Loading

சபதம் – 20

 

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

 

திருக்குறள் (776)

 

பொருள்:

 

கழிந்து போன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே படை மறவனாவான்

 

நண்பகற்பொழுதின் வெப்பம் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பொன்னிற ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்தது. அதிகாரத்தின் வாசனை காற்றில் கனமாகப் பரவ, கோப்புகள், முத்திரைகள், கையொப்பங்கள் என்ற அனைத்தும் அந்த வெப்பத்தில் மறைமுகப் போரின் ஆயுதங்களாகத் தோன்றின.

 

ஒரு எழுத்தர் கோப்பின் மீது அங்கீகரிக்கப்பட்ட முத்திரையைப் பதித்தான், அதைப் பார்த்தபடி

மூலையில் நின்று கொண்டிருந்த சவுஹானின் இதயம் ஒவ்வொரு நொடியும் வேகத்துடன் துடித்துக் கொண்டிருந்தது.

 

எழுத்தர் அதிகாரப்பூர்வ ஆவணத்தை அவனிடம் நீட்டி, “திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.” என்றிட அதைக் கேட்ட சவுஹான் அதுவரை இழுத்து வைத்திருந்த மூச்சை, நிம்மதியுடன் வெளியேற்றினான்.

 

அந்தச் சட்டம் ராஜபுத்திரர்களுக்கு எதிராக வகுத்த இறுதித் தாக்குதல், ‘நூறு மீட்டருக்கு மேல் உள்ள நிலவடிவங்களுக்கே மலை என்ற அந்தஸ்து’ என்ற திருத்தச் சட்டம். மாலிக்கின் இறுதி ஆயுதம்.

ஒரு மாதமாக அதிகாரிகளுக்கும், மேலிடத்துக்கும் லஞ்சம் கொடுத்து வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட இந்தத் திருத்தச் சட்டத்தில் அரசின் பொறிக்கப்பட்ட முத்திரையை அவன் விரல்கள் மெல்லத் தடவிப் பார்த்து, “ஒரு வழியாக…” என்று அந்தக் கோப்பை கைகளில் இறுகப் பற்றிக் கொண்டான்.

 

நாடாளுமன்ற படிக்கட்டுகளை கடந்த சவுஹான் கைகளில் பற்றிய கோப்புடன் வெளியேற, அவனின் பின்னால் வானம் ஆரஞ்சு வண்ணத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

 

தன் கைப்பேசியை எடுத்தவன் ஒரு எண்ணை அழைத்தான். அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட, “முடிந்ததா?” என்ற கூர்மையான கேள்விக்கு சவுஹானின் உதடுகளில் வெற்றிகரமான சிரிப்பு மலர்ந்தது.

 

“ஆம், மாலிக். சட்டம் நிறைவேற்றப்பட்டது. அரவள்ளிக்கு இனி பாதுகாப்பில்லை” என்றதைக் கேட்டதும் மறுபுறம் ஒரு நீண்ட அமைதி நிலவியது.

 

அதன் பின் கேட்ட மாலிக்கின் குரலில் நஞ்சு கலந்து வெளிவந்தது, “நன்று. ராஜபுத்திரர்களின் அழிவு தொடங்கட்டும்.”

 

சவுஹானின் கண்கள் ஆனந்தத்தில் மின்னியபடி, “ராஜ்புத்திரர்கள் இதை ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்” என்றபடி மாலை சூரியன் மறையும் அந்த நொடியில்
ஒரு மலைத்தொடரின் மரண உத்தரவை கைப்பற்றியபடி நடந்து சென்றான்.

 

இரவு நிலவின் ஒளியில் உதய்பூர் அரண்மனை கோபுரங்கள் வெள்ளி தீபங்களாக ஜொலித்தன.

 

அரண்மனையின் ரகசிய ஆலோசனை அறை மங்கலான இருளில் மூழ்கி இருந்தது.
ஒரே ஒரு எண்ணெய் விளக்கின் மஞ்சளொளி மட்டும் சுவர்களில் பட்டு அறையை நிறைத்திருந்தது.

