
அத்தியாயம் -29
சிந்தனையுடனே கோவிலை சுற்றிய தன்னவனை கவலை பொங்க பார்த்த காவ்யா “அசோக்” என்றழைத்து அவனின் நடையை நிறுத்த, “என்ன.?” என்று கேட்டான் எரிச்சல் மிக.!
“கொஞ்சம் சிரிச்சுட்டே கேட்கலாமே..”
“ப்ச் என்னனு சொல்லு.. இல்ல கிளம்பு.. எப்ப பார்த்தாலும் நொய்நொய்னு இருக்க.?”
“ஏன்டா இப்படி பேசற.?”
“தயவு செஞ்சு என்னைய கொஞ்ச நேரம் தனியா விடு காவ்யா.. ப்ளீஸ்” என்று கை கூப்பியவனை பார்க்கவே இவளுக்கு பாவமாக இருக்க, “வீட்டுல நடந்ததை நினைச்சு வருத்தப்படறீயா.?” என்று கேட்டாள்.
இவளுக்கு எப்படி தெரியும்.? என்ற ரீதியில் அவன் நிமிர, “எனக்கும் தெரியும் அசோக்.. பெரிய அக்கா அப்படி பேசறது தப்புதான்.. தங்கச்சியை வாழ்க்கை என்னாகும்னு கூட அவங்க யோசிக்கல.. அதுக்காக கல்யாணத்தை நிறுத்தவா முடியும்.?
உன் மனநிலை எனக்கும் புரியுது.. அவங்ககிட்ட பேசலாம்.. அப்பவும் புரிஞ்சுக்கலனா உன் அம்மா பேச்சை எல்லாம் காதுல வாங்காம அவங்க இஷ்டப்படி அப்படியே விட்டுரு.. அப்பதான் கொஞ்சம் பயம் வரும்..
அவங்க என்ன பண்ணுனாலும் மறுபடியும் மறுபடியும் அவங்கள பார்க்கற இளக்காரம் தான் இப்படி பண்ண வெக்குது.. நீ ஒரு தடவை கண்டுக்காம விட்டாலே போதும் அவங்க திருந்த வாய்ப்பு இருக்கு..” என்றாள்.
அவளை திகைப்புடன் பார்த்தான்.! என்ன இப்படி சொல்றானு பார்க்கறீயா.? எனக்கும் அவங்கள சின்ன வயசுல இருந்தே தெரியும்.. கூட பிறந்தவங்கள இருந்தாலும் விட்டு குடுக்கலாம் தப்பில்ல.. அதற்காக எப்பவும் விட்டு குடுத்துட்டே இருக்கணும்னு அவசியமில்லை..
அவங்களுக்கு மட்டுமில்ல உன் சின்ன அக்காக்கும் வாழ்க்கைனு ஒன்னு இருக்கு.. மகள்னு உன் அம்மா அமைதியா இருக்கலாம்.. நீங்க ஏன்டா இருக்கணும்.? என்னால எல்லாம் பொறுமையா போக முடியாது.. என் பொறுமை எல்லாம் ஓரளவுக்கு தான்..
நான் உன்னைய கல்யாணம் பண்ணிட்டு அவங்களுக்கு ஒரு டெமோ காட்டறேன் பாரு.. அப்பறம் அவங்க வாயை திறப்பாங்கனு நினைக்கற.?” என்று சீரியஸாக பேசியவளை புருவம் சுருங்க கண்டவன் ‘இது திருந்தாது’ என்று நினைத்து பதிலின்றி நடந்தான்.
‘டேய் டேய் நான் மூச்சை பிடிச்சு எவ்ளோ பேசிட்டு இருக்கேன்.. அதைய கொஞ்சமும் மதிக்காம போனா எனக்கு என்னடா மரியாதை.?’ என்று காவ்யாவால் கதற தான் முடிந்தது.
