Loading

பூகம்பம் – 37

 

 

 

ஆதிராவை காண வந்த காவ்யாவை பிடித்து “நீயும் அவளுக்கு கூட்டா.?” என்று ஆதிராவின் அன்னை கேட்டதில் திருதிருவென விழித்து பின்பு “நீங்க என்ன சொல்றீங்க.? எனக்கு ஒன்னுமே புரியல” என்று சமாளித்தாள்.

 

“அம்மா அவளுக்கு எதுவும் தெரியாது.. சொன்னா திட்டுவானு யாருகிட்டயும் நான் சொல்லல” என்று கூறி தோழியை ஆதிரா காப்பாற்றிட, அவர்களை முறைத்தபடியே அவரும் நகர்ந்தார்.

 

“ஏய் நீ சொல்லாம எப்படி இவங்களுக்கு தெரிஞ்சுச்சு.?”

 

“சுமதி அக்கா கல்யாணத்துல நானும் ரூபனும் பேசுனதை எவளோ கேட்டு அப்படியே சொல்லி வெச்சுருக்காங்க.. யாருனு தெரியட்டும் அப்பறம் இருக்கு..”

 

“அடுத்த வாரம் ஆபிஸூக்கு வர சொல்லிருக்காங்க.. நீ என்ன முடிவு பண்ணிருக்க.? வீட்டுல விடுவாங்களா.?”

 

“விட்டு தான் ஆகணும்டி.. நான் வந்துருவேன்.. நீ எதுவும் இங்க பேசாத.. அப்பறம் உன்னையும் ஜெயில்ல அடைக்கற மாதிரி வீட்டுல அடைச்சு வெச்சுருவாங்க..”

 

“நீ வேற என் அம்மா அதுக்கு தான் நேரம் பார்த்து காத்துருக்காங்கடி.. எனக்கு இப்பதான் லைட்டா பக்குபக்குனு ஆகுது..”

 

“சமாளிப்போம் தோழி.. சமாளிச்சு காதலை ஜெயிக்க வெப்போம்.. அப்பதான் வரலாறு நம்மள புகழ்ந்து பேசும்..”

 

“அடச்சீ.. இப்ப நம்மளைய காறி துப்புவாங்களா.? இல்லை கறி போட ரெடியா இருக்காங்களானு புரியாம இருக்கேன் இதுல வரலாறு பேசறது தான் இவளுக்கு முக்கியமா போய்ருச்சு.. போடிங்ங்ங்” என்று கடிந்தாள்.

 

“ஹேய் நான் பயந்தா ஒரு நியாயம் இருக்கு.. நீ ஏன் பயப்படற.?”

 

“நீ எனக்கு தெரியாதுனு சொன்னதை உன் அம்மா வேணா நம்புவாங்கடி.. ஆனா என்னைய பெத்த தெய்வம் நம்பும்னு நினைக்கறீயா.?”

 

“இது யோசிக்க வேண்டிய விசயம் தான்..”

 

“யோசிக்கவே தேவையில்லை.. நீ என்கிட்ட சொல்லாம ஓடி போன கூட அது எனக்கும் தெரியும்னு தான் சொல்லுவாங்கடி..”

 

“வாய்லயே போடுவேன் நான் ஏன்டி ஓடி போகணும்.?”

 

“அட சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்..”

 

“ஆஹான் சொல்லுவ சொல்லுவ.. நான் ரெடியா இருந்தாலும் அவன் வீட்டுல சம்மதிச்சா மட்டும் தான் கல்யாணம்னு உறுதியா சொல்லிட்டான்..”

 

“இப்படி மட்டும் என் ஆளு சொன்னா எப்படி இருக்கும்.?”

 

“ம்ம்க்க்கும் அதைய அசோக் அண்ணன்கிட்டயே கேளு போ” என்று தோழியை இடித்த சமயம் ஆதிராவின் அன்னை இவர்களை எட்டி பார்த்தார் என்ன பேசுகிறார்கள் என்று.!!

