
சபதம் – 25
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,
எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,
இசை மரபு ஆக, நட்புக் கந்து ஆக, 5
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்;
‘வருவன்’ என்ற கோனது பெருமையும்,
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே;
அதனால், தன் கோல் இயங்காத் தேயத்து உறையும் 10
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை
அன்னோனை இழந்த இவ் உலகம்
என் ஆவதுகொல்? அளியது தானே!
பொருள்:
கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருக்கத் துணிந்த பிசிராந்தையார் செயல் நினைக்கும்போது வியப்பாக உள்ளது. பிறன் நாட்டில் தோன்றிச் சிறப்புற்றிருக்கும் ஒருவனைப் போற்றி, அவன்மீதுள்ள நட்பு மட்டுமே துணையாக நிற்க, இப்படி வடக்கிருக்கும் காலத்தில் இங்கு வருதல் அதைக்காட்டிலும் வியப்பாக உள்ளது.
அராவள்ளி மலைத்தொடரின் பின்னால் சூரியன் மெதுவாக மூழ்கிக் கொண்டிருந்தது.
அதன் பொன்னிறம் அரண்மனைச் சுவர்களை சிவப்பாக்கிக் கொண்டிருந்தது. அதிவார் அரண்மனை சபா மண்டப உள்ளறையில் வீரும் ரணசூரும் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர்.
வீரின் கண்களில் எதிர்பார்ப்பு, அச்சம் என்று பல உணர்வுகள் கலந்திருந்தன.
ரணசூரிடம் எப்போதும் இருக்கும் இலகு தன்மை கொஞ்சமும் இல்லை. முகத்தில் நீங்காது நிலைத்திருக்கும் புன்னகை நண்பனை கண்டதும் மேலும் விரிவடையுமே அன்றி குறைந்ததில்லை.
ஆனால் இன்று அரண்மனைக்குள் நுழைந்த தருணத்தில் இருந்து, இப்போது வரை ஒரு சின்ன தலையசைப்பு கூட இல்லாமல், அவன் செயல்களில் ஏதோ அசாதாரணம் இருந்தது.
“இன்று ராணா அரண்மனைக்கு இரண்டு முகல் தூதர்கள் வந்திருந்தார்கள்” என்றான் ரணசூர், அவன் குரலில் இருந்த ஒட்டாத தன்மை வீரின் முதுகுத்தண்டை சில்லிட வைத்தது.
“அவர்கள்… சில முன்மொழிவுகளுடன் வந்திருந்தனர்” என்றதும் வீரனின் நெற்றி யோசனையில் சுருங்கியது, “சமாதான ஒப்பந்தம் தானே? முகலாய அரசருக்கு ஒத்துழைத்து, அராவள்ளி மலைத்தொடரின் ஸ்வரனி காடி பாதையை வரிவிலக்கின்றி அவர்களை பயன்படுத்த அனுமதிக்க கோரிய முன்மொழிவு தானே?” என்றான் வீர்.
அதற்கு ரணசூர், “அதுவும் தான்” என்றதும் வீரின் புலன்கள் விழிப்படைந்தன, “அதுவும் தான் என்றால் என்ன அர்த்தம் மித்ரா? வேறு என்ன முன்மொழிவு கோரினார்கள்?”
அதுவரை எதையோ நினைத்து யோசனையில் இருந்த ரணசூர், நண்பனை நேருக்கு நேர் பார்த்து, “திருமண ஒப்பந்தம்” என்றதும் அதிர்ந்த வீரின் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடி, ” முகலாய பேரரசரின் தம்பி, காபூல் ஆளுநர் மிர்சா முகம்மது ஹகீமுக்கு இளவரசி யசோதராவின் கை வேண்டுமென அரச முன்மொழிவு வந்துள்ளது” என்றதும் வீர் பதட்டத்துடன் நண்பனை ஏறிட்டான்.
“அதற்கு ராணா ராஜ்யத்தின் பதில் என்னவாக இருந்தது?” என்றவனின் குரல் நடுங்க, நண்பனிடம் கேட்டான்.
“இதில் ராணா ராஜ்யம் பதில் சொல்ல என்ன இருக்கிறது” என்றவன் கண்கள் நண்பனை அளந்தபடி, “அது நல்ல சம்பந்தமாகவே எனக்கு தோன்றியது…” என்றவன் குரல் முடியும் முன், “இதில் உன் விருப்பம் முக்கியமல்ல ரணசூரா, இதற்கு உன் தங்கை…” என்றவன் ரணசூரனின் பார்வையில், “அரசரின் விருப்பம் என்ன என்பதே முக்கியம் என்றான்.”