இருந்தும் ‘நீ போன்னு சொன்னா நான் போய்ரணுமா என்ன.?’ என்று அவனை முறைத்து அவனுடன் இணைந்து நடக்க, திரும்பி அவளை பார்த்தவன் எதுவும் கூறவில்லை.
இவள் பேசிய பிறகு ஆடவனின் மனதும் லேசாகி இருக்க, அதை அவளிடம் காட்டி கொள்ளாமல் நடந்தான். அவளை இவனுக்கும் மிகவும் பிடிக்கும்.. பிடிக்கவும் வைத்திருந்தாள் அவளின் பைத்தியக்கார பேச்சில்.!
அவளின் மேல் கொள்ளை காதலும் கொட்டி கிடக்கிறது. ஆனால் அதை அவளிடம் கூற அவன் விரும்பவும் இல்லை. இது அவளின் வீட்டிற்கு தெரிந்தால் பெரிய பூகம்பமே ஏற்படும். அவளை பெற்றவர்களை கலங்க வைத்து விட்டு தான் இவளை கரம் பிடிக்க வேண்டுமோ.? என்று நினைத்து ‘அப்படி ஒரு காதலும் தேவையில்லை’ என்ற முடிவிற்கே வந்திருந்தான்.
இவனுக்கென்று கடமைகள் பல இருக்கிறதே.! சின்ன அக்காவிற்கு திருமணம் செய்ய வேண்டும்.. தாய்மாமனாக இரு தமக்கைகளின் குழந்தைகளுக்கும் அனைத்தும் செய்ய வேண்டும். அன்னையையும் பார்த்து கொள்ள வேண்டும்.
குடும்ப சூழ்நிலையும் சரியில்லாமல் இருக்க, அத்தனையும் அறிந்த காவ்யாவின் பெற்றோர்கள் காதலுக்கு சம்மதித்து விடுவார்களா.? அப்படி சம்மதித்தாலும் அவளும் இங்கு வந்து கஷ்டப்பட தான் வேண்டுமே.? இவன் எதிர்காலத்தை நினைத்து மறுக்க, அவளுக்கோ அவனை விட்டு விடும் எண்ணமும் சிறிதும் இல்லை.
ஆடவனின் கையை இவள் பிடிக்க, அவனோ அவளை முறைத்து தட்டி விட, விடாமல் அவனின் விரல்களுடன் தன் விரலை கோர்த்தவள் “எப்பவும் விட மாட்டேன் சிடுமூஞ்சி” என்றாள் கண்கள் சுருங்க.!!
உன்னை விட்டு விடும்
எண்ணமும் எனக்கும்
இல்லையடி.!
ஆனால் காலமும்
சூழலும் உன்னை
என்னிடம் இருந்து
பிரித்து என்னை
தனிமையில்
தவிக்க விட்டு
விட்டால்..?
இதற்கு
இப்போதே
என்னை விட்டு
பிரிந்து சென்று
விடேன்டி என்
கண்மணியே.!!
பெற்ற பிள்ளைகளின் செயலில் துவண்டு போய் அசோக்கின் அன்னை ஒருபுறம் சுருண்டிருக்க, மற்ற நேரம் என்றால் ‘அம்மா என்னமா ஆச்சு.?’ என்று பதறி அவரிடம் ஓடி வந்திருப்பாள் அவர் பெற்ற இரண்டாவது மகள்.
இப்போதும் அவளும் வாழவே விருப்பமில்லாமல் மற்றொரு பக்கம் அனைத்தையும் வெறுத்து போய் இருக்கிறாள்.
இவர்களிடம் வந்த காவ்யாவின் அன்னை நேரடியாகவே “வடிவு நீ பண்றது உனக்கே நல்லா இருக்கா.?” என்று கேட்க, மிரண்டு எழுந்த அவரோ மிரட்சியில் விழிகளை விரித்தார்.!!!
