
சபதம் – 21
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே?
பொருளுரை:
தனது பழைய நகரத்தின் வாயிற்புறத்தே உள்ள குளிர்ந்த நீருடைய குளத்தில் மூழ்கி,
பொதுவிடத்தில் உள்ள வேப்பமரத்தின் ஒளிபொருந்திய தளிர்களை அணிந்து,
தெளிந்த ஒலியுடைய பறை முன்னே ஒலித்துச் செல்ல,
அதன் பின்னர் யானையைப்போல் பெருமிதத்தோடு நடந்து கடுமையான போர் செய்யப் பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்திற்கு வருகிறான்.
அவனை எதிர்த்துப் போர் புரிவதற்கு அணியணியாகப் புதுப்புது வீரர்கள் பலர் வருகிறார்களே! பகற்பொழுது மிகச் சிறிதே (எஞ்சி) உள்ளதால், சில பகைவர்கள் தப்பிவிடுவார்களோ?
ராஜபுத்திர சபைக் கூட்டம் முடிந்தும், அரண்மனை பாதைகளில் இன்னும் பதற்றத்தின் அதிர்வு இருந்தது.
கரண் தன் அறைக்குள் நுழைந்தான். சோர்வின் பாரம் அவன் தோள்களை அழுத்திக் கொண்டிருந்தது. அவன் உடையின் கழுத்துப்பட்டையை தளர்த்தி பெருமூச்சு விட்டவன், அவன் அறைக் கதவு திறக்கப்படும் ஓசையில் புருவத்தை யோசனையில் சுருக்கியபடி, கழுத்தை மட்டும் சாய்த்து கதவின் புறம் பார்வையைத் திருப்பினான்.
அழகிய வேலைப்பாடுகள் கொண்ட அந்த அறைக்கதவை தள்ள முடியாமல் தள்ளியபடி உள்ளே நுழைந்தாள் அதிரா. கரணின் முன் வந்து நின்றவளின் கண்களில் தெரிந்த குற்றச்சாட்டில், அவளை யோசனையுடன் பார்த்து நின்றான் கரண்.
கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல், தன்னையே பார்த்திருந்த கரணின் செயலில் கோபம் கொண்ட அதிரா, “கலீல் எங்கே?” என்றதும் அவளை ஓரக் கண்ணில் பார்த்தபடி இருக்கையில் அமர்ந்து, அங்கு அடுக்கி வைக்கப்பட்ட கோப்புகளில் ஒன்றை கையில் எடுத்து புரட்டியவன், “அதிரா…இப்போது வேண்டாம். எனக்கு வேலை இருக்கிறது ” என்றபடி வேலையை தொடர்ந்தான் இல்லை தொடர்வதுபோல் அதிராவிடம் காட்டிக் கொண்டான்.
அவனையே சற்று நேரம் உறுத்து விழித்தபடி பார்த்து நின்ற அதிரா கரணின் அருகில் சென்று அவன் கைகளில் இருந்த கோப்பை பறித்தவள், “இல்லை கரண். எனக்கு இப்போதே பதில் வேண்டும். பல நாட்களாக இந்தக் கேள்வியைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறாய். உண்மையைச் சொல் கலிலுக்கு என்ன ஆனது?” என்றவள் கேள்வியில் கரண் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
அதைக் கண்ட அதிராவின் குரல் கோபத்தில் நடுங்க, ” ஏன் பதில் சொல்ல மறுக்கிறாய். உனக்கும் கலிலுக்கும் ஒருவரை ஒருவர் பார்த்தாலே பிடிப்பதில்லை என்பது எனக்கு தெரியும்.
இருவரும் சந்தித்துக்கொண்ட போதெல்லாம் சண்டையிட்டுக் கொண்டீர்கள் என்பதும் தெரியும்.
உண்மையைச் சொல், கரண்…அவனை நீ….?” என்றதும் விருட்டென்று நிமிர்ந்தவனின் கண்களில் கோபக்கனல் ஜொலித்தது.
அவனின் அந்த பார்வையில் கோபம் , வருத்தம் என்று அனைத்தும் நிறைந்திருக்க, அதிராவை பார்க்க விரும்பாமல் சாளரத்தின் அருகே சென்று தன்னவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டான்.
அதிரா “உன் மௌனத்தின் அர்த்தம் என்ன கரண்? மௌனம் சம்மதமா? கலிலை நீ..?” என்ற வார்த்தையை அவள் முடிக்கும் முன், கைமுஷ்டிகள் இறுக சாளரத்தின் கம்பியை பிடித்தவனின் மூச்சு திணறியது.
