Loading

அத்தியாயம் 118

     “தெய்வா, பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டு அவ பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்கா. நீயும் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க. போலீஸ் தானேடா நீ, போய் அவளை அரசு பண்ணுடா.” ஆங்காரமாய் சொன்னார் வடிவேலு.

     தெய்வாவும் அதிர்ச்சியில் இருந்து மீண்டவனாக வெளியே செல்ல முயற்சித்தான். “விடு தெய்வா அவ போகட்டும். எனக்கு அவளைப் பத்தி நல்லாவே தெரியும். இவ்வளவு பேசுறான்னா இனிமே எந்த காரணத்துக்காகவும் அவ திரும்ப வரமாட்டா. அவ அப்படியே போகட்டும்.” என்றான்.

     படிக்கும் காலத்தில் செல்வா லேகாவை ஆர்வமாய் பார்த்ததை விட பிரமிப்பாய் பார்த்த நாள்கள் தான் அதிகம். அத்தனை புத்திசாலி, தெளிவாக சிந்திக்கக் கூடியவளும் கூட.  எப்படி இருந்தவள் இப்படி ஆகிவிட்டாளே என்னம் நினைப்பு மட்டும் தான் அவனிடம் இருந்தது அவனிடத்தில்.

     “என்னடா பழைய காதலி மேல அன்பு ஊற்றா சுரக்குதோ. நல்ல ஜாடிக்கேத்த மூடியாத் தான்டா சேர்ந்து இருக்கீங்க புருஷன், பொண்டாட்டி இரண்டு பேரும்.

     இத்தனை நடந்த பின்னாடி நீ அவளை அப்படியே போகட்டும் னு சொல்ற. உன் பொண்டாட்டி அதுக்கும் மேல. நான் தான் உன்னைக் கொல்லப் பார்த்தேன்னு அந்த அம்மா சொன்னாங்களாம். இந்தம்மா பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டதும் இல்லாம சொந்த தங்கச்சிங்ககிட்ட இருந்து காப்பாத்தி அனுப்புவாங்களாம்.” கடும் கோபத்துடன் நக்கலடித்தான் தெய்வா.

     “எல்லா நேரமும் நம்ம பக்கத்தில் இருந்து மட்டும் யோசிக்க முடியாது தெய்வா. லேகா ஒன்னும் ரொம்ப கொடூரமானவ கிடையாது.

     நீங்க நினைக்கிற மாதிரி, நாம எதுவும் பண்ணிடுவோம் னு பயந்து அவ இங்க இருந்து வெளிய போகல. அவளுக்கு நடந்த விபத்து நமக்கு நடந்திருந்தா இத்தனை நாளில் நாம எழுந்து நடந்திருப்போமாங்கிறது சந்தேகம் தான். அத்தனை வில் பவர் கொண்டவ அவ.

     பண்ண தப்பை நினைச்சு நம்ம முகத்தை நிமிர்ந்து பார்க்க திராணியில்லாம தான் இத்தனை அவசரமா போறா. போகட்டும், ஒருவகையில் இது தான் அவளுக்கான தண்டனை.

     அவளை நாம மன்னிச்சிட்டோமா இல்ல எக்கச்சக்கமான கோபத்திலும் இருக்கோமான்னு யோசனையிலே இருப்பா அப்படியே இருக்கட்டும்.” என்றான் செல்வா.

     “நீ சொல்றது உண்மையா இருந்தா எனக்கு ரொம்பவே சந்தோஷம். எனக்கு அவளை சுத்தமா பிடிக்கவே இல்ல. அவ நம்ம வீட்டை விட்டு போன பின்னால் தான் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு.” என்று ஓரளவு சமாதானம் ஆனான் தெய்வா.

     “எல்லாரும் இவளைப் பத்தி மட்டுமே யோசனை பண்ணிக்கிட்டு இருக்கீங்களே அந்த பாஸ்கர், அவனை யாராவது நினைச்சீங்களா. கூடவே இருந்துக்கிட்டு எவ்வளவு பெரிய துரோகத்தை பண்ணியிருக்கான் ப்ராடு பய. அவனை நாம சும்மா விடலாமா.” சரியான கேள்வியைக் கேட்டான் அரசு.

