Loading

அத்தியாயம் 114

     அறிவரசியின் வீட்டில் என்ன நடந்ததோ, சம்பந்தம் பேசச் சென்ற இராத இல்ல உறுப்பினர்கள் அனைவரும் மிக ஆர்ப்பாட்டத்துடன் வீடு திரும்பினர்.

     “எல்லாரும் உண்மையைத் தான் சொல்றீங்களா? நிஜமாவே அறிவோட வீட்டில் எல்லாரும் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்களா.” ஆச்சரியத்துடன் கேட்டான் அரசு.

    “இரு இரு அது என்ன அறிவு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளான்னு கேட்காம, அவங்களோட குடும்பத்தில் இருக்கிறவங்க ஒத்துக்கிட்டாங்களான்னு கேட்கிற. அறிவு எப்படியும் ஒத்துப்பாங்கன்னு பயங்கர நம்பிக்கையோ.” கிண்டலாய் கேட்டான் தெய்வா.

     “இவன் ஒருத்தன், சும்மா இருடா. அங்கிள் நீங்க சொல்லுங்க நிஜமாவே அவங்க வீட்டில் எல்லோரும் ஒத்துக்கிட்டாங்களா?” பரபரப்பாய் கேட்டான் அரசு.

     “ஏன்டா இவ்வளவு சந்தேகமா கேட்கிற. நிஜமாவே அவங்க சம்மதிச்சுட்டாங்க. இனிமே உனக்கு கால் கட்டு போட வேண்டியது தான் பாக்கி.” வடிவேலு சொன்ன பிறகே முழுதாய் நம்பிக்கை பிறந்தது அரசுவிற்கு.

     அதே நேரத்தில் சரியாக அரசுவின் போன் அடிக்க, “அரசு போன் அடிக்கிது பாரு. கண்டிப்பா உன் ஆளாத் தான் இருக்கும். தனியா போய் பேசு.

     பேசு, பேசு, பேசிக்கிட்டே இரு. கல்யாணம் முடியுற வரைக்கும் தாராளமாக பேசலாம். அதுக்கு அப்புறம் நீ பேசவே முடியாது ஒன்லி கேட்க மட்டும் தான் முடியும்.” என்றான் நாகா.

     “போடா லூசு.” என்றுவிட்டு சிரித்துக்கொண்டே மாடி ஏறி ஓடினான் அரசு.

     “பசங்களா நான் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்குல்ல. தெரிஞ்சோ தெரியாமலோ பொண்ணு வீட்டுக்காரங்களும் நாமளும் பேசிக்கிட்டதை அரசுகிட்ட சொல்லிடாதீங்க.

     அவன் அவனுக்காக சந்தோஷப்பட்டு நான் இப்ப தான் பார்க்கிறேன். இந்த சந்தோஷம் அவனோட ஆயுள் முழுக்க நிலைக்கணும். அதுக்கு அந்தப் பொண்ணு அறிவு அவனுக்கு பொண்டாட்டியா கிடைக்கணும்.” அழுத்தம் திருத்தமாய் சொன்னார் வடிவேலு.

     “ஆமா, அவன் ரொம்ப பெரிய ரோஷக்காரன். நாம பேசிட்டு வந்த விஷயம் மட்டும் அவனுக்குத் தெரிய வந்தா, இந்தக் கல்யாணமே வேண்டாம் னு சொன்னாலும் சொல்லுவான். அதனால் லேடீஸ் நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.” என்றான் செல்வா.

     “இவங்க பேசுறதைப் பார்த்தா ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மறைக்கிறாங்க போலவே. இப்படி பயந்து மறைச்சு கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கு அந்த அரசு இந்த குடும்பத்துக்கு ரொம்ப முக்கியமானவனா என்ன.

