Loading

சபதம் – 17

மண்ணுறு மருங்கின் மன்னர்க்கு எல்லாம்
உண்ணாமை இல்லை உயிர்க்கு உயிரினும்
எண்ணின் உயர் தலையினும்
போரின் புகழ் இழிவு உண்டோ?

பாடல் (புறநானூறு 229)

பொருள் (விளக்கம்):

இந்தப் பாடலில் போரில் உயிர் துறப்பது அவமானமல்ல; அது உயர்ந்த புகழ் என்பதே கருத்து.

அரசர்களுக்கு உயிர் மிக முக்கியமானதே.ஆனால் நாட்டுக்காக, மன்னருக்காக, கடமையுக்காக போரில் உயிர் விடுவது இழிவு அல்ல. அது என்றும் நிலைக்கும் புகழ்.

இரவு வெளிச்சத்தில் டெல்லி கார்ப்பரேட் மாநகரம் ஜொலித்துக் கொண்டிருந்தது. கண்ணாடிக் கோபுரங்கள் கருமை பூசிக்கொண்டு வானம் என்னும் மேடைப் பின்னணியில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

அன்றைய மீட்டிங் முடிந்து போர்ட்ரூமிலிருந்து வெளியேறிய தீவன் பிளேசரைச் சரி செய்தபடி, முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், நடந்து தனது காரை அடைந்தவனது கைப்பேசி அதிர்ந்தது.

திரையை ஒரு வித எரிச்சலோடு பார்க்க, அதில் சவுஹானின் செயலாளரிடம் இருந்து மூன்று மிஸ்டு கால்ஸ் வந்திருப்பதைப் பார்த்தபடி அதைப் புறக்கணித்தவன், இருளில் தலைநகரின் அழகை வெறித்தபடி விமான நிலையம் நோக்கி பயணித்தான்.

அனைத்து சோதனைகளும் முடித்து, விமானத்தில் அமர்ந்தவன் மனம் எதை எதையோ நினைத்து உழன்று கொண்டே இருந்தது. தன்னை மறந்து கண்மூடியவனின் விழிகள் சொருகி தூக்கத்திற்கு சென்றவன், கனவில், ‘யாரோ தன்னை துரத்த அவர்களிடம் பிடிபடாமல் ஓடியவனை தூரத்தில் ஒரு குரல் ‘கண்ணா’ என்று அழைக்க திரும்பி பார்த்தவன் முன் அவனது தந்தை எப்போதும் முகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதே சிரிப்புடன், ‘உன்னிடம் இருந்து சொத்தை மட்டும் தான் அவர்களால் பறிக்க முடியும். ஆனால் என்னையோ, உனது அறிவையோ அவர்களால் பறிக்க முடியாது. அப்பா என்றும் உன்னுள்ளே இருப்பேன்’ என்ற வார்த்தை சுருக்கென்று குத்த, உடல் எங்கும் நெருப்பால் தகிக்க, “அப்பா…” என்றபடி விழித்தவன் காதுகளில் விமானம் தரையிறங்கும் அறிவிப்புக் கேட்க தன்னைத் தானே தேற்றிக் கொண்டு இறங்கத் தயாரானான்.

உதய்ப்பூர் விமான நிலையத்தில், தீவன் டெர்மினலிலிருந்து வெளியே வந்தான். இவ்வளவு நேரம் உறவுக்காக துடித்த அந்த இதயம் ஒரு நொடியில் ஊரே மெச்சும் தொழிலதிபராக மாறி இந்த
உலகமே அவனுடையது போல் நடந்து வந்தான்.

அதே நேரம், பாலைவனச் சூரியன் விமான நிலையக் கண்ணாடிகளில் பொன்னாகப் பளபளக்க, VIP நுழைவாயிலில் ஒரு கருப்பு SUV நின்றது.

முதலில் இறங்கியது கரண் பிரதாப் சிங். தன் தாய்நாட்டின் காற்றை ஆழமாக இழுத்தபடி, ஒரு கணம் சிலிர்த்து நின்றான்.

அவனுக்குப் பின்னால் அசத் கான் எப்போதும் போல விழிப்புடன், சுற்றத்தை ஆராய்ந்து கொண்டே இறங்கினான்.

அதிரா, கரணின் அருகில் வந்து நின்றவளின் கண்கள் அதிசயத்துடன் கரணைப் பார்க்க, அதை உணர்ந்தவன் மெல்ல, “பதினைந்து வருடம் கழித்து தாய் மண்ணில் நிற்கிறேன் … வித்தியாசமாக இருக்கிறது” என்றான்.

