
அத்தியாயம் 61
புலர்ந்தும் புலராத அதிகாலைப் பொழுது. இயந்திரக் குயில் ஐந்து முறை கூவி, ஐந்து மணியானதை உணர்த்திய நேரம், சோம்பல் மேலோங்க நெட்டி முறித்த வண்ணம் மெதுவாகக் கண்களைத் திறந்தாள் ருக்கு. அருகில் அவளுடைய ஆசைக் கணவன் தெய்வா இல்லை. அதைப் பற்றி அவள் கவலைப் படுவதாகவும் இல்லை.
காலைக்கடன்களை முடித்து விட்டு மெதுவாகக் கீழே இறங்கி வந்தாள். அவளுக்கு முன்னதாகவே லீலா சமையலறையை ஆக்கிரமித்திருந்தாள்.
வீட்டு வேலைகள் செய்துகொண்டு, அடைக்கோழியைப் போல் வீட்டோடு அடைந்து இருப்பதற்காக நான் உங்களை இங்கே மருமகள்களாக அழைத்து வரவில்லை. என் வீட்டுப் பெண்கள் வீட்டரசிகளாக இல்லாமல் நாட்டரசிகளாக பலருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். குடும்பத் தொழிலின் அடிப்படையைக் கற்றுக்கொள்வதற்காக அலுவலகம் வாருங்கள் என்று வடிவேலு எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தார்.
திருமண வாழ்க்கையில் ஒரு பிடித்தம் வரும் வரை நாங்கள் எங்கேயும் வருவதற்கு இல்லை என்று பிடிவாதமாகச் சொல்லி இருந்தாள் லீலா. சரி சமையலுக்கு வழக்கம் போல் வேலையாட்கள் இருக்கட்டும் என்று சொன்னதற்குக் கூட, நம் வீட்டு நபர்களுக்கு நாம் சமைத்துக்கொடுப்பது போல் வராது என்று ஒற்றை வாக்கியத்தில் முடித்துவிட்டாள். கடைசியில் வடிவேலு தான் இறங்கி வரவேண்டியதாகிப் போயிற்று.
“குட் மார்னிங் கா” என்றபடி வந்து லீலாவின் தோள்களில் முகத்தை வைத்துக்கொண்டு செல்லம் கொஞ்சினாள் ருக்கு.
“குட்மார்னிங் ருக்கு. ஏன் டல்லா இருக்க. நைட்டு நல்லா தூங்கினியா இல்லையா?” பேச்சு தங்கையிடம் தான் என்றாலும் வேலையில் கவனம் குறையவில்லை லீலாவிற்கு.
“அடிக்கிற குளிருக்கு தூக்கம் வராமலா இருக்கும். அதெல்லாம் நல்லாத் தூங்கினேன். என்னன்னு தெரியல வர வர சோம்பேறித்தனம் அதிகமாகிக்கிட்டே வருது.” சிரிப்புடன் ஒப்புக்கொண்டாள்.
“டீ போட்டு வைச்சிருக்கேன் எடுத்துக் குடி.” என்றபடி தங்கையிடம் ப்ளாஸ்க்கை நீட்டினாள் மூத்தவள்.
“அக்கா என்னைக் குளிரில் கோலம் போட விட்டுட்டு, நீங்க உள்ள ஜாலியா இருக்கீங்களா?” வெளியில் இருந்து கத்தினாள் தேவகி.
தங்கையின் செல்லச் சிணுங்களில் சிரித்த தமக்கைகள் இருவரும் வெளியே வர, அங்கே தேவகியின் கை வண்ணத்தில் உருவான ரங்கோலி இராதா இல்லத்தின் தலைவாசலை அழகோவியமாக்கி இருந்தது
“தேவகி சீக்கிரம் கலர் கொடுக்கிற வேலையை ஆரம்பி.” சற்று தள்ளி நாற்காலியில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டே வம்பிழுத்தாள் ஊர்மி.
“பாருக்கா இந்த ஊர்மிக்காவை. அப்ப இருந்து இப்படித்தான் அதைப் பண்ணு, இதை பண்ணுன்னு சும்மா உட்கார்ந்துகிட்டு என்னை வேலை சொல்லிக்கிட்டே இருக்காங்க. சும்மா இருக்கிறதுக்கு எனக்குக் கொஞ்சம் உதவி பண்ணலாம் இல்ல.” கடைக்குட்டி செல்லம் எதிர்பார்த்தாள்.