     எது எப்படியோ நாம நம்மளோட ரூமை கீழே மாத்திக்கிட்டதுக்கு நமக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு. இந்தக் குடும்பத்தோட இரகசியங்கள் ஒவ்வொன்னா நமக்கு தெரிய வரும். இது எல்லாமே ஒரு நாள் இல்லை ஒரு நாள் நமக்கு கண்டிப்பா யூஸ் ஆகும்.” என்று நினைத்துக் கொண்டாள் லேகா

     அடுத்த நாள் காலை லேகாவுடன் ஹாஸ்பிடல் கிளம்பிக் கொண்டிருந்த செல்வாவைத் தடுத்து நிறுத்தினார் வடிவேலு.

     “செல்வா இந்தப் பொண்ணுக்கு நீ செய்யுறதா சொன்ன எல்லா வேலையையும் இன்னைக்கே முடிச்சிடு. இன்னையில் இருந்து பதினைஞ்சு நாளில் அரசுவோட கல்யாணத்தை குறிச்சிருக்கோம். நாள் ரொம்பக் கம்மி.

     இந்தக் காலத்தில் பொண்ணு, பையன் கிடைக்கிறது கூட சுலபமா இருக்கு. ஆனா கல்யாண மண்டபம் கிடைக்கிறது, அதைத் தொடர்ந்த வேலைகளுக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பா இருக்கு. என்னால இந்த வயசுல ஓடியாடி எந்த வேலையும் செய்ய முடியாது.

     எனக்குப் பதில் என்னோட இடத்தில் இருந்து என் மூத்த மகன் நீ அரசுவுக்காக இதைப் பண்ணனும்.” கட்டளையாய் சொன்னார் வடிவேலு. அவர் சொன்னதில் அரசுவுக்காக செல்வா இதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை விட, லேகாவை விரைவாக வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்ற  வார்த்தைகள் தான் அழுத்தமாய் விழுந்தது செல்வாவின் காதுகளில்.

     “அப்பா இதை எனக்கு நீங்க சொல்லணுமா என்ன. அவன் நம்ம வீட்டுப் பையன். அவனுக்கு நான் பண்ணாம வேற யாரு பண்ணுவா. நான் லேகாவை பத்திரமான இடத்தில் சேர்த்துட்டு வந்திடுறேன்.” செல்வா சொல்ல லேகாவிற்கு உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது.

     “எவ்வளவு திட்டம் போட்டு இந்த வீட்டுக்குள்ள வந்தேன். அது எல்லாம் இரண்டே நாளில் இங்க இருந்து போறதுக்கு தானா. நெவர் இந்தக் கல்யாணத்தை ஒரு சாக்கா வைச்சு இன்னும் பதினைந்து நாள் இந்த வீட்டை விட்டு நான் போக மாட்டேன்.” என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் லேகா.

     அரசும், அறிவும் ஒரு பக்கம் போனில் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்க, செல்வாவை எப்படியாவது தன்னுடைய கைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தாள் லேகா.

     அன்றைய மாலை வேளையில், “டேய் செல்வா நீ உன் மனசில் என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்க. அப்பா காலையிலேயே சொன்னாரே அந்தப் பொண்ணை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்திடுன்னு. நீ மறுபடியும் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கன்னா என்ன அர்த்தம்.” காட்டமாய் கேட்டான் தெய்வா.

     “நான் எல்லாத்தையும் திட்டம் போட்டு பண்ற மாதிரி பேசாத தெய்வா. ஹாஸ்பிடலில் வேலை ரொம்ப சீக்கிரம் முடிஞ்சிடுச்சு. ஆனால் சொல்லி வைச்ச புரோக்கர் மூலமா பார்த்த வீடு எதுவுமே லேகாவுக்குப் பிடிக்கல.

     தனியா வாழப் போற ஒரு பொண்ணு. அவளுக்கு பிடிக்காத வீட்டில் அவளை எப்படிடா கொண்டு போய் விட சொல்ற.” நியாயமாய் தான் பேசினான் செல்வா.

     “அது சரி நீ இப்படி அந்த பொண்ணுக்கு வீடு பார்க்கிறேன், வீடு பார்க்கிறேன்னு அவளோடவே சுத்திக்கிட்டு இரு. அரசுவோட கல்யாண வேலையை நாங்க மூணு பேரும் தனியா பார்த்திடுவோம் உனக்கு சம்மதமா.” வம்பிழுத்தான்.

