
இதயம்-18
பொன் மாலை கொஞ்சம் கொஞ்சமாய் மங்கி மயங்கி, மயக்கும் இரவு பிறந்திருந்தது. கோடுகளை இணைத்து சிறுபிள்ளை வரைந்த வட்டம் போல் வளர்பிறை நிலா வானில் சிரித்துக் கொண்டிருந்தது. அந்த ஏகாந்தம் சிந்தும் இரவுப் பொழுதில், மேகம் சூழ்ந்து மறைத்திருக்கும் வெண்ணிலவைப் போலவே குழப்ப மேகம் மையமிட்டிருந்தது பெண்ணவள் வதனத்தில்.
காதல் அவளுக்கு இதுவரை பரிட்சயம் இல்லாதது. நேசமோ பாசமோ அவள் அனுபவித்தே இராத விஷயங்கள். வெறுமையும் தனிமையும் தவிர, இதுவரை அவளுக்கு துணையாய் எதுவும் வந்ததில்லை. ஷியாமையும் கூட, குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்தியிருப்பாளே ஒழிய, நெருங்கவிட்டது கிடையாது.
அவள் எடுக்கும் முடிவுகளில் யாருடைய கருத்தையும் அவள் கேட்டதும் இல்லை. அவள் எடுத்த முடிவுகளை செயல்படுத்தாமல் விட்டதும் இல்லை.
ஆனால், ஆதன் அவள் வாழ்க்கைக்குள் வந்த பிறகு, அவள் எதிர்பார்க்காததெல்லாம் அவள் வாழ்க்கையில் நடந்துக் கொண்டிருக்கிறது. அவள் எடுத்த முடிவுகள், தான் தனக்கென வகுத்து வைத்திருந்த கோட்பாடுகள் அத்தனையுமே உடைந்த கண்ணாடி துண்டுகளாய், தூள் தூளாய் சிதறியதைப் போல் தான் வாஹினிக்குத் தோன்றியது.
இதோ இப்போது கூட, அவனை நிரந்தரமாய் பிரிந்துவிட வேண்டும் என்ற உறுதியான முடிவிற்குப் பின்னரே இங்கு வரச் சம்மதித்தாள். ஆனால், ஆதன் ஒருவருடத்திற்கு பின் தன்னைப் பிரிய சம்மதிப்பானா? ஒருவேளை நானே அவன் மீதான அன்பினால் போகாமல் இருந்து விடுவேனோ? என்றக் குழப்பம் கூட, அவள் மனதில் புதிதாய் முளைத்திருந்தது.
கணவன் என்ற அடையாளத்தோடு அவனைத் தன் மனதிற்குள் வரித்துக் கொள்ளவும் முடியாது, மாற்றான் என விட்டு விலகவும் முடியாது குழப்பமான மனநிலையில் இருந்தாள் வாஹினி.
இதோ, சம்யூ ஆதனின் அறையில் விட்டுப் போனதிலிருந்து, அசையாத சிலையென சமைந்திருந்தாள். மாலை மறைந்து மையிருள் படர்ந்த பின்னும் கூட, அவள் அங்கிருந்து அசைவதாய் இல்லை. சம்யூ சொன்னவைகளும், ஆதன் சொன்னவைகளும் மனதிற்குள் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது.
அதே நேரம் அந்த அறையைத் தின்றுக் கொண்டிருந்த இருளைக் கிழித்துக் கொண்டு, வெளிச்சப் புள்ளிகள் முளைத்தன. படுக்கையில் அமர்ந்திருந்தபடியே தலையை நிமிர்த்தி பார்த்தாள் வாஹினி. அறையின் வாசலில் அவளை ஊடுருவியபடியே மார்பின் குறுக்கே கைக்கட்டியபடி நின்றிருந்தான் ஆதன் ரித்விக்.
