
பூகம்பம் – 1
அணுவிற்குள் அணுவும் நீ அண்டங்கள்
அனைத்தும் நீ
ஆள்கின்ற அரசியும் நீ
கணுவிற்குள் கணுவும் நீ கரும்புக்குள்
சுவையும் நீ
கருணைக்கு எல்லையும் நீ
விண்ணும் நீ மண்ணும் நீ
விகசிக்கும்ஒளியும் நீ
வேதத்தின் மூலமும் நீ
பண்ணும் நீ பனுவல் நீ
புலவர்க்கு பொருளும் நீ
பாருக்கு அன்னையும் நீ
அகிலம் எல்லாம் போற்றும்
அகிலாண்ட நாயகியே!
அன்பு வடிவான உமையே
அன்னையே சிவகாமி அம்மையே
எனை ஈன்ற ஆதிசிவ சக்தி தாயே!
கன்றுக்கு பசுவாக குன்றுக்கு ஒளியாக
என்றைக்கு நீ வருவாய்.?
மன்றாடும் பிள்ளைக்கு குன்றாத
அன்புதனை என்றைக்கு
நீ தருவாய்.?
மண்ணுக்கு மழையாக விண்ணுக்கு
நிலவாக என்றைக்கு நீ வருவாய்.?
கண்ணுக்குள் ஒளியாக நெஞ்சுக்குள்
சுடராக என்றைக்கு நீ ஒளிர்வாய்.?
இருளுக்குள் அகப்பட்டு பலவாறு
வதைப்பட்டு ஒளி உன்னை
தேடி வந்தேன்!
அன்னையே சிவகாமி அம்மையே
எனை ஈன்ற ஆதிசிவ சக்தி தாயே!
என்று ஊர் முழுவதும் ஆங்காங்கு கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியின் மூலம் எதிரொலித்த அம்மனின் பாடலே கூறியது அவ்வூரில் திருவிழா நடைபெறுவதை.!
எழில் வளம் குன்றாத அழகிய சிறு கிராமம் அது. ஊரின் நடுவில் கோவில் கோபுரம் வீற்றிருக்க, அதில் மக்களை மயக்கும் அழகிய புன்னகையுடன் அமர்ந்திருக்கிறாள் மாகாளியம்மன். தன்னிடம் பயபக்தியுடன் சரணடையும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அவர்களுக்கு வேண்டியதை அள்ளி கொடுக்கும் பேரன்பு மனம் கொண்டவள் அன்னை மாகாளி.
வருடந்தோறும் அம்மனுக்கு எட்டு நாட்கள் திருவிழா நடைபெறும். அந்த எட்டு நாட்களும் அவ்வூர் மக்கள் வெளியூர் எங்கும் செல்ல மாட்டார்கள். வேண்டுதல் வைத்தவர்கள் வெளியிடங்களிலும் மற்றவர்களின் வீடுகளிலும் உணவு உண்ணவும் மாட்டார்கள். எட்டு நாட்களும் அம்மனின் பக்தி பாடல்கள் ஊர் முழுவதும் எதிரொலித்து பக்தி பரவசத்தை பரப்பும் என்பதில் ஐயமில்லை.
முதல் நாள் அம்மனுக்கு பூவோடு எடுப்பவர்கள் காப்பு கட்டுதலில் இருந்து திருவிழா தொடங்கும். பின்பு ஆறாம் நாள் இரவில் ஆற்றங்கரையோரத்தில் இருந்து கம்பம் எடுத்து வரப்பட்டு கோவிலின் வாயிலில் நடப்படும். அடுத்த இரண்டு நாட்களும் ஊர் மக்கள் கம்பத்திற்கு மஞ்சள் கலந்த நீரை ஊற்றுவார்கள்.
ஏழாம் நாள் ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருவதும், திருவிழாவான எட்டாம் நாள் காலையில் மாவிளக்குடன முளப்பாரியும் எடுத்து கொண்டு ஊர்வலமாக அம்மன் சன்னதியை நோக்கி செல்வார்கள். பூஜை முடிந்ததும் வேண்டுதல் வைத்தவர்கள் பூவோடும் எடுத்து முடிய, அம்மனுக்கு பொங்கல் வைக்க ஊர் மக்கள் கோவிலில் குவிந்து இருப்பார்கள்.
