
அத்தியாயம் 1
“அம்மா ப்ளீஸ் கொஞ்சம் நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே நான் வந்துடுவேன்.என் பிரண்ட்ஸ் கிட்ட வந்துடுவேன்னு சொல்லிட்டேன்.இப்போ நான் வரலைன்னு சொல்ல முடியாது.நான்கண்டிப்பா போயே ஆகணும்.நான் வந்துடுவேன் சொல்லி வாக்கு குடுத்துருக்கேன்.நான் ஒருமுறை முடிவு செஞ்சா செஞ்சது தான் அதுல இருந்து எதுக்காகவும் மாறவும் மாட்டேன். மாத்திக்கவும் மாட்டேன். நான் இன்னைக்கு ஈவினிங் கிளம்புறேன். போர் டேஸ் தான் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடுவேன்” என்றவன் கிளம்புவதற்கு உடைகளை எடுத்துவைக்க ஆரம்பித்தான்.
அவனை கோபமாக பார்த்த மீனாட்சி”அப்படி என்னடா உனக்கு கூட பிறந்த அண்ணன் கல்யாணத்த விட உன் பிரண்ட்ஸும், அவனுகளோட ஊரு சுத்துறதும் முக்கியமா போயிருச்சு. அவ்ளோ பெரிய மனுஷன் ஆகிட்டியா நீ ஒரு தடவ சொன்னா மாத்திக்கமாட்டானாமா? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ நீ போக கூடாது. இதான் கடைசி. இதுக்கு மேல உன்கிட்ட இத பத்தி பேச விருப்பம் இல்லை” என்றவர் சோபாவில் அமர்ந்து விட்டார்.
தாயின் தோரணையை பார்த்தவன் இதற்கு மேல் இங்கு இருந்தால் அவர் கண்ணீர் காவியம் நடத்தி இங்கிருந்து தன்னை அனுப்பாமல் இருக்க ஏதேனும் செய்வாரோ என்று யோசித்தவன் வேகமாக தன் பயண பொதிகளை எடுத்து முதுகில் மாட்டியவன்”நான் டிசைட் பண்ணியாச்சு, சோ நீங்க பேசறது வேஸ்ட். நான் போய்ட்டு வாரேன்” என்றவாறே வேகமாக வெளியே செல்ல முற்பட்டான்.
அவ்வளவு கூறியும் கேட்க மறுத்தவனை கண்களில் கோபம் மின்ன பார்த்த மீனாட்சி”செழியா” என்று அதட்டிய அவரின் குரலில் அந்த வீட்டில் உள்ள அனைவருமே வெளியே வந்திருந்தனர்.
“என்ன மீனாட்சி எதுக்கு இப்படி சத்தம் போட்டுட்டு இருக்க” என்று பூஜை அறையில் இருந்து வெளியே வந்த வேதநாயகி மருமகளை கடிந்து கொண்டார்.செழியனின் பாட்டி.
“என்னாச்சு மீனா, எதுக்காக இவ்வளவு சத்தம்” என்றவாறே வந்து சேர்ந்தார் மீனாட்சியின் கணவனும் செழியனின் தந்தையுமான அறிவழகன்.
மீனாட்சி”இங்க பாருங்க அத்தை, இன்னும் ஒருவாரம்தான் இருக்குது அரவிந்த் கல்யாணத்துக்கு. இப்போ இவன் பிரண்ட்ஸ் கூட ஊட்டிக்கு போறேன்னு வந்து நிக்கிறான். போக கூடாதுன்னு சொன்னா நான் போய்த்தான் ஆகணும் யாருக்காகவும் மாத்திக்க மாட்டேன்னு கிளம்புறான் அப்புறம் நான் கத்தாம என்ன செய்றது, ஏற்கனவே ஜோசியர் வேற சூதனமா இருக்கணும் கல்யாணம் நடக்கறதுக்குள்ள பல வேதனையும் வருத்தமும் வந்து சேரும்னு சொல்லிருக்காரு நான் அதுலையே பயந்து கிடக்கேன். இவன் இந்த நேரத்துல வெளியே போறேன்னு வந்து நிக்குறான், ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடுமோனு மனசு அடிச்சுக்குது. நீங்களாச்சும் அவனுக்கு சொல்லி புரிய வைங்க”என்று பயம் கலந்த குரலில் கூறினார்.
