இதயம் 26 : (உனக்காக எல்லாம் உனக்காக)
ஒவ்வொரு நொடியும் ரசித்து விரும்பி காதலாய் வாழ்ந்த வாழ்வு… இப்படி கண் இமைக்கும் பொழுதில் கானல் நீராய் வறண்டு போகுமென்று கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டாள்.
மலை இடுக்குகளுக்கு நடுவே மேற்கு வானில் கதிரவன் கொஞ்சம் கொஞ்சமாக இறங்க, பாதி கதிர்வீச்சில் நீலநிற வானம் செங்காந்தளாய் சிவந்திருக்க அதன் பிரதிபலிப்பாய் புவி முழுவதும் ஒருவித மஞ்சள் நிறம் மினுமினுப்புடன் காணப்பட்ட அந்தி வேளை.
கால்களை கட்டிக்கொண்டு கையின் மீது கன்னம் பதித்து, கிணற்றிலிருந்து கொட்டும் தண்ணீரில் பார்வையை பதித்திருந்த வரு, உடலில் மோதி செல்லும் நீரினை அசட்டை செய்தவளாக அமர்ந்திருந்தாள்.
வருவின் மனம் முழுக்க யாதவிடமிருந்தது.
பொன்னானத் தருணங்கள் நினைவில் ஊர்வலம் சென்று மந்தகசாமாய் ஒளிர்ந்த வருவின் முகம், அடுத்தடுத்து கண்களில் காட்சி சிதறலாய் ஓடிய ரண நிகழ்வுகள் இதயத்தை தைய்க்க உடல் அதிர தன்னிலை மீண்டாள்.
வயல் பரப்பினைச் சுற்றி பார்வையை சுழலவிட, இன்னும் சற்று நேரத்தில் நான் மறைந்து இருள் சூழ்ந்து விடுமென்று சூரியன் சொல்லுவதைப்போல் இருக்க, மெதுவாக தண்ணீர் தொட்டியிலிருந்து குதித்து இறங்கினாள்.
பொழுது சாய்ந்து வயலில் வேலை செய்வோர் அனைவரும் சென்றிருக்க, தங்களது பண்ணையில் வேலை செய்யும் மாரியப்பன் மட்டும் வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருப்பதை பார்த்தவள்,
“மஞ்சள் காடு நிறைஞ்சிருச்சுண்ணா. நான் அந்த பக்கமிருந்து தான் வரேன். மடையை திருப்பி விடுங்க” என்றவள் வீட்டிற்கு செல்ல வரப்பில் நடந்து சென்றாள்.
வயல் பரப்பிலிருந்து மண் மேட்டில் வரு நடக்கத் தொடங்கினாள். அது முடிந்து கரும்பு காட்டின் நடுவில் செல்ல வேண்டும்.
அப்போது அவளின் முன்னே டிவிஎஸ் இருசக்கர வண்டியை கொண்டு வந்து நிறுத்திய மாரிமுத்து…
“இந்நேரத்துல கரும்பு கொல்லை வழியா வேணாங்கண்ணு. இப்படியே தார் ரோட்டுலே போ” என்றவர் அவள் மறுத்து பேச இடமளிக்காது வண்டியை அவள் கையில் கொடுத்துவிட்டு திரும்பியும் பாராது வரப்பில் இறங்கி வேக வேகமாக நடந்து சென்றார்.
வருவின் வீட்டிலேயே சிறு வயது முதல் வேலை பார்ப்பவர். வருவின் மீது அக்கறையும் பாசமும் அதிகம் கொண்டவர்.
வருவின் வாழ்வின் நிலை ஊரில் உள்ளவர்களுக்கு தெரிந்ததா இல்லையா என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் மாரிக்கு நன்கு தெரியும். சூர்யாவைவிட அதிகம் கவலை கொண்டவர் அவர் தான்.
இங்கு வந்ததிலிருந்து அறைக்குள்ளே முடங்கி கிடக்கும் வருவை நினைத்து சூர்யாவும் கல்பனாவும் வருத்தத்தில் இருப்பதைக் கண்ட மாரி தான்,
“போன மழைக்கு நீ வச்ச நெல்லி மரம் காய்ச்சிருக்கு கண்ணு. நீதான் மொத பறிக்கணுமுன்னு யாரையும் விடல, நீ வந்தீன்னா பறிச்சிப்புடலாம். உனக்கு நெல்லி ஊறுகாய் ரொம்ப பிடிக்குமே கண்ணு, நான் வளரு கிட்ட சொல்லி உனக்கு பிடிச்சாமாதிரி காரம் போட்டு செய்ய சொல்லுறேன். வா போவோம்.”
