
அத்தியாயம் 49
“அங்கிள் தேவையில்லாமப் பயப்படாதீங்க. நீங்க நினைக்கிற மாதிரி தப்பா ஒன்னும் நடக்காது. நான் எதுக்கு இருக்கேன், நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்.
உங்க பசங்களை அவங்க பொண்டாட்டிங்களோட சேர்த்து வைக்கிறது என்னோட பொறுப்பு. நாரதர் கலகத்தை ஸ்டார்ட் பண்ணிட்டேன். அது நான் நினைச்ச மாதிரி நன்மையில் தான் முடியும், நம்புங்க.
நான் இவ்வளவு சொல்றேன் ஸ்மைல் பண்ண மாட்டீங்களா. நீங்க வேண்ணா பார்த்துக்கிட்டே இருங்க. உங்க மருமகளுங்க வீட்டுக்கு வந்ததும், அடுத்தடுத்து வரிசையாப் பேரப்புள்ளைங்களை பெத்துப் போடப் போறாங்க. அப்பவும் நீங்க இப்படித்தான் உம்முன்னு இருக்கீங்களான்னு நானும் பார்க்கிறேன்.” அரசு சொல்ல கவலையுடன் இருந்த வடிவேலுவின் முகம் அந்தக் கனவில் சிலிர்த்து சிரித்தது.
“உனக்கு என்ன பைத்தியமாடா பிடிச்சிருக்கு. எதுக்குடா ஒன்னும் இல்லாத விஷயத்தைப் பெருசாக்கி அந்தப் பொண்ணை வீட்டை விட்டை துரத்திட்ட.” நாகாவின் நண்பர்களில் கொஞ்சம் நல்லவன் அவனைப் போட்டு வறுத்தெடுத்தான்.
“என்னடா நீயும் அவளுக்கே சப்போர்ட் பண்ற. அன்னைக்கு ஏதோ சொல்ல முடியாத அளவு கோவம். அந்தக் கோவத்தில் நான் கொஞ்சம் அதிகப்படியா பண்ணிட்டேன் தான். அது எனக்கே புரியுது. இப்ப அவ என்கூட இருந்திருந்தா கெத்து எல்லாம் விட்டுட்டு அவகிட்ட மன்னிப்பு கேட்டு இருப்பேன் தான். அதுக்காக அவ பண்ணது தப்பு இல்லன்னு மட்டும் சொல்லாத.” என்க,
“தப்புப் பண்ணு, அப்புறம் மன்னிப்புக் கேளு. அவ அந்தப்பக்கம் மன்னிச்சுக்கிட்டே இருக்கட்டும். நீயும் இந்தப்பக்கம் மறுபடி மறுபடித் தப்புப் பண்ணிக்கிட்டே இரு.” கடுப்பாகச் சொன்னான் நண்பனானவன்.
“என் மேல் நம்பிக்கை வைக்க முடியலன்னா என்கிட்ட சொல்லி இருக்கலாம் டா. அவளுக்காக காத்திருக்க என்னால் முடிந்திருக்கும். ஆனால் இப்பப் பார் நான் அவ மேல் வைச்சிருந்த நம்பிக்கையை ஒன்னும் இல்லாமப் பண்ணிட்டா. இனி ஒவ்வொன்னு பண்ணும் போது இவளுக்கு நிஜமாவே பிடிச்சிருக்கா, இல்ல அக்கா தங்கச்சிங்களுக்காக சகிச்சுக்கிறாளான்னு என் கோணல் புத்தி யோசிக்கும்.
பொறுத்துக்கிறது வேற, சகிச்சுக்கிறது வேற. அவ என்னைச் சகிச்சுக்கிட்டு என் கூட வாழ நினைச்சிருந்தா அதை விடக் கேவலம் எனக்கு எதுவும் இருக்க முடியாது.” கடுப்பாய் மொழிந்தான் நாகா.
