
அகம்-40
அவசரமாய் அன்றைய தேர்வுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் கருவிழி. இன்று அவளின் இளங்கலைப் படிப்பிற்கான இறுதித் தேர்வு. இளங்கலை படிப்பை முடித்துவிட்டு முதுகலைப் படிப்பைத் தொடர்வதா? இல்லை பணிக்குச் செல்வதா? என அவள் எதையும் யோசிக்கவே இல்லை. அவள் எண்ணம் முழுதும் அழகர் மட்டுமே நிறைந்துக் கிடந்தான்.
“இன்னும் என்னடி செய்றே? அசைஞ்ச வர்ர தேர் மாதிரி வா!”இழுத்துப் பிடித்தப் பொறுமையோடு குரல் கொடுத்தான் துடிவேல் அழகர்.
“இந்தா ரெண்டு நிமிஷம் வந்துட்டேன் அழகரு!” பரபரப்பாய் எதையோ தேடிக்கொண்டிருந்தாள் கருவிழி.
“இதையேத்தான் ஒருமணி நேரமா சொல்ற? எக்ஸாம்ன்னு கொஞ்சமும் பயமே இல்லை! மது கூட கிளம்பி போய்ட்டா! இன்னும் என்னடி செய்றே புதையலா எடுக்கிற? பொறுமையிழந்து கத்திக் கொண்டிருந்தான் துடிவேல் அழகர்.
“ஹால் டிக்கெட்டை காணோம் மாமா! எங்க வச்சேன்னு தெரியலை! தேடிட்டு வர்ரேன் இரு!” உள்ளிருந்து பதிலுக்குக் கத்தினாள் கருவிழி.
“எந்த மூலையிலிருந்து எங்க அத்தை உன்னைப் பெத்துச்சோ? கொஞ்சமாச்சும் கூறு இருக்க வேணாம்? பைத்தியக்காரி டி நீ!” என அவளை ஏசியபடியே, கிளப்பி தயாராய் வைத்திருந்த தன் இருசக்கர வாகனத்தை ஓரம் நிறுத்திவிட்டு, உள்ளே போனான் அவன்.
அங்கே கூடத்தில் தன் வைத்திருந்த பையைத் தலைகீழாய்க் கொட்டிக் கவிழ்த்து, ஒற்றைக் காலை மடக்கி அமர்ந்தபடி, தேர்வு அனுமதி சீட்டை தேடிக் கொண்டிருந்தாள் கருவிழி.
“ஏய் கிறுக்கச்சி! இங்கண வச்சிட்டு பைக்குள்ளே தேடினால் எப்படி கிடைக்கும்?” சுவற்றில் மாட்டியிருந்த, தொலைக்காட்சியின் அருகிலிருந்த மேஜையிலிருந்து, அவள் தேடிக் கொண்டிருந்த, தேர்வு அனுமதிச் சீட்டை அவளை நோக்கி நீட்டினான் அழகர்.
“தேங்க்ஸ் அழகரு! இப்போத்தான் உசுரே வருது.!” என்றவள் கொட்டி கவிழ்த்தவற்றை பைக்குள் அள்ளி வைத்துக் கொண்டிருக்க,
“ஐ.டி கார்ட் எடுத்தியா டி?” எனக் கேட்டான் அவன்.
“அச்சோ! மறந்துட்டேன் அழகரு! என் ரூமில் ஆணியில் தொங்கும் எடுத்துட்டு வாயேன் ப்ளீஸ்.!”
“எல்லாத்தையும் மறந்துருடி! இன்னும் சின்னக் குழந்தைன்னு நினைப்பு..! எதைத்தான் ஞாபகம் வச்சிப்பே.?” எனக் கத்தியவன், அவள் அறையை நோக்கி மாடியேறிப் போனான்.
“இந்தா ஐ.டி கார்ட், வெரசா மாட்டிட்டு கிளம்புடி! பத்து நிமிஷம் முன்னாடியாவது உள்ளே இருக்க வேணாம்? படிச்சதெல்லாம் நெனைப்பில் இருக்கா? இல்லை அதுவும் மறந்துருச்சா?”