ஒன்றும் புரியாமல் எழுந்தவர் “என்ன ஆச்சு.?” என்று கேட்டாலும் மறுபடியும் ஒரு பிரச்சனையோ.? என்று உள்ளுக்குள் பயந்தும் போனார்.
“உன் பெரிய பொண்ணு கத்துன கத்து தெரு வரைக்கும் கேட்டுச்சு.. இப்படி பேசுன அவளை நீ நாலு அப்பு அப்பிருக்க வேணாமா.? என்னமோ கெஞ்சிட்டு நிற்கற.? தெருவுல இருக்கறவங்க எல்லாம் ஒரு மாதிரி பேசறாங்க.. அவ மட்டும் வாழ்ந்தா போதுமா.?
சின்னவளுக்கு கல்யாணத்தை பண்ணி வெச்சா தானே காலங்காலத்துல பையனுக்கும் ஒரு கல்யாணத்தை பண்ண முடியும்.. பொண்ணை வீட்டுல வெச்சிட்டே பையனுக்கு தான் கல்யாணத்தை பண்ண முடியுமா.? பெத்தவ, கூட பிறந்தவனு அவன் இன்னும் எத்தனை காலத்துக்கு தான் உங்களுக்காகவே அவன் ஓடிட்டு இருக்க முடியும்.?
அவன் மனநிலை என்னனு நீயாவது யோசிச்சுருக்கீயா.? அப்படி யோசிச்சு பார்த்துருந்தா பெரிய மவ பேசறப்பவே ஒரு அறை விட்டு அடக்கி வெச்சுருப்பீயே.. இப்படி பேச விட்டுருப்பீயா.?” என்று தன் மனக்குமறலை கோவமாக கொட்டினார்.
ஒட்டி உறவாடவில்லை என்றாலும் இவர்களுக்காக விடாமல் ஓடி கொண்டிருக்கும் அசோக்கை நினைத்து இவர் பரிதவிப்பது உண்மையே. அவனின் பெரிய அக்காள் நாட்டாமை செய்யும் நேரத்தில் சப்பென்று நாலு அறை விட்டு விடலாமா.? என்று கூட யோசித்திருக்கிறார்.
இங்கு இருக்கும் வரை அமைதியாக பேசியவள் திருமணம் முடிந்ததில் இருந்து மெதுமெதுவாக குரலுயர்த்தி பேசிட, இப்போது அவளின் சட்டம் தான் அவர்களின் வீட்டில்.!! மகளென்று பெற்றவர் அமைதியாக அதட்டினாலும் அவள் தான் இந்நாள் வரை அதை பெரியதாக எடுத்து கொள்ளவுமில்லை. அசோக்கும் அவளை கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு தான் இது.
காவ்யாவின் அன்னையும் அடுத்தவர் வீட்டு பிரச்சனை நமக்கெதற்கு.? என்று பொறுத்து பொறுத்து போய்ருக்க, இப்போது தங்கையின் வாழ்வை விட இரண்டு பவன் தான் முக்கியம் என்று சொல்லாமல் சொல்லி சென்றதை கேட்டு பொங்கி விட்டார் அவளை பெற்றவளிடம்.!!
“நானும் என்னதான் பண்றது.? மூனு புள்ளகளும் ஆளுக்கொரு பக்கம் சண்டை போட்டுட்டு நின்னா நல்லாவா இருக்கும்.?”
“உன் பயம் புரியுது.. அதற்காக இன்னும் எத்தனை நாளைக்கு தான் பெரியவகிட்ட நீங்க அடங்கி போவீங்க.? உன் பையனுக்கு என்னத்த சேர்த்து வெச்சுருக்க.? இவனுக்குனு இருக்கறது இந்த வீடு மட்டும் தான்.. உன் பெரிய மவ இதையும் கேட்க மாட்டானு என்ன உத்ரவாதம்.?”
