
பூகம்பம் – 26
வீரச்சாமியின் அர்த்தம் பொதிந்த அழுத்தமான பார்வையில் வேலுச்சாமியின் தலை சற்று பயத்தில் கீழே குனிய, கம்பீரமாக எழுந்து நின்றவர் குரலை உயர்த்தினார்.
“நானும் பொறுமையா பேசலாம்னு நினைச்சா விட மாட்ட போல.? நீ வாழ்ற இந்த சொகுசு வாழ்க்கை உனக்கு யாரு குடுத்தது.? நம்ம தம்பியாச்சேனு உன் அண்ணங்காரன் நிலத்தை உன் பேருல எழுதி வெச்சிருந்தா அது உனக்கு மட்டும் தான் வருமா.?
மானமுள்ள எவனும் அடுத்தவன் உழைப்பை கொண்டாட விரும்ப மாட்டான்.. இந்த தலைவர் பட்டமும் குடுத்தது உன் அண்ணங்காரன் தான்.. உன் ஆத்தாவையே பார்த்துக்க மாட்டேனு சொன்னவன் தான நீ.? ஆனா உன் ஆத்தா பேருல இருந்த சொத்து மட்டும் நோகாம வேணுமாக்கும்.?
அந்த நிலத்தை உன் அப்பன் அடமானம் வெச்சுட்டு போய் சேர்ந்துட்டார்.. அதைய மீட்டது யாரு.? அப்ப எல்லாம் ஒரு எட்டு என்னனு வந்து கேட்டீயா.? இரவுபகலா அந்த நிலத்தை மீட்க உன் அண்ணன் அலைச்சப்ப எல்லாம் சாராய கடைல படுத்துக்கிடந்துட்டு இப்ப உன் நிலமாக்கும்.?
அந்த நிலம் மொத்தமா உன் அண்ணன் மவனுக்கு தான் போய் சேரணும்.. அவன் அப்பன் பார்த்துக்கிட்ட ரெண்டு ஏக்கர் நிலத்தை மட்டும் தான கேட்கறான்.. அஞ்சு ஏக்கர்ல அண்ணன் தம்பிக்கு பங்கு பிரிச்சா கூட இன்னும் அரை ஏக்கர் இவனுக்கு தான் வரணும்..
உன் மவனுக்கு பணம் வேணும்னா நீ சம்பாதிச்சு வெச்சுருக்கணும் இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போவல உன் மவனுகளுக்கு நீ உழைச்சு கொட்டு அதுக குடிச்சுட்டு ரோட்டுல வுழுந்து கிடக்கட்டும்..
பெத்தவன் தான் நல்லப் புத்தியை சொல்லி குடுக்கணும்.. உன் புத்தியே நாறிகிடக்கறப்ப நீ எனத்தை உன் மவனுகளுக்கு சொல்லி குடுப்ப.? இதுல பேச வந்துப்புட்டான்..” என்று வீரச்சாமி நார் நாராக கிழித்ததில் வேலுச்சாமிக்கு பேசவே நாவு மறுத்தது.
“இவன் அப்பன் போய் சேர்ந்துட்டா கேட்க ஆருமில்லனு நினைச்சுட்டு உன் இஷ்டத்துக்கு ஆடிட்டு இருக்கீயா.? இந்த விசயம் என் காதுக்கு வந்தப்பவே பேசணும்னு இருந்தேன் ஆனா இவன் தான் சித்தப்பாங்கற உறவு வேணும்னு அமைதியா இருக்க சொன்னான்..
இப்படிப்பட்டவன போய் ஏமாத்த பாக்கற.? இவன் என் மவன்டா.. என் மவனுக்கு ஒண்ணுனா நா முன்னால வந்து தட்டி கேட்ப.. இதுக்கு மேலயும் அந்த நிலத்தை விற்கணும்னு நினைச்ச அவ்ளோதான்..” என்று வீரச்சாமி அக்கினி பிழம்பாக சீறினார்.
ரூபன் தான் “பெரிப்பா கொஞ்சம் பொறுமையா பேசுங்க” என்று அமைதியாக்கிட, “இப்ப என்னடா சொல்ற.?” என்று நாக்கை மடித்து வீரச்சாமி துருத்தி கேட்டதில் “நீங்க சொல்ற மாதிரியே பண்ணிக்கலாம்” என்று சரண்டராகி விட்டார் வேலுச்சாமி.