     “கொன்னுடுவேன் ராஸ்கல்ஸ். நான் இல்லாம நீங்க மூணு பேரும் சின்ன துரும்பைக் கூட அசைக்க கூடாது. அரசுவோட கல்யாண வேலையை நாம நாலு பேரும் சேர்ந்து தான் பார்க்கனும்.” விடாப்பிடியாக நின்றான் செல்வா.

     “சரி நான் இப்போ ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு உன் மனசைத் தொட்டு உண்மையா பதில் சொல்லு. நாளைக்கு நீ வீடு பார்க்க போற, நாளைக்கும் அந்த பொண்ணுக்கு எதுவும் பிடிக்கலைனா என்ன பண்ணுவ.” என்றான் அப்பொழுது தான் அவ்விடம் வந்த நாகா.

     “என்ன பண்ண முடியும். அதுக்கு அப்புறமும் அவ கூட நான் அலைஞ்சிக்கிட்டு இருந்தா, அரசுவோட கல்யாண வேலை பாதிக்கும். அதனால அரசுவோட கல்யாணம் முடியுற வரைக்கும் லேகாவை இங்கேயே இருக்க சொல்லிட வேண்டியது தான்.” செல்வா சாதாரணம் போல் சொல்ல தெய்வா, நாகா இருவரும் பல்லைக் கடித்தனர்.

     தனக்காகக் கொடுக்கப்பட்ட அறையின் மெத்தையில் படுத்து விட்டத்தைப் பார்த்தவண்ணம், “நான் வீடு பிடிக்கலன்னு சொல்ற வரைக்கும் செல்வா என்னைக் கட்டாயப்படுத்தி ஏதாவது ஒரு வீட்டில் தங்க வைக்க மாட்டான்.

     அதோட கல்யாண வேலை பார்க்கிறதுக்காக இதுக்கு மேல அவனால என் கூட வெளியே வரவும் முடியாது. அதனால் இதையே ஒரு சாக்கா வைச்சு, இந்த கல்யாணம் முடியுற வரைக்கும் நான் இந்த வீட்டில் டேரா போட்டுடுவேன். என்னோட இந்த முதல் திட்டத்தில் வெற்றி அடைஞ்சாலே என்னோட நோக்கத்தில் கால்வாசி நிறைவேறின மாதிரி தான்.

     பதினைந்து நாள் ரொம்ப பெரிய வாய்ப்பு. செல்வாவுக்கு சரியான ஜோடி லீலா இல்ல நான் தான்னு என்னால் அவனுக்குப் புரிய வைக்க முடியும்.” என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள் லேகா.

     லீலா துணிகளை துவைத்துக்கொண்டிருக்க அதை அலசி காயப்போட்ட படி, “அக்கா அந்தப் பொண்ணை நம்ம வீட்டில் தங்க வைக்கிறதா நீங்க எடுத்த முடிவு சரிதான்னு நினைக்கிறீங்களா?” மற்ற இரண்டு தங்கைகளும் கேட்கத் தயங்கிய கேள்வியை ருக்கு கேட்டே விட்டாள்.

     “இங்க பாருங்க நான் அன்னைக்கே தெளிவா சொல்லிட்டேன். அந்தப் பொண்ணு பாவம். எந்த ஒரு உறவும் இல்லாம இருக்கா. அவளுக்கு இது நம்ம பண்ற ஒரு சின்ன உதவி அவ்வளவு தான்.

     உங்க மாமா அவளுக்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடு பண்ணி கொடுத்ததுக்கு அப்புறம் அவ எதுக்கு இந்த வீட்டில் இருக்கப் போறா.” சாதாரணமாய் லீலா கேட்க, மற்றவர்களுக்கு இது அவ்வளவாக பிடிக்கவில்லை.

