அழகிய பூகம்பமே காதலடி(டா) – 27

Loading

அத்தியாயம் _ 27

மூன்றும் இவர் பெற்ற பிள்ளைகளாயிற்றே.!! எதிரும் புதிருமாக இருந்தால் அந்த தாயின் நிலை என்னவென்று கூறிட.!! மூத்த மகள் ஒரு புறம்.. திருமணமாகாமல் இரண்டாவது மகள் இன்னொருபுறம்.. இதற்கிடையில் தமக்கைகளை கரையேற்ற வாழ்வில் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காத இளைய மகனின் வாழ்வும் நடுவில்.!!

மூன்று பிள்ளைகளின் வாழ்வை நினைத்தே அவர் கலங்கிட, மூத்த மகளின் பேச்சு அவருக்கே ஒரு மாதிரியாக இருந்தது. இப்போது மகனின் வார்த்தையில் இருவருக்கும் மனஸ்தாபம் வந்து விடுமோ.? என்று பயந்து “அவதான் புரியாம பேசறானா நீயும் ஏன்டா அப்படி பேசற.?” என்று திக்கி திணறினார்.

மகனின் பார்வையில் அவருக்கு அடுத்த பேச்சு வர மறுக்க, “உனக்கு உன் மூத்த பொண்ணு தான் உசத்தி.. நானும் சின்ன அக்காவும் எக்கேடோ கெட்டாலும் பரவால்ல.. நீ குடுக்கற இடத்துல தான் அவ இப்படி பேசறா.. உன் மூத்த பொண்ணுக்கு உழைச்சு கொட்டியே என் வாழ்க்கை போகணும்.. அது தான உங்க ஆசை..

எனக்குனு எந்த ஆசையும் இருக்க கூடாது.. ஒரு கனவும் இருக்க கூடாது.. இவங்க கூட பிறந்து நான் என்ன சுகத்தை கண்டேன்.? இவங்களுக்காக இப்ப வரைக்கும் ஓடிட்டே இருக்கேன் இனியும் ஓடணுமா.?

உன் மூத்த பொண்ணுக்கு மட்டும் தான் பிறந்ததுல இருந்து அத்தனையும் கிடைச்சிருக்கு.. நானும் சின்ன அக்காவும் எத்தனை விட்டு குடுத்துருப்போம்.. அதைய கொஞ்சமும் யோசிக்காம தங்கச்சி வாழ்க்கை எப்படியோ போனாலும் பரவால்ல நகை தான் முக்கியம்னு அந்த பேச்சு பேசறா.. நீயும் வாயை மூட்டிட்டு நிற்கற.?

இப்ப நான் என்ன பண்ணனும்.? சொல்லுமா.. இந்த கல்யாணமும் நடக்க வேணாம்.. சின்ன அக்காவும் இப்படி மூலைல உட்காந்து அழுதுட்டு இருக்கட்டும்.. நானும் உன் மூத்த பொண்ணு குடும்பத்துக்காக ஓடறேன்.. அவ சொகுசா வாழ்ந்தா உனக்கு போதும்ல.?” என்று பொரிந்து தள்ளினான்.

பின்பு “நீயும் நானும் கடைசி வரைக்கும் இப்படி தான் இருக்க போறோம்.. நமக்குனு ஒரு வாழ்க்கை இல்லை.. விட்டு குடுக்கறது நமக்கு என்ன புதுசா.? இப்பவும் ஒண்ணுமே நடக்கலனு நினைச்சிட்டு நம்ம வலியை நமக்குள்ள புதைச்சுட்டு எப்பவும் போல நடைபிணமா நடமாடுவோம்.. அழுதாலும் ஒண்ணும் நடக்க போறது இல்ல எந்திரிச்சு உள்ள போ..” என்று சின்ன அக்காளையும் விரட்டியவன் உச்சக்கட்ட விரக்தியில் அகன்றான்.

நண்பனை பார்க்கவே பாவமாக இருந்தது ரூபனுக்கு.!! அவனின் பின்னே இவனும் சென்றான். மகனின் வார்ததையில் மொத்தமாக நொறுங்கி போன அவன் அன்னை அப்படியே மடிந்தமர்ந்து அழுதார்.

