Loading

சபதம் – 30

 

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை. (குறள்- 764) 

 

பொருள்:

 

மனத்தின் உறுதியிலே அழிவற்றதாய், பகைவரது வஞ்சனைகளுக்கு உட்படாததாய், வழிவழித் தொடர்ந்து வந்த வன்கண்மை உடையதாய் விளங்குவதே, சிறந்த படை
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

 

 

விடியற்காலையின் மங்கலான ஒளியில் ராணா கோட்டையின் பெரும் வாசல்கள் இடியெனத் திறந்தன. தூசி படிந்த முகங்களுடன், சாம்பலில் கருகிய ஆடைகளுடன், கண்களில் உயிரற்ற வெற்றிடத்துடன் ஹூன் வம்சத்தின் உயிர் தப்பியவர்கள் வீர் ரணசூர் மற்றும் ஹம்சா கான் காயமடைந்த குடும்பத்தினரையும் அழைத்து கோட்டைக்குள் நுழைந்தனர்.

 

அவர்களைப் பார்த்தவுடன் முற்றம் முழுவதும் ஒரு மரண அமைதி பரவியது. ராணா மன்னன்
அவசரமாக முன்வந்து குரல் நடுங்கியபடி, “என்ன நடந்தது? ஹூன் வம்சத் தலைவன் எங்கே?” என்றதற்கு அங்கிருந்த ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை.

 

ஹம்சா கான் முன்னே வந்து, குரல் உடையப், “எங்கள் அரண்மனையும், பெண்களையும் காக்கப் போராடியவர் உயிரிழந்தார், மகாராஜா. வீர ஹூன் வம்சத்தின் முன்னாள் தலைவர் சிங்கம் போலப் போரிட்டார்… ஆனால் அவரது வயதும் முகலாயர்களின் எண்ணிக்கையும் அவரை வீர சொர்க்கத்தை நோக்கி அழைத்துச் சென்றுவிட்டது”

 

அந்த வார்த்தைகள் அமைச்சர்களின் வரிசையில் அதிர்ச்சித் துடிப்பை ஏற்படுத்தின. அதிவார் மன்னர் கைகளைக் குத்தியபடி கோபத்தில், “அரவள்ளியின் காவலர்களைத் தாக்கத் துணிந்தார்களா?” என்றதும் வீரர் அனைவரும் தலைகுனிந்து நின்றனர்.

 

ஹம்சா கான் தலையசைத்தபடி கண்களில் நீர் வழிய, “அவர்களின் நோக்கம் அதிவார் மற்றும் ராணாவின் கூட்டணியை கலைப்பது. இளவரசர் மற்றும் இளவரசியாரின் திருமணத்தை தடுப்பது தான்” என்றதும் இரு அரசர்களும் குழப்பத்துடன் பார்த்தனர்.

 

அதனைக் கண்டு முன் வந்த ரணசூரன், “கூட்டணியை நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இல்லை என்றால் அடுத்த அழிவு ஆரவள்ளிக்கு என்றும் எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளனர்” என்றவனின் கன்னம் கோபத்தில் சிவந்திருந்தது.

ராணா மன்னன் அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அடி வாங்கியபோல் பின்னோக்கி தடுமாறியபடி, “ஹஜ் யாத்திரைக்குச் சென்றிருக்கும் உனது தந்தைக்கு என்ன பதில் சொல்வேன் மகனே” என்றபடி ஹம்சாவிடம் கதறினார்.

 

அதிவார் அரசருக்கும் மனது மிகவும் வேதனையில் உழன்றது. தனது தந்தை காலத்தில் ஹூன் வம்சத்தின் தலைவனாக இருந்த சிக்கந்தர் கானின் இறப்பு அங்கிருந்த அனைவரையும் தாக்கி இருந்தது.

 

ரணசூர் மருத்துவ அறையின் படுக்கையில் படுத்திருந்த மேருன்னிஷாவின் அருகே மண்டியிட்டான். அவளது முகம் பயத்தில் வெளுத்திருந்தது. ரணசூரன் அவளது தலைமுடியை மெதுவாக வருடியபடி, “மெஹர்….நான் உன்னோடு தான் இருக்கிறேன். நீ பாதுகாப்பாக இருக்கிறாய். எதையும் யோசிக்காமல் கண்களை மூடி தூங்க முயற்சி செய்” என்றதும் வெறித்துப் பார்த்திருந்த அவளது கண்கள் சிறிது அசைந்தன.

 

“ரா…னா… பாபாஜான்…” என்றவளால் மேற்கொண்டு பேச முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தபடி இருந்தது, “அவர்கள் என்னையும் தீதியையும்…..” என்றதும் அங்கிருந்த அனைவரும் பயத்தில் அதிர்ந்து பார்த்தனர்.