ஏதேதோ பேசி அவளை வயல் பக்கம் அழைத்துச் சென்றார்.
வளரு மாரியின் மனைவி. சூர்யா வீட்டில் கல்பனாவுக்கு உதவியாக இருக்கிறார். அவர்களின் வீட்டுக்கு பின்னால் இருக்கும் மாட்டு கொட்டகைக்கு அருகிலிருக்கும் ஓட்டு வீட்டில் குடியிருக்கின்றனர். அவ்வீட்டு கால்நடைகளின் பொறுப்பு அவர்களின் வசம்.
மனம் ஒடிந்து சோகமே உருவமாய் மாரியுடன் வந்தவள், எங்கும் பச்சை போர்வையை போர்த்தியவாறு காணப்பட்ட இயற்கையின் எழிலில் இறுக்கம் தளர்ந்து மனதில் புது உணர்வு பாய…மண் வாசம் கலந்த காற்று நுரையீரலில் ஆழ்ந்து நிரப்பினாள்.
அன்று அவர்களின் வயலில் ஒரு பகுதியில் நாற்று நடவு. இன்னும் சிறிது நேரத்தில் நடுவதற்கு பெண்கள் வந்துவிடுவார்கள். அதற்காக நாற்றங்காலில் வளர்ந்திருந்த நாற்றை வேகமாக இருவர் பிடுங்கி கட்டிக்கொண்டிருந்தனர்.
“என்னப்பா இப்போ நடவு?”
மகள் முகத்தில் மகிழ்வு இல்லையென்றாலும்… முதல் காணப்பட்ட இறுக்கம், சோகம் இப்போது இல்லை. அதுவே சூர்யாவுக்கு தற்சமயம் போதுமானதாக இருந்தது.
“இந்த வயலில் மூணு மாசத்து பயிர் போட்டிருந்தோம் டா. அதான் போன வாரம் அறுவடை ஆச்சு. மண்ணை சும்மா போட்டிருந்தால் நல்லாயிருக்குமா? அதான் அறுவடைக்கு முன்னவே நாற்று விட்டாச்சு. இன்னைக்கு நடவு” என்றார்.
வந்தது முதல் ஒற்றை வார்த்தை கூட உதிர்க்காத மகள் பேசியதும் கடகடவென விளக்கம் கொடுத்தார்.
நடவு தொடங்கியது,
“நாற்று நான் தூக்கி போடவாப்பா!”
சிறு வயது வருவை அவளின் அக்கேள்வி கண்முன்னே கொண்டுவர,
“உனக்கு பிடிச்சதை செய்டா” என்றவர் மகளை சேற்று வயலில் இறங்கி கால் நிலையாய் பதியும் வரை கை கொடுத்தார்.
சேற்றின் ஈரம் பாதத்தில் இறங்கி உச்சி மண்டை வரை சில்லென்ற இதத்தை பரப்ப… கண்களை மூடி அதனை அனுபவித்தவள், “சூப்பரா இருக்குப்பா” என்று மலர்ந்து கூறினாள்.
அந்நொடி சூர்யாவுக்கு ஒன்று புரிந்தது.
ஏதேனும் ஒன்றில் மகள் ஈடுபாடு கொண்டாள், அவளின் நிலையைப்பற்றி யோசித்து அதிலேயே மூழ்காமல் இருப்பாளென்று எண்ணியவர்,
“அம்மாடி வரு” என்று நடுபவர்களுக்கு நாற்றுத் தூக்கிபோட்டுக் கொண்டிருப்பவளை அழைத்து,
“நீ இங்க பார்த்துகம்மா. மாரி இருப்பான். நான் ஆலை வரை போயிட்டு வறேன்” என்று சொல்லியவர் நடவு முடிந்தும் வரவில்லை.
“அப்பா இன்னும் வரலையேண்ணா?”
பண்ணை வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி, அங்கு மண்டிக்கு போகும் தேங்காய்களின் எண்ணிக்கையை கணக்கு பார்த்துக்கொண்டிருந்த மாரியிடம் கேட்டாள்.