 

அதில் இருவரும் அமைதியாக கணினியில் பார்வையை பதித்து விட்டனர். ஹஸ்கி குரலில் “என் அம்மா ரொம்ப வில்லியா மாறிட்டாங்கடி.. நானும் துருவும் இப்படித்தான் ஏதாவது பேசுனா கூட எட்டி எட்டி பார்க்கறாங்க.. நைட்டு என்னடானா ரெண்டு பேருக்கும் நடுவுல தான் படுக்கறாங்க.. ரொம்ப படுத்தி எடுக்கறாங்க.. இதற்கே இவங்கள விட்டுட்டு எங்கையாவது ஓடிரணும்னு இருக்கு” என்றாள் ஆதிரா.

 

இவள் கூறியது அவளின் அன்னைக்கும் கேட்டு விட்டதை போல் மறுபடியும் இவர்களை அவர் பார்க்க, விழிகளை திருப்பாமல் மும்மரமாக வேலையை பற்றி பேச துவங்கி விட்டனர்.

 

ஆதிராவின் தந்தை இவ்விடயம் வெளியில் தெரியாமல் ரஞ்சித்துடனான திருமணத்தை முடித்து விடலாம் என்று நினைத்து முதலில் ரஞ்சித்தின் அன்னைக்கு தான் அழைக்க நினைத்தார். ஆனால் இத்தனை நாட்கள் திருமணத்தை பற்றி சிவாவிடம் பேசி விட்டு இப்போது நேரடியாக அவரிடம் பேச நினைப்பது ஒரு தயக்கத்தை வரவழைத்தது.

 

மேலும் தன்னை பற்றி சிவா என்ன நினைத்து விடுவானோ.? என்று பயந்து அவனுக்கே அழைத்து விட்டார்.

 

வயலில் வேலையாக இருந்தவன் அவரின் அழைப்பை எதிர்பார்க்காமல் “சொல்லுங்க மாமா..” என்றிட, “ஆதிராவோட கல்யாணத்தை பத்தி பேச தான் சிவா.. அவங்க என்ன சொல்றாங்கனு கேட்டுட்டு சொல்லு” என்று எடுத்ததுமே நேரடியாக கூறி விட்டார்.

 

சிவ வினாடிகள் மௌனமாக இருந்தவன் “சரிங்க மாமா.. நான் கேட்டுட்டு வீட்டுக்கே வர்றேன்.. மத்ததை பேசிக்கலாம்” என்று மறுமொழி உரைத்தான்.. அவனுக்கு தெரிந்ததை போல் காட்டி கொள்ளவில்லை..

 

ஆதிராவின் மேல் கோவம் இருந்தாலும் அவளுக்கு பிடிக்காத வாழ்வை ஏற்படுத்தி தர இவன் விரும்பவில்லை. அவரின் பேச்சிலே அவளின் காதல் விடயம் அவர்களுக்கும் தெரிந்து விட்டது என்பதை புரிந்து கொண்டான்.

 

ரூபனுக்கு அழைக்கலாமா.? என்று முதலில் யோசித்தவன் பின்பு வேணாமென்ற முடிவுடன் ரஞ்சித்துக்கு அழைத்தான். சிவா ஏன் தனக்கு அழைக்கிறார்.? என்று புரியாமல் ரஞ்சித்தும் அவனின் அழைப்பை ஏற்று “சொல்லுங்க சிவா.. பிரச்சனை எதுவும் இல்லை தானே.?” என்று வினவினான்.

 

“அதெல்லாம் இல்ல ரஞ்சித்.. உன்கிட்ட ஒன்னு சொல்லணும்..”

 

“ம்ம்ம் சொல்லுங்க..”

 

“ஆதிராவோட அப்பா சீக்கிரம் கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு சொல்றாங்க.. நீங்க என்ன சொல்றீங்க.?”

 

“…….”

 

“வீட்டுல பேசிட்டு முடிவை சொல்றீங்களா.?”

 

“சாரி சிவா..”

 

“எதுக்கு.?”

 

“இந்த கல்யாணத்துல எனக்கே விருப்பமில்லை..” என்றிட, “உனக்கா.? இல்ல ஆதிராவுக்கா.?” என்று அழுத்தமாக வந்தது சிவாவின் வார்த்தைகள்.

 

அவனின் குரலில் எதையோ உணர்ந்து கொண்ட ரஞ்சித் “முதல்ல ஆதிராவுக்கு மட்டும் தான் விருப்பமில்லை.. நீங்க நம்புவீங்களானு தெரில இப்ப எனக்கே விருப்பமில்லை.. வீட்டுல நான் பேசறேனு திராகிட்ட சொன்னேன்.. அவங்க தான் நானே பேசிக்கறேனு சொல்லிட்டாங்க” என்றான்.