 

மன்னர், கரண் மற்றும் ஆசாத் அன்று நடந்த தாக்குதலைப் பற்றியும், சிறையில் இருக்கும் அமைச்சரின் நிலை பற்றியும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரம் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அம்ஜத்தை மூவரும் நெருக்கடியான அமைதியில் பார்த்திருந்தனர்.

 

அதனை பார்த்த அம்ஜத் தான் ஏதோ முக்கிய விவாதத்தின் போது குறுக்கிட்டுள்ளோம் என்பதை உணர்ந்து மூவரையும் இடை வரை குனிந்து வணங்கியவன், “குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும்… அவசரம் தங்களை தேடி மேம் சாஹிபா மற்றும் சோட்டி சாஹிபா வந்துள்ளனர். அரசரை இப்போதே பார்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்” என்றவனின் வார்த்தை முடியும் முன் மகாராஜா சமர் சிங் அவர்களை உள்ளே அழைத்து வர கட்டளையிட்டார்.

 

மீனாட்சி இந்த நடுநிசியில் அரசரை தேடி வந்திருக்கிறாள் என்றால், நிச்சயம் அதற்கு முக்கிய காரணம் இருக்கும் என்று அங்கிருந்த மூவரும் உணர்ந்திருந்தனர்.

 

மீனாட்சி மெதுவாக உள்ளே வந்தவளின் முகம் வெளுத்துப் போய் இருக்க, ஒரே இரவில் நூற்றாண்டுகளை கடந்த உயிரினைப் போல அவளின் கண்கள் ஒளியிழந்து இருந்தது.

 

தனது ஆஸ்தான அரியணையில் அமர்ந்திருந்த மன்னர், மீனாட்சியின் பார்வையில் பதறி எழ, அருகில் இருந்த ஆசாத் தன் குல முன்னோர்களின் ஆசியுடன் மீண்டு வந்த பெண் தெய்வத்தின் உடல் நடுக்கத்தை உணர்ந்து, “பேட்டி… க்யா ஹுவா?” என்றவரின் குரலும் உடைந்திருந்தது.

 

அதையே மகாராஜாவும் வினவ, “மீனாட்சி… என்ன ஆனது மகளே?” என்றதும் நடுங்கும் கைகளை அங்குள்ளோரின் முன் உயர்த்தியவள், ” என்னவென்று சொல்வேன் அரசே!
அரவள்ளி ராஜபுத்திரர்களை அழைக்கிறாள்?” என்றதும் அறை முழுவதும் அமைதி நிறைந்திருந்தது.

 

மீனாட்சி அறையின் நடுவில் வந்து நின்றாள். அவளின் குரல் மெல்லியதாக அதே சமயம் பாரத்தை சுமக்கும் வலிமையுடன், “அரவள்ளி ஒரு கல் அல்ல. அது அதிவாரின் இதயம். அது ராணாவின் கண்கள். ஆயிரம் ஆண்டுகளாக இந்த நிலத்தை காத்து வந்த உயிருள்ள சக்தி” என்றதும் அதிராவின் கண்கள் பெரிதாகின.

 

அதிரா, “உயிருள்ள சக்தியா…?” என்றவளுக்கு ‘ஆம்’ என்று தலையசைத்தாள் மீனாட்சி.

 

மேலும் தொடர்ந்த மீனாட்சி, “இப்போது அந்த உயிருக்கு ஆபத்து வந்துள்ளது. இதயம் இரத்தம் சிந்துகிறது. கண்கள் இருளுக்குள் நின்று வெளிச்சத்தை நாடுகிறது” என்றவளின் குரலில் இருந்த ஆக்ரோஷத்தில் அறை முழுவதும் ஒரு சிறிய அதிர்வு ஏற்பட, அது அந்த பழமையான அரண்மனையையும் தாக்கியது.