இனியும் மறுத்தால் ஊர்த்தலைவர் என்ற பட்டமும் பறி போய் விடுமே.!! பேருக்கென்று ஊர்த்தலைவராக இருப்பவர் தான் இவர்.. ஆனால் வீரச்சாமியின் வார்த்தையை தான் ஊர்மக்கள் செவிமடுப்பார்கள்.. ரூபனின் தந்தை மறைந்ததும் வீரச்சாமியை தான் ஊர்த்தலைவராக இருக்க கோரிட, ஆனால் அவரோ மறுத்து பொன்னுச்சாமியின் தம்பிக்கே பட்டத்தை குடுத்தார்.
ஒருவழியாக இந்த பிரச்சனை ஓய்ந்திட, ரூபனை விடாமல் முறைத்து கொண்டிருந்தார் வேலுச்சாமி இந்த பிரச்சனைக்கு காரணம் அவன் தானென்று.!! அவரின் மகன்கள் இருவரும் விட்டால் ரூபனை அடித்து விடுவோம் என்ற தோரணையில் இருந்தாலும் வீரச்சாமியின் மீதிருந்த பயத்தில் முறைப்பை மட்டுமே அவன் மீது வீச செய்தனர்.!!
இரண்டு ஏக்கர் நிலத்திற்கான பத்திரத்தை கையோடு வாங்கி கொண்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார் வீரச்சாமி.!! “
“மூனு ஏக்கர் நிலத்துல உழைச்சு தின்னா கூட உங்களுக்கு சரியா தான் இருக்கும்.. உழைக்க கஷ்டப்பட்டு நிலத்தை வித்துப்புட்டு சொகுசா இப்ப இருக்கலாம்.. ஆனா கடைசில அடுத்தவங்கள நம்பி தான் வாழ வேண்டி வரும்.. யோசிச்சு முடிவு பண்ணுங்க” என்ற வீரச்சாமி அவர்களை முறைத்து விட்டு ரூபனை அழைத்து சென்றார்.
மற்றவர்களும் கலைந்து சென்று விட, “இவன்கிட்ட அமைதியா இருந்தா சரிப்பட்டு வராதுயா ராசா.. இவன் எக்கேடோ கெட்டாலும் பரவால்ல உன் ஆத்தாவை மட்டும் பார்த்துக்கோயா..” என்றவர் ரூபனின் தலையை வாஞ்சையாக தடவினார்.
உடன் வந்த அசோக்கை அப்போது தான் கவனித்தனர் தந்தையும் மகனும்.!! “ரூபன் இது.?” என்று சிவா வினவ, “அண்ணே இது என் ப்ரெண்டு.. பேரு அசோக் அண்ணே.. என் கூட தான் பெங்களூர்ல வொர்க் பண்றான்..” என்று நண்பனை அறிமுகப்படுத்தினான்.
வீட்டிற்கு வர கூறியவர்களிடம் அசோக்கின் தமக்கை திருமணத்தை சுட்டிக்காட்டி கிளம்புவதாக ரூபன் கூறிட, விடாமல் டீ கடையில் இருவருக்கும் டீ வாங்கி குடுத்த பின்னரே அனுப்பி விட்டார் வீரச்சாமி.
செல்லும் போது “ஏன்டா பொய் சொன்ன.?” என்ற நண்பனிடம் “சிவா அண்ணே அம்மாக்கு நம்ம போனா பிடிக்காதுடா.. ஒரு மாதிரி பேசுவாங்க அதான்.. நான் மட்டும்னா பரவால்ல கூட நீயும் இருக்கீயே.?” என்றான் அமைதியாக.
புரியாமல் “இவங்க நல்லா தான பேசறாங்க.?” என்று அசோக் கேட்டிட, “ம்ம்ம்ம் பெரியப்பா எப்பவுமே எல்லாரு கூடவும் நல்லா பேசுவாங்க.. சிவா அண்ணாவும் பெரியப்பா மாதிரி தான்.. ஆனா அவங்க அம்மாக்கு யாரையுமே பிடிக்காதுடா.. சிவா அண்ணாவும் அவங்க அம்மா மாதிரி இருந்துருந்தா இன்னேரம் அந்த அண்ணா பெரியப்பா பையனு மட்டும் தான் தெரிஞ்சிருக்கும்” என்று சிரிப்புடன் கூறினான்.