“நான் எங்க சும்மா உட்கார்ந்து இருக்கேன். நான் என் பிள்ளைகளைச் சுமந்துகிட்டு இருக்கேன் டி. இரட்டைப் புள்ள, நாலு மாசம் ஆச்சு. வயித்துல புள்ள இருக்கும் போது அம்மா படுற கஷ்டம் உனக்கு என்ன தெரியும். நான் எல்லாம் ஒரு வேலையும் பார்க்க மாட்டேன் பா. குழந்தைகளைப் பெத்தெடுத்து அதுக்கு அப்புறமா தான் எந்த வேலையா இருந்தாலும்.” சிரித்தபடிச் சொன்னாள் ஊர்மி.
“இப்படிச் சொல்லி சொல்லியே, இவ்வளவு நாள் ஓட்டிட்ட. இன்னும் ஐந்து மாசம் தான். அதுக்கப்புறம் பாருடி உனக்கு இருக்கு. மொத்த வேலையையும் உன் தலையில கட்டிட்டு நாங்க மூணு பேரும் நல்லா ரெஸ்ட் எடுப்போம்.” வம்பிழுத்தாள் ருக்கு.
“முடியாதே அப்பவும் நான் வேலை செய்ய மாட்டேனே. ஏன்னா என் கையில் என் குழந்தைங்க இருக்குமே. அந்தக் குழந்தைங்களைப் பார்த்துக்கிட்டே நான் இருந்துப்பேனே.” கெத்தாகச் சொன்னாள் ஊர்மி.
“ஆக வேலை செய்யணும் என்கிற எண்ணமே உனக்கு இல்லை அப்படித்தானே.” ருக்கு இடையில் கை வைத்தவண்ணம் முறைக்க, “அவ திருந்த மாட்டா. அவளை விட்டுட்டு இப்போதைக்கு நாம நம்ம வேலையை பார்ப்போம் வாங்க.” லீலா அழைக்க, ஊர்மியைத் தவிர மற்ற மூவருமாய் தேவகி வரைந்த ரங்கோலிக்கு வண்ணம் தீட்ட ஆரம்பித்தனர்.
“குட்மார்னிங் மா, எல்லோரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க.” என்றவண்ணம் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கினான் அரசு.
“அரசு அண்ணா, இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்களா, அதிசயம் தான் போங்க.” அவனையும் வம்பிழுத்தாள் ஊர்மி.
“உனக்கு சதா உன் புருஷனை வம்பிழுத்துப் பேசின பழக்கத்தை மாத்திக்க முடியாம, உன் அக்கா, தங்கச்சிங்களைத் தாண்டி இப்ப என்கிட்ட வந்துட்டியா? உன் பாட்சா என்கிட்ட பலிக்காது டா கண்ணா.” ஊர்மியைச் சீண்டிவிட்டவன் லீலாவைப் பார்த்துச் சிரித்தான்.
அவள் கண்ணிலும் அதே கேள்வி இருக்க, “இன்னைக்கு ஏதோ பூஜை இருக்குன்னு சொன்னீங்க. நிறைய வேலை இருக்கும். அதனால தான் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணலாம் னு வந்தேன்.” என்றான் அரசு.
“அரசு அண்ணா நான் உங்களுக்கு ஒரு அட்வைஸ் பண்றேன். தப்பித்தவறி கூட இந்த வீட்டு இராஜகுமாரனுங்க கூடச் சேர்ந்திடாதீங்க. அதிலும் குறிப்பா என் புருஷன்கூட சேரவே சேராதீங்க. எப்பவும் இப்படியே நல்லவங்களாவே இருங்க.” என்றாள் ஊர்மி.
“சந்தடி சாக்கில் இந்த வீட்டுப் பசங்க நல்லவங்க இல்லன்னு சொல்ற.” சிரித்தான் அரசு.
“அவளை விட்டுத் தள்ளுங்க. நீங்க சொன்னது சரிதான். எந்த வேலையும் செய்யாம பொழுது போறதுக்காக யாரையாவது வம்பு இழுத்துக்கிட்டு அலையுறா.
