
பூகம்பம் -33
சுமதியின் திருமணம் முடிவாகி விட்டது.. இருந்தும் அசோக்கின் வேலை காரணமாக அவன் பெங்களூருக்கு கிளம்புவதாக சொல்ல, வேறு வழியின்றி அவனின் அன்னையும் சரியென்றிருந்தார்.
அவன் கிளம்பினால் ரூபனுக்கு மட்டும் இங்கு என்ன வேலை.? திடீரென்று கிளம்புவதாக கூறி ஆதிராவிடம் வாங்கி கட்டி கொண்டு பின்பு சமாளித்து சிரிக்க வைத்திருந்தான்.
முக்கியமென்றால் வார இறுதியில் அசோக் வருவதாக தமக்கையிடம் உரைத்திருந்தான். அருகிலே உறவினர்கள் பலர் இருப்பதால் அசோக்கின் அன்னைக்கும் பிரச்சனை எதுவுமில்லை.. வேலைகளை அவர்களே பார்த்தும் கொள்வார்கள்.
காவ்யாவின் தந்தை இருப்பதால் ஆடவனும் கவலை கொள்ளவில்லை. இவர்களுக்கு அவர் ஒன்று விட்ட சொந்தம் தான் என்றாலும் மனதளவில் நெருங்கிய சொந்தமே.!
அவரிடம் போய் ‘உங்க பொண்ணை காதலிக்கறேன்.. எனக்கு கட்டி வெய்யுங்கள்..’ என்று எப்படி கூற முடியும் இவனால்.? அதனால் தான் காவ்யாவிடம் இருந்து விலகி விலகி செல்கிறான்.. காலமே இவர்களை சேர்த்து வைத்தால் அவனால் மறுக்க முடியுமா என்ன.?
வீரச்சாமி கூறியதை அன்னையிடம் ரூபன் உரைத்திட, அவரோ சிறிதும் யோசிக்காமல் “நீயே சரினு சொல்றதுக்கு என்னடா.? இதெல்லாம் என்கிட்ட கேட்கணுமா.? அவங்களால தான் அந்த நிலமே நமக்கு கிடைச்சுருக்கு.. அந்த நன்றியை எப்பவும் மறக்க முடியாதுல.?” என்று தனக்கும் சம்மதம் தான் என்றுரைத்தார்.
“நானும் சொன்னேன்மா.. அவங்க தான் அம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லுனு சொன்னாங்க..”
“உன் சித்தப்பனே நமக்கு எதிரா இருக்கறப்ப நமக்கு துணையா நின்னு நமக்கு சொந்தமானதை வாங்கி குடுத்துருக்காங்க.. அவங்ககிட்ட எப்படி முடியாதுனு நம்மளால சொல்ல முடியும்.?”
“அம்மா இப்ப நம்ம முடியாதுனு சொன்னாலும் பெரிப்பாவே வேறவங்களுக்காவது குடுங்க.. ஆனா அந்த வயலை மட்டும் அப்படியே விடாதீங்கனு தான் சொல்லுவாரு..”
“அது எனக்கும் தெரியும்டா.. உன் அப்பா அவரை பத்தி தான் விடாம பேசிட்டு இருப்பாரே.. பல நேரம் அவரு தான் நமக்கு துணையா இருக்கறது.. அவரை போய் நான் தப்பா நினைப்பனா.?”
“ம்ம்ம் நான் அவருகிட்ட பேசறேன்மா..”
“சரிடா.. அசோக் வீட்டுல என்ன ஆச்சு.?” என்று அவர் கேட்க, அவனும் நடந்ததை உரைத்து “அவங்க அக்காவை பார்க்கவே பாவமா இருக்குமா.. ஒரு வழியா எல்லாம் முடிவானதும் தான் அவங்க முகத்துல சிரிப்பே வந்துச்சு..” என்றான் சுமதியின் நினைவில்.!
“இனி அந்த பொண்ணுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்டா..” என்ற அன்னையின் கூற்றை ரூபனும் ஏற்று கொண்டான்.