“தெரியலை அழகரு! கை ஃப்ரீயா இல்லை, கொஞ்சம் ஐடியை மாட்டி விடேன்!” என்றவள் குனிந்து தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் கழுத்தில், கல்லூரி அடையாள அட்டையை அணிவித்து, வளைந்து நெளிந்து சுருண்டு கிடந்த அவள் கார்குழலை, வாகாகத் தூக்கி, அடையாள அட்டையைக் கழுத்தில் வழிய விட்டான் அவன். தன் பணியில் கவனமாய் இருந்தாலும், மாமன் மகனின் மெல்லிய தீண்டலில் தேகம் கூசிச் சிலிர்த்தது அவளுக்கு.
“அழகரு!” மென்மையாய் முணுமுணுத்து அவனை அண்ணாந்து பார்த்தாள் அவள். அவள் வாய்மொழி பேசாவிட்டாலும் கூட, அவள் கண்கள் ஆயிரம் கதை பேசியது அவனிடம்.
“கொன்னேபுடுவேன், முட்டைக்கண்ணி! கிளம்புடி முதலில். எக்ஸாம்க்கு போற நேரத்திலும் உனக்கு ரொமான்ஸ் கேட்குதாக்கும்! ஒழுங்கா பரிட்சையை எழுதிட்டு வா!” கண்டிப்பான அவன் குரலில், எழுந்து நின்று திருதிருவென விழித்துக் கொண்டு , அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் அவள்.
“என்னடி, என் மூஞ்சியில் என்ன ஒட்டியிருக்குன்னு, என்னைப் பார்த்துட்டே நிக்கிறே?” குழப்பமாய் அவளைப் பார்த்துக் கேட்டான் அவன்.
“ஆமா! உன் மூஞ்சியில் ஏதோ ஒட்டியிருக்கு!” என்று அவள் சொன்னதும், தன் முகத்தைக் கரம் வைத்துத் துடைக்க முயன்றான் அவன்.
“அங்கே இல்லை அழகரு, இடது பக்கம். அங்கே இல்லை, கண்ணுக்குக் கீழே. உனக்குத் தெரியலை, நான் துடைச்சு விடறேன் இரு!” என தன் தோளில் வழிய விட்டிருந்த துப்பட்டாவைப் பிடித்துக் கொண்டு நெருங்கியவள், அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே, அவன் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்திருந்தாள்.
“நான் வெளியவே வந்துட்டேன்.. இன்னும் என்ன கனவு காணுறியா அழகரு? எனக்கு நேரமாகிருச்சு!” என்றபடியே ஓடிச் சென்று வெளியே நின்றிருந்தாள் கருவிழி.
“பைத்தியக்காரி! கிறுக்கச்சி! நம்மளை உசுப்பேத்துறதே இவளுக்கு வேலையா போச்சு!” எனப் புலம்பியபடியே, முழுக்கை சட்டையைத் தோரணையாய் மடக்கிவிட்டபடியே வெளியே வந்து வாகனத்தைக் கிளப்பியவனின் இதற்கடையில் கள்ளப் புன்னகை கள்ளத்தனமாய் குடியேறியிருந்தது.
தன் பையைத் தோளில் மாட்டிக் கொண்டு, அவன் இடுப்போடு கையிட்டு ஏறி அமர்ந்தவளை, கண்ணாடியின் வழியாய் முறைத்தான் அழகர்.
“உசுப்பேத்தாமல் சும்மா இருடி! உனக்கு இன்னைக்கு கிறுக்குதான் பிடிச்சுக்கிச்சு!”
“ஆமா! எனக்கு கிறுக்குதேன் பிடிச்சுருக்கு.. அதுவும் அழகர் கிறுக்குதேன் புடிச்சுருக்கு. அடிக்கடி மிட்டாய் கொடுத்து ஏமாத்தினால், கிறுக்கு தான் பிடிக்கும். நான் சிவனேன்னு தானே இருந்தேன், நீ தானே முத்தம் கொடுக்க சொல்லிக் கொடுத்த? இப்போ ஐயோ, அம்மான்னா ஒண்ணும் வேலைக்கு ஆகாது!”