 

அதைக் கேட்ட ரணசூரனின் தொண்டை இறுகியது. அவளது கையை தன் நெற்றியில் அழுத்தியவனின் பார்வை ஸுலைகாவை மேல் இருந்து கீழ்வரை ஒருமுறை ஆராய்ந்தது.

 

ரணசூரனின் கண்கள் அவளையே வட்டமிட, மெஹருன்னிஷாவின் வார்த்தைகளில் இதயம் துடிக்க வலியுடன் ஸுலேய்க்காவை நோக்கி திரும்பின. ஸுலைகா காயமடைந்த கையைப் பிடித்தபடி தன்னைத் தானே தாங்கிக் கொண்டிருந்தாள்.

 

அவளது முகம் வெளுத்துப் போய் கண்கள் அழுகையால் வீங்கியிருந்தன. அதனை கொண்டவனின் கைகள் கோபத்தில் இறுகியது. அவள் அருகில் சென்று அவளது காயங்களை ஆராய்ந்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று துடித்த கைகளை அடக்க பெரும்பாடுபட்டான்.

ஆனால் முடியவில்லை. இப்போது இல்லை எப்போதும் அது அவனால் முடியாத ஒன்று.
ஸுலைகா அவனை நோக்கிப் பார்க்கவே மறுத்தாள். அவனுக்கு தெரியவில்லை அவளின் உள்ளம் குற்ற உணர்ச்சியால் துடித்துக் கொண்டிருக்கிறது என்று.

 

ரணசூர் மற்றும் வீரின் இடையில் இருக்கும் இந்த இடைவெளிக்கு தான் தான் காரணம் என்று தன்னையே நொந்து கொண்டிருந்தாள் ஸுலைகா.

 

அனைவரின் பார்வையும் தன் புறம் திரும்பியதும் தலை குனிந்த ஸுலைகா, தன்னவனின் பார்வை பட்டதும் கண்களில் இருந்து வழிய துடித்த கண்ணீரை உதட்டை கடித்தபடிக் கட்டுப்படுத்தியவள், “ஒன்றும் ஆகவில்லை அரசே… எங்கள் இருவரையும் இழுத்துச் செல்ல முகலாய வீரர்கள் முயன்றனர். ஆனால் அவர்களின் தளபதி பெண்களை தொட வேண்டாம் என்று கட்டளையிட்டு சென்றுவிட்டார்” என்றதும் அங்கிருந்த அனைவரின் முகமும் வெளுத்துவிட்டது.

 

ரணசூரனின் அருகில் நின்றிருந்த வீர் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான்.

ரணசூர் மெஹருன்னிஷாவின் பந்தம் எப்படிப்பட்டது என்று அவன் அறிவான், ஆனால் ரணசூரனின் பார்வை ஸுலேய்க்காவை அடிக்கடி தொட்டு மீள்வதை பார்த்த வீரின் புருவங்கள் சுருங்கின.

 

ஸுலைகாவின் முகம் வேதனையில் சுருங்கும்போதெல்லாம் ரணசூரன் முகம் அவள் அருகில் செல்ல துடிப்பதை உணர்ந்த வீருக்கு முதல் முறை நண்பனை ஆராய்ச்சிப் பார்வையுடன் பார்த்தான்.

அவனது மனம், ‘இருவருக்குள்ளும் ஏதோ இருக்கிறது போலவே?’ என்றபடி நடப்புக்கு திரும்பியவன் இருவரையும் கண்காணிக்க தவறவில்லை.

 

அதே நேரம் ஸுலைகாவின் வாய் மொழியாக கேட்டதை ஜீரணிக்க இயலாத ரணசூரன், “விடக்கூடாது. ஹூன் வம்சத்தாரின் மீது கை வைத்துவிட்டார்கள். பெண்களை நெருங்க முயற்சித்துள்ளனர். இனியும் பொறுப்பது அரவள்ளிக்கு நாம் இளைக்கும் துரோகம்” என்றவன் இரு அரசர்களின் முன் நிற்க, அவனது தோளோடு தோள் உரசியபடி வலது பக்கம் வீரும் இடது பக்கம் ஹம்சா கானும் இருக்க, ரணசூரன், “கட்டளையிடுங்கள் அரசே. போர் முரசு கொட்டட்டும். அரவள்ளி கவசம் பூணட்டும்” என்று கொந்தளித்தான்.