அன்றிரவு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் சேர்ந்து அவ்வூர் இளைஞர் பட்டாளத்தின் ஆட்டம் கொண்டாட்டத்துடன் திருவிழாவின் எட்டாம் நாள் நிறைவு பெறும். அடுத்த நாள் ஆற்றிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம் அம்மனுக்கு ஊற்றப்பட்டு பூஜை முடிந்ததும் மஞ்சள் நீர் ஊற்றுதல் விழாவுடன் அனைத்தும் இனிதே நிறைவடையும்.(இவ்வளவு தான்ங்க திருவிழாவை பற்றிய சிறு விளக்கம்)
கோவிலின் வாசலில் நின்று பார்த்தாலே அத்தனை அழகுடன் மிளிரும் அன்னையவளின் திருமுகம்தனை கண்டு விடலாம். வாயிலின் ஒருபுறம் பெண்கள் கும்மி அடித்திட, அதனை காண பலரும் அங்கு குழுமி இருந்தனர்.
ஆங்காங்கு போடப்பட்டிருந்த கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருக்க, “யோவ் அங்க யாரப்பா.? நேரமாகிட்டு போவுது..” என்று பூசாரி குரல் குடுக்க, “இதோ வரேன்ங்க அய்யா” என்றவாறு ஆட்டோவில் வந்திறங்கிய இளநீர்களை பார்வையாளர்களாக நின்றிருந்த சிறுவர்களின் கைகளில் ஆளுக்கொன்றை குடுத்து கோவிலுக்குள் துரத்தி விட்டனர்.
ஆண்கள் பம்பரமாக சுழன்று வேலையில் கவனமாக இருக்க, அம்மனின் அபிஷேகத்தை காணவும் பலர் இடம் பிடித்து அமர்ந்திருந்தனர்.
இங்கு இப்படி இருக்க, கட்டலில் அமர்ந்திருந்த பெண்ணவளின் மடியை தலையணை நிறைத்து இருந்தது. அதில் இடது கையை ஊன்றி கன்னத்தில் முட்டு குடுத்து கண்ணாடியில் ஒரு மணி நேரமாக தன் தங்கையையே பெருமூச்சுடன் பார்த்திருந்தாள் ஆதிரா.
இப்போது முடிப்பாள் அப்போது முடிப்பாள் என்று பொறுமையாக அமர்ந்திருந்த ஆதிராவுக்கு பொறுமையும் பறந்தோடிட, “ஏய் போதும்டி அந்த கண்ணாடி பாவம்.. இன்னும் நாங்க யாரும் கிளம்பவே இல்லை.. ஜஸ்ட் கோவிலுக்கு போகவே இப்படினா.. உன்னைய மாப்பிள்ளை பார்க்க வந்தா எங்களோட நிலைமை.?” என்று முதலில் கடுப்புடன் ஆரம்பித்தவள் இறுதியில் கிண்டலாக முடித்தாள்.
அப்போதும் சாவகாசமாக கஜாலின் மூடியை கலற்றியபடி “ப்ச் நீ மேக்கப் பண்ணுனா என்ன.? நான் பண்ணுனா என்ன.? ரெண்டும் ஒண்ணுதானே.? புலம்பாம கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்று விட்டு கஜாலை போட துவங்கினாள் ஆதிராவின் உடன்பிறந்த தங்கையான துருவினி.
“இன்னும் கிளம்பாம என்னடி பண்ணிட்டு இருக்க.? அத்தை கத்தறது உன் காதுல விழுகலயா.? உன் மாமன வேற நிமிசத்துக்கு நூறு தடவை போன் பண்ணிட்டு இருக்காரு..” என்று உச்சஸ்தாயியில் ஆதிராவிடம் எகிறினாள் நிவேதா.
“ஹலோ அக்கா அந்த எருமை விலகுனா தான் என்னால கிளம்ப முடியும்.. முதல்ல அவளை இழுத்துட்டு போங்க..” – ஆதிரா
“என்னது இவ இன்னும் கிளம்பலயா.? இன்னேரம் என்னடி பண்ணிட்டு இருந்தா.?” – நிவேதா
“அதைய எப்படி என் வாயால சொல்ல முடியும்.. தயவு செஞ்சு இவளை இழுத்துட்டு போங்களேன்..” என்று ஆதிரா கதறிய நேரம் “ஆதிதிதி” என்று கத்தியபடி ஓடி வந்த நிவேதாவின் ஐந்து வயதான சாத்விக் பெண்ணவளின் மடியில் அமர்ந்தான்.