“ஏய்! கரு கரு! மெதுவா பேசுடி! பேசாமல் மைக் வச்சு ஊருக்கெல்லாம் சொல்லிடு!” என அவளிடம் சீறியவன், தன் வாகனத்தை உறுமிக் கிளப்பினான்.
“ஓயாமல் உரசி, உரசி உசுப்பேத்தினால் இப்படித்தான் நடக்கும். முதலில் விலகி உட்காரு! எக்ஸாம்க்கு படிச்சியா இல்லையா டி?”
“நமக்கு தான் நிச்சயம் ஆகிடுச்சே! அப்போ இருந்தே நீ எனக்கு பாதி புருஷனாகிட்டே! அதனால் நான் இப்படி, நெருக்கமாகத்தான் உட்காருவேன். ஏதோ படிச்சிருக்கேன் அழகரு! கடைசி எக்ஸாம் தானே? இருந்தாலும் பயமா இருக்கு.!” இரண்டு கேள்விகளுக்கும் சேர்த்தே பதில் சொன்னாள் அவள்.
“போடி கிறுக்கச்சி!” என அவளைச் செல்லமாய் வைதவன்,
“பொறுமையாய், நிதானமாய் யோசிச்சு எழுது. நான் உனக்காக வெய்ட் பண்ணிட்டு தான் இருப்பேன். அவசரமே இல்லாமல் எழுதிட்டு, உன் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசிட்டு பொறுமையாய் வா! நல்ல எழுது டி!” பக்கக் கண்ணாடியில் தெரிந்த அவள் முகம் பார்த்துப் பேசினான் அவன்.
“சரி! சரி! லாஸ்ட் டே, அதனால் வானரக் கூட்டத்தைப் பார்த்துட்டு வர லேட்டா தான் ஆகும். நானே வீட்டுக்கு வந்துடுவேன் அழகரு! நீ கிளம்பு!” அக்கறையாய் சொன்னாள் அவள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை! நீ எக்ஸாம் முடிச்சுட்டு வா! எல்லா வேலையும் காத்தவராயன் பார்த்துப்பான்.!” என்றவன் அவளைக் கல்லூரியினுள் சென்று இறக்கிவிட்டு, அவள் எப்போதும் நின்றிருக்கும், மரத்தடியில் காத்திருந்து, அவள் தேர்வு முடித்து வந்ததும் அழைத்துப் போனான் துடிவேல் அழகர்.
இன்றுடன் தேர்வு முடிந்துவிட்ட மகிழ்ச்சியில், அவனுடன் பேசிக் கொண்டே அவள் பின்னால் அமர்ந்திருக்க, அவர்கள் இருவரையும் உன்னிப்பாய் கவனித்தபடி, சற்று இடைவெளி விட்டு அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தது அந்த மகிழுந்து. உள்ளிருப்போர் வெளியே தெரியாத வகையில், கருப்பு நிறக் கண்ணாடியின் பின், ஒளிந்துக் கொண்டு, இவர்களைக் கண்காணிப்பதை அறியாமல், தன் மாமன் மகனுடன் தோளுரசியபடி அமர்ந்து, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தக் கருவிழிக்கு அப்போது வரையிலும் தெரிந்திருக்கவில்லை, பேராபத்து நெருங்கிவிட்டதென்று..! சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடுமாம்.. தங்களைச் சுற்றி வளைத்திருக்கும் ஆபத்து என்னவென்று அறியாமல் இளமனங்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, கண்கள் முழுதும் பழிவெறியுடன், கருவிழியைப் பழிவாங்க சிறைக்குள் காத்திருக்கிறான் ரோஹன் எனும் அசுரன்.
******
சரியாக நெடுமாறனுக்கும் மதுவிற்கும் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தது.
மாற்றல் வாங்கிய கையோடு, அவள் தேர்வுகள் முடிந்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு சென்னையில் குடியேறியிருந்தான். இருவரின் அலுவலகமே ஒரே இடத்தில் என்ற காரணத்தினால், அலுவலகம் சென்று வருவதில் பெரிதாய் எந்தப் பிரச்சனைகளும் இருக்கவில்லை. புது மனைவியும், அவளுடனான தாம்பத்தியமும், தேனோடு கற்கண்டாய் இனித்தது நெடுமாறனுக்கு.