 

மன்னர்களின் எண்ணமும் அதுவாகவே இருக்க, இருவரும் போர்வீரர்களை நோக்கி திரும்பினர், மகாராஜா தேவராஜ் ராணாவின் குரல் கோபத்தில் நடுங்கியபடி, “முகலாயர்கள் எல்லை மீறிவிட்டனர். நமது காவலர்களான ஹூன் வம்சத்தின் முன்னாள் தலைவர் சிக்கந்தர் அலி கானை கொன்றுள்ளனர். நமது பெண்களைத் தாக்கியுள்ளனர். அரவள்ளியை எச்சரித்துள்ளனர்”

 

அதிவார் மன்னன் முன்னே வந்து, கண்களில் தீப்பொறிகள் பறக்க, “அவர்கள் நமது ஒற்றுமையை உடைக்க விரும்புகிறார்கள். திருமணத்தை நிறுத்த விரும்புகிறார்கள்.
அரவள்ளியை கைப்பற்ற விரும்புகிறார்கள்” என்றபடி அவர் வாளை உயர்த்தினார்.

 

“அப்படியானால் வரட்டும். இரண்டு இராச்சியங்களின் வீரத்தை சந்திக்கட்டும்” என்று

ராணா மன்னனும் தன் வாளை உயர்த்தினார்.

 

“இந்த நொடியிலிருந்து…அரவள்ளி போர் கவசம் பூணுகிறது. படைகள் தயாராகட்டும்” என்று இருவரும் கர்ஜிக்க அவர்கள் நின்றிருந்த முற்றம் முழுவதும் வெற்றி கோஷம் எழுந்தது.

போர்வீரர்கள் கோபத்தில் முழங்கினர். பெண்கள் பிரார்த்தனையில் அழுதனர். குழந்தைகள் தங்கள் தாய்மார்களைப் பற்றிக் கொண்டனர். போரின் தாளங்கள் கோட்டையின் சுவர்களை அதிரவைத்தது.

 

ரணசூர் அரவள்ளி மலைத்தொடரின் உச்சியை பார்த்தான். வானம் சிவந்திருந்தது. அவனது கைகளில் இருந்த மேருன்னிஷாவின் இரத்தத்தினை போல. அவனது மார்பில் ஸுலைகாவின் வேதனை நிறைந்த முகம் தோன்றியது. யசோதராவின் மகிழ்ச்சியும், ராணாவின் எதிர்காலமும்,அரவள்ளியின் விதியும் ஒரே நூலிழையில் நின்றிருந்தது.

 

கண்களை மூடியவன் விழிகளுக்குள் வீர் வந்து நின்றான், அவனது நண்பனின் நல்வாழ்வுக்காக, “இந்தப் போரை…நான் முடிப்பேன். என் உயிரை கொடுத்தேனும் இதனை முடிப்பேன்” என்று உறுதி கொண்டான்.

 

போர்த் தாளங்கள் இன்னும் பலமாக ஒலித்தன. வானம் இருண்டது. அரவள்ளி, வரலாறு காணாத பெரும் போரினை காணப்போகிறது.

 

இரவின் அரவள்ளி அடிவாரங்கள் அசாதாரணமாக அமைதியாக இருந்தது.
முகல் ஆளுநர் மிர்சா குத்புத்தீன் தன் படை முகாமின் கூடாரத்துக்கு வெளியே நின்று, கைகளை பின்னால் கோர்த்தபடி, மலைகளின் கூர்மையான உருவத்தை உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.

நிலவு ஜொலித்து கொண்டிருந்தது, இருளை வெட்டும் வெள்ளி வாளைப் போல். அந்த இரவு அமைதியான, கட்டுப்பட்ட வீரனை போல் அந்த வானத்தை காத்து நின்றது. ஆனால் அரவள்ளி எப்போதும் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.

 

அந்த நேரம் நிலம் மெதுவாக அதிரத் தொடங்கியது. ஆளுநர் மிர்சா நெற்றியைச் சுருக்கினார்.

மீண்டும் அதிர்ந்தது இந்த முறை ஆழமாக, பலமான ஓசையுடன்.

டம்… டம்… டம்…

போர்த் தாளங்கள், மலைகளிலிருந்து, கோட்டைகளிலிருந்து அதி பயங்கர சத்தத்துடன் ஒலித்தது. தான் சிக்க வைத்துவிட்டோம் என்று நினைத்த இரு இராச்சியங்களிலிருந்தும் ஒலித்தது.

 

அந்த ஒலி பள்ளத்தாக்கு முழுவதும் விழித்தெழும் மாபெரும் மலைத்தொடரின் இதயத் துடிப்பைப் போல ஒலித்தது. மிர்சாவின் கண்கள் சுருங்க, “இது போர் அறிவிக்கும் முரசின் சத்தம் அல்லவா?” என்றவர் தன் அதிகாரிகளை அழைக்கும் முன்பே, ஒரு குதிரை முகாமுக்குள் பாய்ந்து வந்தது.

