
அகம்-50

அந்த அதிகாலை வேளையில், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கதிர்வேலின் அலைபேசி ஒலியெழுப்பி அந்த காலை நேர நிசப்தத்தைக் கலைத்தது.
அலைபேசி மீண்டும் மீண்டும் ஒலியெழுப்பி ஓய்ந்து போக,
“என்னங்க! ஃபோன் அடிக்குது பாருங்க!” எனக் கணவனை எழுப்பினார் அரசி.
அவரோ அசையக் கூட மறுத்து, ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் இருக்க, தானே தூக்கக் கலக்கத்தில் அழைப்பை ஏற்று காதில் வைத்தார் அரசி.
“ஹலோ.. என்ன விழி, இந்நேரத்திற்கு ஃபோன் அடிச்சிருக்க?”
“அத்தே! அத்தே..!” விழியின் அழுகுரல் அரசியின் செவிகளில் கேட்டது.
“என்னாச்சு ராசாத்தி? என்னத்துக்கு அழவுறே?”
“அத்தே! அத்தே அழகருக்கு..!” தொண்டை அடைக்கப் பாதியில் நிறுத்தியிருந்தாள் கருவிழி.
“அழகருக்கு என்ன ஆச்சு டி? சொல்லித்தான் தொலையேன். உசிரு பதறுது டி!”
“அழகருக்கு அடிப்பட்டுருச்சு அத்தே.. காப்பாத்த முடியாதுன்னு சொல்லுறாக! எ.. எ.. எனக்கு பயமா இருக்கு அத்தே!” அவள் அழுகைக் குரல் விடாது அலைபேசியில் கேட்டுக் கொண்டே இருந்தது.
“என்னடி! தலையில் இடியைத் தூக்கிப் போடுற? எம் மயனுக்கு என்ன ஆச்சு டி? எந்த ஆஸ்பத்திரி?” கண்ணீர் கரை கட்டி நிற்க, தடுமாற்றத்துடன் கேட்டார் அரசி.
மருத்துவமனையின் பெயரைச் சொல்லிவிட்டு, கருவிழி அழுகையுடனே அலைபேசியை அணைத்திருக்க, சில விநாடிகள், கேள்விப்பட்ட செய்தியின் தாக்கத்தில் ஸ்தம்பித்து நின்றவர் கணவனை எழுப்பினார்.
“ஏங்க எந்திரிங்க! ஏங்க அழகருக்கு அடிப்பட்டுருச்சாம்! கொடைக்கானலில் இருக்கிற ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காகளாம்.!” எழுந்து அமர்ந்து, கலங்கிய கண்களோடு நின்றிருந்த அரசியைப் பார்த்த கதிர்வேல்,
“என்னடி கெட்ட சொப்பனம் எதுவும் கண்டியா?” எனக் கேட்டார்.
“நான் விளையாடுற மாதிரி தெரியுதா உமக்கு? எம் மயனைப் பார்க்கணும்! காப்பாத்த முடியாதுன்னு சொல்லுறாகளாம்! நானே உசிரைக் கையில் பிடிச்சுட்டு நிக்கிறேன். வரீகளா? நானே ஒத்தைக்குப் போய்க்கட்டுமா?” கோபமாய்க் கேட்டார் அரசி.
“எனக்கு பயமா இருக்குங்க! என் மயனுக்கு ஒண்ணும் ஆகாதுல்ல.? கல்யாணம் முடிச்சு புள்ளை கண் நிறைஞ்சு வாழணும்ன்னு நினைச்சேனே? என்ன நடந்துச்சோ, ஆஸ்பத்திரியில் போய் கிடக்கானே.?” என அழுதபடியே வெளியே வந்தார் அரசி. அவர் அழுத சத்தத்தில் அனைவரும் அறையிலிருந்து வெளியே வந்திருந்தனர்.
“நம்ம புள்ளைக்கு ஆயுசு கெட்டி டி! ஒப்பாரி வைக்காதே!”
“கதிரு என்னாச்சு.? ஏன் அரசி அழறா?” என்றபடியே வந்தார் அங்கயற்கண்ணி.