“மதூ.. மதூ..!” முந்தைய இரவின் களைப்பில் தன் மார்பில் புதைந்திருந்தவளை எழுப்பினான் நெடுமாறன்.
“ம்ப்ச்! போடா! என்னை எழுப்பாதே! இன்றைக்கு சாட்டர்டே தானே? போய் காஃபி போட்டு கொண்டு வா!”
“இப்படி மேலே படுத்துக்கிட்டா எப்படி, காஃபி கொண்டு வர்ரது?”
“அப்போ நீயும் தூங்கு! என்னைத் தொல்லை பண்ணாதே!” கண்கள் திறவாமலே, தலை நிமிர்த்தி சொல்லிவிட்டு, தன் மார்பில் புதையும் மனையாளின் செயலில் உதட்டின் ஓரத்தில் புன்னகை வந்தமர்ந்தது அவனுக்கு.
“இன்றைக்கு ஊருக்குக் கிளம்பணும் டி! தெரியும் தானே? எதுவுமே பேக் பண்ணவே இல்லைடி!”
“மாறன்! என் பட்டுக் குட்டியில்ல.. எனக்கும் சேர்ந்து நீயே எடுத்து வச்சிடு ப்ளீஸ்..!” கண்கள் திறக்காது கணவனின் கன்னத்தில் முத்தம் வைத்தாள் மது.
“கேடி!” என முணுமுணுத்தவன், மனைவியை விலக்கி படுக்க வைத்துவிட்டு, குளியலறையை நோக்கி நகர்ந்தான்.
அன்று திருமணத்திற்கு முன், தான் பேசியதையும், மதுவின் தெளிவான பேச்சையும் நினைத்துப் பார்த்தவனுக்கு, மனைவியின் மனம் தெளிவாகவே விளங்கியது. அன்று மட்டும், அவசரப்பட்டு, திருமணத்தை நிறுத்தவோ, இல்லை அவளை பணி நிமித்தமாய் பிரியவோ செய்திருந்தால், நிச்சயமாய் அது சுயநலமாய் எடுத்த முடிவாகத்தான் இருந்திருக்கும். கோபத்தில் நிதானமில்லாமல் யோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவாக இருந்திருக்கும்.
தன்னை மட்டுமே யோசித்து, தனக்கென வட்டம் போட்டுக் கொண்டு, இந்த வட்டத்தைத் தாண்டி வர மாட்டேன், என நினைத்தது முட்டாள்தனமானது என அவனுக்குத் தாமதமாகத்தான் புரிந்தது. நாம் நேசிப்பவர்களுக்காக, நம்மை நேசிப்பவர்களுக்காக, நிச்சயம் எல்லை தாண்டலாம். அந்த எல்லை வானமாக இருந்தாலும் கூட.
இத்தனை வருடங்களாய், காதலித்து அறியாத மதுவை மனைவியாய் அறிந்துக் கொண்டிருந்தான். அவளின் தெளிவு, ஒவ்வொரு செயலிலும் அவளின் நேர்த்தி, அவளின் பிடிவாதம், கோபம், அடம் எல்லாமே அவனுக்குப் புதிதாய் இருந்தது. இன்னும் இன்னும் அவளைப் புரிந்துக் கொள்ள முயன்றுக் கொண்டிருந்தான் நெடுமாறன். ஆனால் அவனுக்கு நேர்மாறாய் அவனின் சின்ன சின்ன அசைவுகளையும் கூட நன்றாய் அறிந்து வைத்திருந்தாள் மது.
“இங்கே நின்னு கனவு காணுறியா? நானே ரெஃப்ரெஷ் ஆகிட்டு வந்துட்டேன்.இன்னுமா காஃபி போடலை?” குளித்து முடித்து, ஈரத் தலையுடன் நின்றிருந்தவனைப் பின்னாலிருந்து அணைத்து அவன் முதுகில் முகம் புதைத்தாள் மது.
“ஏன் மது.. ஒருவேளை நான் கல்யாணத்தை நிறுத்தியிருந்தால் என்ன பண்ணியிருப்ப?”