மகனின் விரக்தி பேச்சில் தாயுள்ளமும் உடைந்து போனது. மகனின் வாழ்வு தழைக்க வேண்டும் என்று இப்போது வரை அவர் வேண்டாத கடவுள் இல்லயே.. இவரை போய்..? இதில் யாரை குற்றம் சொல்வது.??

“அசோக்” என்று ரூபன் அழைக்க, நிமிர்ந்தவன் “நானும் எத்தனை தான்டா சமாளிக்கறது.? நம்ம அக்காவை நம்ம தான் பார்த்துக்கணும்னு என் சின்ன சின்ன ஆசையை கூட விட்டு குடுத்துருக்கேன்.. ஒரு நாள் ஒரு நாளாச்சு எந்த கவலையும் இல்லாம தூங்கணும்னு ஏங்கறேன்டா..

ஒருபக்கம் கல்யாணமாகாத அக்காவை பாக்கணும்.. இன்னொரு பக்கம் கல்யாணமான அக்கா குடும்பத்தையும் பாக்கணும்.. ஆனா என் வாழ்க்கையை மட்டும் நான் பார்க்க கூடாது..

ஒவ்வொரு தடவையும் சின்ன அக்கா அழுகறப்ப அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி தர முடிலனு ஏங்கிருக்கேன்.. இப்ப அந்த வாய்ப்பு கிடைச்சும் கேவலம் ரெண்டு பவுன் நகைக்காக வேணாம்னு சொல்ல சொன்னா எப்படிடா.?

நாளாக நாளாக எதுக்கு இருக்கோம்னு கூட தோண ஆரம்பிக்குது.. ச்சை என்ன வாழ்க்கைடா இது..” என்று ரூபனிடமும் புலம்பினான் அசோக்.

ஆறுதலாக ரூபனும் “இப்பவும் சொல்றேன் இதுவும் கடந்து போகும்.. உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி நீ வாழ்வடா..” என்று நம்பிக்கையளிக்க, அவனின் விரக்தி சிரிப்பில் இது நடக்க வாய்ப்பில்லை என்று அவன் மறுமொழி உரைப்பதும் தெளிவாக புரிந்தது.

இதற்கு மேல் என்ன பேசிட.? “சரி வா கொஞ்சம் தூரம் நடந்துட்டு வரலாம்.. மனசு ரிலாக்ஸ் ஆகும்..” என்று வலுக்கட்டாயமாக அசோக்கை அழைத்து கொண்டு சென்றான்.

நண்பர்கள் இருவரும் எதுவும் பேசாமல் வீதியில் நடந்திட, அவர்களை உரசி கொண்டு வந்து நின்றது இருசக்கர வாகனம் ஒன்று.!! அதில் இருந்தது பெண்கள் மூவரும் தான்.

“அறிவில்ல இப்படி தான் கொண்டு வந்து நிறுத்துவீயா.?” என்று அசோக் எகிறினான் யாரென்று பார்த்து விட்டும். ஏனெனில் வண்டியை ஓட்டியது காவ்யாவே.. இதுவே ஆதிராவோ துருவினியோ இருந்திருந்தால் அமைதியாக நின்றிருப்பான்.

“உங்ககிட்ட இருந்தா கொஞ்சம் எனக்கும் குடேன்..” என்று காவ்யாவும் சரிசமமாக பேசிட, அவன் இருந்த எரிச்சலில் எதிர்வாதம் செய்யாமல் ச்சை என்றதோடு முகத்தை திருப்பி கொண்டான்.

ரூபனை கண்டதும் “ஹாய் மாமா” என்று துள்ளலுடன் துருவினி இறங்க, “ஹே எருமை மெதுவா பேசி தொலை..” என்று தங்கையை அதட்டினாள் ஆதிரா.

