Loading

அத்தியாயம் 107

     தெய்வா மருத்துவமனையில் இருந்த அந்த இருபது நாட்களிலும் முடிந்த வரை மற்ற மூவரும் அவன் அருகிலேயே இருந்தனர்.

     அரசுவின் வார்த்தைக்காக, அப்பாவின் ஆசைக்காக என்று ஒரே வீட்டில் ஒன்றாக இருக்க ஒப்புக்கொண்டவர்களுக்கு, தெய்வாவிற்கு ஆபத்து நேர்ந்த அன்றே மனம் தங்களையும் அறியாமல் ஆட்டம் கண்டு போனது உண்மை.

     கூடுதலாக கடந்து போன இருபது நாள்களில் ஏற்பட்ட பழக்கம், மற்றவர்களுக்காக இல்லாமல் தங்களுக்காக ஒற்றுமை காக்கத் தூண்டியது ராஜ் சகோதரர்களை.

     அவர்கள் மனதார அனுபவிக்கும் அந்த ஒற்றுமை புதிதாகவும், ஆனந்தமாகவும் இருந்தது. சந்தோஷத்தை அளவுக்கு அதிகமாக அள்ளித்தரும் கண்ணுக்குத் தெரியாத மாயவலையான அன்பெனும் சாகரத்தில் மனப்பூர்வமாக ஒன்றிப் போயினர் நால்வரும்.

     மனம் விட்டுப் பேசினர். சிறுவயதில் நீயா, நானா என ஒருவனை ஒருவன் கொன்று போடும் அளவு கோபத்துடன் போட்ட சண்டைகளை நினைவுபடுத்தி சிரித்தனர். வளர்ந்த பிறகு இவர்கள் போட்டுக்கொண்ட சண்டைகளின் காரணத்தை நினைத்தால் இப்போது சிரிப்பு தான் மிஞ்சியது நால்வருக்கும்.

     எல்லாவற்றிற்கும் சிகரம் வைப்பது போல் தங்களுடைய மனைவிமார்களைப் பிரிக்கிறேன் என்று இவர்கள் எடுத்த முட்டாள் தனமான முடிவை நினைத்துப் பார்த்துக்கொண்டனர். அது தவறு என்பதையும் மனதார ஒப்புக்கொண்டனர்.

     நால்வரும் சில காலம் தனியாக இருக்கட்டும் என்ற அரசுவின் வேண்டுகோளுக்கு இணங்க ருக்கு மனதை மிகவும் வருத்தி கணவனை விட்டுத் தள்ளி இருந்தாள்.

     ஆனால் தெய்வாவிற்கு அப்படி எந்த வருத்தமும் இல்லை. சொல்லப்போனால் அவன் ருக்குவை பெரிதாகத் தேடவே இல்லை. புதிதாகக் கிடைத்த சகோதரப்பாசம் காணக்கிடைக்காத அமிர்தம் போல் தோற்றமளிக்க அந்த மகிழ்ச்சியில் உடலும், மனமும் நன்றாகத் தேறி வந்தான்.

     “இப்படி ஒன்னா இருக்கிறது கூட ஒரு விதமான சந்தோஷம் தான் இல்ல.” தெய்வா சொல்ல மற்றவர்களும் அதை ஆமோதித்தனர். நாட்கள் சற்று இனிமையாகவே கடந்தது இராதா இல்லத்தில் உள்ளவர்களுக்கு.

     ஒரு வழியாக தெய்வா மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவன் சற்றே சத்தமாகத் தும்மினால் கூட, என்னாச்சு என்று பதறிக்கொண்டு ஒருவராக அவர்களுடைய அறைக்குள் வர, முன்பு போல இருந்திருந்தால் அதை தொல்லையாக நினைத்து வெறுத்திருப்பான். ஆனால் இப்போதோ உள்ளம் மகிழ்ந்து புன்னகைத்துக் கொண்டான் தெய்வா.

     செல்வாவின் அறையில், “என்னங்க எனக்கு ஒரு சந்தேகம். பாஸ்கருக்கு வெறுப்பு உங்க மேல தானே. எதுக்காக உங்க தம்பி தெய்வாவைக் கொல்ல நினைக்கணும்.” நெடுநாளாக கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டாள் லீலா.

     “அன்னைக்கு கைலாஷ் மூலமா உன்னைக் கொலை பண்ண முயற்சி பண்ணதுக்காக அவனை தெய்வா அரஸ்ட் பண்ணிட்டு போனான் தானே. அன்னைக்கு தெய்வா அவனை ரொம்பத் திட்டி அடிச்சிட்டான் போல. அந்த கோபத்தில் இப்படி பண்ணிட்டான்.