“நீங்க ராசியாகுறதுக்கு முன்னாடி நீ பண்ண தகிடு தத்த வேலைக்கு எல்லாம் நீ மன்னிப்பு கேட்ட சரி, அந்தப் பொண்ணு உண்மையிலே உன்னை மன்னிச்சிட்டாளா. அது தெரியுமா உனக்கு” என்க,
“பைத்தியம் மாதிரி பேசாத, அவ என்னை மன்னிக்காமலா என்னை ஏத்துக்கிட்டா.” மீண்டும் மீண்டும் இதையே பேச வைக்கிறானே என்று வருந்தினான். அறைக்குள் நடப்பவற்றை வெளியே சொல்வாயா என்று ஊர்மி கேட்டதன் அர்த்தம் இப்போது புரிந்தது. தலையை அழுத்தமாகக் கோதிவிட்டான்.
“எனக்குத் தெரிஞ்சு நீ பண்ண எல்லாத் தகிடு தத்தத்தையும் அந்தப் பொண்ணால முழுசா மன்னிக்க முடியலன்னு நினைக்கிறேன். அதையெல்லாம் மறக்க முடியாம, கடக்க முயற்சி பண்ணி அது சாத்தியமாகும் காலம் வரை உன்மேல் முழு உரிமை எடுத்துக்க வேண்டாம் னு நினைச்சிருப்பா.” என்றான் நண்பன்.
“அப்ப நாங்க வாழ்ந்த வாழ்க்கை.” என்று கேட்க வந்தவன் வாயை மூடிக்கொண்டான்.
“எவ்வளவு தான் தைரியமான பொண்ணுங்களா இருந்தாலும், சிலவற்றை அவ்வளவு சீக்கிரத்தில் பொண்ணுங்களால் மறக்க முடியாது டா. அப்புறம் எதுக்குன்னு கேட்க வருவ. உன்னை மன்னிக்கிற முயற்சியில் கூட உன்னை ஏத்துக்கிட்டு இருந்திருக்கலாம்.
ஒருத்தரோட பெரிய தவறுகளை மன்னித்து மறக்கணும் என்றால் அவங்க மேல் அளவுக்கு அதிகமாக அன்பு இருக்கணும். அந்த அன்பை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் கூட அவங்க உன்கிட்ட நெருங்கிப் பழகி இருக்கலாம் இல்ல.” என்க, அப்படியும் இருக்குமோ என யோசித்தான் நாகா.
“நான் சொன்னது மட்டும் உண்மையா இருந்தா, மனசார சொல்றேன் அவளை நீ இழந்தது பெரிய லாஸ்.” என்றான் நண்பன்.
“டேய் என்னடா லாஸ் அது இதுன்னு பேசுற. அவ கோச்சுக்கிட்டுப் போய் இருக்கா அவ்வளவு தான். மொத்தமா விலகி எல்லாம் போகல. அவ சரியான வாயாடி. யாரைச்சும் மென்னுக்கிட்டே இருக்கணும் அவளுக்கு. அவ அக்கா தங்கச்சிங்களோட சண்டை போட வராது. எப்படியும் என்னைத் தேடுவா. சீக்கிரமே என்னைத் தேடி வந்திடுவா.” நம்பிக்கையாய் சொன்னான் நாகா.
“ஆனாலும் உனக்குப் பேராசை டா. இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அந்தப் பொண்ணு உங்கூட வாழ வரும் னு எப்படி நினைக்கிற?”
“அவ குடும்பப் பாங்கான பொண்ணு டா கண்டிப்பா வந்திடுவா.” வந்துவிட வேண்டுமே என்கிற தவிப்போடு சொன்னான் நாகா.
“குடும்பப்பாங்கான பொண்ணுங்களுக்கு அவங்களோட தன்மானம் ரொம்ப முக்கியம். சார் அதில் இல்ல கையை வைச்சிருக்கீங்க.”