நீங்க வந்ததில் ரொம்ப சந்தோஷம். இது வீட்டு விஷேஷம். வேலையாட்கள் வேண்டாம் னு நாங்களே எல்லா வேலையும் பார்க்க நினைச்சோம். இப்ப தலைமேல் ஏறி நிற்கிது. மூச்சுவிடக் கூட கஷ்டமா இருக்கேன்னு யோசிக்கும் போது சரியா வந்துட்டீங்க. வாங்க வந்து இந்த மாவிலைத் தோரணத்தை வீட்டை சுத்தி காட்டுங்க.” என்றாள் லீலா.
அவள் வார்த்தைகளின் பொருளை உணர்ந்தவனுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. கை அதன் போக்கில் வேலையைச் செய்ய ஆரம்பித்து இருக்க, மனம் பெண்கள் நால்வரைப் பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தது.
கல்லும், முள்ளும், பாறையும் சேர்ந்த வனமாக இருந்த வீடு, இவர்களின் வரவால் சரியாக செப்பனிடப்பட்ட தோட்டமாக மாறியதை உணர்ந்து புன்னகைத்தான்.
“புருஷன், பொண்டாட்டிங்க சரியாப் பேசிக்கிறது கூட இல்ல. ஆனா புருஷனுங்க நல்லா இருக்க சுமங்கலி விரதம் எடுத்து நடத்துறீங்க. உங்களை என்னால புரிஞ்சுக்கவே முடியல மா.” பெருமூச்சோடு சொன்னான் அரசு.
“இந்த வீட்டில் நீங்க மட்டுமாவது எங்களைப் புரிஞ்சு வைச்சிருக்கீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம். இப்ப நீங்களே இப்படிப் பேசினா எப்படி.” கேட்டவள் லீலா.
“எவன் சொன்னது நான் உங்களைப் புரிஞ்சுக்கலன்னு. ஓ மை காட், நான் தான் சொன்னேனோ. அது வந்தும்மா நான் என்ன சொல்ல வந்தேன்னா.” உளற ஆரம்பித்தான்.
“அக்கா அமைதியா இருங்க. காலங்காத்தால இவர் பிளேடை எல்லாம் கேட்க முடியாது.” ஊர்மி சொல்ல, “அரசு உனக்கு வந்த நிலைமை ஊருக்குள் யாருக்கும் வரக்கூடாது டா.” எனப் போலியாக அழுதவன், ஊர்மி கோர்த்து வைத்திருந்த மாவிலைத் தோரணங்களை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.
பூ மழைபோல் இதமாக, சாரலோடு கூடிய குளிர் அடித்துக் கொண்டிருந்த அந்த ரம்மியமான பொழுதை அனுபவிக்க முடியாமல், தான் எப்பொழுதும் ஓட்டப்பயிற்சிக்குச் செல்லும் பூங்காவில் அமைதியாக அமர்ந்திருந்தான் தெய்வா.
கடந்த சில தினங்களைப் போல, இன்றும் மிக சீக்கிரமாகவே தூக்கத்தைத் தொலைத்து எழுந்து பூங்கா வந்திருந்த செல்வாவும் சற்று தொலைவில் தான் அமர்ந்திருந்தான்.
அன்றைய சண்டை முடிந்து முழுதாக இரண்டு மாதங்கள் கடந்து விட்டிருந்தது. ஆனால் அவர்களுடைய வீட்டில் தான் இயல்புநிலை இன்னும் திரும்பி இருக்கவில்லை.
மனைவியின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று ஆண்கள் நால்வரும் சண்டையை ஆரம்பிக்க, எப்பொழுதும் இல்லாமல் அவர்களை மிகவும் கண்டித்து அடக்கி வைத்தார் வடிவேலு.
பெண்கள் நால்வரும் அந்த வீட்டில் விருந்தாளிகளைப் போல வாழ ஆரம்பிக்க, ஆண்களோ தாங்கள் மனைவி பக்கம் சாயாமல், அவர்கள் தங்கள் பக்கம் சாய்வதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
எப்பொழுதும் போல் இந்த முறையும் விட்டுக்கொடுத்தால், இனி இவர்களைத் திருத்தவே முடியாது என்று மனதில் உறுதியாக நினைத்த பெண்கள் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை.