 

“ஓக்கே.. இப்ப மாமாகிட்ட நான் என்ன சொல்றது.?”

 

“அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையையே ஏற்படுத்தி தர சொல்லுங்க சிவா.. ரூபன் ப்ரோவும் நல்லவரு தான்.. திராவை தங்கமா பார்த்துப்பாரு”

 

“நான் சொன்னா அவங்க சரினு சொல்லுவாங்கனு நீ நினைச்சுட்டு இருக்கீயா என்ன.? இனி ஆதிரா கைல தான் எல்லாமும் இருக்கு.. நீ என்ன சொல்றேனு கேட்க தான் உனக்கு கூப்பிட்டது..”

 

“பிடிக்கலனு சொல்றவங்களை வற்புறுத்தி வாழ வைக்க இது என்ன சினிமாவா.? அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துட்டு போறாங்க..”

 

“சரிடா.. நான் போய் மாமாகிட்ட சொல்றேன்.. நடக்கறது நடக்கட்டும்” என்றவன் போனை வைத்தான்.. வீட்டில் சொல்லலாமா.? என்று சிந்தித்து பின்பு மாமாவிடம் பேசிவிட்டு பின்னர் சொல்லி கொள்ளலாம் என்று நினைத்தான்.

 

அதற்கான காரணம் அவனின் அன்னையும் மனைவியும் தான்.. ஆதிரா காதலிக்கின்ற விசயம் இவர்களுக்கு தெரிந்து விட்டால் ஊர் முழுவதும் இவ்விடயமும் மின்னல் வேகத்தில் பரவி விடும்.. காரணம் அவள் காதலிப்பது ரூபனையாயிற்றே. அவனின் மனைவியும் ஏமாற்றத்தில் ஆதிராவை ஏதாவது சொல்ல கூடும்.. அதனால் தான் அமைதியாகி விட்டான்.

 

“வா சிவா.. நிவே வரலயா.?” என்று சிவாவை வரவேற்ற ஆதிராவின் தந்தை உள்நோக்கி குரல் குடுத்தார் சிவாவின் வரவை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு.

 

பின்பு நேரடியாகவே “ரஞ்சித் வீட்டுல என்ன சொன்னாங்க.? நிச்சயதார்த்த தேதியை குறிச்சரலாமா.?” என்று கேட்க, “மாமா பொறுமை.. ஏன் இவ்ளோ அவசரப்படறீங்க.?” என்று அவரை அமைதிப்படுத்தினான்.

 

“சின்னவ வேற இருக்கா.. அவளையும் பார்க்கணும்ல.?” என்றதும் “நான் தான் இந்த கல்யாணத்துல விருப்பமில்லைனு சொல்லிட்டேன்லபா” என்று ஆதிராவும் கூறினாள் பட்டென்று.

 

“கழுதை வாயை மூட்டிட்டு உள்ள போ.. என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்..”

 

“முடியாதுபா.. எனக்கு என் ரூபன் தான் வேணும்.. இல்லனா கல்யாணமே வேணாம்..”

 

தந்தைக்கும் மகளுக்கும் வாயை சண்டை முற்றி அவர் ஆதிராவை அடிக்க பாய, “மாமா இப்படி வாங்க” என்று அவரை தடுத்த சிவா “நீயாவது பொறுமையா இருக்கலாம்ல.?” என்று ஆதிராவை கடிந்தான்.

 

“என் அபி தான் வேணும் மாமா..” என்று சிவாவிடமும் ஆதிரா தேம்பிட, அவளை கூர்ந்து பார்த்தவன் “மாமா ரூபனும் நல்ல பையன் தான்.. அவனை வேணாம்னு சொல்ல எந்த காரணமும் இல்லை..” என்று அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினான் சிவாவும்.

 

“சிவா என்ன பேசற.? நம்ம பார்த்த ரஞ்சித்துக்கு என்ன குறை.? இவ் இஷ்டத்துக்கு காதலிக்கறேனு எவனையோ கை காட்டுவா நம்மளும் எதுவும் சொல்லாம சரினு தலையாடி கல்யாணம் பண்ணி வெச்சரணுமா.? புரியாம பேசாத.. நானே அவங்ககிட்ட பேசிக்கறேன்” என்று எகிறினார்.