     நாங்க கோபத்தில் அவன் கிட்ட கேட்க போனப்ப அவன் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு.” என்ற செல்வாவிற்கு அன்று அத்தனை கோபமாக பாஸ்கர் பேசிய வார்த்தைகள் நினைவு வந்தது.

     “உன் தம்பிக்கு உன் மேல பாசம் னா அதை உங்க வீட்டோட வைச்சுக்கணும். அதை விட்டுட்டு செல்வாவை ஏன்டா தொந்தரவு பண்றன்னு கேட்டு, பலபேர் பார்க்க ஹாஸ்பிடலில் வைச்சு அடிச்சு இழுத்துட்டுப் போய் ரொம்பவே அசிங்கப்படுத்திட்டான். அவனை எப்படியும் கொன்னுட நினைச்சேன். ஆனா தப்பிச்சிட்டான்.

     இது எல்லாத்துக்கும் காரணம் நீ. என்னோட வாழ்க்கையில் எல்லா கஷ்டமும் உன்னால மட்டும் தான். என்னைக் கஷ்டப்படுத்திட்டு நீ சந்தோஷமா வாழ நினைக்கிறியா அது கண்டிப்பா நடக்காது. உன் தலைக்கு மேல ஒரு கத்தி தொங்கிக்கிட்டே இருக்கு. அது என்னைக்காவது ஒருநாள் உன் கழுத்தை அறுக்காமல் விடாதுன்னு என்கிட்ட சொன்னான்.” என்க, லீலாவிடம் அமைதி.

     “அவன் எதை நினைச்சு இப்படி சொன்னான். இதுக்கு என்ன அர்த்தம். எதுவுமே எனக்குப் புரியல. கொஞ்சம் பதற்றமாவே இருக்கு.” என்றான் செல்வா.

     “விடுங்க நம்ம வீடு முன்ன மாதிரி இல்ல. நீங்க நாலு பேரும் ஒன்னா இருக்கிறதைப் பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. நீங்க இப்படி இருக்கிற வரைக்கும் உங்களில் யாருக்கும் ஒன்னும் ஆகாது.

     அதையும் மீறி ஏதாவது பிரச்சினை வந்தாக் கூட, நம்ம எல்லாரும் சேர்ந்து எதிர்ப்போம். நம்ம அத்தனை பேரும் சேர்ந்து நின்னா நமக்கு முன்ன எல்லாப் பிரச்சனையும் துரும்பு மாதிரி காணாம போயிடும்.” லீலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே செல்வாவின் அலைபேசி அலறியது. அதை எடுத்து பார்க்க அதில் லேகா என்ற பெயர் ஒளிர்ந்தது.

     லீலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், தெய்வாவின் மருத்துவமனைப் போராட்டம் என சில பல நாட்களாகவே மிகவும் பிஸியாக இருந்த செல்வா லேகாவின் அழைப்களை புறக்கணித்து வந்தான்.

     இதனால் லேகா ஒரு மாதிரியான பாதுகாப்பின்மையை உணர்ந்தாள். எங்கே தன்னுடைய இறுதி நம்பிக்கையான செல்வாவும் தன்னை விட்டு விலகிச் சென்று விடுவானோ என்கிற பயம் பெருங்கடலென அவளைத் தனக்குள் சுருட்டிக்கொண்டது.

     அதனால் எப்படியாவது செல்வாவின் மனதில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் அழைத்திருந்தாள்.

     செல்வா எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் லீலாவின் முன்னே அழைப்பை ஏற்று, “சொல்லு லேகா, நானே உன்கிட்ட பேச நினைச்சேன். வீட்டில் கொஞ்சம் பிரச்சனை, அதில் மறந்துட்டேன். இப்போ பேசலாம் சொல்லு.” என்றான் மிக மிக சாதாரணமாக.

     “இந்த உலகத்தில் உனக்கு மட்டும் தான் பிரச்சனை இருக்குமா செல்வா. மத்தவங்க யாருக்கும் எந்த பிரச்சனையும் வராதுன்னு நினைக்கிறியா. நான் டிஸ்சார்ஜ் ஆகப்போறேன்னு சொல்லியும் எங்கம்மா எப்படியும் போன்னு சொன்ன விரக்தியில் எங்கேயாவது போய் செத்துப் போறேன்னு சொன்னேன்.