“சிமி! ஏன் இப்படி பண்ணுறே? காலையிலிருந்து சாப்பிடாமல் இப்படி இருட்டுக்குள்ளே உட்கார்ந்திருக்கிறே?” கட்டிலில் அவள் அருகில் வந்து அமர்ந்தான் அவன்.
“ம்ப்ச்! ஏன்னு தெரியலை! பசிக்கலை!”
“ஷியாம் ஃபோன் பண்ணினானா? ஏன் எடுக்கலை?”
“நானே தெளிவா இல்லை! இப்போ எது பேசினாலும் சரியா இருக்காது! நாளைக்கு பேசறேன்.!”
“சரி! ஓகே, அதுக்காக சாப்பிடாமல் இருப்பது எந்த விதத்தில் சரியாகும்? முதலில் முகம் கழுவி ஃப்ரெஷ் ஆகிட்டு வா! சாப்பிடப் போகலாம்!”
“எனக்கு வேணாம் ஆதன்! என்னை விடு. நீ போய் சாப்பிடு!”
“ஓகே! டன், அப்போ எனக்குமே சாப்பாடு வேணாம். என் சரிபாதி சாப்பிடாமல் நான் எப்படி சாப்பிட முடியும்?” கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் தோளில் தலை சாய்த்து அமர்ந்துக் கொண்டான் ஆதன்.
அவன் உரிமையாய் அவள் தோளில் சாய்ந்திருந்தது அவளை ஏதோ செய்தது. அவனின் தாடியடர்ந்த கன்னம் இவள் தோள் வளைவை உரசி, என்னவோ செய்தது.
“ஆதன்! எழுந்திரு! நிஜமாவே எனக்கு பசிக்கலை! சொன்னால் புரிஞ்சுக்கோயேன் ப்ளீஸ்!”
“எனக்கும் தான் பசிக்கலை! பேசாமல் தூங்கலாம் வா!” அவன் சொன்னதும் இவளுக்குள் திடுக்கிடல். ஒரே அறையில், ஒன்றாக அதுவும் அவனோடு. உள்ளுக்குள் பிரளயமே நிகழ்ந்துக் கொண்டிருந்தது வாஹினிக்கு.
“இல்லை! நான் தனியாவே படுத்துப்பேன்.!” தயக்கமாய் அவள் சொல்ல,
“நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு, கேண்டி க்ரஷ்! கல்யாணம் ஆனப் பின்னாடி தனித்தனியாய் தூங்கக் கூடாது.! இங்கேயே என் பக்கத்தில் எனக்கு நெருக்கமா, என் கை வளைவிற்குள்..! யோசிக்கும் போதே நல்லா இருக்கு!” என அவன் சொன்னதும் இவள் முகம் பேயறைந்தார் போல் மாறியது. திருமணத்தைப் பற்றியோ, தாம்பத்தியத்தைப் பற்றியோ இதுவரை அவளுக்கு கனவுகள் எதுவும் இல்லை.
கனவுகளும் எதிர்பார்ப்புகளும் இல்லாமல், கடனுக்கே என திருமணம் செய்துக் கொண்டவள் இவளாகத்தான் இருப்பாள். கனவுகளும், எதிர்பார்ப்புகளும் இருந்தால் தானே, வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். எதுவுமே இல்லாமல், வெறுமையாய் இருப்பவளுக்கு, திருமணமோ, தாம்பத்யமோ பயத்தைத் தவிர வேறொன்றையும் தரப் போவதில்லை. வெற்றிடம் நிரம்பி, வெறுமை சூழ்ந்து பிரிவைப் பரிசளிக்குமே தவிர, காதலும் புரிதலும் சாத்தியமாகாது.
ஆனால், அவனுக்கோ நிறைய ஆசைகளும், கற்பனைகளும், கற்பனைகளையும் மீறிய கனவுகளும் கூட இருந்தது. இதயம் நிரம்பி வழியும் காதலோடு அவளோடு ஆயுள் முழுமைக்கும் வாழ வேண்டுமென்ற பேராசையும் கூட இருந்தது.
