கும், இலக்ஷ்மணனுக்கும் கிடைக்க ஒரு மிகப்பெரிய காரணமே ஊர்மிளை தான்னு சொன்னா நம்புவீங்களா?” என்க, வியப்பில் விரிந்தது நாகாவின் புருவங்கள்.
“புதுசா இருக்கு இல்ல. இந்த விஷயம் சிலருக்குத் தெரிஞ்சிருக்கலாம். பலருக்குத் தெரியாம இருக்கலாம். இராமருக்கும் போரோட வெற்றிக்கும் நடுவில் தடையா இருந்தது மேகநாதன், இராவணனோட மூத்த மகன். அவனோட வதைபடலத்துக்கு மிக முக்கிய காரணியே ஊர்மிளை தான்.
பதினாலு வருஷம் தூக்கத்தைத் துறந்து, துறவி வாழ்க்கை வாழும் ஒருத்தனால் தான் தன்னோட மரணம் நிகழ வேண்டும் என்று நித்திராதேவிகிட்ட வரம் வாங்கி இருந்தான் மேகநாதன். அண்ணனுக்கும், அண்ணிக்கும் பாதுகாப்பா இருக்க தூக்கத்தை இலக்ஷ்மணன் தவிர்க்க நினைச்சப்ப, கணவனோட தூக்கத்தையும் சேர்த்து தூங்கி தன்னோட பதிவிரதாத் தன்மையை நிரூபிச்சு, மேகநாதன் வதைபடலத்துக்கு பிள்ளையார் சுழி போட்டாங்க ஊர்மிளா.
தூங்குறது பெரிய தியாகமான்னு நீங்க கேட்கலாம். சரியான தண்ணீ, சாப்பாடு இல்லாம, இரவு, பகல் தெரியாம, நல்ல நாள் பொழுது தெரியாமத் தூங்குறது கொடுமையிலும் கொடுமை. புருஷனுக்காக சந்தோஷமா அதை ஏத்துக்கிட்டவங்க ஊர்மிளா.
புருஷனுக்காக ஒன்னு ஒன்னையும் பார்த்துப் பார்த்து பண்ணவங்க. அவங்களோட தியாகத்தைப் புரிஞ்சுக்கிட்டு சீதையே, ஆயிரம் சீதைகள் ஒன்னா சேர்ந்தா கூட ஒரு ஊர்மிளைக்கு இணையாக முடியாதுன்னு சொல்லி இருக்காங்க. அப்படிப்பட்டவங்க பெயரை எனக்கு என்னோட அம்மா வைச்சதுக்காக உண்மையில் நான் ரொம்ப பெருமைப்படுறேன்.” என்றாள் இந்த ஊர்மிளா.
“ஓ இந்தப் பெயருக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா. அப்ப இருக்கட்டும் இருக்கட்டும். இந்தப் பெயரை ஏத்துக்கிட்ட சரி, புருஷனுக்காக என்ன வேண்ணாலும் பண்ணுவேன் என்கிற அந்தப் பொண்ணோட கேரக்டரையும் சேர்த்து ஏத்துக்கிட்டு இருந்தா ரொம்பச் சந்தோஷமா இருந்திருக்கும்.” மனைவியைச் சீண்டினான் நாகா.
“ஒரு நிமிஷம் இருங்க, இப்ப தான் ஞாபகம் வருது. நீங்க இன்னும் கண்டிஷன் பேப்பரில் சைன் பண்ணித் தரலையே.” என்க, “அடிப்பாவி எப்பப் பார்த்தாலும் உனக்கு அந்த ஞாபகம் தானா? மனுஷன் மேல கொஞ்சமாச்சும் நம்பிக்கை வைடி.” தவிப்பாய் சொன்னான் நாகா.
மனைவிக்காகத் தெரியாமல் கொஞ்சம் இறங்கி வந்தவன், தெரிந்தே கொஞ்சம் இறங்கி வரத் தயாராகத் தான் இருக்கிறான். அதற்காக அவள் சொல்லும் அந்த நிபந்தனைகளை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாதே.