மனைவியின் பேச்சை கேட்ட அறிவழகன், “என்ன செழியா இதெல்லாம். கல்யாணம் இன்னும் ஒரு வாரத்துல இருக்கு. இப்ப நீ ஊருக்கு போகலைன்னா என்ன? கல்யாணம் முடிஞ்ச பிறகு உன் பிரண்ட்ஸோட போயிட்டு வரலாம் தானே… இப்ப ஒன்னும் அவசரம் இல்லையே, உன் அம்மாவோட பயமும் நியாயம் தானே” என்று மகனிடம் சற்றே கண்டிப்பான குரலில் வினவினார்.
“அப்பா நீங்களாச்சும் புரிச்சுக்கோங்க ப்ளீஸ்.டூ மந்த்ஸ் முன்னாடியே இது பிளான் பண்ணுது. என் ஒருத்தனுக்காக இந்த பிளானை மாத்த முடியாது. அதுவும் நான் வரேன்னு சொல்லி வாக்கு கொடுத்துட்டேன். அப்புறம் நான் போகாமல் அது நல்லா இருக்காது. சோ ப்ளீஸ் டோன்ட் ஆர்க்யூ. மேரேஜ்க்கு டுடேஸ் முன்னாடி நான் வந்துருவேன்” என்றவன் அதோடு முடித்து கொண்டான்.
செழியனின் அண்ணன் அரவிந்தன், “அப்பா போய்ட்டு வரட்டும் விடுங்க. அவன் டிசைட் பண்ணியாச்சு. நாம சொன்னாலும் கேட்க மாட்டான். அதான் ரெண்டு நாள் முன்னாடி வந்துடுவேன் சொல்றானே போகட்டுமே” என்று தந்தையிடம் தம்பிக்கு ஆதரவாக பேசினான்.
அவனின் இன்னொரு அண்ணன் அகரன், “மா இது அவன் டூ மந்த்ஸ் முன்னாடியே பிளான் பண்ணதுதானே…நம்ம தான் இப்ப அவசரமா மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டோம். அவன் போய்ட்டு வரட்டும்” என்று கூறினான்.
அறிவழகன் மிகப்பெரிய தொழிலதிபர். அவருடைய மனைவி மீனாட்சி. மகன்கள் அரவிந்தன், அகரெழிலன், இன்ப செழியன், மகள் அர்ச்சனா பள்ளிபடிக்கும் பெண்.
அரவிந்த் தந்தையின் தொழிலை பார்த்து கொள்கிறான். அவனுக்குத்தான் அவன் அத்தை மகள் லாவண்யாவுடன் ஒரு வாரத்தில் திருமணம் நடக்க உள்ளது.
அகரெழிலன் கல்லூரி படிப்பை இந்த வருடம்தான் முடித்து விட்டு, தனியாக தொழில் செய்ய தயாராகி வருகிறான்.
அடுத்தவன்தான் நம் நாயகன் இன்பசெழியன். கல்லூரி கடைசி வருடம் படிப்பவன். இருபது வயது இளைஞன். சிறுவயதிலேயே தீர்க்கமாக முடிவுகளை எடுப்பவன். ஒருமுறை முடிவு எடுத்தால் யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாத பிடிவாதக்காரன். அசரவைக்கும் அழகன், பாசக்காரன் பிடிவாதக்காரனும் கூட.
அர்ச்சனா கடைக்குட்டி.
“மம்மி நீ எதுக்காக அண்ணாவை திட்ற, அவன் போய்ட்டு வந்துருவான். போகும்போது கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணாத” என்று தாயை தான் திட்டினாள்.
செழியனோ, “அப்டி சொல்லுடா குட்டிமா. சரி சொல்லு அண்ணா வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரணும்” என்று கேட்டான்.