அதைக் கேட்ட ஆசாத் கரணின் தோள்களைத் தட்டிக் கொடுத்தபடி, “இடங்கள் மாறாது, இளவரசே. மாறுவது… மனிதர்கள் தான்.”

விமான நிலையத்தில் இருந்து மூவரும் வெளிவந்த நேரம், எதிர்புறக் கதவுகள் திறந்து, போட்டிருந்த பிளேசரை கைகளில் பற்றியபடி வாட்டசாட்டமாய் வெளிவந்தான் தீவன் இளம்பரிதி.

அவன் கண்கள் கூட்டத்தை ஆராய்ந்து, தனது வண்டியை தேடிக்கொண்டே, VIPகள் வெளியேறும் பாதையில் கரண்,அதிரா மற்றும் ஆசாத்தின் பின் நடந்து சென்றான்.

அனைவரும் ஒரே வெளியேறும் பாதையை நோக்கி நடந்தனர். அவர்களின் பாதை ஒரே கோட்டில் சந்தித்தாலும் காலம் கூடவில்லை போல்.

அதிரவுக்கு பின்னால் நடந்து வந்த ஆசாத்தின் உடல் தடுமாற, விழப்போனவரின் தோளை பிடித்து நிறுத்தினான் தீவன்.

அந்த சலசலப்பில் கரணும், அதிராவும் திரும்பிப் பார்க்க, அங்கு ஆசாத்தின் தோள்களை தாங்கியபடி நின்றிருந்த தீவனின் இதயம் நின்று துடித்தது.

அவன் மனமோ இறைவனடி சேர்ந்த தனது தந்தையை நினைத்துக் கொள்ள, ஆசாத்தைப் பார்க்க ஒரு விசித்திரமான இழுப்பு இருவரையும் கட்டிப் போட்டது.

ஆசாத்தின் விழிகளில் தெரிந்த மங்கிய பரிச்சயம், அவர் மனதில் புதைந்த நினைவுகள் தீவனிடம் பேசத் தூண்டியது.

“சாரி, பேட்டா (Beta)… வயதாகிவிட்டது போல” என்று இலகுவாகச் சொல்லி சிரித்தவரிடம் தலையசைத்த தீவன், “பரவாயில்லை சார்… பார்த்துப் பத்திரமாகச் செல்லுங்கள்” என்றவனை ஆசாத்தின் விழிகள் கூடுதலாக கவனிக்க அந்த இளைஞனின் கண்களில், ஒரு வலி தெரிந்தது.

தன்னை ஆதுரத்துடன் பார்த்திருந்த பெரியவரிடம் ஏதோ ஒருவகை பாதுகாப்பை உணர்ந்தான் தீவன்.

“தம்பி பார்க்க இந்தப்பக்கம் போல் தெரிகிறதே… உதய்ப்பூர் தானா?” என்றவரின் கேள்வி அவன் தந்தையை நினைவுபடுத்த , சிரித்தபடி, “இல்லை சார்…. தென்னிந்தியா பக்கம். இங்கு வேலை விஷயமாக வந்தேன்” என்றதும் ஆசாத்தின் இதயம் வலித்தது.

அதிரா மெல்ல ஆசாத்திடம், “வாப்பா” என்க, திரும்பி பார்த்தவர் அருகில் அதிராவும் கரணும் வர, “ஒன்றும் இல்லை… கால் தவறி விட்டது” என்றவர் தீவனை இருவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

தீவனை நிமிர்ந்து பார்த்த ஆசாத், அவனை ஆதுரத்துடன் பார்த்து, “பாதுகாப்பாக போ, பேட்டா” என்றவரின் பாசத்தில் தீவனின் மூச்சு ஒரு கணம் தடைபட்டது போல் தவித்தவன், தனது சிரிப்பை வலுக்கட்டாயமாக மீட்டு, “நீங்களும், சார்” என்று மூவரிடமும் விடைபெற்று முன்னேறினான்.

அவனையே பார்த்து நின்ற ஆசாத்தை உலுக்கிய அதிராவிடம், வலி மிகுந்த குரலில், “அந்த பையன், கலிலை நினைவுபடுத்துகிறான் பேட்டி” என்றதை கேட்ட அதிராவிற்கும் வலித்தது.

உதய்ப்பூர் அரண்மனை வாயில்கள் திறந்தன. அரண்மனை காவலர்கள் வரிசையாக நின்றிருந்தனர். அரண்மனை வாயிலில் கார் நின்றதும் ஆசாத், கலிலா, கரண் மூவரும் ஒவ்வொருவராய் இறங்கினர்.

முழு முற்றமும் அமைதியாக இருக்க, அரண்மனை கதவுகள் பெரும் சத்தத்துடன் திறந்து, மஹாராஜா சமர் சிங் வெளியில் வந்தார்.

