
பூகம்பம் – 31
கோவிலுக்கு போய்ட்டு வர இவ்வளவு நேரமா.?” என்று வாசலிலே காய தொடங்கிய அன்னையை பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் காவ்யா நுழைந்திட, “நான் கத்தறது உன் காதுல விழுகல.?” என்று இதற்கும் அவளை பொரிந்தார்.
“ப்ச் அம்மா அதான் வந்துட்டேன்ல.?”
“இவ்வளவு நேரம் என்னடி பண்ணுன.?”
“கோவில்ல கூட்டம்.. போதுமா.?”
“பொய் சொன்னா வாய்லயே போடுவேன்.. உனக்கு பின்னாடி கோவிலுக்கு போன பக்கத்து வீட்டு பொண்ணு கூட உனக்கு முன்னாடி வீட்டுக்கே வந்துருச்சு.. உனக்கு மட்டும் கோவில் கூட்டமா இருந்துச்சா.?” என்றார் முறைப்புடன்.!
“அந்த பொண்ணு தனியா வந்துருக்கும்.. நான் தான் திரா, துரு கூட போனனே.? அவங்க வர வேணாமா.?” என்று எதிர்கேள்வியை கேட்க, “இப்ப எல்லாம் எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேச மட்டும் நீ நல்லாவே கத்துக்கிட்ட .. உன் அப்பா கிட்ட இத சொன்னா நீ கேட்கற கேள்விக்கு தான் பதில் சொல்றானு உனக்கு சப்போர்ட்டு வேற..” என்று அலுத்து கொண்டார்.
சிரிப்புடனே “அப்பா சரியா தானேமா சொல்லிருக்காரு.. நீ கேள்வி கேட்டு நான் பதில் சொல்லாம இருந்தா அதற்கும் ஒரு குத்தம் கண்டுபிடிச்சு திட்டற.. சரினு பதில் சொன்னா அதையும் கொலைக்குத்தங்கற அளவுக்கு பேசற.. உனக்கு என்ன தான்மா பிரச்சனை.?” என்று கேட்டாள்.
அவர் பேசும் முன்பே “இரு இரு.. முதல்ல நீ எங்க போய்ட்டு வந்த.? நான் வீட்டுல இல்லனா நீயும் தான் ஊரு சுத்த கிளம்பிற போல.?” என்று அவரின் பேச்சை திசை திருப்ப, அவளின் வாயிலே ரெண்டு போடு போட்டவர் “அசோக் வீட்டுக்கு தான்டி போய்ட்டு வந்தேன்..” என்று முறைத்தார்.
“அதுக்குனு இப்படியா அடிப்ப.?” என்று முகத்தை சுருக்கி “அங்க எனத்துக்கு போன.? மறுபடியும் ஏதாவது பிரச்சனையா.?” என்று எதுவும் தெரியாதவள் போல் வினவ, “அவன் பெரிய அக்காளுக்கு புத்தியே இல்லடி..” என்று நடந்ததை மீண்டும் ஒப்புவித்து “எனக்கு வந்த கோவத்துக்கு மகளை பேச விட்டு நீ அமைதியா இருக்கீயானு அவ அம்மாளை நாலு கேள்வி கேட்டுட்டு வந்துருக்கேன்” என்றார் மாறாத சினத்துடன்.!
“சரி சரி கோவப்படாதமா.. நம்ம என்ன பண்ண முடியும்.? எப்படியும் இந்த கல்யாணம் நடக்கும்னு தான் எனக்கு தோணுது..”
“நடந்தா எனக்கும் சந்தோசம்டி.. அந்த பையனை பார்க்கவே பாவமா இருக்கு.. இவங்க தொல்லையால தான் அவன் இங்கன வராம இருக்கான்.. வந்தாலும் நிம்மதியா விடறாங்களா.?”
“உனக்கு என்ன அவங்க மேல அம்புட்டு அக்கறை.?”
“நல்ல பாசமான பையன்டி அவன்.. சின்ன வயசுலயே குடும்ப பாரத்தை ஏத்துக்கிட்டு ஓடிட்டு இருக்கான்.. என்கிட்டயும் உன் அப்பாகிட்டயும் அவ்வளவு அன்பா பேசுவான்..”