“அழகருக்கு ஏதோ அடிபட்டிருச்சாம்! கொடைக்கானலில் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காகளாம்! கருவிழி ஃபோன் பண்ணியிருக்கா! முழுசா ஒரு விவரமும் தெரியலை.!” குரல் கமறியது கதிர்வேலுவுக்கு. இதைக் கேட்ட அங்கயற்கண்ணிக்கோ திக்கென்றிருந்தது.
“என்னடா சொல்றே? நம்ம அழகருக்கா?!” சரவணன் வினவ,
“என்ன சொல்றீக? புள்ளைங்க இப்போத்தானே பூம்பாறை போகணும்ன்னு போச்சுங்க! அங்கண போய் என்ன நடந்துச்சு.?” தந்தையை அமரவைத்து சக்கர நாற்காலியைத் தள்ளியபடியே வந்தார் தங்க மீனாட்சி.
“இன்னொரு முறை ஃபோன் போட்டு விழி கிட்டே விவரம் கேளுங்களேன்!” பதற்றமாய் சொன்னார் பூங்கொடி.
“இந்தாருங்க, கதிரு! சரவணா! புள்ளை ஒத்தையில் என்ன செய்யன்னு தெரியாமல் தவிச்சுக்கிட்டு நிப்பா! நீங்க ரெண்டு பேரும் முதலில் போங்க! போய்ட்டு விவரம் என்னன்னு சொல்லுங்க நாங்க பின்னால் வாரோம்!” எனச் சொன்னார் அங்கயற்கண்ணி.
“நான் எம் மயனைப் பார்க்கணும்! உசிருக்கு ஆபத்துன்னு விழி சொல்றா! விளையாடிக்கிட்டு திரியிறீக! உங்க பேச்சு வார்த்தையெல்லாம் பிறகு வச்சிக்கோங்க! எனக்கு எம் மயனைப் பார்க்கணும்!” என அரசி சொன்ன அதே நேரம், யாரோ மூச்சுக்குத் திணறுவதைப் போல் கேட்ட சத்தத்தில் அனைவரின் தலையும் ஒருசேர சொக்கேசனை நோக்கித் திரும்பியது.
சொக்கேசனோ, கண்களில் கண்ணீர் வழிய மூச்சுக் காற்றுக்குத் தவித்து, பேசவோ, சைகை செய்யவோ முடியாமல் அமர்ந்திருந்தார். அவர் மனதிற்குள் அழகரின் உயிருக்கு ஆபத்து என்பதே திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருந்தது. தான் செய்த பாவத்திற்கு, தன் பேரன் தண்டனை அனுபவிக்கிறானே என்ற குற்றவுணர்வு கொல்லாமல் கொல்ல, தன் மன உணர்வுகளை வெளிப்படையாய் சொல்ல முடியாது, மன்னிப்புக் கூடக் கேட்ட முடியாது இயலாமையின் விளிம்பில் மயங்கிச் சரிந்திருந்தார் சொக்கேசன்.
“ஐயோ அப்பா!” ஒருசேர குரல்கள் கேட்க, யாருக்குமே புரியாத சொக்கேசனின் மனநிலை அங்கயற்கண்ணிக்கு புரிந்தது.
“கதிரு! நீயும் அரசியும் அழகரைப் போய் பாருங்க! நாங்க அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறோம்!” என அங்கயற்கண்ணி சொல்ல, பரபரப்பும் பதற்றமும் நிறைந்திருந்த அந்தச் சூழ்நிலையில், மருத்துவமனையை நோக்கிப் பயணத்துக் கொண்டிருந்தனர்.
********
“ம்ப்ச்! அழாதே விழி!” காத்தவராயனின் குரல் செவியோரம் கேட்ட போதும் கூட கருவிழியின் கண்ணீர் நின்றபாடில்லை.
நெற்றியில் போடப்பட்டிருந்த கட்டோடு கண்ணீர் வழிய அவசர சிகிச்சை பிரிவின் வெளியே போடப்பட்டிருந்த பென்ச்சில் அமர்ந்திருந்தாள் கருவிழி.
“எப்படிண்ணே அழாமல் இருக்க?! ஒண்ணுமே சொல்ல முடியாதுன்னு சொல்றாகளேண்ணே! எனக்கு என் அழகரு வேணும்! உசிரே போயிரும் போல இருக்கு!”