     “நீங்க தான் அக்கா இப்படி சொல்லிக்கிட்டு இருக்கீங்க. அந்தப் பொண்ணப் பார்த்தா நம்ம வீட்டிலிருந்து போறவ மாதிரி தெரியல.” பல்லைக் கடித்துக்கொண்டே சொன்னாள் வேலை செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த  ஊர்மி.

     “சரியா சொல்ற ஊர்மி. அண்ணி நானே இதைப் பத்தி உங்ககிட்ட பேசனும் னு நினைச்சுகிட்டு இருந்தேன். செல்வா பண்றது எதுவுமே சரியில்லை. அரசுவோட கல்யாணம் முடியுற வரைக்கும் லேகா இங்கேயே இருக்கட்டும் னு சொல்றான்.

     இதில் அவன் மேல தப்பு இல்ல. அவன் பேச்சு எல்லாம் வெளிப்படையா தான் இருக்கு. ஆனா அந்தப் பொண்ணு தான் உள்ள ஒன்னு வைச்சு வெளியே ஒன்னு பேசுற மாதிரி இருக்கு. எனக்கு சரியா சொல்லத் தெரியல ஆனா அவ கிட்ட ஏதோ ஒன்னு சரியில்லை.” உறுதியாய் சொன்னான் மனைவியைத் தேடி வந்த நாகா.

     “ஆமா மாமா, நீங்க சொல்றது தான் சரி. நானும் கவனிச்சேன், அந்தப் பொண்ணோட முழியே சரியில்லை. எப்ப பாத்தாலும் செல்வா மாமாவையே உத்து உத்து பார்த்துக்கிட்டு இருக்கா. அவ கண்ணுல கொள்ளிக்கட்டையை எடுத்து வைக்க.” என்றாள் தேவகி.

     இவர்கள் சொல்வது அனைத்தும் லேசாக மனதை உறுத்தினாலும், அவர்கள் முன்னால் தன்னுடைய கணவனை விட்டுக் கொடுக்க மனம் வராமல், “இங்க பாருங்க நீங்க என்னென்னவோ சொல்றீங்க. ஆனா எனக்கு என் புருஷன் மேல நம்பிக்கை இருக்கு.

     இந்த விஷயத்தில் நான் அவர் மேல் நம்பிக்கை வைச்சிருக்கேன்னு சொல்ற இந்த வார்த்தைகள் கூட ரொம்ப பெரிய வார்த்தை தான்.

     என்னோட மனசு கஷ்டப்படுற மாதிரி கூட அவர் எந்த ஒரு சின்ன செயலையும் செய்ய மாட்டாருன்னு எனக்குத் தெரியும். அதனால் இதை இத்தோட விட்டுடுங்க.” என்றாள் லீலா.

     வெளியே அவர்களிடம் வீராப்பாக பேசி விட்டாலும், தன்னுடைய அறைக்கு வந்தவள் வெட்டிங் கார்டு மாடலை ஆன்லைனில் தேடிக் கொண்டிருந்த செல்வாவின் அருகே வந்து, அவன் கையில் இருந்த போனைப் பிடுங்கி மெத்தையில் போட்டாள்.

     அவளுடைய முகத்தை வைத்தே அவள் ஏதோ கோபத்தில் இருப்பதை உணர்ந்தவன், “என்ன மேடம் ரொம்ப கோவத்துல இருக்கீங்க போல.” என்று செல்லமாகக் கேட்டபடி அவள் தோள்களில் தன் கைகள் இரண்டையும் மாலையாய் கோர்த்துக்கொண்டான்.

     அவன் கைகளைத் தட்டிவிட்டவள், “இங்க பாருங்க இந்த செல்லம் கொஞ்சுற வேலையெல்லாம் வேண்டாம். எதுக்காக அந்தப் பொண்ணை நம்ம வீட்டில் அரசு அண்ணாவோட கல்யாணம் முடியுற வரைக்கும் இருக்க சொன்னீங்க.” என்க,

     “நான் எங்கம்மா சொன்னேன். அன்னைக்கு நீ தான ரொம்ப பெரிய இவளாட்டம், ‘நீங்க இங்கேயே இருந்துக்கோங்கன்னு’ சொன்ன” என்று லீலாவைப் போல கிண்டல் செய்து காட்ட அதில் கோபம் இன்னும் அதிகமானது அவளுக்கு.