“ஆஹான் அவனே உன் மருமகனா வந்தா நல்லா இருக்கும்ல.?” என்று வாய் தவறி காவ்யா கேட்டு விட, “எடு அந்த துடைப்பகட்டையை.. உன் மனசுல அப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா.? உன் அப்பா வரட்டும்டி.. உனக்கு இருக்கு..” என்று பட்டாசாக பொரிந்தார்.
அவரிடம் இருந்து தப்பிக்கவே “அய்யோ தெய்வமே.. அவனை மாதிரி ஒரு பையன் உனக்கு மருமகனா வந்தா நல்லா இருக்கும்னு தான் நான் சொன்னேன்.. நீயே ஏதாவது நினைச்சுக்காத” என்றவள் நகர்ந்தாள்.
‘ம்ம்க்க்க்கும் நல்ல பையனு சொல்றது.. அதே மருமகனா வந்தா என்னனு கேட்டா மட்டும் கசக்குது போல..’ என்று தாயை கருவி கொண்டே காஃபி போட பாலை அடுப்பில் வைத்தாள்.
“ஒரே புள்ளனு இவளுக்கு செல்லம் குடுத்து வளர்த்தி விட்ட இவ அப்பாவை முதல்ல சொல்லணும்.. முதல்ல அவரு வரட்டும்..” என்று மகளை மட்டுமின்றி கணவரையும் குற்றம் சாட்டி விடாமல் திட்டினார் அவர்.
அந்நேரம் காவ்யாவின் போன் சத்தத்தை எழுப்பி அவரின் ரத்த அழுத்தத்தை இன்னும் கூட்ட, “போன் அடிக்குது வந்து எடுத்து தொலை..” என்று மகளிடம் கத்த, “நீயே எடுத்து பேசுமா..” என்றாள் அவள்.
பின்பு என்ன நினைத்தாளோ மின்னல் வேகத்தில் ஓடி வந்து அவர் போனை எடுக்கும் முன்பே இவள் எடுத்திருக்க, அவர் கடுமையாக முறைப்பதையும் கண்டு கொள்ளாமல் மீண்டும் சமையலறைக்குள் புகுந்தாள்.
அழைத்தது ரூபன் தான்.. எடுத்ததும் “சொல்லுங்க அண்ணா” என்றிட, “கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா.?” என்று அவன் தயக்கத்துடன் கேட்க, “ஒன்னும் பிரச்சனை இல்லயே.?” என்று வினவினாள் பதட்டத்துடன்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லமா.. சும்மா தான் வர சொல்றேன்.. வேலை இருக்கா.?”
“இல்ல இல்ல அண்ணா.. கொஞ்சம் நேரத்துக்கு அப்பறம் வர்றேன்..”
“ம்ம்ம் சரிடா.. என்ன பண்ற.?”
“அம்மாகிட்ட திட்டு வாங்கி முடிச்சுட்டு காஃபி போட்டுட்டு இருக்கேன் அண்ணா.. நீங்களும் வாங்க..”
“ஆஹான் வர்றேன்டா.. அம்மா ரொம்ப திட்டிட்டாங்களா.?”
“ச்சே ச்சே இல்லண்ணா.. ஏன் லேட்டுனு கேட்டு எப்பவும் போல தான்.. சுமதி அண்ணி என்ன பண்றாங்க.?”
“இன்னும் படுத்த இடத்துல இருந்து நகரவே இல்லடா.. அவங்ககிட்ட பேச தான் உன்னைய வர சொன்னேன்..” என்று அவன் அழைத்ததற்கான காரணத்தையும் உரைத்திட, “வர்றேன் வர்றேன்.. அவன் என்ன பண்றான்.? அண்ணிகிட்ட பேசலயா.?” என்று தன்னவன் எங்குவென்றும் கேட்டாள்.