     “அவனோட ஒரே இலட்சியம் அவன் காதலிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறது தான். இப்ப அவனுக்கான எல்லா தடையும் விலகிடுச்சு.

     இந்த நேரத்தில் அவனோட கவனம் எல்லாம் அவனோட எதிர்காலத்தைப் பத்தி தான் இருக்குமே தவிர என்னையோ லீலாவையோ பழிவாங்குறேன்னு கிளம்ப மாட்டான்.

     அவனுக்குத் தண்டனை கொடுக்கிறேன்னு கிளம்புவதை விட, லேகா சொன்ன மாதிரி கடவுள் அவனைப் பார்த்துப்பாருன்னு நம்பி, நம்ம வேலையைப் பார்ப்பது தான் சரின்னு தோணுது.

     கொத்தப் பார்த்த பாம்பு தான். ஆனா அதை நாம தொந்தரவு செய்யாம விட்டா, அதுவும் நம்மைத் தொந்தரவு செய்யாது.” என்றான் செல்வா.

     “லீலாவைக் கொல்ல நினைத்ததற்காக லேகா மீது மலையளவு கோபத்தில் இருந்தவன் கைலாஷ். ஆனால் அவள் கதையைக் கேட்ட பிறகு அவனுக்கு சற்றே வருத்தமாக இருந்தது.

     பாஸ்கரின் பேச்சுத் திறமை எப்படிப்பட்டது என்பதை அவனே அறிவான். அவன் வகையில் மனதளவில் பலவீனமாக இருந்த லேகா, அவன் வலையில் விழுந்ததில் பெரிய ஆச்சர்யம் எதுவும் இல்லை என்பதை உறுதியாய் நம்பினான். அவளுக்கு கடவுள் நல்ல வாழ்க்கை கொடுக்கட்டும் என்று வேண்டிக்கொண்டு, இராதா இல்லத்தின் அனைத்து உறுப்பினர்களிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

      அவனோடு வாசல் வரை வந்த தெய்வா, ”என் அண்ணனைக் கொல்ல நினைச்சதுக்காக உன் மேல் கொலைவெறி வந்தது உண்மை. ஆனா என் பொண்டாட்டியோட கஷ்டமான காலத்தில் பெரிய உதவி பண்ணி இருக்கீங்க அதுக்கு என்னோட நன்றி.” என்று, அந்த இடத்தில் தன் வெறுப்பு முழுவதையும் களைந்து விடைகொடுத்தான்.

     கடந்த சில நாள்களாக சந்தோஷம் மட்டுமே நிறைந்திருந்த வீடு இன்று இப்படி களையிழந்து கிடப்பது பிடிக்காமல், “வீட்டில் நல்ல விஷயம் நடக்க காத்துகிட்டு இருக்கு. இந்த மாதிரி நேரத்தில் எதுக்காக கண்டதையும் யோசனை பண்ணிக்கிட்டு இருக்கனும். நாம நம்ம வேலையை பார்ப்போமே.” தர்மா சொல்ல, அதுவே சரியெனப் பட்டது அனைவருக்கும்.

     அன்று இரவு பதினோரு மணி போல் தெய்வா, நாகா, தர்மா, அரசு நால்வரும் மொட்டைமாடியில் சந்தித்துக் கொண்டனர். வழக்கமாக ராஜ் சகோதரர்கள் நால்வருக்கும் நடுவில் நடக்கும் அந்த சந்திப்பில் இன்று செல்வாவிற்குப் பதில் அரசு கலந்து கொண்டிருந்தான்.

     “தெய்வா என்ன ஆச்சு, எதுக்காக எங்க மூணு பேரையும் இங்க வரச் சொல்லி இருக்க. ஆமா செல்வா எங்க.” அனைவருக்கும் முதலாவதாகக் கேட்டது அரசு தான்.