இதற்கு மேலும் இதை பற்றி பேச விரும்பாமல் “எப்படியோ பிரச்சனை அதிகமாகாம முடிஞ்சுருச்சு அது வரைக்கும் சந்தோசம்டா” என்று அசோக் உரைத்ததும் பதிலின்றி சிறு புன்னகையை மட்டும் வீசினான் ரூபன்.!
“சிவா மாமாகிட்ட ஏன்டா நீயே சொன்ன.?” என்று கேட்டு கடுப்பில் தன்னவனை ஆதிரா அடிக்க, “ஹேய்” என்று சிரிப்புடன் பெண்ணவளின் அடியை ரூபனும் தடுக்க, அடித்தது போதும் என்று நினைத்தாலே “போடா நான் கோவம்” என்றாள் உம்மென்று.
அவளை சீண்டும் விதமாக ரூபனோ “எதுக்கு மேடம்.?” என்று சிரிக்க, கண்ணை சுருக்கி அவனை முறைத்து “எனக்கு இருந்த சப்போர்ட்டு சிவா மாமா மட்டும் தான்.. அவருகிட்ட நான் தான் சொல்லிருக்கணும்.. நீ ஏன்டா சொன்ன.?” என்று மறுபடியும் கேட்ட வினாவையே கேட்க, சிரிப்பு அதிகமாகியது ஆடவனுக்கு.!!
“சிரிக்காத அபி” என்றவள் இதற்கும் சிலபல அடிகளை பரிசளிக்க, “ஆதி எல்லாரும் பார்க்கறாங்க” என்று கூறி நாம் இருப்பது பொது இடம் என்பதை சுட்டிக்காட்டினான். பெற்றோரிடம் கோவிலுக்கு செல்வதாக கூறி ரூபனை பார்க்க வந்திருந்தாள் திருட்டுத்தனமாக.!!
அவனை முறைத்தவாறே ஆதிரா இருக்க, புன்னகை கீற்றுடன் ரூபனோ “முதல்ல நான் சொல்லலாம்னு தான் நினைச்சேன் ஆனா சொல்லல..” என்று விட்டு பெண்ணவளின் திருமுகத்தை காண, அதுவோ கோவச்சிவப்பில் சிவந்திருந்தது.
“இப்படி முறைக்காதமா.. சிவா அண்ணாகிட்ட நீயே சொல்லிக்கோ ஆதி..” என்று அவளிடமே சரணடைந்து விட, “வர வர ரொம்ப கிண்டல் பண்ற.?” என்றவளிடம் “எல்லாம் உன்கூட சேர்ந்த சாவகாசம் தான் ஆதிமா” என்று அப்போதும் அவளை வம்பிழுத்தான்.
பொய்யாக முறைத்து இவள் நிற்க, “வீட்டுல தேடுவாங்க நீ கிளம்பு” என்று அவளை கிளம்ப கூறிட, “நீங்க எப்போ கிளம்பறீங்க.?” என்று ஆதிராவும் வினவினாள்.
“அசோக் சொல்லணும்டா.. நான் போறேனு சொன்னாலும் விட மாட்டான்..” – ரூபன்
“பேசாம நீ இங்கயே இருந்துரு அபி..” – ஆதிரு
“ஆஹான் எனக்கும் ஆசை தான்..” – ரூபன்
“அப்ப இரேன்..” – ஆதிரா
“வீட்டோட மாப்பிள்ளையா இருந்தரட்டுமா.? என் மாமியாரு சமையல் எல்லாம் நல்லா பண்ணுவாங்களா.?” என்று அவளை வம்பிழுக்க, “உன்கிட்ட போய் வருத்தமா பேசுனேன் பாரு.. போடா நான் கிளம்பறேன்..” என்றவள் தூக்கி வைத்த முகத்துடன் நடந்தாள்.
அவ்விடத்தில் அதிகமாக ஆள் நடமாட்டம் இல்லாததால் “ஹோய் மேடம்.. கோவத்துலயும் அழகா இருக்கீங்க..” என்று அவளுக்கு கேட்கும்படி ரூபன் கத்த, திரும்பிய ஆதிராவும் “நீங்களும் இந்த சிரிப்புல ரொம்ப அழகா இருக்கீங்க அபி.. இந்த சிரிப்பிற்கு மட்டும் ஆயிரம் முத்தங்கள்” என்று பறக்கும் முத்தங்களை வீசினாள்.