“என்னமா மூனு பேரும் ஒரே ஸ்கூட்டில வந்துருக்கீங்க.? போலீஸ் பார்த்தா அவ்ளோதான்..” – ரூபன்

“ஹஹஹ இந்த பக்கம் எல்லாம் வர மாட்டாங்க மாமா.. எப்பவும் நாங்க வர்றது தான்..” – துருவினி

“பாருடா பெரிய பெரிய திறமைகளை எல்லாம் ஒளிச்சு வெச்சிருக்கீங்க போல..” – ரூபன்

“இந்த கிண்டல் வேணாமே மாமா..” – துருவினி

“சரிடா.. ரொம்ப பிஸியா இருக்கீங்க போல.. நான் வந்ததுல இருந்து உங்களைய பார்க்கவே இல்ல..” – ரூபன்

“யாரு இவளா.? அட ஏன் அண்ணே நீங்க வேற..” என்று காவ்யா அலுத்து கொள்ள, அவளை முறைத்த துருவினி “காலேஜ் இருந்துச்சு மாமா அதான் வர முடில..” என்றாள் அமைதியாக.

அசோக்கின் முகம் தெளிவில்லாமல் இருப்பதை கண்ட ஆதிரா “அண்ணா என்ன ஆச்சு.?” என்று வினவ, “ஒண்ணும் இல்லடா.. எப்பவும் போல தான் பிரச்சனை..” என்றிட, “எல்லாம் சரியாகும் அண்ணா.. நாங்க கோவிலுக்கு தான் போறோம்.. நீங்களும் அப்படியே நடந்து வாங்க.. முருகரை பார்த்துட்டு வந்தரலாம்” என்று அழைத்தாள்.

மறுக்க தோன்றாமல் “சரிடா நீங்க போங்க.. நாங்க அப்படியே நடந்து வர்றோம்..” என்று அவர்களை அனுப்பி விட்டவன் ரூபனுடன் நடந்தான்.

கோவிலின் வாசலில் இவர்களுக்காக பெண்கள் காத்திருக்க, ஆடவர்கள் இருவரும் வந்ததும் உள்ளே நுழைந்தனர்.. எதிர் திசையில் வந்த ரஞ்சித்தை கண்டு விட்ட ஆதிரா ‘அய்யோ இங்கயும் வந்துட்டானே.?’ என்று புலம்பினாள் உள்ளுக்குள்.!!

அவன் பார்க்கும் முன்பே வேறுபுறம் சென்று விடலாம் என்று ஆதிரா நகர்ந்திட, சரியாக இவர்களை கண்டு விட்ட ரஞ்சித் “ஹாய் ஆதிரா” என்று குரல் குடுத்து கையசைத்தவாறு அவர்களிடம் வர, வலுக்கட்டாயமாக சிரித்த ஆதிராவை பார்த்து நகைத்தாள் காவ்யா.

தங்களை நோக்கி வந்த ரஞ்சித்தை யாரென்று தெரியாமல் ஆண்கள் குழம்பிட, துருவினியோ ‘அய்யோ இவங்க தானே அன்னைக்கு பொண்ணு கேட்டு வந்தாங்க.. அப்ப நிவே அக்கா கிட்ட சொல்லிருவாங்களே’ என்று உள்ளுக்குள் பதறினாள்.

ஆனால் ஆதிராவுக்கு அந்த கவலை எதுவுமில்லை என்பது அவளின் முகப்பாவனைகளை வைத்தே கண்டு கொண்டாள் உடன் பிறந்தவள். ‘இவ என்ன சாதாரணமா இருக்கா.?’ என்று குழப்பமும் மேலோங்கியது.

“ஹாய் ஆதிரா.. இங்க என்ன பண்றீங்க.?” என்று அவன் சாதாரணமாக கேட்க, காவ்யாவோ “இங்க ட்ரெஸுக்கு ஆஃபர் போட்டுருக்காங்கனு சொன்னாங்க அதான் பார்க்க வந்தோம்..” என்றாள் கடுப்புடன்.

ரஞ்சித் முழிக்க, “பின்ன என்ன கோவில்ல என்ன பண்ணுவாங்க சாமி தான் கும்பிட வருவாங்க” என்று ஆதிராவும் கடுப்புடனே உரைத்திட, ‘இப்ப நம்ம என்னடா கேட்டுட்டோம்.?’ என்று ரஞ்சித் தான் புலம்பினான் மனதினுள்.!

“சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டனா.?” என்று சங்கடத்துடன் வினவி “சரி நான் கிளம்பறேன்” என்று அவர்களுக்கு தனிமையை அளித்து விட்டு அவன் நகர, “ஹோய் என்ன ரொம்ப தான் பண்ற.?” என்று சத்தமிட்டாள் ஆதிரா.