     “நான் சொன்னா உங்களுக்கு எங்க போச்சு புத்தி. லீலா சும்மா இருன்னு என்னை அதட்டி அமைதியாக்குறதுக்கு என்ன?” வேக மூச்சுகளுடன் கேட்டாள்.

     “இத்தனை நாளா எங்க நான் உன்ன விட்டுட்டு அவகிட்ட போயிடுவேனோன்னு இந்த வீட்டில் இருக்கிறவங்க தான் பயந்துக்கிட்டு இருந்தாங்க. இப்ப அந்த பயம் உனக்குள்ளும் வந்திடுச்சு போலையே. அவ்வளவு தான் நீ என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையா லீலா.” அவள் மூக்கில் அடித்தபடி கேட்டான் செல்வா.

     “ப்ச்… உங்க மேல நம்பிக்கை இல்ல அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க. நான் கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் ரொம்ப தெளிவா தான் இருந்தேன்.

     ஆனா உங்க தம்பியும் என்னோட தங்கச்சிங்களும் சேர்ந்து என்னை ரொம்பவே குழப்பிட்டாங்க. எனக்கு கூட இப்போ அந்த பொண்ணு இந்த வீட்டில் இருக்கிறது பிடிக்கல. தயவுசெஞ்சு அவளை இங்கே இருந்து அனுப்பிடுங்க.” என்றாள் லீலா.

     மனைவியைப் பார்த்து மென்மையாக சிரித்தவன், “இங்க பாரு லீலாம்மா. நான் சொல்றதை நல்லா தெளிவா கேட்டுக்கோ.

     கடந்த காலத்தில் என் வாழ்க்கையில் யார் வேண்ணாலும் இருந்திருக்கலாம். ஆனால் என்னோட நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் இனி உன்னைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை.” அழுத்தம் திருத்தமாய் சொன்னான் செல்வா.

     “நீங்க சொல்றது உண்மைன்னு எனக்குத் தெரியும். ஆனா நமக்குள்ள இதைப் பத்தி இந்த மாதிரி சின்ன சின்ன பேச்சு வார்த்தைகள் வருவதைக் கூட நான் விரும்பல. போதும், அந்த பொண்ணு இங்கே இருக்கவேண்டாம்.” என்றாள் லீலா.

     “லீலா கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி திரும்பத் திரும்ப சொல்றேன், புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே. நீதான் அவளை இங்க இருக்க சொன்ன. திடீர்னு இங்கே இருந்து வெளியே போன்னு சொன்னா அவ எங்க போவா.” என்றான் செல்வா.

     “அப்ப பேசி பேசி என் மனசை தான் மாத்துவீங்க. அந்தப் பொண்ணை இங்க இருந்து போகச் சொல்ல மாட்டீங்க அப்படித் தானே.” லீலா குழந்தை போல் கோபித்துக்கொள்ள அதை இரசித்தவன் அவளை நெருங்கி அவள் காதோரம் மெதுவாக முத்தமிட்டு,

     “எனக்கு இப்படி இருக்கிற லீலாவை ரொம்பப் பிடிச்சிருக்கு. அதுக்காகவே லேகாவை இங்கிருந்து அனுப்ப மாட்டேன்.” என்று அவள் காதில் சொல்லி அவளை உறைந்த நிலையில் அப்படியே நிற்க வைத்து விட்டு சென்று விட்டான்.

     அடுத்த நாள் மதிய வேளையில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்திருக்க மூக்கு வேர்த்தது போல் வந்து நின்றாள் லேகா.

     “என்ன லீலா எல்லாரையும் சாப்பிட கூப்பிட்டீங்க என்னை மட்டும் விட்டுட்டீங்க, மறந்துட்டீங்களா இல்ல”அவள் முடிப்பதற்குள், “ஸ்சாரி சிஸ்டர். எங்க வீட்டில் நாங்க எல்லாரும் ஒன்னா இருந்து சாப்பிடுவது வழக்கம்.