தோளில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தவனுக்கு, அவளுடைய முகத்தைப் பார்க்காமலே, அவளின் உள்ளுணர்வுகள் தெள்ளத்தெளிவாய் புரிந்தது.
தன் தலையை நிமிர்த்தி விலகி, அவளின் அருகே நெருக்கமாய் அமர்ந்தவன், இரு கரங்களால் கன்னம் பற்றி முகம் நிமிர்த்தினான்.
“ஹேய்! சிமி, பயந்துட்டியா? இங்கே உன் விருப்பத்தை மீறின விஷயம் எதுவுமே நடக்காது. திருமண வாழ்க்கைங்கிறது சாபம் இல்லை வரம். எல்லோருமே சாபமா மாத்திக்கிற வரம். கல்யாணம் பண்ணி புள்ளைக் குட்டி பெத்துக்கிறது வாழ்க்கை இல்லை. ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிட்டு நாம நமக்காக வாழறது தான். நான் இருக்கேன் கேண்டி உனக்காக! உன் கருப்பு வெள்ளை பக்கங்களை வண்ண மயமாய் மாற்ற நான் இருக்கேன். இந்த உலகமே உனக்கு எதிரா நின்னாலுமே, உனக்கு துணையா நான் இருப்பேன். எப்போவுமே..!” அவள் கண்களுக்குள் ஊடுருவி, இதய அறைகளுக்குள் எதிரொலிக்கும் குரலோடு சொன்னவனௌ, நேச மிகுதியில் நெற்றி முத்தம் வைத்தான்.
அவனின் முதல் தீண்டல், முதல் முத்தம். அதுவும் அவனுக்கு மிக நெருக்கமாய் அவள். அண்ணாந்து விழி மலர்த்தி அவனைப் பார்த்தவளுக்கு கோபம் வரவில்லை. மாறாக, அவள் மனக் கதவுகளுக்குள் வந்து போன உணர்வுகளைச் சொல்வதற்குத் தான் வார்த்தைகள் பிடிபடவில்லை.
ஆனால், அவனின் ஒற்றை முத்தம், இறுகப் பூட்டியிருந்த அவளின் இதயக் கதவுகளில் இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது.
“இல்லை! அது வந்து.. நான்.!” அவன் அருகாமையில் வார்த்தைகள் வராமல் தடுமாறுவது புரிந்தது.
“ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! இவ்வளவு பதற்றமோ பயமோ அவசியமே இல்லை! என்னை உன் ஃப்ரெண்டா நினைச்சுக்கோ, ஈஸியாய் பேச வரும்!” அவளுக்கு வாய்ப்பு கொடுத்து விலகி அமர்ந்தான் அவன்.
“நான் நினைக்கிற மாதிரி இல்லை ஆதன். என் வாழ்க்கையில் வந்து போன ஆண்கள் யாரும் என் நம்பிக்கைக்கு உரியவங்களா இல்லை. நான் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதா இருக்கல. அதனால் என்னால் ஈஸியாய் யாரையும் நம்ப முடியலை ஆதன். உன்னையும் சேர்த்துத்தான் சொல்றேன். நீ என்னைக் கல்யாணம் பண்ணினதே உன்னோட தனிப்பட்ட ஆதாயத்திற்க்கு எனக்கு தோணுது. அதனால் என்னால் உன்னைக் கூட நம்ப முடியலை. இப்போவும் உனக்கு விளக்கம் சொல்லணும்ன்னு இதைச் சொல்லலை! என்னை கல்யாணம் பண்ணினதால், நீ எதிர்பார்க்கிற சந்தோஷங்கள் எதுவுமே உனக்கு கிடைக்கப் போறது இல்லை! தேவையில்லாமல் எதையும் எதிர் பார்த்து ஏமாந்துடாதே!” நிதானமாய் மிக மிகப் பொறுமையாய் பேசினாள் சிம்மவாஹினி.