“சொல்றேன்னு கோவிச்சுக்காதே தங்கச்சி! அழகரோட இந்த நிலைக்குக் காரணம் நீதேன். நீதேன் அந்த ரோஷங்கெட்ட பய பின்னால் சுத்தின! உனக்காகத்தேன், அழகரு அவனை அடிக்கப் போனான். நீ அவனுக்கு எதிரான ஆதாரத்தைக் கொண்டு வந்து கொடுக்கவும், உனக்காகத்தேன், அதை மாரிமுத்துவை தேடிப்போய் கொடுத்தான். இப்போ உன்னைக் காப்பாத்ததேன் என் அழகு இப்படி படுத்துக் கிடக்கான். அம்புட்டுக்கும் காரணம் நீதேன். உன்னோட கிறுக்குத்தனம்தேன் அம்புட்டுக்கும் காரணம். எல்லா விஷயத்தையுமே விளையாட்டுத்தனமா எடுத்துக்கிட்டதால் தான் இம்புட்டும். அந்த. ரோஹனை விரும்புறேன்னு வந்து நின்ன, கையை அறுத்துக்கிட்டு தற்கொலைக்குத் துணிஞ்ச.. என் நண்பன் உம்மேல் வச்சிருந்த நேசம் உன் கண்ணுக்கே தெரியலை இல்லை? மூச்சுக்கு முந்நூறு தடவை கரு கருன்னு திரியிறவன், மூச்சே இல்லாமல் படுத்துக்கிடக்கான். நல்லா பாரு.. என் அழகோட நிலமையைப் பாரு.. உசிருக்கே உத்திரவாதம் இல்லைன்னு சொல்லுறாக. இப்போ உனக்கு சந்தோஷம் தானே?” கோபத்தோடு மூச்சுவிடாமல் பேசினான் காத்தவராயன்.
“அண்ணே.. ஏன் இப்படியெல்லாம் பேசுறே? ரொம்ப வலிக்குதுண்ணே! நான் பண்ணினது தப்புத்தான். அந்த ரோஹன் மேலே இருந்தது ஈர்ப்பா? காதலான்னு எனக்கே தெரியலைண்ணே! நான் செஞ்ச தப்புத்தான் அழகரை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. அழகருக்கு எதாவது ஒண்ணு ஆச்சுன்னா நானும் செத்துடுவேண்ணே! அழகர் இல்லாத வாழ்க்கையே எனக்கு வேணாம்!” கண்ணீர் வழிய, எல்லாவற்றிற்கும் தான் தான் காரணம் என்கிற குற்றவுணர்வுடன் பேசினாள் கருவிழி.
“நான் மட்டும் ராத்திரி அங்கண வராமல் இருந்திருந்தால் என்ன செஞ்சிருப்பே? எதேச்சையாய் அந்த மாரிமுத்துவைப் பார்க்கப் போய், அந்தாளுதேன் விவரம் சொன்னாரு. அந்த ரோஷங்கெட்டப்பய தப்பிச்சுட்டான்னு தெரிஞ்சுதேன் அழகு உன்னை பூம்பாறை கூட்டிப் போயிருக்கான். நீ ஆசைப்பட்டேங்கிற ஒரே காரணத்திற்காகத்தான். நிலமை தெரிஞ்சும் இப்படி போயிருக்கானேன்னு நான்தேன் பதறி ஓடியாந்தேன். உங்க வீட்டில் யாருக்கும் எதுவும் தெரியாது. யாரையும் தேவையில்லாமல் பயமுறுத்த வேணாம்ன்னுதேன் சொல்லலை.!” எனச் சொன்னான் காத்தவராயன்.
ஆம்! அத்துவானக் காட்டில் அநாதையாய் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தவளின் தோளில் பதிந்த கரம் காத்தவராயனுடையது தான். தான் தனியாளாக சமாளிக்க முடியாதென்பதை முன்பே கணித்து, அழகரின் நண்பன் ஒருவனையும் துணைக்கு அழைத்தே வந்திருந்தான்.