“நீங்க என்ன சொன்னாலும் என் காது கேட்காது. கண்டிஷன் பேப்பரில் சைன் பண்ணதுக்கு அப்புறமா கொஞ்சிக்கலாம், நான் இப்ப கிளம்புறேன்.” என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு அறையில் இருந்து செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் நாகா.
சில நாள்கள் கடந்திருந்தது. இராதா இல்லத்தில் எதுவும் மாறவில்லை. எதற்காக இத்தனை பிடிவாதம் என்று ஆண்கள் நால்வருக்கும் சோர்வுடன் கூடிய கோபம் வந்தது. வடிவேலுவுக்கு தன் வீட்டின் நிலையைக் கண்டு வருத்தம் அதிகமாகிக்கொண்டே போனது.
இப்படி இருக்க, ஒரு நாள் காலை பத்து மணி அளவில், “தெய்வா எதுக்காக எனக்கு போன் பண்ணி வரச்சொன்ன, அதுவும் இங்க.” என்றபடி பாதி கட்டப்பட்டிருந்த கட்டடத்திற்குள் வந்தான் செல்வா.
“நான் தர்மாவுக்குப் போன் பண்றேன். நீ நாகாவுக்குப் போன் பண்ணி இங்க வரச்சொல்லு. முக்கியமான விஷயம் போன் பண்ணது நாம என்பதோ, அவங்க நம்மைப் பார்க்க இங்க வரப்போற விஷயமோ அவங்கவங்க பொண்டாட்டிக்குத் தெரியாம வரச் சொல்லு.
வர மறுத்து கண்டதையும் பேசினா நம்மளோட எதிர்காலத்தைப் பத்தி பேச வேண்டியது இருக்கு. அதனால் கட்டாயம் வரணும் னு சொல்லு.” உறுதியான குரலில் தெளிவாகச் சொன்னான் தெய்வா.
ஏன் என்று புரியாவிட்டாலும், தம்பியின் குரலில் இருந்த உறுதி மற்றும் தெளிவில் அதை அப்படியே செய்தான் செல்வா. அடுத்த அரை மணி நேரத்தில் அங்கிருந்தனர் மற்ற இருவரும்.
“செல்வா, எதுக்காக எனக்கு போன் பண்ணி இங்க வரச் சொன்ன. அதுவும் என் பொண்டாட்டிக்குத் தெரியாம. நீ கூப்பிட்டு போகணுமான்னு தான் நினைச்சேன்.
என்னவோ அன்னைக்கு ஊர்மிக்கு ஒன்னுன்னு நான் வந்து கேட்டதும், பதறிப் போய் ஓடி வந்தியே, அதை நினைச்சா உன் பேச்சைத் தட்ட முடியாம வந்துட்டேன்.” தன்னைப் போல் மனதில் இருந்ததை அப்படியே சொன்னான் நாகா. அவனுக்குத் தான் ஒளித்து மறைத்து எதையும் பேச வராதே.
நாகா கேட்ட அதே கேள்வி தனக்குள்ளும் இருந்தாலும் அமைதியாக நின்றிருந்தான் தர்மா.
உடன்பிறந்த அனைவரின் முகத்தையும் நன்றாகப் பார்த்த தெய்வா, “தர்மா நம்ம நாலு பேரில் நீ தான் கொஞ்சம் நிதானமான ஆளு. உன்கிட்ட இருந்து ஆரம்பிக்கிறது தான் சரியா இருக்கும். இப்ப நம்ம வீட்டு சூழ்நிலை எப்படி இருக்கு. இப்படி ஒரு நிலைமையில் நீ எப்படி பீல் பண்ற?” சுத்தி வளைக்காமல் தயக்கம் என்பது பெயரளவில் கூட இல்லாமல் பேச்சை ஆரம்பித்தான் தெய்வா.
“புரியல” என்ற தர்மாவிற்கு நிஜமாகவே புரியவில்லை தான்.