“எனக்குப் புரியுது சிமி! ஆனால் நான் உன்கிட்டே எதிர்பார்க்கிறது காதலை மட்டும் தான். வேற எதையுமே இல்லை! ஆனாலும் உன் மனசு எனக்கு புரியுது. நீ இங்கே இருக்கப் போற இந்த ஒருவருஷத்தை நம்மை நாம புரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம் சிமி. கணவன் மனைவியாய் இருக்கறவங்க நல்ல நண்பர்களாய் இருக்கக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா? நாம நண்பர்களா இருப்போம்.!” எனச் சொன்னவன், தன் அறையின் பக்கவாட்டிலிருந்த கதவைத் திறந்தான்.
“நான் அதுவரை உன்னை எந்த விஷயத்திலும் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன். அதுவரை நீ இங்கே தங்கிக்கலாம்.! உனக்கு எப்போ என்மேல் நம்பிக்கை வருதோ அப்போ வந்தால் போதும். அதுவரை நீ என் பக்கத்தில் என் வீட்டில் இருக்கிறேங்கிற நிம்மதியே எனக்கு போதும்.! நீயே என்னைப் புரிஞ்சுட்டு என்கிட்டே வர்ரவரை உனக்காக காத்திருப்பேன்!” அவள் கண் பார்த்து அவன் சொன்ன தோரணை அவளுக்குப் பிடித்திருந்தது.
இதற்கடையில் இம்மியளவு புன்னகை எட்டிப் பார்த்தது.
“அம்மாடி! உன்னை இத்துணூண்டு சிரிக்க வைக்கிறதே பெரிய டாஸ்க். இன்னும் இவ்வளவு பெருசா சிரிக்க வைக்க எவ்வளவு பாடுபட போறேனோ?” எனச் சொன்னவன்,
“இப்படியே சிரிச்சுட்டே இரு! ரொம்ப அழகா இருக்கே! மத்ததெல்லாம் மனசில் போட்டு குழப்பிக்காதே! எல்லாத்துக்குமே நான் இருக்கேன். அது மட்டும் உன் மனசுக்குள் இருந்தால் போதும். இப்போ வா, சாப்பிடப் போகலாம்!” என அழைத்துப் போனான் ஆதன்.
தன்னவளைப் புரிந்துக் கொள்ள முயன்றான் ஆதன். இருவரும் சண்டைப் போட்டுக் கொள்வதினாலோ, தன் கருத்தை மட்டும் சரியென நிற்பதினாலோ தீர்வு வரப் போவதில்லை. தன் கருத்து ஒருபுறமிருந்தாலும், எதிரிலிருப்பவரின் மனநிலையையும் புரிந்துக் கொண்டால் மட்டும் தான், இந்த பந்தம் நீடிக்க வழி செய்ய முடியும்.
அவனுக்கு அவள் வேண்டும், தாய்மையோடு தாரமாய் அவள் வேண்டும். யாரையும் புரிந்துக் கொள்ள முயலாதவன், ஆண் எனக் கர்வம் கொள்ளாமல் இறங்கிப் போய் அவளைப் புரிந்துக் கொள்ள முயன்றான்.
கடத்தி வந்த பின்னும் சீதையின் அனுமதிக்குக் காத்திருந்த இராவணன் போல, தன்னவளின் மன மாற்றத்திற்காகவும் அனுமதிக்காகவும் காத்திருந்தான் ஆதன்.
“காதல் இல்லா அவளும்..
அவள் இல்லா அவனும்..
‘ழ’கரமில்லா தமிழைப்
போலத்தான்..!”
*****
“எல்லாம் ஓகே தானே கேண்டி? உனக்கு பிடிச்சிருக்கு தானே?” கேட்டபடியே அவளுக்கென்று ஒதுக்கிய அறைக்குள் வந்தான் ஆதன்.