     “அரசுவோட கல்யாணத்துக்கு சர்ப்ரைஸ் ப்ளான் பண்றேன்னு சொதப்பி செல்வாவுக்கு பதில் அரசுவை வர வைச்சிட்டியா.” சிரிப்புடன் கேட்டான் தர்மா.

     “இது சிரிக்கிற விஷயம் இல்ல. கொஞ்சம் சீரியஸான விஷயம், வாயை மூடுறியா.” நாட்டுவெடியாய் வெடித்தான் தெய்வா.

     “என்னடா விஷயம், எதுக்காக உன் முகம் இப்படி சிவந்து போய் இருக்கு. யார் மேல உனக்குக் கோவம்.” சரியாக யூகித்தான் நாகா.

      “இதை படிச்சுப் பாரு.” என்று தன்னுடைய செல்போனை நீட்டினான் தெய்வா. அரசு அதை வாங்கி அனைவரும் கேட்குமாறு சத்தமாகப் படித்தான்.

     “ஹாய் தெய்வா, நான் லேகா. உங்க வீட்டில் எல்லோரை விடவும் உங்களுக்கு தான் என் மேல ரொம்ப கோவம் இருக்கும். அதுக்குக் காரணம், செல்வா மேல உங்களுக்கு இருக்கிற அதிகப்படியான அன்பும், அவன் மேல உங்க அளவுக்கு யாரும் அன்பு வைக்கக் கூடாது என்கிற செல்லமான பொறாமையும் தான்னு என்னால் புரிஞ்சுக்க முடியுது. எனக்கு அதில் சந்தோஷம் தான்.

     இதுதான் என்னோட அட்ரஸ். இந்த அட்ரசஸை நீங்க மட்டும் நோட் பண்ணி வைச்சுக்கோங்க. தப்பித்தவறி அந்த பாஸ்கரால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா சாட்சிக்கு என்னைக் கூப்பிடுங்க. நான் கட்டாயம் வருவேன். என்னை நம்பலாம். உங்க அண்ணி லீலா உதவியால் நான் நல்லாவே தெளிஞ்சிட்டேன்.” என்க, பரவாயில்லை செல்வா இந்த வகையில் இவளை சரியா தான் கணிச்சிருக்கான் என்று நினைத்துக்கொண்டனர் அவன் சகோதரர்கள்.

     “இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும். இதை நான் சொல்லலாமா அதுவும் உங்ககிட்ட சொல்லலாமான்னு எனக்குத் தெரியல. அட்லீஸ்ட் செல்வாவுக்கு என்னால முடிஞ்ச சின்ன ஒரு உதவியா நினைச்சு இதைச் சொல்றேன்.” என அரசு நிறுத்த, என்னவாக இருக்கும் என்று தெய்வாவைத் தவிர்த்து மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

     “செல்வாவும், லீலாவும் இன்னமும் கணவன் மனைவியா வாழ ஆரம்பிக்கல. எனக்கும், லீலாவுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் செல்வா அவங்க மேல எவ்வளவு பாசமா இருக்கான்னு சொல்றதுக்காக தன்னையே அறியாம லீலா இதை என்கிட்ட சொல்லிட்டாங்க.

     இது எதனால, யாரால, தடையா நிக்கிதுன்னு எனக்குத் தெரியாது. லீலாவுக்கும், செல்வாவுக்கும் நடுவில் ஏதாவது பிரச்சனையான்னு லீலாவோட தங்கச்சிங்களை விட்டு கேட்டு, கொஞ்சம் சரிபண்ணுங்க.

     என்னால அவங்க இரண்டு பேருக்குள்ளும் ஏதும் பிரச்சனையா இருக்குமோன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்க, இவனை என்ன செய்யலாம் என்பது போல் முறைப்புடன் தங்கள் வீட்டு மூத்தவனைத் திட்டினர் ஆண்கள் அணி.