“இதுவரைக்கும் நம்ம வீட்டில் பொண்ணுங்களே கிடையாது. இப்ப நாலு பேர் ஒன்னா உட்கார்ந்து ராஜ்ஜியம் பண்ணிட்டு இருக்காங்க. அப்கோர்ஸ் அதில் ஒருத்தங்க உன்னோட மனைவி.
ஆனா மத்த மூணு பேருக்கும் உனக்கும் பெருசா சம்பந்தம் கிடையாது. அவங்களை வைச்சுக்கிட்டு, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த மாதிரி ப்ரீயா இருக்க உன்னால் முடியுதா?
உன் பொண்டாட்டி உன்னை விட்டுட்டு அக்கா அக்கான்னு மத்த மூணு பேர் பின்னாடி சுத்துறது உனக்குச் சரின்னு படுதா?” நேரடியாகவே கேட்டான் தெய்வா.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் கடந்து போன மாதங்களில் தேவகியின் நடவடிக்கையில் தர்மனுக்குப் பெரிதாக உடன்பாடு இல்லை. தான் ஒரு தவறும் செய்யாது இருக்க, அவள் வேண்டும் என்றே ஏன் தன்னைப் புறக்கணிக்க வேண்டும்.
நல்லது கெட்டது எடுத்துச் சொல்லும் இடத்தில் இருக்கும் அவளுடைய அக்காக்கள் கூட, உன் கணவன் மீது எந்தத் தவறும் இல்லாத போது, நீ ஏன் எங்களைப் போல நடந்துகொள்கிறாய் என்று புத்திசொல்லாமல் இருக்கிறார்களே என்று ஒட்டுமொத்தமாக பெண்கள் நால்வரின் மீதும் வருத்தத்தில் இருந்தான்.
அந்த வருத்தம் இப்போதும் மேலிட, “முதன் முதலா அவங்க நாலு பேரும் அக்கா, தங்கச்சிங்கன்னு தெரிய வரும் போது, உங்களை மாதிரி எனக்கு அது பெரிய விஷயமாத் தோணல. அவங்க ஒன்னா இருக்கணும் னு ஆசைப்பட்டது, அதுக்காக பொய் சொன்னது கூடத் தப்பாத் தெரியல.
ஆனா இப்ப நம்ம வீட்டில் நடக்கிற எதுவும் எனக்குப் பிடிக்கல. அக்காங்க மூணு பேரும் அவங்கவங்க புருஷங்ககிட்ட பேச மாட்டேங்கிறாங்க. அப்படி இருக்க தான் மட்டும் எதுக்காப் பேசணும். தான் மட்டும் புருஷன் கூட ஒத்துமையா இருந்தா, அது அக்காங்களுக்குக் கஷ்டமா இருக்கும் என்கிற ஒரே காரணத்துக்காக, என் பொண்டாட்டி என்கிட்ட பேச மாட்டேங்கிறாங்க. இது அவங்க எனக்குச் செய்யுற அநியாயம். இது எனக்குப் பிடிக்கவே இல்ல.” தர்மா தன் உள்ளத்தை மறைக்காமல் சொல்லிவிட்டான்.
“சோ அவங்களோட ஒற்றுமை உன்னையும் பாதிச்சு இருக்கு. அடுத்து நாகா நீ சொல்லு. உன் பொண்டாட்டி இப்ப கர்ப்பமா இருக்காங்க. இன்னும் கொஞ்ச நாளில் குழந்தைங்க பிறந்திடும். குழந்தைங்களைப் பார்த்துக்கவாச்சும் பொண்ணுங்க நாலு பேரும் ஒன்னா இருக்கட்டும் னு உனக்குள்ள நப்பாசை ஏதாவது மிச்சம் இருக்கா.” தீவிரமாகக் கேட்டான் தெய்வா.
“நோ சான்ஸ். ஊர்மி மறுபடி நம்ம வீட்டுக்கு வந்ததில் இருந்து நான் அவளைப் பார்க்கிறதே ரொம்ப அபூர்வமாகிடுச்சு. எப்பப் பார்த்தாலும் அவங்க அக்கா, தங்கச்சிங்க அவளை அவங்களுக்குப் பக்கத்திலே பிடிச்சி வைச்சுக்கிறாங்க.