“எஸ்! எல்லாம் ஓகே! எனக்கு இடம் மாறுவதெல்லாம் பழக்கம் தான். காப்பகத்தில் தானே வளர்ந்தேன். அடிக்கடி மாத்திட்டே தான் இருப்பாங்க! நோ ப்ராப்ளம் ஆதன், நான் பார்த்துக்கிறேன். எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து பண்ணுறதுக்கு தேங்க்ஸ் எ லாட்! ஆனால், கடைசியில் முடிவு எப்படி வேணும்னாலும் மாறலாம். உனக்கு பிடிச்சபடி நடக்குமான்னு எனக்கு தெரியாது. ஒருவேளை நான் இங்கிருந்து போகணும்ன்னு முடிவெடுத்தால், நீ வருத்தப்பட மாட்டியே..?” கண்களில் தடுமாற்றத்துடன் கேட்டாள் அவள்.
“நிச்சயமாய் இல்லை! ஏன்னா, உனக்கே இங்கிருந்து போக விருப்பமிருக்காது. நீயும் என்னைக் காதலிக்க ஆரம்பிச்சுடுவ. உனக்குள்ளேயும் காதல் வரும். எனக்குள் நிகழ்ந்த மாயங்கள் உனக்குள்ளும் நிகழும்.!”
“ஓஹோ! உன்மேல் உனக்கே அவ்வளவு நம்பிக்கையா ஆதன்?”
“நம்பிக்கை தானே வாழ்க்கை! ஆனால் இப்போ நம்பிக்கை என் மேல் இல்லை, நான் உன்மேல் வச்சிருக்கிற அளவில்லா காதல் மேலே..!”
“சினிமா டைலாக்கெல்லாம் பேச நல்லாத்தான் இருக்கும்! ஆனால் நடைமுறைக்கு அதெல்லாம் ஒத்துவராது.!”
“அதெல்லாம் வரும்! சினிமாவில் காட்டறதை விட, பல மடங்கு வலிமையானது காதல். தனக்கு பிடிச்சவங்களுக்காக என்ன வேணும்னாலும் பண்ணும். எந்த எல்லைக்கும் போகும். யாருன்னே தெரியாத உன்னை என் மனைவியா, எனக்கு உரிமையானவளா, என் முன்னே நிறுத்தியிருக்கிறதும் காதல் தான்.!”
“போதும்! போதும்! உன் காதல் புராணம்! நீ கிளம்பு எனக்கு தூக்கம் வருது!” ஏதாவது காரணம் சொல்லி அவனை விரட்டி விட முயன்றாள் அவள்.
“ஓகே! நான் கிளம்புறேன். ஷியாம் நிறைய தடவை கால் பண்ணியிருக்கான். என்னன்னு கூப்பிட்டு பேசிடு. என்னவோ ஏதோன்னு பயந்து போய் இருப்பான். இப்போவெல்லாம் எனக்கு இந்த ஷியாம் மேலே பொறாமையாய் இருக்கு. என்னை விட, உன்னை அதிகமா கேர் பண்ணிக்கிறானே? பட், அவனைப் போல் எனக்கு உண்மையான நண்பன் இல்லையேன்னு வருத்தமாவும் இருக்கு.” எனச் சொன்னான் ஆதன்.
உண்மை தானே, இந்தக் காலத்தில் நிஜமாகவே நம் மீது அக்கறைக் கொண்ட, துளி பொறாமையில்லாத நட்பு கிடைப்பதென்பது வரம் தானே? முன் பின் தெரியாதவர்கள் கூட முதுகில் குத்துவதில்லை. முகமறிந்தவர்கள் தானே முதுகில் ஆழமாய் குத்துகிறார்கள். அப்படிப்பட்ட தேவைக்கு மட்டும் நம்மை பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களின் மத்தியில் ஷியாம் வாஹினியின் மேல் வைத்திருக்கும் அன்பு அதிசயம் தான்.