“டேய் ஏன்டா என்னை ரொம்ப பயமுறுத்துற.” கெத்தை விட்டுப் பயத்தை வெளியே காட்டிவிட்டான் நாகா.
“ரொம்பத் தான் உருகுற. அத்தனை உரிமையா கோபம் வேற பட்டு இருக்க. பொண்டாட்டி மேல அவ்வளவு பாசமா. இல்லை ஒருவேளை குழந்தைன்னு ஏதும் உருவாகி, டிவோர்ஸ் பண்றது கஷ்டம் னு நினைக்கிறியா?” போட்டு வாங்கப் பார்த்தான்.
“என்னது குழந்தையா?” நினைப்பே தித்தித்தது தான். அதை மறைத்துக்கொண்டு, “உனக்கு என்னோட இலட்சியம் தெரியாதாடா. நான் வாழ்க்கையில் ஏக பத்தினி விரதனா வாழ இலட்சியம் கொண்டவன்.
ஊர்மியை விவாகரத்து பண்ணனும் னு நினைச்ச வரை எனக்கு இல்லற ஆசை மனதில் துளி கூட தோணல. அவ தான் எனக்கு முழுமைன்னு உணர்ந்த பின்னால் தான் நான்.” என்று நிறுத்தி தலைமுடியைக் கோதிக்கொடுத்தான்.
“அம்மா இறந்தப்ப அப்பாவுக்கு வயசு கம்மி தான். நினைச்சிருந்தா அவர் இரண்டாவது கல்யாணம் பண்ணி இருக்கலாம். ஆனா அவர் பண்ணல. உங்க அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டப்ப அவங்களை எந்தளவு விரும்பினேனோ அதே அளவு இப்பவும் விரும்புறேன்னு எங்க அப்பா அடிக்கடி என்கிட்டச் சொல்லுவாரு.
அப்படி ஒரு உண்மையான காதலைப் பார்த்தே வளர்ந்தவன் நான். இந்த விஷயத்தில் நான் என் அப்பாவைத் தான் பின்பற்றுவேன். எப்படி இருந்தாலும் நித்தம் எத்தனை சண்டை வந்தாலும், நான் அவ காலில் விழுந்தாலும், அவ என் காலில் விழுந்தாலும், ஒருத்தரை ஒருத்தர் கடிச்சு வைச்சு காயம் பட்டாலும் இந்த ஜென்மத்தில் அவ தான் எனக்கு.” உறுதியாகவே சொன்னான் நாகா.
“அப்பப் போய் மன்னிப்பு கேட்டு, அவளை உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடு. அவ வந்திட்டா, அவளோட அக்கா தங்கச்சிங்களும் வந்திடுவாங்க. உன்னால ஏற்பட்ட எல்லா ப்ராப்ளமும் சால்வ்டு”
“என்னது நான் போய் மன்னிப்பு கேட்கணுமா? கேட்டுடுவேன் பிரச்சனை இல்லை. ஆனா அன்னைக்கு சாத்தான் புகுந்த மாதிரி பேயாட்டம் ஆடி எல்லாரையும் கண்டபடிப் பேசிட்டேன் போல. எல்லாரும் என்னை முறைச்சிக்கிட்டே இருக்காங்க.
இதில் நான் அங்க போய் அவங்க நாலு பேரும் டென்சனாகிட்டா. ஏற்கனவே அந்த லீலா என்னை அடிச்சிட்டா. இப்ப அங்க போய் மத்த மூணு பேரு கையாலும் அடிவாங்கனுமா நானு.” ஊர்மியைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் அவமானப்படுத்திவிடுவாளோ என்னும் பயமும் இருந்தது.
அவள் செய்ததும் தவறு, அதைத் தட்டிக்கேட்கிறேன் என்று தான் நடந்து கொண்ட முறையும் தவறு என்று இறங்கி வந்திருந்தான் நாகா. அதனாலேயே சற்று பயமாக இருந்தது.
