
சபதம் -15
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!
பொருள்:
ஒரே குலத்தைச் சேர்ந்த இரு அரசர்கள் ஒருவருக்கொருவர் போரிடுவது வீண்.
யாராவது ஒருவர் தோற்றால், உலகம் அந்த குலம் தோற்றது என்று கேலி செய்யும்.
அந்த அவமானம் தேவையில்லை; இந்தப் போரை நிறுத்துவதே சிறப்பு.
நள்ளிரவு நேரம் உதயபூர் அரண்மனையின் அமைதி அமானுஷ்யத்துடன் சுற்றுச் சுவர்களில் எச்சரிக்கையும் கலந்து இருந்தது.
மன்னர் சமர் சிங் தனது சயன அறை படுக்கையில் கண்மூடி படுத்திருந்தார். அவரது கண்களை முழங்கையால் மறைத்திருந்தவரது கண்கள் கதவின் மேல் நிலைத்திருந்தது.
மீனாட்சியின் குரல் அரசரின் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
“உங்களின் நம்பிக்கைக்குரியவன், உங்களைக் கொல்ல சதி செய்துள்ளான்”
அந்த நேரத்தில், கதவு மெதுவாகத் திறப்பது போல் சத்தம் ஒலித்தது. மன்னரின் கை, தலையணைக்குக் கீழ் மறைத்து வைத்திருந்த கத்தியை இறுகப் பற்றிக் கொண்டது.
அந்த இருட்டில் கதவு திறந்து, உள்ளே ஒரு உருவம் வர, அதற்கு பின் மூன்று உருவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அமைதியாக நுழைந்து கதவை மூடினர்.
அரசரின் படுக்கையை நெருங்கிய அந்த உருவம்,பல ஆண்டுகளாக அரசரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் ராகவ் பிரதாப்.
ஆனால் இன்று…அமைச்சரின் கண்கள், அரசரின் படுக்கையை ஒட்டி இருந்த மேசையில் மிச்சமுள்ள பால் கோப்பையை(மீனாட்சி எச்சரித்த அதே கோப்பை) ஒரு நொடி நோட்டம் விட்டு மீண்டும் படுத்திருந்த அரசரிடம் திரும்பினர்.
கையில் ஏந்திய குருவாளுடன் தன் பின் நிற்பவர்களுக்கு சைகை செய்த அமைச்சர், மன்னரை நெருங்கும் சமயம், படுக்கையில் இருந்து போர்வையை நாற்புறமும் சுழற்றியபடி கையில் வாளுடன் காவல் தெய்வம் போல் நின்றார் மஹாரான பிரதாப்பின் வம்ச வாரிசு மஹாரான சமர் சிங்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் மற்றும் அவரது ஆட்கள் தடுமாற, அதே நேரம் படுக்கை அறை விளக்குகள் எரியத் தொடங்கின. அம்ஜத் மற்றும் அரசரின் மெய்க்காவல் படையினர் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து நால்வரையும் சுற்றி வளைத்திருந்தனர்.
ஒரே நொடியில் தங்களை சுற்றி வளைத்த அரசரின் ஆட்களை நெஞ்சம் நடுங்க பார்த்தவர்கள் தங்களைத்தானே சமாளித்துக் கொண்டு சண்டையிட தயாராகினர்.
தனது நம்பிக்கைக்குரிய அமைச்சர், தனக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பதை பார்த்த மன்னரின் தாடை இறுகியது. அறை முழுவதும் பதற்றம் நிறைந்திருந்தது. மன்னரின் எண்ணத்தை உணர்ந்து கொண்ட ராகவின் சிரிப்பு விரிந்து, “இன்றிரவு… உங்கள் ஆட்சி முடிவுக்கு வருகிறது மகாராஜா” என்றவரின் ஒரு விரல் சுட்டலில், மற்ற மூவரும் கத்திகளை சுழற்றத் தொடங்கினர்.
அதை எதிர்பார்த்த மன்னர் பின்வாங்கி, தனது கத்தியை லாவகமாக சுழற்றியபடி, “அதையும் பார்க்கலாம் அமைச்சரே… பாம்புக்கு பால் வார்த்த பாவமாகக் கூட இருக்கலாம்” என்றார்.