நால்வரும் தங்கள் கணவர்களுடன் அவரவர் அறையில் தான் இருந்தனர். அவர்களின் தேவைகள் அனைத்தையும் கேட்பதற்கு முன்பாகவே நிறைவேற்றி வைக்கத்தான் செய்தனர். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவ்வப்பொழுது கணவன்மாரின் ஏக்கம் நிறைந்த முகத்தைப் பார்த்து பேசிவிடுவோமா என்று தோன்றினாலும், தங்களின் நல்ல எதிர்காலத்திற்கு இந்தக் கடுமை அவசியம் என்று இழுத்துப் பிடித்தனரே தவிற தங்களுடைய கெடுபிடியை மட்டும் குறைக்கவே இல்லை.
பெண்கள் நால்வரைப் பொறுத்தவரை இது ஒரு சோதனைக்காலம் என நினைத்து கவலைகளை மறைத்து வைத்து தங்களுக்குள் சிரித்துப் பேசி சந்தோஷமாகத் தான் இருந்தனர்.
ஆனால் எப்படியும் தன் மனைவி தன்னுடைய பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து இறங்கி வந்து விடுவாள். இன்றைக்கு பேசிவிடுவாள், நாளை பேசிவிடுவாள் என்று எதிர்பார்த்து காத்திருந்த ஆண்கள் நால்வருக்கும் சரியான சவுக்கடி ஆக அமைந்தது கடந்து போன இரண்டு மாதங்கள்.
குடும்ப வாழ்க்கையில் கணவன், மனைவி ஆகிய இருவரில் எவரேனும் ஒருவராவது விட்டுக் கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது அந்த வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் நன்றாகப் புரிந்து போனது.
இருந்தாலும் ஆண்கள் தங்களுடைய ஈகோவை விட்டுக் கொடுப்பதாகவும் இல்லை. பெண்கள் தங்களுடைய தன்மானம் மற்றும் எதிர்கால வாழ்க்கையைக் காப்பதற்காக எடுத்த முடிவில் இருந்து பின் வாங்குவதாகவும் இல்லை. தாங்கள் செய்த தவறு ஒரு உண்மையை மறைத்து திருமணம் செய்தது. அதற்குத் தண்டனையை ஏற்கனவே அனுபவித்தாகிவிட்டது என்பதால் இந்த முறை எடுத்த முடிவில் உறுதியாக இருந்தனர்.
வாழ்க்கை இலட்சியமே தனிவீட்டிற்குச் செல்வது தான். அதில் ஆப்பு வைக்கும் படியான மனைவியின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்னும் தீர்மானத்தில் இருந்தனர் ஆண்கள்.
இப்படியே ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் இருந்து நாள்கள் தன்னைப் போல் சென்று கொண்டே இருந்தால் இதற்குத் தீர்வு தான் என்ன, என்பது தான் கடந்த நான்கு நாட்களாக செல்வாவை உறங்க விடாமல் செய்தது.
செல்வாவிற்கு இப்படி என்றால் தெய்வா நிலை மிகவும் மோசம். ருக்குவை அருகில் வைத்துக் கொண்டு அவனால் பேசாமல் இருக்க முடியவில்லை. அதே நேரம் தானாக முன் சென்று பேச நியாயமான கோபம் மற்றும் கொஞ்சம் மிச்சம் இருந்த ஈகோ இடம் கொடுக்கவில்லை. விளைவு, கோபம் தாறுமாறாக ஏறி வேலை செய்யும் இடத்தில் தனக்குக் கீழ் இருக்கும் அனைவரையும் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தான்.
இவர்களைப் போல் அல்லாது நாகா தன் ஈகோ மொத்தத்தையும் இறக்கி வைத்து இரு முறை ஊர்மியிடம் பேசினான். அவளும் பதில் பேசினாள் தான். ஆனால் முதல் வாக்கியமாகவே என்னோட கண்டிஷனுக்கு ஓகே வா என்று தான் கேட்டாள்.
நாகாவும் காற்றில் பறக்க இருந்த பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு பொறுமையாக அவளுக்கு எடுத்துச் சொல்ல முன்வந்தான். ஆனால் ஊர்மி அவனைச் சட்டை செய்யவே இல்லை.