     “உங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. உங்களோட தாம்பத்திய வாழ்க்கை பத்தி வேறு யாராவது ஒருத்தர் பேசுறது எவ்வளவு அநாகரிகமாக இருக்கும் னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அதனால நேரடியா இதை அவங்ககிட்ட கேட்காதீங்க.

     செல்வா ரொம்ப அமைதியானவன், கூச்ச சுபாவம் உள்ளவன். எனக்குப் புரிஞ்சவரை லீலாவும் அதே மாதிரி தான். உங்க வீட்டில் இதைப் பத்தி லீலாவுக்கு எடுத்துச் சொல்றதுக்கு பெரியவங்கன்னு யாரும் இல்லை.

     கணவன், மனைவியுடனான தாம்பத்தியம் என்பது அடுத்த சந்ததிக்கான வழி மட்டும் கிடையாது. அது கணவன், மனைவி உறவை ரொம்பவே பலமாக்கும். அப்படி ஒரு பந்தம் செல்வாவுக்கு, லீலாவுக்கும் நடுவில் இருக்கணும். அது தான் எனக்கு ஆசை.

     நேத்து சாயங்காலத்திற்குப் பதில் நேத்து காலையில் எனக்கு இந்த விஷயம் தெரிய வந்து இருந்தா இந்த உலகத்திலேயே எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயமா இது தான் இருந்திருக்கும். ஆனா இப்ப நிலைமை மாறிடுச்சு.

     எனக்கு தோணுச்சு, அதனால் இதை உங்க கிட்ட சொல்லிட்டேன். இது சரியா தப்பான்னு கூட எனக்குத் தெரியாது. தப்பா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க. சரின்னு தோணுச்சுன்னா உங்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவியை அவங்களுக்கு பண்ணுங்க. செல்வா நல்லா இருக்கட்டும்.” என்று முடிந்திருந்தது லேகாவின் குறுஞ்செய்தி.

     “என்னடா இது, அந்தப் பொண்ணுக்கு அறிவு இருக்கா இல்லையா. செல்வாவுக்கும், லீலாவுக்கும் நடுவிலான விஷயத்தை லீலா இவகிட்ட சொன்னதே தப்பு. அதையும் வெட்கமே இல்லாம இவ உன்கிட்ட வேற சொல்லி இருக்கா.” என்றான் அரசு. ஆனால் மற்ற இருவரும் அமைதியாகவே இருந்தனர்.

     திருமணமான ஆண்கள் மூவருக்கும் லேகாவின் செய்தியில் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை. அவளுடைய இந்த செயலுக்குப் பின்னால் நிச்சயம் செல்வாவின் நன்மை தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர். ஆனால் பிரம்மச்சாரி அரசு மட்டும் இது கூடவே கூடாது பெரிய தப்பு என்று சீன் போட்டுக் கொண்டிருந்தான்.

     “டேய் என்னால நம்பவே முடியல டா. செல்வா இந்தளவுக்கு வெத்துவேட்டா என்ன.” என்றான் தெய்வா.

     “டேய் பைத்தியங்களா இதுல என்ன தப்பு இருக்கு. அவங்க வாழ்க்கை, அவங்க ஆசைப்பட்ட நேரத்துல ஆரம்பிச்சுட்டு போறாங்க. இதெல்லாம் ஒரு பேச்சுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்களே.” கோபித்தான் அரசு.

     “இந்த மீட்டிங்கிற்கு இவன் அவசியம் தானா?” என்று அரசுவை கைகாட்டி கேட்டான் தர்மா.

     “டேய் அரசு சொல்ற மாதிரி இது டென்ஷன் ஆகுற அளவுக்கு ஒன்னுமில்லடா. நமக்கு நல்லாவே தெரியும் செல்வா கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன். அதே மாதிரி அண்ணியும் இருந்திருக்கலாம்.