“வந்ததும் சமையற்கட்டுக்குள்ள போனான்.. அப்பறம் ரூமுக்குள்ள ஓடிட்டான்.. அவனை பார்க்கவும் பாவமா தான்மா இருக்கு.. அவன் அக்காவை பார்க்கவும் பாவமா இருக்கு..” என்று ரூபனும் வருந்திட, அன்னை வரும் அரவம் உணர்ந்து “நான் அங்க வர்றேன் அண்ணா.. அம்மா வர்றாங்க.. போனை வெக்கறேன்..” என்று அவனின் பதிலை எதிர்பாராமல் அணைத்து விட்டாள்.
இதற்கும் அவளின் அன்னை சந்தேகப்பட்டு அவளை வார்த்தையால் துவைத்து காயப்போட, அதை தூசு தட்டுவதை போல் தட்டி விட்டபடி காஃபியை உறிஞ்சி கொண்டிருந்தாள் அவர் பெற்ற மகள்.
அன்னையை சமாளித்து விட்டு தன் வருங்கால மாமியார் வீட்டிற்கு காவ்யா செல்ல, ஆண்கள் இருவரையும் காணவில்லை. சுமதி தான் முன்னால் படுத்திருத்தாள். “அண்ணி அண்ணி என்ன இப்படி படுத்திருக்கீங்க.? முதல்ல எந்திரிங்க” என்று அவளை எழுப்பி விட்டாள்.
இவளின் சத்தத்தில் ரூபனும் வந்து விட, “அத்தை எங்க.?” என்று அவள் கேட்டும் பதிலில்லை. “ப்ச் அண்ணி இப்ப என்ன நடந்துருச்சுனு இப்படி இருக்கீங்க.?” என்று அதட்டிட, இதில் அவளை வெற்று பார்வை பார்த்த சுமதியின் விழிகள் கண்ணீரை சொறிய தொடங்கி இருந்தது.
“அய்யோ இப்ப எனத்துக்கு அழுகணும்.? உங்க அக்கா வேணாம்னு சொன்னா அப்படியே விட்டுருவாங்களா என்ன.? உங்களுக்கு பிடிச்சுருந்தா கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும்.. நீங்க கவலைப்படாதீங்க..” என்றாள்.
அப்போதும் தெளியாமல் விரக்தியாக “என்னால அவனுக்கு தான் ரொம்ப கஷ்டம்.. என் கூட பிறந்ததை தவிர அவன் எந்த பாவமும் பண்ணிருக்க மாட்டான்..” என்றதும் விழிநீரை அடக்க முடியாமல் தேம்பினாள்.
காவ்யா கூறிய எந்த வார்த்தையும் அவளின் செவியை அடையவில்லை.. ரூபனும் “அய்யோ அக்கா அழாதீங்க.. உங்களுக்கு நானும் இருக்கேன்.. இதைய அசோக் பார்த்தா ரொம்ப வருத்தப்படுவான்..” என்றதை கேட்டும் அவள் அழுகை மட்டும் மட்டுப்படவில்லை.
“என்னால யாருக்கும் நிம்மதி இல்ல.. என்னைய பெத்த பாவத்துக்கு என் அம்மா அழுகறாங்க.. என் கூட பிறந்த பாவத்துக்கு என் தம்பி கஷ்டப்படறான்.. ஒரு நாள்.. ஒரு நாள் எல்லாம் சரியாகும்னு நம்பிக்கைல நடமாடிட்டு இருந்தேன்.. ஆனா இப்ப ஏன் இருக்கேனு தோணுது..
நல்லா தான் படிச்சேன்.. யாருக்கும் தொந்தரவு இல்லாம நான் பாட்டுக்கு இருந்தேன்.. ஒரு கட்டத்துல படிப்பும் ஏதோ ஒரு வகைல என்னைய கை விட்டுருச்சு.. அப்பவும் என்னால முடிஞ்ச அளவுக்கு படிச்சு முடிச்சேன்.. வேலையும் கிடைக்கல.. கிடைக்கற வேலைக்கு போனா அதுவும் நிலைக்கல.. வீட்டுலயும் பாரமாகிட்டேன்..