ராணாவின் மஞ்சள் வண்ணமும் அதிவரின் சிவப்பு நிறமும் கலந்த ஆடை உடுத்திய வீரனின் நெஞ்சில் அரவள்ளி மலைத்தொடர் இருக்க, அவன் குதிரை விட்டு இறங்கி ஆளுநருக்கும் மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்தான்.

 

அந்த தூதனின் உடையிலிருந்து, அவன் ஹூன் வம்சத்தின் படைவீரன் என்பதை உணர்ந்து கொண்ட ஆளுநரிடம், “முகலாய ஆளுநருக்கு அரவள்ளி காவலரின் வணக்கம். அரவள்ளியிலிருந்து செய்தி கொண்டு வந்துள்ளேன்” என்றான்.

 

மிர்சா கண் இமைக்காமல் தூதனை பார்த்து, “சொல்” என்றான்.

 

அதற்கு பயந்து நடுங்கினால் அவன் வீரனல்லவே, குரலை செறுமியவன், ” அரவள்ளியின் இரு இராச்சியங்கள்… ராணா மற்றும் அதிவார்… முகல் சாம்ராஜ்யத்துக்கு எதிராகப் போர் புரிவதாக அறிவித்துள்ளனர். அரவள்ளி போருக்குத் தயாராக உள்ளது” என்றதை கேட்ட முகலாய படைவீரர்கள் மௌனமடைந்தனர்.

மிர்சா மெதுவாக மலைகளை நோக்கி திரும்பினார். இரண்டு ராஜ்யங்களின் போர் முரசின் ஓசையும் ஒன்றாகக் கலந்தது. ஆளுநர் பயந்த ஒரே விஷயம். தடுக்க முயன்ற ஒரே விஷயம்.

 

அவரின் தாடை இறுக, ” திருமணக் கூட்டணி…இப்போது போர்க்கூட்டணியாக மாறியுள்ளது. முட்டாள்கள். ஒன்றாக இணைந்துவிட்டால் முகலாயர்களை வென்று விடலாம் என்று நினைக்கிறார்கள்” என்றவரின் முகத்தில் கோபம், ஏளனம் நிறைந்திருந்தது.

மிர்சா ஆழமாக மூச்சை இழுத்துவிட்டபடி, “ராணா மற்றும் அதிவார் ஒன்றாக நின்றால், அரவள்ளி எந்த சாம்ராஜ்யமும் உடைக்க முடியாத கோட்டையாகிவிடும்” என்று முணுமுணுத்துக் கொண்டார்.

 

முகலாய ஆளுநர் மலைகளை நோக்கி கையை உயர்த்தினார், அவற்றை உரிமை கோருவது போல, “போர் முரசு கொட்டட்டும். அரவள்ளி முகலாயர் வசம் சிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை” என்றவர் எதிர் முரசை ஒலிக்கவிட்டார்.

 

போர் முரசின் ஒலி ராஜபுத்திர ராஜ்ஜியங்கள் வரை எட்டியது. முரசின் ஒலி பலமாக, கொந்தளிப்புடன், ஒன்றுபட்ட ஓசையுடன் ஒலித்தது.

 

விடியல் இன்னும் பிறக்கவில்லை. ஆனால் அரவள்ளி மலைத்தொடர் விழித்திருந்தது.

ராணா மற்றும் அதிவாரின் மதில்களின் மேல் தீபந்தங்கள் எரிந்தன. போர்க்கவசம் அணிந்த படைவீரர்கள் கல் நடைபாதைகளில் போர் கோஷமிட்டபடி நின்றிருந்தனர்.

அவர்களுக்கு முன் ராணா மற்றும் அதிவாரின் இரு இளவரசர்களும் தங்கள் புரவியில் அமர்ந்தபடி தங்கள் படைகளுக்கு தலைமை தாங்கி நின்றிருந்தனர்.

 

இரு அரசர்களும் கோட்டை மதிலின் நின்று தங்களது படை நகர்வை பார்த்திருந்தனர். இரு இராச்சியங்களின் படைகளும் கோட்டையின் வெளியே திரண்டு, ஒரே நேரத்தில் ஒரே லயத்துடன் அரவள்ளியின் மத்திய பிரதேசமானா ஸ்வர்ண கடியை நோக்கி இளவரசர்களின் தலைமையில் முன்னேறின. ஹூன் வம்சத்தின் சிறப்படையும் கோட்டை காவல் படையும் இரு ராஜ்யத்தின் கோட்டை காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 

ரணசூரன் வந்துவிட்டான்….

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்