 

மேலும் பேசிய மீனாட்சியின் குரல் வலுவடைந்து, “அரவள்ளி எனும் சக்தியை காக்க,
வாரிசுகள் எழ வேண்டும். பண்டைய நெருப்பில் பிறந்த இரு இரத்தங்கள். விதியால் பிரிந்த இரு குலங்கள்” என்றவள் சிறு இடைவெளியிட்டு, “அவர்கள் கர்னி மாதாவின் ஆசியாள் ஒன்றிணைக்கப்பட்டவர்கள்” என்று முடித்தாள்.

 

அதைக்கேட்ட மகாராஜா சமர் சிங்,” அதிவார் மற்றும் ராணா வம்ச வாரிசுகள் ” என்று முனங்கியவரின் குரல் அங்கிருந்த அனைவரையும் எட்டியது.

 

அதில் நிமிர்ந்து நின்ற கரணின் அருகில் நெருங்கிய மீனாட்சி, அவன் கண்களுக்குள் கூர்மையாக பார்த்தபடி, “ஆம். ஒருவன் அதிவாரின் நெருப்பைத் தாங்கி நிற்கிறான்” என்றவள் தனது பார்வையை மீண்டும் அரசர் மேல் பதித்தபடி, “மற்றொருவன் ராணாவின் புயலைத் தாங்கி நிற்கிறான்” என்றபடி, “தனித்து நின்றால் இருவரும் வீழ்வர். ஒன்றிணைந்தால்… அழிவைத் தடுக்க முடியும்” என்றாள்.

 

அனைத்தையும் பொறுமையாக கேட்ட ஆசாத் நடுங்கும் குரலை சரி செய்தபடி, “அப்படியென்றால் காவலன்? அவனின் பங்கு?” என்றதும் எரியும் விழிகளால் ஆசாத்தை பார்த்தவள் , இதழோரப் புன்னகையுடன், “தியாகத்தின் சாம்பலில் இருந்து உன் வம்சத்தின் காவலன் எழுவான். ஒருமுறை நீ இழந்த ஹூன் வம்சத்தின் வித்து… மீண்டு வருவான். வாரிசுகளை காக்க மீண்டும் உயிர் பெறுவான்” என்றதும் ஆசாத்தின் முழங்கால்கள் பலவீனமடைந்து அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

அவள் யாரைப் பற்றி சொல்கிறாள் என்பதை அறிந்து கொண்ட ஆசாத், “ரஷீத்…” என்றதும் அதை ஆமோதித்து தலையசைத்தாள் மீனாட்சி.

 

“அவன் கவசம் போன்றவன். அரசர்களின் பாதுகாவலன்” என்ற மீனாட்சியை பார்த்த அதிரா முன்னே வந்து நின்று நடுங்கும் குரலில், “அப்படியென்றால் நான்? என் நினைவுகளில் வாழும் அந்த பெண் யார்?” என்று துணிச்சலுடன் கேட்ட அதிராவை பார்த்த மீனாட்சி கண்களில் இதுவரை இல்லாத துயரத்தை தாங்கியபடி, “நீ அவர்களின் உந்துசக்தி.
வாரிசுகளை இணைக்கும் தீப்பொறி. நீயே அவர்களை ஒன்றிணைக்கும் அக்கினி” என்றதும் அதிராவின் மூச்சு நின்று துடித்தது.

 

மீனாட்சி இரு கைகளையும் யாசிப்பது போல் அவர்கள் முன் நீட்டி, சொல்லாத பாரத்தைத் தாங்குவது போல கண்களில் வலியுடன், “ராஜபுத்திரர்களே நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஒன்றிணைந்தால் மட்டுமே அழிவைத் தடுக்க முடியும். ஒன்றிணைந்தால் மட்டுமே கடந்த காலத்தை திருத்தி எழுத முடியும். ஒன்றிணைந்தால் மட்டுமே அரவள்ளியைக் காப்பாற்ற முடியும்” என்றதும் அந்த அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் துடிக்க, குளிர் காற்று அந்த அறை முழுவதும் நிறைய, மீனாட்சி மண்டியிட்டு விழப்போனவளை தடுத்து தனது கைகளுக்குள் சேர்த்துக் கொண்டாள் அதிரா.