     லேகா சொன்ன மாதிரி நம்மளோட அம்மா இருந்திருந்தா, அண்ணிகிட்ட இதைப்பத்தி பேசிப் புரிய வைச்சிருப்பாங்க. ஆனா நாம என்ன பண்ண முடியும். நாம செல்வா கிட்ட வேண்ணா இதைப் பத்தி பேசலாம். ஆனா இதைப் பத்தி பேச ஆரம்பிச்ச உடனே புதுசா சடங்கான பொண்ணு மாதிரி வெட்கப்பட்டு ஓடிடுவான் அவன்.” நடக்கப் போவதை முன்பே உணர்ந்தது போல் சிரிப்புடன் சொன்னான் நாகா.

     “கரெக்ட் இவனை மாதிரி ஆளுங்களுக்கு சில அதிர்ச்சி வைத்தியம் தான் சரியா வரும். இதுவரைக்கும் அவங்களுக்கு ஒரு நல்ல சூழ்நிலை அமையாம இருந்திருக்கலாம். நம்மளால பண்ண முடிஞ்ச ஒரே உதவி, அவங்களுக்கு நல்ல ஒரு சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கலாம். மத்ததெல்லாம் அவங்க பாடு.” என்றான் தெய்வா.

     அடுத்த நாள் சௌகர்யமான நேரத்தில் தெய்வா, தர்மா, நாகா மூவரும் தங்களுடைய மனைவிமார்களிடம் இதைப் பற்றி சொல்ல அவர்கள் மூவருக்கும் பயங்கர அதிர்ச்சி.

      “தப்பு பண்ணிடோமே. எங்களோட சந்தோஷமான வாழ்க்கையைப் பத்தி அக்கா விசாரிக்கும் போது நாங்க திரும்ப அக்காவை விசாரிச்சு இருந்திருக்கணும். எங்களுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்க அவங்க இருக்காங்க. அவங்களுக்கு யாரு இருக்காங்க. இதை நாங்க யோசிக்கவே இல்லையே.

     அக்கா அக்கான்னு வாய் நிறைய நாங்க கூப்பிட்டாலும், அவங்களுக்கும் எங்க வயசு தான் ஆகுது. அப்புறம் எப்படி அவங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சு இருக்கும் னு நாங்க நினைச்சோம்.” புலம்பி தள்ளி விட்டனர் பெண்கள் மூவரும்.

     “ஏய் பைத்தியம் நடந்து முடிஞ்சதைப் பத்தி பேசுறதால எதுவும் மாறப் போறது கிடையாது. அடுத்து என்ன பண்ணலாம் னு யோசி.” ஊர்மியின் புலம்பலை தன் அதட்டலில் நிறுத்தினான் நாகா.

     “ருக்கு, எனக்கு நல்லாத் தெரியும் இந்த விஷயத்தில் தப்பு முழுக்க உங்க அக்கா மேல தான் இருக்கும். அவங்க தான் செல்வாவை தள்ளி வைச்சிருப்பாங்க.” கடுப்பாய் சொன்னான் தெய்வா.

     “இதை உங்க அண்ணன் வந்து சொன்னாரா உங்ககிட்ட. உண்மை என்னன்னு முழுசாத் தெரியாத வரைக்கும் யாரைப் பத்தியும் தப்பு சொல்லாதீங்க அப்புறம் நான் செம காண்டாகிடுவேன்.” கடுப்பாய் சொன்னாள் போலீஸ்காரன் மனைவி.

     “என்ன பண்ணலாம் ஏதாவது ஐடியா கொடுங்க. நாம அப்பா அம்மாவா ஆகிட்டோம். ஆனா என் அக்கா உங்க அண்ணன் இன்னும் வாழவே ஆரம்பிக்கல. எனக்கு ஒரு மாதிரி குற்றவுணர்வா இருக்கு.” என்றாள் தேவகி.

     “தேவகி இதில் வருத்தப்படவோ இல்ல குற்ற உணர்ச்சியா பீல் பண்றதுக்கோ ஒன்னும் இல்ல. அவங்க வாழ்க்கை வேற, நம்ம வாழ்க்கை வேற. அவங்க தாமதிச்சா அதுக்கு நாம என்ன பண்ண முடியும். நாம பண்ணது தப்பு கிடையாது. இன்னொரு முறை இப்படி யோசிச்சா எனக்குக் கோபம் வரும்.