     நீ தான் நான் இருக்கேன்னு சொல்லி இங்க கொண்டு வந்து தங்க வைச்சிட்டுப் போன. ஆனா அதுக்கு அப்புறம் என்னைக் கண்டுக்கவே இல்லை. இங்க மாச வாடகை கட்டச் சொல்லி கேட்கிறாங்க. எனக்கு என்ன பண்றதுன்னு ஒன்னுமே தெரியல. அதுக்காக தான் உனக்கு திரும்பத் திரும்ப போன் பண்ணேன். ஆனா நீ உன் பொண்டாட்டியோட பிறந்தநாளைக் கொண்டாடுறதுக்காக என்னை அவாய்ட் பண்ணிட்ட.” என்க, லேகா என்று அதட்டினான் செல்வா.

     “இங்க என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியாது செல்வா. என்னோட புருஷன் திடீர்னு வந்து, உனக்கு ஜீவனாம்சம் எல்லாம் கொடுக்க முடியாது. மரியாதையா மியூட்சுவல் டைவர்ஸ்க்கு கையெழுத்துப் போடுன்னு சொல்லி மிரட்டுறான். என்னால சமாளிக்க முடியல. நான் இருக்கிற இடம் அவனுக்குத் தெரிஞ்சு போச்சு. இனி அவனோட காரியம் நடக்கும் வரை என்னைத் தொந்தரவு பண்ணிக்கிட்டே தான் இருக்கப் போறான். எனக்கு நிம்மதியே இல்லை.” என்று கண்ணீர் வடித்தாள் லேகா.

     “லேகா என்ன பேச்சு இதெல்லாம். நீ இருந்த நிலைமைக்கு உனக்குப் பாதுகாப்பான இடம் வேணும் னு கேட்ட. ஏற்பாடு பண்ணிக் கொடுத்தேன். அவசர உதவிக்குத் தேவையான பணமும் கொடுத்து வைச்சிருந்தேனே.” சற்றே கண்டிப்பாகக் கேட்டான் செல்வா. அவளுக்கு அவன் செய்தது உதவி. ஆனால் அவளோ அவளுக்குச் செய்ய வேண்டியது அவன் கடமை என்பது போல் பேச கோபம் வந்தது செல்வாவிற்கு.

     “அந்தப் பணம் எத்தனை நாள் பத்தும் செல்வா.” உரிமையாகக் கேட்கிறேன் என்று அவன் கோபத்தை தான் அதிகப்படுத்தி இருந்தாள் அவள்.

     “உன்னோட உடல்நிலை முழுசா சரியாகும் வரை டாக்டர் வேலைக்கு வர முடியாது. அதனால் உன்னோட செலவுகளை நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன். நான் கொடுத்த பணம் கண்டிப்பா உன்னோட அடிப்படைத் தேவைகளுக்குப் போதுமானதா தான் இருந்திருக்கும். அத்தனையும் தீர்ந்து போச்சுன்னா நீ கண்டிப்பா அதிக செலவு செய்திருக்கன்னு தான் அர்த்தம்.” என்க, கண்களை அழுந்த மூடித்திறந்தாள் லேகா.

     அவன் சொன்னது அத்தனையும் உண்மை. இத்தனை நாள்களாக நல்ல சாப்பாடு சாப்பிடாதவள் மூன்று வேளையும் பெரிய உணவகங்களில் இருந்து தேவைக்கு அதிகமாகவே உணவு வரவழைத்து பாதியைச் சாப்பிட்டு மீதியை வீணாக்குவதை வழக்கமாக வைத்திருந்தாள்.

     பாதுகாப்பு தருகிறேன் என்று செல்வா சொன்னதை, என்னவோ வாழ்க்கை தருகிறேன் என அவன் சொன்னது போல் கற்பனை செய்து கொண்டு தாம் தூம் என ஆடியதன் விளைவு கையிருப்பு கரைந்து ஒரு கட்டத்தில் முடிந்தும் போனது. அதன்பிறகே செல்வாவிற்கு அழைக்க முயற்சிக்க அவன் தன் இல்லத்தின் பிரச்சனையில் அழைப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

     “நான் நேத்தில் இருந்து சாப்பிடல செல்வா.” அழுதுவிடும் குரலில் லேகா சொல்ல, “என்ன லேகா நீ. எப்பவும் யாராவது உன்ன பேம்பர் பண்ணிக்கிட்டே இருக்க முடியுமா? ஹாஸ்பிடலில் வேலைக்குச் சேரும் வரை உனக்கு ஏத்த மாதிரி ஏதாவது வேலை கிடைக்குதான்னு தேடிக்கிட்டே இருன்னு சொன்னேன் தானே.