அதனை கேட்ட ராகவ் சிரித்தபடி, “நீங்கள் விஷத்தை குடித்திருக்க வேண்டும், அரசே! அது உங்களுக்கும் எங்களுக்கும் சுலபமாக இருந்திருக்கும். உங்கள் உப்பை தின்றதினால் வலி இல்லாமல் உங்களை வழியனுப்ப நினைத்தேன். ஏமாற்றிவிட்டீர்கள்.”
அதனை கேட்ட மன்னரின் கண்கள் தீயாய் தகிக்க, “ராஜபுத்திரர்கள் போரிட்டு சாய்வார்களே அன்றி…. முதுகில் குத்துப்பட்டு மடிய மாட்டோம்.”
அடுத்த நொடியில் இருவரின் வாள்களும் ஒன்றை ஒன்று தாக்கியது. அந்த அறை போர்க்களமாக மாறியது.
தனது குறுவாளை சுழற்றி இருவருடன் சண்டையிட்டு கொண்டிருந்த அம்ஜத், அரசரின் பின்னால் ஒருவன் வருவதை கண்டு தன் உடலை பின்சாய்த்து தடுத்தவன் அரசருக்கு உதவியாக மெய்க்காப்பாளன் ஒருவனை அவரின் பாதுகாப்புக்கு துணையிருக்க செய்தான்.
அந்த அறை முழுதும் கத்திகள் மோதும் சத்தமும் , மேசைகள் கவிழும் சத்தமும், விளக்குகள் உடைந்து சிதறுவதுமாக இருந்தன. அரசரின் பள்ளியறை ஒரு கணத்தில் ரத்தமும் இரும்பும் கலந்த போர்க்களமாக மாறியது.
அம்ஜத் ஒருவனை பிடித்து தூணில் மோதியபடி, “எவ்வளவு தைரியம் இருந்தால் அரசரின் மீதே கைவைக்க துணிவீர்கள்?” என்றதும் அவன் இரத்தத்தைத் துப்பியபடி, “சவுஹான்… உங்கள் அரசரின் நலம் விசாரித்து வர சொன்னார்..வீரருக்கு இதைவிட நல விசாரிப்பு எதுவாக இருக்க முடியும்? அதில் என்ன தவறு ” என்றவனின் பதில் அம்ஜத்தின் கோபத்தை கிளறியது.
அதேநேரம் மன்னர் ராகவுடன் மோதி கொண்டிருந்தார். ராகவ் வாளை வீச, அரசர் கீழே குனிந்து, உருண்டு, அமைச்சரின் கையில் தனது வாளை கொண்டு பதம் பார்த்தார். ரத்தம் அரசரின் முகத்தில் தெறிக்க, வழியில் கத்திய அமைச்சர், “உன்னை அன்றே அரண்மனைத் தீயில் கொன்றிருக்க வேண்டும்!” என்றதும் ,ஸ்தம்பித்து நின்றார் அரசர்.
“அப்படியானால்… அந்த தீ?” என்ற அரசரை பார்த்து சிரித்த அமைச்சர், “ஆம். நான் தான் அன்றைய நெருப்புக்கு காரணகர்த்தா. அன்று நான் தொடங்கியதை இன்றிரவு முடிவுக்கு கொண்டு வருகிறேன்” என்றபடி அரசரின் மீது மீண்டும் பாய்ந்தான் ராகவ்.
அதனை எதிர் பார்த்த மன்னர் உடலை வளைத்து சற்றே விலகி அமைச்சரின் கழுத்தில் தனது முழங்காலால் அடித்தார். அமைச்சர் தரையில் விழுந்து மூச்சுத் திணறினார்.
அந்த நேரத்தில், அமைச்சரின் ஆள் ஒருவன் காவலர்களைத் தள்ளி, மன்னரின் பின்னால் பாய்ந்தான்.