அவரின் கேள்வி இவரை தாக்கினாலும் மகளை விட்டு குடுக்காமல் “அவ அப்படி எல்லாம் கேட்க மாட்டா..” என்றிட, “கேட்காம இருந்தா சந்தோசம் தான்.. அதற்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்தி குடுத்தராத.. அவளுக்கு கல்யாணமாகிருச்சுனு ஞாபகம் இருக்கா.? இல்லயா.?
இன்னும் பிறந்த வீட்டுல சட்டம் பேசிட்டு இருக்கறது நல்லவா இருக்கு.? நல்லதுக்கு பேசுனா சரினு விடலாம்.. எந்நேரமும் அதைய செய்யல.. இதைய செய்யலனு கத்தறது உனக்கே தப்பா தெரில..” என்றார்.
பின்பு “வீட்டுக்கு மூத்த பொண்ணா கூட பிறந்தவங்களுக்கு இவ ஏதாவது விட்டு குடுத்துருக்காளா.? அதுவும் இல்லயே.. மத்த ரெண்டு பேரும் தான் இவளுக்காக விட்டு குடுத்து எப்பவும் விலகி நிற்கறாங்க..
தம்பி தங்கச்சிக்கு நல்லது செய்யலனாலும் பரவால்ல அமைதியா இருந்தா போதுமே.. எந்த பிரச்சனையும் பண்ணாம முதல்ல
கூடபிறந்தவ கல்யாணத்தை நடத்த விட சொல்லு..” என்று பொங்கினார்.
மகளின் மேல் தவறிருக்கும் போது எங்ஙனம் இவரால் பதில் மொழி பேச முடியும்.? அமைதியாக கேட்டு கொண்டார். தன் ஆதங்கத்தை கொட்டிய காவ்யாவின் அன்னையும் கிளம்பி இருக்க, மெதுவாக இளைய மகளை எட்டி பார்த்தார்..
வெறும் தரையில் ஒருக்களித்து படுத்திருந்தவளின் விழிகள் இரண்டும் கோவைப்பழமென சிவந்திருக்க, கருமணிகளோ ஓரிடத்திலே நிலைக்குத்தி நின்றிருந்தது. அவளும் எத்தனை பேரின் முன்பு தான் அலங்கரித்து கொண்டு நிற்பது.
ஒன்று மாப்பிள்ளை வீட்டார் ஏதாவது காரணம் கூறி நிராகரிக்கின்றனர்.. இல்லையென்றால் கூட பிறந்தவளின் சண்டையால் அதோடு அப்பேச்சும் நின்று விடுகிறது. அதன்பின்பு பக்கத்து வீட்டாரின் பேச்சிற்கு இவள் அவலாகி விடுகிறாள்.
ஆறு மாசம்.. ஏழு மாசம் என்றால் கூட பரவாயில்லயே.. இதே கதை பத்து வருடங்களுக்கு மேல் தொடர்கிறது. இவளும் அழுது.. துடித்து.. பின்பு வெறுத்து போய் விடுகிறாள். இச்சமயம் எல்லாம் கை கூடி வந்து விடுமென மலைபோல் நம்பி இருந்தவளின் மனதை சுக்குநூறாக உடைத்து விட்டு சென்றிருந்தாளே உடன்பிறந்தவள்.
அழுதழுது விழிகள் சிவந்து பின்பு கண்ணீரும் வற்றி போயிருந்தது. இளைய மகளை கண்டு இவரின் மனது பிசைந்திட, மகன் வந்ததும் பேசி தீர்க்க வேண்டும் என்ற முடிவுடன் மகனுக்காக காத்திருக்க தொடங்கினார்.
கோவிலில் அனைவரும் அமர்ந்திருக்க, ரஞ்சித்தின் பார்வை தங்கையிடம் செல்வதை கண்ட ஆதிராவோ புருவம் சுருக்கினாள். துருவினியையும் அவள் பார்த்திட, சாதாரணமாக தான் அசோக் கேட்ட கேள்விக்கு பதிலளித்து கொண்டிருந்தாள்.