வாழ்வில் முதல்முறை உதாசீனத்தை அனுபவிப்பவனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வர, அவனும் அதற்குப் பிறகு எந்த முயற்சியும் எடுக்காமல் அமைதியாகிவிட்டான்.
தர்மாவின் நிலை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. மனைவியின் நிபந்தனைக்கு இப்போதைக்கு ஒப்புக்கொண்டு பின்பு அதை நிறைவேற்ற முடியாமல் போவதற்கு இப்போதே முடியாது என்று மறுத்துவிடலாம் என்று அவன் நினைக்க, தேவகிக்கு அவன் மேல் கோபம்.
அவளுடைய கோபத்தை மதித்து அவனும் அமைதியாக இருக்கிறான். ஓரிரூ முறை அவனாக அவளிடம் பேச்சுக் கொடுத்தாலும், கடைக்குட்டிகளுக்கே உரித்தான உரிமைக் கோபம் தேவகியிடம் இருந்து எட்டிப் பார்க்கும்.
“நான் உங்களை எப்படி நினைச்சிருந்தேன் தெரியுமா? நிபந்தனைகளைப் பத்திச் சொன்னதும் இவ்வளவு தானா நான் உனக்கு எழுதித் தரேன்னு சொல்லுவீங்க. நீங்க பண்றதைப் பார்த்து மத்த மாமாக்களும் எழுதி கொடுப்பாங்கன்னு நினைச்சேன், போங்க நீங்க.” என்று தன் மனதிற்குள் செல்லமாகக் கோபித்துக் கொண்டு அமைதியாகவே இருக்கிறாள்.
வடிவேலுவிற்கு சொல்ல முடியாத சோகம் மனதைப் போட்டு பிசைந்தது. அதையும், இதையும் சொல்லி அரசு தான் அவ்வப்பொழுது அவரை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான்.
பூங்காவில் அமைதியாய் இருந்த செல்வா எதேச்சையாக தெய்வாவைக் கவனித்தான். அவர்களுடைய இத்தனை வருட வாழ்க்கையில் ஐம்பது நாட்களுக்கும் மேல் நால்வருக்குள்ளும் பிரச்சனை வராமல் இருப்பது இதுவே முதல் முறை. பேசாமல் இருந்தாவது, பெண்கள் நால்வரும் நினைத்ததை சாதிக்கத் துவங்கி இருந்ததை அப்பொழுது தான் உணர்ந்தான் செல்வா.
தான் இருந்த இடத்தில் இருந்து எழுந்து தெய்வாவின் அருகே சென்று, “தெய்வா” என்று பொறுமையாக அழைத்தான். திரும்பிப் பார்த்தவன் எப்பொழுதும் போல் வெறுப்பையோ, எரிச்சலையோ முகத்தில் காட்டாமல், “செல்வா நீயா?” என்றான்.
“நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.” செல்வா சொல்ல, “நானும் உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு. இப்படி பக்கத்துல உட்காரு.” என்று தான் அமர்ந்திருந்த பூங்கா நாற்காலியில் இடம் கொடுத்தான் தெய்வா. செல்வா ஆச்சர்யமாகப் பார்க்க, தெய்வாவுக்குமே இது ஒரு மாதிரி இருந்தது.
“நம்ம வீடு இருக்கிற நிலைமை உனக்கு நல்லாத் தெரியும். நாம நாலு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சுக்கிட்டு இருந்தப்ப, நாம அமைதியா இருந்தோம் ஆனா நம்ம வீடு அமைதியா இல்ல. இப்ப நம்ம வீடு அமைதியா இருக்கு ஆனா நாம நாலு பேரும் அமைதியா இல்ல.” வருத்தமாய் ஆரம்பித்தான் செல்வா.
“ஆமா செல்வா, நானும் அதைப் பத்தி தான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன். இதே மாதிரி இன்னும் எத்தனை நாள் இருக்கிறது. நான் ருக்குகிட்ட ஈகோவை விட்டுட்டு பேசப் போனா, மூஞ்சிக்கு நேரா கண்டிஷன் பேப்பரை எடுத்து நீட்டுறாங்க. அதில் இருக்கிற கண்டிஷனை எப்படி நம்மளால ஏத்துக்க முடியும்.” கோபமாகக் கேட்டான் தெய்வா.