அந்த வார்த்தையில் ரணசூரின் உள்ளத்தில் ஏதோ உடைந்தது போல் உணர்ந்தவன், “உண்மை தான் இதில் என் விருப்பம் முக்கியமில்லை தான். ஆனால் யசோதரா…” என்று நிறுத்தியவன் வீரின் கண்களில் தெரிந்த துடிப்பில், இதுவரை இருந்த சின்ன நம்பிக்கையும் நொறுங்க தலையை உலுக்கிக்கொண்டான்.
“யசோதரா தான் போருக்காக பயந்து ஒரு முகலாய இளவரசனை மணக்க சம்மதிக்க மாட்டேன் என்று சபையில் வைத்து அறிவித்து விட்டாள்” என்றதும் அதுவரை இழுத்து வைத்த மூச்சை வெளியேற்றிய நண்பனை ஒரு வலி நிறைந்த புன்னகையுடன் பார்த்தான் ரணசூரன்.
அவன் கண்களில் கோபம், துரோகம், நம்பிக்கையின்மை அனைத்தும் கலந்திருக்க, நண்பனை பார்த்திருந்த ரணசூரின் விழிகளில் என்ன கண்டானோ வீர், “சரியாக தான் முடிவெடுத்திருக்கிறாள். இனி போர் என்று வந்தால் நாம் பார்த்து கொள்வோம்” என்று நண்பனின் தோள்களில் கைபோட வந்த வீரிடம் இருந்து பின் நகர்ந்து அமர்ந்தான் ரணசூர்.
அந்த செயலில் புருவம் சுருக்கிய வீர், “என்ன ஆயிற்று நண்பா” எனவும் ரணசூரன், “இங்கே வரும்போது,” என்றவன் குரல் நடுங்க, “நமக்கு நன்கு பரிச்சயமான ஒருவர் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். நீயே சொல்ல வேண்டிய விஷயம். மற்றவர் சொல்ல கேட்டேன். அதன் உண்மை தன்மை அறியவே உன்னை காண வந்துள்ளேன்” என்ற ரணசூரனின் வார்த்தையில் வீரின் இதயம் தாளம் தப்பி துடிக்க தொடங்கியது.
ரணசூரின் கண்களில் தெரிந்த வருத்தம், நம்பிக்கை அனைத்தையும் கண்ட வீர் கண்களை மூடிக்கொண்டான்.
அந்த ஒரு நொடி அவன் உள்ளத்தில் இருந்த பலவித பயங்களும் உயிர்த்தெழுந்தன. அதை உணராத ரணசூரன், “அது உண்மையா?” என்றவனின் குரல் உடைந்து வெளிவந்தது, “நீயும் யசோதாராவும் நேசிக்கிறீர்களா?”
அந்த கேள்வி இரு நண்பர்களின் இடையில் ஏற்பட்ட முதல் விரிசல் என்பதை உணர்ந்து காற்று தன்செயலை நிறுத்த, அரண்மனை முழுவதும் ஒரு மயான அமைதி நிலவியது.
ரணசூரின் கேள்வியில் இருந்த வலியை உணர்ந்த வீரன் மெல்ல கண்களைத் திறந்தான். அதில் குற்ற உணர்வு, காதல், பயம் என்று அனைத்தும் கலந்திருக்க, நண்பனை நேருக்கு நேர் காணமுடியாமல், “ஆம்,” என்று தலையசைத்துவைத்தான்.
அதனை கண்ட ரணசூரின் முகம் இருண்டது. அவன் உள்ளத்தில் இத்தனை வருடம் பாதுகாத்த ஒரு உறவு நொறுங்கியது போல் உணர்ந்தான்.
“அதை நீ என்னிடம் ஏன் மறைத்தாய்” என்ற ரணசூரின் கேள்வி குழந்தைத்தனமாக தெரிந்தாலும், நண்பனின் இந்த செயல் அவனை எந்த அளவுக்கு காயப்படுத்தி உள்ளது என்பதனை எதிரே இருந்தவனும் அறிந்து கொண்டிருந்தான்.
“சொல்ல நினைத்தேன்,” என்ற வீரின் குரல் தளர்ந்து வந்தது. மேலும் தொடர்ந்தவன், “ஆனால் சூரா, முக்கிய காரணம் நீ என் காதலை ஏற்றுக் கொள்ளாமல் போனால் நான் உடைந்து விடுவேன். உன்னை மீறி யசோதராவை என்னால் மணக்க இயலாது. அதே போல் உனக்காக யசோதராவை என்னால் மறக்கவும் இயலாது. இதனால் நமது நட்புக்குள் எந்த மாற்றமும் வந்துவிட கூடாது என்று நினைத்தேன்” என்றவனின் பதிலை கேட்ட ரணசூர் கசப்புடன் புன்னகைத்தான்.