மெதுவாக தன்னவனை ஆதிரா சுரண்டிட, என்ன.? என்பதை போல் பாவனைகளை வெளியிட்டவனிடம் “எந்த நேரத்துல அந்த பைத்தியம் வேற பொண்ணை பார்க்க ஆரம்பிச்சுருக்கும்னு சொன்னேனு தெரில.. அது இப்ப என் கண்ணு முன்னாடியே நடந்துட்டு இருக்கு அபி” என்று புலம்பினாள்.
ரூபன் ஒன்றும் புரியாமல் அமைதியாகி விட்டான். அந்நேரம் காவ்யா ஏதோ இவளிடம் கேட்க, ‘ஹான்’ என்று விழித்தவளை பார்த்து அவள் கை கொட்டி சிரித்திட, “அய்யோ அய்யோ” என்ற துருவினியும் அவளுடன் இணைந்து கொண்டாள்.
“எதுக்கு சிரிக்கறீங்க.? சொல்லிட்டு சிரிங்க” என்று கடுப்புடன் கூற, ரூபனும் லேசாக இதழ் வளைத்து சிரிப்பை அடக்குவதை ஆதிராவும் பார்த்திட, ‘அப்படி நான் என்ன பண்ணிட்டேன்.?’ என்று புரியாமல் பேந்தபேந்தவென அவர்களை பார்த்திருந்தாள்.
“ஹே துரு என்னனு சொல்லிட்டு சிரி..” – ஆதிரா
“சொல்லாத துரு..” – காவ்யா
“உன்கிட்ட கேட்கல..” – ஆதிரா
சிரித்தபடி “ரூபன் அண்ணா அப்ப இவளோட ரியாக்ஷன் எப்படி இருந்துச்சு.?” என்று காவ்யா வினவ, ரூபனும் “அதைய என் காலத்துக்கும் மறக்க முடியாதுமா..” என்றான் சின்ன சிரிப்புடன்.
‘அய்யோ இதுக என்னத்த பேசறாங்கனு தெரிலயே.!’ என்று புலம்பி “என்னனு சொல்லுங்க தெய்வமே..” என்று இறுதியில் கெஞ்சலுடன் அவர்களிடம் கேட்டாள்.
“ரூபன் மாமா நான் சொல்லட்டுமா.?” – துருவினி
“ஏன் அவன் சரினு சொன்னா தான் சொல்லுவீயா.?” – ஆதிரா
“அப்கோர்ஸ்” – துருவினி
“என்னனு சொல்ல சொல்லு அபி..” என்று இவள் கடுகடுத்து அவர்களின் சிரிப்பிற்கான காரணத்தை அறியாமல் விழித்திட, ஆதிராவுடன் சேர்ந்து இன்னொரு ஜீவனும் முழித்திருந்தது.
அட நீங்க நினைக்கறது சரிதான்பா.. அது நம்ம ரஞ்சித் பையன் தான்.. அவன் தான் த்ரிஷா இல்லனா நயன்தாரா போல ரெண்டும் இல்லனா ஒரு சமந்தானு நம்ம துருவினியை சைட்டடிச்சு இருந்தானே..
இவங்க திடீர்னு கெக்கபெக்கனு சிரிக்கறது பார்த்து திருவிழால காணாம போன குழந்தையை மாதிரி முழிச்சுட்டு இருக்கான்.. நல்லவேளை எல்லாரும் ஆதிராவை தான் கிண்டல் பண்ணிட்டு இருந்ததுல இவனோட ரியாக்ஷனை கவனிக்காம விட்டுட்டாங்க.. அதுவும் இவனுக்கு நல்லதா தான் போய்ருச்சுல.?
இல்லனா இவனே இச்சம்பவத்தை மறந்தாலும் அந்த ரெண்டு ஓட்ட வாய்களும் விடாம சொல்லி சொல்லி கிண்டல் பண்ணுவாங்களே..