அன்னை கூறியதை கேட்டதில் இருந்து படபடவென அடித்து கொண்ட மனதுடன் ஆதிராவுக்கு ரஞ்சித் அழைக்க, மறுபக்கமோ அழைப்பு சென்று கட்டாகியது.. மறுபடியும் அழைத்தவனின் அழைப்பு ஏற்கப்பட, “ஹலோ ஆதிரா” என்றதும் “சொல்லுங்க மாப்பிள்ளை” என்ற குரலில் விக்கித்து நின்றான்.
“ஹலோ யாருங்க.?”
“நான் ஆதிரா அம்மா பேசறேன் மாப்பிள்ளை.. நானே உங்க அம்மாக்கு போன் பண்ணனும்னு நினைச்சேன்.. நீங்களே பண்ணிட்டீங்க..”
“ஹான் ஆண்ட்டி..”
“சீக்கிரம் கல்யாண தேதியை குறிச்சு ஒரு மாசத்துல கல்யாணத்தை முடிச்சு இந்த பிசாசை நீங்களே கூட்டிட்டு போய்ருங்க.. அப்பதான் நான் நிம்மதியா இருப்பேன் மாப்பிள்ளை..” என்று அவனை மேலும் பயப்படுத்தி விட்டது துருவினியே.!!
உள்ளுக்குள் உதறல் எடுத்ததில் பேச்சின்றி இவனிருக்க, “என்ன மாப்பிள்ளை பேச்சை காணோம்.? ஓஓஓஓ சந்தோசத்துல பேச்சு வரலயா.? உங்க சந்தோசத்துக்காகவே அடுத்த வாரமே கல்யாணத்தை வெச்சரலாம் மாப்பிள்ளை.. நான் இப்பவே இவங்க அப்பாகிட்ட பேசறேன்..” என்று சிரிப்பை அடக்கி துருவினி கூறியதில் ஆடவனின் விழிகள் அதிர்வை தத்தெடுத்து கொண்டது.
‘ஒரு வாரத்துல கல்யாணமா.? அய்யய்யோ’ என்று பதறி “ஆண்ட்டி நீங்க அம்மாகிட்ட பேசிக்கங்க.. நான் போனை வெக்கறேன்..” என்றதும் கலகலவென சிரிப்பலைகளை சிதற விட்டாள் துருவினி.
இதில் அவன் குழம்பி இது துருவினி குரல் மாதிரி இருக்கே.? என்று அப்போது தான் யோசிக்க தொடங்க, “யோவ்வ் என் அக்காவை கல்யாணம் பண்ண மாட்டேனு சொல்லிட்டு இப்ப அம்மாகிட்ட பேசிக்கங்கனு சொல்றீயா.?” என்று கேட்டாள் மிரட்டலுடன்.!
“நீங்க துருவினி தானே.?” என்று தயக்கமாக அவன் வினவ, “அதையவே இப்பதான் கண்டுபிடிக்கறீயா.? நீயெல்லாம் என் அக்காவை கல்யாணம் பண்ணிருந்தா அவ்வளவு தான்.. நல்லவேளை தப்பிச்சுட்ட.. உனக்கு நல்ல காலம்..” என்று இச் கொட்டினாள்.
“பயந்துட்டேன்ங்க.. உண்மையாவே உங்க அம்மா தான் பேசறாங்களோனு நினைச்சுட்டேன்..”
“ஆஹான் ஆஹான்.. என் அம்மா இப்படி பேசிட்டா உலகமே அழிஞ்சு நம்ம எல்லாம் மண்ணோட மண்ணா போய்ருவோம்.. நீ கேர்புல்..”
“அய்யோ ஏங்க இப்படி குழப்பறீங்க.? ஆதிராகிட்ட போனை குடுங்களேன்..”
“அவ என்ன மைசூர் மகாராணியா.? நீங்க சொன்னதும் நான் குடுக்க.? முடியாது நான் குடுக்க மாட்டேன்..” என்று அவனை வைத்து செய்ய, “ப்ளீஸ்ங்க.. முக்கியமான விசயம் பேசணும்..” என்ற அவனின் குரலில் “அவ இருந்தா அவளே போனை எடுத்துருப்பாளே.. அவ போனை வெச்சுட்டு எங்கயோ போய்ட்டா.. வந்ததும் கூப்பிட சொல்றேன்..” என்றாள் தன்மையாக.