“நீ மறைக்க நினைத்த அந்த நொடி நமது நட்பு மாறத்தொடங்கிவிட்டது இளவரசே” என்றதும் வீர் அவனை சமாதானப்படுத்த அருகில் வந்தவனிடம் இருந்து விலகி நின்ற ரணசூரனின் செயல் அவர்களின் சகோதரத்துவத்தில் உதித்த முதல் பிளவு.
“நீ என்மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்,” என்ற ரணசூரன், “ஆனால் நீ என்னை என் சொந்த இராஜ்யத்திலேயே முட்டாளாக்கிவிட்டாய்” என்றவனை இடைமறித்து ஏதோ சொல்ல முயன்ற வீரின் முன் கையை உயர்த்திய ரணசூரன், “போதும்” என்றபடி திரும்பி நடந்தவன், தனது புரவியில் பாய்ந்து ஏறியவன் மின்னலை விட வேகமாய் அதிவார் ராஜ்யத்தில் இருந்து மறைந்திருந்தான்.
கோபம் கொண்டு செல்லும் நண்பனை பார்த்தபடி நின்றிருந்த வீரின் உள்ளம் சிதறி போனது.
அந்த மாலை அராவள்ளி சிகரங்களின் பின்னால் சூரியன் அஸ்தமனமாக, இரு இராச்சியங்களின் விதியையும் மாற்றியிருந்தது.
அதிவார் அரண்மனையில் இருந்து அதிவேகமாய் புரவியை செலுத்தியபடி வந்த ரணசூரின் உள்ளம் கொதித்தது. அரவள்ளியை குளிர்விக்கும் மாலை காற்றும் அவன் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கவில்லை.
ஸுலேய்க, ஹூன் வம்சத்தின் மூத்த வாரிசு, மெஹ்ருன்னிசாவின் தமக்கை. அதுமட்டும் அவளது அடையாளம் அல்ல, மென்மையானவள், அழகி, பேசும்போது மற்றவருக்கு வலிக்குமோ என்று பேசும் ரகம். மெஹ்ருன்னிஷ்ஹாவின் நேர் எதிர் குணம் கொண்டவள்.
அது மட்டும் தான் என்று ரணசூரனிடம் கேட்டாள், இல்லை என்றே சொல்வான். ஸுலேய்கா ரணசூரனின் காதல் பெண். ரணசூரன் காதல் சொல்ல துணிந்தால் ராஜ்யம் இரண்டுபடும். ஹூன் வம்சமும் ராணா வம்சமும் எதிர் துருவங்களாக மாறும். இன்னும் பல இன்னல்கள் வந்து சேரும். அதனால் தன் காதலை புதைத்தவன் முன் காதல் சொல்லி நின்றாள் அவனவள்.
ஆசைப்பட்ட காதல் கையருகில் இருந்தும், குடும்பம், நட்பு என்று விலகி சென்றவன் பின் விடாமல் துரத்தும் ஸுலேய்காவின் கண்ணீர் அவனை பலமுறை அசைத்து பார்த்தும் மனதை கல்லாக்கி வெளியே சிரிப்பவன். அவனா நண்பனின் காதலை பிரித்துவிடுவான்.
கண் முன்னாள் காதல் கண்ணாட்டி கண்ணீரோடு காதல் போராட்டம் செய்ய, வலிக்கும் நெஞ்சை மறைத்தபடி உலா வருபவன், தன் தங்கையின் மனதை நோகடித்து விடுவானா? இல்லை உயிருக்குயிராய் பழகும் நண்பனுக்கு தான் காதலின் வலியை தரத்துணிவான?
ஸுலேய்க இன்று அவனிடம் காட்டுப்பாதையில் வைத்து வீர் மற்றும் யாசோவின் காதலை சொல்லாமல் போயிருந்தால், தான் இன்னும் முட்டாளாக்க பட்டிருப்போமே என்றெண்ணியவன், காலை அரண்மனையில் இருந்து புறப்பட்ட பின் நடந்தவைகளை மீண்டும் மனதில் ஓட்டிப்பார்த்தான்.
அரண்மனையில் இருந்து நண்பனை காண வந்தவன், தனிமை நாடி ஸ்வர்ண நதிக்கரையில் ஒரு வளைவில் குதிரைக்கு தண்ணி காட்டியவன், மெதுவாக அந்த காட்டுப்பாதையில் நடந்து கொண்டிருந்தான்.
முகல் தூதர்கள், சமாதானப் பேச்சுகள், போரின் அச்சுறுத்தல் என்று அவனது மனதில் கொந்தளிக்கும் புயலை அடக்க முயற்சித்தபடி நடந்து கொண்டிருந்தான்.
அவன் போகும் இடம் எல்லாம் மெல்லிய கொலுசொலி பின்தொடர, ஒரு கட்டத்தில் நடையை நிறுத்தி, பின்புறம் திரும்பாமல், “அரை மைல் தூரம் எனைத் தொடர்ந்து வருகிறாய்.
