Loading

அத்தியாயம் 117

     “இந்த பொண்ணு எப்படி இங்க?” அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அதிர்ச்சியுடன் எழுந்தான் கைலாஷ்.

     “நீங்க கைலாஷ் ரைட், சரியான நேரத்துக்கு தான் வந்திருக்கீங்க. எனக்கு, கஷ்டப்பட்டு உண்மையை சொல்ற வேலை மிச்சம். நீங்களே எல்லா உண்மையும் சொல்லிடுங்க.” என்ற லேகா, செல்வா பக்கம் திரும்பி,

     “செல்வா, எல்லா உண்மையையும் கேட்டதுக்கு அப்புறமா நீ மட்டும் தனியா என்னை வந்து பாரு. உன் தம்பிகளுக்கோ இல்ல உங்க அப்பாவுக்கோ நான் பண்ண விஷயங்கள் தெரிய வந்தா என்னை சும்மா விட மாட்டாங்க.

     என்னை மாதிரி ஒருத்தியைக் கொன்னு பழி பாவத்தை நீங்க சுமக்க வேண்டாம். நீங்க எல்லோரும் நல்லவங்க, நல்லா வாழ்றீங்க. கடைசி வரைக்கும் நல்லா வாழுங்க.” என்றுவிட்டு யாருடைய பதிலுக்கும் காத்திராமல் தான் இருந்த அறைக்குள் சென்றுவிட்டாள் லேகா.

     “கைலாஷ் உங்களுக்கு எப்படி லேகாவை தெரியும். அதோட அவ எந்த உண்மையை பத்தி பேசிட்டு போறா.” குழப்பமாய் கேட்டான் செல்வா.

     “என் மனசுல பட்டதை மறைக்காம சொல்லட்டுமா செல்வா. நீங்க சரியான முட்டாள்.” என்றான் கைலாஷ்.

     “ஹே எங்க வந்து, யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற கொன்னுடுவேன் படவா.” சீறினான் தெய்வா.

     “தெய்வா அவர் என்னைத் தானே சொன்னாரு. சில விஷயங்களில் நான் முட்டாள்தனமா நடந்திருக்கேன்னு எனக்கும் தெரியும் தான். நீ உன்னோட கொதிப்பை அடக்கி கொஞ்சம் அமைதியா இரு.” என்று தம்பியை அடக்கிவிட்டு கைலாஷ் பக்கம் திரும்பி, “ஏன் இப்படிச் சொல்றீங்க.” இதையும் அமைதியாகவே கேட்டான் செல்வா.

     “இதுக்கும் அமைதி தானா? நான் உங்களை என்ன சொல்றது. உங்களைச் சுத்தி இருக்கிற எல்லாரும் உங்களை நல்லா ஏமாத்திக்கிட்டு இருந்திருக்காங்க. அது எதுவுமே புரியாமல் இவ்வளவு வெள்ளந்தியாவா இருக்கிறது.” சொன்ன கைலாஷிற்குள் ஆதங்கம்.

     “எதுவா இருந்தாலும் கொஞ்சம் புரியுற மாதிரி நேரடியா சொல்லுங்க.” என்றான் செல்வா.

     “உங்களோட கேள்விக்கு நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி, என்னோட கேள்விக்குப் பதில் சொல்லுங்க. இப்ப வந்துட்டு போன பொண்ணுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்.” கைலாஷின் கேள்வியில் அத்தனை அழுத்தம். அது லீலாவின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் என்பது அவன் மட்டுமே அறிவான்.

     “லேகா என்னோட காலேஜ் மேட்.” என்றான் செல்வா. “கொஞ்சம் தெளிவா சொல்லுங்க. நீங்க இரண்டு பேரும் வெறும் காலேஜ் மேட் மட்டும் தானா, இல்ல பாஸ்ட் ல லவ் பண்ணிக்கிட்டு இருந்தீங்களா?” இறந்தகாலத்தை அழுத்திச் சொல்லி கேள்வி எழுப்பினான்.

     இறந்தகாலத்தோடு தொடர்புடையவர்கள் நிகழ்காலத்தில் என்ன செய்கிறார்கள் என்கிற கேள்வி தொண்டை வரை வந்துவிட்டது. ஆனால் நிறுத்திக்கொண்டான்.