“நிஜம் தான் ஆதன்! ஷியாம் எனக்கு கிடைச்ச வரம் தான். எனக்கு அம்மாவோ, அப்பாவோ, கூடப் பிறந்தவங்களோ யாரும் இல்லை! எனக்கு எல்லாமுமாய் இருந்தவன் ஷியாம் தான். எனக்கு நல்ல வாழ்க்கை அமையனும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டதும் அவன் தான். இப்போ அவனுக்கு நல்ல வாழ்க்கை அமையணும்ன்னு நான் ஆசைப் படறேன்.!” நண்பனின் நினைவில் முகம் பூரிக்க சொன்னாள் வாஹினி.
“ஓகே! சிமி, குட் நைட்! நல்லா தூங்கு! எல்லாம் சரியா நடந்திருந்தால் இன்னைக்கு நமக்கு ஸ்பெஷல் நைட்! இதையெல்லாம் நினைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணினாலும், உன் அருகில் என் மனசு எதையுமே கேட்க மாட்டேன்னு சண்டித்தனம் பண்ணுது. இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்தேன்னா, என் பொறுமையெல்லாம் காற்றில் கரைஞ்சு காணாமல் போய்டும். அதனால் நான் கிளம்புறேன்!” என்றவன் அவள் அருகில் வந்து நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்துவிட்டு,
“ஐ லவ் யூ கேண்டி க்ரஷ்! எனக்காக சீக்கிரம் மனசு மாறிடேன் ப்ளீஸ்..!” சிறு பாலகனைப் போல், அவள் கன்னம் கிள்ளி சொல்லிவிட்டு சென்றவனை கண்களில் முதன் முறையாய் ரசனை வழிய பார்த்திருந்தாள் சிம்மவாஹினி.
சில விநாடிகள் ஸ்தம்பித்து அசையாமல் நின்றவளின் மனம் முழுதுமே ஆதனிடம் மட்டும் தான் நிலைத்திருந்தது. அவனின் கணசைவிலும் காதல் இருப்பதாய் தோன்றியது அவளுக்கு.
இவ்வளவு நிதானமாய் பொறுமையாய் காதலிக்க யாராலும் முடியுமா? அலுவலகத்தில் எத்தனை கோபமாய் பேசினானோ, அதற்கு முற்றிலும் மாறுபட்டு, பொறுமையாய் நிதானமாய் அவளுக்காக யோசித்து பேசியது அவளுக்குப் பிடித்திருந்தது.
இதுவரை அவளுக்காக யாரும் இந்த அளவிற்கு யோசித்ததில்லை. முதன்முறையாய் தனக்காக ஒருவன் யோசித்து, பார்த்து பார்த்து செய்கிறான் என்பதே அவளுக்கு புத்தம்புது உணர்வைக் கொடுத்தது.
மனம் நிறைந்திருந்த இனம் புரியா உணர்வுடனே, இதழ்களில் புன்னகை வழிய தெளிவான முகத்துடன் அலைபேசியை எடுத்து ஷியாமிற்கு அழைப்புவிடுத்தாள் வாஹினி.
“ஹேய்! ஷியாம், ஸாரிடா! எதோ யோசனையில் கால் எடுக்கலை! ஸாரிடா!”
“இருக்கட்டும் வாஹினி! இப்போ ஏன் கால் பண்ணினே? பொறுமையாய் காலையில் பண்ணிக்கலாம் தானே.?” ஷியாமின் குரலில் மெல்லிய தடுமாற்றம் தெரிந்தது.
“என்னாச்சு டா? ஏன் குரல் சரியில்லை? நான் இல்லைன்னதும் அந்தப் பரதேசிங்களோட போய் சரக்கடிச்சுட்டு வந்துட்டியா? ஆன்ட்டி எங்கே? ஆன்ட்டி கிட்டே கொடு.!”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை லூசு! நிம்மதியாய் தூங்கு! நாம காலையில் பேசிப்போம்!”