“கன்னத்திலேயே பளார்ன்னு ஒண்ணு வச்சிருப்பேன். இத்தனை வருஷம் லவ் பண்ணுற, என்னைப் புரிஞ்சுக்க முடியலையான்னு கேட்டிருப்பேன்!”
“அப்பறம்..?”
“என்ன அப்பறம்? நான் என்ன கதையா சொல்றேன்? அன்றைக்கே உன்மேல் எனக்கு ரொம்பக் கோபம்! நான் எனக்காக மட்டுமா யோசிச்சேன். உனக்கும் சேர்த்து தானே? உன்னோட ஜாப் தான் இந்தியாவில் எங்கே வேணும்ன்னாலும் இருந்து பண்ணலாம்ன்னு சொன்னியே? பட், எனக்கு அப்படியில்லை, முதல் வாய்ப்பு அதுவும் நல்ல வாய்ப்பு! சரியா பயன்படுத்திக்கிட்டா மட்டும் தான் முன்னேற முடியும். ஆனால் நீ சட்டுன்னு வேலைக்குப் போக வேணாம்ன்னு சொன்னதும், எனக்கு அவ்ளோ கோபம். பொண்ணுன்னா அடுப்படிக்கும்,படுக்கைக்கும் மட்டும் தான்னு என்னைக் கேவலமா நினைச்சிட்டியோன்னு தோணிச்சு.” அவன் முதுகில் கன்னம் அழுந்த சாய்ந்திருந்தவளின் குரல் தடுமாறியது.
“ஸாரிடி மதூ..!” மனையாளையாளை தனக்கு முன்னால் இழுத்து அவளை இறுக அணைத்துக் கொண்டவன், அவள் உச்சந்தலையில் நாடி பதித்தவண்ணமே தன் மனதிலிருந்தவற்றைச் சொல்லத் துவங்கினான்.
“அப்போ இருந்த சூழ்நிலையில் நான் உன் பக்கமிருந்து யோசிக்கவே இல்லைடி! என் ஆஃபிஸில் வொர்க் பண்ணுற என் நட்பு வட்டத்திற்குள்ளேயே நிறைய ப்ரேக்-அப்ஸ் பார்த்திருக்கேன்டி! அதற்கு முக்கியமான காரணம், அந்தப் பொண்ணு வேலைக்குப் போறதாகத்தான் இருக்கும். நீ பட்டுன்னு வேலைக்காக கல்யாணம் வேணாம்ன்னு சொன்னதும் பதறிடுச்சு. வேலை முக்கியமா? நான் முக்கியமா? என்கிற கேள்வி எனக்குள்ளே என்னை அறியாமலே வந்துடுச்சு. அது தான் நான் அப்படி பேசினதுக்குக் காரணம். நான் பேசினது சரின்னு நிச்சயமாய் நியாயப் படுத்த மாட்டேன். கண்டிப்பா தப்புத்தான்.” மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினான் நெடுமாறன்.
“பொண்ணு மட்டும் தான் பிரிவுக்கு காரணமா இருக்கணுமா என்ன? உன்னை மாதிரி பொண்ணோட மனசை சரியா புரிஞ்சுக்காத ஆணும் காரணமா இருக்கலாமே.? இல்லை ரெண்டு பேருமே காரணமா இருக்கலாம். எப்போவும் அடுத்தவங்களோட வாழ்க்கையோட நம்மளோடதை கம்ப்பேர் பண்ணவே கூடாது. நான் முன்னாடி சொன்ன மாதிரி தான். புரிதலும் நம்பிக்கையும் இருந்தால் மட்டும் தான் ஒரு உறவு உறுதியாய் இருக்கிறதுக்குக் காரணம். நான் எப்போவுமே எனக்காகன்னு யோசிக்க மாட்டேன் டா! நமக்குன்னு தான் யோசிப்பேன். நீ தான் புரிஞ்சுக்கலை!”
“நான் தான் ஸாரி சொன்னேல்ல டி!”
“பெரிய மனசு பண்ணி உன்னை மன்னிச்சுட்டேன் போதுமா? நான் குளிச்சுட்டு வரேன். எனக்கு ரொம்ப பசிக்குதுடா! எதாவது செஞ்சு வை!”