     “அதெல்லாம் பழைய கதை எதுக்காக அதைப் பத்தி இப்ப பேசனும் விட்டுடுங்க.” என்ற செல்வாவிற்கு லீலாவின் முன்னால் அதை ஒப்புக்கொள்ள கூட மனம் வரவில்லை என்பது தனிக்கதை.

     “விடுபட்டு நின்ன புள்ளிகள் எல்லாம் இப்ப தான் இணையுது செல்வா. லீலாவைக் கொல்ல பாஸ்கர் நினைச்சதுக்கான காரணம், அவன் உங்ககிட்ட சொன்னது இல்லங்கிற என்னோட சந்தேகம் ஊர்ஜிதமாகிடுச்சு.” என்றவனை விநோதமாகப் பார்த்தனர் இராதா இல்லத்தின் உறுப்பினர்கள் அனைவரும்.

     “லீலா மேல் நடந்த கொலை முயற்சிக்கு திட்டம் போட்டது பாஸ்கர் என்கிற தனி ஆள் இல்லை. அவன் கூட ஒரு பொண்ணு இருக்கா அவ பெயர் லேகான்னு நான் நேத்து தான் கண்டுபிடிச்சிட்டேன். அதைச் சொல்லி உங்களை முன்னெச்சரிக்கை பண்றதுக்காக தான் நான் இங்க வந்தது.

     அவங்க இந்த நாசவேலையை செய்ய நினைச்சதுக்கான காரணம் எனக்குப் போன நிமிஷம் வரைக்கும் தெரியாமலே இருந்துச்சு. இப்ப தான் உண்மையான காரணம் எனக்குத் தெரிய வந்து இருக்கு.” என்றான்.

     “லேகாவும், பாஸ்கரும் ஒன்னா சேர்ந்து லீலாவைக் கொலை பண்ண முயற்சி பண்ணாங்களா?” தன் காதுகள் சரியாகத் தான் செயல்படுகின்றவனா என்று நம்ப முடியாத பாவனையில் நின்றான் செல்வா.

     “பாஸ்கர் அவன் காதலிக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு தடையா இருக்கிறது லேகா. லேகாவை யாருக்காவது கல்யாணம் பண்ணி வைச்சிட நினைக்கும் போது, லேகா அவ ஏற்கனவே காதலிச்ச உங்களைக் கை நீட்டி இருப்பா.

     அவ உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு தடையாக இருக்கிறது உங்க பொண்டாட்டி லீலா. அந்த வகையில் பாஸ்கர், லேகான்னு இரண்டு பேருக்கும் பொது எதிரி லீலா.

     அவளைக் கொன்னுட்டா இரண்டு பேரோட வாழ்க்கையும் சரியாகிடும் னு நினைச்சு இருக்காங்க. அதனால தான் இரண்டு மூணு தடவை லீலாவைக் கொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க.” யாரும் அறியாத புதுத்தகவல் ஒன்றைச் சொன்னான் கைலாஷ்.

     “பாஸ்கர் அவன் ஆசைப்பட்ட பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு லேகா தடையா இருந்தாளா இது என்ன புது கதை.” செல்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

     “லேகா தான் பாஸ்கருக்கு ப்ராப்பரா டிவோர்ஸ் கொடுக்கலையே. அப்புறம் எப்படி அவன் இன்னொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க முடியும்.” சாதாரணம் போல் பெரிய விஷயத்தை அவ்விடம் உடைத்திருந்தான் கைலாஷ்.

     “கைலாஷ் என்ன சொல்றீங்க. லேகா பாஸ்கரோட மனைவியா?” அதிர்ச்சியில் எழுந்து நின்றான் செல்வா.

     கைலாஷ் முகத்தில் அப்பட்டமான அதிருப்தி. “என்ன செல்வா இப்படி இருக்கீங்க. இவ்வளவு நாளா லேகாகூட பழகி இருக்கீங்க. அவளோட ஹஸ்பெண்ட் யாருன்னு கூடவா தெரியாது.

     இன்னொரு பக்கம் அந்த பாஸ்கர். அவன் கூடவும் பழகி இருக்கீங்க. ஆனால் அவன் ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி ஏமாத்தினது தெரியாதா?” ஆதங்கமாக வந்தது கைலாஷின் வார்த்தைகள்.