“நானும் அந்த வருணு பயலும் வரலைன்னா இந்நேரம், நீங்க ரெண்டுபேரும் சொர்க்கத்துக்கு போயிருக்க வேண்டியது தான்!” காத்தவராயன் சொல்ல, அவன் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மையில் பதில் பேச முடியாது வாயடைத்துப் போனாள் கருவிழி.
அதே நேரம்.. அரசியும், கதிர்வேலும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தனர்.
“என்ன ஆச்சுடி விழி? நல்லாத்தானே போனீக! திடுதிப்புன்னு இப்படி ஃபோன் போட்டால் நாங்க என்ன நினைக்கிறது?” எனக் கேட்டார் அரசி.
“அத்தே.. எனக்கு பயமா இருக்குத்தே! அழகருக்கு ஒண்ணும் ஆகாதுல்ல?!” அரசியைக் கட்டிக் கொண்டு கதறினாள் கருவிழி.
“ம்ப்ச்! ஓயாமல் அழாதே விழி! எம் மயனை எங்கே?” மருமகளின் கண்களைத் துடைத்துவிட்டார் அரசி. ஐ.சி.யூ-வை நோக்கிக் கையைக் காட்டியவள் அவர் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.
“என்னால் தான் அத்தே! நான்தேன் எல்லாத்துக்கும் காரணம். அழகரு இப்படி கிடக்குன்னா நான் மட்டும்தேன் காரணம்!” கரகரவென கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டே இருந்தது.
“என்னடி சொல்றே?” அவளை இழுத்து நிறுத்தி, மருமகளின் முகம் பார்த்தார் அரசி.
துவக்கத்திலிருந்து அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னவளோ,
“என்னை மன்னிச்சுருங்க அத்தே! நா..ன் வேணும்ன்னு பண்ணல.! எ.. எனக்கு அசிங்கமா இருக்குத்தே..!” என அழகையினூடே சொன்னாள்.
“பார்த்தியா? இதுக்குத்தேன் எங்கப்பன் கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிருப்பாரு! நீங்களெல்லாம் சேர்ந்து நடத்தி வச்சீக! புள்ளையைப் படுக்க வச்சிட்டா பாரு! எல்லாத்துக்கும் காரணம் இவதேன். எவனையோ விரும்பிட்டு, எம் மயனுக்கு கழுத்தை நீட்டியிருக்கா? இப்படி அசிங்கம் பிடிச்சவள்ன்னு தெரிஞ்சுதேன் அவரு வேணாம்ன்னு சொல்லியிருப்பாரு! இவளைப் பார்க்கவே வெறுப்பா இருக்கு அங்கிட்டு போகச் சொல்லு! தங்கச்சி மவள்ன்னு கூடப் பார்க்க மாட்டேன், கொன்னேபுடுவேன்!” ஆத்திரத்தில் சூழல் அதிரக் கத்தினார் கதிர்வேல். தன் தாய் மாமனின் வாயிலிருந்து வந்த அமில வார்த்தைகளின் தகிப்பைத் தாங்க முடியாது, சிலையாய் சமைந்தாள் பெண்.
“வாயை மூடுங்க! இம்புட்டு பேசுறீகளே.. உங்க மயனோட மனசைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? அவன் மனசு முழுக்க, இவ மட்டுந்தேன் இருக்கா! உங்க மயனோட உசிரை இழுத்துப் பிடிச்சுக் கூட்டி வர்ர மந்திரம் இவக்கிட்டேதேன் இருக்கு. இவ உங்க மயனோட பொண்டாட்டி! உங்களுக்கு மருமவ! இப்படி பேசறது தப்புங்க! நம்ம வீட்டுப் பிள்ளைகளை நாமளே தப்பா பேசலாமா? புரியாத வயசில் எதிர்பாலின ஈர்ப்பு சகஜம்ங்க! ஒரு பொண்ணு பையனோட பேசினாலோ, பேச ஆசைப்பட்டாலோ அது காதல் இல்லை. அழகரும், இவளும் சேர்ந்து, அந்தக் கேடுகெட்டவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கத்தேன் முயற்சி பண்ணிருக்காக! நாம சின்னப்புள்ளையா நினைச்சுட்டு இருந்த பிள்ளைங்க, தானே நின்னு ஒரு காரியத்தை செஞ்சுருக்காக! நம்ம பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க! ஒரு விஷயம் கிடைச்சிருச்சுன்னு அதைப் பிடிச்சுட்டு தொங்காதீக! நம்ம பிள்ளைகள் சந்தோஷமா வாழணும்! எம் மயன் வருவான். திரும்பி வருவான்.!” அழகரைப் பெற்ற தாயாய் தைரியமாய் நிமிர்ந்து நின்றார் அரசி.