அகரன், “அது சரி அவகிட்டய்யா கேட்டா ஒரு டைரி ஃபுல்லா லிஸ்ட் போட்டு எடுத்துட்டு வருவா” என்று சிரிக்க, அவளோ, “போடா தடியா” என்று அவனை திட்டியவள், “இப்போதைக்கு ஒன்னும் வேணம்ண்ணா நீ போய் சூப்பரா என்ஜாய் பண்ணிட்டு வா. நெஸ்ட் மந்த் என் பர்த்டே வருதுல்ல அப்போ வேணுக்கறதை வாங்கிக்கறேன்” என்று கூறியவளின் தலையில் தட்டி சிரித்தான்.
அவனின் பாட்டியோ, “விடு மீனாட்சி போய்ட்டு வரட்டும். கல்யாணம் பெரியவனுக்கு தானே” என்று கூறியவருக்குத் தெரியவில்லை அதற்கு முன்பே இவனுக்கு திருமணம் முடிந்துவிடும் என்று…
தாயிடம் வந்தவன், “ம்மா ப்ளீஸ்” என்று கூற, அவரின் தலையோ தானாய் சம்மதம் கொடுத்தது.
அனைவரிடமும் விடைபெற்று நண்பர்களுடன் கிளம்பியிருக்க, அப்போது அவனின் ஆருயிர் தோழன் தேவா மட்டும் வராமல் இருக்க, அவனோ, “மச்சி நீங்கல்லாம் போய்ட்டு வந்துடுங்கடா.. அம்மாக்கு உடம்பு முடியல. நான் நைட்டே காஞ்சிபுரம் வந்துட்டேன். சாரி” என்று மன்னிப்பு வேண்டியவனிடம் அவன் தாயை பற்றி விசாரித்து பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, போனை வைத்து விட்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
அவனின் நண்பனான இளங்கோவோ, “என்ன செழியா ஏன்டா தேவ் வரலன்னு பீல் பண்றியா?” என்று கேட்டவனிடம் “நம்மள விட ரொம்ப ஆர்வமா இருந்தான் டூருக்கு வரதுக்கு. அதான் ஆனா என்ன செய்ய அம்மாவையும் பாத்துக்கணும் இல்லை. சரி விடுங்க நெக்ஸ்ட் இதே மாதிரி பிளான் பண்ணி அந்த நாயும் சேர்ந்து உள்ள தூக்கி போட்டுடுவோம் ஓகே டீல்” என்று கூற, அடுத்து இரண்டு நாட்களும் நண்பர்களுடன் நன்றாகவே சென்றது.
இரண்டாம் நாள் மழை அதிகமாக தொடங்கியிருக்க, ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட தொடங்கியிருந்தது. செழியன் காரை ஓட்டிக்கொண்டே பார்க்க அப்போதுதான் நடந்தது அந்த பயங்கரம். கல்லூரி மாணவிகள் கல்லூரி மூலம் ஊட்டியை சுற்றிபார்க்க வந்திருக்க, அப்போதுதான் அந்த இடத்திலும் நிலம் சரிய, அங்கு இருந்த அனைவருமே அந்த இடிப்பாட்டுக்குள்ளே சிக்கிகொண்டனர்.
சற்று தள்ளிநின்று போன் பேசிக்கொண்டிருந்தவளோ அவர்களைப் பார்த்துக்கொண்டே “ஹேய்” என்று கத்திக்கொண்டே ரோட்டை கவனிக்காமல் ஓடி வர,இவர்களின் காரில் அடிபட்டு மலைச்சரிவில் உருண்டு ஓடியிருந்தாள். அத்தனை கலவரத்தில் இங்கு நடந்ததை யாரும் பார்க்கவில்லை.
அவனுடன் வந்த நண்பர்களோ பயந்து நடுங்கிப் போயினர். “செழியா கார் எடு போயிரலாம். அந்த பொண்ணு வந்து விழுந்த வேகத்துக்கு சத்தியமா உயிர் போயிருக்கும். கொலை கேஸ் ஆயிரும் போயிரலாம்டா..” என்று கூற…
அவனோ, “டேய் வாயை மூடுங்க. வாங்க போய் பாக்கலாம். அந்த பொண்ணுக்கு ஏதாச்சும் ஆயிருக்கப்போகுது” என்றவன் கீழே இறங்கி விட்டான்.