     பக்கத்தில் மெடிக்கல் ஷாப், சூப்பர் மார்க்கெட், ஜெராக்ஸ் ஷாப் இந்த மாதிரி சின்ன சின்ன கடையில் வேலைக்குச் சேர்ந்திருந்தா சம்பளமும் கிடைச்சிருக்கும். கூடவே உன் மனசுக்கும் அது ஒரு நல்ல மாறுதலா இருந்திருக்கும்.” செல்வா தன்னைப் போல் சொன்னதில் லேகாவிற்கு அப்படி ஒரு அதிர்ச்சி.

     செல்வாவிற்கு எந்த வேலையும் குறைந்தது இல்லை என்கிற எண்ணம் உண்டு. அதனால் தன்னைப் போல் அவள் தற்போதைய உடல்நிலைக்கு ஏற்றது போன்ற சின்னச்சின்ன வேலைகளைச் செய்திருக்கலாமே என்கிற நினைப்பில் கேட்டுவிட்டான். ஆனால் லேகாவிற்கு அந்த நினைப்பு கிடையாது. மருத்துவம் படித்தவள் மருந்தகத்தில் இருந்து மருந்துகளைக் கொடுத்துக் கொண்டிருப்பதா என்று நினைத்தவளுக்கு அடுத்ததாக செல்வா சொன்ன வேலைகளை நினைத்தும் பார்க்க முடியவில்லை.

     “என் புருஷன் எப்ப வந்து விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துக் கேட்டு என்னைக் கொல்வானோன்னு நானே பயத்தில் இருக்கேன். நீ என்னை இங்கெல்லாம் வேலைக்குப் போகச் சொல்றியா செல்வா.” ஆத்திரமாகவே கேட்டுவிட்டாள் லேகா.

     “இப்ப இருக்கிற காலத்தில் ஒரு கொலையைப் பண்ணிட்டு அப்படியெல்லாம் எஸ்கேப் ஆகிட முடியாது. அது உன்னோட புருஷனுக்கும் தெரியும். சும்மா உன்னை மிரட்டுவதற்காக தான் அப்படிச் சொல்லி இருப்பாரு.” செல்வா இதை சொல்லிக் கொண்டிருக்கும் போது லீலா அறையில் இருந்து வெளியேற முயற்சிக்க, அவள் கரம் பற்றி இழுத்து தன் அருகே நிறுத்தினான் செல்வா.

      “செல்வா, என் மேல உனக்கு இன்னும் பாசம் இருக்கு தானே. அதை இந்த வார்த்தைகளே தெளிவா உணர்த்துது. இப்ப நான் உயிரோட இருக்கக் காரணம், நம்பிக்கை எல்லாமே நீ மட்டும் தான். எப்பவும் யாருக்காகவும் என்னைக் கைவிட மாட்ட தானே.” என்று ஒருவிதமாகக் கேட்க, செல்வாவிற்கு லேசாக எரிச்சல் வந்தது.

     “நீ ஏன் லேகா இப்படி இருக்க. எப்ப இருந்து அடுத்தவங்களைச் சார்ந்து இருக்கப் பழகின நீ. படிக்கிற காலத்திலேயே உன்னோட சொந்த முடிவுகளை எடுக்கும் அளவு தைரியசாலியா தானே இருந்த. இப்ப எங்க போச்சு அந்த தைரியம் எல்லாம்.

     நீ ஒரு டாக்டர். உனக்கான ஒரு வேலையைத் தேடு, சொந்தக் காலில் நில்லு. அதுக்கு அப்புறம் பாரு, கோபத்தில் உன்னைத் தனியா விட்டுட்டுப் போன உன் அம்மா உன்னை நினைச்சு ரொம்ப பெருமை படுவாங்க. உன் புருஷன் உன்னை விட்டுட்டு போனதுக்காக வருத்தப்படுவான். அப்படியும் ஒரு காலம் வரும்.” என்றான் செல்வா.

     “நீ சொல்றதை வைச்சுப் பார்த்தா நான் காலம் முழுக்க தனியாத் தான் இருக்கணுமா செல்வா?” என்றுவிட்டு செல்வாவின் பதிலுக்காக ஆவலாக காத்திருந்தாள் லேகா.

     “அப்படி எல்லாம் இல்ல லேகா. உன் மனசுக்குப் பிடிச்ச துணை, உன் சுக, துக்கங்களை தன்னோட சுக துக்கமாக ஏத்துக்கிற துணை கிடைச்சா நீ கண்டிப்பாக மறுமணம் பண்ணிக்கலாம்.”