“ஆலையில் லோடு ஏத்துறாங்க கண்ணு” என்றவர் அவள் அருகில் உணவு கூடையை கொண்டு வந்து வைத்தார்.
“சாப்பிடு கண்ணு” என்றவர் தானே இலை வைத்து பரிமாறினார்.
“நீங்களும் சாப்பிடுங்கண்ணே” என்றவளிடம், “நான் சாப்பிட மூணு மணி ஆகும் கண்ணு” என்றவர் அவளுக்கு அருகிலேயே அமர்ந்து பார்த்து பார்த்து உண்ண வைத்தார்.
“உன் சந்தோஷம் தான் கண்ணு எங்க சந்தோஷம். எவ்வளவு கஷ்டம் வந்தாலும், ஒருநாள் அதுக்கும் முடிவிருக்கு. எல்லாம் சரியாப்போகும். அதுவரை கஷ்டமாத்தான் இருக்கும். இருந்தாலும் இப்படியே வெசனப்பட்டு ரூமுக்குள்ளே கதின்னு கிடந்தா ஆயி அப்பன் மனசு நோகாதா கண்ணு” என்று ஆதுரமாக பேசிய மாரியை கலங்கிய கண் கொண்டு ஏறிட்டவள்,
“எனக்கு மட்டும் ஏண்ணா இப்படி” என்று முதல் முறையாக தன்னிலையை எண்ணி வினவினாள்.
“சரியாகும் கண்ணு. தம்பி சீக்கிரமே உன்னைத்தேடி வரும்” என்றவர் அவளின் கண்ணீரைத் துடைத்து…
“உனக்கு பலமா இங்கு நிறைய கை இருக்கு கண்ணு. பார்த்துக்கலாம் விடு” என்று சாதாரணமாக சொல்லியவர் நெல்லி மரத்தை நோக்கி கூட்டிச் சென்றார்.
“அண்ணா…” மரத்தை கண்டதும் வருவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
“என்னண்ணா இப்படி காய்ச்சிருக்கு. கொத்து கொத்தா. இலையையே காணோம்” என்றவள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.
“நீ வச்சது ஒரு கட்டையா இருந்தாலும் அது துளிர்க்குமே கண்ணு” என்றவர் மரத்தைச் சுற்றி தார் பாயினை விரித்தார்.
“இப்போ மரத்தை ஆட்டு கண்ணு” என்றவர் சற்று விலகி நின்றார்.
மழலையென ஆர்பரிப்புடன் மரத்தின் தண்டை பிடித்து வரு குலுக்கிவிட மழையென சிறு நெல்லி தார் பாய் முழுவதும் கொட்டி நிறைத்தது.
வருவின் முகத்தில் அனைத்தையும் மறந்து ஒரு மகிழ்வு.
ஒரு காயினை எடுத்து கடித்தவள் அதன் புளிப்பு சுவையை உணர்ந்து முகத்தை சுருக்கி ருசித்தாள்.
“செம டேஸ்ட் ண்ணா.”
“சரி கண்ணு நீ வீட்டுக்கு போ. நான் வரப்போ கூடையில் அள்ளிப்போட்டு கொண்டு வரேன்” என்றார்.
முன்பிருந்த சோகத்தை மாரியின் பேச்சில் தள்ளி வைத்தவள், தனக்காக அவர் செய்யும் சிறு சிறு செயலிலும் தன் கூட்டிலிருந்து மெல்ல வெளிவந்தாள்.
“தேன்க்ஸ் ண்ணா” என்றவள் அவருக்கு தலையாட்டிவிட்டு துள்ளலுடன் வீட்டிற்கு செல்ல நடந்தவளை, வழியில் இரு பெண்கள் பிடித்துக் கொண்டனர்.
“என்ன வரு புருஷன் கூட வருவன்னு பார்த்தால், இப்படி ஒத்தையில வந்து நிக்குற” என்று ஒருவர் கேட்க,
“அவ அத்தையும் அப்படித்தான் புருஷனை விட்டு நாலு வருஷம் பிரிஞ்சிருந்தாள். இப்போ இவள் வந்து உட்கார்ந்திருக்கா” என்று இன்னொரு பெண் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவ்வளவு நேரமிருந்த இதம் தொலைந்து வருவின் மனதில் மீண்டும் பாரம் ஏற, கண்கள் சட்டென கலங்கின.