“என்னத்துக்குடி அழுதுட்டு நிக்கிறே? நீ எம் மயன் மேலே வச்சிருக்கிற நேசத்தின் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?!” என அவர் கேட்ட அதே நேரம், கதிர்வேலின் அலைபேசி இசைக்கவும், மருத்துவர் இவர்களை நோக்கி வரவும் சரியாக இருந்தது.
“ம்மா! அப்படியே லைனில் இருங்க! டாக்டர் வராக! என்ன ஏதுன்னு கேட்டுட்டு பேசுறேன்!” எனக் கதிர்வேல் சொல்ல, மருத்துவரும் பக்கத்தில் வந்திருந்தார்.
“துடிவேல் அழகரோட ஃபேமிலி நீங்க தானே?” எனக் கேட்டவர்,
“நாங்க எங்களால் முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சுட்டோம். இதயத்திற்கு ரொம்ப பக்கத்தில் தோட்டா துளைச்சிருக்கு! ஸோ, இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டலை! எங்களையும் மீறின சக்தி ஒண்ணு இருக்கே! இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம். பட், உறுதியாய் ஒண்ணும் எங்களால் சொல்ல முடியாது.!” எனச் சொல்லிவிட்டு மருத்துவர் அங்கிருந்து சென்றுவிட, சத்தமான கேவலோடு, அழுது கதறிய கருவிழி அப்படியே மடங்கி அமர்ந்துவிட்டாள்.
அந்தப் பக்கம் கதிர்வேலின் அலைபேசி வழியாய் இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த அங்கயற்கண்ணியின் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் கொட்டியது. இத்தனைக்கும் காரணமான கணவனின் மேல் கோபமாய் வந்தது.
“எல்லாமே உம்மால் தான். நீர் செஞ்ச தப்புக்கு எம் பிள்ளைகள் வேதனைப்பட்டுட்டு கிடக்கு. நீர் தூக்கி சீராட்டி வளர்த்த பேரன் சாகக் கெடக்கான். இதைத்தானே பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டீர். உசிரோட இருந்த ஒரு பொண்ணுக்குத் துரோகம் பண்ணிட்டு, கொஞ்சமும் குத்தவுணர்ச்சி இல்லாமல் என்னோட குடும்பம் நடத்தி புள்ளையும் பெத்துருக்கீகளே? எம்புட்டு கல்நெஞ்சக்காரராய் இருந்துருப்பீக? அந்த ஆண்டவன் எல்லாத்துக்கும் இம்மி குறையாமல் கணக்கு வச்சிருப்பான். செஞ்ச பாவத்துக்கு தண்டனை அனுபவிச்சு தானே தீர்க்கணும்? இத்தனையும் கேட்டுக்கிட்டு கல்லு மாதிரி தானே படுத்துக் கிடக்கீக.? உம்மோட வாழ்ந்த ஒவ்வொரு நொடியையும் நிமிஷத்தையும் நான் வெறுக்குறேன். உமக்கு பொண்டாட்டியா வாழ்ந்தேன்ங்கிற நினைப்பே அசிங்கமா இருக்கு. நீர் செத்தால் கூட, என் கண்ணிலிருந்து ஒத்தை சொட்டுக் கண்ணீர் வராது. என் துளி கண்ணீருக்குக் கூட உமக்கு தகுதியில்லை!” எனச் சொன்னவர் கணவனின் முகத்தைக் கூடப் பார்க்காது அருகிலிருந்த நாற்காலியில் அமைதியாய் அமர்ந்துக் கொண்டார்.
கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. மனமோ அழகரின் நலனுக்காக விடாமல் பிராத்தித்துக் கொண்டிருந்தது.
“அம்மாடி இரஞ்சிதம்! உனக்கு இந்தாளு செஞ்சது பெரிய பாவம்தேன்! மன்னிக்கவே முடியாத துரோகம்தேன். நீயாச்சும் போய் சேர்ந்துட்ட, நான் எதுவுமே தெரியாமல் இம்புட்டு வருஷம் இந்தாளோட குடும்பம் நடத்தியிருக்கேன். வருஷக் கணக்கில் சாக்கடையில் குளிச்சிருக்கேன். உனக்கு நடந்ததுக்கு நானும் ஒருவகையில் காரணந்தேன். தண்டிக்கிறதுன்னா எங்களை தண்டிச்சுப்புடு தாயி! அழகரு மட்டு பொழைச்சு வரட்டும் உனக்கு கோயிலெடுத்து கும்பிடுறேன் தாயி!” என தன் பேரனுக்காக வேண்டுதல் வைத்திருந்தார்.
சொக்கேசனின் கண்களிலோ, விடாது கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது. மனம் அழகரின் நிலையை நினைத்து மருகித் துடித்தது. தான் மட்டுமே இத்தனைக்கும் காரணம் என்ற குற்றவுணர்வு கொல்லாமல் கொன்றது. நாம் செய்த தவறு யாருக்கும் தெரியாது என நினைத்துக் கொண்டதன் விளைவு தான், அவர் மனசாட்சியே அவருக்கு எதிரியாய் மாறி நின்று குத்திக் கொல்கிறது எனப் புரிந்தது அவருக்கு. யாருக்கு எதிராய் யாரும் நீதிமன்றக் கூண்டில் ஏறி சாட்சி சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரவர் மனசாட்சி அவரவருக்கு எதிரான சாட்சி தான் என அவர் உணர்ந்துக் கொண்ட அந்தத் தருணம், அவர் கண்களில் கண்ணீர் வழிவது நின்றிருந்தது. மெதுவாய் விழிகள் மூடிக் கொள்ள, அவரின் ஜீவன் அவர் உயிர்க் கூட்டை விட்டு பிரிந்து காற்றோடு காற்றாய் கலந்திருந்தது. அழகரின் நிலை என்னவெனத் தெரியாமலே, தான் சுமந்திருந்தக் குற்றவுணர்வுடனே தன் இறுதி மூச்சை நிறுத்தியிருந்தார் சொக்கேசன். கணவனின் உயிர் பிரிந்ததைக் கூட, உணராமல், அழகரைப் பற்றிய யோசனையில் மூழ்கியிருந்தார் அங்கயற்கண்ணி.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அழகரின் நிலை அறிந்து வீட்டினர் அனைவரும் பதறுகின்றனர். எதனால் இந்த நிலை என்ற உண்மை அறிந்த அங்கயற்கண்ணி பாட்டி மனம் இன்னுமே பரிதவித்து போகுமே பயந்தது நடந்தே விட்டது என்று.
உற்ற நண்பனாக அவனது பாதுகாப்பை எண்ணி விரைந்து சென்றிருக்கின்றான் காத்தவராயன்.
உயிர் போகும் வேதனையில் துடித்துக் கொண்டிருப்பவளிடம் இன்னும் குற்ற உணர்வை தூண்டி அவள் வேதனையை அதிகப்படுத்துவானேன்.
அவளது இயல்பே விளையாட்டுதனமானது தான். விளைவுகளை பற்றிய தெளிவு இல்லாமல் நடந்து கொண்டால்.
இனிமேல் எந்த விடயத்தையும் தெளிவுடன் பக்குவமாக அணுகுவாள்.
கதிர் அப்பா ஒரு காரணம் கிடைக்கவும் அதனை பிடித்துக்கொண்டு தனது கருத்தே சரி என்று நிறுவ முயல்கிறார்.
அரசி மருமகளையும் மகனையும் நன்கு புரிந்துகொண்டு ஆதரவாக இருக்கின்றார்.
ஆம் குற்றம் புரிந்தவர்களுக்கு அவர்களது மனசாட்சி தரும் தண்டனையே சிறந்தது.