“என்ன சொன்னாலும் கட்டையைப் போடுற. என்ன தான் பண்ணப் போற.” என்க, “ம்ம்ம்…. தூது விடப் போறேன். முதலில் எங்க அப்பாவைத் தூது அனுப்பி, நிலவரம் எப்படின்னு பார்த்துட்டு, அப்புறம் மத்ததை முடிவு பண்ணிக்கப் போறேன்.” என்றுவிட்டு கிளம்பினான் நாகா.
இங்கே நெய்வேலியில் பெண்கள் வீடு இருக்கும் தெருவில், “யாரு தம்பி நீங்க. அவங்க நாலு பேரும் பக்கத்தில் உள்ள கோவிலுக்குப் போய் இருக்காங்க. அவங்க வர வரைக்கும் எங்க வீட்டில் வந்து இருக்கீங்களா?” லீலாவின் பக்கத்து வீட்டில் இருப்பவர் அடையாளம் தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு கணிப்புடன் பெண்களின் வீட்டு வாசலை முறைத்தபடி நின்று கொண்டிருந்தவனை வரவேற்றார்.
“இல்ல பரவாயில்லை நான் இங்கேயே இருக்கேன்.” என்றபடி அவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தான் தெய்வா.
“நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே.” விஷயத்தைக் கறக்காமல் செல்லப்போவது இல்லை என்பது போல் மீண்டும் கேட்டார்.
“நான் ருக்மணியோட புருஷன்.” சின்னதாய் வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னான்.
“அப்பவே நினைச்சேன், ஆள் நல்லா வாட்ட சாட்டமா ஹீரோ மாதிரி இருக்கீங்களே. கண்டிப்பா அந்த பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட நாலு பேரில் ஒருத்தரா தான் இருப்பீங்கன்னு. ருக்கு உண்மையில் ரொம்ப அதிர்ஷ்டசாலி தான்.” என்றவருக்கு அவள் மொட்டைத்தலை நினைவு வர, வாழத் தெரியாதவ என்று மனதோடு சொல்லிக்கொண்டாள்.
அந்த நேரத்தில் வேகவேகமாக வீட்டுக்கு வந்தாள் ஊர்மிளா. அவள் முகம் ஏதோ கலவரமாகக் காணப்பட்டது. வீட்டு வாசலில் அமர்ந்திருந்த தெய்வாவைக் கண்டதும் வலிய புன்னகைத்தாள்.
“வாங்க மாமா, வந்து ரொம்ப நேரம் ஆச்சா. நாங்க இங்க பக்கத்தில் ஒரு கோவிலுக்கு போய் இருந்தோம். ஆடி மாசம் னு அக்காவை அனுப்பி வைச்சு நாலு நாள் கூட ஆகல, அதுக்குள்ள வந்துட்டீங்க. அக்கா பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.” பேசிக்கொண்டே கதவைத் திறந்தவள் அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.
“அங்க அந்தப் பேச்சு பேசிட்டு இங்க இப்படிச் சொல்லி வைச்சிருக்கீங்களா?” மனதோடு நினைத்துக்கொண்டே மனைவியின் இல்லத்திற்குள் வலது கால் எடுத்து வைத்து நுழைந்தான் தெய்வா.
“உட்காருங்க மாமா, நான் டீ போடுறேன்.” என்றபடி அவனுக்குச் சேர் ஒன்று போட்டு அமர வைத்தாள். வீட்டைச் சுற்றிப் பார்த்த தெய்வாவிற்கு மனம் பரவசமாய் இருந்தது.
அழகான, அமைதியான, அன்பான அடக்கமான வீடு. இங்கே தானே தன்னுடைய ருக்கு பிறந்து வளர்ந்திருப்பாள் என்று இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவன் வந்து நின்றது ஒரு மேஜை அருகில்.