வயது முதிர்ந்திருந்தாலும், ராஜகலையுடன் வந்தவர்களை வரவேற்றவரின் சோர்வு முகத்தில் தெரிந்தது.

அவரது கண்கள் முதலில் சென்ற இடம் தன் மகன் கரணிடம் தான், அதில் தெரிந்த ஏக்கத்திலும் பாசத்திலும் உறைந்து நின்றான் கரண்.

பதினைந்து வருட பிரிவு, இருவருக்கும் பெரும் ஏக்கத்தை கொடுத்திருந்தது.

முன்னே வந்து நின்ற தந்தையை கண்டதும் கரணின் தொண்டை அடைத்து,”பாபா…” என்றவனை இறுக அணைத்து கொண்டார் அரசர். தன் மகனை மீண்டும் தன்னருகில் கண்ட அந்த தந்தையின் உறைந்திருந்த அன்பு வெடித்து பாகாய் உருகியது.

“இந்த அரண்மனை தலைவன் இன்றி தடுமாறும் நேரம், உனது வலியை கூட பொருட் படுத்தாமல் நீ திரும்பி வந்திருக்கிறாய் பார். உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன் பேட்டா” என்றதை கேட்ட கரண் உணர்ச்சியில் கண்களை மூடிக் கொண்டான்.

“இப்போ நான் இங்கே உங்களுக்காகவும் திரும்பியிருக்கிறேன் பாபா ” என்றவனின் கண்களில் இருந்த சிறுதுளி கண்ணீரை கண்ட அதிராவின் கண்களில் நீர் மிளிர்ந்தது.

அரசர் மற்றும் கரணின் நிலை உணர்ந்த ஆசாத் முன்னே வந்து வணங்க, மன்னன் அவர் தோளில் கை வைத்து, ” என் மகனை மீண்டும் என் உயிர் இருக்கும் போது சந்தித்தற்கு முழு காரணமும் நீங்கள் தான் ஆசாத். அதற்காக…உங்களுக்காக நான் இந்த ராஜ்யத்தை கூடக் கொடுக்கலாம்” என்றவர் அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

அந்த வார்த்தைகளை கேட்ட ஆசாத் தன் பார்வையைத் தாழ்த்தியவரின் உள்ளத்தில் ரஷீதின் தியாகம் புரையோடி போன காயமாக வலித்தது.

கட்டுக்குள் திகில் நிறைந்த பாழடைந்த அரண்மனை உள்ளே இருந்த இருண்ட அறையின்
திரைகளில் விமான நிலைய CCTV காட்சிகள் மின்னி கொண்டிருந்தன.

மாலிக் என்று சௌகானால் அழைக்கப்பட்ட அந்த மனிதன் கைகளை பின்னால் கோர்த்தபடி திரைகளின் முன் நின்றிருந்தான்.

கரண் மன்னனை அணைக்கும் காட்சியை அவன் பார்த்தவன் உதடுகலில் நஞ்சு கலந்த சிரிப்பு மலர்ந்தது.

“சபாஷ் சவுஹான்…சபாஷ் இளவரசன் மீண்டும் நாடு திரும்பிவிட்டான்” என்றவன் திரும்பி சவுஹானை பார்த்து, “அடுத்த திட்டத்தை செயல் படுத்துங்கள். ராஜ்புதானாவின் வாரிசு…
என் கைகளில் தானாக வந்து விழுந்துவிட்டான்” என்றவன் பார்வை திரையில் தெரிந்த கரணின் முகத்தில் உறைந்தது.

அதை பார்த்தபடி குரூரத்துடன், “விளையாட்டு… இப்போது தான் சூடு பிடிக்கிறது” என்றவன் சிரிப்பு சத்தத்தில் அந்த காடே அதிர்ந்தது.

ஹோட்டல் ஸ்யூட் நுழைந்த தீவன், தொலைக்காட்சியை இயக்கியவன் அதில் ஓடிக்கொண்டிருந்த உள்ளூர் செய்தியை கண்டவன் குழப்பத்துடன் வளையத்தில் மூன்று நாட்கள் முன் வந்த செய்திகளை தேடி பார்த்தவன் அதிர்ந்தான்.

அதில் மின்னய தலைப்பு, “கர்ஹ் அதிவார் நிலம்: அரசுக்கு எதிராக உதய்ப்பூர் அரச குடும்பம் வழக்குப் பதிவு.”