அதை கண்ட அம்ஜத்,”அரசே,அபாயம் தலையை தாழ்த்துங்கள்!” என்று கத்தியதும், ஒரு நொடி கூட யோசிக்காமல் அரசர் கீழே குனிய, அந்த சமயம் அம்ஜத் கத்தியை எறிந்தான். அது நேராக அந்த மனிதனின் மார்பில் பாய்ந்து அவன் கீழே விழுந்தான்.
அமைச்சர் ராகவ் பிரதாப் தரையில் ஊர்ந்து கதவை நோக்கி முன்னேறினார். அந்த வழித்தடம் முழுதும் அமைச்சரின் கையில் இருந்து வழிந்த ரத்தம் நிறைந்திருக்க, மன்னர் மெதுவாக அமைச்சரை நோக்கி நடந்தார்.
“ராகவ் பிரதாப் நீ உன் நிலத்திற்கும், உன் மக்களுக்கும், உன் மன்னனுக்கும் துரோகம் செய்திருக்கிறாய்,ராஜபுத்திர குலத்திற்கு நீ ஒரு கோடரி” என்றவரை கண்ணில் குரோதத்துடன் பார்த்த ராகவ் வாயில் இருந்து வழிந்த குருதியை துப்பியபடி,”உன் முடிவு நெருங்கி கொண்டிருக்கிறது சமர் சிங்” என்றான்.
மன்னரின் குரல் பனிகட்டி குளிர்ந்து ஒலித்தது, “எனது உயிரைப் பற்றி நான் என்றும் வருந்தியதில்லை ராகவ், என் மனைவியிடம் செல்லவே இந்த ஜீவனும் துடித்து கொண்டிருக்கிறது” என்றவர் காவலர்களை நோக்கி சைகை செய்தார்.
“இவனை இழுத்துச் செல்லுங்கள். யாரும் அவன் மேல் கைவைக்க வேண்டாம். இவன் எனக்கு உயிருடன் வேண்டும். அவன் செய்த ஒவ்வொரு குற்றத்துக்கும் பதில் சொல்ல வேண்டும்” என்ற அரசரை வணங்கி அமைச்சரை இழுத்துச் சென்றனர்.
அந்த அறை முழுதும் சிதறியிருந்தது. கவிழ்ந்த மேசைகள், உடைந்த விளக்குகள், தரையில் இரத்தக்கறை என்று போர்க்களமாக காட்சி அளித்தது.
அம்ஜத் மன்னரின் அருகில் பாதுகாப்பிற்கு நிற்க, அறையின் உடைந்த கதவை பார்த்தபடி,
நின்ற அரசர்,”இந்த அறையின் நிலை…வரப்போகும் புயலுக்கு எழுதப்பட்ட முதல் சின்னம்” என்றவரின் உடல் காயத்தை ஆராய மருத்துவர் அழைத்துவரப்பட்டார்.
லண்டன் மாநகரம்
மழை அந்த நகரத்தை ஒரு இருண்ட போர்வை போல போர்த்தியிருந்தது. சாளரத்தில் பட்டுச் சிதறும் ஒவ்வொரு துளியும், அறைக்குள் இருந்த மூவரின் மனநிலையைப் பிரதிபலித்தது.
கரண், ஆசாத் கான், அதிரா மூவரும் வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்து, கார் அதிவார் வழக்கின் சிக்கலான கோப்புகளை பற்றி விவாதித்து கொண்டிருந்தனர்.
அதிரா அனைவருக்கும் தேநீர் ஊற்ற, அவள் கைகளின் அசைவில் இருந்த லாவகத்தில் ஒருவகை அமைதி இருக்க, அது வெகுநேரம் நீடிக்கவில்லை.
கரண் ஆசாத்திடம் பேசிக்கொண்டிருந்தபோது அவன் அலைபேசி திடீரென அதிர்ந்தது.
அதில் திரையைப் பார்த்தவனுக்கு திரையில் தெரிந்த எண் உதய்ப்பூர் அரண்மனைக்கு சொந்தமானது.