அதில் இரண்டு பெண்கள் ஆளுக்கு இரண்டாக நான்கு குழந்தைகளை தூக்கி வைத்திருப்பது போல் ஒரு புகைப்படம் இருந்தது. இவர்கள் நால்வரும் ஒரே கருவில் பிறந்தவர்கள் என்பது சட்டென்று நினைவுக்கு வர, புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்த்தான். பார்த்த மாத்திரத்தில் பரமேஸ்வரியின் கையில் இருந்த ருக்குவை அடையாளம் கண்டிருந்தான்.
அருகே ஒரு சிறிய ஆல்பம் கிடக்க அதை எடுத்துப் பார்த்தான். நான்கு குழந்தைகளும் வளர வளர எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருந்தது. அதைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தவனை கலைத்தாள் ஊர்மி.
“என்ன மாமா அக்காவை நல்லா இரசிச்சிட்டீங்களா. இந்தாங்க இந்த டீயைக் குடிங்க.” என நீட்டினாள். மறுக்கத் தோன்றினாலும் அவள் முகத்தில் இருந்த களைப்பைப் பார்த்தபடி வாங்கிக்கொண்டான்.
அந்த நேரம் வீட்டிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்க, ஊர்மி சென்று பார்த்தால் தர்மன் வந்திருந்தான். “வாங்க, உள்ள வாங்க.” என்ற ஊர்மியின் அழைப்பைத் தொடர்ந்த உள்ளே வந்தவனும், ஏற்கனவே உள்ளே இருந்தவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சற்று சங்கோஜப்பட்டுக் கொண்டனர்.
“அட எதுக்கு இவ்வளவு தயங்குறீங்க. உங்க பொண்டாட்டியைப் பார்க்கிறதுக்கு அவங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க, இதில் சங்கோஜப்பட என்ன இருக்கு. எப்பவும் போல நிமிர்வாவே இருங்க.” அவள் சொல்ல புன்னகைத்துக் கொண்டனர் இருவரும். அடுத்ததாக ஒரு கார் சத்தம் கேட்டு, சிறிது தயக்கத்துடன் செல்வாவும் வந்து சேர்ந்தான்.
செல்வாவை அங்கு கண்டதும் ஊர்மிக்கு மனதெல்லாம் நிறைந்து போனது. அன்று இருந்த கோபத்திற்கு பிரிவு நல்ல முடிவாகத் தோன்றினாலும், எப்போது பார் யோசனையுடன் இருக்கும் லீலா, சோகமாய் சுற்றிக்கொண்டிருக்கும் ருக்கு, தவிப்பாய் அடிக்கடி செல்போனைப் பார்த்துக்கொண்டிருக்கும் தேவகி எனப் பார்த்து வேதனை தான் வந்தது ஊர்மிக்கு.
எங்கே தன்னுடைய சகோதரிகள் புகுந்தகத்தைத் தவிர்த்து வந்ததும், மாமன்கள் அப்படியே தண்ணீர் தெளித்து விட்டுவிடுவார்களோ என்று பயந்திருந்தாள். ஆனால் அவர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தேடி வந்திருக்க, இந்தப் பிரிவு நிரந்தரமல்ல என்ற நம்பிக்கை வந்து ஒருவித பரவசத்தைத் தந்தது அவளுக்கு.
“வாங்க மாமா, உள்ள வாங்க. பார்த்து வாங்க, நிலைப்படி உங்களை விட சின்னது. குனிஞ்சு வாங்க.” அத்தனை ஆசையாய் வரவேற்றவள் ஒரு சில நொடிகள் நின்ற இடத்திலேயே நின்று அவனை அன்பாய் அனுசரணையாய் பார்த்து வைத்தாள். அவள் பார்வையில் அவனுக்குத் தான் ஐயோ என்றானது.
மேற்க்கொண்டு எதுவும் பேசி அவர்களைச் சங்கடப்பட விடாமல், செல்வாவிற்கும் தர்மாவிற்கும் டீ தயாரித்துக் கொடுத்தாள்.