அந்த நேரத்தில் அந்த அறையின் கதவு பலத்த சத்தத்துடன் திறக்கப்பட்டது. ஆசாத் கானும் அவரை தொடர்ந்து மகாராஜா சமர் சிங்கும் உள்ளே நுழைந்தனர். அவர்களை கண்ட அதிரா திடுக்கிட்டாள்.
ஆசாத்தின் விழிகள் அதிராவை நோக்க, அவள் கண்களில் தெரிந்த துயரம், ஆசாத்தை நிதானத்திற்கு கொண்டு வந்தது.
ஆசாத், “பேட்டி… நீ தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறாய்” என்றதும் அதிரா, “தவறாகவா?” என்றவளுக்கு பதிலாய் , ஆசாத், “கரண் கலீலை காயப்படுத்தவில்லை மகளே. இளவரசர்…கலிலை காப்பாற்றி உள்ளார்’ என்றதைக் கேட்ட அதிராவின் மூச்சு தடைபட்டது.
அதிரா, குழப்பத்துடன் ஆசாத்தையும் கரணையும் பார்க்க, ‘ஆம்’ என்பதாக தலையசைத்த ஆசாத் கான், “ஸ்காட்லாந்தில் யாரோ கலீலை கொல்ல முயன்றிருக்கிறார்கள். விபத்தில் மோசமாக காயமடைந்தவனை காப்பாற்றி, அவனுக்கு தேவையான மருத்துவ உதவி செய்து இன்று வரை பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பார்த்துக் கொள்கிறார்” என்றதும் அதிரா கரணை நோக்கி திரும்பியவளின் முகத்தில் அதிர்ச்சி, குழப்பம், நம்பிக்கையின்மை என்று அனைத்தும் நிறைந்திருந்தது.
கரண் இன்னும் அவளை நோக்கி திரும்பவில்லை. அதிராவின் கண்களில் நீர் பெருக, “அப்படியிருக்க… ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்றவளின் கேள்விக்கு கரணின் குரல் தாழ்ந்து வந்தது.
அவனின் உள்ளே ஏதோ உடைந்தது போல தோன்ற, குரலை செருமிக்கொண்டு, “உன்னிடம் சொல்வதானால் எதுவும் மாறப் போவது இல்லை அதிரா” என்றவனை அழுகையுடன் பார்த்த அதிரா, “எனக்கு மாறும்! எனக்கு மாறும் கரண்… எனது வாழ்வின் முக்கியமான இருவரின் செயல் எனக்கு முக்கியமில்லை என்று நீ எப்படி முடிவெடுக்கலாம்?” என்றவள் வார்த்தை கரணின் இதய கவசத்தில் முதல் பிளவை ஏற்படுத்தியது.
மகளின் நிலை ஆசாத்தை வருத்த, “லண்டனுக்கு வந்த முதல் நாளே இளவரசர் என்னிடம் கலிலை பற்றி அனைத்தையும் கூறிவிட்டார் மகளே. அப்போது கலிலின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அது தான் அவன் இருக்கும் இடத்தை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம்” என்று கரணின் நிலைமையை விளக்கினார்.
அதனை கேட்ட மகாராஜா கரணின் தோளில் கை வைத்து, ” பேட்டா…இதை ஏன் என்னிடம் இருந்து மறைத்தாய்? உனது கடமைகளில் எனக்கும் பங்கு இருப்பதாக அல்லவா நினைத்தேன்” என்ற அரசரை காண முடியாமல் தலைகவிழ்ந்து நின்ற கரணின் தொண்டை இறுகியது.
அதிரா மெதுவாக கரணை நெருங்கி, “அவனை ஏன் காப்பாற்றினாய்…கரண்? நீ எப்போதும் கலிலை உன்னருகில் நெருங்க விட்டதில்லை என்பதை, நான் கவனித்திருக்கிறேன். அப்படி இருந்தும் அவனை பாதுகாக்கும் இந்த நோக்கத்துக்குப் பின் இருப்பது என்ன?” என்றவளின் வார்த்தையை கேட்ட கரணின் கண்களில் ஒரு நொடிக்குள் வலி, மறைக்கப்பட்ட ஏதோ ஒன்று என்று அனைத்து உணர்வுகளும் தோன்றி மறைந்தது.
அதிராவின் கேள்விக்கு பதிலளிக்க முயன்ற அந்த நொடியில், அவனின் கைப்பேசி ஒலியெழுப்ப, அதில் தெரிந்த எண்ணை கண்ட கரண் அழைப்பை ஏற்றவன், “சுக்விந்தர்?