“இல்லை டா! என்னவோ சரியில்லை! உன் பேச்சில் உண்மை இல்லை! முதலில் வீடியோ கால் பண்ணு! நீ எங்கே இருக்கேன்னு காட்டு! நான் பார்க்கணும்!”
“கடையில் தான் வாஹினி இருக்கேன்! மார்னிங் வா! பேசிக்கலாம். இப்போ தூங்கு! குட் நைட்!” சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டான் ஷியாம்.
“ஷியாம்! எருமை மாடே! என்னடா பண்ணித் தொலையறே? என்னவோ மறைக்கிறே! என்னன்னு சொல்லாமல் நான் விடப் போறதில்லை!” எனத் திட்டிக் கொண்டே, மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைத்துப் பார்த்தாள்.
ஆனால், கிட்டத்தட்ட இருபது முறைக்கும் மேல் அவள் அழைப்பெடுத்தும் கூட, அவன் அழைப்பை ஏற்காமல் போனது, ஏதோ சரியில்லை என்பதை அவளுக்கு உணர்த்தியது.
ஏனென்றால் அவள் நண்பனைப் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியுமே! அவள் நண்பன் இப்படி பொறுப்பில்லாமல் அழைப்பை ஏற்காமல் இருக்க மாட்டான். பேச முடியா சூழ்நிலையில் இருந்தாலும் கூட, அழைப்பை ஏற்று ஏதாவது பொய் காரணம் சொல்லி, அவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்வானே ஒழிய, அழைப்பை ஏற்காமல் இருக்க மாட்டான்.
சில நிமிடங்கள் யோசனையோடு அங்கும் இங்கும் நடந்தவள், பின் ஏதோ முடிவு செய்தவளாய் ஆதனை நோக்கிப் போனாள். கதவைத் திறந்து, ஆதனை நோக்கிப் போனவள் கண்டது, நிம்மதியாய் முகத்தில் புன்னகை மலர உறங்கிக் கொண்டிருக்கும் ஆதனைத்தான். சலனமில்லா முகத்துடன் குழந்தைப் போல் உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்புவதற்காக அவன் அருகினில் சென்றாள்.
ஆனால், உறங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பி அவனைத் தொல்லை செய்ய மனம் வரவில்லை.
அவனை எழுப்ப மனமின்றி, மேஜை விளக்கின் அருகே இருந்த சாவியை எடுத்துக் கொண்டு, காவலாளியிடம் தகவலையும் சொல்லிவிட்டு, கேண்டி க்ரஷை நோக்கி தன் இருசக்கர வாகனத்தைக் கிளப்பினாள்.
காலையில் ஆதனின் அலுவலகத்தில் விட்டுவிட்டு வந்திருந்த அவளின் இருசக்கர வாகனத்தை இங்கு யார் கொண்டு வந்தது? என்ற கேள்வி எழுந்த நொடியிலேயே தன்னவனாகத்தான் இருக்கும் என்ற பதிலும் சேர்ந்தே தோன்ற புன்னகையில் வாகனத்தை சாலையில் செலுத்தினாள் வாஹினி.
ஆனால் இவள் இப்போதிருக்கும் மனநிலை சுத்தமாய் மாறி, ஒட்டுமொத்தமாய் அவள் உச்சந்தலையில் இடியிறங்கக் காத்திருப்பதை அறியாது, அந்த நள்ளிரவில், துளி பயமில்லாது, ஆளரவமற்ற சாலையில், தன்னந்தனியாய் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தவளுக்காக சதாசிவம் எனும் கொடூரனின் வடிவில், அவள் வாழ்க்கையில் விளையாடிப் பார்க்கக் காத்திருந்தது விதி.
இசைக்கும்..