சரி கல்யாணமாகிருச்சுனா இவங்களுக்கு தொந்தரவு இருக்காதுனு நினைச்சா இதுவும் இழுத்துட்டே போகுது.. ஒரு நாள் விடாம கோவிலுக்கு போவேன்.. எல்லாம் சரியாகும் கடவுள் சரி பண்ணுவாருனு ரொம்ப நம்பிக்கைல இருப்பேன்.. கடைசில கடவுளும் என்னைய கண்டுக்கல.. வாழ்க்கையும் வெறுத்துருச்சு.. கிடைக்க வேண்டிய நேரத்துல கிடைக்காம போனா அப்பறம் கிடைச்சாலும் மனசு சந்தோசப்படாது..
நம்ம கஷ்டம் தீரணும்னு கடவுள் கிட்ட போனா அவரும் கஷ்டத்தை மட்டும் தான் இப்ப குடுக்கறாரு.. போதும் போதுங்கற அளவுக்கு அவரு எனக்கு அள்ளி குடுக்கல.. குடுக்க வேண்டியதையும் குடுக்காம இன்னும் தான் சோதிக்கறாரு..” என்று மனதில் இருந்ததை கொட்டி இன்னும் தேம்பினாள் சுமதி.
மனதில் வைத்திருந்தால் தான் பாரம் கூடும்.. அவர் பேசட்டும் என்று இருவரும் அமைதியாக இருந்திட, “அக்கா சோதனை மேல சோதனையை கடவுள் குடுத்தா கடைசில நீங்க எதிர்பார்க்காத சந்தோசத்தை குடுக்க போறாருனு அர்த்தம்..” என்றான் ரூபன்.
தமக்கை பேசியதை கேட்டிருந்த அசோக்கோ நிலைகுலைந்து அவர்களின் முன்பு வர, “எதுவும் குடுக்க வேணாம்.. நான் யாருக்கும் பாரமில்லாம இருந்தா போதும்..” என்று தம்பி வந்ததை உணராமல் கூறிட, “அக்கா” என்ற உடன் பிறந்தவனின் அழைப்பில் விலுக்கென்று நிமிர்ந்தவளின் கருமணிகள் உவர்நீரை உகுத்தது.
அவளின் கையை பிடித்து “நீ யாருக்கும் பாரமா இல்லக்கா.. நீயே ஏன் இப்படி நினைக்கற.? நான் உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன்.. உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சுருக்கா.?” என்று தமக்கையின் சம்மதத்தை கேட்டான்.
அவள் மௌனமாக இருக்க, “கேட்கறேனு தப்பா நினைக்காத.. மாப்பிள்ளைக்கு கால் ஊனமா இருக்கு.. பிற்காலத்துல வேற வழி இல்லாம தான் உன்னைய அவருக்கு கட்டி வெச்சுட்டோம்னு நீ நினைக்க கூடாதுக்கா..
உனக்கு பிடிக்கலனா தாராளமா சொல்லுங்க.. வேற பையன் பார்க்கலாம்.. வாழ போறது நீங்க தான்கா..உங்களுக்கு செய்ய எனக்கு எந்த கஷ்டமும் இல்லை.. உங்க சம்மதமில்லாம நான் எதுவும் செய்ய மாட்டேன்..
அம்மா சம்மதம் சொல்ல சொல்றாங்கனு எல்லாம் நினைக்காத.. அவங்ககிட்ட நான் பேசிக்கறேன்.. உனக்கு எல்லாமும் செய்ய போறது நான் தான்.. அவங்க இல்ல.. பயப்படாம சொல்லு..” என்று முடிவை அவளிடமே விட்டு விட்டான்.
‘ம்ம்க்க்க்கும் இதெல்லாம் வக்கணையா பேசு.. ஆனா என்னைய மட்டும் நாயை துரத்தற மாதிரி துரத்தியடி.. எனக்கு பிடிச்சுருக்குனு சொல்றேன்ல.? அதைய காதுல வாங்கறானா.?’ என்று நினைத்து தன்னவனை முறைத்தாள் காவ்யா.
அந்நேரம் அவனின் அன்னையு
ம் வந்து விட, அவரை பார்த்த சுமதி தலையை குனிந்திட, அவரும் மகளையே பார்த்து நின்றார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