அங்கு எந்த பிரச்சினையும் இல்லையே?” என்றவனின் குரல் நடுங்குவதை விசித்திரமாக பார்த்து நின்றாள் அதிரா.
மறுமுனையில் பேசிய சுக்விந்தர், “மாஃப் கீஜியே யுவராஜ்… கலீலை… காணவில்லை” என்றதும் கரணின் இரத்தம் உறைந்து போனது .
“காணவில்லையா? என்ன சொல்கிறாய்?” என்ற கரணிடம், “கலிலுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த அறை வெறுமையாக காணப்பட்டது, யுவராஜ். சில நாட்களாக விழிப்புக்கும் மயக்கத்துக்கும் நடுவில் போராடி கொண்டிருந்தவரின் உடலில் இருந்த மருத்துவ உபகரணங்களை நீக்கி விட்டோம். இன்று காலை மருத்துவ சோதனைக்கு அறைக்குள் சென்ற மருத்துவர் படுக்கை காலியாக இருப்பதாக கூறியதும் தான் விஷயம் தெரியவந்தது.
எப்படி வெளியேறினான் என்று தெரியவில்லை” என்றதை கேட்ட கரணின் கைகள் நடுங்கியது.
கரண் பதற்றத்துடன், “கேமராக்களைப் பாருங்கள். வாயில்களைச் சரிபாருங்கள்!” என்றதும் சுக்விந்தர், “பார்த்துவிட்டோம் இளவரசே. எதுவும் இல்லை அவன் காற்றை போல் மறைந்துவிட்டான்” என்றதும் கரணின் முகம் இருண்டது.
அதிரா வாயை கைகளால் மூடியபடி நின்றாள். ஆசாத் பயத்தில் உறைந்திருந்தார்.
அவர்களின் நிலைமையை உணர்ந்து கொண்ட மகாராஜா முன்னே வந்து, “கரண்…
இதன் அர்த்தம் என்ன?” என்றதும் கரண் குரல் உடையச் சொன்னான், “சவுஹானின் ஆட்கள் கையில் கலீல் சிக்கினால், அவன் உயிர் பிழைப்பது கடினம். சாதாரணமாக இருந்திருந்தால் கலிலை யாராலும் நெருங்க முடியாது. ஆனால் அவன் உடல் இருக்கும் நிலையில்….” என்றவன் தன் கண்களை இறுக மூடிக்கொள்ள, அந்த அறை முழுவதும் கனமான அமைதி நிலவியது.
இரவு நேரம் அராவள்ளி மலைத்தொடரில் காற்று மரங்களின் இடையே பிளந்து ‘ஊஊ’ என்ற சத்தத்துடன் அந்த காட்டுப்பாதையை மேலும் பயங்கரமாக காட்டி கொண்டிருந்தது. வளர்ந்த மரங்களுக்கு இடையே எப்போதாவது தலைகாட்டிவிட்டு செல்லும் வெள்ளி மகளின் தேவை அந்த கரும் இருட்டுக்கு தேவைப்படவில்லை.
குளிர்ந்த காற்று முகத்தில் மோத காட்டின் இருளை கிழித்தபடி திக்குத்திசை தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தான் கலீல் ஹாசிம். வெறும் காலில் கற்களையும் வேர்களையும் மிதித்தபடி, மூச்சு வாங்க உடல் தளர்ந்து, நிற்க முடியாமல் ஒரு இடத்தில் தவறி விழுந்தவன், மீண்டும் அடிபட்ட காலை பிடிவாதமாக எடுத்து வைத்து நடந்தான்.
அவன் எங்கு செல்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.ஆனால் ஏதோ ஒரு சக்தி, ஒரு குரல், அவனை இழுத்துச் சென்றது.
மார்புக்குள் எரியும் நெருப்பு அவன் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கூர்மையடைந்தது. எத்தனை மணிநேரம் ஓடியும் நடந்தும் கடந்தானோ விபத்தில் இருந்து சற்று தேறி வந்த உடம்பு ஓய்வுக்கு கெஞ்சியது.
சில நொடிகளில் காடு திறந்து, ஒரு வெளிச்சத் திடல் அவன் கண்ணுக்கு புலப்பட்டது. அதனை நோக்கி ஓடியவன், அந்த இடத்தை பார்த்ததும் உறைந்து நின்றுவிட்டான்.
திடலின் நடுவே பழமையான, தீயால் கருகிய ஒரு உயர்ந்த கல் தூண் காலத்தின் கோலத்தால் மெல்ல பிளவுபட்டு நின்றிருந்தது. அதன் மேல் படிந்த கருமை நூற்றாண்டுகளின் சாபத்தை நினைவு படுத்துவது போல் இருந்தது.