     “அவனுக்குத் தெரியாது கைலாஷ். அவனுக்கு மட்டுமில்ல இங்க இருக்கிற யாருக்குமே பாஸ்கர் தான் என்னோட ஹஸ்பண்ட் னு தெரியாது.

     அவ்வளவு ஏன் பாஸ்கர் கல்யாணம் பண்ணிக்க போற அந்த பொண்ணுக்குக் கூட நான் தான் அவனோட பர்ஸ்ட் வொய்ப்ன்னு தெரியாது.” என்றவாறு தன் உடமைகளுடன் வெளியே வந்தாள் லேகா.

     அங்கிருந்த அனைவருக்கும் உச்சகட்ட அதிர்ச்சி என்றால், செல்வாவோ எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தான். பெருமூச்சு விட்ட லேகா நேரே செல்வாவின் முன்னே வந்தாள்.

     “என்னை மன்னிச்சிடு செல்வா. நான் உனக்கு மறுபடியும் நம்பிக்கை துரோகம் பண்ணப்பார்த்தேன்.” என்க, கண்களை அழுந்த மூடித்திறந்தான் செல்வா.

     “நாம படிக்கும் போது நீயும், பாஸ்கரும் நல்ல க்ளோஸ். ஆனா நான் அவன்கூட தேவைக்கு அதிகமா பேசினது இல்லை. உன் மூலமா என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டவன், நம்ம படிச்சு முடிச்சதும் ஒருநாள் என்கிட்ட தனியா பேச வந்தான்.

     என்னோட வெளிநாட்டு கனவை அடிப்படையா வைச்சு பேசினான். உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அது காலத்துக்கும் கனவா மட்டும் தான் இருக்கும் னு என் மூளையைச் சலவை பண்ணான். என் நேரம் நானும் அவன் பேச்சில் குழம்பிட்டேன்.” என்க, கண்ணை மூடித்திறந்தான் செல்வா.

     “உன்கிட்ட அதைப் பத்தி பேசினேன். நமக்குள்ள சண்டை வந்தது. இடைவெளி வந்தது. அதை அவன் சாதகமாப் பயன்படுத்திக்கிட்டான். பேசி பேசியே என்னை உன்னை விட்டு மொத்தமா விலக்கிட்டான். இதில் முழுத்தப்பும் அவனோடது மட்டும் தான்னு நான் சொல்ல மாட்டேன். அவன் மனசைக் கலைச்சாலும் கலங்கிப் போனது என்னோட தப்பு தான்.” என்ற லேகா கண்களை அழுந்த மூடித்திறந்து விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள்.

     “அந்த நேரம் அவன் மேற்படிப்புக்காக வெளிநாடு போறதா திட்டம் இருந்தது. என்னை அவனோட படிக்க கூப்பிட்டான். நானும் போனேன். சில மாசங்கள் போச்சு. திடீர்னு ஒருநாள் என்கிட்ட வந்து, ரொம்ப வருஷமா அவன் என்னைக் காதலிப்பதாவும், நானும் நீயும் பழகியதைப் பார்த்து அவன் ரொம்ப வேதனைப்பட்டதாவும் சொன்னான். அதை நானும் நம்பிட்டேன் என்பது தான் வேதனை.”

     “கல்யாணம் முடிஞ்சதும் அந்த நாட்டிலேயே செட்டில் ஆகுறதா திட்டம் னு சொல்லி என்னை மொத்தமா அவன் வலையில் வீழ்த்திட்டான்.

     நானும் ஒத்துக்கிட்டேன். கல்யாணம் முடிஞ்சு, அவன் கேட்ட வரதட்சணை அவனுக்குக் கிடைச்சது. என்னோட பெயரில் இருந்த சில சொத்துக்களை கூட அப்பா அவன் பேருக்கு மாத்திக்கொடுத்தார்.”

      “அதுக்கு அப்புறம் தான் அவன் சுயரூபம் தெரிஞ்சது. அவன் தங்கச்சி பிரச்சனையை சமாளிக்க அவன் குடும்பத்துக்கு நிறைய பணம் தேவை.