     “என் மனசுக்குப் பிடிச்ச மாதிரி, நான் நினைக்கிற மாதிரி என்னை நல்லா பார்த்துக்க இந்த உலகத்திலேயே நீ மட்டும் தான் இருக்க செல்வா. உன்னை விட்டா என்னை நேசிக்க, பாதுகாக்க இந்த உலகத்தில் யாருமே இல்லை. இதையெல்லாம் யோசிக்கும் போது எதுக்காக டா இந்த உயிரை உடம்பில் சுமந்துகிட்டு இருக்கோம் னு தோணுது.”

     “உனக்கான ஒருத்தன் கண்டிப்பா இருப்பான். சரியான நேரத்துக்கு உன்னைத் தேடி வருவான். எல்லோரையும் மாதிரி நீயும் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழத்தான் போற.” செல்வா பட்டும்படாமல் பேச, லேகாவிற்கு எரிச்சல் தாங்கவில்லை.

     “உனக்குப் புரிய மாட்டேங்கிது செல்வா. அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, புருஷன், மாமியார், மாமனார்,நாத்தனார், கொழுந்தனார் அப்படின்னு யாரும் எனக்கு இல்ல. தனிமை என்னை ரொம்பவே சாகடிக்குது செல்வா.”

     “நீ ஏன் தனியாக இருக்கிறதா நினைக்கிற. உன்கூட உன் ரூமில் மூணு பேர் இருக்காங்க. அவங்க கூட பேசி ப்ரண்டாகு. எங்கேயாவது வேலைக்குப் போ. அங்கே போய் நாலு பேரை பிரண்ட்ஸாக்கு எல்லாம் சரியாகிடும்.” என்றான் செல்வா.

     “இவ்வளவு தூரம் சொல்றோம். என் வீட்டுக்கு வந்திடு நான் உன்னைப் பார்த்துக்கிறேன்னு சொல்ல மாட்டேங்கிறானே. சரியான கல்நெஞ்சக் காரன்.” என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள் லேகா.

     “லேகா நீ அமைதியா இரு. நான் இப்ப அங்க தான் வரேன். நாம நேரில் பேசிக்கலாம்.” அழைப்பை அணைத்துவிட்டு வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொண்டோமோ என செல்வா யோசித்துக்கொண்டிருக்க, “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா?” அத்தனை நேரம் அமைதியாக இருந்த லீலா கேட்டாள்.

     “நீ என்ன கேட்கப் போறேன்னு எனக்குத் தெரியும். பொண்ணா இன்னொரு பொண்ணு மேல் இரக்கப்பட்டு லேகாவை கொஞ்ச நாள் நம்ம வீட்டில் தங்க வைச்சிக்கிட்டா என்னன்னு தானே கேட்க வர.” செல்வா கேட்க, “எப்படிங்க நான் நினைச்சதை அப்படியே சொல்றீங்க.” ஆச்சர்யமாய் பார்த்தாள் லீலா.

     “என் பொண்டாட்டியை எனக்குத் தெரியாதா?” என்று அவள் நெற்றியோடு நெற்றி முட்டினான்.

     “அந்தப் பொண்ணை இங்க கூட்டிட்டு வந்தா என்ன, கொஞ்ச நாள் நம்ம வீட்டில் இருந்த அவங்களுக்கும் நிம்மதியா இருக்கும் இல்ல.” என்றாள்.

     “லீலாம்மா நல்லவங்களா இருக்கலாம். அதுக்காக இவ்வளவு நல்லவங்களா இருக்கத் தேவை இல்லை. உதவி பண்றதுக்கு கூட ஒரு வரையறை இருக்கு. அவளோட நோக்கம் சரியா இருக்கிற மாதிரி தெரியல.

     எதுக்கு எடுத்தாலும் எங்களோட கடந்த காலத்தையே நினைவு படுத்திக்கிட்டு இருக்கா. பற்றிப் படர கொழுகொம்பு இல்லாத கொடி மாதிரியான நிலையில் இருக்கும் அவ, அவளுக்குப் பக்கத்தில் இருக்கும் என்மேல படர்ந்து பரவ நினைக்கிறா. அது தப்புன்னு புரிஞ்சு தான் செய்யுறா.

     அவளுக்கு உதவி பண்ணாம விட்டா என் மனசாட்சியே என்னை மன்னிக்காது. ஆனா அவளை ஒரு எல்லையில் என்னால வைக்க முடியும்.” என்று மனதிற்குள் தீர்மானமாக நினைத்துக் கொண்டான்.

     ஆனால் அவனே அவளை தன் வீட்டில் தங்க வைப்பான். அவளைத் தாங்கு தாங்கென்று தாங்குவான். அவளுக்காக லீலாவை எதிர்த்துப் பேசுவான் என்றெல்லாம் இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவனே எதிர்பார்த்து இருக்கவில்லை.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்