இரு பெண்கள் வருவை தடுத்து நிறுத்துவதை பார்த்த மாரி, வெளிப்படையாய் எதையும் கேட்டுவிடும் கிராமத்து பெண்களின் குணமறிந்து அவர்களின் பக்கத்தில் வந்தவர், பேசியதைக் கேட்டு நொந்து போனார்.
“யே ஆத்தா என்ன பேசுற, பச்சைப்புள்ள அது. அதுக்கிட்ட போய்” என்றவர் “வந்தோம்மா வேலையை பார்த்தோமான்னு போங்க” எரிந்து விழுந்தார்.
“நாங்க என்ன இப்போ இல்லாததை சொல்லிப்புட்டோம்” என்று அவர்கள் நொடித்துக்கொண்டு செல்ல… வரு கலங்கிய கண்களை அவரிடம் மறைத்தவளாக கிணற்று அருகில் சென்று தொட்டி பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
‘இப்போதான் கொஞ்சம் தேறி நின்னுச்சு’ என்று நினைத்த மாரி வருவின் மீது ஒரு கண்ணை வைத்தவாறே தன் வேலைகளை கவனித்தார்.
அமைதியாய் தனிமையில் இருக்கும் மனம் சாத்தானுக்கு நிகர். நாம் மறக்க நினைக்கும் ஒன்றைத்தான் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். பெண்கள் பேசிச்சென்றதே மனதில் உழன்றது. அப்படித்தான் வருவும் தன் வாழ்வை திருப்பி பார்த்தாள்.
வண்டியில் வந்து கொண்டிருந்தவள் அன்றைய நிகழ்வுகளின் எண்ணவோட்டத்தில் மூழ்கியிருந்தாள்.
எதிர்பட்ட வண்டியினை அவள் கவனியாது தனக்குள் உழன்றபடி நடு சாலையில் சென்று கொண்டிருந்தாள்.
அச்சாலையோ ஒரு நேரத்தில் ஒரு வண்டி மட்டுமே செல்லக்கூடிய அளவில் மிக குறுகலாக இருந்தது.
சாலையின் நடுவில் வந்தவள், எதிரே வந்த காரின் ஹாரனை காதில் வாங்காது முன்னேற, வேகத்தில் வந்து கொண்டிருந்தவர் திடீரென பிரேக் இட்ட போதும் சாலையில் உராய்ந்தபடி சில அடிகள் வந்து நூலிழை இடைவெளியில் அவளின் இருசக்கர வாகனத்தை தொட்டுவிடும் நிலையில் நின்றது.
வண்டியின் கிரீச் என்ற சத்தத்தில் தன்னுணர்வு பெற்றவள், வேகமாக பிரேக்கை பிடித்து கால்களை தரையில் ஊன்றி, பயத்தில் கண்களை மூடி நின்றாள்.
காரிலிருந்து அதீத கோபத்துடன் இறங்கிய ஓட்டுநர்,
“ஏம்மா கண்னை எங்கு வச்சு ஓட்டுற, செத்த நான் விட்டிருந்தால் அவ்வளவு தான்” என்றவர் இன்னும் பல வார்த்தைகள் கூறி திட்ட…
“சாரி… சாரி… சாரி” என்றவாறே அரை கண் திறந்து மன்னிப்பு வேண்டியவளின் பார்வை தான் கண்டதில் விழிகளை அகல திறந்து அதிசயத்து நின்றாள்.
“தம்பி உன்னைத்தேடி சீக்கிரம் வரும் கண்ணு.” மாரியின் குரல் அவள் செவிகளில் எதிரொலித்தது.
‘வந்துட்டாரா? உண்மையில் மாமா தானா?’ எனத் தனக்கு எதிரே காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்த யாதுவை பார்த்தது பார்த்தபடி தன்னுடைய மனதிடம் கேள்வி கேட்டாள்.
இமை மூடினாள் மறைந்திடுவானோ என்று அஞ்சி, விழி மூடாது பார்த்திருந்தாள்.
“என்னம்மா நான்பாட்டுக்கு கத்திட்டு இருக்க, நீ உம்பாட்டுக்கு எங்கையோ பார்க்குற” என்று இன்னும் உச்சஸ்தாதியில் ஓட்டுநர் கத்த, அவர் அருகில் வந்த யாதவ்…
“நீங்க போங்க… வண்டியை எடுங்க” என்று அவரை அனுப்பி வைத்துவிட்டு வருவிடம் திரும்பினான்.