“ஓஓஓஓ சரிங்க.. அவங்க இருந்தா நீங்க ஏன் அவ போனை எடுக்க போறீங்க.? நான் இதைய யோசிக்க மறந்துட்டேன்..”
“யோசிச்சுட்டா தான் அதிசயம்.. ஆமா அப்படி என்ன முக்கியமான விசயம்.?”
“வீட்டுல மறுபடியும் கல்யாண பேச்சை எடுத்துட்டாங்க.. நான் வேணாம்னு சொன்னாலும் நிவே விடாம டார்ச்சல் பண்ணுவாங்க.. அதான் ஆதிராகிட்ட பேசலாம்னு..”
“நிவே அக்கா தான் மெய்ன் ப்ராப்ளமா.?”
“அப்படி இல்லங்க.. அப்படியும் வெச்சுக்கலாம்..” என்று மாறி மாறி கூறியதில் “யோவ் குடிச்சுருக்கீயா என்ன.? இப்படி உளரிட்டு இருக்க.?” என்று இவள் கடுப்பாக, “அய்யோ எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்லங்க..” என்றான் அவசரமாக.
“அதுக்கு ஏன்யா இப்படி கத்தற.? நீ குடி.. குடிக்காம போ.. அதுல எனக்கு என்னயா வர போகுது.?”
“நீங்க என்னைய தப்பா நினைச்சுட்டீங்கனா.?”
“நான் அப்படி நினைச்சாலும் உனக்கு என்ன கவலை.?”
“கவலை இருக்குங்க..”
இவள் புரியாமல் “என்னது.?” என்றதும் “ஆதிரா போன்லயே எவ்வளவு நேரம் பேச முடியும்ங்க.. நீங்க உங்க நம்பர் குடுத்தா நானே போன் பண்ணி என் கவலையை சொல்றேன்ங்க..” என்று கிடைத்த கேப்பில் பெண்ணவளின் நம்பரை கேட்டு விட்டான்.
“யோவ் சரியான ஆளுயா நீ.. சைடு கேப்புல கிடாவெட்டி என் நம்பரை வாங்க பார்க்கறீயா.?”
“இல்லங்க..”
“என்ன இல்லங்க.? முதல்ல நீ யாருயா எனக்கு.?”
“நீங்களும் சிங்கிள்.. நானும் இப்ப சிங்கிள்..” என்று அவன் சொன்ன விதத்திலே அவன் கூற வருவதை உணர்ந்த பெண்ணவளுக்கு கோவத்தை விட சிரிப்பே மேலோங்கிட, இருந்தும் கடுகடுவென குரலிலே “சோ.?” என்று இழுத்து நிறுத்தினாள்.
“நம்ம மிங்கிளான என்ன தப்பு.?” என்று ஒரு எதிர்பார்ப்புடன் கேட்டு விட, இதழில் உறைந்த புன்னகையுடன் “தப்பே இல்ல..” என்றாள் அவளும்.
திகைத்த அவன் “என்னங்க உண்மையாவா.?” என்று கேட்க, “நான் என் க்ரஷை கரெக்ட் பண்ணி மிங்கிளாக போறேன்.. என் லவ்வு சக்சஸ் ஆகிருச்சுனா எனக்காக நீ மொட்டை போடறேனு பழனி முருகன்கிட்ட நான் வேண்டிக்கறேன்..” என்றதில் அதிர்ந்தான் அவன்.
“என்னங்க இது அநியாயம்..”
“நோ நோ இது தான் நியாயம்..”
“அப்ப நீங்க நம்பர் தர மாட்டீங்க.?”
“மாட்டேன்..”
“சரிங்க.. நான் போனை வெக்கறேன்.. ஆதிரா வந்ததும் கூப்பிட சொல்லுங்க..” என்று இவன் கூறினாலும் அவன் மனதோரத்தில் அவளின் எண்ணை தருவாள் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்க, ஆனால் அவளோ அதை பொய்யாக்கி “ம்ம்ம் என் லவ்வு சக்சஸ் ஆனா சொல்றேன்.. எனக்காக நீங்க போய் மொட்டை போட்டுட்டு வந்துருங்க..” என்று விட்டு போனையும் வைத்து விட்டாள்.
இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பு இப்போது வெளி வர, வாய்விட்டே சிரித்தாள் அவனின் அறியாமையை நினைத்து.! தன் அலைப்பேசியில் அவனின் எண்ணை குறித்தவள் “மை லவ்” என்று சேமித்தாள் லேசாக துளிர் விடப்பட்டிருந்த நேசத்துடன்.!!!
சுமதியின் கல்யாண வேலைகள் மளமளவென நடக்க தொடங்கி இருக்க, அவ்வப்போது அசோக்கும் அங்கு வந்து செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளை செய்து விட்டு சென்றான். மற்றவர்களை விட அவனுக்கு தான் அலைச்சல் அதிகம்.
இங்கு வந்தாலே பெரிய அக்காளின் சிடுசிடுவென இருக்கும் முகத்தை பார்த்து இவனுக்கும் அந்த சிடுசிடுப்பு தொத்தி கொள்கிறது. சரியாக அவன் வரும் நேரத்தில் தான் அவளும் வந்து செல்கிறாள். தான் கோவத்தில் இருப்பதை கண்டு தம்பி சமாதானப்படுத்துவான் என்று அவன் முன்னாலே அவள் நடமாடிட, அவனுக்கு இன்னும் சினமேறியது தான் மிச்சம்.
முடிந்த வரைக்கும் அவரை நிராகரித்து முழு மனதுடன் திருமண வேலைகளை செய்தான்.. இன்றும் வேண்டுதல் வைத்ததற்காக கோவிலுக்கு அவனும் அவன் அன்னையும் கிளம்புவதாக இருக்க, காவ்யாவின் அன்னையும் வருவதாக கூறியதில் மூவரும் கிளம்பினர்.
முதலிலே அன்னையிடம் கூறி விட்டான் உன் பெரிய பெண்ணிடம் இதை கூறினால் அப்படியே கிளம்பி விடுவேன் என்று.!! மகளை அடக்கி வைத்திருந்தாலும் ஒரேயடியாக அவளை ஒதுக்கவும் முடியாமல் அவள் கேட்பதற்கு உண்மையான பதிலை கூறி விடுவார் அவளின் அன்னை.
இதன் மூலம் தான் தம்பி வரும் விடயமறிந்து முன்னரே வந்து விடுகிறாள். அவன் பேசுவான் என்று இவளிருக்க, அவனோ அது தேவையே இல்லை என்பதை போல் வலம் வந்து கொண்டிருக்கிறான்.. இதில் அவளுக்கு ஏமாற்றமே.
சுமதி தனியாக இருப்பதால் காவ்யாவை அவளுடன் இருக்க கூறி இருக்க, யாருமில்லை என்றறிந்ததும் ஆதிராவும் துருவினியும் அங்கு வந்து விட்டனர். சிறு வயதில் இருந்து சுமதியுடன் வளர்ந்திருந்ததால் ஒரே ஆட்டம் பாட்டம் தான் அங்கு.!!
வீட்டில் யாருமில்லை என்றால் சொல்லவா வேண்டும்.? அதுவும் தன் நண்பிகளுடன் இருந்தால் அவ்விடம் அமைதியாகவா இருந்திடும்.? சமைக்கின்றேன் என்ற பேர்வழியில் எதையோ செய்து வயிற்றை நிறைத்தும் கொண்டனர்.
“அண்ணி என்ன பண்ணலாம்.?” என்று காவ்யா கேட்க, “அதைய நீங்க தான் சொல்லணும்.. நான் என்னத்த சொல்றது.?” என்று சுமதியும் பதிலளிக்க, “அதுவும் சரிதான்.. நீங்க அமைதியா டிவி பார்க்கலாம்னு கூட சொல்லுவீங்க.. கேட்ட கேள்வி சரிதான்.. ஆனா கே
ட்ட ஆள் தான் தப்பாகிருச்சு.. இப்ப சரியா கேட்கறேன்.. சரியான பதிலும் வரும்.. பாருங்க..” என்று அவளை கிண்டலடித்து ஆதிராவிடம் கேள்வியை திருப்பி விட்டாள்.
அழகிய பூகம்பம் தொடரும்..