கரண் நெற்றியைச் சுருக்கியபடி ‘இந்த நேரத்தில் அரண்மனையில் இருந்து அழைப்பு..இது சாதாரண விஷயம் அல்லவே’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அழைப்பை ஏற்றவன் காதுகளில் விழுந்த குரலில், “அம்ஜத்… இந்த நேரத்திலா…?” என்று தனக்குள் மெல்ல முனங்கிக் கொண்டவன், “அம்ஜத்? என்ன—”என்ற கரணின் குரல் நடுங்கியது.
“இளவரசே… உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். அரண்மனையில் ஒரு தாக்குதல் நிகழ்ந்துள்ளது” என்ற அம்ஜத்தின் வார்த்தைகளைக் கேட்ட கரணின் மூச்சு ஒரு நொடி நின்று துடித்தது.
ஆசாத் மற்றும் அதிராவின் முகத்தில் அதிர்ச்சி, கவலை, எதிர்பார்ப்பு என்று அனைத்தும் கலந்து கரணை நோக்கினர்.
“தாக்குதலா? யார்மேல்?” என்ற கரணின் கேள்விக்கு நீண்ட, மூச்சை இழுத்துவிட்ட அம்ஜத், “அரசரின் மேல்…” என்ற வார்த்தை அந்த அறைக்குள் வெடியை வெடித்தது.
கரணின் முகம் நிறம் மங்கி வெளுத்து போக, அதிராவின் கையில் இருந்த கோப்பை தரையில் விழுந்து நொறுங்கியது.
அதை கண்ட ஆசாத் உடனே எழுந்து, இளவரசரின் கைகளில் இருந்த அலைப்பேசியை தன் கைகளுக்குள் கொண்டுவந்தவர், அம்ஜத்திடம், “அரசரின் உயிருக்கு…?” என்று எழுத்து நிறுத்தியவரின் கண்கள் கரணிடம் யாசிப்பை வேண்டியது.
கரணின் மனம் வேண்டிய தெய்வங்களும் அனைத்தும் ‘ததாஸ்த்து’ என்று ஆசிர்வதித்தது போல் அம்ஜத், “அரசரின் உயிருக்கு ஆபத்தில்லை ஹுசூர். உடலில் அங்கங்கு சில காயங்கள் இருக்கின்றன. மருத்துவர்கள் அதனை கவனித்துக் கொண்டுள்ளனர்” என்றதை கேட்டதும் தான் கரணுக்கு போன உயிர் மீண்டது போல் இருந்தது.
மீண்டும் அலைப்பேசியை தன் கைகளுக்குள் மாற்றி கொண்ட கரணின் குரல் உடைந்து, “என்ன நடந்தது அம்ஜத்? விளக்கமாக சொல்.”
கரணின் கேள்விக்கு பதில் அளித்த அம்ஜத்,”அரண்மனைக்குள் துரோகி இருந்திருக்கிறான் இளவரசே!” என்றதும் கரணின் கைகள் நடுங்கின.
அதைக்கேட்ட கரண் மற்றும் ஆசாத் இருவரும் ஒரே நேரத்தில், “அரண்மனைக்குள்ளா?” என்றும், “நமது குலத்திலா?” என்று அதிர்ந்து கேட்டனர்.
“ஆம்” என்ற அம்ஜத் தொடர்ந்து, “அமைச்சர் ராகவ் பிரதாப் அவருடன் மூன்று குண்டர்கள் அரண்மனைக்குள் நுழைந்திருக்கின்றனர். தாக்குதல் நடக்கும் சில மணி நேரத்திற்கு முன் தான் நாங்கள் இந்த தாக்குதலை பற்றி அறிய நேர்ந்தது. தெய்வாதீனமாக. இல்லையேல் இந்நேரம் அரசர்….” என்றவன் தன் தவறு உணர்ந்து பாதியில் நிறுத்த கரணின் கண்கள் தீப்பிழம்பாய் சிவந்திருந்தது.
உள்ளம் துடிக்க, உள்ளுக்குள் எழுந்த ஏதோ ஒன்று தன்னை அறியாமல் உந்த, கரணின் குரல் நடுங்க, “அப்பா…” என்றவனின் தோளை ஆறுதலாக தட்டி கொடுத்தார் ஆசாத்.