 

“சோட்டி!” என்றபடி மீனாட்சியை தன் கைகளுக்குள் பாதுகாத்தவளின் கைகளை இறுக்கப் பிடித்து கொண்டாள் இளையவள்.

 

மீனாட்சி மயங்கி விழுவதற்கு முன் அதிராவின் செவிகளில், “அவர்களை ஒன்றிணைத்து விடு.
இல்லையெனில் அரவள்ளியை காக்க வழியில்லை. அதனுடன்… நாமெல்லாம்” என்றவளின் கேவல் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.

 

மீனாட்சி அதிராவின் கைகளில் நினைவிழந்து சரிய, அந்த அறை முழுவதும் மௌனம் நிலவியது.

 

அதிகாலை வேளையில் உதய்ப்பூர் அரண்மனையின் சபாமண்டபம் அமைச்சர்கள், ஆலோசகர்கள், அரச காவலர்களால் உயிர் பெற்று இருந்தது. அனைவரும் சிறு குழுக்களாக நின்று, பதற்றத்துடன் எதை பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அரசபைக்குள் நுழைந்த மகாராஜா சமர் சிங்கின் ஆடைகள் அவர் நடைக்கு ஏற்ப அசைந்தபடி முகத்தில் தோன்றிய கடுமையுடன் அனைவரையும் பார்த்தவர், “ஏன் இந்த அவசரம்? வைகறையிலே மன்றம் ஏன் கூட்டப்பட்டது?” என்றவரின் கேள்விக்கு ஒரு மூத்த ஆலோசகர் முன்னே வந்தார்.

“மஹாராஜ்…டெல்லியிலிருந்து செய்தி வந்துள்ளது. ஒரு புதிய சுற்றுச்சூழல் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றதும் மன்னர் யோசனையில் புருவத்தைச் சுருக்கினார்.

 

“என்ன திருத்தம்?” என்றதும் ஒரு நொடி தயங்கிய ஆலோசகர், பின் அங்குள்ளோருக்கு அதனை வாசித்து காட்டினார்.

 

“ஒரு மலை என சட்டரீதியாக வரையறுக்கப்பட வேண்டுமெனில், அது தரையிலிருந்து குறைந்தது 100 மீட்டர் உயரம் இருக்க வேண்டும் என்பதே அந்த திருத்தச் சட்டத்தின் முக்கிய சாராம்சம்” என்றதும் மண்டபம் முழுவதும் மௌனம்.

 

அதனை கேட்டிருந்த அனைவரின் முகத்திலும் குழப்பமே மிஞ்சி இருந்தது.

அனைவரும் எதிர்பார்க்காத வண்ணம் உள்ளே வந்த கரணை அதிர்ந்துப் பார்த்த சபையினர், அடுத்து அவன் கேட்ட கேள்வியில் ஆடிப்போயினர்.

 

“அராவள்ளி அந்த வரையறைக்குள் வராது…அராவள்ளியின் பெரும்பாலான சிகரங்கள்…
80 முதல் 95 மீட்டர் உயரம் கொண்டவை, மஹாராஜா” என்றதை கேட்டதும் மண்டபம் முழுவதும் அதிர்ச்சி அலை பரவியிருந்தது.

 

அதனைக் கேட்ட ஆசாத், “அப்படியென்றால் அரவள்ளி மலைத்தொடர் இனி பாதுகாக்கப்படாது என்கிறீர்களா இளவரசே?”

 

அதற்கு பதிலளித்த கரண், “சுரங்க நிறுவனங்கள் இனி சட்டப்படி அந்த மலைத்தொடரில் நுழையலாம். மஹாராஜ்… அராவள்ளியின் 91% பகுதி இப்போது சுரங்க நிறுவனங்களுக்கு திறக்கப்படும்” என்றதும் மன்னர் மேசையின் விளிம்பை கோபத்தில் இறுகப் பற்றிக் கொண்டார்.