“என்ன அப்படி பாக்குற… நான் தானான்னு டவுட்டா?” எனக் கேட்டான் தன் அழகிய சிரிப்புடன்.
“இல்…ல்…இல்லை, எப்போ… எப்போ வந்தீங்க?” இதனை கேட்டு முடிப்பதற்குள் அவள் நாக்கு பலமுறை தந்தியடித்தது.
அவளின் நிலை யாதவிற்கு புரியத்தான் செய்தது. ஆனால் இப்போது அவள் மீது புதிதாக முளைத்திருக்கும் அவனின் கோபம் அவளிடம் சற்று சீண்டி பார்க்க சொல்லியது.
அதனால் தனக்கு நம் திருமணம் தெரியுமென்று அவனாக சொல்லிவிடக் கூடாதென முடிவெடுத்துதான் இங்கே கிளம்பியிருந்தான்.
இப்போது வருவை கண்டதும்… சோகமே உருவமாய் இருந்தவளின் முகம் தன்னை கண்டதும் ஒளி நிறைந்து பிரகாசமாய் மாறியதை கண்டவன் அதிர்ந்துதான் போனான்.
இத்தகைய வெளிப்பாடு காதலில் மட்டுமே சாத்தியமென்று காதலை மறந்திருக்கும் யாதவிற்கு தெரியவில்லை.
ஆனால் அவளின் முகத்தில் நொடி நேரமேனும் வந்து போன மின்னலை கண்டு கொண்டவன், சொல்லிவிடலாமா என்று ஒரு கணம் நினைக்கத்தான் செய்தான்.
இருப்பினும், மறைக்கக் கூடாத ஒன்றை அவள் மறைத்ததால் அவ்வெண்ணத்தை அப்போதே கைவிட்டான்.
“இப்போ தான் வந்துட்டே இருக்கேன்” என்றவன், “வீட்டுக்கு போகலாமா?” எனக் கேட்டுக்கொண்டே அவளிடமிருந்து வண்டியை வாங்கியிருந்தான்.
“நீங்க ஓட்டபோறீங்களா?” அவள் கேட்ட விதமே அவனுக்கு எதையோ உணர்த்த தன் உயரத்தையும் வண்டியையும் மாறி மாறி பார்த்தவன் ஓட்டுநரை அழைத்து எங்களை இதில் ஃபாலோ பண்ணுங்க” என்று சொல்லி காரை நோக்கிச் சென்றவன் வருவை அழுத்தமாக பார்க்க அவளும் அவன் பின்னால் சென்றாள்.
யாதவ் ஓட்டுநர் பக்கம் செல்ல…
“நான் ட்ரைவ் பண்ணட்டும்மா?” எனக் கேட்டிருந்தாள் வரு.
அவன் கேள்வியாய் அவளை ஏறிட,
“கால்… கால் சரியாகிடுச்சா?” என்று அவனின் காலினை பார்த்துக்கொண்டே வினவினாள்.
“இந்த ஐந்து நிமிட தூரத்துக்கு என் கால் ஒன்னுமாகாது” என்றவன், வண்டியிலேறி ஸ்டார்ட் செய்ய வரு வேகமாக மறுபக்கம் சென்று அவனுக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்தாள்.
சூர்யாவின் வீடு முன்பு வண்டியை நிறுத்தியதும் வேகமாக இறங்கி வீட்டிற்குள் ஓடியவள்,
“ம்மா… ம்மா” என்று கத்தியவாறே வீடு முழுக்க அவரைத் தேடினாள்.
மாட்டிற்கு வைக்கோல் போட்டுக் கொண்டிருந்தவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்ட மகளின் துள்ளலான குரலில் அடித்துப்பிடித்து உள்ளே வந்தார்.
“வரு… என்னம்மா?” கண்களில் துளிர்த்த நீரை சேலை தலைப்பால் ஒற்றிக்கொண்டார்.
“மாமா வந்திருக்காங்க ம்மா!”
“யாரு… ஆதிண்ணாவா?”
வரு மாமா என்று பொதுவாக சொன்னதும் அவருக்கு ஆதி தான் நினைவில் வந்தார்.
அவளோ மறுத்து, “என் மாமா” என்றாள் அழுத்தமாக…
அதற்குள் யாதவே வீட்டிற்குள் வந்திருந்தான்.