“எனக்கு தோசை மட்டும் தான் சுடத் தெரியும். அதுவும் நீ சொல்லிக் கொடுத்தது தான்.!”
“அத்தை உன்னை ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்து கெடுத்துட்டாங்க! சாதம் வடிக்க, காஃபி, டீ போடறதுக்கு, தோசை சுடவெல்லாம் சொல்லிக் கொடுக்கவே இல்லை. போய் பேசிக்கிறேன். எப்பவும் போல, இண்டியா மேப்போ, வேர்ல்ட் மேப்போ போட்டு வை! இனி வீக் எண்ட் நீ மட்டும் தான் சமைக்கணும். அப்போதான் பழக்கம் வரும்!”
“கல்யாணம் பண்ணினா சமைக்கணும்ன்னு யாரும் சொல்லவே இல்லையே? என் அப்பாவெல்லாம் ஒருநாள் கூட கிட்சன் பக்கம் போனதே இல்லை தெரியுமா? நீ என்னைக் கொடுமை படுத்தற டி!”
“உங்க அப்பா சித்தப்பாவெல்லாம், சிக்ஸ்டீஸ் கிட் டா! நாம இப்போ ட்ரெண்டிங் கிட்ஸ். நாளைக்கே நான் கன்சீவா இருக்கேன்னு வச்சிக்கோ, இதெல்லாம் கத்துக்கிட்டா, நான் கேட்கிறதெல்லாம் செஞ்சு கொடுக்கலாம் தானே? அதோட நம்ம பிள்ளைகளுக்கும், சமையல்ங்கிறது பொம்பளையோட வேலை மட்டும் இல்லை. எல்லாரும் சமம் தான்னு நாம சொல்லாமலே புரிய வைக்கலாம். எப்போவுமே அடுத்தவங்களை கைக்காட்டி நாம தப்பிச்சுக்கக் கூடாது டா. தப்போ சரியோ பொறுப்பு எடுத்துக்கணும். மாற்றத்தை நம்ம வீட்டிலிருந்து தான் துவங்கணும். அதனால் இப்போ போய் தோசை சுடுவியாம்!” எனச் சொல்லிவிட்டு விலகியவளை, மீண்டும் இழுத்து கைக்குள் வைத்துக் கொண்டவன்,
“நிஜமாவே கன்சீவா இருக்கியாடி?” எனக் கேட்டவனின் கரம், மென்மையாய் அவள் வயிற்றைத் தடவியது.
“இவ்ளோ நேரம், நான் பேசினதில் இது மட்டும் தான் உன் காதில் விழுந்துச்சா டா? கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் தான் ஆகுது. இப்போவெல்லாம் எதுவும் இல்லை.!” என அவனைத் தள்ளிவிட்டு அவள் குளியலறையை நோக்கிப் போக, புன்னகையுடன் அடுக்களையை நோக்கிப் போனான் நெடுமாறன்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நிச்சயம் ஆன பிறகு அழகர் உனக்கு பாதி புருஷனா கரு கரு?
நெடு மதுவின் காதல் திருமண வாழ்க்கை அழகு. 😍😍
உண்மை தான், அன்று “தான் முக்கியம் இல்லையோ” என்ற ஆதங்கத்தில் நிதானம் இழந்து தவறான முடிவு எடுத்திராமல் பொறுமையாய் யோசித்து செயல்பட்டான் நெடு.
இல்லையென்றால் இந்த அழகான வாழ்க்கையை, உண்மை காதலை இழந்திருப்பானே.
அடுத்தவர்களையோ/சூழ்நிலையையோ கை காட்டி பொறுப்பை தட்டிக் கழிக்க கூடாது. 💫👌🏼
மாற்றங்கள் நம்மிடம் இருந்தே தொடங்கட்டும். நமது அடுத்த தலைமுறைக்கு அதுவே பழக்கமாகவும் வழக்கமாகவும் மாறட்டும்.
உண்மை தான் டா. மாற்றம் நம்மிடமிருந்தான் தொடங்கணும். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💚💜