      நிறைய பணம் இலவசமா கிடைக்க ஒரே வழி கல்யாணம் தானே. அவன் காதலிக்கிற பொண்ணுகிட்ட அவ்வளவு பணம் இல்லை. அதனால் அவன் குடும்பம் மொத்தமும் சேர்த்து போட்ட திட்டம் தான் எங்க கல்யாணம்.” என்க, செல்வாவிற்கு கண்கள் கலங்கிவிட்டது.

     “சும்மா பெயரளவில் கூட என்னை அவன் பொண்டாட்டின்னு கூட வைச்சிருக்க பிடிக்கலையாம். அது அவன் காதலிக்கிற பொண்ணுக்கு செய்யுற துரோகமாம். அவனே ஒருநாள் எல்லா உண்மையையும் சொன்னான்.” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அதைத் துடைத்துக்கொண்டு தொடர்ந்தாள்.

     “அந்த நேரம் எனக்குத் தெரிஞ்ச பணக்கார பொண்ணு யாரும் இல்லை. அதனால் தான் இப்படிப் பண்ணிட்டேன். நீ செல்வாகிட்ட போ. அவன் உன்னைக் கல்யாணம் பண்ணிப்பான். இரண்டு பேருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்காதுன்னு சொன்னான்.” என்க, செல்வா மற்றும் அவன் சகோதரர்களுக்கு அத்தனை ஆத்திரம் பாஸ்கர் மீது.

     “நீ நம்பினா நம்பு செல்வா. நான் ஆரம்பத்தில் அவன் சொன்ன எதுக்கும் ஒத்துப் போகல. பிரச்சனை பண்ணேன். ஒன்னு நடந்ததை மறந்து என்கூட நல்லபடியா வாழு. இல்ல என் மூலமா உனக்கு கிடைச்ச பணம் மொத்தத்தையும் எனக்குத் திருப்பிக்கொடுன்னு கேட்டேன். என் அப்பா அம்மாவை வரவழைச்சு, என் மேல் தப்பான பழி சொல்லி என்னை இந்தியா அனுப்பி வைச்சான்.

     அவனும் பின்னாடியே வந்தான். என்னை சமாதானப்படுத்தி கூட்டிட்டு போகத் தான் வந்தான்னு நினைச்சா, அவன் காதலிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக என்கிட்ட டிவோர்ஸ் கேட்டு வந்தான். நிறைய பேச்சுவார்த்தை சண்டை சமாதானம் நடந்துச்சு கடைசியா ஒரு வார்த்தை சொன்னான்.” என்று நிறுத்தினாள் லேகா.

     “என்கிட்ட இருந்து பணத்தை திரும்ப வாங்குறது நடக்காத காரியம். ஏன்னா அவ்ளோ பணம் என்கிட்ட இல்ல. என்னை வாழ விடமாட்டேன்னு நீ நின்னா அதனால் வாழாமப் போறது நீயும் தான். நான் வாழ்ந்தா அது என்னோட காதலி கூட தான்னு உறுதியா சொல்லிட்டான்.

     என்னால அதுக்கு மேல அவன் கிட்ட கெஞ்ச முடியல. ஒரு மாதிரி அசிங்கமா இருந்துச்சு. என்ன செய்யுறதுன்னு தெரியாம பைத்தியம் பிடிக்காத குறையா நான் சுத்திக்கிட்டு இருந்த நேரத்தில் தான் எனக்குக்குள்ள தப்பான எண்ணங்களை விதைச்சான்.

     ‘உன் சாபத்தோட நான் என்னோட கனவு வாழ்க்கையை வாழ விரும்பல. நான் எப்பாடு பட்டாவது செல்வாவுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நீயும் சந்தோஷமா இரு. நானும் சந்தோஷமா இருக்கேன். இரண்டு பேரும் அவரவர் பாதையில் போகலாம் னு’ சொன்னான்.

     சத்தியமா சொல்றேன் அந்த நிமிஷம் வரைக்கும் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு எனக்குத் தெரியாது.” என்க, அவளை நம்ப இராதா இல்லத்தில் ஆள் இல்லை.