ஆதிராவின் முறைப்பில் காவ்யாவே “வீரத்தமிழச்சி வாழ்க! வாழ்க!” என்று சிரிப்பை அடக்கி கொண்டு உரைத்ததில் ‘மானமே போச்சு!’ என்று தலையை குனிந்து கொண்டவளுக்கு அச்சம்பவம் மீண்டும் நினைவெழுந்தது.
லேசாக தலையை திருப்பி ரூபனை பார்க்க, அவனோ கள்ளச்சிரிப்புடன் அவளை பார்த்ததில் “அய்யோ” என்று வெக்கத்தில் விழிகளை திருப்பி கொண்டு “உன்கிட்ட சொன்னது தப்பா போய்ருச்சு..” என்று காவ்யாவை முறைத்தாள் ஏகத்துக்கும்.!
“என்னது.? யாரு வீரத்தமிழச்சி.?” என்று வாய்விட்டு ரஞ்சித் கேட்டு விட, அவனை விசித்திரமாக துருவினி பார்த்தாலும் நடந்ததை அப்படியே ஒப்புவித்தும் விட, “கம்முனு இருடி” என்ற ஆதிராவின் வார்த்தை காற்றில் தான் கரைந்தது.
“மாமா எங்க அக்காக்கு வாய் தான் அதிகம்.. ஒரு நாய்க்குட்டியை பார்த்தா கூட பயந்துட்டு கூட வர்றவங்க பின்னாடி ஒளிஞ்சுக்குவா.. ஏன்னா அவ டிசைன்..” என்று அக்காளை கேலி செய்ய, ‘வீட்டுக்கு வாடி’ என்று தங்கையை கருவினாள் மனுதினுள்.
“எனக்கு நாய்னா மட்டும் பயம்..” என்று கெத்தை விட்டு குடுக்காமல் ஆதிரா கூற, “அப்ப பேயை கண்டு பயமில்லயா.?” என்று கிண்டலுடன் கேட்டாள் துருவினி.
அவளை முறைத்து “அது கூட எல்லாம் நான் ப்ரெண்டு ஆகிட்டேன்..” என்ற ஆதிராவிடம் “தங்கச்சி சொல்லவே இல்ல..” என்று அசோக்கும் “ஓஓஓஓஓ நீ அந்த சம்பவத்தை சொல்றீயா.?” என்று காவ்யாவும் ஒருசேர கேட்டனர்.
“என்னது.?” என்றதும் “அதெல்லாம் இவளோட வரலாறுல பொறிக்க வேண்டிய பெரிய சம்பவம்.. அப்பதான் இவளோட தைரியம் எவ்வளவுனு என் கண்ணால நான் பார்த்தேன்..” என்று நகைத்திட, “வாயை மூடுடி..” என்று அவளை அடக்க பார்த்தாள் ஆதிரா.
“அப்படி என்ன நடந்துச்சு.?” – துருவினி
“உன்கிட்ட சொல்லலயா.?” – காவ்யா
“இல்லயே..” – துருவினி
“ரூபன் அண்ணா உங்ககிட்ட.?” – காவ்யா
“ஹூம் இல்லயேமா..” – ரூபன்
“உன்கிட்ட.?” என்று அசோக்கிடம் கேட்டு அவன் முறைத்த முறைப்பில் “உன்கிட்ட இல்ல.. ரஞ்சித் கிட்ட கேட்டான்.. உன்கிட்ட ஏதாவது சொன்னாளா.?” என்று அப்படியே திருப்பி போட, திருதிருவென விழித்தான் ரஞ்சித்.
அவன் முழித்த முழிப்பில் “ஓஓஓஓ சொல்லலயா.?” என்று அவளே பதிலும் கூறி கொண்டு “அதாவது ஒருநாள்…” என்று ஆரம்பித்தவளின் வாயை மூடி இருந்த ஆதிராவோ “இன்னைக்கு நான்தான் கிடைச்சனா.?” என்று பாவமாக கேட்டாள்.