     நீங்க புதுசா வந்து இருக்கீங்களா அதனால் எங்களுக்கு உங்க நினைவு அவ்வளவா இல்லை. அது மட்டும் இல்லாம நீங்க சாப்பிடுறதுக்கு மட்டும் தான் ரூமை விட்டு வெளியில் வரீங்க.

     இந்த வீட்டு பொண்ணுங்களோட சேர்ந்து சின்னச்சின்ன வேலை செஞ்சு இருந்தால் கூட, அவங்களுக்கு உங்களைப் பத்தின ஞாபகம் இருந்திருக்கும். ஆனா நீங்க தான் சின்ன வேலைகள் கூட செய்யுறதில்லையே. அதனால உங்களை யாருக்கும் நினைவில்லை.” என்றான் தெய்வா.

     பட்டென்று தன்னுடைய மூக்கில் அறைந்து கொண்ட நாகா, “ச்சே இந்த கொசுவால என்னோட மூக்கு உடைஞ்சு போச்சே.” என்றான் கேலியாக.

     “தர்மா டீவி போடுடா” லேகாவின் குரல் தன் காதில் விழுவது கூட பிடிக்காதவராய் சொன்னார் வடிவேலு.

     “கண்ணம்மாவை கொன்னாச்சும் பாரதியை அடையாமல் நான் விடமாட்டேன்.” பாரதி கண்ணம்மா தொலைக்காட்சி தொடரின் வில்லி வெண்பா சொல்லிக் கொண்டிருக்க,

     “ச்சே இந்த கன்றாவி எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கு டிவியை ஆஃப் பண்ணு டா.” கத்தினான் தெய்வா.

     “அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படுறவ எல்லாம் நல்ல பொண்ணாவா இருப்பா. இது எல்லாம் ஒரு கதைன்னு எடுத்துகிட்டு இருக்காரு டைரக்டர். அவரைச் சொல்லணும்.” என்றாள் ஊர்மி.

     “இதில் அந்த பொண்ணு டாக்டர் போற. அவளுக்கு எல்லாம் யாரு தான் டாக்டர் பட்டம் கொடுத்தாங்களோ.” என்றாள் ருக்கு.

     “அந்தப் பொண்ணை ஏன் எல்லாரும் திட்டுறீங்க. அந்தப் பொண்ணுக்கு தான் அறிவில்லைன்னா, அவ சொல்றதை எல்லாம் நம்பி ஆடுற ஹீரோக்கு ரொம்ப அறிவு இருக்கோ.” என்று லீலா செல்வாவைப் பார்த்துக் கேட்க, சிரித்தவனுக்கு புரை ஏறிக் கொண்டது.

     தெய்வா செல்வாவின் தலையில் தட்டிக் கொடுக்க, “ஏங்க உங்களோட போலீஸ் கையால அவர் தலையை அடிச்சு உடைச்சிடாதீங்க நான் தட்டி கொடுக்கிறேன்.” என்றவண்ணம் அவன் வேலையை தொடர்ந்தாள் லீலா. தெய்வாவிற்கு கோபம் வந்தது. ஆனால் இப்போது அதைக் காட்டினால் மற்ற இருவரும் சேர்ந்து வைத்து செய்துவிடுவார்கள் என்பதால் அமைதியாக இருந்தான். மனைவியின் புதிய பரிமாணத்தை அதிகமாக ரசித்தான் செல்வா. அவனுக்கு அத்தனை உல்லாசமாக இருந்தது.

     “என்னடா நடக்கிது இங்க.” அண்ணி இப்படி எல்லாம் செய்ய மாட்டேங்களே என்று நாகா புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், லேகா சாப்பிடப் பிடிக்காமல் எழுந்து அறைக்குள் சென்றாள். அவளை அழைக்க கூட யாரும் முன்வரவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று தான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இந்த ஆபரேஷன் நல்லா இருக்கு. ஃபார் லீலா அண்ட் செல்வா