அவளுக்குப் பிடிச்சது சமைச்சுப் போடுறது என்ன, அவளுக்கு காலுக்கு, முதுகுக்கு ஒத்தடம் கொடுக்கிறது என்ன, அரட்டை அடிக்கிறது என்ன, தட்டாங்கல்லு, பல்லாங்குழி, செஸ், கேரம் விளையாடுறது என்ன?
இப்படி எல்லா நேரமும் அவங்களோடவே இருந்துட்டு, இராத்திரி தூங்குறதுக்கு மட்டும் தான் என் பொண்டாட்டி ரூமுக்கு வரா. அப்ப நான் ஏதாவது பேச ட்ரை பண்ணா, ஒன்னு கண்டிஷன் பத்தி கேட்கிறா இல்லையா டயர்டா இருக்குன்னு தூங்கிடுறா.
இப்படி ஊர்மியோட வாழ்க்கையில் இருந்து என்னைக் கொஞ்சம் கொஞ்சமா ஒதுக்கிக்கிட்டு வர அவங்களோட இருக்க நான் எப்படி ஆசைப்படுவேன். எனக்கு இருக்கிற கடுப்புக்கு ஊர்மியைக் கட்டாயப்படுத்தியாச்சும் தனியாக் கூட்டிட்டுப் போயிடலாமான்னு அப்பப்ப தோணும்.
ஆனா குழந்தை உண்டாகியிருக்கிற நிலைமையில் கஷ்டப்படுத்தக் கூடாதுங்கிறதுக்காக பொறுமையா இருக்கேன். எவ்வளவு கஷ்டமா இருந்தாலும், எவ்வளவு செலவு ஆனாலும் தலை கீழா நின்னு வித்தை காட்டியாச்சும், என் குழந்தைகளை நானே பார்த்துக்கிறேன். அதுக்காக எல்லாம் அவங்களோட துணை எனக்கு வேண்டாம்.” கடுப்பாகச் சொன்னான் நாகா.
“சரி செல்வா, நீ சொல்லு.” மூத்தவனிடம் வந்தான் இரண்டாமவன்.
“நான் என்னத்த சொல்றது. உண்மையில் லீலா என்கூட வாழ்றதுக்குத் தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா இல்லை என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் எப்பவும் தங்கச்சிங்களோட இருக்கலாம் என்பதற்காக வேற வழி இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களான்னு சந்தேகமாவே இருக்கு.
அன்னைக்கு லேகாவுக்காக உன்கிட்ட சண்டை போட்டேனே, அந்த நேரம் நீ பேசின வார்த்தைகளை மறந்து இருக்க மாட்டேன்னு நம்புறேன். லீலா இருக்கும் போது, இன்னொரு பொண்ணு மேல உனக்கு ஏன் அவ்வளவு அக்கறைன்னு உனக்கே என் மேல கோபம் வந்துச்சு.
ஆனா லீலா இப்ப வரைக்கும் ஒரு வார்த்தை லேகாவைப் பத்தியோ, இல்லை அவளுக்காக நான் ஏன் அவ்வளவு கோபப்பட்டு சண்டை போட்டேன் என்பதைப் பத்தியோ எதுவும் கேட்கல.
பொண்டாங்கிற உரிமை உணர்வு கூட அவங்களுக்கு என் மேல இல்ல. எப்பப் பார்த்தாலும் தங்கச்சிங்க தங்கச்சிங்க தங்கச்சிங்க தான்.” சூடாகச் சொன்னான் செல்வா.
“என்னையும், ருக்குவையும் பத்தி உங்களுக்கு தனியா சொல்லி தெரியத் தேவையில்லை. சோ நம்ம எல்லாருக்குமே பொண்ணுங்க நாலு பேரும் ஒன்னா இருக்கிறது பிரச்சனை அப்படித்தானே.” தெய்வா கேட்க, இவன் எதற்காக இதையெல்லாம் கேட்கிறான் என்று புரியாவிட்டாலும் மற்ற மூவரும் ஆமாம் என்று தலையசைத்தனர்.