“வாவ் சாது கண்ணா அவ்ளோ அழகா இருக்கீங்க.. என் கண்ணே பட்டுரும்” என்று சாத்விக்கை திருஷ்டி கழித்து கன்னத்தில் முத்தமிட்டு கண்சிமிட்டி ஆதிரா சிரிக்க, “நீ இன்னும் கிளம்பாம இருக்க.. நான் கோவம்” என்று முகத்தை உம்மென்று வைத்தவனை கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்து பின்பு வெளியில் தூக்கி கொண்டு வந்தாள்.
கிளம்பாமல் அப்படியே அவள் வெளியில் வந்ததை பார்த்து ஆதிராவின் அததையும் நிவேதாவின் மாமியாருமான கஸ்தூரி அங்க அபிஷேகம் ஆரம்பிக்க போறாங்க.. நீங்க என்னடானா இன்னும் கிளம்பாம ஆடிட்டு இருக்கீங்க.? நான் சொல்றதை நீயும் காதுல வாங்கறது இல்ல எனக்குனு வந்ததும் கேட்கறது இல்ல.. என்னமோ பண்ணி தொலைங்க நான் போறேன்..” என்று நாத்தியின் மகளை மட்டுமில்லாமல் மருமகளையும் திட்டியவர் சிடுசிடுவென வெளியேறினார்.
“ஆதி அப்பத்தா அப்பத்தா” என்று சாத்விக் கத்த போக, அவனின் வாயை மூடியவள் “அடேய் என் மாமன் பெத்த அருமை மகனே.. இப்பதான் உன் அப்பத்தா சாமியாடிட்டு போகுது மறுபடியும் நீ கூப்பிட்டு வெச்சு திட்டு வாங்க வெக்காத..” என்றவாறு தட்டில் நறுக்கி வைத்திருந்த ஆப்பிள் துண்டை எடுத்து கடித்தபடி மீண்டும் அறைக்குள் சென்றாள்.
ஒருவழியாக ஒப்பனையை முடித்திருந்த துருவினி “ஏய் எனக்கு எங்கடி.?” என்று ஆப்பிள் துண்டுக்காக எகிற, சாதாரணமாக ஆதிராவோ “நான் சாப்பிட்டா என்ன.? நீ சாப்பிட்டா என்ன.? எல்லாம் ஒண்ணுதான் செல்லம்” என்றாள் பல்லை காட்டி.
“உன் வயிறும் என் வயிறும் என்ன ஒண்ணா.?” – துருவினி
“அப்ப உன் மூஞ்சியும் என் மூஞ்சியும் என்ன ஒண்ணாடி என் சிப்ஸூ” – ஆதிரா
“பப்ளிமாஸ் வேணாம்..” – துருவினி
“எனக்கு வேணும்டி தங்கம்.. அப்ப எனக்கும் இப்படிதான் இருந்துருக்கும்..” – ஆதிரா
“இதுக்கு நான் பழிக்கு பழி வாங்கல… வாங்குவேன்.. ம்ம்ம்ம் நான் வாங்கியே தீருவேன்..” – துருவினி
“பழி வாங்கற மூஞ்சியை பாரு.. நீ பழி என்ன பாவாற்காய் கூட வாங்கு..” என்று தங்கையின் கன்னத்தை பிடித்து கிள்ளிய ஆதிரா வேணுமென்றே அவளை இடித்து பலிப்பு காட்டி சிரித்தாள்.
இவர்களின் சம்பாஜனையை செவிமடுத்தவாறு கிளம்பி முடித்திருந்த நிவேதா “முதல்ல நீ கிளம்புடி” என்று மகனை மட்டுமின்றி துருவினியையும் இழுத்து கொண்டு சென்றாள்.
கோவிலில் அம்மனுக்கு பதினாறு வகை அபிஷேகங்களும் நடந்து கொண்டிருக்க, ஊர் பெரியவர் என்ற முறையில் முன்னால் நின்றிருந்தார் வேலுச்சாமி. அவரின் அருகில் அவரின் அண்ணன் மகனான அபிரூபனும் மனமுருக அம்மனை நினைத்தவாறு கைகளை கூப்பி நின்றிருந்தான்.