     இது அவங்களோட வாழ்க்கை. அதை எப்ப ஆரம்பிக்கலாம் னு அவங்க தான் முடிவு பண்ணனும். மோர் ஓவர் புருஷன் பொண்டாட்டிக்குள்ள இது நடந்தா மட்டும் தான் அவங்க சந்தோஷமா இருக்காங்கன்னு அர்த்தம் இல்லையே.” என்றான் தர்மா.

     “என்னவோ சொல்றீங்க எனக்கு மனசு கேட்கவே மாட்டேங்குது.” என்றாள் தேவகி.

     அடுத்த நாள் இந்த விஷயம் அரசு மூலமாக வடிவேலுவிற்கு செல்ல, அவருக்கு இதை எந்த மாதிரி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை.

     இதற்காக தெய்வா தனியாக அழைத்து அரசுவைக் கோபித்தான். “இதுநாள் வரைக்கும் அந்த ஓல்டுமேனுக்குத் தெரியாம நான் எதையும் செஞ்சது இல்லைடா. அதனால் தான் சொல்லிட்டேன்.” என்றான் பிரம்மச்சாரி அரசு.

     “இவனைக் கூப்பிட்டே இருக்கக் கூடாது டா.” என்று தலை தலையாய் அடித்துக்கொண்டனர் ராஜ் சகோதரர்கள்.

     பிரச்சனை இல்லாமல் அவர்களாகப் பிரிந்திருந்தால் பிரச்சனை இல்லை. இல்லை வேறு எதுவும் சங்கடம் இருந்து அதைத் தீர்த்து வைக்க ஆள் இல்லாமல் இருந்தால் என்கிற யோசனையோட நாளைக் கடத்தினார் வடிவேலு.

     அந்த வீட்டில் இருந்த அனைவருக்கும் லீலாவிடமும், செல்வாவிடமும் இதைப் பற்றி பேச ஆசை. ஆனால் ஏதோ ஒரு தயக்கம் அவர்களை தடுத்தது. அதனால் அவர்களிடம் இதைப் பற்றி பேசாமலேயே ஏற்பாடு செய்வது என ஒருமனதுடன் முடிவு செய்தனர்.

     அன்றைய இரவே செல்வா மற்றும் லீலா இருவரின் கவனத்தைக் கவராமல் அவர்களுக்கான விசேஷத்திற்காக நேரம் குறிக்கப்பட்டது. முதல் விஷயமாக அவர்களுக்குச் சந்தேகம் வராத வகையில் ஒவ்வொருவராக அந்த வீட்டைவிட்டு காலி செய்தனர்.

     “லீலாம்மா நம்ம தேவகி உண்டாகி இருக்கா. அரசுக்கு கல்யாண நிச்சயம் ஆகி இருக்கு. நம்ம வீட்டில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்குது. இதே மாதிரி மத்த நல்ல விஷயங்களும் வரிசையா நடக்கணும் னு குல தெய்வம் கோவிலில் வேண்டிக்கிட்டு வரலாம் னு இருக்கோம்.

     இப்பவே கிளம்பினா தான் சரியா இருக்கும். நாளைக்கு காலையில் நாங்க திரும்ப வந்திடுவோம். அறிவோட வீட்டில் இருந்து யாராவது வந்தால் வீட்டில் ஆட்கள் இருக்கனும் இல்லையா அதுக்காக தான் நாங்க மட்டும் போறோம். இன்னொரு நாள் நம்ம எல்லாரும் சேர்ந்து போகலாம்.” கடைக்குட்டி ஜோடியுடன் கிளம்பி நின்றிருந்த வடிவேலு  இப்படிச் சொல்லவும்,

     “நான் உங்க கிட்ட இதைக் கேட்டேனா மாமா. பத்திரமா போயிட்டு வாங்க. தேவகி பத்திரம்.” என்றவள் மேற்க்கொண்டு எதுவும் சொல்லாமல் அனுப்பி வைத்தாள் லீலா.