அவர்களோ, “நாங்க வரல. ஏற்கனவே அங்கங்க மண்சரிவு. அந்த பொண்ணு பள்ளத்துல விழுந்துட்டா. எங்க உயிர் முக்கியம். டூரும் வேணாம் ஒன்னும் வேணாம் நாங்க கிளம்பறோம்” என்று கூறியவர்களை அருவெறுப்பாக பார்த்தவனோ, “அடச்சீ போய் தொலைங்க” என்று கூறிவிட்டு வேகமாக பள்ளத்தில் இறங்கியிருந்தான்.
அங்கே அவளை தேட, கொஞ்ச தூரத்திலேயே ஒரு பாறையில் தலை மோதி, ரத்தம் அதிகமாக வெளியேறி இருக்க, மூர்ச்சையாகி இருந்தாள் அவள்.
அந்த நிலையில் அந்த பெண்ணை பார்த்தவனுக்கோ உடம்பே சில்லிட்டு போக, வேகமாக அருகில் சென்றவனோ, “ஹேய் இங்க பாரு பாப்பா, இங்க பாரு உனக்கு ஒன்னும் ஆகல.. கண்ண முழி” என்று கன்னத்தில் தட்ட, அவளின் கண்களில் கண்ணீர் மட்டும்தான் வழிந்தது.
அவளை இருகைகளிலும் தூக்கியவனோ தடுமாறி மெயின் ரோட்டுக்கு வந்து சேர, அங்கு அவனின் கார்மட்டுமே இருந்தது. அவனின் நண்பர்கள் எப்போதோ கிளம்பி இருந்தனர்.
அவனின் இதழ்கள் துரோகி என்று முனுமுனுத்தாலும், வேகமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவளை தூக்கி செல்ல, அவர்களோ, “ஆச்சிடேன்ட் கேஸ். யார் என்ன உறவு?” என்று கேட்க, அதே நேரத்தில் ரத்தம் அதிகமாக வெளியேறி இருக்க, அவளுக்கு பிட்ஸ் வந்திருந்தது.
அதை பார்த்து அதிர்ந்தவனோ, “ஐயோ டாக்டர் இவங்க என்னோட வைஃப்தான். கார் டோர் சரியா கிளோஸ் பண்ணாம இருந்ததுல டர்ன் திரும்பும்போது, மலைசரிவுல உருண்டுட்டா. நீங்க பாருங்க ப்ளீஸ்” என்று அவரிடம் நம்புமாறு கதை சொல்ல, உண்மை என நினைத்தவர்களோ டிரீட்மெண்டை தொடங்கி இருந்தனர்.
அவளுக்கு பாறையில் தலை மோதிய வேகத்தில் அதிகம் ரத்தம் வெளியேறியிருக்க, நிலைமை மோசமாகவே இருந்தது.
அப்போதும் மருத்துவர் அவனை நம்பாது, “பார்த்தா சின்ன பொண்ணா இருக்கா, கழுத்துல தாலிகூட இல்ல” என்று கூற, அவனோ, “அது அடிபடத்துல எங்காது விழுந்துருக்கும், அவளுக்கு இருபது வயசு ஆச்சு” என்று கூற, அவரோ அவனின் பதட்டத்தில் உண்மையே என நம்பியும்விட்டார்.
டீடெயில்ஸ் கேட்டதற்கு ஏதோ ஒரு அவசரத்தில் அவனின் பாட்டி பெயரான வேதா என்றே கூறியும் விட்டான். செழியனுக்கோ ஏனென்றே தெரியாமல் நெஞ்சம் வேகமாக துடித்திருந்தது. அவளோ, இரண்டு நாட்கள் கழித்து, மூன்றாம் நாள் விழி திறந்தாள்.
அந்த மூன்று நாட்களுமே செழியன் மருத்துவமனையில்தான் இருந்தான். அவ்வப்போது ரிசார்ட்க்கு போய் உடையை மாற்றி கொண்டு வந்து இருந்தான். அவனின் நண்பர்களோ எங்கே வெளியே இதை சொன்னால் மாட்டிக்கொள்வோமோ என்று யாரிடமும் வாயே திறக்கவில்லை.
மூன்றாம் நாள் கண் விழித்து விட்டாள் என்று மருத்துவர் சொன்னதும், உள்ளே நுழைந்தவனை கண்டு பயந்து போனாள் பெண்ணவள்.