“இன்னும் சிவாவை காணோம் என்னனு பாரு” என்று வேலுச்சாமி கூறியதும், “பார்க்கறேன் சித்தப்பா” என்றபடி வெளியே வந்தவன் நிவேதாவின் கணவனான சிவாவிற்கு அழைக்க, அதுவோ அடித்து ஓய்ந்ததே தவிர எடுக்கப்படவில்லை.
‘இந்த அண்ணா எங்க போய் தொலைஞ்சாங்க.. அவரு இல்லாம போனா அந்த மனுசன் வேற காட்டுக்கத்து கத்துவாரே.. இவங்ககிட்ட நான் மாட்டிட்டு படற பாடு இருக்கே.. என்னால முடியல’ என்று நெற்றியை நீவியவனின் விழிகளில் சிக்கினாள் அவள்.
மாமன் மகனுக்கு வாங்கிய பஞ்சு மிட்டாயை அவனுக்கு குடுக்காமல் அவனை ஏமாற்றி உண்டு கொண்டிருந்தது வேறு யாருமில்லை ஆதிராவே தான். ‘யாருடா இந்த பொண்ணு.. சிவா அண்ணனோட பையனை வெச்சு நின்னுருக்கு’ என்று நினைத்து அவளையே பார்த்தவாறு நின்றான்.
“ஆதி உன்னைய அப்பத்தாகிட்ட சொல்லி குடுப்பேன் பாரு.. அப்பத்தாஆஆஆ” என்று கத்தி அழுகையில் சிணுங்கியவனை கொஞ்சி கெஞ்சி சமாளிக்க முயல, அப்போதும் அழுகையை நிறுத்தாமல் சிணுங்கிய சாத்விக்கை சமாளிக்கும் வழியறியாமல் முழி பிதுங்கி நின்றிருந்த ஆதிராவை கண்டு சிரிப்பு மேலிட்டது ரூபனுக்கு.
கடுப்பான ஆதிரா “இப்ப என்ன உனக்கு பஞ்சு மிட்டாய் தானே வேணும்.. வா வாங்கி தர்றேன்..” என்றவள் சாத்விக்கை இழுத்து கொண்டு நடக்க, அவனோ அவ்விடத்தை விட்டு நகராமல் தூக்கு என்பதை போல் அப்படியே நின்றான்.
அதில் ஆதிராவுக்கு தானாக புன்னகை மலர, மாமன் மகனை தூக்கி கன்னத்தில் இதழ் பதித்து “கொஞ்சம் சிரியேன்டா” என்றவாறு ரூபனை கடந்து சென்றாள்.
இதனை கண்டிருந்த ஆடவனுக்கும் புன்னகை
க்கீற்று அரும்பியதை பறை சாற்றியது அவனின் கன்னத்தில் விழுந்த கன்னங்குழியே.!
தன்னுடன் வந்த மற்றவர்களை மறந்து சாத்விக்குடன் ஊர் சுற்ற ஆதிரா கிளம்பிட, அசையாமல் அப்படியே நின்றிருந்த ரூபனை உலுக்கினான் சிறுவன் ஒருவன்.
“அண்ணே உங்களைய ஐயா கூப்பிட்டு வர சொன்னாரு” என்றதும் தான் இங்கு எதற்கு வந்தோம் என்ற ஞாபகமே எழுந்தது ரூபனுக்கு.
“தம்பி சிவா அண்ணனை பார்த்தீயா.?” என்று அச்சிறுவனிடம் ரூபன் வினவிட, “அந்த அண்ணனும் கோவிலுக்குள்ள தான் இருக்காங்க அண்ணே.. நீங்க தான் இங்க இருக்கீங்க..” என்றவனை அனுப்பி விட்டு ‘நான் அந்த அண்ணனை தேடிட்டு வெளில வந்தா அந்த அண்ணா உள்ளே இருக்காங்க.. இதுக்கு அந்த மனுசன் கத்துவாரே.!!’ என்று நினைத்து நொந்து போனான்.
அழகிய பூகம்பம் தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
+1
+1