 

தன்மையாக சிவாவோ “மாமா உங்க கோவம் புரியுது.. ரூபனும் நல்ல பையன் தான்.. விரும்பி தொலைஞ்சுட்டா.. கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வெச்சுட்டா எல்லாம் சரியாகிருமா.? அவ மனசொத்து வாழணும்னு உங்களுக்கு ஆசையில்லையா.?

 

இந்த விசயம் தெரிஞ்சதும் எனக்கும் கோவம் தான்.. இன்னும் அவ மேல கோவமா தான் இருக்கேன்.. ஆனா அந்த கோவத்துல அவ வாழ்க்கையை பத்தி யோசிக்காம விட்டா அவ மேல வெச்ச பாசத்துக்கே மதிப்பில்லாம போய்ரும்..

 

நிவே கிட்ட நான் பேசிக்கறேன் மாமா.. இப்பவே கல்யாணம் பண்ணி வெக்க வேணாம்.. நம்மளைய மீறி ஆதிராவும் எதுவும் பண்ண மாட்டா.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு மாமா..” என்றவனின் பார்வை ஆதிராவிடம் அழுத்தமாக பதிந்தது.

 

‘கண்டிப்பா எதுவும் பண்ண மாட்டேன் மாமா’ என்று அவளும் சிவாவிடம் விழிகளாலே உரைக்க, கோவத்தை மீறிய புன்னகை அவனிடம் உதயமானாலும் அதை அவளிடம் காட்டி கொள்ளாமல் “அவசரப்பட்டு அவ வாழ்க்கையை வீணாக்கிராதீங்க மாமா.. பொறுமையா யோசிச்சு முடிவு பண்ணுங்க” என்றான் அமைதியாக.

 

அப்போதும் “இல்ல சிவா எனக்கு மனசு ஒப்பல.. இவ இஷ்டத்துக்கு எல்லாம் சரினு சொல்ல முடியாது.. ரஞ்சித் வீட்டுல உன்னால் பேச முடிலனா விட்டுரு.. நானே பேசிக்கறேன்..

 

கண்டிப்பா அந்த பையனுக்கு என் பொண்ணை குடுக்க மாட்டேன்.. என்னைய தலைகுனிய வெக்கணும்னு நினைச்சு என் பொண்ணு மனசை கலைச்சு விட்டுருக்க அவன் வீட்டுக்கு என் பொண்ணும் போக கூடாது” என்றார் அதே வீம்புடன்.

 

இவரின் வீம்பான பேச்சில் ஆதிரா ஏதோ பேச வர, “திரா அமைதியா இரு” என்று அவளை அடக்கி “இந்த கல்யாணத்துக்கு ரஞ்சித்தும் சரினு சொல்ல மாட்டான் மாமா” என்று சிவாவும் “எனக்கு என் அபி தான் வேணும்..

இல்லனா செத்துருவேன்..” என்று ஆதிராவும் உரைத்திட, அவரின் பார்வை இருவரையும் தீப்பிழம்பாய் பொசுக்க தொடங்கியது.

அடங்காத ஆத்திரத்துடன் வார்த்தைகளையும் கடித்து துப்பினார்!

“அவன் தான் வேணும்னா போய் தொலை.. இல்லை பெத்தவன் வேணும்னா என் பேச்சை கேட்டு அமைதியா இரு.!! உன்னைய என்னமோ நினைச்சேன் சிவா.. நீயும் இந்த கழுதைக்கே சாதகமாவே பேசற.. என் பொணத்தை தாண்டி இவளை அவன்கூட போக சொல்லு..” என்று விட்டு சென்றார்.

 

“மாமா” என்று அழுகையை அடக்க கீழுதட்டை கடித்து ஆதிரா விசும்பிட, சிவாவோ யாருக்கு சாதகமாக பேசுவது என்று புரியாமல் தவித்து நின்றான்.!!

 

“நீ பண்றது உனக்கே நல்லா இருக்காடா.?” என்று சிவாவையே ஆதிராவின் அன்னையும் கடிந்து கொள்ள, ‘நீங்க பண்றதும் நல்லாவாமா இருக்கு.?’ என்று நினைத்தாள் துருவினியும்.

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்