ஆசாத்தின் அந்த தொடுதலில், தன்னை சமன் படுத்தி கொண்ட கரண், “மேலே சொல் அம்ஜத்” என்று ஊக்கியவன், தன்னை கட்டுப்படுத்தி கொள்ள நாற்காலியின் கைப்பிடியை கை முஷ்டிகள் இறுக பற்றி கொண்டான்.
அதனை கேட்டு தொடர்ந்த அம்ஜத், “மகாராஜா அமைச்சரை ராஜா எதிர்த்து போராடினார்.
அரசரின் மெய்க்காவல் படையுடன் நானும் அவர்களை தடுத்து நிறுத்தினோம். ஆனால் இப்போது அரசருக்கு ஓய்வு அவசியம் என்பதாலும் , அமைச்சர் சிறையில் இருப்பதாலும் அரண்மனை குழப்பத்தில இருக்கிறது. தாங்கள் நாடு திரும்பும் நேரம் வந்துவிட்டதாக அரசர் உங்களிடம் சொல்லச் சொன்னார்.”
அதைக்கேட்ட கரண் கண்களை மூடிக் கொண்டான். அவன் தாய் நாட்டை விட்டு வெளியேறும் போது கரணுக்கு வயது 15.
பதினைந்து வருடம் அனைத்தையும் தனித்து சமாளித்த தந்தை, முதல்முதலாக அவனிடம் ஒன்று கோரியிருக்கிறார்.
அவன் உள்ளே எழும் பதட்டத்தோடு போராடி கொண்டிருக்கும் போது அதிரா அவனருகே வந்து, மென்மையான குரலில், “கரண்…மூச்சை இழுத்து விடு. அரசர் உயிரோடு இருக்கிறார். அவருக்கு உன் தேவை இப்போது வேண்டும். அது உன் கடமையும் கூட” என்றவளை விழி தெறிக்க பார்த்தான் கரண்.
அந்த நொடியில் அவனது மனதில் தோன்றிய பயம் உறுதியான தீர்மானமாக மாறியது.
“அம்ஜத்…அரசரிடம் சொல் நாளை அவர் கண் திறக்கும் போது அவரது மகன் உடன் இருப்பான் என்று” என்றவன் தனது வலது கை சுக்விந்தர்க்கு நாடு திரும்ப செய்ய வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்க உத்தரவிட்டான்.
ஆசாத் தயக்கமின்றி, “அதிவார் வம்சமும் மஹாரான வம்சமும் உன்னை கண்டு பெருமை கொள்ளும் இளவரசே!” என்று கரணின் தோளை தட்டி கொடுத்தவர், “நாங்களும் உன்னோடு வருகிறோம்” என்று அதிராவை பார்த்தார்.
அதற்கு சம்மதமாக தலையசைத்த அதிராவின் கண்கள்,’இந்த நிலைமையை நீ தனியாக எதிர்கொள்ள நான் விட மாட்டேன். உனக்கு உறுதுணையாய் என்றும் நான் இருப்பேன்’ என்பதை கரணுக்கு உணர்த்தி இருந்தது.
அதிராவின் கண்கள் பேசிய பாஷையை உணர்ந்து கொண்ட கரணின் உள்ளம் பல நாட்கள் பட்ட துயரத்தில் இருந்து மீண்டு அமைதியில் ஆழ்ந்தது.
கரண் இருவரையும் பார்த்தவன் குரல் நன்றியோடு, “இருவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று மனதார சொன்னான்.
கரண் தன் இருக்கையில் இருந்து எழுந்து சாளரத்தின் அருகில் நின்றபடி, ” பதினைந்து வருட வனவாசம் முடிந்து நாடு திரும்புகிறேன். விரைவில் சந்திப்போம்” என்று காற்றில் தாய் மண்ணுக்கு செய்தி அனுப்பினான்.
விதி தனது பாதையைத் தொடங்கிவிட்டது.
ரணசூரன் வருவான்…..