“யார் நீங்க” என்று கேட்க, அருகில் நின்ற தாதியோ, “என்னமா கட்டுன புருஷனை போய் யாருனு கேக்குற” என்று கேட்க, அவளோ, “பு… புருஷன்னா.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? எனக்கு ஏன் எதுவும் நியாபகம் வரல” என்று தலையை பிடித்து கொண்டு கத்தி அழுதாள்.
அதில் பயந்துப்போன செவிலியர் மருத்துவரை அழைக்க, அவரோ வந்து அவளை பரிசோதித்தவர், “உன் பேர் என்னமா” என்று கேட்க, அவளும் நெடுநேரம் யோசிக்க, கண்களில் நீர் வழிய, “இல்ல… தெரில.. நான் யாரு.. என் பேரு என்ன தெரில” என்று அழ, அவளின் அழுகையை தாங்க முடியாதவனோ வேகமாக வந்து அவளை அணைத்துக்கொண்டு, “ஒண்ணுமில்லடா.. அழாத தங்கமே.. ஒண்ணுமில்ல” என்று சமாதானப்படுத்தியவன் மருத்துவரை பார்க்க,
“அவரோ சாரி மிஸ்டர் செழியன், உங்க மனைவிக்கு தலையில் அடிப்பட்டதுல எல்லாமே மறந்துருச்சு. நியாபகம் எப்போ வேணாலும் வரலாம். அதுல ஒன்னும் பிரச்சனை இல்லை. பாத்துக்கோங்க நாளைக்கு ஈவினிங் மேல நீங்க கிளம்பலாம்” என்று கூறிவிட்டு சென்றுவிட,
அவனோ, தன் அணைப்பிற்குள் விசும்பிக்கொண்டே தன்மீது சாய்ந்து இருக்கும் பெண்ணை பார்த்தவனுக்கு அவளை பார்க்க பார்க்க தன்னால்தான் அவளுக்கு இந்த நிலை என்று குற்றவுணர்வு அதிகரித்தது.
மருத்துவமனையில் இருந்த இரண்டு நாட்களும் அவள் பயந்து அழும்போதெல்லாம், ஏனென்றே தெரியாமல் அவனுக்கும் வலித்தது.
மாலை வீட்டிற்கு சென்றுவிடலாம் என்று கூறிவிட, செழியனுக்கு அப்போதுதான் நியாபகம் வந்தது நாளை மறுநாள் தமையனின் திருமணமும், தான் நான்கு நாட்களாக வீட்டுக்கு அழைக்காததும். சமாளித்து கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு இவளை என்ன செய்வது என்று அவளை திரும்பி பார்க்க,
அவளோ, அவனின் கை விரலை இறுக்கமாக பிடித்துக்கொண்டே உறங்கியிருக்க, அப்போதுதான் முழுதாய் அவளின் முகம் பார்க்க, குழந்தை போல் இருந்தது. அவள் இதழ் உறக்கத்திலே வலியில் சுருங்க, இவனுக்குமே அது வலித்தது. அவனின் கரங்கள் தானாய் அவளின் முகத்தை வருட, செழியனுக்கே தெரியவில்லை தான் எதற்காக இத்தனை செய்கிறோம் என்று. குற்றவுணர்வு என்றாலும் அவளையும் அவனுக்கு பிடித்திருந்தது.
மாலை மருத்துதுவமனையில் அவளை அழைத்துக்கொண்டு காரை ஓட்ட தொடங்கியிருந்தான். அவளுக்கு எதுவும் நியாபகம் வராத பட்சத்தில், அவளாகவே தன்னைப் பற்றி கூறும்வரை, அவள் தன்னுடைய பொறுப்பு என்று நினைத்து கொண்டவனுக்கு தெரியவில்லை, அதற்காக அவன் நிறைய இழப்புகளை தாங்க வேண்டியதிருக்கும் என்று…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Superb interesting start.
காட்சிகளை மிக சுவாரசியமாக எழுதி உள்ளீர்கள்.
தேவையில்லாமல் கிளம்பி வந்து இப்பொழுது ஒரு பெண்ணுடன் திரும்பி செல்கிறான். பொறுத்திருந்து பார்ப்போம்.
வாழ்த்துகள்.