     “நீ ரொம்ப நல்லவன் செல்வா. ஆனா நான் அந்தளவு நல்லவ இல்ல. என்னை நீ ரொம்ப நம்பின. ஆனா சுயநலமான என்னோட ஆசைக்காக உன்னை விட்டுட்டு அந்த பாஸ்கர் பின்னாடி போனேன்.

     உன்னை ஏமாத்தின குற்றவுணர்ச்சி உள்ளுக்குள் இருந்தாலும், பாஸ்கருக்கு நான் உண்மையா இருக்கத் தான் ஆசைப்பட்டேன். ஆனா அவன் தான் எனக்கு உண்மையா இல்லை.

     இனிமேல் எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு சொல்லி அழுதப்ப உன்னைப் பத்தி சொல்லி சொல்லி பேராசையை எனக்குள்ள வளர்த்தான்.

     உனக்கு கல்யாணம் ஆன விஷயம் தெரிய வந்தப்ப எல்லாத்தையும் விட்டுட சொல்லி பாஸ்கர் கிட்ட சொன்னேன். ஆனா அவன் கேட்கல. என்னை எப்படி எப்படியோ பேசி சமாளிச்சு என் வாயாலே லீலாவைக் கொன்னுடலாம் னு சொல்ல வைச்சான்.” என்க, அவளை நோக்கி செல்ல முயன்ற நாகாவை சிரமப்பட்டு பிடித்து வைத்தான் தெய்வா.

     “அந்த நேரத்தில் தான் அடிபட்டு நான் ஹாஸ்பிட்டலில் வந்து சேர்ந்தேன். உன்னை மறுபடியும் பார்த்தப்ப உயிர் போகுற அந்த நிலைமையில் கூட எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

     அவன் சொன்ன பொய்யான பழியை நம்பி என்னோட அப்பா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அதனால் என்னோட அம்மாவுக்கு கூட என்னைப் பிடிக்காம போயிடுச்சு. அடிபட்டு வாழ்வா சாவான்னு கிடந்த நிலையில்  என்னைக் கைவிட்டுட்டு போய்ட்டாங்க.

     ஆனா நீ நான் செஞ்ச எல்லாத் தப்புகளையும் மறந்து எனக்கு ஆதரவாக இருந்த. சந்தோஷத்துக்கும், நிம்மதிக்கும், அன்பான வார்த்தைகளுக்கும், அன்பானவரின் அரவணைப்புக்கும் ஏங்கிக்கிட்டு இருந்த என்னால உன்னை விட்டுப் போக முடியல செல்வா.

     உன்கூட இருந்தா தான் நான் சந்தோஷமாக இருப்பேன்னு எனக்குத் தோண ஆரம்பிச்சது. சந்தோஷத்துக்கு ஏங்கின நான் சுயநலமா இன்னொருத்தங்களோட சந்தோஷத்தைப் பறிக்க முடிவெடுத்துட்டேன்.

      அதனால் இந்த முறை நானே பாஸ்கர் கிட்ட பேசினேன். லீலாவை உன்னோட வாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்திட்டா அதுக்கு அப்புறம் ரொம்ப சுலபமா நான் உள்ள வந்திடலாம் னு நினைச்சேன்.

     உன்னைத் திரும்பவும் எனக்குச் சொந்தமாக்க என்ன வேண்ணாலும் செய்யலாம் என்கிற ஒரு முடிவோட தான் இந்த வீட்டுக்குள்ள வந்தேன்.” லேகா சொல்லிக் கொண்டே போக லீலாவின் பிடியையும் தாண்டி வந்து அவளை ஒரு அறை விட்டாள் ஊர்மி.

     போடு இன்னும் நாலு சேர்த்து போடு என்பது தான் அங்கிருந்த ஆண்கள் அத்தனை பேரின் மன வார்த்தையாக இருந்தது.

     “கிராதகி என்ன வேலை பார்த்து இருக்க. என் அக்கா அப்படி உனக்கு என்ன பாவம் பண்ணாங்கன்னு அவங்களை கொல்ல நினைச்சிருக்க. அதோட என்ன தைரியம் இருந்தா அதை எங்க எல்லார் முன்னாடியும் கொஞ்சம் கூட பயமே இல்லாம சொல்லிக்கிட்டு இருப்ப.