பேச வேண்டுமென்றால் நேரில் வந்து பேசு” என்றதும் மரங்களின் நிழலிலிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள்.
ஸுலேய்க ரணசூரின் மனதுக்கு நெருக்கமானவள். ஹூன் வம்சத்தின் மூத்த மகள். அவனின் வார்த்தையில் முகம் சிவக்க, “எப்போதும் நான் தான் என்று எப்படி கண்டுகொள்கிறீர்கள்” என்றவளின் முகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக பார்வையை திரும்பியவன், “உன் கால் சலங்கை சத்தத்தை கொண்டு தான். மேலும்… என்னை பின்தொடரும் ஒரே பெண்ணும் நீ தான்” என்றதும் அவள் கண்களில் நீர் கோர்த்தபடி பிடிவாதமாக இதழை வளைத்து சிரித்தாள்.
” உங்களை வாழ்க்கை முழுதும் பின்தொடரதான் விரும்புகிறேன். ஆனால் தாங்கள்….” என்றவளின் கண்ணீர் குரல் ரணசூரின் இதயத்தை கசக்கியது. ஆனால் அவன் துரதிஷ்டசாலி, எப்படி பட்ட காதலை உத்தர வேண்டியிருக்கிறது.
வேறுவழியின்றி குரலை இரும்பாக்கி கொண்டவன், “ஸுலேய்க இதுபற்றி நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம். உன் தந்தை இரு இராச்சியங்களின் பாதுகாவலர். என் தந்தை ராணாவின் அரசர். நமக்குள்ளான காதல் இரு வம்சங்களுக்கு இடையிலான அழிவை மட்டுமே தரும்”
அதைக்கேட்ட அவள் கண்கள் தீயாய் எரிய, “அழிவா? அல்லது ஒன்றிணைவா? காதலை வெளிப்படுத்தினால் தானே அதனை நாம் தெரிந்து கொள்ள முடியும்” என்றவளை பார்த்து மறுப்பாக தலையசைத்தான் ரணசூர்.
“நம்மிடையே காதல் என்பதறிந்தால் உன் தந்தை தனது நடுநிலையை இழப்பார். என் தந்தை தனது நம்பிக்கையை இழப்பார். அதிவார்–ராணா கூட்டணி சிதறும். ஹூன் வம்சத்தின் துணை இல்லாமல் இராச்சியம் சரிந்து போகும்” என்றவனை தாடை இறுக பார்த்து நின்றாள்.
“அப்படியா? இந்த விதி…இந்த பயம்…இந்த சட்டம்…நம்மிருவருக்கு மட்டும் தான் பொருந்துமா ?” என்றவளை புருவம் சுருக்கி பார்த்த ரணசூரன், ” என்ன சொல்கிறாய்?” என்று வினவினான்.
அதற்கு அவள் கசப்பான சிரிப்பை உதிர்த்து, “அஹ் இளவரசரே.. நீங்கள் விசுவாசம், கடமை என்று போதிக்கிறீர்கள். ஆனால் உங்கள் சகோதரி மற்றும் உங்கள் நெருங்கிய நண்பன் இருவருக்கும் அந்த விதி பொருந்தாதா?” என்றதும் ரணசூர் உறைந்து நின்றான்.
ரணசூரன் இதயம் துடிக்க, “என்ன சொன்னாய்?” என்றதும் அவனை நெருங்கி வந்த ஸுலேய்க, “இளவரசர் வீர் மற்றும் இளவரசி யசோதாரா, இருவரும் காதலர்கள்” என்றதை கேட்ட ரணசூரின் முகம் வெளுத்துவிட்டது.
அதனை கேட்ட ரணசூர், “இல்லை. இல்லை, வீர் என்னிடம் சொல்லாமல் இருக்க மாட்டான்.
யசோதாரா, அவள் ஒருபோதும்….” என்றவனின் துடிப்பை தாங்கி கொள்ள முடியாத ஸுலேய்கவால் அவன் வலியை காணசகிக்காமல் குனிந்து கொண்டாள்.
அதனை உணர்ந்த ரணசூர், “ஸுலேய்க, என்னை பார் இது…நீ சொல்வது உண்மைதானா?” என்றவனிடம் மேற்கொண்டு பேசமுடியாமல் அங்கிருந்து கண்களில் வழிந்த நீரோடு, கால் சலங்கை சத்தமிட, கட்டுக்குள் பாய்ந்து ஓடி மறைந்தாள்.
அவன் கேட்ட செய்தியை நம்ப முடியாமல் தவித்தாவன், விரைந்து அதிவார் அரண்மனையை அடைந்து வீரிடம் உண்மையை வினவியவன் அறிந்து கொண்ட செய்தியில் நிலைகுலைந்து போனான்.
ரணசூரன் வந்துவிட்டான்….