“நீங்க பண்ணது உங்களுக்கே நியாயமா இருக்கா?” எடுத்த எடுப்பிலே சாட ஆரம்பித்தான் தெய்வா. நாகாவைப் பற்றி தெரிந்திருந்தும் அன்று இவள் மட்டும் அவர்கள் சண்டையை அறைக்குள்ளேயே முடித்திருந்தால், இவ்வளவு வந்திருக்காதே என்னும் ஆத்திரம் இருந்தது அவன் வார்த்தைகளில்.
“அன்னைக்கு நடந்த எதுவும் திட்டம் போட்டு நடக்கல. உங்க தம்பி பண்ண காரியத்தால அக்கா என்னவோ எங்களை இங்க கூட்டிட்டு வந்திட்டாங்க. ஆனா அவங்களுக்கு நிம்மதியே இல்ல. உங்க மூணு பேரைப் பத்தியும் தான் கவலைப்பட்டுட்டு இருந்தாங்க.
உங்களுக்கு ஆசை காட்டி மோசம் பண்ண மாதிரி ஆகிடுச்சேன்னு சொல்லி சொல்லி வருத்தப்பட்டாங்க. கிளம்பும் போது உங்க முகத்தைப் பார்க்க முடியலன்னு இராத்திரி எல்லாம் உறங்காமல் சுத்தி சுத்தி வந்தாங்க.” வருத்தத்துடன் சொன்னாள்.
“எங்க எல்லாரைப் பத்தியும் யோசிச்சு இங்க உட்கார்ந்து வருத்தப்படுறதுக்குப் பதில் அங்கேயே வந்திடலாம் இல்ல.” தர்மா சண்டையை விடுத்து சமாதானத்திற்கு பேசினான்.
“நாங்களா வந்து கூப்பிட்டா தான், எல்லாரும் நம்ம வீட்டுக்கு வரணும் னு உங்க அக்கா முடிவு பண்ணிட்டாங்களோ?” தெய்வா நக்கலாகக் கேட்டாலும், அந்த நம்ம வீடு என்கிற வார்த்தையிலே நெஞ்சம் குளிர்ந்து போய் இருந்தாள் ஊர்மிளா.
“இப்ப உள்ள நிலைமைக்கு வடிவேல் மாமாவே வந்து கூப்பிட்டாலும் எங்க அக்கா அங்க வர மாட்டாங்க, எங்களையும் அனுப்ப மாட்டாங்க.” தடாலடியாகச் சொன்னாள் ஊர்மி.
“என்னங்க இப்படிச் சொல்றீங்க. அப்ப எங்களோட வாழ்க்கை என்ன ஆகுறது.” தன் தவிப்பை தம்பி மனைவியிடம் வெளிப்படுத்தினான்.
“அது உங்க தம்பி கையில் தான் இருக்கு. அவரால ஆரம்பிச்ச பிரச்சனையை அவர் தான் சரிபண்ண முடியும்.”
“அவன் பண்ண தப்புக்கு, தப்பு பண்ணாத எங்களுக்கு எதுக்கு சேர்த்து தண்டனை கொடுக்கணும்.” தெய்வா வீரமாகக் கேட்க, “நீங்க தப்பு பண்ணலன்னு யாரு சொன்னது.” என்றாள் ஊர்மி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
13
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நாகா பண்றதெல்லாம் பண்ணிட்டு பீலிங் உனக்கு … நீ பண்ணதுக்கெல்லாம் உன்னை என்ன பண்றது … இதுல ஏகபத்தினி விரதனாம் … ஹையோ … முடியல … உனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ் கூட இருக்காங்களா … நல்ல அறிவுரையும் சொல்றாங்க …
அடடா முதல்ல லவ்வர் பாய் … அடுத்து குட் பாய் … அடுத்து பிக் பாய் எல்லாரும் வரிசையா வந்துட்டாங்க … என்ன பண்ணாலும் தெய்வா லவ்வர் பாய்னு ஃபார்ம் ஆகிடுச்சு …