     இவங்க நம்மளை என்ன பண்ணிடுவாங்க என்கிற குருட்டு தைரியமா. இங்க இருக்கிற யாரும் வேண்டாம். நான் ஒருத்தி போதும் உன்னை அடிச்சு சாவடிச்சிடுவேன்.” சொன்ன ஊர்மியை நோக்கி கண்டன குரல் ஒன்று வந்தது.

     “ஊர்மி உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் தேவையில்லாத இடத்துல கோபப்படாதன்னு.” கண்டிப்புடன் தங்கையை தன்பக்கம் இழுத்து வந்தாள் லீலா.

     “ஊர்மியை எதுக்காக தடுக்குறீங்க அண்ணி. பொண்ணாப் போயிட்டா இல்லன்னா ஊர்மி செய்த வேலையை நான் செஞ்சிருப்பேன்.” கோபமாய் சொன்னான் நாகா.

     “இப்ப உங்களுக்குத் தெரிய வந்த எல்லா விஷயமும் நேத்தே எனக்குத் தெரிய வந்திடுச்சு. எல்லாம் தெரிஞ்சும் நான் அமைதியா தானே இருக்கேன். நீங்களும் அப்படியே இருங்க.” என்று சொல்லி செல்வா முதற்கொண்டு அங்கிருந்த அனைவரையும் அதிர வைத்தாள் லீலா.

     “லீலா” என்கிற அழைப்புடன் செல்வா அருகே வர, லீலாவுக்குப் பதிலாக லேகாவிடம் இருந்து பதில் கிடைத்தது செல்வாவிற்கு.

     “நேத்து ராத்திரி டைனிங் டேபிளில் நடந்த விஷயங்களால மனசு உடைஞ்சு போன நிலையில் நான் இருந்தேன். அப்ப லீலா என்கிட்ட வந்து பேசினாங்க.

     நான் இந்த வீட்டுக்கு வந்த காரணத்தை தெரிஞ்சிக்கிட்டதாவும், அது எந்த ஜென்மத்திலும் எத்தனை முறை முயற்சி பண்ணாலும் நடக்கவே நடக்காதுன்னு எனக்குப் புரிய வைச்சாங்க.

     நான் ஏற்கனவே அதைக் கொஞ்சம் உணர்ந்திருந்தேன். லீலா சொன்னதும் என்னோட எல்லாத் தப்புகளையும் உணர்ந்தேன். நான் ஒன்னும் இயல்பிலேயே கெட்டவ இல்லையே. என்னோட பேராசைக்காக சுயநலமா யோசிச்சு தப்பான முடிவெடுத்து தப்பான சகவாசம் வைச்சதால் தான் இன்னைக்கு இப்படி மொத்தமா மதிப்பிழந்து போய் நிக்கிறேன்.

     நானும், லீலாவும் மனசு விட்டுப் பேசினோம். நான் யாரு இதுவரைக்கும் என்னவெல்லாம் பண்ணி இருக்கேன்னு சொன்னேன். அவங்களுக்கும் பயங்கர அதிர்ச்சி தான். ஆனா என்மேல கோவப்படல. என்னை நினைச்சு பரிதாபப்பட்டாங்க.” என்க, தங்கைகளின் கோபப்பார்வை தமக்கை மேல் விழுந்தது.

     ‘நீங்க பண்ண விஷயங்கள் இந்த வீட்டில் இருக்கிற யாருக்கும், குறிப்பா சொல்லப் போனா என்னோட தங்கச்சிங்களுக்கு தெரியக்கூடாது. தெரிஞ்சா உங்களை ரொம்பக் கஷ்டப் படுத்துவாங்க.

     அதனால என்னைத் தப்பா எடுத்துக்காம நாளைக்கு காலையிலே இங்க இருந்து கிளம்பிப் போயிடுங்க. உங்க வாழ்க்கையை சந்தோஷமா, நிம்மதியா வாழப் பாருங்க. நடந்த, நடக்கிற எல்லாத்துக்கும் பின்னாடி ஒரு காரணம் நிச்சயம் இருக்கும் னு‘ என்கிட்ட சொன்னாங்க.