அவன் காதுகளில், “கர்ஹ் அதிவாரை அரசு கைப்பற்றுவதை அரச குடும்பம் எதிர்த்து,
அது அவர்களின் பாரம்பரிய உரிமை என்றும் கலாச்சார பாதுகாப்பு என்றும் வலியுறுத்தியுள்ளது. இது ராஜஸ்தானில் அரசியல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது” என்றதை கேட்ட தீவனின் தாடை இறுகியது.

உடனே கைப்பேசியை எடுத்தவன், சவுஹானின் செயலாளரை அழைத்து, “செய்தியை இப்பொது தான் பார்த்தேன்” என்றதும் தயங்கிய மறுபக்கத்தில் இப்பொது சவுஹானின் குரல், “ஹெலோ தீவன்…எப்படி இருக்கீங்க” என்று உற்சாக குரலில் பேச தொடங்யவனுக்கு எந்த பதிலும் வாராது போக, ஒரு பெருமூச்சோடு , “தீவன் இந்த பிரச்சனை தற்காலிகம் தான். மகாராஜா கொஞ்சம் அதிகப்படியாக நடந்து கொள்கிறார். அதை நான் ஹேண்டில் பண்ணிடுவேன்” என்றதை கேட்ட தீவன ஜன்னலருகே சென்று அராவள்ளி மலைத்தொடரை நோக்கினான்.

“ஹேண்டில் பண்ணுவீர்களா? சவுஹான்… நீங்கள் என்னிடம் நிலம் கிளியர் ஆகிவிடும் என்று சொன்னதாக ஞாபகம்” என்றதும் சவுஹானின் குரல் திக்கியது.

“கிளியர் ஆகிடும். கொஞ்சம் நேரம் கொடுங்கள்” என்றதும் தீவனின் குரல் கூர்மையடைந்தது.

“முதலில் பிரச்சனைகளை சரி செய்யுங்கள். அதற்குப் பிறகு தான் என் கம்பெனி ரிசார்ட் கட்ட முடிவெடுக்கும்” என்றவன் இடைவெளிவிட்டு, “அதற்கு முன் என்னால் இந்த பிரச்சனைக்குள் சிக்கி கொள்ள முடியாது” என்று முடித்தான்.

சவுஹான் ஏதோ சொல்ல முயல, அதற்குள் தீவன் அழைப்பை துண்டித்து கைப்பேசியை படுக்கையில் எறிந்தான்.

படுக்கையில் தலைவைத்தவனின் கைகளில் ஒரு பழைய உறை சிக்க, எழுந்து பார்த்த தீவனின் கைகள் நடுங்கியது.

அந்த உறையைத் திறந்தவன், உள்ளே இருந்த பழுப்பு நிற காகிதத்தை பிரித்தான்.

அது… அவனுக்காக அவனது தாய் எழுதிய கடிதம்.

“கண்ணா…நீ என் மீது வருத்தத்தில் இருப்பாய் என்று தெரியும். அம்மாவை மன்னித்து விடு கண்ணா. அப்பா முன்னே என்னிடம் சொல்லிவிட்டு சென்ற ஒன்று குடும்பத்தில் உள்ளோர் சொத்தை பிரிக்கும் போது அவர்கள் சொல்லும் அனைத்துக்கும் தலை ஆட்டச் சொன்னார். காரணம் எந்த காரணத்தை கொண்டும் நீ தனிமை படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதே. ஆனால் அதுவே உன்னை என்னிடம் இருந்து பிரித்துவிட்டது. இந்த குடும்பத்தில் இருந்து தனிமை படுத்திவிட்டது. நான் என் உயிர் இருக்கும் வரை உன்னிடம் சொல்ல கூடாது என்று நினைத்த ஒன்றை சொல்கிறேன் கண்ணா. நீ எங்களுக்கு பிறந்தவன் அல்ல. குழந்தை இல்லாத எங்களுக்கு வரமாய் கிடைத்தவன் நீ கண்ணா. ஆசை ஆசையாய் தான் நாங்கள் வளர்த்தோம். ஆனால் உன் இரத்தம்…அது காஷ்மீரை சேர்ந்தது. (வேறு எதுவும் எனக்கு தெரியாது. அப்பா உனக்காக பாதுகாத்த நாட்குறிப்பை உனது பெட்டியில் வைத்துள்ளேன்.உன் கேள்விகளுக்கு அது பதில் சொல்லும் என்று நம்புகிறேன்)”

முடிந்தால் இந்த பாவியை மன்னித்துவிடு கண்ணா..

இப்படிக்கு,

அம்மா

என்றதை படித்து முடித்ததும் கண்களை மூடிக் கொண்டான்.

வெப்ப மூச்சை வெளியேறிற்றிவனின் உள்ளம் முழுதும் கோபத்தாலும், துயரத்தாலும் துடித்தது.

ரணசூரன் வருவான்….

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்