“நம்ம நாலு பேரையும் ஒன்னா வைச்சிருக்கத் தான் அப்பா அவங்க நாலு பேரையும் நமக்குக் கல்யாணம் பண்ணி வைச்சார். நாம நாலு பேரும் ஒன்னா இருந்தா நல்லா இருக்குமோ இருக்காதோ அதைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா அவங்க நாலு பேரும் இப்படி ஒன்னா இருக்கிறது நமக்கும், நம்ம எதிர்காலத்துக்கும் நல்லதே இல்ல.” அடித்துப் பேசி தன் கருத்தை முன்வைத்தான் தெய்வா.
என்ன சொல்ல வருகிறாய் என்பது போல் மற்றவர்கள் குழப்பமாகப் பார்க்க, “கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நாகா அவன் பொண்டாட்டி ஊர்மிகிட்ட தனிவீட்டில் வைச்சு சண்டை போட்டு இருந்தான்னா முதல்முறை அவங்க நாலு பேரும் வீட்டை விட்டுக் கோச்சுக்கிட்டு வெளியே போய் இருக்க மாட்டாங்க.
இரண்டாவது முறை செல்வா நீயும், நானும் உன்னோட தனிவீட்டிலோ இல்லை என்னோட தனிவீட்டிலோ சண்டை போட்டிருந்தா பிரச்சனை இவ்வளவு தூரம் வந்திருக்காது. நான் சொல்றதை ஒத்துக்க முடியுதா உங்களால.” என்க, செல்வா, நாகா இருவரும் வேக வேகமாகத் தலையாட்டினர்.
தர்மா அமைதியாக இருந்தான். தெய்வாவின் நோக்கம் என்னவென்று கிட்டத்தட்ட புரிந்துகொண்டவனுக்கு அது சரியா தவறா என்று தான் யோசனை ஓடிக்கொண்டிருந்தது.
“நான் என்ன சொல்ல வரேன்னா, அவங்க நாலு பேரும் சேர்ந்து நம்மளை ஒற்றுமையாக்குறதுக்குப் பதில் நாம நாலு பேரும் சேர்ந்து அவங்களைப் பிரிச்சிட்டா?” புன்னகையுடன் கேட்டான் தெய்வா.
“ஹே சூப்பர் ஐடியா தெய்வா. போலீஸ் புத்தி நல்லா வேலை செய்யுது.” உடனடியாக ஒப்புக்கொண்டான் நாகா.
“இது தப்பு இல்லையா?” செல்வாவின் நேர்மை குணம் தடுத்தது.
“நாம அவங்களைப் பிரிச்சு தனியாக் கூட்டிட்டு போய் கொடுமைப்படுத்த போறது இல்ல. நாமளும் சந்தோஷமா இருந்து, அவங்களையும் சந்தோஷமா வைச்சுக்கப் போறோம்.
நீ கொஞ்சம் யோசிச்சுப் பாரு. நீயும், உன் பொண்டாட்டியும் தனியா இருந்தீங்கன்னா அவங்களோட முழுக் கவனமும் உன் மேல் தான் இருக்கும். அப்புறம் என்ன ஒரே ரொமான்ஸ் தான்.” என்று தெய்வா தூபம் போட, அது செல்வாவிடம் நன்றாகவே வேலை செய்தது.
மணவாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அவன் மனம் தயாராகிக்கொண்டிருக்க, லீலா தன்னையும் அறியாமல் பின்வாங்கிக்கொண்டிருந்தாள். அதில் இருந்த குழப்பத்தில் தெய்வாவின் திட்டத்திற்குச் சம்மதித்திருந்தான் செல்வா.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இந்த முட்டாள் பிரதர்ஸ் க்கு வேற வேலையே இல்ல … இந்த நாகத்துக்கு தான் அறிவு இல்ல … இப்போ மூணு பேருக்கும் அறிவு இல்ல … தெய்வா முழு நேர வில்லனா மாறிட்டான் போல … நீங்களும் உங்க திட்டமும் …