பே வென முழித்து நின்ற ரஞ்சித் ‘இவங்க என்ன மனநிலைல இருக்காங்கனு தெரிலயே.?’ என்று நொந்து அப்படியே நின்றான். ‘நல்ல வேளை இவங்க இந்த லூசு கிட்ட இருந்து தப்பிச்சுட்டாங்க’ என்று நினைத்து கொண்டாள் துருவினி.!!

பேச்சை மாற்றும் விதமாக “இவங்க உன் அண்ணாவா.?” என்று ரஞ்சித்தே ஆண்கள் இருவரையும் சுட்டிக்காட்டி வாயை குடுத்து மாட்டிக் கொள்ள, “ஆமா இவங்க என் அண்ணா” என்று அசோக்கை கைகாட்டி கூறினாள் ஆதிரா..

காவ்யாவும் “ஆமா இவங்க என் அண்ணா” என்று ரூபனை கைகாட்ட, அப்பாவியாக ரஞ்சித்தோ “அப்ப ரெண்டு பேரும் உங்களுக்கு அண்ணா தானே.?” என்று கேட்டதில் பத்ரகாளியான ஆதிரா முறைத்தே பஸ்பமாக்க, ஒருபடி மேல் சென்

று காவ்யாவோ ஓரத்தில் கிடந்த வேப்பங்குச்சியை எடுத்து அவனை அடிக்க பாய்ந்தாள்.

பதறியவன் துருவினியின் பின்னே மறைந்து கொள்ள, இறுகி போயிருந்த அசோக் கூட ரஞ்சித்தின் செயலில் சிரித்தே விட்டான். “ஏய் அவளை விட்டு முன்னால வா” என்று குச்சியை நீட்டி அவனை மிரட்டினாள் காவ்யா.

“நான் கேட்டதுல என்ன தப்பு.?” என்று அப்போதும் புரியாமல் பாவமாக கேட்டவனின் செயலில் தலையில் அடித்து கொண்ட துருவினி “அய்யோ இது திராவோட ஆளு” என்று ரூபனை சுட்டிக்காட்டி விட்டு பின்பு “இது காவ்யாவோட ஆளு” என்று அசோக்கின் புறம் கை நீட்டினாள்.

புரிந்ததும் அசடு வழிந்து தலையை சொறிந்தவன் “சாரி” என்றிட, “இந்தளவுக்கு லூசா இருப்பேனு நான் நினைக்கல” என்ற காவ்யா ஓரடி வைத்து விட்டே அடங்கினாள். இதற்கும் சமாளிப்பாக சிரிப்பை தருவதை விட அவனுக்கு வேறு வழியும் இல்லை.

“ஹாய் ப்ரதர் நான் ரஞ்சித்” என்று ரூபனிடம் கை நீட்டி தன்னை அறிமுகப்படுத்த, புன்னகைத்த ரூபனும் “நான் ரூபன்” என்று தன் பெயரை கூறினான். அடுத்து அசோக்கிடமும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.

காவ்யாவிடம் “நான் உன்னைய சிங்கிள்னு நினைச்சேன்” என்றதும் முகம் மாறிய அசோக் “நான் சிங்கிள் தான் ரஞ்சித்” என்று அவளின் காதலை மறைமுகமாக மறுக்க, “பரவால்ல இனி மிங்கிள் ஆகிரலாம்னு சொல்லு ரஞ்சித்” என்றாள் சாதாரணமாக.

‘ஆத்தி இதுகளுக்குள்ள சண்டை போல.. அடேய் இன்னைக்கு உனக்கு நேரமே சரியில்லடா’ என்று புலம்பி அமைதியாக நின்றான். “எனக்கு காதல் கத்திர்க்காய் எல்லாம் தேவையில்ல” என்று பட்டென்று கத்தியவன் நகர்ந்து விட்டான்.

அவன் பின்னே ரூபனும் செல்ல போக, “அட அண்ணா அவன் எங்கையும் தொலைஞ்சு போக மாட்டான்.. இங்கயே இருங்க” என்று ரூபனை செல்ல விடாமல் காவ்யா தடுக்க, என்ன செய்வது என்று புரியாமல் ரூபனும் அப்படியே

நின்றான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்