“நீ கம்முனு இரு.. அப்படி என்ன நடந்துச்சு.? நீங்க சொல்லுங்க” என்று அதுதான் முக்கியம் என்பதை போல் மீண்டும் துருவினி கேட்க, “ஏய் துரு கம்முனு இரேன்டி” என்று ரூபனை பார்க்க முடியாமல் கெஞ்சினாள்.
“நீ சொல்லுமா” என்று ரூபனும் கூற, அவனை விழி விரித்து பார்த்த ஆதிரா “அபி நீயும் அவங்க கூட சேர்ந்துட்டு கிண்டல் பண்றீயா.?” என்று கேட்டு உதட்டை குவிக்க, கண்சிமிட்டினான் அவன்.!
“ஒருநாள் நைட்டு பேய் படம் பார்த்தே ஆகணும்னு இவதான் அடம் பிடிச்சா.. இவளோட தைரியம் என்னனு தான் எனக்கு தெரியுமே.. நான் வேணாம்னு தான் சொன்னேன் இவ கேட்காம படத்தை பார்த்துட்டு கம்முனு படுத்துட்டா..
நான் கூட தைரியமாகிட்டாளோனு நினைச்சுட்டேன்.. அது தப்புனு அப்பவே எனக்கு புரிய வெச்சுட்டா.. பாத்ரூம் போறேனு தனியா போனவ பேய் பேய்னு ஸ்பீக்கரை முழுங்குனவ மாதிரி கத்துன கத்துல மொத்த ஹாஸ்டலும் எழுந்து அங்க ஓடி வந்துருச்சு..
கடைசில அங்க ஹாஸ்டல் வார்டன் தான் நின்னு இவளை பேயை விட மோசமா முறைச்சுட்டு இருந்தாங்க.. விட்டா அப்பவே கடிச்சு குதறிருப்பாங்க.. எப்படியோ போய் தொலைனு விட்டுட்டாங்க..” என்றதும் அனைவரும் சிரிக்க, ஆதிரா மட்டும் முறைப்புடனே இருந்தாள்.
“ஹலோ நான் ஒன்னும் வேணும்னே பயந்து போகல.. என் கிரகம் அந்த நேரத்துல அந்தம்மாவும் லைட்டை கூட போடாம வொய்ட் கலர் நைட்டில நின்னுருந்ததை சட்டுனு பார்த்ததுல பேய் மாதிரி இருந்தாங்க.. அதான் பயந்து கத்திட்டேன்..” என்றவளை “இல்லனா மட்டும் ரொம்ப தைரியமா இருந்துருப்ப பாரு..” என்று சிரித்தாள் காவ்யா.
“அப்படி பார்த்தா யாரா இருந்தாலும் பயந்துருப்ப தான்” என்று அசோக் ஆதிராவிற்கு சப்போர்ட்டு செய்ய, “அப்படி சொல்லுங்க அண்ணா..” என்ற ஆதிரா காவ்யாவிற்கு பலிப்பு காட்டினாள்.
ஒன்றாக சேர்ந்து பேசி குதூகலித்ததில் அசோக்கின் மனமும் லேசாகி இருக்க, நேரமாகியதில் அனைவரும் கிளம்பினர். சின்ன தலையசைப்புடன் ரஞ்சித்திடம் விடைப்பெற்ற ஆண்கள் இருவரும் கிளம்பியும் விட்டனர்.
“நானும் கிளம்பறேன்” என்று ரஞ்சித்
கிளம்ப எத்தனிக்க, “டேய்” என்றழைத்ததில் பட்டென்று திரும்பிய ரஞ்சித் பேய் முழி முழித்தான் பெண்கள் இருவரும் சண்டைக்கு தயாராக நிற்பதை பார்த்து.!!!
ஹஹஹஹ உன் நிலைமை மோசம் தான்டா..!!!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1