 

மஹாராஜா, “இந்தச் சட்டத்தை யார் நிறைவேற்றியது? யார் இதை அனுமதித்தது ?” என்று அவரது ஆலோசகரை வினவ, அதற்கு, ” அரசே நமக்கு வந்த தகவல்களின்படி…ப்ரிதவேந்திர சவுஹான் கடந்த ஒரு மாதமாக இந்த திருத்தச் சட்டத்துக்காக (லஞ்சம்,அழுத்தம்,ஒப்பந்தங்கள்) ஏராளமாக உழைத்திருக்கிறார் என்று பேச்சு.”

அதனை கவனித்திருந்த கரண் மெல்ல எழுந்து, “இது அரசியல் அல்ல. இது போர் முழக்கம்” என்றவனின் கோபம் அவன் கண்களில் இருந்த சிவப்பில் அனைவரும் நன்கு உணர்ந்து கொண்டனர்.

 

கரணின் தோள்களை தட்டி சமாதானம் செய்த ஆசாத், “இந்தச் சட்டம் ஒரு ஆயுதம்.
அராவள்ளியை நோக்கி… ராஜபுத்திர வாரிசுகளை நோக்கி” என்றதும் மஹாராஜா திடுக்கிட்டு திரும்பினார்.

 

“என்ன சொல்கிறீர்கள் ஆசாத்?” என்றதும் ஆசாத் கான் தயங்கியவர், பின் ஒரு முடிவுடன் பேசினார்.

 

“அராவள்ளி வீழ்ந்தால்… தீர்க்கதரிசனம் சொல்வது போல் ராஜபுத்திர வாரிசுகளும் வீழ்வார்கள்” என்றதும் மண்டபம் முழுவதும் வார்த்தைகள் வெடித்தது.

 

அந்த நேரத்தில் அதிராவுடன் முதல் முதலாக மீனாட்சி சபைமண்டபத்துக்குள் நுழைந்தாள்.
அனைவரும் அவளை நோக்கி திரும்பினர்.

 

மீனாட்சி, “சபத கம்பம் அழைக்கிறது…. அரவள்ளி வீழ்ந்தால், ராஜபுத்திர குலம் வீழும்” என்றதும் பல ராஜபுத்திர மூத்தோர்கள் அதிர்ந்து மீனாட்சியை பார்த்திருந்தனர்.

 

அவர்களின் விழிகளை நம்ப முடியவில்லை, மெல்ல திரும்பி ஆசாத்தை கேள்வியாய் பார்த்தவர்களிடம், “ஆம் என் குலத்தை காக்க வந்த தெய்வம், ஹூன் வம்சத்தின் வரலாற்றின் பாவ பக்கங்களில் குழந்தையாய் வஞ்சிக்கப்பட்ட ‘மெஹருன்னிஷா’ இந்த குழந்தை வடிவில் நம்மை காக்க வந்துள்ளார்” என்றதும் அந்த சபையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது.

 

அதனை கண்டுகொள்ளும் நிலையில் மீனாட்சி இல்லை, அவளின் குரல் நடுங்க, “வாரிசுகள் ஒன்றிணையட்டும். அரவள்ளியை அவர்கள் நெருங்குவதற்குள் ராஜபுத்திரர்கள் விழிக்கட்டும்”
என்ற வார்த்தைகளை கேட்டதும் அங்கிருந்த அனைவரின் கண்களில் பயமும் கோபமும் எரிந்தன.

 

மகாராஜா அங்கிருந்தவர்களை நோக்கி, “அதிவார் வம்சமும் ராணா வம்சமும் ஒன்றிணையும்.

அராவள்ளியின் மீது கைவைக்க அனுமதிக்க மாட்டோம். இந்த அரண்மனையில் ஒரு துளி ராஜ்புத் இரத்தம் இருக்கும் வரை அரவள்ளி வீழாது” என்று முழக்கமிட்டவர் கரண் மற்றும் ஆசாத்தை பார்த்தபடி, “அராவள்ளிக்கான போர் தொடங்கட்டும்” என்று கட்டளையிட்டார்.

 

ரணசூரன் வருவான்………..

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்