“அவங்க நாலு பேருக்கும் அப்படி என்ன தான் பிடிவாதம் னு தெரியல. பிடிவாதம் னு சொன்னதும் தான் ஞாபகம் வருது. இப்பவாச்சும் எனக்குப் பதில் சொல்லு. நீ ஏன் லேகா கொடுத்த கம்ப்ளைண்ட்டை எடுத்துக்கல.” மறக்காமல் கேட்டான் செல்வா.
தமையனை முறைத்துக்கொண்டு, “அந்தப் பொண்ணு நீ நினைக்கிற மாதிரி அவளோட மாமியார் மேல கம்ப்ளைண்ட் கொடுக்க வரல. எக்ஸ் மினிஸ்டர் காயத்திரி மேடம் பேர்ல கம்ப்ளைண்ட் கொடுக்க வந்தா. அந்த கம்ப்ளைண்ட்டை நான் எடுத்துக்கிட்டா, அடுத்த நாளே அந்தப் பொண்ணு உயிரோட இருக்க மாட்டா. அதனால் தான் ஒவ்வொரு முறை அவ வரும் போதும் நான் புத்தி சொல்லி அனுப்பிக்கிட்டே இருந்தேன்.” கடுப்பாகச் சொன்னான்.
தன்மையாய் கேள்வி எழுப்பியவனிடம் அமைதியாகப் பதில் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது தான். ஆனாலும் இயற்கைக் குணம் மேல் எழும்பி, அன்று மட்டும் இவன் இதே போல் மென்மையாக, பொறுமையாகக் கேட்டு இருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காதே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை தெய்வாவால்.
“அப்ப லேகா மாடியில் இருந்து கீழ விழுந்தது கூட அந்த காயத்திரி வேலையா இருக்குமோ.” படபடப்பாய் வந்தது செல்வாவிற்கு.
“முதலில் நடந்தது தற்கொலை முயற்சியோ கொலை முயற்சியோ இல்லை. அது தவறுதலா நடந்த ஒரு விபத்து. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மொட்டைமாடி சுவர் ஓரம் இருந்த டேங்கில் தண்ணீர் எவ்ளோ இருக்குன்னு பார்க்கிறதுக்கு சுவற்றில் ஏறி எதிர்பாராத விதமா கீழ விழுந்து இருக்காங்க. எல்லாம் நல்லா விசாரணை பண்ணியாச்சு.” கடுப்பு வந்தாலும் ஆச்சர்யமாக அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு பதில் சொன்னான் தெய்வா.
செல்வாவைக் குற்றவுணச்சி வந்து தாக்கியது. முதல் முறையாக தெய்வாவிடம், “ஐம் ஸ்சாரி தெய்வா, அன்னைக்கு நான் பொறுமையா இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. எல்லாத்துக்கும் நான் தான் காரணம்.” என்றான்.
செல்வாவின் இலகுவான பேச்சும், தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் குணமும் தெய்வாவை ஏதோ செய்ய,
“நானும் ஸ்சாரி, வாய்ப்பே இல்லாத விஷயம் னு தெரிஞ்சும் திட்டம் போட்டு உன்னையும், அந்தப் பொண்ணையும் சேர்த்து வைச்சுப் பேசி தப்புப் பண்ணிட்டேன். அதோட நமக்கு நடுவில் வந்த உன் பொண்டாட்டியையும் அடிச்சிட்டேன். அதனால் தானே பிரச்சனையும் பெருசாச்சு.” என்றான்.
“நடந்ததை நினைச்சு வருத்தப்பட்டு இனி எந்தப் பிரயோஜனமும் இல்ல. இனி நடக்கப் போறதைப் பார்க்கலாம்.” என்ற செல்வா தெய்வாவின் கையில் தட்டிக்கொடுக்க, தெய்வாவும் தலையாட்டி அதை ஏற்றுக்கொண்டான்.
உலக அதிசயமே தோற்றுப் போகும் அதிசயமான நிகழ்வு நடந்ததைப் பார்த்து இருள் விலகாத வானம் ஆனந்தக் கண்ணீரைச் சிந்த ஆரம்பித்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


செல்வா தெய்வா அதெப்படி பா நீங்க ஒண்ணு சேரலாம் … இருங்க எங்க கருநாகம் இருக்கு பிரச்சனை பண்ண …