     லேசாக கண்கள் கலங்க லீலாவை அணைத்துக் கொண்ட தேவகி, “அக்கா, நடக்க வேண்டியது எல்லாம் சரியான நேரத்தில் நடக்கிறது தான் நல்லதுன்னு நீங்க தான் எனக்கு சொன்னீங்க. அதை நீங்க மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்புறேன். நான் கோவிலுக்கு போறது உங்களுக்காக வேண்டிக்கிறதுக்காகத் தான். நான் போயிட்டு வரேன்.” என்ன முயன்றும் முடியாமல் மறைமுகமாக சொல்லிவிட்டு கிளம்பினாள் தேவகி.

     அவர்கள் சென்ற அரை மணி நேரத்தில் எல்லாம் ஊர்மியும், நாகாவும் மாதாந்திர பரிசோதனை என்கிற பெயரில் வீட்டில் இருந்து கிளம்பினர்.

     கோவிலுக்குச் செல்லலாம் என்று லீலாவைத் தயார்படுத்தி தன்னுடன் அழைத்துக் கொண்டு ருக்கு வெளியே சென்ற நேரத்தில் அவர்கள் அறையில் ஏற்பாடுகளையும் முடித்து, வேலையாட்களையும் அனுப்பி இருந்தான் தெய்வா.

     லீலா, ருக்கு திரும்ப வந்த சில நிமிடங்களில் ருக்குவை அழைத்துக்கொண்டு வெளியேற முயன்றான் தெய்வா.

     சரியாக அந்த நேரத்தில் செல்வாவும் வந்து சேர்ந்தான். “தெய்வா என்னடா ஏதோ அவசரம் னு சொல்லி என்ன இவ்வளவு வேகமா வர வைச்ச. வந்து பார்த்தா நீ உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டு ஜாலியா வெளியே கிளம்பிக்கிட்டு இருக்க.” சிரிப்புடன் கேட்டான்.

     “வீட்ல யாரும் இல்ல. அப்பா, தர்மா தேவகி, அரசு கோவிலுக்குப் போய் இருக்காங்க. ஹாஸ்பிடலுக்குப் போன நாகாவும், ஊர்மியும் வெளியே தங்கிட்டாங்க. நாங்க இரண்டு பேரும் டின்னருக்கு வெளிய போறோம். அண்ணி தனியா தானே இருப்பாங்க. அதனால் தான் உன்னை வரச் சொன்னேன். எந்த கமிட்மெண்ட்டும் வைச்சுக்காம வீட்டில் இருங்க.” என்று விட்டு அடுத்த வார்த்தை பேசாமல் அங்கிருந்து வெளியேறினான் தெய்வா.

     தெய்வா அண்ணி என்று சொன்னதைப் பார்த்து புன்னகைத்த லீலா அவர்கள் கிளம்பியதும், “என்னவோ தெரியலங்க. இன்னைக்கு இந்த வீட்டில் எல்லாமே ரொம்ப அதிசயமா நடக்குது. சொல்லி வைச்ச மாதிரி ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் வெளியே கிளம்பி போயிட்டாங்க. வேலைக்காரங்களைக் கூட காணும். இவ்வளவு பெரிய வீட்டில் நாம இரண்டு பேரு மட்டும் தான் தனியா இருக்கோம்.” என்றாள் லீலா.

     “எங்க போயிடுவாங்க. எப்படியும் இங்க தானே வந்தாகணும். எனக்கு பசிக்கிது, நான் போய் குளிச்சிட்டு வரேன் சாப்பாடு எடுத்து வை லீலா.” என்றுவிட்டு அறைக்குள் சென்றவன் அடுத்த நிமிடமே லீலா என்று கத்தி இருந்தான் ஆனந்த அதிர்ச்சியில்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
14
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஆனந்த அதிர்ச்சியா செல்வா காட்டில மழை தான்