வரு சொல்லிய விதத்திலேயே யாதவ் என்று அறிந்தவர் வாயில் பக்கம் திரும்ப, யாது உள்ளே வந்திருந்தான்.
“வாங்க மாப்…”
“ம்மா…”
“வா… வா… யாது!”
மாப்பிள்ளை என்று அழைக்க வந்தவர் வருவின் கத்தலில் அப்படியே நிறுத்தி மாற்றி அழைத்தார்.
அதனை யாதவும் கவனித்தான்.
வருவை முடிந்த மட்டும் முறைத்தான்.
“நீ தம்பிகிட்ட பேசிட்டு இரு வரு” என்றவர் அவனுக்கு குடிக்க தண்ணீர் எடுத்துவர அடுக்கலைக்குள் சென்றார்.
வரு என்ன பேசுவதென்று தெரியாது சேலை நுனியை திருகியவாறு நின்றிருந்தாள்.
அவனின் பார்வை எப்போது ரசனையாக மாறியதோ! அவனின் பார்வை மாற்றம் பெற்று அவளின் முகத்தில் ஊர்வலம் சென்று கழுத்து மச்சத்தில் முடிவடைந்தது.
அவன் மனதில் அவளை மனைவியாக நினைப்பதால் வந்த உணர்வென்று தனக்குத்தானே கூறிக்கொண்டானேத் தவிர இதுவும் காதல் தானென்று ஒப்புக்கொள்ளவில்லை.
அப்போதுதான் இதுநாள் வரை கண்ணில் படாத அவளின் தாலி அவனின் கண்ணில் பட்டது.
அங்கேயே அவனின் பார்வை குத்தி நின்றது.
யாதவின் பார்வையை உணர்ந்தவள் அதனின் பொருளுணர்ந்து, கழுத்தை தேய்த்தவளாக உள்ளேச் சென்றுவிட்டாள்.
அறைக்குள் சென்றவள், “இதையெப்படி மறந்தேன்” என்று நெற்றியில் தட்டிக் கொண்டாள்.
அடுத்து சில நிமிடங்களில் வெளி வந்தவளின் கழுத்தில் மெல்லிய சங்கிலி மட்டுமே இருந்தது. சட்டையின் உள்ளுக்குள் மறைத்து பின் போட்டிருந்தாள்.
வரு வந்ததும் யாதவ் கண் அவளின் கழுத்திற்குத்தான் சென்றது.
ஒரு நொடி அதிர்ந்தவன், ‘நிச்சயம் அவள் கழட்டியிருக்க மாட்டாள்’ என்று நம்பிக்கை கொண்டான்.
வரு தாலியை மறைப்பதற்கு காரணம்?
திருமணம் ஆகிவிட்டது என்றால் கணவன் யார் என்கிற கேள்வி வரும். அப்படி வரும் சமயம், யாரோ ஒரு பெயரை அவளுடன் சேர்த்து சொல்வதைக்கூட அவள் விரும்பவில்லை. அதனால் திருமணம் ஆகாதவளாகவே காட்டிக்கொண்டாள்.
‘உனக்காக எல்லாம் உனக்காக.’ தாலியை மறைக்கும் வேதனை நெஞ்சில் சூழ தனக்குள் செல்லிக்கொண்டாள்.
‘இன்னும் எத்தனை நாளுக்கு மறைக்கப்போற வரு?’ என்று தனக்குள் கேட்டவன்,
‘சீக்கிரம் நீயா சொல்லிடு… எல்லாத்தையும். இல்லை நான் சொல்ல வைப்பேன்’ என்று பார்வையாலேயே அவளை எச்சரித்தான்.
அந்நேரம் அவனின் பார்வை அவளுள் அச்சத்தை ஏற்படுத்த பெண் காரணம் அறியாது குழம்பினாள்.
*நீ வீசிச்சென்ற பார்வையில்
பல கவிதைகள் எழுதிட ஆசை.
அவை மொத்தமும்,
நம் காதலை பறைசாற்றிட…
பேராசை.
நீ பறித்துச் சென்ற இதயத்தில்
பல நினைவுகளாக உன் முகம்.
மொத்தமாய்,
உன்னை மட்டுமே சுமந்திடும்…
நம் நினைவுகளாய் காதல்.*
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
42
+1
2
+1