அந்த இடத்தை பார்த்த கலிலின் கண்களில் ஒரு ராஜபுத்திர வீரன் தனது சபதத்தை நிறைவேற்ற தீயில் கருகியதை உணர்ந்துகொண்டவனின் முழங்கால்கள் தளர்ந்து
தரையில் விழுந்தான்.
தீ
ஒரு வாள்
ஒரு துரோகம்
ஒரு கை அவனை நோக்கி நீள
வீரின் குரல்
தன் உடல் எரிவது போன்று கண் முன் கோர்வையற்ற பல நினைவுகள் அவனை அலைக்கழிக்க, வேதனை தாங்காது, தலையை பிடித்து கொண்டு அந்த தூணின் முன் சுருண்டு விழுந்தவன் காடே அதிர ‘ஆ’ என்று கத்தினான்.
அதே இரவு காரின் ஸ்டியரிங்கை பிடித்திருந்த கரணின் கைகள் நடுங்கின. அவன் எதற்காக இங்கே வருகிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் வரவேண்டும் என்று மனதுக்குள் ஒரு குரல்.
இந்த மலைத்தொடர் அவன் வாழ்வின் முக்கிய பங்கு கொண்டது. அவனது தாய் இறந்த இடம். அவனது முந்தைய பிறப்பின் ரகசியத்தை உணர்ந்த இடம். அனைத்தையும் விட வீரின் நெருங்கிய தோழன் ரணசூர் தீயில் விழுந்த இடம்.
அன்னை இறந்த பின் அதிவார் அரண்மனைக்குள் நுழைந்த கரண் உள்ளம் உந்த அரண்மனையின் சுரங்கப்பாதைக்கு செல்ல அங்கு இருந்த ஒரு பெரிய ஓவியத்தின் பின் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட பேழை இருந்தது.
அவனை பின் தொடர்ந்து வந்த மஹாராஜா சமர் சிங், மகனின் கைகள் அந்தத் தங்கப் பேழையை தடவுவதை பார்த்து, “அந்த பேழைக்கு திறவுகோல் இல்லை மகனே” என்றவர் எதிரே இருந்த ஆறடி உயர் ஓவியத்தை காட்டி, “அதிவாரின் தீர்க்க தரிசனத்தின் படி, இந்த ஓவியத்தில் இருக்கும் இளவரசர் வீர் விக்ரம் அதிவாரின் மறுபிறப்பே இதனை திறக்க முடியும் என்று…” என்றவர் கண்கள் அதிர்ந்து நின்றது.
காரணம் அந்த பேழையின் மத்தியில் இருந்த சூரிய வடிவ பதக்கத்தின் முன் இருந்த கத்தியில் கரணின் விரல் கீறப்பட்டு அதில் இருந்து ஒரு துளி ரத்தம் பேழைக்குள் மறைந்ததும், அந்த பேழை திறந்து கொண்டது.”
அதன் உள்ளே இருந்த பெரிய ஓலைச்சுவடியை பத்திரப்படுத்தி கொண்ட கரணுக்கு தெரியாது அது அவனின் பூர்வ ஜென்மத்தின் வாழ்க்கை வரலாறு என்பது.
அந்த வரலாற்றை லண்டனில் வைத்து படித்தது. இந்த ஜென்மத்திலும் தன்னை கண்டவுடன் ஓடி வந்து பேசிய ரணசூரனை வெறுப்பது போல் காட்டிக்கொண்டது. தன் யசோதராவை கண்டதும் மீண்டும் காதல் கொண்டது என்று அனைத்தையும் எண்ணி கொண்டு வந்தவன்,
காரை நிறுத்திவிட்டு, அவனை வரவேற்பது போல் முகத்தை தழுவி சென்ற காற்றை நுரையீரலில் நிரப்பிக்கொண்டான்.
மெல்ல அவன் சபதத் திடலை நோக்கி நடந்தான். அங்கே ஒரு உருவம் முழங்காலில் விழுந்து நடுங்கிக் கொண்டிருந்தது. அந்த மனிதனை கண்டதும் கரண் உறைந்து நின்றுவிட்டான்.
மண்டியிட்ட உருவம், தலையை பிடித்து கொண்டு கத்த, அதில் உணர்வுக்கு வந்த கரண், “கலீல்…” என்று மெல்ல அழைத்தான்.
அந்த நொடி கலீல் மற்றும் கரணின் கண்கள் மோதிக்கொள்ள, வீர் விக்ரம அதிவாரால் ரணசூர் ருத்ரப்ரதாப் ராணா மீண்டு வந்துவிட்டான்.
ரணசூரன் வந்துவிட்டான்…….