அவளை சீண்டுவது
அவனுக்கு விருப்பம்
என்றால் அவன்
சீண்டல் பொய்யென்று
அறிந்தும் கோவமாக
முறைப்பதும் இவளின்
விருப்பமே.!!
தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான் அசோக்.!! இவனின் அன்னையும் ஓரமாக அமர்ந்திருக்க “இதுக்கு தான் படிச்சு படிச்சு சொன்னேன் உன் பொண்ணுகிட்ட எதுவும் சொல்ல வேணாம்னு கேட்டியா.? சின்ன அக்கா பட்ட கஷ்டத்துக்கு இப்பதான் நல்ல வாழ்க்கை கிடைக்க போகுது.. இதுல அவளுக்கு என்ன வயித்தெரிச்சல்.?” என்று சீறினான்.
அவனின் அன்னையால் பதில் பேச முடியா நிலை.!! நண்பனின் குடும்ப விசயத்தில் தலையிடாமல் நடப்பதை மட்டுமே ரூபன் வேடிக்கை பார்த்திருக்க, அவனுக்கு எதிர்புறத்தில் கண்ணீர் வடித்து சோகமே உருவாக அமர்ந்திருந்த அசோக்கின்
தமக்கையை கண்டு அவனின் மனதும் வலிக்க தொடங்கியது.!!
ரூபனின் பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டது என்று மகிழ்வில் இருந்த அசோக்கிற்கு வீட்டில் பெரிய பிரச்சனை ஒன்று காத்திருக்கிறது என்பதை அவன் அறியவில்லை.
இருவரும் வீட்டிற்கு வரும் போதே அவனின் பெரிய அக்காவின் சத்தம் வாசல் வரை கேட்க, ‘என்னனு பாருடா’ என்று நண்பனை இறக்கி விட்டு அவர்களின் குடும்ப பிரச்சனையில் தலையிட விரும்பாமல் அப்படியே கிளம்பி இருந்தான் ரூபன்.!
அதன்பின்பு தான் ஆதிராவை பார்த்தது. மீண்டும் இவன் வீட்டிற்கு வந்த நேரம் “எனக்கு அஞ்சு பவுன் போட்டுட்டு இவளுக்கு மட்டும் ஏழு பவுன் மாப்பிள்ளை வீடு போட சொன்னதும் சரினு தலையாட்டிருக்கீங்க.. அஞ்சு பவுன் போட்டா கல்யாணம் பண்றதுனா பண்ணுங்க இல்ல வேற இடம் பாருங்க” என்ற வார்த்தைகள் தான் தெளிவாக ரூபனை வந்தடைந்தது.
இதிலே பிரச்சனை என்னவென்று புரிந்து விட்டது.!! அமைதியாக உள்ளே வந்த அவன் ஓரமாக நின்று கொண்டான்.. பேச நினைத்ததை பேசி விட்டு கிளம்பி இருந்தார் அசோக்கின் பெரிய தமக்கை.
தன்னிலையை நினைத்து சிறியவள் கண்ணீர் வடிக்க, அதை கண்டு ரூபனுக்கும் மனது கனத்தது. அசோக்கின் நிலையை நினைத்தும் கவலையடைந்தான் அவன்.!!
இப்போது அசோக்கின் கோவம் அனைத்தும் அவனின் அன்னையிடம் திரும்பி இருந்தது. அவன் தான் பெரியவளை அழைக்க வேண்டாம் என்றிருந்தானே.. விடாமல் அழைத்தது இவர் தானே..
மற்றவர்களின் குத்தல் பேச்சில் மனம் நொந்து வாழ்ந்திருந்த தமக்கை இனி நன்றாக வாழ்வாள் என்று மலை போல் இவன் நம்பி சந்தோசமடைந்திருக்க, அந்த ஆனந்தம் இரண்டு நாள் கூட நில்லாமல் சட்டென்று வடிந்திருந்தது அதுவும் அவன் உடன்பிறந்த மற்றொரு தமக்கையால்.!!
“அம்மா முடிவா சொல்றேன் பத்து பவுன் கேட்ட கூட நான் அக்காக்கு போடுவேன்.. அவ சந்தோசமா வாழ்ந்தா போதும்.. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்.. உன் மூத்த பொண்ணு என்ன பண்றானு நானும் பார்க்கறேன்..” என்
றான் முடிவாக.
அழகிய பூகம்பம் தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
+1