     “எனக்கும் அது தான் சரின்னு பட்டது. இத்தனை வருஷம் கழிச்சு உன்னை பார்த்து, இத்தனை நாள் உன் கூட பழகி, இப்ப இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் மறுபடியும் உன்னோட மனசை உடைச்சு உன்கிட்ட கெட்ட பெயரோட உன் வாழ்க்கையை விட்டுப் போகனுமான்னு தோணுச்சு.

     ஆனா அதுவும் நான் உனக்குப் பண்ண பாவமாத் தானே தெரியும். அதனால் நீ என்னை எத்தனை கேவலமா நினைச்சாலும் பரவாயில்லை. உன்கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்லிட முடிவு பண்ணி தான் நான் கிளம்பி வந்தேன். ஆனா விதி கைலாஷ் மூலமா என்னோட எல்லா விஷயத்தையும் வெளியே கொண்டு வந்திடுச்சு.”

     “இந்த வீட்டுக்கு வரும் போது என்னோட மனசுக்குள்ள எந்த மாதிரியான எண்ணங்கள் வேண்ணாலும் இருந்து இருக்கலாம். ஆனால் இப்போ இந்த நிமிஷம் நான் சொல்றேன் செல்வா. இனி நான் எப்பவும் உன் முன்னாடி வர மாட்டேன். பாஸ்கரும் வரமாட்டான்.

     உன்னைக் கொல்லப் பார்த்தது, லீலாவைக் கொல்லப் பார்த்தது, உன் தம்பியைக் கொல்லப் பார்த்ததுன்னு எத்தனை கேஸ் போட்டாலும் அவன் அவனோட சொந்தக் கார லேடி அரசியல்வாதி மூலமா வெளியே வந்துக்கிட்டே தான் இருப்பான். அதுக்காக அவனை ஏதாவது பண்றேன்னு நீங்க பிரச்சனையில் மாட்டிக்காதீங்க.

     அவனுக்குத் தேவையான கையெழுத்தை நான் போட்டுக் கொடுத்திட்டேன். இனி அவன் என்கிட்ட இருந்தும், உன்கிட்ட இருந்தும் மொத்தமா ஒதுங்கிப்பான். அவன் காதலிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடுவான்.

     அவனுக்கான தண்டனையை நான் கடவுள்கிட்ட கொடுத்திட்டேன். அவர் பார்த்துப்பார் அவனை.” என்க, செல்வாவிற்கு சொல்ல முடியாத அளவு வலி.

     காதல் அது என்றோ தோற்றுப் போனது தான். ஆனால் நட்பு என்ற ஒன்று புதிதாய் இருக்கிறது என்று நினைத்திருந்தான். அதுவும் தோற்றுப் போனதே என்கிற வலி இரணமாக பாதித்தது மனதை.

     “நான் என்னோட வாழ்க்கையைத் தேடி போறேன். கஷ்டமோ, சந்தோஷமோ எதுவா இருந்தாலும் நான் தனியா சமாளிச்சுக்குவேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.

     உன்னையும், லீலாவையும் பிரிக்கிறதுக்கு எந்த ஒரு முயற்சியும் நான் பண்றதுக்கு முன்னாடியே எனக்கு நல்ல புத்தி வந்துடுச்சு. இல்லைன்னா ஒரு நல்ல ஜோடியை பிரிச்ச பாவம் என் தலை மேல விழுந்திருக்கும்.

     என்னைப் பத்திக் கவலை படாதே. இப்ப இருக்கிற காலகட்டத்துல தனியா இருக்குற பொண்ணுங்க தான் நிறைய சாதிக்கிறாங்க. கண்டிப்பா நானும் ஏதாவது ஒன்னு சாதிப்பேன்.

     நான் பண்ண எல்லாத்துக்கும் சேர்த்து முடிஞ்சா என்னை மன்னிச்சுடுங்க. ஆனா கண்டிப்பா என்னை மறந்துடுங்க. என்ன மாதிரி ஒருத்தியோடநினைவுகள் கூட உங்க யார்கிட்டையும் இருக்க வேண்டாம் நான் போறேன்.” என்றுவிட்டு அந்த வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்னரே அங்கிருந்து கிளம்பி இருந்தாள் லேகா.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. லேகா திருந்துவான்னு சத்தியமா நினைக்கல . பாஸ்கர் தான் இந்த கதையோட மெயின் வில்லன்